திருவாசகம்-அருட்பத்து


பண் :

பாடல் எண் : 1

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

சோதிப் பிழம்பானவனே! ஒளிப் பிழம்பில் உள்ள கதிர்களாய் உள்ளவனே! சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்ற வனே! சுருண்ட கூந்தலை உடைய உமாதேவியின் பாகத்தை உடைய வனே! மேலானவனே! பாலினது நிறத்தைக் கொண்ட, வெண்ணீற்றை அணிந்தவனே! தாமரை மலரை இடமாக உடைய பிரமனும், திருமாலும் அறியமுடியாத நீதியானவனே! செல்வம் மிக்க திருப் பெருந்துறையில் நிறைந்த மலர்களையுடைய குருந்த மரநிழலில் பொருந்திய சிறப்புடைய முன்னவனே! அடியேனாகிய நான், உன்னை விரும்பி அழைத்தால், அதென்ன? என்று கேட்டு அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

சோதி - எல்லாவற்றையும் அடக்கி விளங்கும் பேரொளி. இஃது இறைவனது தன்னியல்பாகிய, `சிவம்` என்னும் நிலையைக் குறித்து அருளிச் செய்தது. சுடர் - அப்பேரொளியின் கூறு. இது, `சத்தி` என்னும் நிலையைக் குறித்து அருளிச்செய்தது. சூழ் ஒளி விளக்கு - ஓர் எல்லையளவில் பரவும் ஒளியை உடைய விளக்கு. இது சத்தியின் வியாபாரத்தால் வரும் பலவகை நிலைகளைக் குறித்து அருளிச் செய்தது. இம்மூன்றும் உவமையாகுபெயர்கள். சுரி குழல் - கடை குழன்ற கூந்தல். `மடந்தையது பாதியை உடையவனே` என்க. பால் கொள் - பாலினது தன்மையைக் கொண்ட, தன்மையாவது, நிறம். `மாலும்` என்னும் உம்மை தொகுத்தல். ``நீதி`` என்றது, `நீதியையே வடிவமாக உடைய கடவுள்` என்னும் பொருட்டாய் நின்ற ஆகுபெயர். எனவே, ``அறியா`` என்றது, ஆகுபெயர்ப் பொருளையே சிறப்பித்து நிற்றல் அறிக. செல்வம் - அருட் செல்வம். குருந்தம் - குருந்தமர நிழல். சீர் - புகழையுடைய. ஆதி - எப்பொருட்கும் முதல். ஆதரித்து - விரும்பி. ``அழைத்தால்`` என்றது, `அழைக்கின்றேனாதலின்` என்னும் பொருட்டு. அதெந்து` என்பது, `காரணம்` என்னும் பொருளையுடைய தோர் திசைச்சொல் என்ப. எனவே, `என் அழைப்புக் காரணம் உடையதே எனக் கருதி எனக்கு அருள் செய்` என்பது பொருளாம். இவ்வாறன்றி, `அதெந்துவே என்பது, அஃது என் என்னும் பொருளை யுடைய திசைச்சொல்` எனவும், `அஞ்சாதே என்னும் பொருளை யுடைய திசைச்சொல்` எனவும் பலவாறு கூறுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 2

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

கூத்தப் பெருமானே! மலம் இல்லாதவனே! வெண்ணீற்றை உடையானே! நெற்றிக்கண்ணை உடையானே! தேவர் பிரானே! ஒப்பற்றவனே! முறையிட்டு அரற்றி உலகம் முழுதும் தேடியும் உன்னை நான் பார்க்கவில்லை. தீர்த்தமாகிய பொய்கையை யுடைய திருப்பெருந்துறையின்கண் வளப்பமான மலர்களை உடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய செல்வனே! தொண்ட னாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

நிருத்தன் - நடனம் புரிபவன். ஒருத்தன் - ஒப்பற்றவன். திருத்தம், `தீர்த்தம்` என்பதன் சிதைவு. அருத்தன் - மெய்ப்பொருளாய் உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 3

எங்கணா யகனே என்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலிமார் இருவர்
தங்கணா யகனே தக்கநற் காமன்
தனதுடல் தழலெழ விழித்த
செங்கணா யகனே திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பொழிப்புரை :

எங்கள் நாதனே! என்னுயிர்த் தலைவனே! மயிர்ச் சாந்தணிந்த நீண்ட கூந்தலையுடைய இருதேவியர்க்கு நாதனே! சிறந்த அழகுடைய மன்மதனது உடம்பு நெருப்பு எழும்படி பார்த்த செம்மை யாகிய கண்ணையுடைய நாயகனே! திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய அழகிய கண்ணை உடையவனே! அடியேனாகிய நான் அன்புடன் அழைத்தால் அஞ்சாதே என்று அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

``எங்கள்`` என்றது, அடியவர் பலரையும். ஏலம் - மயிர்ச்சாந்து. இருவர், உமையும் கங்கையும். தக்க - மயக்குதல் தொழி லுக்குப் பொருந்திய. நற்காமன் - அழகிய மன்மதன். செங்கண் - நெருப்புருவாகிய கண். அங்கணன் - கருணையுடையவன்.

பண் :

பாடல் எண் : 4

கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் கார் மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும் நண்ணுதற்கு அருமை யான தூயவனே! எங்களுக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்று வேண்ட பெரிய அழலுருவத்தில் இருந்து தோன்றிய எந்தையே! பேரொலியை உடைய நான்கு வேதங்களும் பயில்கின்ற பெருந்துறையின்கண் செழுமையான மலர்களை உடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய மாசு இல்லாதவனே! அடியே னாகிய நான் அன்பொடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

வெளிப்படாய் என்ன - வெளிப்பட்டு அருள் புரி வாயாக என்று வேண்ட. இங்ஙனம் வேண்டினோர் திருப்பெருந் துறையில் இருந்த அடியார்கள். எனவே இதற்கு, `அடியார்கள்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. வியன்தழல் - பெரிய நெருப்பு. இது திருப்பெருந்துறையில் தோன்றியது. இவ்வாறன்றி `நான்முகனும், கண்ணனும் வேண்ட அவர்கட்கு அவர் முன் நின்ற தழற்பிழம்பினின்றும் வெளிப்பட்ட` என்று உரைப்பாரும் உளர். திமிலம் - பேரொலி.

பண் :

பாடல் எண் : 5

துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பொழிப்புரை :

உடுக்கை வடிவம் கொண்ட நுண்ணிய இடையினை உடையாளாகிய சுருண்ட கூந்தலையுடைய உமையம்மையின் இரண்டு முலைக்கண்கள் அழுந்திய தழும்புகள், நீறுபூத்த, பெரிய நெருப்பின்மேல் உள்ள இரண்டு புள்ளிகளைப் போல மிக்க ஒளி பொருந்திய, மார்பை உடையவனே! செடிகள் அடர்ந்துள்ள, பெரிய சோலைகள் சூழ்ந்த பெருந்துறையின்கண் செழுமையான மலர்களை யுடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய கடவுளே! அடியேன் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

துடிகொள் - உடுக்கையின் தன்மையைக்கொண்ட, தன்மை, வடிவம். பொடி - சாம்பல். `நீறுபூத்த நெருப்பு` என்னும் இவ்வுவமை, திருநீற்றை யணிந்த சிவபெருமானது செம்மேனியின் தன்மையை விளக்க வந்தது. `நீறுபூத்த நெருப்பின்மேல் இரண்டிடத் தில் சிறிது அந்நீற்றினை நீக்கினால், முழுவதும் வெண்மையாய் உள்ள அந்நெருப்பின் நடுவில், இரண்டு மாணிக்கங்களைப் பதித்ததுபோன்ற இரண்டு செம்புள்ளிகள் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறு காணப் படுகின்றன, உமையம்மை தழுவிய வடுவினையுடைய சிவ பெருமானது திருநீற்றையணிந்த மார்பில் தோன்றும் செம்புள்ளிகள்` என அடிகள் அருமையாக வியந்தருளிச் செய்கின்றார். கச்சியம் பதியில் கம்பையாற்றில் உமையம்மை சிவபெருமானை இலிங்க உருவில் வழிபட்டிருக்குங்கால், சிவபெருமான் கம்பையாறு பெருக் கெடுத்து வரச்செய்ய, அதனைக்கண்ட அம்மை பெருமானது திரு மேனிக்கு யாது நேருமோ என அஞ்சித் தனது இரு கைகளாலும், மார்பினாலும் பெருமானை அணைத்துத் தழுவிக் கொண்டமையைக் காஞ்சிப் புராணத்தில் விளங்கக் காண்க. ``எழுந்ததிரை நதித்திவலை`` என்னும் திருத்தாண்டகத்துள் நாவுக்கரசரும், ``எள்க லின்றி இமை யவர் கோனை`` என்னும் திருப்பாடலுள் நம்பியாரூரரும் இவ்வர லாற்றை இனிதெடுத்து அருளிச்செய்திருத்தலை அறிக. செடி - புதல்.

பண் :

பாடல் எண் : 6

துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
துதைந்தெழு துளங்கொளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

பவளம் போன்றவனே! தூய்மையானவனே! தூய்மையான வெண்ணீறு படிந்து தோன்றுகின்ற விளக்கமாகிய ஒளி, வயிரம் போன்று பிரகாசிப்பவனே! உன்னை இடைவிடாது நினைக்கின்றவர் மனத்தில் மிகுந்த சுவையைக் கொடுக்கின்ற அரிய அமுதமே! திருத்தமாகிய வேதங்கள் ஒலிக்கின்ற திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்த மரநிழலைப் பொருந்திய சிறந்த தந்தையே! அடியேன் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

துப்பன் - உயிர்கட்குத் துணைவலியாய் உள்ளவன். துதைந்து - நிறைதலால். துளங்கு ஒளி - வீசுகின்ற ஒளியானது. ``வயிரம்`` என்றது அதன் ஒளியை, ``வயிரத்து`` என்றதில் அத்து, `வேண்டாவழிச் சாரியை. உறுசுவை - மிக்க சுவை. `தேவர் அமுதம், உண்பார் நாவிலன்றி உள்குவார் மனத்தில் சுவைதாராமை போலாது, உள்குவார் மனத்தின் உறு சுவை அளிக்கும் அரிய அமுதம் நீ` என்ற படி. செப்பமாம் - திருத்தமாகிய.

பண் :

பாடல் எண் : 7

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பொழிப்புரை :

மெய்ப் பொருளானவனே! பலவடிவம் கொள் பவனே! மகாமேரு மலையையே வில்லாகக் கொண்டு பகைவரது கோட்டை மூன்றையும் எரித்து நீறாக்கின கையை உடையவனே! திருவடியால், காலனை உதைத்து, வெகுண்ட கடுமையான தீத்திரள் போன்ற உடலின் செந்நிறமுடையவனே! செல்வம் நிறைந்த திருப் பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய தலைவனே! அடியேன் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

விகிர்தன் - உலகியலின் வேறுபட்டவன். மேவலர் - பகைவர். வில் ஏந்தியது கையாகலின், அதுவே திரிபுரத்தை எரித்ததாக அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 8

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவனே! முதல்வனே! மூன்று கண்களையுடையவனே! முனிவனே! அரும்புத் தன்மை நீங்காத மலர்களைப் பறித்து அருச்சித்து, அன்போடு நினைத்து வழிபடுவோர்க்கு, வீடுபேறு கொடுத்து அருள்கின்ற ஞானமயனே! செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறப்புடைய தந்தையே! நான் அன்போடு அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

குறிப்புரை :

சிறந்த தவக்கோலம் உடைமை பற்றிச் சிவ பெருமானை, `முனிவன்` எனக்கூறுவர் பெரியோர் ``படர் புன்சடை - முனியாய் நீ உலகம் முழுதாளினும் - தனியாய்`` (தி.5 ப.96 பா.3) என்றாற்போலவரும் திருமொழிகளைக் காண்க. `` விஸ்வாதிகோ ருத்ரோ மகர்ஷி`` என உபநிடதமும் கூறும். மொட்டு - அரும்பு; என்றது போதினை (பேரரும்பை). `போதாய நிலையைக் கடவாத மலர்` என்க. கதி - முத்தி. சித்தன் - வியத்தகு செயலைச் செய்பவன்; தாழ்நிலையில் நின்றாரை உயர் நிலையில் வைத்தல்பற்றி இங்ஙனம் அருளிச்செய்தார். அத்தன் - அப்பன்; தலைவனுமாம்.

பண் :

பாடல் எண் : 9

மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவம்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 

பொழிப்புரை :

மயங்கும் தன்மை உடையேனது மனத்தை, மயக்கம் தீர்ந்திருக்கக் கண்ணால் பார்த்து, மறுபிறவியையும் ஒழித்த மெய்ப் பொருளானவனே! தூய்மையானவனே! சீறுகின்ற வாள் அரவமாகிய கொடிய பாம்பும் கங்கையாறும் தங்கிய சிவந்த சடையை உடைய வனே! தெளிவையுண்டுபண்ணும், நான்கு மறைகள் ஒலிக்கின்ற திருப்பெருந் துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்தமர நிழலைப் பொருந்திய சிறந்த அருளை உடைய வனே! நான் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று அருள் வாயாக!.

குறிப்புரை :

நோக்குதல் - கருதுதல். மனத்தைக் கருதுதலாவது, `இஃது இவ்வாறு ஆகுக` என எண்ணுதல். இங்ஙனம் எண்ணுதலை, `மான தீக்கை` என்ப. மறுமை - மறு பிறப்பு. இப்பிறப்பைக் கெடுத்தலாவது, உலகியலில் உழலாது சீவன் முத்தத்தன்மையை அடையச் செய்தல். பொருளன் - பரம்பொருளானவன். அருளன் - அருளுடையவன்.

பண் :

பாடல் எண் : 10

திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்டு
என்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றரு ளாயே. 

பொழிப்புரை :

அரிய தவக்கோலத்தை உடையவனே! திருந்திய நீண்ட சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்த மர நிழலைப் பொருந்திய முறையை ஆராய்ந்து, வருந்தி என்னுடைய எம்பிரான் என்றென்று பலகாலும் நினைந்து அன்போடு அழைத்தால், அலைகடல் நடுவில் உள்ள உலகத்தினின்றும் அழைத்து, எனது கயிலாயத்தைச் சேரும் வழி இதுதான்; வருவாயாக! என்று சொல்லி அருள்புரிவாயாக!.

குறிப்புரை :

திருந்து - திருந்திய; அழகுபெற்ற. சீர் - நிலை. இருந்தவாறு - இருந்த படியை. ஏசறா நினைந்து - துன்புற்று நினைத்து. இட்டு, அசைநிலை. `என்றென்று பன்முறை நினைந்து` என்க. அருந் தவா - அரிய தவக்கோலத்தை உடையவனே. ``எண்ணி, நினைந்திட்டு, நினைந்து`` என்றவை வேறுவேறு பொருளைச் சார்ந்து வந்தமை அறிக. ``அலைகடல்`` என்றது, பெருந்துன்பத்தைக் குறித்த சிறப்புருவகம். அது, பகுதிப்பொருள் விகுதி. ``நின்று`` என்றது, நீக்கப் பொருளின் வரும் ஐந்தாம் வேற்றுமைப் பொருளதாகிய இடைச் சொல். எனவே, அலைகடலின் அகத்தினின்றும் வா` என்பது பொருளாயிற்று. ``கயிலை`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``பொருந்த வா`` என்றார். எனவே, `கயிலையைப் பொருந்த வா; அதன்கண் புகும் நெறி இது; அந்நெறியே போதராய் என்று அருளாய்` என்றதாயிற்று. ``இது`` என்றது. `இது எனக்காட்டி` என்றபடி. போதராய் - வருவாயாக.
சிற்பி