திருவாசகம்-திருவேசறவு


பண் :

பாடல் எண் : 1

இரும்புதரு மனத்தேனை
ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக்
காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை
உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா
றன்றேஉன் பேரருளே.

பொழிப்புரை :

அடங்கிய அலைகளையுடைய கங்கையின் நீர் ததும்புகின்ற சடையை உடையவனே! இரும்பு போன்ற வலிமையான நெஞ்சையுடையவனாகிய என்னைப் பலகாலும் உன் வசமாக இழுத்து என் எலும்பினை உருகும்படி செய்து உன் இரண்டு திருவடிகளில் கரும்பு தருகின்ற இனிமை போன்ற இனிமையை எனக்கு உண்டாக்கி யருளினாய். இத்தகைய உன்னுடைய பெருங்கருணை நரிகள் எல்லா வற்றையும் பெரிய குதிரைகளாக ஆக்கியது போன்றது அன்றோ?

குறிப்புரை :

தரும், உவம உருபு - `இணைக் கழல்கள்` என மாற்றிக்கொள்க. இரண்டாம் அடியில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. ஒருங்கு திரை - அடங்கியுள்ள அலை. உலவு - பொருந்திய. `இப்பேரருள்` எனச் சுட்டு வருவித்து, `உனது இப்பேரருள், நரிகளை எல்லாம் குதிரைகளாக்கிய அதனோடு ஒத்ததேயன்றோ` என உரைக்க. இறுதிக்கண், `அப்பேரருளின் பெருமையை முன்பு உணராது இப்பொழுது உணர்கின்றேன்` எனக் குறிப்பெச்சம் வருவித்து, ஏசறவாக முடிக்க. இஃது இதனுள் ஏற்குமிடங்கட்கும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 2

பண்ணார்ந்த மொழிமங்கை
பங்காநின் ஆளானார்க்
குண்ணார்ந்த ஆரமுதே
உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்
டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா
றன்றேஉன் கழல்கண்டே. 

பொழிப்புரை :

இசை நிரம்பிய சொல்லையுடைய உமையம்மை யின் பாகனே! உனக்கு அடிமையானார்க்கு, உண்ணுதல் பொருந்திய அருமையான அமுதமே! உடையவனே! அடியேனை, மண்ணுலகில் பொருந்திய பிறப்புகளை அறுத்து, ஆட்கொள்ளும் பொருட்டு, நீ வருக என்று அழைத்ததனால் அன்றோ உன் திருவடிகளைக் கண் நிரம்பக் கண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.

குறிப்புரை :

உண் ஆர்ந்த - உண்ணுதல் பொருந்திய. மண் ஆர்ந்த பிறப்பு - இப்பிறப்பு. ``மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய்`` என்றதை இறுதிக்கண் கூட்டுக. வா என்ன - வா என்று அழைத்தமை யால். `நான் உய்ந்தவாறு, நீ வா என்று அழைத்தலால் உன் கழல்கள் கண்ணாரக் கண்டன்றே` என்க. முன்னைத் திருப்பாட்டில் குறிப்பெச்ச மாக உரைத்ததனை இங்கு இறுதியடியின்பின் இசையெச்சமாக வைத்துரைக்க.

பண் :

பாடல் எண் : 3

ஆதமிலி யான்பிறப்
பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே
அழுந்துவேற்கு ஆஆவென்று
ஓதமலி நஞ்சுண்ட
உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா
றன்றேஎம் பரம்பரனே. 

பொழிப்புரை :

கடலிற் பெருகிய விடத்தை உண்ட கழுத்தை உடையவனே! எம் மேலோனே! அன்பில்லாதவனாகிச் சுற்றத்தார் ஒருவரும் இல்லாமலே, பிறப்பு இறப்பு என்கிற, தப்புதற்கு அருமை யான நரகத்தில் மூழ்குகின்றவனான என்பொருட்டு, ஐயோ என்று இரங்கி அடியேனாகிய எனக்கு உன் திருவடித் தாமரை மலரைக் காட்டிய வகையன்றோ உனது திருவருள்.

குறிப்புரை :

`யான் ஆதமிலி` எனத் தனித்தொடராக்குக. ஆதம் - ஆதரவு. நரகம்போலும் துன்பம் உடைமைபற்றிப் பிறப்பிறப்புக்களை நரகமாக உருவகம் செய்தார். `தமர் ஆரும் இன்றி` என மாற்றுக. ``அடியேற்கு`` என மறித்தும் கூறியது, தம் சிறுமையை வலியுறுத்தற்கு. `பாதமலர் காட்டியவாறு உன் அருளேயன்றோ` என, சில சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 4

பச்சைத்தால் அரவாட்டீ
படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே
அடியேனை உய்யக்கொண்
டெச்சத்தார் சிறுதெய்வம்
ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா
றன்றே உன் திறம்நினைந்தே. 

பொழிப்புரை :

பசுமையான நாக்கினையுடைய பாம்பை ஆட்டு பவனே! விரிந்த சடையையுடையவனே! திருவடியைத் தம்முடைய உச்சியிலே கொண்டிருப்பவருடைய பெருமானே! அடியேனாகிய என்னை, உய்யக் கொண்டதனாலன்றோ, ஐயோ, குறைபாடுகள் நிறைந்த சிறிய தெய்வங்களை வழிபடாமல், உன்னுடைய அருள் திறத்தினையே எண்ணி, என் எண்ணத்தின்படியே யான் கடைத்தேறிய நிலை உண்டாயிற்று?

குறிப்புரை :

பச்சைத் தால் அரவு - பசிய நாவையுடைய பாம்பு. தால், `தாலு` என்னும் ஆரியச் சொற்சிதைவு. `பச்சைத்தாள் அரவு என்பது பாடம் ஆகாமையில்லை` எனக்கொண்டு, `தாள்` என்பதற்கு, `புற்று` என உரைத்துப்போவாரும் உளர். `பாதமலரை உச்சியில் உடையவர்` என்க. எச்சத்தார் - வேள்வியை உடையவர்கள்; இவர்கள் தேவர் பலரையும் வழிபடுவர். அச்சோ, வியப்பிடைச்சொல். சித்தத் தாறு - விருப்பப்படியே. `உய்ந்தவாறு உன் திறம் நினைந்தே யன்றோ` எனக் கூட்டுக. உய்ந்தவாறு - இறவாமல் பிழைத்திருக்கும் வகை. திறம் - முன்னே வந்து ஆண்ட திருவருள். இதன்கண் இறந்துபடாமையால் வந்த நாணம் புலப்படும்.

பண் :

பாடல் எண் : 5

கற்றறியேன் கலைஞானம்
கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம்
வாக்கியலால் வார்கழல்வந்
துற்றிறுமாந் திருந்தேன்எம்
பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா
றன்றேநின் பொன்னருளே. 

பொழிப்புரை :

எம்பிரானே! ஞான நூல்களைப் படித்து அறியேன்; மனம் கசிந்து உருகவும் மாட்டேன்; ஆயினும் வாக்கின் தன்மையால் வேறு தெய்வங்களைத் துதித்து அறியேன்; அதனால் உன்னுடைய நீண்ட திருவடிகளை வந்து அடைந்து இறுமாப்பு கொண்டு இருந்தேன். அடியேனாகிய எனக்கு உன் பொன் போன்ற திருவருளைப் புரிந்த செயல் நாயினுக்குப் பொன்னாலாகிய ஆசனத்தை இட்டது போலன்றோ?

குறிப்புரை :

மற்று, அசைநிலை. `பிறதெய்வம் அறியேன்` என மாற்றி, அதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. வாக்கியலால் - உனது உபதேசத்தால். `அன்று இறுமாந்திருந்தேன்; இன்று இஃது இல்லை` என்றபடி. இறுமாப்பு. அரசனையும் மதியாமை. இங்கும், `அப் பொன்னருள்` எனச் சுட்டு வருவிக்க.

பண் :

பாடல் எண் : 6

பஞ்சாய அடிமடவார்
கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர
நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன்எம் பெருமானே
உடையானே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா
றன்றேஅம் பலத்தமுதே. 

பொழிப்புரை :

எம்பிரானே! உடையவனே! அம்பலத்திலாடுகின்ற அமுதமே! அடியேனை உனது திருவருளால் அஞ்சாதே என்று ஆட்கொண்ட முறைமையாலன்றோ, செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப் பெற்ற பாதத்தையுடைய பெண்டிரது, கடைக்கண் பார்வையால் துன்பப்பட்டு நஞ்சு போன்ற துன்பம் மிக, நடுங்குகின்றவனாகிய நான் பிழைத்தேன்.

குறிப்புரை :

`அவ்வருளாவது, அஞ்சேல் என்று ஆண்டவாறன்றே` என்க.

பண் :

பாடல் எண் : 7

என்பாலைப் பிறப்பறுத்திங்
கிமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந்
துறையுறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே
புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா
றன்றேஎம் பெருமானே. 

பொழிப்புரை :

எம்பிரானே! தேவர்களுக்கும் அறிய முடியாத, தென்திசையிலுள்ள திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவ பிரானாகிய நீ இவ்விடத்தில், என்னிடத்திலுள்ள பிறப்பை அறுத்து அன்பினால் என் மனம் நெகிழும் படியாகவே எழுந்தருளி ஆண்டு கொண்டது, என்னிடத்திலே திருவருள் நோக்கம் செய்ததனால் அன்றோ?

குறிப்புரை :

ஐகாரம் இரண்டும் சாரியை. சிவபெருமான், விளி. நோக்கியவாறு - கடைக்கண்ணால் பார்த்தபடி.
``அன்றே`` என்றதை, ``ஆட்கொண்டது`` என்றதன்பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 8

மூத்தானே மூவாத
முதலானே முடிவில்லா
ஓத்தானே பொருளானே
உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப்
புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா
றன்றேஎம் பெருமானே. 

பொழிப்புரை :

எம்பிரானே! எப்பொருட்கும் மூத்தவனே! மூப் படையாத முதல்வனே! எல்லையற்ற வேதமானவனே! அவ் வேதத்தின் பொருளுமானவனே! மெய்யர்க்கு மெய்யனாய் அல்லாத வர்க்கு அல்லாதவனாய்த் தோன்றினவனே! இவ்வுலகத்தில் உழல் கின்ற என்னை, நீ புகுந்தருளி, உழல்கின்ற நிலையை நீக்கி, ஆண்டருளியது உன்னுடைய கருணையினால் அன்றோ?

குறிப்புரை :

மூத்தான் - உயர்ந்தவன். மூவாத - மூப்படையாத. ஓத்து - வேதம். பொருள் - அதன் பொருள். உண்மை - உள்ள பொருளாய் அனுபவமாதல். இன்மை - இல்பொருள் போலக் கரந்து நிற்றல். பூத்தான் - விளங்குபவன். புரள்வேன் - கெடுவேன். பேர்த்து- உலகியலினின்று நீக்கி. `நீ ஆண்டவாறு கருணையினாலன்றே` என்க.

பண் :

பாடல் எண் : 9

மருவினிய மலர்ப்பாதம்
மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச்
சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத்
தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே
இடங்கொண்ட அம்மானே. 

பொழிப்புரை :

திருவிடைமருதூரையே, ஊராகக் கொண்ட எம் தந்தையே! கூடுவதற்கு இனிமையான, தாமரை மலர் போன்ற திருவடி உள்ளத்தில் மலர்ந்து உள்ளம் உருக, தெருத்தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமானே என்று துதித்து நுகர்ந்த மேலான கருணை யாகிய பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம், அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக.

குறிப்புரை :

`மருவ இனிய பாதம்` என்க. வளர்ந்து - வளர்தலால். வளர்தல் - விளங்குதல். உள் உருக - உள்ளம் உருக. படிவு ஆமாறு - மூழ்குதல் உண்டாகும்படி. `படியுமாறு அருள்` என்றதும், ``படியுமாறு அறியாதவனாயினேன்`` என ஏசற்றதாம் என்க.

பண் :

பாடல் எண் : 10

நானேயோ தவஞ்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே. 

பொழிப்புரை :

தேன்போன்றும், இனிமையான அமுதத்தைப் போன்றும் இனிக்கின்ற சிவபிரானானவன் தானே எழுந்தருளி வந்து, என் மனத்துள் புகுந்து உடம்போடு கூடிய உயிர் வாழ்க்கையை வெறுத்து நீக்கும்படி அடியேனாகிய எனக்கு அருள் புரிந்தான். அதனால் சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப் பெற்றேன். இப் பேற்றைப் பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?.

குறிப்புரை :

முதல் அடியை இறுதியிற் கூட்டுக. `உயிர் வாழ்க்கையை ஒறுத்து அன்றே வெறுத்திட அருள் செய்தான்; அதனால், சிவாயநம எனப் பெற்றேன்; அதற்கு அன்னதொரு தவத்தை நான் செய்தேனோ` என்க. ஒறுத்தல் - வருத்துதல்.
சிற்பி