திருவாசகம்-திருக்கழுக்குன்றப் பதிகம்


பண் :

பாடல் எண் : 1

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

பெருந்துறைப் பெருமானே! உன் திருப் பெயர்களைப் புகழ்ந்து பேசுவோர்க்கு ஒப்பற்ற ஆனந்தமே! என் இருவினை ஒத்தபிறகு, என் பிறவி வித்து இனிமேல் முளையாதபடி, நீ திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

`பிணக்கிலாத பெருமான்` என இயையும். பிணக் கிலாமை, சிறியோரையும் ஆட்கொள்ளும் வள்ளன்மை. இணக்கு - இணங்குதல்; பிறிதொன்றனோடு நிகர்த்தல். `இன்பமே துன்பமே துடைத்து வரும்` என மாற்றியுரைக்க. ஏகாரம் இரண்டனுள் முன்னது பிரிநிலை; பின்னது தேற்றம். உணக்கிலாதது ஓர் வித்து - உலர்த்தப் படாத ஒரு விதை; `ஒன்று` என்பது, ஒருவகையைக் குறித்தது. `விளையாமையை ஒத்தபின்` என இயையும். `விளையாமல்` என்பது பாடமன்று. விதைகள் யாவும் விளைவின் பின்னர் ஈரம் புலர உலர்த்தப்பட்ட பின்பே முளையைத் தோற்றுவித்தற்குரிய பக்குவத்தை எய்தும்; அவ்வாறின்றி ஈரத்தோடே நிழலிலே கிடப்பின், அதன்கண் உள்ள முளைத்தற் சத்தி கெட்டொழியும். அவ்வாறே செய்யப்பட்ட வினையாகிய ஆகாமியம் அதன்கண் மேலும்மேலும் நிகழும் விருப்பு, வெறுப்புக்களால் முறுகி நின்ற வழியே பின்னர்ப் பிறவியைத் தோற்று விக்கும். இவ்விருப்பு வெறுப்புக்கள் அஞ்ஞானத்தால் நிகழ்வன. இறைவன், அருளிய ஞானத்தில் உறைத்து நிற்பின், அஞ்ஞானங்கெட, விருப்பு வெறுப்புக்கள் எழமாட்டா. அவை எழாதொழியவே, ஒரோ வழிப் பயிற்சி வயத்தால் செய்யப்படும் ஆகாமிய வினை முறுகிநின்று பின்னர்ப் பிறவியைத் தோற்றுவிக்கமாட்டாது கெட்டு விடுமாகலின், ``என்வினை உணக்கிலாததோர் வித்து மேல்விளையாமையை ஒத்தபின்`` என்று அருளிச்செய்தார்.
எனவே, அடிகள் தாம் முன்னைப் பயிற்சி காரணமாக இறைவன் அருள்வழியினின்றும் சிறிது நீங்கினமையால் விளைந்த குற்றம், கடிதில் அந்நிலையினின்றும் நீங்கி முன்போலவே அருளில் உறைத்து நின்றமையாற் கெட்டொழிந்த பின்னர், இறைவன் தமக்கு முன்போலத் தோன்றியருளினமையைத் தெரித்தவாறாயிற்று. சஞ்சித வினை கெடுதலுக்கு, காய்ந்த விதை வறுக்கப்படுதலை உவமையாகக் கூறுவர். அடிகள் இங்கு ஆகாமிய வினை கெடுதலுக்கு, விதை உணக்கப்படாதொழிதலை உவமை கூறினார். ஞானியர்க்கு, `சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம்` என்னும் மூவகை வினைகளும் கெடுமாற்றினை,
எல்லைஇல் பிறவி நல்கும்
இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்; ஏன்ற
உடற்பழ வினைகள் ஊட்டும்
தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையு ஞானத்
தழல்உற அழிந்து போமே.
(சிவப்பிரகாசம் - 89) எனவும்,
``ஏன்ற வினைஉடலோ டேகும்இடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும்``
(திருவருட்பயன் - 98) எனவும் மெய்ந்நூல்கள் விளக்குதல் காண்க.
தன்னை அறிந்திடு ம் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே.
என்ற தி.10 திருமந்திரத்தையும் (2611) காண்க. முன்னை வினை, சஞ்சிதம். பின்னைவினை, ஆகாமியம். ``வினை ஒத்தபின்`` என்றதற்கு இவ்வாறன்றிப் பிராரத்த நுகர்ச்சிக்கண் வரும் இருவினை யொப்பினைப் பொருளாகக் கூறின், அது திருவருள் பெறுவதற்கு முன் நிகழ்ச்சியாதலின், அடிகள் நிலைக்குச் சிறிதும் ஒவ்வாமை யறிக. ``கணக்கு`` என்றது முதலும், முடிவுமாய எல்லையை. இறைவன் அடியார்களுக்கு அருட்டிருமேனிகொண்டு அருளுதல் என்றும் உள்ள செயலாதல் அறிக. இனி, `அளவில்லாத பெருமையையுடைய திருக்கோலம்` எனினுமாம். இறுதிக்கண், `இதற்கு யான் செய்யும் கைம்மாறு யாது` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. இஃது ஏனைய திருப்பாட்டிற்கும் ஒக்கும்.

பண் :

பாடல் எண் : 2

பிட்டு நேர்பட மண்சு மந்த
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறைப் பெருமானே! உன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை அடைந்திலேன்; ஆயினும், நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளும் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

பிட்டு நேர்பட - உண்ட பிட்டுக்கு அளவொப்ப, `சட்ட` என்பது பற்றிமேலே (தி.8 திருக்கோத்தும்பி - பா.7- உரை) கூறப்பட் டது. நேர்பட (உன்னோடு நன்கு) தலைக்கூட, சழக்கன் - பொய்யன். சிட்டன் - உயர்ந்தோன்.
வெங் கட்டன் - கொடிய துன்பத்தை யுடையவன். இதனுள், காட்டுதலுக்குச் செயப்படு பொருளாகிய, `கோலம்` என்பதை, வேண்டும் இடங்களில் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 3

மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
மலங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
மேல்வி ளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகள்
இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காமலே வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.

பொழிப்புரை :

என் கண்ணீர் துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! நான் உன்னை விட்டு நீங்கினேன்; மேல் விளையும் காரியத்தை அறிந்திலேன்; உன் திருவடி இரண்டையும் வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக் கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

`மலங்கினேனது கண்ணின்நீர்` என்க. மலங்குதல் - மயங்குதல். ``கெடுத்த`` என்ற பெயரெச்சம், ``பெருந்துறை`` என்ற இடப்பெயர் கொண்டது. `பெருந்துறைக்கண் உன்னோடு வாராமல் நின்றுவிட்டேன்` என்க. வினைக்கேடன் - வினையாகிய கெடு நெறியை உடையேன். இனி - இப்பொழுது; இது, விலங்கினேன்; என்றதனோடு முடியும்.
மேல் விளைவது, நின் திருவடியைப் பெறுதல், பிறவிக்கடலில் வீழ்தல் என்னும் இரண்டில் இன்னது என்பது, `சேவடிகள் வைப்பிடம் இன்றி` என்றது, `நீ மீளத் தோன்றியருளும் இடம் கிடைக்கப்பெறாமல்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

பூணொ ணாததொ ரன்பு பூண்டு
பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
நடுக்கட லுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்க்கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

உன் அன்பர் உன்னிடத்தில் பேரன்பு பூண்டு வணங்கக் கண்டு, நான் மிக்க நாணம் அடைந்து, துன்பக் கடலில் அழுந்தி, திருப்பெருந்துறையாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தலும், நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, காணமுடியாத உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

பூணொணாததொர் அன்பு - என் தரத்திற்கு மேற்பட்ட ஓர் அன்பு. நாணொணாததோர் நாணம் - என் நிலைக்கு வேண்டாத ஓர் நாணம். `அந்நாணமாகிய கடல்` என்க, `பேணொணாத தோணி` என இயையும்.
பேணொணாத - எளிதில் பாதுகாத்துக் கொள்ளுதற்கு இயலாத. பெருந்துறைப் பெருந்தோணி - திருப்பெருந்துறைக்கண் கிடைத்த திருவருளாகிய தோணி.
உகைத்தல் - ஓட்டுதல். காணொணா-ஒருவர்க்கும் காண இயலாத. `யான் உன்மாட்டுப் பேரன்பு உடையேனாய் இருந்தும் உன்னொடு வரும் பேற்றினைப் பெறாமையால், அப்பேற்றினைப் பெற்றோர் எள்ளும் எள்ளலுக்குப் பெருநாணங்கொண்டு, அந்நிலை நீங்குதற்கு நீ திருப்பெருந்துறைக் கண், தில்லையில் வருக என்று அருளிச் செய்த திருவருளையே பற்றுக்கோடாகக் கொண்டு பல தலங்களிலும் சென்று உன்னை வணங்கிவர, திருக்கழுக்குன்றத்தில் உனது அரிய திருக்காட்சியை எனக்குக் காட்டியருளினாய்` என்பது இதன் திரண்ட பொருள். ``கடல்`` என்றது, துன்பத்தை எனினுமாம்.

பண் :

பாடல் எண் : 5

கோல மேனிவ ராக மேகுண
மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
நச்சி நச்சிட வந்திடும்
கால மேஉனை ஓதநீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

அழகிய திருவுருவம் உடையவனே! திருப்பெருந் துறைக் கொண்டலே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் மனத் தில் வைக்கப் பட்டிருக்கிற சிகாமணியே! உலகமே சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

கோல மேனி வராகமே - அழகிய திருமேனியைப் பன்றியுருவாகக் கொண்டவனே, இது பன்றிக்குட்டிகட்கு இறைவன் தாய்ப்பன்றியாய்ச் சென்று பால்கொடுத்த திருவிளையாடல் பற்றி வந்தது. `குணமாம் கொண்டலே` என இயையும். குணம், அருட் குணங்களாகிய தன்வயமுடைமை முதலியன. `குணமே வடிவாகிய கொண்டல்` என்க.
எனவே, `அக்கொண்டலால் தரப்படுவதும் குணமே` என்பது போந்தது. `என் சிந்தைதன் அகத்தே பொருந்த வைத்துக் கொண்ட சிகாமணியே` என்றபடி.
கரி - சான்று. நச்சுதல் - விரும்புதல். நச்சி - நச்சுதலால். அடிகள் இறைவனையன்றிப் பிறிதொன்றையும் விரும்பாமையை உலகம் அறியுமாகலின், `ஞாலமே கரியாக நான் உனை நச்சி` என்றார். ``நச்சி`` என்னும் எச்சம், ``வந்திடும்`` என்றதனோடு முடிந்தது. நச்சிட வந்திடும் காலமே - என்றும் இடையறாது அன்பு செய்யுமாறு உன்பால் யான் வருதற்குரிய காலத்திலே; ஏகாரம், பிரிநிலை. `காலமே காட்டினாய்` என இயையும். ஓத - இங்ஙனம் மகிழ்ந்து பாடும்படி.

பண் :

பாடல் எண் : 6

பேதம் இல்ல தொர்கற் பளித்த
பெருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை
ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.

பொழிப்புரை :

வேறுபடுதல் இல்லாத ஒப்பற்ற கல்வியாகிய ஞானத்தை அருள்செய்த திருப்பெருந்துறை இன்பப் பெருக்கே! பல தீமைகள் பேசும்படி என்னை அயலார் முன்னே நீ என்ன காரியம் செய்து வைத்தாய்?. முடிவற்றனவும், தீங்கற்றனவுமாகின உன் திருவடிகளே எனக்குப் புகலிடம் எனக் கருதி ஆசையோடு உன்னைப் புகழும் வண்ணம் நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

பேதம் - வேறுபடுதல். கற்பு - கல்வி; என்றது ஞானத்தை, உண்மை ஞானம் என்றும் வேறுபடாது நிலைத்து நிற்பதாதல் அறிக. வெள்ளம் - இன்ப வெள்ளம். ஏதம் - குற்றம்; இஃது அடிகள்மேல் ஏதிலார் ஏற்றிக் கூறுவது.
ஏதிலார் - அயலார். இவர்கள் அடிகளது அன்பு நிலையையும், இறைவனது அருள் நிலையையும் அறியாராகலின், அடிகள் உலகியலின் நீங்கிய பின்னர் அல்லல் உறுவதை, அவர் செயத்தக்கது அறியாது செய்தமையால் விளைந்ததாக அவரைப் பழித்தனர் என்க. ``என்செய்தாய்`` என்றது, `தகாதது செய்தாய்` என்னும் பொருட்டு. தகாதது, தன் அடியவரை அல்லல் உறுவித்தது. ``என்செய்தாய்`` என்றதன் பின்னர், `ஆயினும்` என்பது வருவிக்க. ``சாதல் சாதல்`` என்ற அடுக்கு, பன்மை பற்றி வந்தது. `சாதலாகிய பொல்லாமை, என்க.
பொல்லாமை - தீங்கு. தனிச்சரண் - ஒப்பற்ற உனது திருவடியே. சரண் ஆம் என - நமக்குப் புகலிடமாகும் என்று. உனை ஓத - நான் உன்னைப் புகழ்ந்து பாடும்படி,

பண் :

பாடல் எண் : 7

இயக்கி மார்அறு பத்து நால்வரை
எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்ம லப்பழ
வல்வி னைக்குள் அழுந்தவும்
துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்
தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்மு னேவந்து
காட்டினாய் கழுக் குன்றிலே. 

பொழிப்புரை :

இயக்கிமார் அறுபத்து நால்வரைத் தன் ஞானோபதேசத்தால் எண்குணமும் அடையச் செய்த ஈசனே! மயக்கத்துக்கு ஏதுவாகிய மும்மல சம்பந்தமாகிய வல்வினைக் கடலில் அடியேன் அழுந்தி நிற்கவும் என் தளர்ச்சியை நீக்கி, என்னை ஆண்டருளி, உன் திருவடிகளைத் தந்து அடியார்களுக்கு எதிரில் திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

குறிப்புரை :

`யட்சன்` என்னும் ஆரியச்சொல், தமிழில், `இயக்கன்` எனத் திரிந்து வருதலின், `இயக்கிமார்` என்றது. தேவகணத்தவருள் ஒருவகையினராகிய `இயக்கர்` என்பவருள் பெண்பாலாரை என்பது வெளிப்படை. இம்மாதர் அறுபத்து நால்வருக்குச் சிவபெருமான் ஞானோபதேசம் செய்து, தனது எண்குணங்களையும் அடையச் செய்தான் என்பது, இத்திருப்பாட்டின் முதலடியிற் கூறப்பட்டது.
இத்தகைய வரலாறு ஒன்று உத்தரகோசமங்கைப் புராணத்தில் காணப்படுகின்றது. மயக்கத்தால் விளைந்ததனை, ``மயக்கம்`` என்றார். `மயக்கமாயதோர் வினை` என இயையும். மும்மல வினை, மும்மலங்களால் உண்டாக்கிய வினை. ``இருவினைப் பாசம் மும்மலக்கல் ஆர்த்தலின்` (தி.12 பெ. புரா. நாவுக். 129) என்புழிப்போல, மூலகன்மத்தை வேறு வைத்து, ``மும்மலம்`` என்று அருளினார். துயக்கு - மெலிவு. `தூமலர்` என வருதலேயன்றி, `தூய்மலர்` என வருதலும் வழக்கென்க. `கயங்க` என்பது வலிந்து நின்றது. கயங்குதல் - கலங்குதல். `அடியார் முன்னே கயக்க வைத்து` என்க. `முன்பு கயக்க வைத்து, இப்பொழுது காட்டினாய்` என்க.
சிற்பி