திருவாசகம்-ஆசைப்பத்து


பண் :

பாடல் எண் : 1

கருடக் கொடியோன் காண மாட்டாக்
கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட
பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கேவா
வென்றங் கேகூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! திருமாலும் காணவொண்ணாத திருவடி என்னும் பொருளை எனக்குக் கொடுத்து என்னை ஆண்டருளின பொல்லா மணியே! எனது அஞ்ஞான இருளைப் போக்கி இங்கே வாவென்று உன்னிடத்துக்கு அழைக்கும்படியான உன் அருளைப் பெறுதற்கு ஆசைப்பட்டேன்.

குறிப்புரை :

கருடக் கொடியோன், திருமால். பொல்லா மணி - துளையிடாத இரத்தினம். ``அங்கே`` என்றதன்பின், `வர` என்பது வருவிக்க. ``அங்கு`` என்றது சிவலோகத்தை.
ஆசைப்பட்டேன் - விருப்பத்துள் பொருந்தினேன்.

பண் :

பாடல் எண் : 2

மொய்ப்பால் நரம்பு கயிறாக
மூளை என்பு தோல்போர்த்த
குப்பா யம்புக் கிருக்ககில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்
என்னா ரமுதேயோ
அப்பா காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! நரம்பு முதலானவற்றால் செய்யப்பட்ட இந்த உடம்பில் தங்கி இருக்க மாட்டேன். என்னை அழைத்துக் கொள்ள வேண்டும். எவ்வகைப் பெருமை உடையார்க்கும் அறிய இயலாத என் ஆரமுதே! அப்பனே! உன்னைக் காண ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

மொய்ப்பால் நரம்பு - நெருங்கும் பகுதியவாகிய நரம்பு. `மூளை என்புகளைத் தோலால் போர்த்த` என்க. குப்பாயம் - போர்வை; உடம்பு. `உன்னைக் காண` என்க.

பண் :

பாடல் எண் : 3

சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ்
சிறுகுடி லிதுசிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட்
கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.

பொழிப்புரை :

அம்மானே! சீயொழுகி, ஈக்கள் மொய்த்து மலங்களுடன் கூடித் திரிகின்ற இந்த உடம்பழிய என்னை நீ அழைத்துக் கொள்ள வேண்டும். நீ என் முகத்தைப் பார்த்து ஐயோ என்றிரங்கும்படி ஆசைப்பட்டேன்.

குறிப்புரை :

வார்ந்து - ஒழுகப்பட்டு. மொய்த்து - மொய்க்கப்பட்டு. ஆ - அந்தோ. வா - வருக. என்ன - என்று என்னை அழைக்க. இனி, `ஆவா என இரங்கிக் கூற` என்றே உரைத்தலுமாம்.

பண் :

பாடல் எண் : 4

மிடைந்தெலும் பூத்தைமிக் கழுக்கூறல்
வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
சோத்தம்எம் பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி
உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! இந்த உடம்பு என்னைத் தொடர்ந்து வருதலால் வருந்தி நின்றேன். உனக்கு வணக்கம்; மனம் நெகிழ்ந்துருகி உன்னொளியை நோக்கி உன் திருவடியை அடைந்து நிற்க ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

மிடைந்து - நெருங்கி. மிடைந்து, மிக்கு என்னும் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. ஊத்தை - அழுக்கு. ``ஊறல்`` என்றதனால், ``அழுக்கு`` என்றது, அழுக்கு நீரையாயிற்று, `ஊறலை யுடைய கூடம்` என்க, வீறு இலி - பெருமை இலதாகிய (இழிவை உடைய கூடம்). நடைக் கூடம் - இயங்குதலையுடைய மாளிகை; உடம்பு. சோத்தம் - வணக்கம்.

பண் :

பாடல் எண் : 5

அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி
அடியே னுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்
விடையாய் பொடியாடீ
எளிவந் தென்னை ஆண்டு கொண்ட
என்னா ரமுதேயோ
அளியன் என்ன ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! இந்த உடம்பினை அருவருத்துப் புளியம் பழம் போன்று பிரிந்தேயிருந்தேன். எளிதாக வந்து என்னை ஆண்டருளின என் ஆர் அமுதே! நான் உன்னால் காக்கப்படுதற்கு உரியவனாகிய எளியவன் என்று கண்டோர் சொல்ல ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

: `யாக்கை` அகத்து உள்ள அளிந்த புண்ணைப் புறத்துத் தோலால் மூடியதனால் புளியம் பழம் ஒத்து என்க. புளியம் பழம், உள்ளே நைந்து அழகின்றியிருந்தும், வெளியே உறுதியுடையதுபோல அழகாகக் காணப்படுதலால், அதனை, உள்ளே உதிரம் முதலியவற்றோடு கூடிய மெல்லிய உறுப்புக்கள் அழகின்றிக் கிடப்பவும், வெளியே ஒன்றும் தோன்றாது அழகாகக் காணப்படும் உடம்பிற்கு உவமையாகக் கூறினார்.
``ஒத்து`` என்றதனை, `ஒப்ப` எனத் திரிக்க. இருந்தேன் - இதனுள் அருவருப்பின்றியிருந்தேன் (இது முன்னைய நிலை). `இருந்தும் எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்னாரமுதே` என்க. `இப்பொழுது, அந்தோ? இவன் இரங்கத் தக்கவன் என்று நீ சொல்ல ஆசைப்பட்டேன்` என்றதாம். இப்பாட்டின் முதற்சீரில் உள்ள எழுத்துக்களை நோக்கினும், அளியேன்` என்பது பாடமாகாமை விளங்கும்.

பண் :

பாடல் எண் : 6

எய்த்தேன் நாயேன் இனியிங்கிருக்க
கில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா
மலர்ச்சே வடியானே
முத்தா உன்தன் முகவொளி நோக்கி
முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! நாயேன் இளைத்தேன். இனி இங்கு இருக்கிலேன். இந்தப் பொய்யான வாழ்க்கையினின்றும் என்னை நீக்க வேண்டும். தேவர்களும் அறியாத திருவடியை உடையவனே! உன் முக ஒளியையும், உன் திருப்புன்னகையையும் காண ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

`வைத்தவனே வாங்குதல் வேண்டுமன்றிப் பிறர் யார் அது செய்வார்` என்பார், ``வைத்தாய் வாங்காய்`` என்று அருளினார்.
இவ்வுலக வாழ்க்கையை வைத்தல் படைத்தலும், வாங்கல் அருளலுமாகும். ``நகை`` என்றதும் ஒளியேயாம்.

பண் :

பாடல் எண் : 7

பாரோர் விண்ணோர் பரவி யேத்தும்
பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா உலகந் தந்து
வந்தாட் கொள்வானே
பேரா யிரமும் பரவித் திரிந்தெம்
பெருமான் எனஏத்த
ஆரா அமுதே ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தாரும், விண்ணுலகத்தாரும் வழி பட்டுத் துதிக்கின்ற மேலானவனே! முத்தியுலகைத் தந்து வந்தாட் கொள்வோனே! உன் திருப்பெயர்கள் ஆயிரத்தையும் உச்சரித்து எம் பெருமானே என்று துதிக்க ஆசைப்பட்டேன்.

குறிப்புரை :

``வாராய்`` என்பதனை இறுதியில் வைத்துரைக்க. ``வந்து தந்து ஆட்கொள்வோன்`` என்க. திரிந்து ஏத்துதல், சிவலோகத் திலாம்.

பண் :

பாடல் எண் : 8

கையால் தொழுதுன் கழற்சே வடிகள்
கழுமத் தழுவிக்கொண்
டெய்யா தென்றன் தலைமேல் வைத்தெம்
பெருமான் பெருமானென்
றையா என்றன் வாயா லரற்றி
அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.

பொழிப்புரை :

அம்மானே! உன் திருவடியைக் கையால் தழுவிக் கொண்டு, என் தலைமேல் வைத்துக் கொண்டு எம்பெருமானே! ஐயனே! என்று அரற்றித் தீயைச் சேர்ந்த மெழுகை நிகர்த்துருக ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

இதனுள் கூறப்படும் கையால் தொழுதல் முதலிய பலவும் சிவலோகத்தின்கண் வைத்து என்க. கழும - இறுக. எய்யாது - இளையாமல். ஒப்ப - ஒத்து நிற்க.

பண் :

பாடல் எண் : 9

செடியா ராக்கைத் திறமற வீசிச்
சிவபுர நகர்புக்குக்
கடியார் சோதி கண்டு கொண்டென்
கண்ணிணை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பர னேஉன்
பழஅடி யார்கூட்டம்
அடியேன் காண ஆசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.

பொழிப்புரை :

அம்மானே! குற்றம் நிறைந்த இந்த உடம்பின் தொடர்பைப் பற்றற நீக்கி, சிவநகரில் புகுந்து விளக்கமாகிய ஒளியைக் கண்டு கொண்டு, என் இரண்டு கண்களும் மகிழ்ச்சி எய்தவும் உன் பழவடியார் கூட்டத்தைக் காணவும் அடியேன் ஆசைப்பட்டேன்.

குறிப்புரை :

செடி - குற்றம். திறம் - கூறுபாடு. அற வீசி - முற்றிலும் கழித்து. கடி - விளக்கம். சோதி - இறைவன் திருமேனி. படி - ஒப்பு.

பண் :

பாடல் எண் : 10

வெஞ்சே லனைய கண்ணார்தம்
வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே
நானோர் துணைகாணேன்
பஞ்சே ரடியாள் பாகத் தொருவா
பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 

பொழிப்புரை :

அம்மானே! மாதரது வெகுளி வலையில் அகப் பட்டு நாயினேன் நைந்தேன்; ஞான சூரியனே! உமாதேவி பங்கனே! நான் ஒரு துணையையும் காணேன். ஆதலால் உன் பவளத் திரு வாயால் அஞ்ச வேண்டா என்று நீ சொல்லும்படி நான் ஆசைப் பட்டேன்.

குறிப்புரை :

`வெங் கண்` என இயையும். ``வெகுளி வலையில் அகப்பட்டு`` (தி.8. அடைக்கலப்பத்து - பா.7.) என்பது, முன்னும் வந்தமை காண்க. நைஞ்சேன் - நைந்தேன்; வருந்தினேன்; போலி.
சிற்பி