திருவாசகம்-அதிசயப் பத்து


பண் :

பாடல் எண் : 1

வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று
மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன உவமனி லிறந்தன
ஒண்மலர்த் திருப்பாதத்
தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

எமக்கு இடம், செல்வம் முதலியனவையாய் இருப்பவன் சிவபெருமான் என்று மனத்தில் எண்ணியுருகாமல் மாதர் வஞ்சனையில் அகப்பட்டு வருந்துகின்றவனாகிய என்னை, உவமை யில்லாத திருவடியை உடைய எமது தந்தையாகிய இறைவன் ஆண்டு கொண்டு தன்னடியார் கூட்டத்தில் சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

வைப்பு மாடு - சேம வைப்பாக வைத்த செல்வம். என்றும் என்றும் என உம்மை கொடுத்து ஓதினுமாம். செப்பு - கிண்ணம். திறம் - கூறுபாடு; அவை கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று நின்று நுகரப்படுவன. ஒப்பு இலாதன - ஒருவாற்றாலேனும் ஒப் பாகக் கூறப்படும் பொருள் இல்லாதவாறு நிற்பன. உவமனில் இறந் தன - அரிதிற்கண்டு ஒருவாறு ஒப்புமைகூறும் பொருள்கள் அனைத் திற்கும் மேலாய் நிற்பன. கண்டாம் - கண்கூடாக யாம் கண்டோம். `மடவரலியர் திறத்தைத் துச்சமாக வெறுத்து, தன்னை வைப்பு மாடென்றும் மாணிக்கத்தொளியென்றும் நினைந்து மனம் உருகி நிற்கும் அடியவர் கூட்டத்தில், அவர்க்கு நேர்மாறான குணத்தை யுடைய என்னை இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 2

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை
என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

நீதியாய் இருப்பவனவற்றை நினையேன்; அவற்றை நினைப்பவர்களோடும் கூடேன்; துன்பத்துக்கே ஆளாகிப் பிறந்து இறந்து உழல்வேன்; இப்படிப்பட்ட என்னையும் இறைவன் தன்னடியான் எனக் கொண்டு ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்து வைத்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

``நீதி`` என்றது, உலகியலிலும், மெய் ஒழுக்கங்களை. ஏதமே (ஏதமாகவே) - துன்பமே மிகும்படி. நிரந்தரமாய் நின்ற ஆதி - என்றும் உள்ள பொருளாய் நிற்கும் முதல்வன். `ஒழுக்கம் மிக்காராகிய தன் அடியவர் கூட்டத்தில், ஒழுக்கத்தோடு சிறிதும் இயைபில்லாத என்னையும் இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 3

முன்னை என்னுடைய வல்வினை போயிட
முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதி யதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

நான் முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் நசிக்கும்படி, முக்கண்ணுடைய எந்தையும், யாவரும் அறிதற்கரியவனும், அடியார்க்கு எளியவனும் ஆகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

`முன்னை உள்ள என்னுடை வல்வினை` என்க. `வல்வினை போயிட ஆண்டு` என இயையும். `அடியார்க்கு எளியன்` எனக் கூட்டுக. ``அன்னை`` என்றது, உவமைக் கண் வந்த பால்வழு வமைதி, `தவமிக்காராகிய தன் அடியவர் கூட்டத்தில், வினையே மிக்கோனாகிய என்னையும் இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர்
காரணம் இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருள் கூடிடும்
உபாயம தறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற்
கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 

பொழிப்புரை :

இறைவன் தனது திருவருளை அடைதற்குரிய உபாயத்தை அறியாமல், வீணாயிறந்து போய் நரகத்தில் வீழ்வதற்கு மனமிசைந்திருந்த என்னை அங்ஙனம் வீழவொட்டாமல் தடுத்தாட் கொண்டு தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம் அல்லவா? இதுதான் உலகத்தவர் என்னைப் பித்தனென்று சொல் வதற்குக் காரணமாய் இருந்தது.

குறிப்புரை :

முதலடியை இறுதியிற் கூட்டுக.
ஒத்துச் செல்லுதல் - நூல்களானும், உபதேசத்தானும் உணரப் பட்ட இறைவன் திருவுளக் குறிப்போடு இயைந்து நடத்தல். `இதுவே இறைவன் திருவருளைப் பெறும் முறை` என்பது உணர்த்தியவாறு. இதற்கு நேர்மாறான செயலே மூன்றாம் அடியுட் கூறப்பட்டது. எனவே, `திருவருளை அடையும் நெறியிற் சிறிதும் பிறழாது ஒழுகும் தன் அடியவர் கூட்டத்தில், அதற்கு நேர்மாறான ஒழுக்கத்தையே உடைய என்னை இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்ற வாறாயிற்று.
`இங்ஙனம் சேர்த்தருளிய அதிசயச் செயலால் நானும் இறை வனையே நினைத்து பிதற்றும் பித்துடையேனாயினேன்; அஃது அறி யாது உலகப் பித்தன்போல என்னையும் உலகவர் கருதுகின்றனர்` என்பது முதலடியின் பொருள்.
கேளீர் - அறிந்துகொண்மின். இது தம்மோடு ஒத்து நின்று தம் நிலையை அறிய விரும்பும் நன்மக்களை நோக்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 5

பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன்
பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேநின்று
குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 

பொழிப்புரை :

அடியாரிடத்துச் சென்று சேர்கிலேன்; பல மலர் களைப் பறித்து அருச்சித்துத் துதியேன்; மாதர் விடயத்தில் சிக்கிக் குடி கெடா நின்ற என்னை, சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

பரவுதல் - துதித்தல்; இஃது இறைவனை என்க.
பாடு - பக்கம். குரவு - குராமலரை அணிந்த. `எரி நின்று ஆடிய` என மாற்றுக. அரவன் - பாம்பை அணிந்தவன். தன்னைத் துதித்தலும், பன்மலர் பறித்துத் தூவி வழிபடுதலுமே தொழிலாக உடைய தன் அடியவர் கூட்டத்தில், அத்தகையோர் அருகிலும் சென்ற றியாத என்னை இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 6

எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என்
ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற்
கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

இறைவனது திருநாமமாகிய ஐந்தெழுத்தையும் என் அறியாமையால் நினைந்திலேன்; அன்பரோடும் சேர்ந்திலேன்; நற்கருமங்களை விரும்பாமல் இவ்வுலகத்தில் பிறந்து இறந்து மண்ணா வதற்கு இசைகின்ற என்னை, பெரியோனாகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

`திருநாமமாகிய அஞ்சு எழுத்தும்` என்க. ஏழைமை - அறியாமை. இத் திருநாமத்தின் பெருமையைக் கலைஞானிகளும் ஒருவாற்றான் உணர்ந்துரைப்பாராக, அவர் பாலும் அணுகிலேன்` என்றபடி. `நல்வினையைச் செய்ய விரும்பாது மண்ணாவதற்கு ஒருப்படுகின்றேன்` என்க. `அஞ்செழுத்தின் உண்மைப் பொருளை அறிந்து அந்நிலையிலே நிற்கும் தன் அடியவர் கூட்டத்தில், அதுபற்றிச் சிறிதும் அறிந்திலேனாகிய என்னையும் இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற்
சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதியங் கண்டாமே. 

பொழிப்புரை :

இந்தப் பொய்யுடம்பை மெய்யென நினைத்துத் துன்பக் கடலில் அழுந்தின என்னை, எம் தந்தையாகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

`பொத்து` என்பது ஈற்றில் ஐகாரம் பெற்றது. `ஓட்டை` என்பது பொருள். இஃது அதனையுடையதற்காயிற்று. சுவர் - சுவர்களால் ஆகியது. இவை இரண்டும் ஒருபொருள்மேல் வந்த பெயர்கள். பொதிந்து - நிரம்பப் பெற்று. உளுத்து - உள்ளழிந்து. அசும்பு - மாசுகளின் கசிவு. பொய்க்கூரை - விரைவில் இடிந்து விழும் வீடு. இத்தை, `இதனை` என்பதன் மரூஉ.
மெய் - நிலையானது. முத்துமாமணி - முத்தென்னும் சிறந்த இரத்தினம். ``மாமணி`` முதலிய நான்கும், சோதி என்பதனோடு ஏற்ற பெற்றியான் வேற்றுமைத் தொகைநிலையாகவும், தொகா நிலையாகவும் தொடர்ந்தன. `சோதியை உடைய அத்தன்` என்க. சிவபிரான் திருநீற்றினால் வெள்ளொளியும் உடையனாய் இருத்தலின், முத்தின் ஒளியும், வயிரத்தின் ஒளியும் கூறப்பட்டன. `காயத்தின் மெய்ம்மையை உணர்ந்து அதன் கண் பற்றின்றி இருக்கும் தன் அடியவர் கூட்டத்தில், அதனையே மெய்யென்று கொண்டு திரிந்த என்னையும் இறைவன் சேர்த்தருளியது அதிசயம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 8

நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை
குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்
தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

என்னை ஆதியில் பிரிவித்து, இந்த உடம்பில் புகுத்தி, பரிபாக காலம் பார்த்து, ஒரு சொல்லைச் சொல்லி, என் பிறவித் துன்பத்தால் வந்த குற்றம் போக்கின ஒளியுருவனாகிய சிவ பெருமான், என்னையும் ஓர் பொருளாக்கி ஆண்டருளித் தன் அடியா ரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

`முன் என்னைத் தன்னொடு நில்லாவகை நீக்கிக் குரம்பையில் (உடம்பினுள்) புகப்பெய்து` என அடிகள் மிகத் தெளிவு பட இங்கு அருளிச் செய்தமையின், `இவர் முன்பு திருக்கயிலையில் உள்ள சிவகணநாதர்களுள் ஒருவராய் இருந்து, இறைவனது ஆணை யாலே இவ்வுலகில் தோன்றியவர்` என்பது நன்கு தெளிவாகின்றது. ஆதலின், இவரை, `கணநாதருள் ஒருவர்` எனத் திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறுதல், அங்ஙனமே கொள்ளத்தக்கதாம்.
இத்துணைத் தெளிவுபட எழுந்துள்ள இத் திருமொழிக்கு வேறு பொருளுரைத்துப் போக்குதல் நேர்மையாகாது. ``தன்னொடு நில்லாவகை நீக்கி`` என்றதற்கு, `கேவல நிலையினின்றும் சகலத்திற் செலுத்தி` என உரைத்தல் பொருந்தாமையை விளக்கவேண்டுவது இன்று. நோக்கி - என்னை ஆண்டுகொள்ளும் காலத்தை எதிர்நோக்கி யிருந்து. `நுண்ணியனவும், நொடியனவும் ஆகிய சொல்` என்க. பொருள்களின் நுட்பம் சொல்மேல் ஏற்றப்பட்டது. நொடியன- `நொடி` என்னும் கால அளவில் முடிவன; `மிகச் சுருங்கிய சொற்கள்` என்றபடி. `சொல் சொல்லி` என்னாது, ``சொற்செய்து`` என்றார். அவை, தாம் என்றும் கேட்டிராத புதுமையுடையனவாய் இருந்தமை பற்றி.
நுகம் - நுகத்தடி; இஃது ஏர் உழும் எருதுகள் இரண்டினையும் ஒருங்கிணைத்தற்கு அவற்றின் கழுத்தில் வைத்துப் பூட்டப்படுவது. விளாக்கை - உழுதல்; இது `விளாவுகை` என்பதன் மரூஉ. ``பாழ்ச்செய் விளாவி`` (தி.8 குலாப்பத்து - பா. 9.) எனப் பின்னரும் அருளிச் செய் வார். ``விளாக்கை`` என்னும் பெயரடியாகவே, விளாக்கைத்து என் னும் வினையெச்சம் பிறந்தது. எனவே `விளாவுகை செய்து - உழது` என்பது அதன் பொருளாயிற்று. நுகமின்றி உழுது என்றது, நுகத்தடி யின்றியே இரண்டெருதுகளை ஒன்றுபடப் பிணைத்து உழுதாற் போலப் பருப்பொருளாகிய கயிறு முதலியன இல்லாமலே என்னைத் தன் திருவடியை விட்டு நீங்காது அவற்றிடத்தே கட்டுண்டு கிடக்கச் செய்து நடத்தி` என்றதாம். தூக்கி - என்னை உலகியலினின்றும் எடுத்து.
முன் செய்த பொய் அற - அங்ஙனம் எடுப்பதற்கு முன்னே யான் செய்து கொண்டிருந்த பயனில்லாத முயற்சிகள் நீங்கி யொழியும் வண்ணம். துகள் அறுத்து - அம்முயற்சிகட்குக் காரணமாய் இருந்த அறியாமையாகிய குற்றத்தைப் போக்கி. எழுதரு சுடர்ச்சோதி - என் உள்ளத்தில் மேன்மேல் ஓங்கி எழுந்த ஒளியையுடைய விளக்காகிய இறைவன். ``அறுத்து எழுதரு`` என்றது, `சுவைத்து உண்டான்` என்பது போல உடனிகழ்ச்சி வினையென்க. சோதி, ஆகுபெயர். ஆக்கி - என்னைச் செப்பம் செய்து. `கிளவியாக்கம்` என்புழி (தொல்.சொல்.சூ.1 உரை) `ஆக்கம்` என்பதற்கு இவ்வாறே பொருளுரைப்பர் சேனாவரையர். `முன்னர்த் தன்னிடத்தினின்றும் நீக்கிப் பின்னர்த் தானே வந்து என்னை ஆட்கொண்ட செயல்கள் வியக்கத்தக்கன` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 9

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

பூவில் மணம்போல இந்தச் சரீரத்திலுள்ள மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாத இறைவனை நோக்காமல் இம்மைப் பயனையே நுகரும் பித்தர் சொல்லை நான் நம்பாதிருக்கும் படி, என்னை ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

உற்ற ஆக்கை - கிடைத்த உடம்பு; என்றது, மக்கள் உடம்பை. பரம்பொருளை உணரும் உணர்விற்கு மக்கட் பிறப்பினது இன்றியாமை உணர்த்துதற் பொருட்டு, ``உற்ற ஆக்கையின் உறுபொருள்`` என்றாரேனும், `அவ்வாக்கையின் கண்ணதாகிய உயிரினிடத்து உறுபொருள்` என்பதே கருத்தாம். நறிய மலரின்கண் எழுதரு நாற்றத்தை அம்மலரிடமாகப் பற்றி நுகர்தலன்றி வேறாகப் பற்றி நுகரவாராமைபோல, பரம்பொருளை உயிர் தன்னிடத்து உணர்ந்து பற்றுதலன்றித் தனக்கு வேறாக உணர்ந்து பற்றுதல் கூடாமை பற்றி, ``நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்`` என்று அருளினார். எனவே, ``நறுமலர் எழுதரு நாற்றம்போல்`` என்ற உவமை, வேறாக வைத்துப் பற்றலாகாமையை விளக்குதற்பொருட்டு வந்ததாம். இப்பொருளே,
``பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது``
என்ற தி.10 திருமந்திரத்தினும் (1459.) கூறப்பட்டது. ``ஆக்கையின் உறுபொருளும், பற்றலாவதொர் நிலையிலாப் பரம்பொருளும் ஆகிய அப்பொருள்`` என்க. ``அப்பொருள்`` என்ற சுட்டு, என்றும், உள்ளதாயப் பேரறிவாயும், பேரின்பமாயும் நிற்கும் அத்தன்மை யுடையது` என அதன் சிறப்பை எல்லாம் சுட்டி நின்ற பண்டறி சுட்டு; ஆதலின், `அதனைப் பாராதே பெற்றவா பெற்ற பயனது நுகர்வோரை, `பித்தர்` என்று அருளினார். `பெற்ற பயனைப் பெற்றவா நுகர்ந்திடும்` என மாறுக. பெற்றது வினைவழி யாகலின், `அது பின்னர் இடர் விளைப்பது` என்பதும் போந்தது. அது, பகுதிப் பொருள் விகுதி. பயன்தோறும் இவ்வாறே நின்று நுகர்தலின் ஒருமையாற் கூறினார். ``பெற்றவா`` என்றது, `அதன் மெய்ம்மை யறிந்து வெறுத்துப் பிறிது பயனுக்கு முயலாது` என்றபடி. இவ்வாறு வினைப்பயனையே நுகர்ந்திருப்போர் உலகர்.` `இப் பயனன்றிப் பிறிது பயன் உண்டு என்பதை யாவர் கண்டார்` என்பதே அவர் சொல்லும் சொல்லாதலின், அவர் சொல்வழி நில்லாதவாறு இறைவன் தம்மை ஆட்கொண்டருளினான் என்றார். `பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர் கூட்டத்தில் இருந்த என்னை, பற்றலாவதோர்` நிலையிலாப் பரம்பொருளாகிய தன்னைப் பற்றும் வண்ணம் செய்து, அத்தன்மையராகிய தன் அடியவர் கூட்டத்தில் இறைவன் சேர்த்தருளியது வியப்பு` என்றவாறு. இத்திருப்பாட்டுள் அருளப்பட்ட பரம்பொருளின் இயல்பைத் திருமுருகாற்றுப்படை உரை இறுதிக்கண் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டினமை காண்க.

பண் :

பாடல் எண் : 10

இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச்
சிறுகுடி லிதுஇத்தைப்
பொருளெ னக்களித் தருநர கத்திடை
விழப்புகு கின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்
சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே.

பொழிப்புரை :

அஞ்ஞானவிருள் செறிந்த வலிய வினைகளால் எடுக்கப்பட்ட இந்தப் பொய்யுடம்பை மெய்யாகக் கருதிக்களித்து நரகுக்கு ஆளாகிய என்னைத் திரிபுராந்தகனாகிய பெருமான் பொய்ந் நெறியினின்று நீக்கி ஆண்டருளின அதிசயத்தைக் கண்டோம்.

குறிப்புரை :

இருள் - அறியாமை; ஆணவம். திணிதல் - செறிதல். திணிந்து - திணிதலால் `எழுந்திட்டதோர் குடில்` என்க. `இதன் தன்மை இதுவாக இதனை உயர்ந்த பொருள் என்று எண்ணிக் களித்தேன்` என்றார். தெருளும் - பகைவரது புரமாதல் தெளியப்பட்ட. நொடி வரை - நொடி நேரத்துள். சினப் பதம் - வெகுளி நிலை. அருளும் - செலுத்திய. மெய்ந்நெறியைத் தருபவனை, பான்மை வழக்கால், `மெய்ந்நெறி` என்று அருளினார். பொய்ந்நெறி - நிலையாமையைச் சேர்ப்பிக்கும் நெறி. ``முப்புரமாவது மும்மல காரியம்`` (தி.10 திருமந்திரம்- 343) என்று அருளியபடி. இறைவன் முப்புரம் எரித்தமை அவன் உயிர்களின் மும்மலங்களைப் போக்குவோனாதலை விளக்குதல் பற்றி, இங்கு அவன் முப்புரம் எரித்தமையை விரித்தோதியருளினார். `முப்புரங்களையும் நொடிவரை இடிதர அழித்தாற்போல, இறைவன் எனது மலங்களையும் நொடிப்பொழுதில் நோக்கினமை வியப்பு` என்றவாறு.
சிற்பி