திருவாசகம்-கண்ட பத்து


பண் :

பாடல் எண் : 1

இந்திரிய வயமயங்கி
இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய்
அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச்
சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம்
அணிகொள்தில்லை கண்டேனே.

பொழிப்புரை :

பொறிகளின் வயப்பட்டு மயக்கமடைந்து அழிவதற்கே காரணாகிப் பல புவனங்களிலும் அலைந்து சென்று, கடத்தற்கருமையான நரகத்தில் வீழ்வேனாகிய எனக்கு, மனத்தைத் தூய்மையாக்கிச் சிவத்தன்மையை வெளிப்படுத்தி என்னை ஆண்டருளிய, முடிவில்லாத ஆனந்தமூர்த்தியை அழகிய தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

`இந்திரிய வயத்தால் மயங்கி` என்க. காரணமாய் - காரணம் உண்டாகப்பெற்று. அந்தரம் - வானுலகம். இஃது இயமன் உலகத்தைக் குறித்தது. வீழ்வேற்கு - வீழ்தற்கு உரியவனாய் இருந்த எனக்கு. ``தெளிவித்து`` என்றது, `தெளிவித்தலாகிய நலத்தைப் புரிந்து` என்னும் பொருட்டாய் நின்று, ``வீழ்வேற்கு`` என்னும் நான்கா வதற்கு முடிபாயிற்று. `எனைச் சிவமாக்கி ஆண்ட` என்க. ``சிவமாக்கி`` என வேறு போல அருளிச்செய்தாராயினும், `தானாக்கி` என்பதே கருத்தாதல் அறிக. ``ஆக்கி ஆண்ட`` என்றது, `ஓடி வந்தான்` என்பது போல, ஒருவினைப் பொருட்டு. ஆனந்தம் - ஆனந்த வடிவத்தை.

பண் :

பாடல் எண் : 2

வினைப்பிறவி என்கின்ற
வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே
தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென்
பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை
அம்பலத்தே கண்டேனே. 

பொழிப்புரை :

வினையினால் உண்டாகிய பிறவியாகிய துன்பத்தில் சிக்கி, இறைவனாகிய தன்னைச் சற்றும் நினையாமலேயே மெலிவடைந்து இருக்கும் என்னை, மிகப்பெரிதும் ஆட்கொண்டு என் பிறவித்தளையை நீக்கின ஒப்பிலாப் பெருமானை, எல்லா உலகங்களும் வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

வினைப் பிறவி - வினையால் வரும் பிறவி. எனைப் பெரிதும் - எத்துணையோ மிகுதியாக. மிகுதி, தம் தரம் நோக்கிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 3

உருத்தெரியாக் காலத்தே
உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக்
கருணையினால் ஆண்டு கொண்ட
திருத்துருத்தி மேயானைத்
தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன்
அணிகொள்தில்லை கண்டேனே.

பொழிப்புரை :

என்னுடைய உருவம் தோற்றப்பெறாத காலத்திலே என் உள்ளே புகுந்து என் மனத்தில் நிலைபெற்று, ஞானத்தைப் பதியச் செய்து உடம்பிற்புகுந்து தன் பெருங்கருணையினால் ஆட்கொண் டருளின, திருத்துருத்தி என்ற தலத்திலே எழுந்தருளியவனை, ஆசை யினால் நாய்போன்ற அடியேன் அழகு பொருந்திய தில்லையம் பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

உருத் தெரியாக் காலம் - தாய் வயிற்றில் உடம்பு உருப் பெறாதிருந்த தொடக்கக் காலம். ``காலத்தே`` என்ற ஏகாரம், பிரிநிலை.
உள்புகுந்து - கருவினுள் புகுந்து. உளம் - சூக்கும தேகமாய் நின்ற மனம் . கரு திருத்தி - பின்னர்க் கருவைச் செம்மையாக வளர்த்து. ஊன் புக்கு - பின் பிறந்து வளர்ந்த உடம்பினுள்ளும் நின்று; என்றது, `உலகியலில் உழன்ற காலத்தும் அதற்குத் துணையாய் நின்று` என்றபடி. இறைவனது திருமேனியை, `ஊன்` என்றல் பொருந்தாமை யின், ``ஊன்புக்கு`` என்றதற்கு ``ஆசான் மூர்த்தியாய் எழுந்தருளி வந்து` என உரைத்தல் கூடாமை அறிக. திருத்துருத்தி, சோழநாட்டுத் தலம். தித்திக்கும் - இனிக்கின்ற; என்றது, `இன்பம் மிகுகின்ற` என்ற படி. சிவபதத்தை - வீடு பேறாய் உள்ளவனை. அருத்தி - விருப்பம். இதனுள் அடிகள் கருவிலே திருவுடையராய் இருந்தமை புலப்படுதல் காண்க. ``கருவாய்க் கிடந்து உன்கழலே நினையும் கருத்துடையேன்`` (தி.4 ப.94 பா.6) என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 4

கல்லாத புல்லறிவிற்
கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து
வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோருங் காணஎன்றன்
பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை
அம்பலத்தே கண்டேனே.

பொழிப்புரை :

கல்லாத அற்ப அறிவினால் கடையவனாகிய நாய் போன்றவனை எல்லாம் வல்லானாய் வந்து திருவருள் பெற்றிருக்கும் படி பலரும் காண என்னுடைய ஆன்ம அறிவைப் பற்றியுள்ள மும் மலக்கட்டினையும் போக்கினவனை எல்லோரும் வந்து வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

புல்லறிவின் - புல்லறிவினால். வல்லாளனாய் - வலிதின் ஆளுதல் உடையவனாய். வனப்பு - அழகு; என்றது சிறப் பினை. `யான் வனப்பெய்தி இருக்கும் வண்ணம்` என உரைக்க. பசு பாசம் - பசுவாம் தன்மையைச் செய்யும் பாசம்.

பண் :

பாடல் எண் : 5

சாதிகுலம் பிறப்பென்னுஞ்
சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை
அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம்
யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக்
குலாவுதில்லை கண்டேனே.

பொழிப்புரை :

சாதி, குலம், பிறவி என்கின்ற சூழலிலே அகப்பட்டு அறிவு கலங்குகின்ற அன்பில்லாத நாய் போன்ற எனது துன்பத்தினைக் களைந்து, அடிமை கொண்டு அறியாமைக் குணத்தையும் அன்னியருடைய வடிவம் என்ற எண்ணத்தையும் நான், எனது என்று சொல்லும் வார்த்தையையும் அறவே அழித்து, குற்றம் இல்லாத அமுதமானவனைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

அந்தணர் முதலிய நான்கு வருணங்களும், பிறப் பினாலும், ஒழுக்கத்தினாலும் உளவாகும். அவற்றுள் ஒழுக்கத்தினால் உளவாவனவற்றை, ``சாதி`` என்றார், அவ்வவ்வருணத்துள்ளும் அவ்வவ்வொழுக்கமுடையாரை, `சாதியந்தணர்` முதலியோராகக் கூறும் வழக்குப்பற்றி.
குலம் - குடிமை; இஃது ஒவ்வொரு வருணத்தினும் உள்ள பகுதி; இதனை, `கோத்திரம்` என்பர் வடமொழியாளர். பிறப்பு - பிறந்த வருணம். சுழிப்பட்டு - வெள்ளச் சுழலில் அகப்பட்டு. சாதி முதலிய மூன்றும் உலகியலில் தருக்கினை உண்டாக்கி அதனுள்ளே அழுந்தச் செய்தலின் இவற்றை, ``சுழி`` என்றார்.
ஆதம் - ஆதரவு. ``குணம்`` என்றது, தொழிலை. பேதையது தொழில், ஏதம் கொண்டு ஊதியம் போக விடல்(குறள் - 831), நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும் பேணாமை (குறள் - 833) முதலியன. ``பிறர் உருவம்`` என்றது, பிறர் எனக் கருதி உறவும், பகையும் கொள்ளுதற் கேற்ற உருவ வேறுபாட்டுணர்வினை. உரை - செருக்குச் சொல். `இவைகளை மாய்த்து` என்க.

பண் :

பாடல் எண் : 6

பிறவிதனை அறமாற்றிப்
பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென்
றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த்
திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும்
வணங்கிடநான் கண்டேனே.

பொழிப்புரை :

பிறவியை முற்றிலும் நீக்கி, நோய், முதுமை ஆகிய இவை இரண்டையும், சுற்றமாகிய பற்றோடுங் கூட நீங்கிப் போய் உலகத்தையுடைய ஒப்பற்ற முதல்வனை நெருங்கிய சோலை சூழ்ந்த தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தை அடைந்து அந்தணரும் தேவரும் தொழுதிட நான் கண்டேன்.

குறிப்புரை :

பிறவிக்கு ஏதுவாய மயக்கத்தை, `பிறவி` என்றார். உறவு - கிளைஞர்மேல் செய்யும் பற்று. மன்னி - பொருந்தி. மறைய வர், தில்லைவாழந்தணர். `மாற்றி, சென்று, மன்னி, ஒருமுதலை மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேன், என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 7

பத்திமையும் பரிசுமிலாப்
பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
விளங்குதில்லை கண்டேனே. 

பொழிப்புரை :

அன்புடைமையும் நல்லொழுக்கமும் இல்லாமைக்கு ஏதுவாகிய, ஆன்ம அறிவைத் தடை செய்கின்ற பாசத்தை நீக்கி, அடியேனை இவன் பித்துப் பிடித்தவன் என்று கண்டோர் கூறும்படி செய்து, நான் தமது திருவடியை விட்டு அகலாமல் மனம் என்கிற திண்கயிற்றால் கட்டுண்டு கிடக்கும்படி செய்த ஞானவடிவினனாகிய சிவபெருமானது திருவிளையாடலைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

பத்திமை - அன்பு. பரிசு - பக்குவம்; தகுதி. `இவை இரண்டும் இல்லாமையாகிய பசுத்துவத்தைச் செய்யும் பாசம்` என்க. `பேராமே கட்டுவித்த` என இயையும். சித்தம் - மறவாத மனம். ``நாயகன் சேவடி தைவரும் சிந்தையும்`` (தி.12 பெ. புரா. நாவு. 140), என்றார் சேக்கிழாரும். `திருப்பாதத்தில் கட்டுவித்த` என்க.

பண் :

பாடல் எண் : 8

அளவிலாப் பாவகத்தால்
அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே
வெறுவியனாய்க் கிடப்பேனுக்
களவிலா ஆனந்தம்
அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந்
தொழுந்தில்லை கண்டேனே. 

பொழிப்புரை :

அளவற்ற எண்ணங்களால் அழுந்தப்பட்டு இவ் வுலகத்தில் அறிவில்லாமல் இனிமேல் நிகழப்போவதைச் சிறிதும் அறியாமல் பயனற்றவனாயிருக்கின்ற எனக்கு அளவற்ற இன்பத்தைக் கொடுத்து என்னை ஆண்டருளினவனை வஞ்சமில்லாத் தேவரும் வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

பாவகம் - நினைவு; இஃது உள்ளத்தின் பண்பு. இது, `தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம்` எனத் தொகையான் எட்டாகவும், வகையான் ஐம்பதாகவும் (சிவப்பிரகாசம் - 42) விரியான் அறுநூற்றுப் பன்னிரண்டாகவும் (சிவஞானமாபாடியம் சூ. 2. அதி. 2) ஒருவாற்றான் வரையறுத்துக் கூறப்படுமாயினும், அளவின்றி விரிவது என்பதே உண்மையாகலின், ``அளவிலாப் பாவகத்தால்`` என்றும், இந்நினைவுகள் பலவும் கறங்கோலையின் முனைபோல உள்ளத்துக் கண் மாறி மாறி இடையறாது தோன்றி உயிரைப் பந்தித்தலின், ``அமுக்குண்டு`` என்றும், இப் பந்தத்தான் உண்மை ஞானம் தோன்றுதற்கு வழி இல்லாது போதலின், ``அறிவின்றி`` என்றும் அருளினார்.
``அளவிலாப் பாவகம்`` என்றது அறுநூற்றுப் பன்னிரண்டாய பேரெண் பற்றியே எனச் சிவாகமங்களோடு ஒருங்கியைய உரைத்த லும் ஒன்று.
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
(குறள் 337) எனவும்,
``உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன``
(நல்வழி - 28) எனவும் பிறவிடங்களில் பொதுப்படவே கூறப்பட்டன. வெறுவியன் - ஒருபயனும் இல்லாதவன். களவு - நல்லோரை வஞ்சித்தல்.

பண் :

பாடல் எண் : 9

பாங்கினொடு பரிசொன்றும்
அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர
உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து
வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை
அம்பலத்தே கண்டேனே.

பொழிப்புரை :

இறைவனையடையக் கூடிய முறையோடு அதனால் வரும் பயன் சிறிதும் அறியாத நாய்போன்ற என்னை மனத்தின்கண் ஞானஒளி மிகுந்து வளர முடிவில்லாத அன்பினை அருளிச்செய்து, வினைப்பயன் என்னை அடையாதவாறு நீக்கி, ஆணவ மலத்தை அடக்கி மேலான கருணையைக் கொடுத்தவனை நான்கு வேதங்களும் முழங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

பாங்கு - நன்மை. பரிசு - அதனை அடையும் முறை. `ஒளி உள்ளத்து ஓங்கி வளர` என்க. வாங்குதல் - நீக்குதல். `வினை வாங்கி` என மாறிக் கூட்டுக. மலம் - ஆணவம். `அருமறை நான்கினோடு ஆறங்கமும் பயின்று வல்ல` (தி.12 பெ.புரா. தில்லைவாழ். 5) அந்தணர்கள் நிறைந்திருத்தலின், ``நான்கு மறை பயில் தில்லை`` என்றார்.

பண் :

பாடல் எண் : 10

பூதங்கள் ஐந்தாகிப்
புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
விளங்குதில்லை கண்டேனே. 

பொழிப்புரை :

ஐம்பூதங்களாகிச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களாகி ஏனைய எல்லாப் பொருள்களுமாகி, அவற்றிற் கேற்ப வேறுபாடுகளுமாய்த் தான் வேறுபடுதலில்லாத பெருமை யுடையவனாய்த் துன்பங்களைப் போக்கி எம்மை ஆண்டு அருளிய ஒளிப்பொருளானவனைப் பச்சைமணி போன்றவனை வேதங்கள் வணங்கித் துதிக்கின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

குறிப்புரை :

``புலன்`` என்றது, பொறியை. பொருள், `ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்` என்பவற்றை. பேதங்கள் உடையவற்றை, ``பேதங்கள்`` என்றார். எனவே, `பல்வேறு வகைப்பட்ட பொருள்கள் எல்லாமாகியும்` என்றதாயிற்று. பேதமிலாப் பெருமை, பேதங்களை யுடைய பொருள்கள் எல்லாவற்றிலும் அவையேயாய்க் கலந்து நிற்பினும், தன் தன்மை திரியாத பெருமை. கேதங்கள் - துன்பங்கள்.
சிற்பி