திருவாசகம்-திருப்பாண்டிப் பதிகம்


பண் :

பாடல் எண் : 1

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்
காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற்
போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட
சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி யாதென்றன்
உள்ளமதே. 

பொழிப்புரை :

பருமையான மலையரசனது பெண்ணாகிய உமையம்மையின், பாகரும், பாண்டிய மன்னனுக்கு அருமையான அமுதமாகிய ஒருவரும் பற்று ஒன்று இல்லாதவரும் தமது திருவடித் தாமரை மலரை வணங்கி, கண்டு மகிழும்படி வெளிப்பட்டு நின்று, மனத்தை உருக்கிக் குதிரையின் மேல் வந்த வீரருமாகிய சிவ பெருமான் ஒருவரையல்லாமல், என் மனமானது பிற தெய்வங் களின் வடிவத்தை அறியாது.

குறிப்புரை :

பருவரை - பரியதாகிய (பருத்த உருவினதாகிய) மலை. இதனுள் இறைவனைப் பன்மை வாய்பாட்டால் அருளிச் செய்கின்றார். பாண்டியனுக்குப் பேரின்பத்தை அளித்தமை பற்றி, ``பாண்டியற்கு ஆரமுதாம் ஒருவர்`` என்றார். மேல்,
``நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி``
(தி.8 போற்றித். 213 - 14) என்று அருளிச் செய்தமை காண்க. ஒருவர் - ஒப்பற்றவர். ஒன்றும் இலாதவர் - உயிரியல்புகளுள் ஒன்றும் இல்லாதவர். கழல் போது இறைஞ்சித் தெரிவர நின்று - மக்கள் தமது திருவடி மலரை வணங்கித் தம்மைக் கண்களால் காணுதல் உண்டாகும் படி வெளிநின்று. உருக்கி - அனைவரது உள்ளங்களையும் உருகச் செய்து. `சேவகனாராகிய ஒருவர்` என இருபெயரொட்டாக்குக. `உருவாக` என ஆக்கம் வருவிக்க. பொருளை, `உரு` என்றல் வழக்காதல் உணர்க. இனி, ஐயுருபை அதுவுருபாகக் கொண்டு, `ஒருவரது உருவை நினைதலன்றிப் பிறரது உருவத்தை என் உள்ளம் நினையாது` என்று உரைத்தலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 2

சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர்
சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை
கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி
கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட
மறித்திடுமே. 

பொழிப்புரை :

சூரியனையும் மறைக்கத்தக்க பேரொளி வடிவினனாகிய இறைவன் சூலத்தைக் கையில் ஏந்தி குதிரையின் மேல் வந்து சேர்வானாயின் அதனைக் காணச் சென்றவர் தம் பெருமையை மறந்து ஞானப்பித்தை அடைவார். ஏனெனில் மதுரையில் உள்ள வர்க்கு அரசனாகிய பாண்டியனது மறுபிறப்பு நீங்கும்படி இவ்வாறு வந்துதான் தடுத்தாட்கொண்டான். ஆகவே அவன் குதிரை மேல் வருகின்ற காட்சியைச் சென்று காண்பது நம் குடி கெடுவதற்கு ஏதுவாகும்: பறையறைந்தாற் போலக் கூறினோம். அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

பொருள்கோள்: `சோதி, மதுரையர் மன்னன் மறுபிறப்பு ஓட மறித்திடும்; ஆதலின், அவன் கழுக்கடை தன்னைக் கைப்பிடித்துக் குதிரையின்மேல் வந்து கூடிடுமேல் இங்குள்ளாரது குடிகெடுதலை நீயிருங் கண்டீர்; அதனால் சொன்னோம்; அவனைச் சார்ந்தவர் சதுரை மறந்து அறிமால் கொள்வர்`.
சதுரை மறந்து - தம் பெருமையை மறந்து. அறிமால் கொள் வர் - ஞானப் பித்துக் கொள்வார்கள். முன்னர், ``சதுரிழந் தறிமால் கொண்டு`` (தி.8 போற்றித் - 71) என்று அருளியது காண்க. சாற்றிச் சொன்னோம் - பறை சாற்றிச் சொல்கின்றோம். கதிரை மறைத்தன்ன சோதி - பகலவன் ஒளியை விழுங்கினாலொத்த பேரொளியை உடைய இறைவன். கழுக்கடை - சூலம். குடிகெடுதல், உலகியலைத் துறத்தலால் நிகழ்வது. மதுரையர் மன்னன் - பாண்டியன். `அவனை மறித்திடும்` என்க. மறித்தல் - தடுத்தாட்கொள்ளல். மறு பிறப்பு ஓட மறித்து ஆட்கொள்ளுதல் அவனது இயல்பாதலை விளக்க, `மறித்த னன்` என்னாது, ``மறித்திடும்`` என்று அருளினார். பழிப்பதுபோலப் புகழ்ந்த இது, தமது நிலையைப் பிறர்மேல் வைத்து அருளிச் செய்ததாம்.

பண் :

பாடல் எண் : 3

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற
நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட
பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை
உள்ளங்கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று
பேணுமினே. 

பொழிப்புரை :

நீர்மேல் எழுத்துப் போன்ற அழிந்து போகிற இன்ப வெள்ளத்துள், நீந்தித் திளைக்கின்ற மனத்தையுடையீர்! உலகோர் இன்ப வெள்ளத்தில் மூழ்கும்படி, குதிரையின்மேல் ஏறி வந்த பாண்டிய மன்னனாகிய சிவபெருமான் ஒப்பற்ற இன்ப வெள்ளமாய்த் தோன்றி அடியாரது மனத்தைக் கவர்ந்தான். அப்பேரின்பப் பெருக்கினுள் சென்றடைந்து அவன் வீரக் கழலணிந்த திருவடியையே வழிபடுவீராக!.

குறிப்புரை :

நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங் கொண்டீர் - வெயில் வெப்பம் நீங்க நீராகிய இனிய வெள்ளத்துள் விருப்பம்போல விளையாடி முழுகுகின்ற விருப்பத்தை உடையவர் களே; என்றது, `அஃதே அமையுமோ` என்றபடி. பார் - பூமியில் உள்ளவர்கள். கொள்ள - பெறும்படி, பாண்டி நாட்டை உடைமைபற்றி, ``பாண்டியனார்`` என்றார். `ஓர் உரு` என இயையும். ``தொண்டரை உள்ளங்கொண்டார்` என்றதனை, `யானையைக் கோடு குறைத்தான்` என்பதுபோலக் கொள்க. இது, தமது நிலையைப் பிறர்மேல் வைத்து அருளிச் செய்தது.

பண் :

பாடல் எண் : 4

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்
தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலம்இக் காலம்எக்
காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த
மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள
இருநிலத்தே. 

பொழிப்புரை :

நல்லவராயுள்ளவர், அடர்ந்து வருகின்ற பிறப் புக்குச் செல்லாதீர். எல்லாக் காலத்தையும்விட பாண்டியனது நன்மை மிகுந்த நாட்டுக்கு இறைவனாகிய சிவபெருமான், விளங்கியருளு கின்ற காலம், இந்தக் காலமேயாகும். ஞானமாகிய ஒளிக்கதிரை வீசு கின்ற வாளை, உறையினின்றும் எடுத்து ஆனந்தமாகிய குதிரையைச் செலுத்தி, பரந்த உலகத்திலே எதிர்ப்பட்டவரது பிறவியாகிய மரத்தைப்புரண்டு விழும்படி வெட்டிச் சாய்க்கின்றான். அவன்முன் செல்லுங்கள்.

குறிப்புரை :

பொருள்கோள்: `இறைவன், எக்காலத்துள்ளும் வாள் உறை கழித்து மாக்கடவி, எதிர்ந்தார் புரள இருநிலத்தே பிறப்பை எறியும்; ஆயினும், அவன் கிளர்கின்ற காலம் இக்காலம்; ஆதலின், பிறவிக்கு நல்லவர் அவன் எதிரில் செல்லன்மின்`
நல்லர் - நண்பர். செறியும் - நெருங்கிய. `அவன் காட்சியைக் காணாதார் பிறப்பில் வீழ்வர்` என்னும் இகழ்ச்சி தோன்ற, ``பிறவிக்கு நல்லவர் செல்லன்மின்`` என்றார். `தென்னன் நன்னாட்டுக்கு இறைவன்` என்க. கிளர்கின்ற காலம் - எழுச்சியோடு வருகின்ற காலம். எக்காலத்துள்ளும் - எப்பொழுதும். அறிவு ஒண்கதிர் வாள் - ஞான மாகிய ஒள்ளிய சுடரை உடையவாள். உறை கழித்தல் - வெளிப் படுத்தல். ஆனந்த மாக்கடவி - பேரின்பமாகிய குதிரையை ஊர்ந்து. திருவுருவம் இன்ப வெள்ளத்தின் இடைநிற்பதாகத் தோன்றலின், அதனைக் குதிரையாக உருவகம் செய்தார். ``பிறவி`` என்றதற்கு, `பிறவியாகிய பகைப் படையை` என உரைக்க. ``அறிவொண் கதிர் வாள் உறைகழித்து ஆனந்தமாக் கடவி`` என்ற உருவகங்கள், இஞ் ஞான்று அவன் உண்மையாகவே சூலத்தை ஏந்திக் குதிரைமேல் வரு தலை உட்கொண்டு நின்றது. எறியும் - வெட்டியொழிப்பான். எதிர்ந் தார் - தம் எதிரே வந்தவர். புரள - தன் அடியில் வீழ்ந்து பணியும்படி. ``பிறப்பு`` என்றது, `உடம்பு` எனவும், ``புரள`` என்றது, `மாண் டொழிய` எனவும் மற்றும் ஓரோர் பொருளைத் தோற்றுவித்தன. `எக் காலத்துள்ளும் இக்காலம் கிளர்கின்ற காலம்` என முன்னே கூட்டி உரைப்பாரும் உளர்; அவ்வாறுரைப்பின், உருவகங்களைக்கொண்ட இறுதி இரண்டடிகள் நின்று வற்றுதல் காண்க. ``பிறப்பிற்கு நல்லவர்`` என்றதும், ``செல்லன்மின்`` என்றதும், `எதிர்ந்தார் புரளப் பிறப்பை ஏறியும்` என்றதும், பழிப்பதுபோலப் புகழ்தல். இஃது இறைவன் குதிரைமேல் வருதலை முன் அறிந்து கூறுவார் ஒருவரது கூற்றாக அருளிச் செய்தது.

பண் :

பாடல் எண் : 5

காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின்
கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர்
நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன்
அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து
முந்துமினே. 

பொழிப்புரை :

நினைத்தற்கு அருமையான உலகத்தை உண்ட திரு மாலோடு, பிரமர், மற்றைய தேவர்களும் அடைதற்கு அரிய, அருமை யான நஞ்சத்தை அமுதாகக் கொண்டவனாகிய, எங்கள் பாண்டிப் பெருமானாகிய இறைவன் தன் அடியவர்களுக்குத் தனது முதற் கருவூலத்தைத் திறந்து அள்ளி வழங்குகின்றான். அதனைப் பெறு வதற்கு விரைவாக வந்து முந்திக் கொள்ளுங்கள். முன்னதாகவே, அவனிடத்தில் அன்பு செய்து பிழையுங்கள்.

குறிப்புரை :

காலம் உண்டாக - காலம் மிகவும் உளதாகும்படி; என்றது, `மிகவும் முன்னதாக` என்றதாம். ``வேண்டின் உண்டாகத் துறக்க`` (குறள் - 342) என்றார் திருவள்ளுவரும். இதனை, `காலை யில் எழுக` என்பதனை, `காலம் பெற எழுக` எனக்கூறும் வழக்குப் பற்றியும் அறிக. மூல பண்டாரம் - சேம நிதிக் கருவூலம்; இஃது ஆகு பெயராய், அதன்கண் உள்ள பொருளைக் குறித்தது. கருவூலத்தைத் திறந்து வாரி வழங்குதல் ஓரோர் சிறப்புக் காலத்திலன்றி எப்பொழுதும் அன்றாகலானும், அக்காலந்தான் விரைந்து நீங்கிப் பின்னர் வந்து கூடுதல் அரிதாகலானும், ``வந்து முந்துமின்`` என்று அருளிச் செய்தார். `இறைவனது மூல பண்டாரப் பொருள்` என்றது, அவனது திருவருட் செல்வத்தை. அதனை வழங்கும் சிறப்புக் காலம், அவன் மதுரையில் குதிரை மேல் வந்து நின்ற காலம். இஃது அவன் அவ்வாறு நின்ற பொழுதை எதிர்பெய்து கொண்டு அருளிச் செய்தது.

பண் :

பாடல் எண் : 6

ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு
ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல
வல்லன்அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல்
விரும்புமின்தாள்
பாண்டிய னார்அருள் செய்கின்ற முத்திப்
பரிசிதுவே. 

பொழிப்புரை :

நெருங்கிய, கெடாத அறியாமையாகிய இருள் விலகவும், எல்லாப் பொருள்களும் தெளிவாக விளங்கவும் அருளிய சோதிப் பிழம்பினைப் பாண்டிய மன்னனும், சொல்லக்கூடிய திறமையுடையவன் அல்லன். ஆயினும் விருப்பம் கொண்டபொழுது, அவனை அடையத் தடையில்லை. ஆகையால் அவன் திருவடியைப் பெறுதலை விரும்புங்கள். சோமசுந்தரப் பாண்டியனாராகிய இறைவர் அருள் செய்கின்ற முத்தியின் தன்மை இதுவேயாகும்.

குறிப்புரை :

ஈண்டிய - நெருங்கியுள்ள, மாயா இருள் - மாயையின் காரியங்களாகிய பொருளால் உண்டாகும் மயக்கம். தூண்டிய - மெய்யுணர்வை எழுப்பிய. சோதியை - ஒளியாகிய இறைவனை. மயக்கத்தை, ``இருள்`` என்றமைக்கேற்ப, இறைவனை, ``சோதி`` என்றார். மீனவன் - பாண்டியன். அவன், இறைவன் குதிரைமேல் நேரே வந்து நிற்கக்கண்ட பேறுடையனாகலின், ``பாண்டியனும்`` எனச் சிறப்பும்மை கொடுத்தோதினார். சொல்ல வல்லனல்லன் - இவன் இறைவன்தான் என்று அறிந்து போற்ற வல்லனல்லனாய் இருந்தான். இதன்பின், `ஆதலின்` என்பது வருவிக்க. வேண்டிய போதே வாய்தல் விலக்கிலை - அவன் அருள்செய்ய விரும்பும் பொழுதே அது நமக்குக் கைகூடுதற்குத் தடை இல்லை. தாள் விரும்பு மின் - அவனது திருவடியை விரும்பியிருங்கள். ``அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே`` என்றாராயினும், `முத்தி அருள் செய்கின்ற பரிசு இதுவே` என்பது கருத்தென்க. ``இது`` என்றது, பாண்டியனுக்கு வந்து அருள்செய்ததுபோல, உரிய காலத்தில் தானே வந்து அருள் செய்தலை. இதனால், `என்றேனும் நமக்கு அருள் செய்தலை இறைவன் தனக்குக் கடனாகக் கொண்டிருத்தலின், என்றும் அவனது திருவடியை விரும்பியிருத்தலே நமக்குக் கடன்` என்பது உணர்த்திய வாறு.

பண் :

பாடல் எண் : 7

மாயவ னப்பரி மேல்கொண்டு மற்றவர்
கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள்
புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு
ளேஅருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி
சேர்மின்களே.

பொழிப்புரை :

தான் மாயமாகிய அழகிய குதிரையின் மேல் வர அதனை அறியாது, பிறர் எல்லாரும் அதனை உண்மை என்றே ஏற்றுக் கொண்டவுடன், இப்பிறவியாகிய பகைகள் அற்று ஒழிகின்றன. ஆகவே தன்னைச் சரணாக அடைந்தவருக்குப் பொருந்திய, அருமையான, பெரிய சிறப்பையுடைய தனது திருவருளையே அவன் கொடுத்தருளுவான் என்பது தெளிவாகியது. ஆதலின், செம்மையாகிய பெரிய கொடையையுடைய, தென்னாடுடைய அச்சிவபிரான் திருவடிகளையே புகலிடமாக அடையுங்கள்.

குறிப்புரை :

மாய வனப்பரி - மாயமான காட்டுக் குதிரை; என்றது, `நரியாகிய குதிரை` என்றபடி. இறைவன் ஏறி வந்தது வேறு குதிரை யாயினும், கொடுக்கக் கொணர்ந்தவை அன்னவாதல் பற்றி, அதனை யும் இதுவாகக் கூறினார். மற்றவர் கைக்கொளலும் - பிறர் அக் குதிரையைப் பெற்றுக்கொண்டவுடன். `அவருக்கு இப்பிறப்பென்னும் பகைகள் போயறும்` என்க. ``இப்பிறப்பு`` என்றது `இது போலும் பிறப்புக்கள்`, என்றவாறு; `போயறும்` என்றதன்பின், `எனின்` என்பது வருவித்து, `தென்னவன் சேவடி சேர்மின்கள்` என முடிக்க. புகுந்தவருக்கு - தன்னிடத்து அடைக்கலம் புகுந்தவர்க்கு. `இவ்வாறு தன் அருளையே அருளும் கொடைத் தென்னவன்` என்க. ஆய - பொருந்திய. சேய நெடுங்கொடை - அகன்ற பெரிய கொடை. ``தென்னவன்`` என்றது இறைவனை. இதனுள், ``மற்றவர்`` எனப் பாண்டியனையும், ``புகுந்தவருக்கு`` எனத் தம்மையும் பிறர்போலக் கூறினார். பாண்டியன் குதிரையைப் பெற்றுக்கொண்ட பின்னரும் சில நிகழ்ந்தன எனினும், அவை விரைய நிகழ்ந்தமை பற்றி, ``கைக்கொள லும் பிறப்பென்னும் பகைகள் போயறும்`` என்று அருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 8

அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத்
திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய
வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப்
பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று
முந்துமினே.

பொழிப்புரை :

அழிவு இல்லாமல் நிலை பெற்றிருத்தலாகிய, ஓர் ஒப்பற்ற, பேரின்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்து நீங்காத அருளைப் புரிந்து, கொடுமையான இருவினைகளைப் போக்கிப் பழமையாகிய ஆணவ மலத்தை முழுதும் நீக்கி, ஆட்கொண்ட பாண்டி நாட்டுப் பெருமான் பாண்டி நாட்டு ஆட்சியாகிய பெரிய பதவியை மட்டுமோ, உலகம் முழுமையும் தந்தருளுவான். ஆதலின் அவனது பரிசிலைப் பெறுவதற்கே சென்று முந்துங்கள்.

குறிப்புரை :

அழுத்தி - அழுத்துமாற்றால். கழிவில் கருணை - என்றும் நீங்காத அருள். பாண்டிப் பெரும்பதம் - பாண்டி நாட்டு ஆட்சி யாகிய பெரிய நிலை. ``பதமே`` என்ற ஏகாரம், `அஃதொன்றோ` என்னும் எண்ணிடைச்சொல். முழுதுலகும் - எல்லா உலகங்களின் ஆட்சியையும். `அவன் கொடையே சென்று முந்துமின்` என்க. ``கொடையே`` என்றதில், `எதிர்` என்னும் பொருட்டாய கண்ணுருபு விரிக்க. இது, பாண்டியனுக்கு அருள் புரிந்தவாற்றை உட்கொண்டு அருளிச் செய்தது.

பண் :

பாடல் எண் : 9

விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந்
நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக் கும்பரம்
பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட
பூங்கொடியார்
மரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாம்அறி
யார்மறந்தே.

பொழிப்புரை :

கொடிய வினைகள் கலந்ததால் விளையும் இனி வரும் பிறவியாகிய, கடலைக் கடப்பதற்காக, வழிபட்ட அடியார் களை, எலும்பையும் உருகச் செய்கின்ற மேலான பாண்டிப் பிரானாராகிய இறைவர் குதிரையின் மேல் எழுந்தருளி வர அதனைக் கண்டு அக்காட்சியால், மனம் கவரப்பட்ட, பூங்கொடி போன்ற பெண்டிர் மரத்தின் தன்மையை அடைந்து எல்லாவற்றையும் மறந்து, தம்மையும் தாம் அறியாராயினார்.

குறிப்புரை :

விரவிய - பொருந்திய. `வினையும் பிறப்புமாகிய முந்நீர்` என்க. முந்நீர் - கடல். ``வினைக் கடல் கொளினும் அஞ்சேன்`` (தி.8 அச்சப்பத்து பா.2), என அடிகள் வினையையும் கடலாக உருவகித்தமை காண்க. கடக்க - கடத்தற்பொருட்டு. பரவிய - துதித்த. பரம் - மேலான பொருளாகிய. புரவி - குதிரை. புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் - அவ்வருகையால் உள்ளம் கொள்ளை கொளப்பட்ட பூங்கொடிபோலும் மகளிர். மரஇயல், நிலைபெயராது நிற்கும் தன்மை. `நாண் முதலிய பலவற்றையும் மறந்து தம்மையும் தாம் அறியார்` என்க. குதிரை மேல் வந்த இறைவனது திருமேனியழகினை இவ்வாறு புலப்படுத்தருளினார். முன்னர் வந்தன பலவற்றாலும், இதனாலும் இறைவன் குதிரைமேல் வந்து அளித்தருளிய காட்சி, எத்திறத்தோர் நெஞ்சையும் உருகச் செய்வதாய் இருந்ததென்பது இனிது பெறப் படுகின்றது.

பண் :

பாடல் எண் : 10

கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென்
றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும்ஓர்
மீனவன்பால்
ஏற்றுவந் தாருயிர் உண்ட திறல்ஒற்றைச்
சேவகனே
தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச்
சேர்மின்களே.

பொழிப்புரை :

இயமனை வென்று அவ்வாறே ஐம்புலன்களாகிய அரசரையும் அடக்கிக் கொண்டு, பெரிய சத்தியும் தானுமாக, அழகாய் எழுந்தருளியிருந்தானாகிய இறைவன், ஒப்பற்ற பாண்டிய மன்னனுக்காக, எதிர்த்து வந்தவர்களது உயிரை வாங்கின வலிமையுள்ள ஓர் வீரனாயினான். ஆகையால் தெளிவில்லாதவர்கள் அவனது சிவந்த திருவடியை உறுதியாகச் சென்று பற்றிக் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`ஒற்றைச் சேவகனே, கூற்றைவென்று, ஐவர் கோக்களையும் வென்று, தானும் தேவியுமாய் வீற்றிருந்தான்; அவன் சேவடி சேர்மின்கள்` என்க. கோக்கள் - அரசர். `ஐவர் அரசர்` என்றது, ஐம்பொறிகளை. ``இருந்து`` என்றது, அசை நிலை. ஏற்று - குதிரை வாணிகனாய் வருதலை மேற்கொண்டு. ஆருயிர் உண்ட - அவனது அரிய உயிரை உண்ட; என்றது, `சீவபோதத்தை நீக்கிய` என்றபடி. திறல் - ஆற்றலையுடைய. ஒற்றைச் சேவகன் - தான் ஒருவனேயாகிய வீரன். `ஒருவனே பலரை வென்றது வியப்பன்றோ` என்றபடி. அப் பலருள் பாண்டியனையும் ஒருவனாக்குதற்பொருட்டு, ``ஆருயிர் உண்ட`` என்றார். தேற்றம் இலாதவர் - தெளிவில்லாதவர்களே, `தெளி வில்லாதவராகிய நீவிர் இந்நிகழ்ச்சிகளால் தெளிந்து சேர்மின்கள்` என்றபடி. சிக்கென - உறுதியாக.
சிற்பி