திருவாசகம்-புணர்ச்சிப் பத்து


பண் :

பாடல் எண் : 1

சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை
வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டு கொண்ட
கருணா லயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.

பொழிப்புரை :

ஒளிவிடுகின்ற பொன்மலையைப் போன்றவனும், துளைக்கப்படாத முத்தைப் போன்றவனும், காரணமின்றி, எனது தொண்டினை விரும்பக், கடையாய நிலையில் உள்ள என்னை, ஆட் கொண்டருளின கருணைக்கு இருப்பிடமானவனும், கரிய நிறமுடைய திருமாலும் பிரமனும் செருக்கில் அகப்பட்டு இன்னும் அடைய முடியாத தன்னை, எனக்கு அறியும்படி கொடுத்த அரிய அமுதம் போன்றவனும், செதுக்கப்படாத மாணிக்கம் போன்றவனுமாகிய இறைவனைச் சேர்ந்து அவனிடத்திலே பொருந்தியிருப்பது எந் நாளோ!

குறிப்புரை :

சுடர் பொற்குன்று - ஒருகாலைக் கொருகால் ஒளியை மிக விடுகின்ற பொன்மலை. இப்பொருள் தோன்றுதற் பொருட்டு, `சுடர்ப் பொற்குன்று` என வேற்றுமைத் தொகை பட ஓதாது, வினைத் தொகைபட ஓதியருளினார். அதனானே, ஏனைய மூன்று அடிகளினும் மிகுத்தோதற்பாலனவாய பகர ஒற்றுக்களையும் தொகுத்தோதியருளி னார். ``பொற்குன்று`` முதலிய பலவும், ஒருபொருள்மேல் வந்த பெயர்கள். வாளா தொழும்பு உகந்து - `தகுதி` என்னும் காரண மின்றியே எனது தொண்டினை விரும்பி; இதனை, ``கடைப் பட்டேனை`` என்றதன் பின்னர்க் கூட்டுக.
கருணாலயன் - அருளுக்கு இருப்பிடமானவன். தடை - மலத் தடை. பட்டு - அதனுட்படுதலால். `தன்னை எனக்குத் தந்த` என்க. ``புடைபட்டிருப்பது என்று கொல்லோ`` என்றதனை இறுதியில் வைத்து உரைக்க. இஃது ஏனைய திருப்பாட்டிற்கும் ஒக்கும். புணர்ந்து- தலைக்கூடி.

பண் :

பாடல் எண் : 2

ஆற்ற கில்லேன் அடியேன் அரசே
அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து
சிவனெம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக்
குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.

பொழிப்புரை :

அடியேன், பூதலத்திலே ஐம்புலன்களாகிய சேற்றில் அழுந்தி, பொறுக்கமாட்டாதவனாய் உள்ளேன். எனது செதுக்கப் படாத மாணிக்கம் போன்ற இறைவனைச் சேர்ந்து அவனையே நினைத்து, அரசனே! சிவனே! எம்பெருமானே! என்று துதித்து ஊற்றினையுடைய மணலைப் போன்று நெகிழ்ந்து மனமானது உருகி, முறையிட்டு வணங்கி நிற்பது எந்நாளோ!

குறிப்புரை :

பொருள்கோள்: `ஐம்புலனாய சேற்றில் அழுந்தாது, என் பொல்லா மணியைப் புணர்ந்து சிந்தை செய்து, அரசே, சிவனே, எம்பெருமானே, அடியேன் அவனிதலத்து ஆற்றிகில்லேன் என்று ஏத்தி, உள்ளே நெக்கு உருகி, ஓலமிட்டுப் போற்றி நிற்பது என்று கொல்லோ`.
``ஆற்றகில்லேன்`` என்றது, இறந்தகால மறைவினை. எனவே, `அடியேன் நிலவுலகில் உன்னைப் பிரிந்து நின்று ஆற்ற மாட்டாதவனாயினேன்` என்பது பொருளாயிற்று, ஆகவே` என்னை அவ்வாறு நில்லாது நின்பால் வருவித்த நின்கருணைக்கு யாது கைம்மாறு செய்யவல்லேன்` என்று உருகி ஓலமிட்டுப் போற்றி நிற்றலை விரும்புதல் பெறப்பட்டது. ஊற்று மணல் - உள்ளே ஊற்றினை உடைய மணல்; இது செறிந்து நில்லாது நெக்குவிட்டுக் குழைதல் நன்கறியப்பட்டது. உள்ளே - உள்ளிடத்தே; மனத்தின்கண்.

பண் :

பாடல் எண் : 3

நீண்ட மாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை விருப்பி லேனை
ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை
அள்ளூ றுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

நெடிய திருமாலும், பிரமனும் ஏனைய தேவரும் இந்திரனும் முன்னின்று துதிக்கும் பெருமையை உடையவனும் ஓங்கி நின்ற அழற்பிழம்பானவனும், தன்னிடத்து ஆசை இல்லாத என்னை ஆட்கொண்டருளின, என்னுடைய அருமையான அமுதம் போன்ற வனுமாகிய இறைவனை மிகுதியாக உருகுகின்ற மனத்தினை உடைய அடியவர்கள் முன்னிலையில் வேண்டுமளவும் வாய்திறந்து அரற்றி, மணம் பொருந்திய மலர்களை அருச்சித்து என் பொல்லா மணியைச் சேர்ந்து திருவடியைச் சிரமேற் கொண்டு கிடப்பது எந்நாளோ!

குறிப்புரை :

`நெடியவனினும் நெடியவன்` என்பார், `நீண்ட மாலும் வெருவ நீண்ட நெருப்பு` என்றார். மாயோன் நீண்டது, உலகினை அளக்க. விருப்பு - அன்பு. அள்ளூறு உள்ளம் - அன்புமிகவும் சுரக்கின்ற மனம். `அடியார்முன் அலறித் தூவிப் பூண்டுகிடப்பது` என இயையும். பூண்டு கிடத்தல் - திருவடியை விடாது பற்றிக்கொண்டு கிடத்தல்.

பண் :

பாடல் எண் : 4

அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறைஇன் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே.

பொழிப்புரை :

அக இதழ்களை உடைய தாமரை மலரிலுள்ள பிரமனும், திருமாலும், தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றைத் தேவரும், சொல்லித் துதிக்கின்ற திருப்பெயரை உடையவனும், சொல்லுலகத்தையும் பொருளுலகத்தையும் கடந்த ஒளியானவனும், நெல்லிக் கனியைப் போன்றவனும், தேனையும், பாலையும் நிறைந்த இனிய அமுதத்தையும், அமுதத்தின் சுவையையும் ஒப்பவனும் என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைப் போன்றவனும் ஆகிய இறைவனைச் சேர்ந்து நான் தழுவி இருப்பது எந்நாளோ!

குறிப்புரை :

அல்லி - அகவிதழ். ``அல்லாதவரும்`` என்றதனை ``அமரர் கோனும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``பொருள்`` என்றது, சொல்லால் உணர்த்தப்படும் பொருளை. `சொல்லும், அதனான் உணர்த்தப்படும் பொருளும் சடமே யாகலின், சித்தாகிய இறைவன் அவற்றினுள் அகப்படான்` என்பார் ``சொல்லும் பொருளும் இறந்த சுடரை`` என்றார். இங்ஙனம் கூறியதனால், அயன், மால் முதலிய பலரும் பல நாமங்களால் சொல்லிப் பரவுவன எல்லாம், அம்புலியைப்பற்ற விரும்பும் குழவிக்குக் கண்ணாடியிற் காட்டித் தரப்படும் அதன் நிழல்போல்வனவாய பொது வியல்புகளையேயாம் என்பது போதரும். இனி, அவன் சொல்லையும், பொருளையும் இறந்து நின்று உணர்வார்க்கு அறிவினுள்ளே இன்னதென உரைக்க வாராத இன்ப ஊற்றாய் நின்று இனித்தலை உணர்த்துவார், ``நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறை இன்னமுதை அமுதின் சுவையை`` எனப் பலவாறு அருளிச் செய்தார். புல்லிப் புணர்வது - பற்றிக் கூடுவது. பற்றாது வேறுநின்று அளவளாவுதலும், ஈருடலும் ஓருடலாம்படி தழுவுதலும் என்னும் கூடுதல் இரண்டனுள் ஒன்றுபடத் தழுவுதலைக் குறிப்பார், ``புல்லிப் புணர்வது`` என்று அருளினார். இங்ஙனம் உலகியல் வாய்பாட்டான் அருளிச் செய்தாராயினும், `அப்பணைந்த உப்பேபோல் (சிவஞான சித்தி - சூ.11.12.) அவனாகியே நிற்கும் அத்துவித நிலையைப் பெறுவது என்று கொல்லோ` என்றலே திருவுள்ளம் என்க. ``புணர்ந்து புணர்வது`` என்றமையால், முன்னர்ச் சிவலோகத்தில் அடியார் குழாத்தொடு கூடி நின்று நுகரும் இன்பத்தை அடிகள் விரும்பினமை பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 5

திகழத் திகழும் அடியும் முடியுங்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்
டாவா என்ற நீர்மை யெல்லாம்
புகழப் பெறுவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

மிகவும் விளங்குகின்ற திருவடியையும் திரு முடியையும் காணும் பொருட்டுக்கீழும் மேலுமாகத் திருமாலும் பிரம னும், மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் காணமுடியாத அந்தப் பெரியோன் இந்தப் பெரிய உலகம் முழுவதும் விளங்க, என்னை ஆளாகக் கொண்டு எனது தொண்டினை ஏற்று, அந்தோ என்று இரங் கின குணங்களை எல்லாம், என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கம் போன்ற அப்பெருமானைச் சேர்ந்து புகழ்ந்து பேசுவது எந்நாளோ!

குறிப்புரை :

திகழத் திகழும் - பிறபொருள்கள் யாவும் ஒளி மய மாய்த் திகழுமாறு விளங்கிய. ``அயனும் மாலும்`` என்றதை எதிர்நிரல் நிறையாகக் கொள்க. ``அகழ`` என்றதனை `அகழ்ந்து` எனத் திரித்து, தொகுக்கப்பட்ட உம்மையை விரிக்க. மாநில முழுதும் நிகழ்ந்தது, `பணிகொண்டான்` என்னும் சொல். புகழப்பெறுவது - நேர்நின்று புகழுதலைப் பெறுவது.

பண் :

பாடல் எண் : 6

பரிந்து வந்து பரமானந்தம்
பண்டே அடியேற் கருள்செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில்
அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர்
உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

பெருமான் விரும்பி வந்து, முன்னமே, அடி யேனுக்கு மேலான இன்பத்தை அருள் செய்யவும், பிரிந்து வந்து பெரிய நிலவுலகத்தில் பெரிய மயக்கத்தை அடைந்தேன். இதனைப் பலகால் எண்ணி, நீரைப் பொழியும் கண்கள் நீரைப் பொழிந்து கொண்டேயிருக்க, உள்ளன்பினால் மயிர்க்கூச் செறிய, மகிழ்ச்சியுற்று அன்போடு, என்னுடைய, செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து விரும்பி நிற்பது எந்நாளோ!

குறிப்புரை :

பரிந்து - இரங்கி. `செய்யவும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பெருமாநிலம், ஒரு பொருட்பன்மொழி. அரு மால் - நீங்குதற்கு அரிய மயக்கம். சொரிய - சொரிந்தவாறே நிற்க. நீர்மை, நீர் என நின்றது. `உள்நீரால்` என உருபு விரிக்க. புரிந்து - பணிசெய்து.

பண் :

பாடல் எண் : 7

நினையப் பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டங்
கனையக் கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

அன்பரல்லாத பிறருக்கு நினைத்தற்கு அருமை யான நெருப்பு, நீர், காற்று, நிலம், விண் ஆகிய பொருளாகிய இறை வனைப் பார்த்து, என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கம் போன்ற அப்பெருமானைச் சேர்ந்து, உடல் பூரித்துத் தழுதழுத்த கண்டம் கனைக்க, கண்களினின்றும் நீர் அருவியாகப் பாய, கரங்களையும் குவித்து மணமுடைய மலர்களைக் கொண்டு அணியப் பெறுவது எந் நாளோ!

குறிப்புரை :

பிறர் - அயலார்; அடியரல்லாதவர். நெருப்பை முதலிய ஐந்தும் ``அரிய`` என்ற எச்சத்திற்குத் தனித்தனி முடிபாயின. தழைத்து- உடல் பூரித்து. `தழுதழுத்து` எனற்பாலது, `தழுத்து` என நின்றது. நாவிற்குரிய இதனைக் கண்டத்திற்கு ஏற்றினார். `கனைப்ப` எனற்பாலது ``கனைய`` என நின்றது. ``தழுத்த கண்டம் கனைய`` என்றதனால், சொற்கள் நன்கெழாமை குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நெக்கு நெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலுந் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து இடைவிடாது உருகி நின்றும் அமர்ந்தும், படுத்தும், எழுந்தும், சிரித்தும், அழுதும், வணங்கியும் வாயாரத் துதித்துப் பல வகையாகக் கூத்துக்களை இயற்றிச் செவ்வானம் போன்ற திருமேனியை விளங்கப் பார்த்து, மயிர் சிலிர்த்து, என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து புகுந்து நிற்பது எந்நாளோ!

குறிப்புரை :

உள் நெக்கு நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து. நக்கும் - சிரித்தும். நானாவிதத்தால் - பற்பல வகையாக. நவிற்றி - செய்து. செக்கர் - செவ்வானம். திகழ நோக்கி - நன்கு பார்த்து. புக்கு நிற்பது - அடியவர் கூட்டத்துள் புகுந்து நிற்பது.

பண் :

பாடல் எண் : 9

தாதாய் மூவே ழுலகுக்குந்
தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போது
மேதா மணியே என்றென் றேத்தி
இரவும் பகலும் எழிலார் பாதப்
போதாய்ந் தணைவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

பழமையான ஏழு உலகங்களுக்கும் தந்தையான வனே! தாயானவனே! நாய் போன்ற என்னை ஆட்கொண்ட பித்துடையவனே! பிறவி நோய்க்கு ஒப்பற்ற மருந்து போன்றவனே! பேரறிவாளனே! என்று பலகால் துதித்து என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்து பேரின்பமாகிய மிக்க தேன் சிந்த இடைவிடாது இரவும் பகலும் அழகு நிறைந்து திருவடியாகிய தாமரை இதழ்களை ஆராய்ந்து சேர்வது எக்காலமோ!

குறிப்புரை :

தாதாய் - தாதையே. ``மூவேழுலகம்`` என்றதனை, `மூவுலகம். ஏழுலகம்` என இரண்டாக்கியுரைக்க. `ஈரேழுலகம்` என்னாது, `ஏழுலகம்` என்றே கூறும்வழி, அது பூலோகம் முதலாக மேலுள்ளனவற்றையே குறிக்கும். ``மூவுலகம்`` என்றவற்றுள் மேலுலகங்களும் அடங்குமாயினும், அவற்றைப் பின்னரும் வேறுபிரித்தோதினார், அவை கீழுலகங்களினும் பல்லாற்றாற் சிறந்துநிற்றல் கருதி. இனி, `மூத்த ஏழுலகங்கள்` என்று உரைப்பாரும் உளர். ``பேதாய்`` என்றது, `பேரருளுடையவனே` என்றும் பொருளைத் தந்து, பழிப்பதுபோலப் புகழ்ந்த குறிப்புச் சொல்லாய் நின்றது. பெருந்தேன் - குறையாது நிற்கும் தேன். பில்க - சிந்த. `ஏதும் ஆம் மணியே` என்பது, உம்மை தொக, `ஏதாம் மணியே` என நின்றது. `எப்போதும் ஏதும் ஆம் மணியே` என்றதனால், இறைவன், வேண்டுவார் வேண்டும் பொருளாய் நின்று பயன் தருதல் குறிக்கப்பட்டது. இனி, `மேதா மணியே` எனப் பிரிப்பின், மோனை நயம் கெடுதலேயன்றி, `பில்க` என்னும் எச்சத்திற்கும் முடிபு இன்றாம் என்க. `பாதப் போதினை ஆய்ந்து அணைவது என்றுகொல்லோ` என்க. ஆய்தல் - அவற்றின் பெருமையைப் பல்காலும் நினைத்தல்.

பண் :

பாடல் எண் : 10

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமாஎன்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தணைவ தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 

பொழிப்புரை :

எல்லா உலகத்தையும் காப்பவனே! படைப் பவனே! ஒடுக்குபவனே! பெருமை நிறைந்த விண்ணுலகிலுள்ள தேவர் களுக்கு எல்லாம் மூத்திருப்பவனே! முதுமை எய்தாத இளையோனாய் நின்ற முதல்வனே! முன்னே என்னை ஆட்கொண்டருளின எம் முடைய மேலோனே! என்று பலகால் பாடி வணங்கி என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தைச் சேர்ந்த பொலிவினையுடைய தாமரை மலரை அணுகப் பெறுவது எந்நாளோ!

குறிப்புரை :

இடைநிற்கற்பாலதாய, `காப்பாய்` என்பது, செய்யுள் நோக்கி முன் நின்றது. `முழுதும்`` என்றதில், இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. கண் ஆர் - இடம் நிறைந்த. மூப்பாய் - உயர்ந்து நிற்பவனே. இவ்விடத்து இச்சொற்கு இதுவே பொருளாகச் சிவஞானமுனிவரர், ``பேறிழ வின்பமோடு``(சிவஞானசித்தி செய்யுள் சூ.2.9.) என்னும் செய்யுள் உரையில் குறித்தல் காண்க. மூவா - கெடாத. மூத்தொழியும் முதல்களாய் நிற்பவரும் உளராகலான் அவரிற் பிரித்தற்கு, ``மூவா முதலாய் நின்ற முதல்வா`` என்று அருளிச்செய்தார். பார்ப்பானே - பார்ப்பன வேடம் பூண்டவனே. பூ - பொலிவு. இது, `பூம்போது` என மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி, இவ்வாறு வல்லொற்று மிக்கு முடிதலும் இலக்கணமாதல் உணர்க.
சிற்பி