திருவாசகம்-வாழாப்பத்து


பண் :

பாடல் எண் : 1

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பொழிப்புரை :

மண்முதல் விண் ஈறாகக் கலந்து விளங்கும், எமது மேலோனே! சிறப்பொடு விளங்குகின்றவனே! சிவலோகநாதனே! திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே! என்னை ஆண்டருளின நீயே அருள் செய்யவில்லை என்றால் நான் யாரோடு நொந்து கொள்வேன்? யாரிடம் இதை எடுத்துச் சொல்வேன்? நான் வேறு பற்றுக் கோடு இல்லேன். நெடிய கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழ ஒருப்படேன்: என்னை வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!

குறிப்புரை :

பார் - பூமி. ``சீர்`` என்றது, செம்மையை. `என்றும் செம்மையோடு விளங்குபவனே` என்பது கருத்து. `நான்மற்றுப் பற்றிலேன்` என இயையும், `ஆண்ட நீ `அருளிலையானால் யாரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன்` என்க. ``ஆண்ட நீ`` என்றதனால், `அயலாராகிய பிறர் யாரொடு` என்பது பெறப்படும். `உன்னைப் பிரிந்து வாழ்கிலேன்` என்க. கண்டாய், முன்னிலையசை.

பண் :

பாடல் எண் : 2

வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்
குணர்விறந் துலகமூ டுருவும்
செம்பெரு மானே சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எம்பெரு மானே என்னையாள் வானே
என்னைநீ கூவிக்கொண் டருளே. 

பொழிப்புரை :

வீணனாகிய என்னை ஆண்டருளின பெருமையை யுடைய மாணிக்கமே! தேவரும் அறிய முடியாத ஒருவனே! திருமால் பிரமனாகிய இருவருக்கும் உள்ள உணர்ச்சியைக் கடந்து, எல்லா உலகங்களிலும் ஊடுருவிச் சென்ற செம்மேனி அம்மானே! சிவலோக நாதனே! திருப் பெருந்துறையின் சிவனே! எம் தலைவனே! என்னை ஆளாக வுடையானே! நான் வேறு பற்றுக் கோடு இல்லேன்; அடியேனை, நீ அழைத்துக் கொண்டு அருள் புரிவாயாக.

குறிப்புரை :

வம்பன் - வீணன். `ஒன்றுக்கும் ஆகாத என்னை உயர்ந்தவனாகச் செய்த பெரியோனே` என்றபடி. இருவர், மாலும் அயனும். உணர்வு இறந்து - உணரும் நிலையைக் கடந்து. ``செம்பெரு மானே`` என்றது, `நெருப்புருவாகிய பெருமானே` என்றவாறு. கொண்டு - ஏற்றுக் கொண்டு.

பண் :

பாடல் எண் : 3

பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை
உணர்த்துவ துனக்கெனக் குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பொழிப்புரை :

சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! திருமால் புகழ்ந்து பாடுகின்ற உன்னு டைய திருவடியை அன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். என்னைத் தேடிவந்து நீ ஆண்டருளினை; பிணங்குவது உன்னோடு, நான் மகிழ்வதும் உன்னையே; உன்னிடத்தில் நான் தெரிந்து கொள்வது என் உயிர்க்கு நன்மை ஆவதேயாம்; நான் துணை இன்மை யால் வாடியிருக்கிறேன்; இவ்வுலகில் வாழ ஒருப்படேன்; வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!.

குறிப்புரை :

`ஊடுவதும்` என்று உம்மை தொகுத்தல். ஊடுதல் - வருந்திப் பேசுதல். உவப்பது - மகிழ்ந்து புகழ்தல். `இவை யிரண்டிற்கும் புலனாவார் உன்னையன்றி எனக்குப் பிறர் இலர்` என்ற படி. `உறுதியே` என்னும் பிரிநிலை ஏகாரம், தொகுத்தல். `உனக்கு யான் உணர்த்துவது, எனக்கு உறுதி (நன்மை) யாவனவற்றையே` என்க. நின் திருவுள்ளமும் எனக்கு உறுதியருள்வதே யாகலின், எனது வேண்டுகோளைக் கேட்டு அருள்செய்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 4

வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

விரைவிலே வாளை ஏந்திய அரக்கரது முப்புரங் களையும் நீறாக்கியவனே! தில்லையில் வீளங்குகின்ற கூத்தப் பெருமானே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! விண், நிலம், பாதலம் என்னும் எல்லைகளையுடைய மூன்று உலகத்தையும் கடந்து அக்காலத்தில், திருமால் பிரமனாகிய இருவரும் காணப்புகுந்த நாளில், முதலும் முடிவும் இன்றித் தோன்ற வல்லவனாய் வளர்ந்தவனே! நான் வேறு பற்றுக்கோடு இல்லேன். வாழமாட்டேன். வருவாய் என்று அழைத்து அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

`அரக்கர் புரத்தை வல்லை எரித்தோனே` என இயையும். வல்லை - விரைவில். `மூவுலகின் எல்லையையும் உருவி` என்க. `ஆதி ஈறு என்னும் இரண்டு இலனாக வல்லையாய்` என உரைக்க. இன்மை, ஆகுபெயர். `இன்மையாக` என ஆக்கம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 5

பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

பண்ணினை ஒத்த மொழியாளாகிய உமையம்மை யின் பங்கனே! என்னை உண்மையாகவே ஆட்கொண்டருளியவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடு இல்லேன். என் நினைவு, மெய், வாய், நாசியொடு, செவிகளும், கண்களும் உன்னிடத்தே வைத்ததனால் மண்ணுலகத்தினிடம் நான் வாழ மாட்டேன். வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!.

குறிப்புரை :

``பண்ணின்`` என்றதில் இன், வேண்டாவழிச் சாரியை. திண்ணமே ஆண்டாய் - ஐயத்திற்கிடனின்றி என்னை உனக்கு அடியவ னாகக் கொண்டாய். ``ஆண்டாய்`` என்றது முற்று. இதன்பின், `ஆத லால்` என்பது வருவித்து, அதனை, ``வருக என்று அருள்புரியாய்`` என்றதனோடு முடிக்க. எண்ணம் - மனம். `மண்ணின்மேல் வாழினும், எண்ணம் முதலியவற்றை உன்பால் வைத்து வாழின் கேடில்லை; யான் அவ்வாறு வாழவல்லனல்லேன்; ஆதலின், நின்பால் வருக என்று அருள்புரியாய்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 6

பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பொழிப்புரை :

பஞ்சினும் மென்மையான பாதங்களை உடைய உமையம்மையின் பங்கனே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். மிகவும் செம்மையாகவே ஆண்டருளினை! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! நாய்போன்ற நான் பயப்படுகின்றேன். நீ ஆட்கொண்டு வழங்கிய கருணையை மயக்கத்தினால் மறந்த வஞ்சகனாகிய நான் இவ்வுலகில் வாழமாட்டேன். வருவாய் என்றழைத்து அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

செஞ்செவே - மிகச் செம்மையாக; ஒருபொருட் பன்மொழி. `அருளினை மறந்தமையால் மீளவும் முன்னை நிலையே ஆகுங்கொலோ என்று அஞ்சுகின்றேன்` என்பது பொருளாதல் அறிக. வஞ்சன் - நாடகமாத்திரையாக நடிப்பவன்.

பண் :

பாடல் எண் : 7

பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர் கோலச் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

சூரிய மண்டலத்தில் எழுந்தருளியிருக்கும் ஒளி வடிவானவனே! செல்வத்தாற்சிறந்த அழகிய சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன் திருவடியை அன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லேன்; நான் உன் திருவருளையே கருதி உள்ளம் கனிந்து உருகி உன்னோடு கலந்து, வாழும் வகையினை அறியாத மயக்க உணர்வினையுடையேன். இவ் வுலகத்தில் வாழமாட்டேன். ஆதலால், வருவாய் என்றழைத்து அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

பரிதி வாழ் - சூரிய மண்டலத்தின்கண் வாழ்கின்ற. ஒளியாய் - ஒளியுருவினனே, சூரிய மண்டலத்தின் நடுவில் `இறைவன் சதாசிவ மூர்த்தியாய் எழுந்தருளியுள்ளான்` என்பது, சைவாகமநூல் துணிபு. சைவர் பகலவன்பால், இம்மூர்த்தியை நோக்கியே வணங்குவர்.
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரனுரு அல்லனோ``
(தி.5 ப.100 பா.8) என்ற அப்பர் திருமொழியையும் காண்க. `காயத்திரி மறையின் பொருளும் இம்மூர்த்தியேயல்லது, சூரியனல்லன்` என்பதை,
``இருக்கு நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைநினை யார்கன் மனவரே``
என்னும் அத்திருப்பாட்டின் பிற்பகுதி உறுதிப்பட விளக்குகின்றது. இனி, `பரிதியினிடத்துள்ள ஒளிபோலும் உருவினனே` என உரைப் பாரும் உளர். திரு - அழகு. கோலம் - வடிவம். ``வாழுமாறு அறியா மருளனேன்`` என்றது, முன்னர் உடன்செல்ல ஒருப்படாது நின்றமையை.

பண் :

பாடல் எண் : 8

பந்தணை விரலாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே
ஆரமு தேஅடி யேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

பந்து பொருந்திய விரலினை உடைய உமையம்மை யின் பங்கனே! நீ அன்றி நான் வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லேன்; செம்மையான நெருப்புப் போன்றவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! அழிவில்லா அமுதமே! சுவை முடிவில்லா பரம்பொருளே! அருமையான அமுதமே! நீயே வந்து அடியேனை உய்யும் வண்ணம் ஆட்கொண் டருளினை. இவ்வுலகில் வாழமாட்டேன்; வருவாய் என்றழைத்து அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

``அந்தம் இல் அமுது``, ``ஆரமுது`` என்றவை, இல் பொருள் உவமைகள். அருமை, தேவரும் பெறுதற்கருமை. அஃது இனிது விளங்குதற்பொருட்டு இருதொடராக்கி அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 9

பாவநா சாஉன் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர்தந் தேவே சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழ லாய்நிமிர்ந் தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே. 

பொழிப்புரை :

பாவத்தை நீக்குபவனே! தேவர்தம் தலைவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! மூன்று உலகங்களும் ஊடுருவும் வண்ணம் திருமால் பிரமனாகிய இருவரும், கீழும் மேலுமாய்த் தேட ஒலிக்கின்ற அனற்பிழம்பாகி வளர்ந்தவனே! யானைத் தோலுடையானே! உன் திருவடியே அன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடு இல்லேன்; இவ்வுலகில் நான் வாழமாட்டேன்; வருவாய் என்றழைத்து அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

பாவநாசன் - பாவத்தை அழிப்பவன். சிவனை மறந்து செய்வன பலவும் பாவமே என்பதே சிவஞானியர் கருத்து. ``கீழ்மேலாய்`` என்றதனை, `கீழ்மேலாக` எனத்திரிக்க. மா - யானை.

பண் :

பாடல் எண் : 10

பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர்
துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பொழிப்புரை :

குற்றம் இல்லாத தொன்மையான புகழை உடைய உமையம்மையின் பங்கனே! இளங்காளையை ஊர்தியாக உடையவனே! செழுமையதாகிய பிறையை அணிந்தவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னையன்றி நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன். ஆதலால், பிற தெய்வங்களை வணங்குவேனோ? வாயால் வாழ்த்துவேனோ? எனக்கு ஒரு துணை என்று மனத்தால் நினைப்பேனோ? சொல் வாயாக; இவ்வுலகத்தில் வாழமாட்டேன்; வருவாய் என்று அழைத்து அருள் புரிவாயாக!

குறிப்புரை :

பழுது, பதியைவிட்டு நீங்கியிருத்தல். அஃது உமை யம்மைக்கு எக்காலத்தும் இன்மையால், ``பழுதில்`` என்றும், அங்ஙனம் நிற்றல் அனாதியாகலின், அதனை, ``தொல்புகழ்`` என்றும் அருளிச் செய்தார். செழுமை - இளமை. `சொல்லாய்` என்றது, `இவ் வுறுதிப்பாடு நீ அறிந்ததேயன்றோ` என்னும் குறிப்பினது.
சிற்பி