திருவாசகம்-பிடித்த பத்து


பண் :

பாடல் எண் : 1

உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் றனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

தேவர்களுக்கு அரசனே! எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்திருப்பவனே! அழுக்கு உடம்பை உடையேனாகிய எனக்குப் புதிய பொருள்போலத் தோன்றி என் குடி முழுவதும் ஆண்டருளி, உலக வாழ்வு நீங்க சிவப்பேறு உண்டாகும்படி வாழ்வித்த அமுதமே! துணியப்பட்ட செம்பொருளே! சிறப்பை யுடைய திருவடியையுடையவனே! அருட் செல்வமாயிருப்பவனே! சிவபிரானே! எங்கள் பொருட்டாக உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது?

குறிப்புரை :

ஒழிவற - யாதொருபொருளும் எஞ்சாதவாறு எல்லாப் பொருளிலும். யோகம் - கலப்பு. கலப்புடைய பொருளை, `கலப்பு` என்றார். ஊற்றையேன் - அழுக்கினை உடையேன். `அழுக்கு` என்றது அழுக்குடைய உடம்பை. ஊத்தை, ஊற்றை எனத் திரிந்து வந்தது. `ஊத்தையேன்` என்றே ஓதினுமாம். வம்பு எனப் பழுத்து - புதிய பொருள் போல மிக்குத் தோன்றி. மிக்குத் தோன்றல் - வெளிநிற்றல். என்றும் உள் நின்று உணர்த்திவந்த பொருளேயாதலின், ``வம்பென`` என்றும், தம்மை ஆண்டமையால் தம் குடி முழுதும் உய்ந்தமையின், ``என் குடிமுழுதாண்டு`` என்றும் கூறினார். வாழ்வு அற - வினை வாழ்க்கை நீங்க. வாழ்வித்த - அருள் வாழ்வு வாழச் செய்த. மருந்து - அமுதம். செம்பொருள் துணிவு - மெய்ப்பொருளாகிய துணிபொருள். `துணிவு` என்னும் தொழிற்பெயர். துணியப்படும் பொருளுக்கு ஆகி வந்தது. `மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்வார் பலரானும் ஒருபடித் தாக மெய்ப்பொருள் என்று துணியப்படுபவனே` என்பது பொருள். கழல் - திருவடி. திருவடியையுடையவனை. `திருவடி` என்றது பான்மை வழக்கு. ``தில்லை மூதூர் ஆடிய திருவடி`` எனவும் (தி.8 கீர்த்தித். 1) ``ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி`` (தி.8 கீர்த்தித். 37) எனவும் முன்னரும் கூறப்பட்டன. இனி, ``சீருடைக் கடலே`` என்பதே பாடம் என்பாரும் உளர். செல்வமே - அடியார்க்குச் செல்வமானவனே, தம் குடி முழுது ஆண்டமையின், அவர் அனைவரையும் உளப்படுத்து, ``எம் பொருட்டு`` என்றார். எம் பொருட்டு - எமக்குத் தீங்கு உண்டாகாமைப் பொருட்டு. தீங்கு, வினையும், அது காரணமாக வரும் பிறப்பும். சிக்கென - உறுதியாக. `இனி எங்கு எழுந்தருளுவது` என்க. எழுந்தருளுவது - செல்வது. `என்னைவிட்டு இனி நீ எவ்வாறு நீங்க முடியும்? முடியாது` என்பது கருத்து. இங்ஙனம் தமது உறுதிப் பாட்டினைப் புலப்படுத்தியவாறு.
``அழலார் வண்ணத் தம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``.
(தி. 4 .ப. 15. பா.7)
``மேலை வானோர் பெருமானை
விருப்பால் விழுங்கி யிட்டேனே``
(தி. 4 .ப. 15. பா.8)
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்அடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.
(தி.11 அற்புதத் திருவந்தாதி - 96) எனப் பிறவிடங்களிலும் இவ்வாறே ஓதியருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 2

விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

இடபத்தை விடாமல் விரும்பின தேவர் பெரு மானே! வினையை உடையேனாகிய என் உண்மையான பொருளே! அடியேன் புலால் நாற்றம் நீங்காது முழுவதும் புழு நிறைந்த கூட்டினிற் கிடந்து, மிகவும் மூப்பு எய்திப் பாழாய்க் கீழ்மையடையா வகை தடுத்து என்னை ஆண்டருளின கருணையாகிய பெருங்கடலே! இடை யறாமல் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந் தருளிச் செல்வது?.

குறிப்புரை :

விடை விடாது - எருதை நீக்காமல். உகந்த - விரும்பிய. ஊர்தி வேண்டுவார் எருதை விரும்பாமை குறித்தவாறு. ``முடை`` என்றது, `முடை நாற்றம் உடைய உடம்பை. ``மண்ணாய்`` என்றது, `இறந்து` என்றபடி. பின் வருவன அடுத்த பிறப்பைக் குறிப்பன. `கடைப்படா` என்பது, தொகுத்தல் பெற்றது.

பண் :

பாடல் எண் : 3

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து காலத்தை வீணாகக் கழிக்கின்ற புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, மிக மேன்மையான சிவபதத்தைக் கொடுத்தருளின அருட்செல்வமே! சிவபிரானே! இவ்வுலகிலேயே உன்னை உறுதி யாகப் பற்றினேன், நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

அம்மையும் அப்பனுமாதல் எவ்வுயிர்க்கும் என்க. ``ஆரமுது`` என்றது, இன்பத்தை. சிவபிரானிடத்தில் வைக்கும் அன்பின் விளைவே சிவானந்தமாதல் அறிந்துகொள்க. பொய்ம்மை - உலக வாழ்க்கை. சுருக்கும் - வீணாக்குகின்ற. புழுத்தலைப் புலையன் - புழுவையுடைய தலையையுடைய கீழ்மகன்; `உடலைத்தானும் தூய்மைசெய்து கொள்ளமாட்டாத கீழ்மகன்` என்றபடி. `புழுத்து அலை` எனப் பிரிப்பின் பகரம் மிகலாகாமையும், பொருள்படாமை யும் அறிக. செம்மை - மெய்ம்மை; திரிபின்மை. செம்மையுடைய தனை, ``செம்மை`` என்றார். சிவபதம் - இன்பநிலை. `செம்பொருளை ஆய்ந்துணர்தற்கு, `சிவ` என்னும் மந்திரத்தை உபதேசித்தருளிய செல்வமே` எனவும் உரைப்பர்.

பண் :

பாடல் எண் : 4

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

அளியையுடைய சுடரே! பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! பேராற்றலையுடைய அருமையான தவத்தினையுடை யோர்க்கு, அரசனே! மெய்ப் பொருளை விளக்கும் நூலானவனே! நூல்கள் புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே! யோகக் காட்சியில் விளங்குகின்றவனே! தெளிவாகிய இடத்தையுடைய அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே! சிவபிரானே! இருள் நிறைந்த இவ் வுலகத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது.

குறிப்புரை :

இரக்கம் இல்லாத சுடரின் வேறுபடுத்தற்கு, `அருளுடைச் சுடரே` என்றார். ``சுடர்`` என்றது, அறிவு பற்றி. ``கனி`` என்றது, இன்பம் பற்றி. பொருளுடைக் கலை - மெய்ந்நூல்; `அவற்றின் பொருளாய் இருப்பவனே` என்றபடி. புகழ்ச்சி - `இவ்வாறு இருந்தது` என எடுத்துரைத்தல். யோகம் - ஒன்றிநிற்றல். பொலிவு - அவ்வாறு நிற்குமிடத்தில் விளங்குதல். தெருள் - தெளிவு. இருள் இடம் - அறியாமையை உடைய இவ்வுலகம்.

பண் :

பாடல் எண் : 5

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

உனக்கு ஒருவரும் நிகரில்லாத ஒருத்தனே! அடி யேனது மனத்தில் விளங்குகின்ற ஒளியே! உண்மையான நிலையை அறியாத பெருமையில்லா எனக்கு மேன்மையான பதத்தைக் கொடுத் ததாகிய ஒப்பற்ற அன்பானவனே! சொல்வதற்கு அருமையான வளமையான சுடர் வடிவினனே! அருட் செல்வமே! சிவபிரானே! இளைத்த இடத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கு எழுந் தருளிச் செல்வது?.

குறிப்புரை :

மெய்ப்பதம் - உண்மைப் பொருள். வீறு - பெருமை. விழுமியது - சிறப்புடைய பேறு. எய்ப்பிடத்து - இளைப்பின்கண். இளைப்பு, எல்லாப் பிறப்பும், பிறந்ததனாலாயது.

பண் :

பாடல் எண் : 6

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே கோயிலாகக் கொண்டு ஆட்கொண்டு எல்லையற்ற இன்பத்தை அளித்து என்னுடைய பிறப்பின் வேரைக் களைந்து என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட தலைக்கோலம் உடையவனே! பெருமை யான எமது மெய்ப்பொருளே! திறந்த வெளியிலே காணப்பட்ட காட்சிப் பொருளே! அடியேனது அருட்செல்வமே! சிவபிரானே! இறுதியிலே, உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

அறவை - துணையிலி. திறவு - திறப்பு; அறியாமை நீங்கிய நிலை. இறவு - அழிவு; பயனின்றிக் கெடும் நிலை. `உறு` என்பதடியாக, `உறவு` என வருதல் போல, `இறு` என்பதடியாக, `இறவு` என வந்தது.

பண் :

பாடல் எண் : 7

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

பற்றுக்களின் வேரைக் களைகின்ற பழமையான பொருளே! பற்றிக் கொள்கின்ற வழியை, அடியேனாகிய எனக்கு அருள் புரிந்து, எனது வழிபாட்டினை விரும்பி, என் சித்தத்துள் புகுந்து தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய மெய்ப்பொருளே! ஒளியையுடைய விளக்கே! விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே! அருட்செல்வமே! சிவபிரானே! இறைவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

`பாசவேர் அறுக்கும் பழம்பொருள்` என்பது, முன்னிலைக்கண் படர்க்கை வந்த இடவழுவமைதி. பூசனை, ஆசிரியக் கோலத்திற்கண்டு செய்தது. `பூங்கழல்` என்றது, பான்மை வழக்கால், அருள் இன்பத்தைக் குறித்தது. செழுஞ்சுடர் மூர்த்தி - பேரொளி வடிவே.

பண் :

பாடல் எண் : 8

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

தந்தையே! தேவராயும் தேவர் உலகமாயும் நின்ற முதல்வனே! சிறிதும் முடிவு இல்லாத ஞானவடிவினனே! அடியார்கள் உறுதியாகப் பற்றின அருட் செல்வமே! சிவபிரானே! அன்பர் பால் பேரன்பு கொண்டவனே! எல்லா உயிர்களுமாய்க் கலந்து விளங்கியும் நீங்கி, அவையல்லாமல் தன்மையால் வேறாய் இருக்கின்ற மாயம் உடையவனே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

அண்டர் அண்டம் - தேவர் உலகம். ஆதி - முதல்வன். யாதும் - `இடம், காலம்` என்பவற்றுள் ஒன்றானும், சித்தன் - வியத்தகு நிலையினன். `அவை அல்லையாய்ப் பிழைத்து நிற்கும் எத்தனே` எனக் கூட்டுக. பிழைத்து நிற்றல் - அவற்றின் நீங்கி நிற்றல். எத்தன் - சூழ்ச்சியுடையவன்.

பண் :

பாடல் எண் : 9

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

பொழிப்புரை :

பாலை, காலமறிந்து கொடுக்கின்ற தாயைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு புறங்களிலும் உடன் திரிந்த அருட்செல்வமே! சிவபிரானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதி யாகப் பற்றியுள்ளேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

நினைந்து ஊட்டுதல் - பச்சிளங் குழவிக்குக் கால மறிந்து தானே ஊட்டுதல். தாய் தனது முக்குண வேறுபாட்டால் ஒரோ வழித் தன் குழவியைப் புறக்கணித்தலும் உடையவளாதலின், அக் குணங்கள் இல்லாது அருள் வடிவினனாகிய இறைவன், தாயினும் மிகப் பரிவுடையனாதல் அறிக. ஊன் - உடம்பு; உள்ளமேயன்றி உடலும் அன்பினால் உருகப் பண்ணினமையின், ``ஊனினை உருக்கி`` என்று அருளிச் செய்தார். உள்ளொளி - ஒளியினுள் ஒளி. ஒளி - உயிரி னது அறிவு. அதனுள் ஒளியாய் நிற்பது சிவம். அதனைப் பெருக்கு தலாவது, இனிது விளங்கச் செய்தல்; `இவ்வாறு அருளிச் செய்யினும் உள்ளொளியாகிய உன்னை இனிது உணரச் செய்து` என்பதே கருத்து. உலப்பு - அழிவு. ``அழிவிலா ஆனந்த வாரி`` (தி.8 போற்றித் - 132) என முன்னரும் அருளிச் செய்தார். உலப்பிலா ஆனந்தத்தைத் தேனாக உருவகித்தது, அறிந்திலாத அதனியல்பை ஒருவாற்றான் அறிந்து கொள்ளுதற்பொருட்டு. தொடர்ந்து - முயன்று. முயற்சி, சிந்தித்தலும் தெளிதலும்.

பண் :

பாடல் எண் : 10

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. 

பொழிப்புரை :

அற்பமாகிய புலால் உடம்பு, மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியையுடைய அது, பொன்னாலாகிய பெரிய கோயிலாகும் படி, அதனுள் எழுந்தருளியிருந்து, என்னுடைய எலும்புகளை யெல்லாம் உருகும்படி செய்து, எளியவனாகி ஆட்கொண்டருளிய ஆண்டவனே! குற்றமற்ற மாணிக்கமே! துன்பமும் பிறப்பும் இறப்பினோடு மயக்கமும் ஆகிய பற்றுக்களெல்லாம் அறுத்தருளின மேலான சோதியே! ஆனந்தமே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?.

குறிப்புரை :

``புரைபுரை கனிய`` (தி.8 கோயில் திருப்பதிகம். பா-3) என்றதை முன்னருங் காண்க. யாக்கையையே, ``கோயில்`` என்றார் என்க. ``காயமே கோயிலாக`` (தி. 4 ப.76 பா.4) என்று அருளினார் நாவுக்கரசரும், ``மயக்கு`` என்றதிலும், எண்ணேகாரம் விரிக்க. ``ஆம்`` என்றது எண்ணின் தொகைப் பொருட்டாய் நின்றது. தொடக்கு - கட்டு. நற்சோதி - ஞான ஒளி.
சிற்பி