திருவாசகம்-குழைத்த பத்து


பண் :

பாடல் எண் : 1

குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
அம்மா னேஉன் னடியேற்கே.
 

பொழிப்புரை :

உடையவனே, உமையம்மையின் தலைவனே! என்னை ஆள்பவனே! பிறை தங்கிய சடையையுடையவனே! தலைவனே! பழைய, கொடிய வினையாகிய நோய் என்னை வாட்டினால், நீ காத்தருளவில்லை. ஆதலால், கொடுமையான வினையையுடையேன் நானாக முயன்றால், நன்மை உண்டாகுமோ? நான் பிழை செய்தால் அதனை மன்னித்துக் காக்க வேண்டாவோ? முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால் உன் அடியானாகிய எனக்கு, நீ அருள் செய்யாது போவது தகுதியோ?

குறிப்புரை :

`கொடுவினையேன் (உன்னைக்) குழைத்தால், பண்டைக் கொடுவினைநோய் காவாய்` எனக் கூட்டுக. குழைத்தால் - உன் உள்ளம் குழையுமாறு இரந்து வேண்டுவேனாயின்; என்றது, `அங்ஙனம் வேண்டி நிற்கின்றேனாதலின்` என்றபடி, வினைநோய் - வினையாகிய நோய். காவாய் - வந்து சாராதபடி தடுத்தருள். உழைத்தால் - அவ்வினையால் நான் துன்புறுவேனாயின். உறுதி உண்டோ - உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டோ. பிழைத்தால் - வினைவந்து மீளப் பற்றுதற்கு ஏதுவாக யான் பிழைசெய்துவிட்டேன் என்றால். அருளாதொழிவதே - கருணை செய்யாதுவிடுதல் பொருந்துவதோ. ``அம்மானே``, ``உன் அடியேற்கே`` என்ற அடிமையாகிய யான் பிழை செய்தால் அதனைப் பொறாதொழிதலும், முறையோ என்று அழைத்தால் கேளா தொழிதலும் தலைவனாகிய உனக்குப் பொருந்துவனவோ என்னும் குறிப்பினதாகிய உடம்பொடு புணர்த்தல்.

பண் :

பாடல் எண் : 2

அடியேன் அல்லல் எல்லாம்முன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎம்
கோவே ஆஆ என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத
தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா
தொறுத்தால் ஒன்றும் போதுமே. 

பொழிப்புரை :

கொடி போன்ற இடையையுடைய உமையம்மை யின் பாகனே! எங்கள் தலைவனே! எங்கள் சிவலோக நாதனே! உடையவனே! அடியேனது துன்பங்கள் எல்லாம் நீங்கும்படி, முன்னே வந்து ஆண்டருளினை என்று எண்ணி மகிழ்ந்து இருந்தேன். அங்ஙனம் இருக்க ஐயோ என்று மனம் இரங்கி, துன்பத்தைத் தருகின்ற உடம்பை அழித்து இன்பத்தைத் தாராது இருத்தல் ஏன்? விரைவில் அழைத்து உன் பணியில் நிற்கச் செய்யாது, உடம்பிலே வைத்துத் துன்புறுத்தினால் மட்டும் போதுமோ?

குறிப்புரை :

``முன்`` என்றனை முதலிற் கூட்டுக. ``அல்லல் எல்லாம் அகல ஆண்டாய் என்று இருந்தேன்`` என்றது, `ஆண்டபின்பும் என்னை அல்லற்பட வைப்பாய் என்பதை அறிந்திலேன்` என்றபடி. எத்துக்கு, `எற்றுக்கு` என்பதன் மரூஉ. `அடிமையைக் குற்றம் நோக்கி ஒறுத்தலும், மற்றுப்பற்று இன்மை நோக்கி அருளுதலும் ஆகிய இரண்டும் செயற்பாலனவாக அவற்றுள் ஒறுத்தலாகிய ஒன்றைமட்டும் செய்தொழிவது தலைவராயினார்க்கு நிரம்புமோ` என்பார், ``கூவிப் பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமோ`` என்று அருளிச் செய்தார். ``ஒன்றும்`` என்றதற்கு முன்னர், `அஃது` என்னும் சுட்டுப் பெயர் வருவிக்க. `போது` என்பது, `நிரம்பு` என்பதனோடு ஒரு பொருட்டாய வினையடி. இதனினின்றும் பல வினைவிகற்பங்களும் பிறக்கும். இதற்கு, `பற்று` என்னும் முதனிலை ஒருபொருட் கிளவி யாகக் கூறப்படும். `போதாது, பற்றாது` என்பவற்றை, `காணாது` என வழங்குவர் இக்காலத்தார்.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றும் போதா நாயேனை
உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
ஏழை பங்கா எம்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
குணமாம் என்றே நீகொண்டால்
என்தான் கெட்ட திரங்கிடாய்
எண்தோள் முக்கண் எம்மானே. 

பொழிப்புரை :

உமையொரு பாகனே! எங்கள் தலைவனே! எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையுமுடைய எம் பெரியோனே! ஒன்றுக்கும் பற்றாத நாய் போன்ற என்னை அன்று உய்யக் கொண்டருளிய உன்னுடைய கருணையானது, இன்று இல்லாமற் போய்விட்டதோ? மலையைப் போன்ற தவறுகளையும், குணங்கள் என்றே நீ ஏற்றுக் கொண்டால், எனக்கு எதுவும் இல்லை. ஆகையால் இரங்கியருள்வாயாக.

குறிப்புரை :

`ஒன்றற்கும்` என உருபு விரிக்க. `ஒன்றற்கும் நிரம்பாத` என்றது, ஒரு பொருளோடும் ஒருநிகராதற்கு நிரம்பாத; எல்லாப் பொருளினும் கீழ்ப்பட்ட` என்றபடி. `இன்று இன்றிப் போய்த்தோ`` எனப் பின்னர் வருதலின், ``உய்யக் கொண்ட`` என்பதற்கு, `அன்று` என்பது வருவிக்கப்படும். `போயிற்று` என்பது `போயித்து` என மருவிப்பின் `போய்த்து` என்றாயிற்று. `ஆயிற்று` என்பதும் இவ்வாறே `ஆய்த்து` என வருதல் உண்டு. இவ்விரண்டும் இவ்வாறன்றி இடைக் கண் இன் பெறற்பாலன சிறுபான்மை தகர ஒற்றுப் பெற்று வந்தன என்றலும் ஒன்று. ஓவும், தானும் அசை நிலைகள். ஏழை - பெண், `எளியவர் என்பது நயம். `நீ கொண்டால் என்தான் கெட்டது` என்றது. இறைவனது தன்வயம் உடைமை மாத்திரையே குறித்ததன்றிக் கோட்ட முடையனாகக் கூறியதன்றாம். அஃது அவன் அங்ஙனங் கொள்ளாமை பற்றிக் கூறியவதனானே பெறப்படும். இறைவன் தன் அடியார்கள், `பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கிவிடும்` (சிவஞானசித்தி சூ.10.1.) என்பவாகலின், அவற்கும் கோட்டமுண்மை பெறப்படு மன்றோ எனின், படாது; என்னையெனின், பாதகத்தைச் செய்திடினும்` என்பது, அருள் வழிக் கண் தம்மிழப்பில் நின்று செய்தலையாக லானும் அவ்வாறு தம்மை இழவாது, `பிழையுளனபொறுத்திடுவர்` (தி.7ப.89பா.1) என்று கருதிப் பிழைப்பின் பொறாது, `ஒன்ன லரைக் கண்டாற்போல்` (தி.7ப.89பா.9) உதாசீனம் செய்து போதல் ஆளுடைய நம்பிகளிடத்து நிகழ்ந்த நிகழ்ச்சியான் நன்கறியப்படுத லானும் என்க. எனவே, அடிகள் தாம் செய்தனவாகக் கூறும் குற்றங்களைத் தம் வழியினின்று செய்தனவாகவே அவர் கூறுதலின், `அவற்றைக் குணமாகக் கொண்டால் கெடுவதொன்றில்லை` என்றது, இறைவனது தன்வயமுடைமை மாத்திரையே பற்றித் தமது ஆற்றாமை மிகுதியாற் கூறியதேயாம். அன்னதாயினும், முன்னும், பின்னும் உளவாகிய அவரது திருமொழிகள் அவர் திருவருள் வழிநிற்றலிற் பிறழாமை நன்குணரப்படுதலின், அவரைத் தற்போதமுடையரெனக் கருதி மலைதல் கூடாமையறிக. `கெடுவது` என்னும் எதிர்காலச் சொல், `கெட்டது` எனத் தெளிவு பற்றி இறந்த காலமாகச் சொல்லப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மானேர் நோக்கி மணவாளா
மன்னே நின்சீர் மறப்பித்திவ்
ஊனே புகஎன் றனைநூக்கி
உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை
அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளும்நாள்
என்றென் றுன்னைக் கூறுவதே. 

பொழிப்புரை :

மானைப் போன்ற பார்வையுடைய உமையம்மை யின் கணவனே! நிலைபெற்றவனே! தலைவனே! உனது பெருமையை, மறக்கும்படிசெய்து, இவ்வுடம்பின் கண்ணே புகுமாறு, என்னைத் தள்ளி, இவ்வுலகில் அலையும்படி செய்துவிட்டாய். உன் செயல் இதுவாயின் இனி நீயே அடியேனது பேதைமையை உணர்ந்து அருள் புரிந்து என்னை மீள உன்பால் அழைத்துக் கொள்ளும் நாள் எப்போது? அதன்பின் நான் உன்னைப் புகழ்ந்து பாடுவது எப்போது?

குறிப்புரை :

மன்னே - தலைவனே. சீர் - புகழ், என்றது, அதனைச் சொல்லுதலை. நூக்கி - வீழ்த்தி. மலசத்திகளைத் தூண்டிவிடுவதையும் இறைவனே செய்வதாகக் கூறுவர் ஆசிரியராகலின், ``நின்சீர் மறப்பித்து`` எனவும், `ஊனேபுக நூக்கி`` எனவும், `உழலப் பண்ணு வித்திட்டாய்`` எனவும் அருளிச் செய்தார்,
``சிந்தையைத் திகைப்பி யாதே
செறிவுடை அடிமை செய்ய(தி.4 ப.23 பா.4) எனவும்,
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ`` (தி.4 ப.23 பா.9)
எனவும்,
``நின்னை எப்போதும் நினையலொட் டாய்நீ
நினையப்புகின்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்தொன்று
நாடுவித்தி`` (தி.4 ப.112 பா.4)
எனவும் அருளிச் செய்தனவும் காண்க. இங்ஙனம் மலசத்திகளைத் தூண்டி, அவை உயிரினது அறிவை மறைக்குமாறு செய்யும் சத்தியையே, `திரோதான சத்தி` என்றும், அவ்வாற்றால் நிகழும் மறைப்பையே, ஐந்தொழில்களுள் ஒன்றாய மறைத்தல் என்றும் மெய்ந்நூல்கள் கூறும். ஆனால் - நிகழ்ச்சி இதுவாகுமாயின். ``என்று`` இரண்டனுள் பின்னதனை இறுதிக்கண் கூட்டுக. கூறுவது - மறவாது நின்று புகழ்வது.

பண் :

பாடல் எண் : 5

கூறும் நாவே முதலாகக்
கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்பும்நீ
தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ.

பொழிப்புரை :

சிவலோக நாதனே! பேசுகின்ற நாக்கு முதலாக சொல்லப்படுகின்ற கருவிகள் எல்லாம் நீயே! தெளிவடையும் வழியும் நீயே! தெளியாமல் திகைத்தலைச் செய்பவனும் நீயே! தீமை நன்மைகள் முழுவதும் நீயே! உண்மையாக உன்னைப் பற்றிச் சொன்னால் இவ்விடத்தில் வேறு ஒரு பொருள் சிறிதும் இல்லை. ஆதலால் நான் தெளிவை அடையும் வழி உன்னையன்றி ஏது? ஆகையால் யான் திகைப்படைந்தால், என்னை நீ தெளிவிக்க வேண்டாவோ?

குறிப்புரை :

``உன்னை விரித்துரைக்கில் `` என்றதனை, ``கூறும் நாவே`` என்றதற்கு முன்னர்க் கூட்டி, ``உன்னை`` என்றதற்கு, `உன் இயல்பை` என உரைக்க. ``உரைக்கில்`` என்றமையான், அங்ஙனம் உரைக்கும் நாவை முதலாவதாகக் கூறினார். `மனம், மொழி, மெய்` எனக் கரணம் மூன்றாகலின்` நாவொழிந்த பிற கரணங்கள் இவை என்பது உணர்க. `கரணம்` எனினும், `கருவி` எனினும் ஒக்கும்.
தேறுதல் - தெளிதல். வகை - வழி; உபாயம். திகைத்தல் - கலங்குதல், ``தேறும் வகை`` என்றதனால், ``திகைப்பு`` என்றதும். திகைக்கும் வழியையாயிற்று. முன்நிற்கற்பாலனவாகிய திகைப்பும் தீமையும், செய்யுள் நோக்கிப் பின்னின்றன. வேறு ஓர் பரிசு - உனக்கு வேறாய் நிற்பதொரு தன்மை. தன்மையுடையதனை, `தன்மை` என்றார்.
``ஒன்றில்லை`` என்றது `யாதும் இல்லை` என்னும் பொருட்டு; உம்மை. தொகுத்தல். ``மெய்ம்மை`` என்றதன்பின், `ஆதலின்` என்பது வருவித்து, `இஃது உண்மையாதலின், நீ தேற்றினா லன்றி யான் தேறும் வகையாது` என உரைக்க.
இதன்பின்னும், `அதனால்` என்பது வருவிக்க. ``தேற்ற`` என்ற செயவெனெச்சம் தொழிற்பெயர்ப் பொருள்தந்தது. ``வேண் டாவோ`` என்னும் எதிர்மறை வாய்பாடு, `உனக்கு இன்றியமையாக் கடனன்றோ, என்பதை விளக்கி நின்றது. இஃது இறைவனது எல்லாமாய் நிற்கும் இயல்பை எடுத்தோதி, தமது மயக்கத்தைப் போக்கியருள வேண்டும்` என வேண்டியது.

பண் :

பாடல் எண் : 6

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே. 

பொழிப்புரை :

உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே! மேலும் அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே! உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?

குறிப்புரை :

வேண்டத் தக்கது - இரந்து பெறத்தக்க பொருள். `தாம் சாவ மருந்துண்ணார்` என்பதுபோலத் தமக்கு நன்மை பயப்பதனை யன்றித் தீமை பயப்பதனை ஒருவரும் இறைவன்பால் வேண்டார் எனினும் தீமை பயப்பதனைத் தீமைபயப்பது என்று அறியும் ஆற்றல் இலராகலின், இறைவன்பால் வேண்டத் தக்கது இதுவென்பதனையும் அவனே அறிதலன்றி, உயிரினத்தவருள் ஒருவரும் அறியார் என்க. ``வேண்ட`` என்றது. `தம் அறியாமையால் உயிர்கள் எவற்றை வேண்டினும்` என்றவாறு. தீமைபயப்பதனையும் இறைவன் மறாது தருதல்` அவற்றின்கண் பற்று நீங்குதற்பொருட்டாம். வேண்டும் அயன் மால் - உன்னை அளவிட்டறிய விரும்பிய பிரமனும் மாலும். இவர்க்கு அரியனாதலைக் கூறியது, தமக்கு எளிவந்தமையைப் புலப்படுத்தற்கு. எனவே, `அரியோயாகிய நீ` என ஒரு சொற்றன்மைப் படுத்து உரைக்கப்படும். ``பணி கொண்டாய்`` என்றதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வேண்டி - எனக்கு உரியதாகக் கருதி. அருள் செய்தாய் - உணர்த்தியருளினாய். `அதுவே யானும் வேண்டினல்லால்` என மாற்றுக. வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் - பயிற்சிவயத்தால் ஒரோவொருகால் நான் உன்பால் இரக்கும் பொருள் வேறு ஒன்று இருக்குமாயின் அதுவும் உன்றன் விருப்பன்றே - அவ்வாறிருத்தலும் உன்றன் திருவருளே யன்றோ; என்றது, `வேண்டத் தக்கது அறிவோய் நீ என்பது முதலியவற்றை யான் அறிந்து உன் அருள்வழியே நிற்பேனாயினும், ஒரோவொருகால் பயிற்சி வயத்தால் அந்நிலையினின்றும் பிறழ்தலும் உனது திரோதான சத்தியின் செயலே` என்பதை விண்ணப்பித்து, `அக்குற்றத்தைப் பொறுத்து என்னை நின்பால் வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்` என வேண்டியதாம். இதன் இறுதிப் பகுதிக்கு மாதவச் சிவஞான யோகிகள் இவ்வாறே பொருள்கொள்ளுதல் காண்க. (சிவஞான சித்தி.சூ.10.3.)

பண் :

பாடல் எண் : 7

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
 

பொழிப்புரை :

எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய, எம் தலைவனே! மலையை ஒத்த பெரியோனே! என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்னுடைய உயிரையும், உடம்பையும், பொருள் எல்லாவற்றையும் உன்னுடையனவாக ஏற்றுக் கொள்ளவில்லையோ? அங்ஙனமாக இப்பொழுது ஒரு துன்பம் எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது. ஆதலின், எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், தீமையே செய்வாய் எனினும் இத்தன்மைக்குத் தலைவன் யானோ?

குறிப்புரை :

``அன்றே`` என்றதனை இறுதிக்கண் கூட்டி, அதன்பின், `ஆதலின், நின் திருவுள்ளத்திற்கு ஏற்றது செய்க` என்னும் கையறு கிளவியாகிய குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. இவ்வாறன்றி, வலியுறுத்தற் பொருட்டு, `அன்றே, என்னை ஆட்கொண்ட போதே` என இருகாற் கூறினார் என்றலுமாம். ஆவியாவது, சீவபோதம். உடைமையாவது, பிராரத்தமும், ஆகாமியமும் ஆகிய வினைகள். இறைவனுக்கு ஆட்பட்டார் பிற உடைமையை முன்னரே துறந்தமை யின், அவர்க்கு உடைமையாவன இவையன்றி இல்லை என்க. சிறுபான்மை எக்காரணத்தாலேனும் பிற உடைமை உளவாயின், அவையும், `உடைமை` என்பதனுள் அடங்கும். உடைமையை, `பொருள்` என்று கூறி, `உடல், பொருள், ஆவி மூன்றையும் இறைவன் பால் ஆக்குவிப்பவரே ஞானியர்` என்பது வழக்கு. `ஆவியும் உன்னுடையதாயினமையின், இப்பொழுது எனக்கென்று வரும் இடையூறு ஒன்று இல்லை` எனவும், `வருகின்ற இடையூற்றைத் தடுத்தும், வந்த இடையூற்றைப் போக்கியும் என்னை நான் காத்துக்கொள்ளுதலும், காவாது தீமையுறுதலும் ஆகிய செயல்களும் எனக்கு இல்லை; எல்லாவற்றிற்கும் உரியவன் நீயே` எனவும் கூறுவார், இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ? நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகம்` என்றும் அருளினார்.
``செய்வாய்`` என்றவை, `உன் விருப்பப்படி செய்தற்குரியை` என்னும் பொருளன. நன்று, பிழை என்னும் இரண்டனுள் தம்பால் செய்யப்படுவது ஒன்றேயாதலின், ``இதற்கு`` என ஒருமையாற் கூறப்பட்டது. நாயகம் - தலைமை; இஃது ஆகுபெயராய், `தலைவன்` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 8

நாயிற் கடையாம் நாயேனை
நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரம்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணையுடைய பெருமானே! நாயினும் கீழான, அடியேனை விரும்பி, நீயே அடிமை கொண்டாய். மாயா காரியமான இப்பிறப்பை உன்னிடம் ஒப்புவித்து உன் ஆணைவழி நடப்பதன்றி ஆராயும் தன்மை நானோ உடையேன்? இவ்விடத்தில் அதிகாரம் என்னுடையதோ? இல்லை; ஆதலால் என்னை நீ இந்த உடம்பில் வைப்பினும் வைப்பாய். உன்னுடைய திருவடி நீழலில் சேர்ப்பினும் சேர்ப்பாய். அஃது உன் விருப்பம்.

குறிப்புரை :

நயந்து - விரும்பி. `நீயே நயந்து முன்பு என்னை ஆட்கொண்டாய்; அதனால், இன்றும் நீ என்னைப் பிறப்பில் விடினும் விடுவாய்; உன் திருவடிநிழலில் இருத்தினும் இருத்துவாய்; ஆதலின், உடம்பையும் உனக்குரியதாகவே வைத்து நான் வாளா இருப்பதன்றி, என்னை என்னசெய்தல் வேண்டும் என்று ஆராய்ந்து முடிவு செய்தற்கு உரியவன் நான்தானோ? அதிகாரம் இங்கு என்னதோ? உன் விருப்பப் படி செய்தருள்` என்க. `உன் விருப்பப்படி செய்தருள்` என்பது குறிப்பெச்சம்.
மாயப் பிறவி - நிலையில்லாத உடம்பு. ஓகாரம் வினாப் பொருளிலும், தான் பிரிநிலை ஏகாரப் பொருளிலும் வந்தன. அதிகாரம் - தலைமை.

பண் :

பாடல் எண் : 9

கண்ணார் நுதலோய் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நா
னவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே. 

பொழிப்புரை :

கண்ணமைந்த நெற்றியையுடையோனே! தலைவனே! என் கண்கள் இன்பம் மிகும்படி, உன் இரு திருவடிகளை யும் தரிசித்தேன். வேறொன்றையும் எண்ணாமல் இரவிலும் பகலிலும் யான் அந்தத் திருவடிகளையே நினைப்பதல்லாது உடம்பை மண்ணின்மீது கழித்தொழிக்கும் விதத்தையும், வந்து வந்து உன்னுடைய திருவடியில் சேரும் விதத்தையும் நினைக்க நான் உரிமையுடையேனோ? உடையேன் எனின், எனது அடிமைத் தன்மை மிகவும் அழகுடையது!

குறிப்புரை :

`கண்கள் களிகூரக் கண்டேன்` என்க. ``எண்ணாது`` என்றதற்கு, `வேறொன்றையும் எண்ணாது` எனச் செயப்படுபொருள் வருவித்துரைக்க. `யாக்கையை மண்மேல் விடுவது எவ்வாறு என்றும், நான் வானில் வந்து உன் கழற்குப் புகுவது எவ்வாறு என்றும் ஆராய்தற்கு உரிமை உடையேனோ? உடையேனாயின், நான் உன்னிடத்துப்பட்ட அடிமைத் தன்மை மிகவும் அழகுடைய தாமன்றோ` என்றபடி.
`இங்ஙனங் கூறவே, இவற்றை எண்ணி, பொருந்துவது செய்தற்குரியவன் தலைவனாகிய நீயே` என்பது பெறப்படும். ``கழற்கு`` என்றதனை, `கழற்கண்` எனத் திரிக்க. ``அழகுடைத்து`` என்றது, `அழகிலது` என்னும் குறிப்புமொழி.

பண் :

பாடல் எண் : 10

அழகே புரிந்திட் டடிநாயேன்
அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே
கோனே என்னைக் குழைத்தாயே. 

பொழிப்புரை :

பழமையானவனே! அழகனே! அந்தணக் கோலம் உடையவனே! இறைவனே! உன்னுடைய அழகையே காண விரும்பி, உன் அடிமையாகிய யான் நாய் போன்று அழுகின்றேன். விளங்கு கின்ற உன்னுடைய திருமேனியைக் காட்டி, என்னையாளாகக் கொண்டாய். புகழை மிக உடைய உன் திருவடிப் பேற்றினை எனக்கு நீ கொடுத்தருளாமல் என்னை வாடச் செய்தாயே! இது முறையோ!

குறிப்புரை :

இங்கும், ``அழகு`` என்றது, அழகல்லாததையே என்க. புகழே பெரிய பதம் - புகழ் பெரிதாகிய நிலை; சிவலோகம். குழைத்தாய் - வாடச்செய்தாய்; `இது, பணி கொண்ட உனக்கு அழகோ` என்பது குறிப்பெச்சம். இதனுள் மூன்றாமெழுத்தெதுகை வந்தது. இடையிரண்டடிகளில் ஏனையடிகளின் மூன்றாமெழுத்து வந்தமையும் நோக்கற்பாற்று.
சிற்பி