திருவாசகம்-எண்ணப்பதிகம்


பண் :

பாடல் எண் : 1

பாருரு வாய பிறப்பற வேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்கம லம்மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேஉன்
அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே.

பொழிப்புரை :

சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய உருவத்தையுடைய எனது அரிய அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும். அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும். அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டருள் வாயாக.

குறிப்புரை :

பார் உரு - நிலவுலகத்திற்கு ஒத்த உடம்பு; என்றது, இப்பிறப்பினை. இஃது அற்றவழி இறைவன் திருவடி கூடுதல் திண்ண மாதலின், இப்பிறப்பறுதல் மாத்திரையே கூறினார். ``வேண்டும்`` என்றது, `இன்றிமையாதது` என்றதாம், பத்திமை பெறுதல், பிறப்பு அறுந்துணையும் என்க. இதனால், `பிறப்பு அற்றபின் பத்திமை வேண்டா` என்றதன்று. ஆண்டுப் பத்திமைக்குத் தடையின்மையின் அதுதானே நிகழும்; பிறப்பு உள்ளபொழுதே அஃது அரிதாகலின், அங்ஙனம் அரிதாகற்கு ஏதுவாய தடைகள் நீங்குதல் வேண்டும் என்றவாறு. சீர் உரு - சிறப்புடைய பொருள். `செங்கமல மலர் போல்` என விகாரமின்ற யோதுதல் பாடமாகாமையறிக. `செங்கமல மலர் போலும்` எனப் பாடம் ஓதுவாரும் உளர். ஆர் உரு - பொருந்திய வடிவம். ஓர் உரு - ஒப்பற்ற வடிவம். இறைவனது வடிவம் அருளே யாதலின், அதனை, ``திருவருள்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 2

உரியேன் அல்லேன் உனக்கடிமை
உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே. 

பொழிப்புரை :

சங்கரனே! எம் தலைவனே! உனக்கு அடிமையா யிருப்பதற்கு உரிய தகுதியுடையேனல்லேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இவ்விடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன். இரக்கத்தால் பெரிய ஒப்பற்றவனாகிய நீ உன் கழலையணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டி உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ?. நாயனையான் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன்.

குறிப்புரை :

`செய்ய` என ஒருசொல் வருவித்து, `உனக்கு அடிமை செய்ய உரியேன் அல்லேன்` என மாற்றிக்கொள்க. ``பொழுது`` என்றது மிகச்சிறிய நொடிப்பொழுதை. `இதற்குக் காரணம் இன்னது என்று அறியேன்` எனவும், நீ, கருணையினால் யான் பெரியோன் ஒருவன் கண்டுகொள்க என்று` எனவும் கொள்க. `என்றென்று` என்ற அடுக்கு வலியுறுத்தற்கண் வந்தது. தாம் வேண்டியும் வாராது பிரிந்து நிற்றலின், ``பிரியேன் என்று அருளிய அருளும் பொய்யோ`` என்றார்.

பண் :

பாடல் எண் : 3

என்பேஉருக நின்அருள் அளித்துன்
இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டு கொண்ட
முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே. 

பொழிப்புரை :

என் எலும்புகளெல்லாம் உருகும் வண்ணம் உன் திருவருளைத் தந்து உன்னுடைய இரண்டு தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டி முன்னமே என்னை ஆட்கொண்ட முனிவனே! முனிவர்கட் கெல்லாம் முதற்பொருளானவனே! பேரின்பமே கொடுத் தருளி என்னை உருகுவித்து என் பசுபோதத்தை நீக்குகின்ற எங்கள் பெரியோனே! எனது உயிர்த் தலைவனே! உன்னுடைய திருவருளால் கூசாமல் உன்னுடைய நட்பை எனக்கு அருளிச் செய்யவேண்டும்.

குறிப்புரை :

முனிவன் - ஆசிரியன். முனிவர் முழுமுதல் - முற்றத் துறந்த முனிவர் பற்றும் முழுமுதற் கடவுள். ``உயிர்`` என்றது, அதன் போதத்தை. நண்பே - நண்பனே `நின் அருளை அடியேனுக்கு நீ நாணாமே அருளாய்` என்க. நாணுதல் இறைவன் தனது பெருமையை யும் இவரது சிறுமையையும் கருதியாம். ``நண்பே`` என்றது இன வெதுகை.

பண் :

பாடல் எண் : 4

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப் பாய்எம் பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோஎன்
றெத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே. 

பொழிப்புரை :

எம்பிரானே! முத்துப் போன்றவனே! மாணிக் கத்தைப் போன்றவனே! தலைவனே! முறையோவென்று எவ்வள வாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவனாகின்றேன். ஆதலின் பற்று இல்லாதவனாயினும், வணங்குதல் இல்லாதவனாயினும் உனது மேலான பசுமையான கழலையணிந்த திருவடிகளைக் காண்பற்கு விருப்பமில்லாதவனாயினும், துதித்திலேனாயினும் என் பிறவியைப் போக்கியருள்வாயாக.

குறிப்புரை :

பற்று, `பத்து` எனத் திரிந்தது. ``முத்தனையானே`` என்பது முதலியன வேறு தொடர். எத்தனை வகையானும் உன்னைத் தொடர்ந்து` என்க. பிரிந்து ஆற்றேன் - பிரிந்து ஆற்றேனாவேன்; என்றது, `பிரியேனாவேன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 5

காணும தொழிந்தேன் நின்திருப் பாதங்
கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
காணவும் நாணுவனே. 

பொழிப்புரை :

எம் பிரானே! நிலையானவனே! உன் திருவடியைப் பிரிந்திருத்தலால் காண்பதை ஒழிந்தேன். கண்கள் களிப்பு மிகும்படி பார்த்துப் போற்றுவது ஒழிந்தேன். வாயால் துதிப்பதையும் விட்டேன். உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பும் என்னுடைய அற்பத் தன்மையால் தோன்றுதல் இல்லேனாயினேன். இவற்றால் பிறகு கெட்டேன். அதனால் நீ இனிமேல் என் முன் வந்தாலும் பார்ப்பதற்கும் கூசுவேன்.

குறிப்புரை :

``காணும் அது`` என்றற்றொடக்கத்தனவற்றுள், முற்றியலுகரமும் குற்றியலுகரம்போல உயிர்வருமிடத்துக் கெட்டது. `நின் திருப்பாதத்தைக் காணும் அது` எனவும், `உருகும் தன்மையைக் காணும் அது` எனவும், இயைக்க. ``என்புன்மைகளால்`` என்றது, ``ஒழிந்தேன்`` என்றன பலவற்றிற்குமாம். ``வரினும்`` என்ற உம்மை, எதிர்மறை, ``காணவும்`` என்ற உம்மை, இழிவு சிறப்பு. நாணுதல், முன்பெல்லாம் ஒழிந்தமை பற்றி.

பண் :

பாடல் எண் : 6

பாற்றிரு நீற்றெம் பரமனைப்
பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ்
சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந் தேத்திப்
புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை
ஆவஎன் றருளாயே.

பொழிப்புரை :

என்னை அடிமையாக உடையவனே! பால்போல வெண்மையாகிய திருநீற்றையணிந்த எம் மேலோனும், மேலான கருணையோடும் எதிரே வந்து காணப்பட்டு உண்மை அடியவர் களுக்கு அருள் வழிநல்கும் ஒளிப்பிழம்பும், ஆகிய உன்னை அறநெறி யில்லாத யான் என் அமுதமே என்று எண்ணித் துதித்துப் போற்றி அழைத்து நின்று என் மனத்தில் ஆறுதல் அடையும்படி, அடியேனுக்கு ஐயோ என்று இரங்கி அருள் புரிவாயாக.

குறிப்புரை :

பால் திருநீறு - பால்போலும் திருநீறு. எதிர்ந்து தோற்றி- முன்வந்து தோன்றி. அருள் துறை - அருளாகிய திசை. ஆற்றுவனாக - ஆற்றுவேனாதலின். ``எம் பரமனை`` முதலியன, முன்னிலைக்கண் படர்க்கை வந்த இடவழுவமைதி.
சிற்பி