திருவாசகம்-உயிருண்ணிப் பத்து


பண் :

பாடல் எண் : 1

பைந்நாப்பட அரவேரல்குல்
உமைபாகம தாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக்
கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த்
திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாள்களித் தெந்நாள்இறு
மாக்கேன் இனியானே.

பொழிப்புரை :

பசிய நாவினையுடைய, பாம்பினது, படம் போன்ற, அழகிய அல்குலையுடைய உமையம்மையினது பாகத்தை யுடையவனாய்; என் உடம்பைத் தினந்தோறும் விட்டு நீங்காது விளங்கி நிற்கின்ற வினையை அறுப்பவனே! காளையூர்தியை உடைய வனே! செம்மையான நாவன்மை யுடையோர், துதிக்கும் புகழை யுடைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே! நான் இனிமேல், எந்நாளில் உன்னைக் கண்டு களித்து, எந்நாளில் இறுமாந் திருப்பேன்?

குறிப்புரை :

பைந் நா - பசிய நாக்கு. `அரவப் படவேரல்குல்` என்பது பின்முன்னாக மாறி நின்றது. ``பையரவல்குற்பாண்டி மாதேவி`` (தி. 3 ப.120 பா.5) `பையிள அரவல்குற் பாவை யொடும் உடனே`` (தி.7 ப.85 பா.2) என்று இங்ஙனம் வருதல் பெரும் பான்மை. ஏர், உவம உருபு. மெய் - உடல். வினைக் கேடா - வினையைக் கெடுத்தல் உடையவனே. செந்நாவலர் - செவ்விய நாவன்மையுடைய புலவர். இல்லது கூறிப் புகழாத நாவினை யுடையவர் என்பார், அவரது நாவினை, ``செந்நா`` என்றார். ``செய்யா கூறிக் கிளத்தல் - எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே`` (புறம்-148.) என்ற சான்றோர் செய்யுளும் காண்க. பரசும் - புகழ்கின்ற. அடிகட்குக் களிப்பும், இறுமாப்பும் சிவானந்த மேலீட்டாலன்றி உளவாகாவாகலின், `அதனைப் பெறுதல் எந்நாள்` என்பதே கருத்தாதல் தெளிவு. ``எந்நாள்`` என மறித்தும் கூறியது, களித்த பின்னும் இறுமாப்புண்டாதற்குச் சிறிது காலம் இடையிடுதலும் கூடும் என்னும் கருத்தினாலாம்.

பண் :

பாடல் எண் : 2

நானாரடி அணைவான்ஒரு
நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர்
கலந்தான்உளம் பிரியான்
தேனார்சடைமுடியான்மன்னு
திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர்
வளம்ஈந்தனன் எனக்கே.

பொழிப்புரை :

திருவடியைச் சேர்வதற்கு எனக்கு என்ன தகுதியுள்ளது? எனினும், தேன் வண்டு நிறைந்த சடையையுடைய வனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவன் நாய் ஒன்றிற்கு ஆசனம் கொடுத்தது போல எனக்கு அவன் திருவருளைக் கொடுத்து, இவ்விடத்தில், தசை பொதிந்த உடம்பின் கண் புகுந்தான். என் உயிரில் கலந்தான். என் மனத்தினின்றும் பிரிய மாட்டான். இவ்வாற்றால் தேவர்களும் அறிய முடியாததாகிய, ஒரு செல்வத்தை எனக்கு அவன் தந்தருளினான்.

குறிப்புரை :

பொருள்கோள்: `அடியணைவான் நான் ஆர்! திருப் பெருந்துறை உறைவான், ஒரு நாய்க்குத் தவிசிட்டது போன்று இங்கு எனக்கு வானோர்களும் அறியாததோர் வளம் ஈந்தனன்; உடல் புகுந்தான்; உயிர்கலந்தான்; உளம்பிரியான்; அதனால், அப்பேற்றைப் பெற உரியனானேன்`. அடி அணைவான் நான் ஆர் - அவனது திருவடியை அடைவதற்கு நான் என்ன உரிமையுடையேன்`. `அதனால் அப்பேற்றைப்பெற உரியனானேன்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 3

எனைநானென்ப தறியேன்பகல்
இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான்எனை
மத்தோன்மத்த னாக்கிச்
சினமால்விடை உடையான்மன்னு
திருப்பெருந்துறை உறையும்
பனவன்எனைச் செய்தபடி
றறியேன் பரஞ்சுடரே. 

பொழிப்புரை :

மனத்துக்கும், வாக்குக்கும் அப்பாற்பட்டவனும், கோபத்தையுடைய பெரிய இடபத்தையுடையவனும், நிலை பெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், அந்தணனும், மேலான சுடரானவனுமாகிய இறைவன், அடியேனைப் பெரும் பித்தனாக்கி, எனக்குச் செய்த வஞ்சனையை அறியேன். என்னை, நான் என்று உணர்வது? அறியேன். பகல் இரவு செல்வதையும் அறியேன்.

குறிப்புரை :

நான் என்பது - நான் என்று உணர்வதை. பகல் இரவு ஆவது - பகல் இரவு என்னும் வேறுபாடு. `இங்ஙனம் ஏதும் தோன்றாத படி இறைவன் என்னைப் பெரும்பித்தனாகச் செய்து என்னை வேறுபடுத்த மாயத்தை யான் அறிகின்றிலேன்` என்க. உன்மத்தம், பித்து ஆகலின், மத்தோன்மத்தம், பெரும்பித்து. பனவன் - பார்ப்பான். ``செய்த`` என்றது, `வேறுபடுத்த` என்னும் பொருட்டு. ``படிறு`` என்றது, பழிப்பது போலப் புகழ்ந்தது. பரஞ்சுடர் - மேலான ஒளி; இதுவும் இறைவனையே குறித்தது.

பண் :

பாடல் எண் : 4

வினைக்கேடரும் உளரோபிறர்
சொல்லீர்விய னுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என
தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லேபெருந்
துறையில்உறை பெம்மான்
மனத்தான் கண்ணின்
அகத்தான்மறு மாற்றத்திடையானே. 

பொழிப்புரை :

பகலில் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமான், அடியேனைத் தானே எழுந்தருளி வந்து ஆண்டு கொண்டான். என்னுடைய என்பினது உள் துளைகளையும் உருகச் செய்து, மேலும் வந்து, என் மனத்தினுள்ளானாயினான். கண்ணிலும் உள்ளானாயினான். மற்றும் வாக்கினும் உள்ளானாயினான். பரந்த உலகத்தில் இவனைப் போல வினையைக் கெடுப்பவர் பிறரும் இருக்கின்றார்களோ? சொல்லுங்கள்.

குறிப்புரை :

வினைக்கேடரும் - வினையைக் கெடுப்பவரும்; `பிறர் உளரோ` என மாற்றுக. `வியனுலகில் உளரோ` என இயையும். புரை - துளை. பினைத்தான் புகுந்து - பின்னும் வந்து; எல்லே - பகலிற்றானே; என்றது, `யாங்கள் கனவிலன்றி நனவிலும் இனிது காணும்படி` என்ற வாறு.
`எல்லே பெருந்துறையில் உறைபெம்மான்` என்றதை, இரண்டாம் அடியின் முதலிற் கூட்டுக. மறு மாற்றம் - பின்னும் தொடர்ந்து எழும்சொல். ``மறு`` என்றதனை, `மற்று` என்பதன் இடைக் குறை என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 5

பற்றாங்கவை அற்றீர்பற்றும்
பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற்
கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே. 

பொழிப்புரை :

உலகப் பற்றுக்களாகிய அவைகளை ஒழித்தவராய், இறைவனைப் பற்றுகின்ற, ஆதரவாகிய அதனைப் பிடித்து நல்லதோர் பதவியினை அடைய விரும்பினால், அந்தோ! ஓடி வாருங்கள். பின்னலையுடைய சடையையுடையவனும் நிலை பெற்ற திருப்பெருந் துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனுமாகிய பெருமானது, புகழைக் கற்றவாறே அவனது திருவடியை, விரும்பினவராகிய அடியாரோடும், கலந்து அடைவீர்களாக!

குறிப்புரை :

பற்று அவை அற்றீர் - மனைவி, மக்கள் முதலிய பற்றுக் களாகிய அவை அனைத்தையும் விட்டவர்களே. பின்வரும் பற்றினை, ``பற்றும் பற்று`` என்றலின், இவை, பற்றலாகாத பற்றுக்கள் என்பது போந்தது. பற்றலாகாத பற்றுக்களாவன, தன்னைப் பற்றின வனை யாற்றுள் ஆழ்த்தும் அம்மிபோலப் பிறவிக் கடலுள் ஆழ்த்தும் பற்றுக்கள். `அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்`` (நல்வழி-20) என்பது காண்க. பற்றும் பற்றாவது, தன்னைப் பற்றினவனைக் கரை சேர்க்கும் புணைபோலப் பிறவிக் கடலைக் கடப்பிக்கும் பற்று, அஃது இறைவன் திருவடி. `யான்` என்னும் `அகப்பற்று`, பற்றற்றானது பற்றினைப் பற்றியன்றி நீங்கலாகாமை யின், `பற்றற்றீர்`` என்ற பற்றுக்கள் சிறுபான்மை அஃது இன்றியும் நிலையின்மை, தூய்மையின்மை முதலியவற்றை உணர்ந்த துணை யானே நீங்கற்பாலனவாய மனைவி, மக்கள் முதலாய எனது என்னும் புறப்பற்றுக்கள் சிலவேயாம். இரண்டிடத்தும், ``பற்று`` என்றது, பற்றப்படும் பொருளைக் குறித்தது, `நன்று` என்பது, ``நற்று`` என வலித்தல் பெற்றது. இனி ஒருமொழி முடிபு வரையறைப்படாமையின், `நல்` என்னும் முதனிலை யீற்று லகரம் றகரமாய்த் திரிதலும் உண்டு என்றலுமாம். அடைவோ மெனின் - நாம் அனைவரும் அடைய வேண்டுமாயின்; தம்மையும் அவர்களோடு வைத்து, இவ்வாறு ஓதினார். `அடைவோமெனின் வம்மின்` என இயையும். ``கெடுவீர்`` என்றது,
``விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்``
(தி. 5ப.86 பா.2)
``ஆவிதான் போயினபின் யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்``
(நல்வழி-22)
என்றாற்போலும் இடங்களில், ``பாவிகாள்`` என்றற்றொடக்கத்தன போல, இரக்கம் பற்றி வந்த வெஞ்சொல்; இன்னோரன்ன சொற்கள், வேம்பும் கடுவும்போல வெய்யவாயினும் (தொல் - பொருள் 427.) தாங்குதலின்றி வழிநனி பயத்தல்பற்றிப் பெருமக்களால் ஒரோ விடத்துக் கூறப்படுமாறுணர்க.
தெற்று ஆர் - பின்னுதல் பொருந்திய. பின்னுதல் - ஒன்றை யொன்று பற்றிக்கிடத்தல். சீர் - புகழ். கற்று - பல காலும் ஓதி. ``ஆங்கு`` மூன்றும் அசைநிலைகள். கலந்து கூடுமின்` என்க; இவை ஒருபொருட் சொற்கள். நிலையாமை முதலியவை நோக்கிச் சுற்றம் முதலியவை களைத் துறந்தோர், பின்னர்ப் பற்றற்றான் பற்றினைப் பற்ற நினையாது அவற்றைத் துறந்த அளவிலே நிற்பின், இகம், பரம் என்னும் இரண்டனையும் வீணே இழந்து நிற்பராதலின் அத்தன்மை யாரை நோக்கியிரங்கி இங்ஙனம் கூறினார்.
இத்தன்மையோரை, ``பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்`` (தி. 1 ப.110 பா.10) என ஞானசம்பந்தப் பெருமானார் அருளிச்செய்தல் காண்க. இது தம்மோடு ஒத்தாரது நிலைக்கு இரங்குமுகத்தான், தமது நிலையையும் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 6

கடலின்திரை யதுபோல்வரு
கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்
தொழியாவணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய
திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள்
பரன்தான்செய்த படிறே.

பொழிப்புரை :

கடலின் அலைகள் போல ஓயாது வருகின்ற கலக்கச் செய்யும் பாசங்களைத் தொலைத்து, என் உடம்பிலும், என் உயிரிலும் நுழைந்து, ஓர் இடமும் எஞ்சி நில்லாதபடி நிறைந்தனன். இதுவே, ஒளிபரப்பும் கதிர்களையுடைய பிறையை அணிந்த திருப்பெருந் துறையில் வீற்றிருந்தருளும் விரிந்த சடையாகிய முடியையுடைய, எம் மேலோன் செய்த கள்ளம்.

குறிப்புரை :

கடலின் திரை, இடையறாது தொடர்ந்து வருதல் குறித்து வந்த வினையுவமை. கலக்கம் - துன்பம். `கலக்கமும் மலமும் அறுத்து` என்க. `உடலின்கண்ணும், உயிரின்கண்ணும்` என உருபு விரிக்க.
ஒழியா வண்ணம் - யாதோர் இடமும் எஞ்சாதபடி. சுடரும் சுடர் மதி - வீசுகின்ற ஒளியையுடைய சந்திரன். படிறு - மாய வித்தை. தாம் அறியாதவாறே தம்மிடத்து இவற்றைச் செய்தமையின், ``படிறு`` என்றார். `செய்த படிறு இது` என ஒருசொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 7

வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம்
வேண்டேன்மண் ணும்விண்ணும்
வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
புறம்போகலொட் டேனே. 

பொழிப்புரை :

நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.

குறிப்புரை :

முதற்றொட்டு, ``பிறப்பிறப்பு`` என்றது காறும் உள்ள தொடர்களில் இரண்டாம் வேற்றுமையும், `சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை`` என்றதில் ஏழாம் வேற்றுமையும் இறுதிக்கண் தொக்கன. வேண்டேன் - விரும்பமாட்டேன். சிவம் - மங்கலமே உடையதாகிய முதற்பொருளை. நாளும் தீண்டேன் - எந்நாளும் மனத்தால் தீண்டேன்; இங்ஙனம் உரைப்பவே, மெய்யால் தீண்டாமை தானே பெறப்படும். `அங்கு இறைதாள் பூண்டேன்` என்க. பூணுதல் - மேற்கொள்ளுதல். `அதனால் நானும் அவற்றிற்குப் புறமாகச் செல்லேன்; அவற்றையும் எனக்குப் புறமாகச் செல்லவிடேன்` என்க. இதனுள், அடிகள் இம்மை மறுமை இன்பங்களைச் சிறிதும் விரும்பாத பெருமை இனிது பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கோற்றேன்எனக் கென்கோகுரை
கடல்வாய்அமு தென்கோ
ஆற்றேன்எங்கள் அரனேஅரு
மருந்தேஎன தரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு
திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின்
மலனேஉனை யானே. 

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானே! அருமையான மருந்தே! எனக்கு அரசனே! சேற்றினால் நிறைந்த நன்செய் பக்கங்களில் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற, திருவெண்ணீற் றால் நிறைந்த, திருமேனியையுடைய, நின்மலனே! உன்னை அடியேன் எனக்குக் கிடைத்த கொம்புத்தேன் என்பேனோ? ஒலிக் கின்ற பாற்கடலில் தோன்றிய அமுதம் என்பேனோ? சொல்ல முடியா தவன் ஆயினேன்.

குறிப்புரை :

இதனுள், ``எங்கள் அரனே`` என்பது முதலாகத் தொடங்கி நேரே சென்று பொருள் உரைக்க. அங்ஙனம் உரைக்கும் வழி, ``எனக்கு`` என்றதனை, ``கோற்றேன்`` என்றதற்கு முன்னர் வைத் துரைக்க. கோல் தேன் - கொம்புத்தேன். என்கோ - என்று சொல் வேனோ. குரைகடல்வாய் - ஒலிக்கின்ற கடலின்கண் தோன்றிய. ஆற்றேன் - உனது இன்பத்தை முழுதும் துய்க்க வல்லேனல்லேன். அரன் - பாசத்தை அரிப்பவன். நீற்று ஆர்தரு - திருநீற்றினால் நிறைந்த.

பண் :

பாடல் எண் : 9

எச்சம்அறி வேன்நான்எனக்
கிருக்கின்றதை அறியேன்
அச்சோஎங்கள் அரனேஅரு
மருந்தேஎன தமுதே
செச்சைமலர் புரைமேனியன்
திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி
யானாகி நின்றானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானே! அருமையான மருந்தானவனே! என்னுடைய அமுதமானவனே! வெட்சி மலரைப் போன்ற செம்மேனியையுடையவனாகியும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்றவனாகியும், நாடோறும் என்னுடைய நெஞ்சத்தில் தங்கி, நானேயாய்க் கலந்து நின்றவனே! நான் எஞ்சிய பிறவற்றை அறிவேன். எனக்கு இருக்கின்ற குறைபாட்டை அறிய மாட்டேன். இது என்ன வியப்பு?

குறிப்புரை :

``எச்சம்`` என்றது முதலாக, ``அச்சோ`` என்பது ஈறாக உள்ள பகுதியை இறுதியிலும், மூன்றாம் அடியை முதலிலும் கூட்டுக. ஏகாரங்கள், தேற்றம். எச்சம் - பெறாத பொருள். இருக்கின்றது - பெற்றுள்ள பொருள். அச்சோ, வியப்பிடைச் சொல். செச்சை - வெட்சி, ``நித்தம்`` என்பது, ``நிச்சம்`` எனப் போலியாயிற்று. `திருப்பெருந்துறையில் உறையும் பெருமான் எனக்குப் பெருநலம் விளைப்பவன்; அவன் என் நெஞ்சில் மன்னித் தோன்றாது நிற்கின்றான்; இதனை நான் அறியாமல் துன்புறுகின்றேன்` என்பது இதன் திரண்ட பொருள்.
`சீவன் முத்தி நிலையில் இருப்பினும் அதனால் அமைதி பெறாமல், பரமுத்தியை விரும்புகின்றேன்` என்றபடி. இது சிறப்புடையதேயாயினும், உடம்புள்ள அளவும் இறைவன் அருள் வழியே அமைந்திராது, விரைந்து வலியுறுத்தி அவனை இரந்து நிற்கும் நிலைபற்றி இவ்வாறு கூறினார். பெற்றுள்ளதை அறியாத ஒன்றை வியப்பாகக் கொண்டு, `அச்சோ` என்றார்.

பண் :

பாடல் எண் : 10

வான்பாவிய உலகத்தவர்
தவமேசெய அவமே
ஊன்பாவிய உடலைச்சுமந்
தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு
திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால்உனை
நல்காய்என லாமே. 

பொழிப்புரை :

தேன் பெருகுகின்ற மலர்களையுடைய கொன்றை மரங்கள் நிறைந்து விளங்கும், திருப்பெருந்துறையில் வீற்றிருப் பவனே! விண்ணிலே பொருந்திய உலகத்தவராகிய தேவர்களும், தவத்தையே செய்து கொண்டிருக்க, வீணே, தசை பொருந்திய உடம்பைத் தாங்கி, காட்டில் உள்ள மரம் போல ஆகிவிட்டேன். நான் இவ்வாறு பாவியாகப் போய்விட்ட பின்பு, உன்னை அருளாதவன் என்று கூறுதல் கூடுமோ?

குறிப்புரை :

வான் பாவிய - விண்ணிற் பரந்துள்ள. `உலகத்தவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. தேவரும் உன்னை அடையத் தவம் செய்துநிற்க, நான், வாளாதே உன்னை அடைய முயன்று வேண்டுகின்றேன்; எனது தவமின்மை குறித்து அருள் பண்ணாதிருத்தல் முறையேயாக, நான் பாவியாகவே இருந்து கொண்டு, உன்னை மனம் இரங்காதவன் என்று வெறுத்தல் முறையோ` என்கின்றார். அடவி - காடு. காட்டில் உள்ள மரம் ஒன்றற்கும் பயன் படாது வீணே முதிர்ந்து வற்றி மட்கி மடியும்; அல்லது எரிந்தொழியும் என்க.
சிற்பி