திருவாசகம்-சென்னிப் பத்து


பண் :

பாடல் எண் : 1

தேவ தேவன்மெய்ச் சேவகன்
தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அரியொ ணாமுத
லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிச் சுடருமே. 

பொழிப்புரை :

தேவர் பிரானும், உண்மையான வீரனும் அழகிய திருப்பெருந்துறைக்குத் தலைவனும், மும்மூர்த்திகளாலும், அறிய முடியாத முதல்வனாகிய, இன்ப வடிவினனும் அன்பரல்லாத பிறர் எவராயினும் அவர்களால் அறியக் கூடாத செந்தாமரை மலர் போன்ற ஒளியையுடையவனும் ஆகிய இறைவனுடைய தூய்மையான சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலை பெற்று நின்று விளங்கும்.

குறிப்புரை :

தேவ தேவன் - தேவர்கட்குத் தேவன். மெய்ச் சேவகன் - உண்மை வீரன். உண்மை வீரமாவது அஞ்ஞானத்தை அழித்தல். யாவராயினும் - எத்துணை உயர்ந்தோராயினும். மன்னி - மன்னுதலால். சுடரும் - ஒளிவிடும். ``தூய`` என்றது, இனவெதுகை.

பண் :

பாடல் எண் : 2

அட்ட மூர்த்தி அழகன் இன்னமு
தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன்
தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர்
பாகம் வைத்த அழகன்றன்
வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.

பொழிப்புரை :

அட்ட மூர்த்தங்களையுடையவனும், அழகை யுடையவனும் இனிய அமுத மயமான பேரின்பக் கடலானவனும், மேலானவனும் அழியாத சிவபுரத்துக்குத் தலைவனும், அழகிய திருப்பெருந்துறையில் எழுந்தருளிய வீரனும் தேன் மணம் கமழும், கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தே வைத்த அழகனும் ஆகிய இறைவனது வட்ட வடிவமாகிய சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலை பெற்று நின்று பொலிவு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

சிட்டன் - மேலானவன். மட்டு - தேன். வட்டமாமலர் - தாமரை மலர். மலரும் - பொலிவுபெறும்.

பண் :

பாடல் எண் : 3

நங்கை மீரெனை நோக்கு மின்நங்கள்
நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங் கொண்டெம்
உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிப் பொலியுமே.

பொழிப்புரை :

பெண்களே! என்னைப் பாருங்கள். நம் எல்லோர்க்கும் தலைவனும் நம்முடைய தொண்டை ஏற்றுக் கொண்ட வனும் தென்னஞ்சோலைகள் சூழ்ந்த பெருந்துறையிற் பொருந்திய வீரனும் யாவர்க்கும் தலைவனும் பெண்களுடைய கையிலுள்ள வளையல்களையும் கவர்ந்து கொண்டு எம்முடைய உயிரையும் கொள்ளை கொண்டு எமது தொண்டினை ஏற்றுக் கொள்பவனும் ஆகிய பெருமானுடைய மலரைப் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நம்முடைய தலை நிலை பெற்று நின்று விளங்கும்.

குறிப்புரை :

இத்திருப்பாட்டு, அகப்பொருள் நெறிபற்றி அருளிச் செய்தது. மங்கைமார், தாருகாவன முனிவர் பத்தினியர். `அவர்பால் வளையே கொண்டொழிந்தான்; எம்பால் உயிரையே கொண்டான்` என்றாள். இஃது அடிகளை இறைவன் தன் அடிமையாக் கொண்டதைக் குறித்தது. முதற்கண், ``நம் பணி கொண்டவன்`` என்றது, பொதுவாகவும், இறுதியில் `எம்பணி கொள்வான்` என்றது சிறப்பாகவும் அருளிச் செய்தன. அன்றியும், ``எம் பணிகொள்வான்`` என்றது, எம்மை ஆட்கொள்வான்` என்னும் பொருளதேயாம். ஆயினும், ``நம் பணிகொண்டவன்` எனப் பாடம் ஓதாது, `அம்பணி கொண்டவன்` எனப் பாடம் ஓதி, `நீரை அணியாகக் கொண்டவன்` என்று உரைப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 4

பத்தர் சூழப் பராபரன்
பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்த னாகிவந் தில்பு குந்தெமை
ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே.

பொழிப்புரை :

தில்லையாகிய பழமையான பதியிலே நிருத்தம் புரிபவனும், மிகவும் மேலானவனும் ஆகிய, சித்தர்கள் சூழ்ந்து வணங்கும் அந்தச் சிவபெருமான் அடியார் புடை சூழ, பூமியில் வந்து அந்தணக் கோலத்தோடு ஏமாற்றுபவனாய் வந்து எங்கள் வீடுகளில் புகுந்து எம்மை அடிமை கொண்டு எமது தொண்டினை ஏற்றுக் கொள்ளும் படியாகச் சூட்டிய சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று பொலிவு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

சித்தர் - யோகிகள்; பதஞ்சலி முதலியோர். வலிய வந்து ஆட்கொண்டமையை, ``இல் புகுந்து`` என்றார். வைத்த - சூட்டிய.

பண் :

பாடல் எண் : 5

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
மதித்தி டாவகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள்
திருப் பெருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூற ஊறநீ
கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.

பொழிப்புரை :

பொய்யான உலக வாழ்க்கையை உண்மையானது என்று நினைத்து அதனைப் பாராட்டாதபடி, எமக்கு ஞானத்தைக் கொடுத்தவனும் மூங்கிலை ஒத்த தோளினையுடைய உமையம்மை யின் பாகனும் எமது திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவன், எனது உடம்பினுள் அமுதம் இடைவிடாது பெருகு மாறு `நீ பார்` என்று காட்டி அருளிய சிறந்த செந்தாமரை மலர் போன்ற சிறந்த திருவடியின் கீழே, நம் தலை நிலைபெற்று நின்று விளங்கும்.

குறிப்புரை :

நல்கினான் - அருள்செய்தான், ``திருப்பெருந்துறை மேவினான்`` என்பது, `இறைவன்` என ஒருசொல் தன்மைப் பட்டு நின்று, ``எங்கள்`` என்றதனோடு நான்காவதன் பொருள் படத் தொக்கது. நிட்டை கைவந்த பின்னர், உடம்புள்ள பொழுதே உயிரினிடத்துச் சிவானந்தம் பெருகுமாதலின் அதனைக் காயத்துள் ஊறுவதாக அருளிச் செய்தார். கண்டு கொள் - இத்திருவடிகளின் இயல்பை அறிந்துகொள். சேய - செம்மையான.

பண் :

பாடல் எண் : 6

சித்த மேபுகுந் தெம்மை யாட்கொண்டு
தீவி னைகெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்க ழற்கணே
பன்ம லர்கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவு லகுக்கும்
அப்பு றத்தெமை வைத்திடு
மத்தன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 

பொழிப்புரை :

சித்தத்திலே புகுந்து எம்மை அடிமையாகக் கொண்டருளி, தீயவாகிய வினைகளை அழித்து உய்வதற்குரிய அன்பினைக் கொடுத்துத் தனது அழகிய திருவடியின் கண்ணே பல வகையான மலர்களைப் பறித்து இடுதலும், விடுதலையைக் கொடுத்து இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பால் எம்மைப் பேரின்பத்தில் வைக்கின்ற, ஊமத்தம்பூவை அணிகின்ற இறைவனது சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று பொலிவுபெற்று விளங்கும்.

குறிப்புரை :

``ஆம்`` என்றது பெயரெச்சம். அது, ``பத்தி``என்னும் கருவிப் பெயர்கொண்டது.
முத்தி - சீவன் முத்திநிலை. மத்தன் - ஊமத்த மலரைச் சூடியவன். மோனை கெடுதலின், `அத்தன்` எனப் பாடமோதுதல் சிறப் பன்று.

பண் :

பாடல் எண் : 7

பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன்
பேர ருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்க
ளருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக் கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.

பொழிப்புரை :

பிறவியாகிய இந்தக் கடலை நீந்துவதற்குத் தன்னுடைய பேரருளாகிய தெப்பத்தை கொடுத்தருளினவனும், துணையில்லாதவன் என்று எண்ணி, அடியார்களுடைய அருட் கூட்டத்தில் புகுவித்து அவர்களோடு நல்ல உறவை உண்டாக்கி என்னைப் பிழைக்கும்படி ஆட்கொண்ட தலைவனுமாகிய இறை வனது உண்மையான பேரருளாகிய தனது வல்லமையைக் காட்டிய சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று விளங்கும்.

குறிப்புரை :

அறவை என்று - இவன் துணையிலி என்று இரங்கி. உண்மைப் பெருக்கமாம் திறமை - உண்மையினது மிகுதியாகிய ஆற்றல். அதனைக் காட்டினமை, சென்னியிற் சூட்டிய பொழுதே மயக்கெலாம் அற்று அன்பு பிழம்பாகச் செய்தது.

பண் :

பாடல் எண் : 8

புழுவி னாற்பொதிந் திடுகு ரம்பையிற்
பொய்த னையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன் எம்பிரான்
என்னுடை யப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் தூய்மலர்க்
கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவிலாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 

பொழிப்புரை :

புழுக்களால் நிறைந்துள்ள உடம்பில் பொருந்தி நிற்கும் நிலையற்ற வாழ்வை ஒழிக்கின்ற அழகையுடைய சோதியே! எம்மை ஆள்பவனே! எம்பெருமானே! என்னுடைய தந்தையே! என்று பலகால் சொல்லிக் கூப்பிய கையையுடையவராய், தூய்மையான தாமரை மலர் போன்ற கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரியும் அடியார்களுக்குத் தவறாது கிடைக்கின்ற தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின்கீழே, நமது தலை நிலை பெற்று நின்று பொலிவு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

பொதிந்து - நிறைத்து. இடு, துணைவினை. பொய் - நிலையாத வாழ்வு. வழுவிலா - தவறாத, ஒருதலையாகக் கிடைக்கின்ற.

பண் :

பாடல் எண் : 9

வம்ப னாய்த்திரி வேனை வாவென்று
வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப்
புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளி மெய்யடி
யார்கட் கின்பந் தழைத்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 

பொழிப்புரை :

வீணனாய்த் திரிகின்ற என்னை வா என்று அழைத்து வலிமையான வினையாகிய பகையினை அழிக்கின்ற மேலிடத்தில் உள்ளவனும் உலகங்களை எல்லாம் ஊடுருவிச் சென்று அப்பாற் பட்டவனாய எமது தலைவனும் அன்பர்களுக்கு இரங்கி அருள் செய்பவனுமாகிய இறைவனது உண்மையான அடியார்களுக்கு இன்பம் பெருக நிற்கின்ற செவ்விய பொன் போன்ற சிறந்த தாமரை மலர் போலச் சிவந்த திருவடியின் கீழே, நம்முடைய தலை நிலை பெற்று விளங்கும்.

குறிப்புரை :

வம்பன் - வீணன். ``அருளி`` என்றது பெயர். `அருளிதன் சேவடி` என்க.

பண் :

பாடல் எண் : 10

முத்த னைமுதற் சோதியை முக்கண்
அப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோக னைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின் நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 

பொழிப்புரை :

இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனும் ஒளிப் பொருள்களுக்கெல்லாம் மூல ஒளியாய் உள்ளவனும் மூன்று கண்களையுடைய தந்தையும் காரணங்களுக்கெல்லாம் முன்னேயுள்ள காரணமானவனும் ஞான மயமானவனும் சிவபுரத்தவனும் ஆகிய இறைவன் திருப்பெயர்களைப் பரவித் திரிகின்ற அன்பர்களே! நீங்கள் இங்கு வாருங்கள். அவனை உங்களது பந்தங்கள் நீங்கும் பொருட்டு வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால் உள்ளத்தில் நிறைந்த சிவந்த அவனது திருவடியின் கீழே நமது தலை நிலைபெற்று விளங்குதல் திண்ணம்.

குறிப்புரை :

முதற் சோதி - ஒளிப் பொருள்கட்கெல்லாம் ஒளி வழங்கும் ஒளி. இதனானே, `எவ்வுயிர்க்கும் அறிவைப் பயப்பிக்கும் அறிவு` என்பதும் முடிந்தது. முதல் வித்து - முதற் காரணன்; `பரம காரணன்` என்றபடி. இடைநிலைக் காரணர் பலர் உளராதல் அறிந்து கொள்க, ``பணிமின்`` என்றதன் பின், `என்னையெனின்` என்பது வருவிக்க. ஓகாரம், அசை நிலை. `என்றும் உள்ளத்திருக்கும் சேவடி, பணிவார்க்கு வெளிநிற்கும்` என்றபடி.
சிற்பி