திருவாசகம்-குலாப் பத்து


பண் :

பாடல் எண் : 1

ஓடுங் கவந்தியுமே
உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ்
சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிருங்
குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

அடியேன் திருவோட்டையும் கோவணத்தையுமே, பற்றெனத் துணிந்து, மனம் கனிந்து, தேடுதற்குரிய பொருளும் சிவ பெருமானது திருவடியே என்று தேறி, உடம்பும், உயிரும், நிறைந்து தெவிட்ட வளைந்து ஆடி நடனம் செய்யும் செயல் விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனைப் பற்றிக் கொண்டே அல்லவா?

குறிப்புரை :

ஓடு - பிச்சைப் பாத்திரம். கவந்தி - கோவணம்; வட்டுடையுமாம். உறவு - பற்று; என்றது, ஒருபொருளிலும் பற்றில்லாமையைக் குறித்தது, தேடும்பொருள் - முயன்று பெறும் பொருள். ``கழலே`` என்னும் ஏகாரம், `பிறிதியாதும் அன்று` என்பதை விளக்கி நின்றது. கூடு - உடம்பு. குமண்டை - களியாட்டம். குனித்து - கூத்தாடி. குலாத் தில்லை - விளக்கத்தை உடைய தில்லை. கொண்டு - கொண்டேன்; பெற்றுவிட்டேன். இஃது இறந்தகாலத் தன்மையொருமை வினைமுற்று. `இஃது என் தவம் இருந்தவாறு` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. அன்றே, அசைநிலை.

பண் :

பாடல் எண் : 2

துடியேர் இடுகிடைத்
தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள்
எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன்
எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

என்னைத் தன் திருவடியின் கண் கூடும்படி செய்த விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா? ஆதலின், உடுக்கையை ஒத்த அழகிய சிறிய இடையையும், இனிய சொல்லையும் உடைய மாதரது தோள்களின் மேலுள்ள விருப்பத்தால் பாவம் மிகுவதற்குக் காரணமான தீய செயல்கள் எவ்வளவு செய்தாலும் நான் இனி இறக்க மாட்டேன். அதனால், பிறக்கவும் மாட்டேன்.

குறிப்புரை :

துடியேர் இடுகிடை - உடுக்கைபோலும் சுருங்கிய இடை. செடி ஏறு - குற்றம் மிகுதற்குக் காரணமான. `முடியேனாயும், பிறவேனாயும் தில்லை ஆண்டானைக் கொண்டேன்` என்க. முடிதல் இறத்தல். ``அடியேன்`` என்றதை முதலிற் கொள்க.

பண் :

பாடல் எண் : 3

என்புள் ளுருக்கி
இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து
துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை
முழுதழிய உள்புகுந்த
அன்பன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

எலும்பையும் உள்ளே உருகச் செய்து இருவினை களாகிய சஞ்சிதம், பிராரத்தத்தின் வலியினை ஒழித்து அவற்றால் உண்டாகின்ற துன்பத்தைப் போக்கி, தொடர்புகளையும் அறுத்துப் பரிசுத்தமாக்கி முன்னேயுள்ள சஞ்சித வினை முற்றிலும் தொலையும் வண்ணம், என் நெஞ்சத்தே எழுந்தருளிய அன்பினையுடைய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

ஈடு - வலிமை. துவந்துவம் - பற்று. முன்பு உள்ள - முன்பு உள்ளன; அவை மலங் காரணமாக வந்த குற்றங்கள். அற்றை - அன்றே. `அன்பின் என்பது பாடமாயின், னகரம் திரிதல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 4

குறியும் நெறியுங்
குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிறியும் மனத்தார்
பிறிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில்
உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.

பொழிப்புரை :

குறிக்கோளும் அதனையடையும் வழியும் அவ் வழியில் செல்லும் பண்பும் இல்லாதவருடைய கூட்டங்களைப் பிரிந்து வாழ்கின்ற மனத்தையுடைய மெய்யடியார்களைப் பிரியாத தன்மை யனும் அன்பு நிறைந்த உள்ளத்தில், உருக்கொண்டு அமுதம் போன்று இனிக்கும் சிவபதமாயிருப்பவனும், எல்லாவற்றையும் அறிகின்ற விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனுமாகிய இறைவனை அடி யேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

குறி - குறிக்கோள். செறியும் கருத்து - தன்னையே பற்றி நிற்கும் உள்ளம். உருத்து - உருப்பட்டுத் தோன்றி. அறியும் - எல்லா வற்றையும் அறிகின்ற. `அறியும் ஆண்டான்` என இயையும்.

பண் :

பாடல் எண் : 5

பேருங் குணமும்
பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத்
தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

இந்தப் பிறவிக் குழியைத் தூர்த்து இல்லையாய்ப் போகும் வண்ணம் குற்றங்களை நீக்கிக் கொண்டு அடியார் எல்லாம் இறைவனைக் கூடும் விதத்தால் சிவனது கருணையாகிய தேனை உண்டு நிறைவுறுகின்ற விளக்கம் மிக்க தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

பேர் - பெயர். இஃது உடம்பிற்கு இடப்படுவது. குணம், முக்குணம். இவை இரண்டும் உயிரைப் பிணித்தல் செய்வது, பிறவி யினாலாம். பேரால் வரும் பிணிப்பாவது, உடம்பையே தான் என மயங்கி நிற்றல். குறிப்புருவகமாதலின், ``பிறவி`` என்றதற்கு, `பிறவி யாகிய குழி` என உரைக்க. ``சிவன்`` என்றது, `தன்` என்றபடி. `சிவன் கருணைத் தேன் பருகிச் சேரும் வகையால்` என மாற்றியுரைக்க.

பண் :

பாடல் எண் : 6

கொம்பில் அரும்பாய்க்
குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம்
மாண்டிங்ஙன் போகாமே
நம்புமென் சிந்தை
நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.

பொழிப்புரை :

இவ்வுடம்பு மரக்கிளையில் உண்டாகின்ற அரும்பு போல உருவெடுத்தும், முன் குவிந்திருந்து பின் மலர்ந்த மலர் போலப் பிறந்தும் காய் போல வளர்ந்தும், பழம் போல முதுமை அடைந்தும், வீணே, இவ்வாறு அழிந்து போகாத வண்ணம் எனக்குத் துணையாக, நான் விரும்புகின்ற என் மனமானது இறைவனைச் சேரும்படி, நான் அடைகின்ற அழகிய பொன்னாலாகிய விளக்கம் பொருந்திய தில்லைச் சிற்றம்பலத்து ஆண்டவனை அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

வாளா, `அரும்பாய்` என்ற வழிப் பொருள் இனிது விளங்காமையின், ``கொம்பில் அரும்பாய்`` என்று அருளினார். குவிமலராய் - முன்னர்ப் போதாய்க் குவிந்து நின்ற மலராய், `வம்பாக` என ஆக்கம் வருவிக்க. வம்பு - வீண். இங்ஙன் - இவ்வாறு. நணுகும் வகை - தன்னைச் சேரும்படி. `உலகத்தார் போல யானும் வளர்ந்து மூத்து வாளா இறந்தொழியாமல், யான் சேர்ந்திருக்கின்ற தில்லை ஆண்டான்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

மதிக்குந் திறலுடைய
வல்அரக்கன் தோள்நெரிய
மிதிக்குந் திருவடி
என்தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம்
ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

யாவரும் மதித்தற்குரிய வெற்றியையுடைய, வலிமை வாய்ந்த அரக்கனாகிய இராவணனது, தோள் நெரியும்படி ஊன்றின திருவடியானது, எனது தலைமேல் பொருந்தியிருக்க, பெருகுகின்ற பசுத் தன்மையை உண்டாக்குகின்ற பாசங்களில் யாதொன்றும் இல்லேமாயினோம் என்று மகிழ்ந்து இங்கு ஆரவாரித்தற்குக் காரணமாகிய விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

அரக்கன், இராவணன். `அவன் தோள் நெரிய மிதிக்கும் திருவடி` என்றது, `பசுபாசத்தை மேலெழாதவாறு அடர்க்கும் திருவடி` எனக் குறிப்பான் உணர்த்தியவாறு. வீற்றிருப்ப - வீற்றிருத்தலால். கதிக்கும் - மேல் எழுகின்ற. `களித்துக் கொண்டு` என இயையும். அதிர்த்தல், ஆடலில் சிலம்பை ஒலிப்பித்தல்.

பண் :

பாடல் எண் : 8

இடக்குங் கருமுருட்
டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி
என்தலைமேல் நட்டமையாற்
கடக்குந் திறல்ஐவர்
கண்டகர்தம் வல்லரட்டை
அடக்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

பூமியைத் தோண்டும் இயல்புடைய கருமையான முரட்டுத் தனமுள்ள பன்றியின் பின்னே, காட்டில் நடந்த திருவடிகளை என்னுடைய தலையின் மேல் இருக்க வைத்தமையால், என்னை வெல்லும் திறமையுடைய ஐம்பொறிகளாகிய கொடியவர்களுடைய வலிமையான சேட்டைகளை அடக்குகின்ற விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

இடக்கும் - நிலத்தைக் கிண்டுகின்ற, `முருடு` என்பதை, இக்காலத்தார், `முரடு` என வழங்குப. ஏனம் - பன்றி. இறைவன் கானகத்தில் பன்றிப் பின் சென்றது, அருச்சுனன் பொருட்டு. `நட்டமையால் கொண்டு` என முடிக்க. கண்டகர் - கொடியவர். ``ஐவர் கண்டகர்`` என்றது ஐம்பொறிகளை. வல் அரட்டு - வலிய குறும்பு. ``அரட்டர் ஐவர்`` (தி.5 ப.7 பா.5) என நாவுக்கரசரும் ஓதியருளுதல் காண்க. `வல்லாட்டை` என்பது பாடமன்று.

பண் :

பாடல் எண் : 9

பாழ்ச்செய் விளாவிப்
பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற்
கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச்
சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே.

பொழிப்புரை :

விளையாத வயலை உழுது விளையச் செய்து பயன்பெறாமல் இருக்கின்ற எனக்கு, முற்பிறப்பில் செய்த தவத்தினால் புதையல் அகப்பட்டது போன்ற அருள் கிடைக்கப் பெற, திருவடி யாகிய சிவந்த தாமரை மலரையுடைய சைவனுக்கு எனது இழிவான தலையினால் அடிமை செய்து விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

செய் - வயல், விளாவி - உழுது. கீழ் - முற்பிறப்புக்கள். கிழி ஈடு - பொன் முடிப்பு வழியில் இடப்பட்டுக் கிடத்தல். நேர்பட்டு - எதிர்ப்பட்டாற்போல. தாள் - திருவடி. `தாளாகிய செய்ய தாமரை` என்க. சைவன் - சிவம் உடையவன். `சிவநெறித் தலைவன்` எனலு மாம். ஆட்செய்தல் - பணிசெய்தல்.

பண் :

பாடல் எண் : 10

கொம்மை வரிமுலைக்
கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால்
திருப்பணிகள் செய்வேனுக்
கிம்மை தரும்பயன்
இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 

பொழிப்புரை :

திரட்சியும் தேமலும் உள்ள தனங்களையுடைய பூங்கொம்பு போன்ற உமையம்மையின் பங்கை உடையவனுக்கு, அன்போடு கூடிய மனத்தினால் திருத்தொண்டுகள் செய்கின்ற எனக்கு, இப்பிறப்பில் உண்டாகக்கூடிய வினைப் பயன்கள் முழுமையையும் இவ்வுலகிலேயே ஒழிக்கவல்ல தாயாகிய விளக்கம் மிக்க தில்லை ஆண்டவனை, அடியேன் பற்றிக் கொண்டேன் அல்லவா?

குறிப்புரை :

கொம்மை - திரட்சி. வரி - சந்தனம் முதலியவற்றால் எழுதும் கோலம்; தேமலுமாம். இம்மை தரும் பயன் - இப் பிறப்போடு ஒழியும் பயன்கள்; அவை, ஐம்புல இன்பங்கள். அம்மை - தாய்.
சிற்பி