திருவாசகம்-பிரார்த்தனைப் பத்து


பண் :

பாடல் எண் : 1

கலந்து நின்னடியா ரோடன்று
வாளா களித்தி ருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
புகுந்து நின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய்
ஆர்வங் கூர அடியேற்கே. 

பொழிப்புரை :

உடையவனே! நீ என்னை ஆட்கொண்ட அந்நாளில் உன் அடியார்களுடன் கூடியிருத்தலை மாத்திரம் செய்து வீணே களித்திருந்தேன். நாள்கள் கழிந்து போயின. பிற்காலத்தில் அவர்களை விட்டுப்பிரிந்ததும் துன்பம் புகுந்து நிலைபெற்றது. அதனால் வாடிப் போனேன். கெடாத இன்பத்தைத் தருகிற ஒளி வடிவினனாகிய உன்னைக் காணுபொருட்டு வருந்தினேன். அடியேனாகிய எனக்கு உன்மீது அன்பு மிகும்படி அருள் செய்வாயாக.

குறிப்புரை :

பொருள்கோள்: `உடையானே, அன்று நின் அடியா ரோடு கலந்து வாளா களித்திருந்தேன்; காலங்கள் புலர்ந்து போன; பின்னாள் இடர் புகுந்து நின்றது; அதனால், உலவா இன்பச் சுடர் காண்பான் அலந்து போனேன்` அடியேற்கு ஆர்வம் கூர அருள் செய்யாய்`.
அன்று - என்னை ஆட்கொண்ட அந்நாள். வாளா - கவலை யின்றி. இறைவன் ஆட்கொண்ட காலத்தில் அடிகள் அடியார் பலரோடும் கலந்து கவலையின்றிக் களித்திருந்ததாக அருளின மையால், பின்னே அவர் இறைவனோடு செல்லாது நின்றது, உலகியல் மயக்கத்தாலன்றிப் பிறர்மாட்டு வைத்த இரக்கத்தால் என்பது பெறப்படும். காலங்கள் புலர்ந்துபோன - இத்தகைய களிப்பு நிலை யிலே பல காலங்கள் கழிந்தன. பின்னாள் - நீ அடியாருடன் மறைந் தருளியதற்குப் பின்னாய நாட்களில். இடர் - உலகியல் துன்பம். உலர்ந்து போனேன் - உள்ளமும், உடலும் வலியற்றுப் போயினேன். ``இன்பச் சுடர்`` எனப் படர்க்கையாகச் சொல்லப்பட்டதாயினும், `இன்பச் சுடராகிய உன்னை` என்பதே பொருள். அலந்துபோனேன் - அலைந்துநின்றேன். ஆர்வம் கூர - உன்மாட்டு எனக்கு அன்பு மிக. `அன்பு மிகுமாயின் நான் உன்னை அடைதல் திண்ணம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 2

அடியார் சிலர்உன் அருள்பெற்றார்
ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியே னுடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவா துருக அருளாயே. 

பொழிப்புரை :

உடையவனே! உன் அடியார்களில் சிலர் உன் னிடத்தில் அன்புமிக உன்னுடைய அருளைப் பெற்றார்கள். அடியவ னாகிய நானோ வீணே முடைநாற்றமுடைய பிணத்தைப் போன்று அழிவின்றி வெறுப்பினால் வயதுமுதிர்கின்றேன். இளகாத மனமுடை யேனுடைய கொடுமையான வினைகளை நீக்கி அடியேனுடைய உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.

குறிப்புரை :

`ஆர்வம் கூர்தலால் அருள் பெற்றார்` என்க. அவமே மூக்கின்றேன் - வீணாக மூப்படைகின்றேன். பிணத்தின் - பிணத்தின் கண். வெறுப்புக் காரணமாக உடம்பை, `பிணம்` என்றார். `முடிவின்றி இருந்து` என ஒருசொல் வருவிக்க. முனிவால் - அந்த வெறுப்போடே. `கருணைக் கடல் பொங்குமாறு உருக` என்க. ``உருக`` என்றது, `உருக்கம் உண்டாக` எனப் பொருள்தந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 3

அருளா ரமுதப் பெருங்கடல்வாய்
அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
உடையாய் பெறநான் வேண்டுமே. 

பொழிப்புரை :

எம்பெருமானே! உடையவனே! திருவருளாகிய அரிய அமுதம் போன்ற பெரிய கடலின்கண் உன் அடியார்கள் எல்லாம் புகுந்து திளைத்திருக்க அறியாமை நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத்தேன். மயக்கம் பொருந்திய மனத்தை யுடைய ஒருபித்தன் வருகிறான் என்று இவ்வுலகில் என்னைப் பார்ப்பவர்கள் அஞ்சாவண்ணம் நான் வீடுபேறடையும் பொருட்டு உண்மையான அன்பினைப் பெறவேண்டும்.

குறிப்புரை :

அருள் ஆரமுதப் பெருங்கடல்வாய் - அருளாகிய அரிய அமுதப் பெருங்கடலின்கண். `அமுதப் பெருங்கடல்` என்பது இல்பொருள் உவமையாய், அருளுக்கு உருவகமாயிற்று, உன்மத்தன்- பித்தன். `உன்னை அடையும் மெய்யன்பை யான் பெறாவிடில், உலகியலோடு தொடர்பின்றி ஒழுகும் எனது ஒழுக்கத்திற்குப் பயன், என்னைக் கண்டவர்கள், `இஃதோ பித்தன் ஒருவன் வருகின்றான்` என்று அஞ்சி ஓடுவதன்றி வேறில்லை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 4

வேண்டும் வேண்டு மெய்யடியா
ருள்ளே விரும்பி எனைஅருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த
அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய்
தொண்ட னேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே.

பொழிப்புரை :

உன்னை வேண்டுகின்ற மெய்யடியார்களிடையே கருணையால் என்னை முன்னம் ஆட்கொண்டருளினை. அதனால் அடியேனது துன்பத்தையும் நீக்கின அமுதே! அருமையான பெரிய மணியாகிய முத்தே! தூண்டாத விளக்கின் சுடர்க்கொழுந்து போன்றவனே! அடியேன், விரும்பத்தகாத ஒன்றையும் விரும்பாது மிகுந்த அன்பினையே பொருந்துதல் உண்டாகுமோ? அதுவே எனக்கு வேண்டும்.

குறிப்புரை :

``வேண்டும்`` இரண்டனுள், முன்னது விரும்புதற் பொருளையும், பின்னது இன்றியமையாமைப் பொருளையும் தந்தன. மெய்யடியாரை ஆட்கொள்ளுதலை இறைவன் தனக்கு இன்றியமை யாக கடனாகக் கொள்வன் என்க. இரண்டும் பெயரெச்சங்கள். `மெய்யடியாருள்ளே ஒருவனாக` என ஒரு சொல் வருவிக்க. ``அருளால் ஆண்டாய்`` என்றதனால், `தகுதியால் ஆண்டிலை` என்பது பெறப்பட்டது. `அவ்வாறு ஆண்டு இடர்களைந்த அமுதே` என்க. ``உண்டாங்கொல்`` என்றதனை இறுதிக்கண் கூட்டுக. கொல், அசைநிலை. ``வேண்டாதொன்றும்`` என்றதில், `வேண்டாத` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வேண்டாதது - பயனில்லா தது. வேண்டாது - விரும்பாமல். மேவுதல் - பொருந்துதல்.

பண் :

பாடல் எண் : 5

மேவும் உன்றன் அடியாருள்
விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்து
ஆவி யாக்கை யானெனதென்
றியாது மின்றி அறுதலே.

பொழிப்புரை :

நீலமலரின் தன்மையமைந்த மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையின் பாகனே! பொருந்திய உன்னுடைய அடியார் நடுவில் ஒருவனாய் நானும் உண்மையையே விரும்பி உன்னுடைய திருவருளால் பேரின்பமாகிய பழையகடலை அடைந்து உயிரும் உடம்பும் நான் எனது என்னும் பற்றுக்களும் சிறிது மில்லாது அற்றுப்போதல் பாவியாகிய எனக்கும் உண்டாகுமோ?

குறிப்புரை :

பொருள்கோள்: காவிசேரும் கயற்கண்ணாள் பங்கா, உன்றன் கருணையினால், யானும் மெய்ம்மையே விரும்பி, மேவும் உன்றன் அடியாருள் பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து, ஆவி, யாக்கை, யான், எனது என்ற யாதும் இன்றி அறுதல் பாவியேற்கும் உண்டாமோ. மேவும் - (உன்னை உண்மையாகவே) விரும்புகின்ற. மெய்ம்மையே விரும்பி. மெய்யாகவே அன்பு செய்து. `காவியும் கயலும்போலும் கண்ணாள்` என்பதனை இவ்வாறு ஓதினார். காவி - நீலோற்பலம். `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``யானும்`` என்றது, ``அறுதல்`` என்ற தொழிற்பெயர் எழுவாய்க்கு அடையாய் வந்தது. `என்றவற்றுள் யாதும் இன்றி` என்க.

பண் :

பாடல் எண் : 6

அறவே பெற்றார் நின்னன்பர்
அந்த மின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன்
புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு
பேரா ஒழியாப் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே.

பொழிப்புரை :

உடையவனே! உன் அன்பர்கள் நிலைபெயராத, நீங்காத வேறுபடாத, மறப்பும் நினைப்பும் இல்லாத, எல்லையில்லாத அழிவு இல்லாத பேரின்பக் கடலை முற்றிலும் பெற்றவர்களாய் முடிவின்றி மனம் உருகவும் கீழ்த்தன்மையுடைய நாய் போன்ற யான் அவர்கள் கூட்டத்துக்கு வெளியே கிடந்து வருந்துகின்றேன். ஆகையால் அவ்வின்பக் கடலைப் பெறுவதற்கு ஏதுவான உண்மை அன்பை யான் பெறவே வேண்டும்.

குறிப்புரை :

அறவே - முழுதும். `பெற்றாராகிய அன்பர்` என்க. பெறுதலுக்கு, `அருள்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. அந்தம் இன்றி - இடையறாது. `யான் மெய்யன்பு பெறவே வேண்டும்` என்க. ``பேரா`` முதலிய ஏழும் இன்பத்திற்கு அடை. பேர்தல், அடைந்தோர் பின் நீங்குதலும், ஒழிதல் தான் நீங்குதலுமாம். பிரிவு - வேறாதல். அளவு - எல்லை. மாளுதல் - அழிதல். ஏழ் அடையாலும், ஏழ் இன்பக் கடல் கூறியவாறாக இதற்கு நயம் உரைப்பர். ``கடலே`` என்றது, விளி. `அன்பைப் பெற்றால், அவ் வின்பக்கடலைப் பெறலாம்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 7

கடலே அனைய ஆனந்தம்
கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங்
கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளுதியென்
றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச்
சோதீ இனித்தான் துணியாயே. 

பொழிப்புரை :

உடையவனே! ஒளிப்பொருளானவனே! கடல் போன்ற அவ்வளவு பேரானந்தத்தை, உன்னைப் பார்த்த அடியார் எல்லோரும் அள்ளிப் பருக, அடிமையாகிய நாயேன், துன்பத்தையே அதிகரிக்கச் செய்து, வருந்தி இவ்வுலகத்தில் இருப்பது அழகாகுமோ? நீ தான் எனக்கு அருள் செய்வாய் என்று அறிந்து, அதுபற்றி உன்னிடம் வேண்டிக்கொள்ளாது இருந்து, பிரிந்துகெட்டேன். கதிரவன் போன்ற திருவருளால், என் அறியாமையாகிய இருள் நீங்கும்படி இனியாவது நீ திருவுளம் பற்றுவாயாக.

குறிப்புரை :

கண்டார், உன்னைக் கண்டவர். ``இடர்`` என்றது அதற்கு ஏதுவாவனவற்றை. ஏசற்று - துன்புற்று. நீயே அருளுதி என்று- நான் கேளாமல் நீயே தருவாய் என்று நினைத்து. உணர்த்தாதொழிந்து- கேளாமல்விட்டு.
கழிந்தொழிந்தேன் - இத்துணை நாளும் விலகி விட்டேன். ``சுடர் ஆர் அருளால்`` என்றதனை, `அருள் அருஞ் சுடரால்` எனப் பின்முன்னாக்கி உரைக்க.
இருள், `அறியாமையாகிய இருள்` எனச்சிறப்புருவகம். துணியாய் - சிதைத்துவிடு. அறியாமை நீங்கின், உளதாம் என்க.

பண் :

பாடல் எண் : 8

துணியா உருகா அருள்பெருகத்
தோன்றுந் தொண்ட ரிடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன்
சிவனே நின்று தேய்கின்றேன்
அணியா ரடியார் உனக்குள்ள
அன்புந் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித்
தளிர்பொற் பாதந் தாராயே. 

பொழிப்புரை :

சிவபெருமானே! துணிந்து, மனம் உருகி, உன் அருள் பெருகும்படி, விளங்கும் அடியாரிடையே கூடி, வலிமை பொருந்திய, மூங்கிலைப் போன்ற, சித்தத்தையுடைய யான், இருந்து மெலிகின்றேன். உன் உள்ளத்தில் அருள்மிகுந்து, கூட்டமாகப் பொருந்திய, உன் அடியார்கள் உன்பால் கொண்டுள்ள மெய்யன்பையும் எனக்குத் தருவாயாக. காலம் தாழ்த்தாது விரைவாக எழுந்தருளி, தளிர் போன்ற பொன்னடிகளையும் தருவாயாக.

குறிப்புரை :

துணியா - உன்னையே பொருளாகத் துணிந்து. உருகா- மனம் உருகி. அருள் பெருக - அதனால் உனது திருவருள் பெருகப் பெற்று. தோன்றும் - காணப்படுகின்ற. `இத்தகைய அடியாரிடையே அன்பில்லாத யான் புகுந்தேன்` என்றது, முன்பு ஆட்கொள்ளப் பட்டமையை. திணி ஆர் மூங்கில் - உட்டுளை இல்லாத மூங்கில்; இது வலிய மனத்திற்கு உவமையாயிற்று. உனக்கு உள்ள - உன் பொருட்டுக் கொண்டுள்ள. `அடியார்க்கு` என்பதே பாடம் போலும்! ``அன்பும்`` என்ற உம்மை எதிரது தழுவிய எச்சம். அருள் அளிய - உனது கருணை மிக்கு நிகழ. இதனைத் தாப்பிசையாய் முன்னுங்கூட்டி, முன்னர் எதிர்காலமாகவும், பின்னர் இறந்த காலமாகவும் உரைக்க. தணியாது- மெத்தென வாராது.

பண் :

பாடல் எண் : 9

தாரா அருளொன் றின்றியே
தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும்
அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத்
திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை
வைக்க வேண்டும் பெருமானே.

பொழிப்புரை :

பெருமையுடையோனே! எமக்குத் தாராத அருள், ஒன்றும் இல்லாது முழுவதும் தந்தனையென்று, உன்னடியார் எல் லோரும் மகிழ்ந்திருந்தனர். அடியேனாகிய யான் மட்டும் வேற்றவர் போல, வருந்துவேனோ? சிறப்புப் பொருந்திய உன் திருவருளால், என் சித்தத்தைத் திருத்தி, ஆண்டருளின சிவலோக நாதனே! பேரின்பமான நிலையில் என்னை நீங்காமல் வைத்தல் வேண்டும்.

குறிப்புரை :

தமர் - சுற்றத்தார்; அடியவர். ஆராநின்றார் - இன்பத்தை நிரம்பத் துய்க்கின்றார்கள். அடியேனும் - அடியேன் ஒருவன் மட்டும். பேராமை - நீங்காமல்.

பண் :

பாடல் எண் : 10

மானோர் பங்கா வந்திப்பார்
மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால்
நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்தே
உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான்
கொடியேற் கென்றோ கூடுவதே.

பொழிப்புரை :

மானைப் போன்ற பார்வையையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனே! வந்திப்பார்க்கு அஃதாவது வணங்குவோர்க்கு இனிய கனி போன்று இன்பம் அளிப் பவனே! இறைவனே! நம்பியே! மனம் நெகிழாமல் நான் துளைக்கப் படாத ஒரு சுரைக்காயைப் போன்று இருந்தால், இதனால் நீ வாழ்ந்து விட்டாயோ? உடம்பிலே முன்னரே புகுந்த உன்னையறிந்து, இளகிப் பூரிக்கும் மனத்தை, நீ அருள் புரியும் காலமானது கொடுமையை யுடைய எனக்கு, கூடுவது எப்பொழுதோ?

குறிப்புரை :

மான் - பெண். வந்திப்பார் - வணங்குவார்க்கு, மனம் நெகா - மனம் உருகாது, தோளாச்சுரை - துளையிடாத சுரைக் குடுக்கை. இதனுள் ஒன்றும் புகாது; ஆதலின், அன்பும் அருளும் புகும் நிலையில்லாதவர்கட்கு இஃது உவமையாகச் சொல்லப்படும். நம்பி - நம்பியே. இத்தால் வாழ்ந்தாயே - என்னை இந்நிலையில் வைத்து விட்ட இதனால் நீ வாழ்ந்தே விட்டாய்போலும்! இஃது ஊடியுரைக்கும் சொல்.
``ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே``
(தி. 7 ப.95 பா.1) என்றார் நம்பியாரூரரும்.

பண் :

பாடல் எண் : 11

கூடிக் கூடி உன்னடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடி வாடி வழியற்றேன்
வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு
கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
ஆடி ஆடி ஆனந்தம்
அதுவே யாக அருள்கலந்தே. 

பொழிப்புரை :

உன் அடியார்கள், சேர்ந்து கூத்தாடுவர்; நகைப்பார்; களிப்பாராக; நெறி கெட்டவனாகிய நான் மட்டும் வாட்ட முற்று , பட்ட மரத்தைப் போன்று இருப்பேனோ? பிணங்கிப் பிணங்கி, உடையவனாகிய உன்னுடன், சேர்ந்து, மனமுருகி, பூரித்து, நெகிழ்ந்து, கூத்தாடிக் கூத்தாடி, ஆனந்தமயமாகும்படி, ஒன்றாய்க் கலந்து அருள் செய்வாயாக.

குறிப்புரை :

குனிப்பார் - கூத்தாடுவார். `களிப்பாராக` என்பது ஈறு கெட்டு நின்றது. வழியற்றேன் - பிழைக்கும் வழியாதும் இல்லாத யான். `வாடி வாடி வற்றல் மரம்போல் நிற்பேனோ` என்க. வற்றல் மரம் - உயிரற்றுக் காய்ந்துபோன மரம். `வற்றல்` என்பது மரவகைகளுள் ஒன்று எனவும், அவ்வகையினதாகிய மரம், தளிர் முதலியன இன்றி வறுங்கொம்பாகவே வளரும் எனவும் கூறுவாரும் உளர்.
ஓகாரம், இரக்கப் பொருட்டு. `உடையாயொடு ஊடி ஊடிக் கலந்து` என்க. உடையாயொடு - தலைவனாகிய உன்னோடு. ``ஊடுதல் காமத்திற் கின்பம்`` (குறள்- 1330.) என்பது பற்றி இறை இன்பத்தை அவ்வின்பத்தோடு ஒப்பிப்பார், இங்ஙனம் அருளிச் செய்தார். இறை இன்பத்தை இவ்வாறு காம இன்பத்தோடு ஒப்பித்துக் கூறுதல், உலகத்தார் உணரும் பேரின்பமாகிய அவ்வின்பத்தினியல்பு பற்றி, உண்மைப் பேரின்பமாகிய இறைவனின்பத்தினது சிறப்பை உணர்தற் பொருட்டாம். இறை இன்பத்தில் ஊடுதலாவது, ``உங்களுக்காள் செய்யமாட்டோம்`` (தி.7 ப.5 பா.2) என்றாற்போல, உரிமை தோன்றச் சிலவற்றை வலியுறுத்தி வேண்டல். ``அருள் கலந்து`` என்றதனை, `கலந்து அருள்` என மாற்றிப் பொருள் கொள்க. கலந்து - என் முன் தோன்றி. அருள் - அருள்செய். இதன் ஈற்றுச்சொல், முதல் திருப் பாட்டின் முதற்சொல்லாய் அமைந்து நிற்றல் காண்க.
சிற்பி