திருவாசகம்-யாத்திரைப் பத்து


பண் :

பாடல் எண் : 1

பூவார் சென்னி மன்னனெம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆஆ என்னப் பட்டன்பாய்
ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.

பொழிப்புரை :

மலர் நிறைந்த முடியையுடைய அரசனாகிய பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியவர்களாகிய நம்மை, இடை யறாமல் உள்ளத்தில் கலந்து உணர்வுருவாய் உருக்குகின்ற பெருகிய கருணையினால், ஐயோ என்று இரங்கியருளப்பட்டு அன்பு உருவாய் ஆட்பட்டவர், நிலையில்லாத வாழ்க்கையை விட்டு நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடையக் காலம் வந்துவிட்டது. போவோம். வந்து முற்படுங்கள்.

குறிப்புரை :

புயங்கம் - பாம்பு; `ஒருவகை நடனம்` எனவும் கூறுப. சிறியோமை ஓவாது - சிறியேங்களை விட்டு நீங்காது.
என்னப்பட்டு - என்று இரங்கி அருள் செய்யப்பட்டு. காண், முன்னிலையசை. பொய் - நிலையில்லாத உடம்பு. `ஆட்பட்டீர், பொய்விட்டு உடையான் கழல் புகக் காலம் வந்தது, போவோம்; ஒருப்படுமின்` என வினை முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

புகவே வேண்டா புலன்களில்நீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத்
தளரா திருப்பார் தாந்தாமே. 

பொழிப்புரை :

நாட்டார் நகை செய்ய, உலகில் எழுந்தருளி நாயைப் போன்ற நம்மை ஆட்கொண்ட பெருமையையுடைய இறைவனை அடைந்தால் அவரவர் தளர்ச்சி நீங்கி இருப்பார்கள். ஆதலின் அடியவர்களே! நீங்கள் ஐம்புல விடயங்களில் செல்ல வேண்டா. பாம்பணிந்த பெருமானுடைய தாமரை மலரை ஒத்த திருவடிகளை மிகுதியாக நினையுங்கள். எஞ்சியவையெல்லாம் நமக்கு வேண்டா. அவைகளை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டு விடுங்கள்.

குறிப்புரை :

பின் இரண்டடிகளை முதலிற் கொள்க. மிக்க - எஞ்சியவை. நக - தன்னைத் தன் அடியார்கள் எல்லாம் நகைக்கும்படி. சார - சார்ந்தால், தாம் தாம் தளராது இருப்பார் - யாவரும் துன்பமின்றியிருப்பார்கள்; இவ்விடத்து; `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 3

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 

பொழிப்புரை :

ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர் களே! நீங்கள், நாம் யார்? எம்முடையது என்பது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து இவை நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எமையாள் வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

குறிப்புரை :

``தாமே`` என்றது, பொதுமையில் மக்களைச் சுட்டியது. அதனால், `அவரவரே அவரவர்க்கு உறவினரும், விதிமுறையும் ஆவர்` என்பது, முதல் அடியின் பொருளாகும். சுற்றத்தையும், விதியையும் கூறவே, `அவற்றின் மறுதலையாய பகையும், விலக்கும் அவரவர்க்கு அவரவரே` என்பதும் போந்தது. `பிறப்பு வீடு என்னும் இருவகைப் பயன்களையும் முறையே தருவனவாகிய வினையையும், தவத்தையும் செய்து அப்பயன்களைப் பெறுவார் அவரவரே` என்பதனை இவ்வாறு அருளிச் செய்தார்.
``பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்``
என்னும் திருக்குறளும் (505) இப்பொருளையுடையது.
இவ்வாறாயின், ``ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே`` (தி.6 ப.95 பா.3) என்றாற்போலும் திருமொழிகட்குக் கருத் தென்னையோ என்றெழும் ஐயப்பாட்டின்கண் பலர் பலபடத் தம் கருத்தினைப் புலப்படுப்பர். ஆட்டுவிப்பான் ஒருவன் பிறனை ஆட்டுவிக்கின்றுழி, ஆடுவான், முதற்கண்ணே ஆட்டுவிப்பான் குறிப்பின்வழியே ஆடல் இலக்கணம் எல்லாம் நிரம்ப ஆடுதல் இல்லை; முதற்கண் ஆட்டுவிப்பானது குறிப்பினின்றும் பெரிதும் வேறு பட ஆடிப் பின்னரே சிறிது சிறிதாக அவன் குறிப்பின் வழி நிற்கும் நிலையினைப் பெறுவன். அவ்வாறே ஈண்டுமாகலின், அதுபற்றி, ``தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்`` என்றற்கு இழுக்கென்னை என்க. இங்ஙனமல்லாக்கால், `ஆட்டுவிப்பான்` எனவும், `ஆடுவான்` எனவும் பொருள்களை இருவேறாகப் பகுத்துக் கூறுதற்குப் பயன் என்னையோ என்பது. எனவே, ``ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே`` என்றாற்போலும் திருமொழிகட்கு, `ஆடுந் தன்மையுடையானிடத்து அவ் வாடுதற்றொழில் ஆட்டுவிப்பானை யின்றி அமையாதவாறு போல, அறியுந்தன்மையும் செய்யுந் தன்மை யும் உடைய உயிர்களிடத்து அவ்வறிதலும் செய்தலும், அறிவிப் பவனும், செய்விப்பவனுமாகிய இறைவனையின்றி அமையா` என்பதும், `அவ்வாறாயினும், ஆடுதற்றொழிற்கண் உளவாகும் குறைவு நிறைவுகள் ஆடுவானுடையனவன்றி ஆட்டுவிப்பா னுடையனவாகாமை போல அறிதல் செய்தலின்கண் உளவாகும் தீமை நன்மைகள் உயிரினுடையனவன்றி இறைவனுடையன ஆகா` என்பதும், `அங்ஙனமாயினும், அறிவு செயல்களுக்கு இறைவனது அருள் இன்றியமையாமை பற்றி, அவற்றால் விளையும் தீமை நன்மைகளையும் அவனுடையன போல ஒரோவழி முகமனாகக் கூறுவர்` என்பதும், இறைவன் இவ்வாறு உயிர்களை அறிவித்தும், செய்வித்தும் நிற்பது அவற்றிற்கு எவ்வாற்றானும் நன்மை பயப்பதே யாதலின், அவற்றை அவன் எஞ்ஞான்றும் அங்ஙனம் செயற்படுத்தி நிற்பன்` என்பதுமே கருத்தாதல் அறிந்து கொள்க.
`யார்` என்பதன் மரூஉவாகிய `ஆர்` என்பன பலவும், `என்ன பொருள்` என்னும் கருத்தின. `இறைவன் முன்னே, உயிர்களும், அவைகள் `எமது` என்று பற்றுச் செய்தற்கு உரியனவும், அங்ஙனம் பற்றுச் செய்தற்கு ஏதுவாய் அவற்றை மறைத்து நிற்கும் பாசங்களும் பொருளோ` என்றதாம். என்ன மாயம் - இவையெல்லாம் எத்துணை மயக்கங்கள். உயிர், தன்னையே தலைமைப் பொருளாக நினைத்தல் மயக்க உணர்வேயாதல் பற்றி அதனையும், ``மாயம்`` என்றார். `இவை போகப் போமாறு` என இயையும். `பண்டைத் தொண்டர் முன்பே போயி னாராயினும், அவர் போயினவழியே போவோம்` என்பார், ``பண் டைத் தொண்டரொடும் போமாறு`` எனவும், `அவன்றன் குறிப்பு, நம் மைப் பிரிதல் அன்று` என்பார், ``அவன்றன் குறிப்பே குறிக் கொண்டு போமாறு`` எனவும் கூறினார். அமைமின் - ஒருப்படுங்கள். பொய், உலகியல்; `புயங்கனும் ஆள்வானும் ஆகியவனது பொன்னடி` என்க.

பண் :

பாடல் எண் : 4

அடியார் ஆனீர் எல்லீரும்
அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து
கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே.

பொழிப்புரை :

அடியாராகிய நீங்கள் எல்லாரும் உலக இன்பங் களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள். மணம் தங்கிய திருவடியை வந்து பொருந்தி திருவுள்ளக் குறிப்பை உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள். திரு வெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய பாம்பணிந்த பெருமான் குற்றம் பொருந்திய உடம்பைப் போகும்படி நீக்கிச் சிவபுரத்தே நம்மை வைப்பான். தன் தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே புகும்படி செய்வான்.

குறிப்புரை :

விளையாட்டு - கவலையின்றிக் களித்திருத்தல். கடி - நறுமணம். கடைக்கொண்டு - கடைபோகக் கொண்டு. செடி - கீழ்மை. பொடி - திருவெண்ணீறு. `பொடிசேர் மேனிப் புயங்கன், நம்மை, முன்னர்ச் சிவலோகத்தே வைப்பான்; பின்னர்த் தன் கழற்கே புக விடுவான்` என்க. ``கழற்கு`` என்றது உருபு மயக்கம். ஏகாரம், பிரி நிலை. ``வைப்பான்; புகவிடும்`` என்றவை, `இவை நிகழ்தல் திண்ணம்` என்னும் பொருளன. அதனால், இறுதியிரண்டடிகளை முதலில் வைத்து, ``புகவிடும்`` என்றதன் பின்னர், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைத்தல் கருத்தாயிற்று.

பண் :

பாடல் எண் : 5

விடுமின் வெகுளி வேட்கைநோய்
மிகஓர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
டுடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
அணியார் கதவ தடையாமே
புடைபட் டுருகிப் போற்றுவோம்
புயங்கன் ஆள்வான் புகழ்களையே. 

பொழிப்புரை :

மேன்மைப்படுவதற்கு இனிமேல் ஒருகாலம் கிடையாது. ஆகையால் சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி கோபத்தையும் காம நோயையும் விட்டு விடுங்கள். நம்மை உடைய பெருமானுடைய திருவடிக்கீழ் பெரிய கூட்டத்தோடு உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள். பாம்பை அணிந்தவனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவனுடைய பெருமை களை எங்கும் சூழ்ந்து மனமுருகிப் போற்றுவோம். போற்றினால் சிவலோகத்தில் நாம் போய்ச் சேர்ந்து விடுவோம்.

குறிப்புரை :

`வெகுளியையும், வேட்கை நோயையும் விடுமின்`; எனவும், `சிவபுரத்துள் அடைவோம்; அதற்கு முன்னே அதன் அணி யார் கதவது அடையாமே, ஆள்வான் புகழ்களைப் போற்றுவோம்` எனவும் கொள்க. வேட்கை - ஆசை. மிக - நாம் உயர்வடைவதற்கு. சாத்து - கூட்டம். ``அடைவோம்`` என்றது, `அடைப்பதற்குள் அடை வோம்` என்றதாம். புடைபட்டு - அதன் அருகிற்பொருந்தி. ``புடை பட்டு உருகிப் போற்றுவோம்`` என்றது, `நுழைவோம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 6

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையும்
இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று
நெஞ்சம் உருகி நிற்போமே.

பொழிப்புரை :

நாம் இனிமேல் ஒரு துன்பம் வந்து சேராவண்ணம் விளங்குகின்ற சிறப்பமைந்த சிவபுரத்துக்குப் போய், சிவபெருமான் திருவடியை வணங்கி அங்கே வாழும் அடியார் முன்னே சென்று மனம் உருகி நிற்போம்; அதற்குப் பாம்பணிந்த பெருமான் திருவடியைப் புகழுங்கள்; வணங்குங்கள். அவைகளுக்கு மலர் சூட்டுங்கள்; அவற்றையே நினைவில் வைத்துக் கொண்டு பிற எல்லாத் துன்பங்களையும் இகழுங்கள்.

குறிப்புரை :

`புயங்கன் தாளே புந்தி வைத்திட்டுப் புகழ்மின்! தொழுமின்! பூப்புனைமின்!` எனவும், `எல்லா அல்லலையும் இகழ் மின்` எனவும் கூட்டுக. முன்னைத் திருப்பாட்டிலும், இத்திருப்பாட்டி லும், ``விடுமின்`` முதலிய பயனிலைகளை முதலில் வைத்து அருளிச் செய்தமை, உணர்ச்சி மீதூர்வினாலாதல் அறிக. அடையாமே - வாராதபடி; இது, ``சென்று`` என்பதனோடு முடியும். ``நிற்போம்`` என்றதும், ``அடியார் ஆனீர் எல்லாரும்`` என்ற திருப்பாட்டில், ``வைப்பான், புகவிடும்`` என்றன போல, `நிற்றல் திண்ணம்` என்னும் பொருளது. அதனால், இத்திருப்பாட்டிலும் ``இனியோர் இடையூ றடையாமே`` என்றது முதலாகத் தொடங்கி, ``நிற்போம்`` என்றதன் பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து மேலே கூட்டி யுரைத்தல் கருத்தாயிற்று. ஆகவே, புகழ்தல் முதலியன, இதுகாறும் பொதுப்படச் செய்துவந்தாற் போல்வனவாகாது, சிவபெருமான் தம்மைத் தன்பால் வருவிக்கத் திருவுளம்பற்றிய திருவருள் நோக்கிச் சிறப்புறச் செய்வனவாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 7

நிற்பார் நிற்கநில் லாவுலகில்
நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே
நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற்
பெறுதற் கரியன் பெருமானே. 

பொழிப்புரை :

அழகினால் தனக்குத் தானே நிகரான திருமேனியையுடைய, பாம்பணிந்த பெருமானது பொன் போன்ற திருவடியை அடைவதற்கு நிற்கின்றவர்களே! நிலையில்லாத உலகின் கண், விரும்புவார் நிற்கட்டும். நாம் இங்கு இனி நிற்க மாட்டோம்; சென்று விடுவோம்; செல்லாமல் தங்கி நின்று பின்பு மனம் வருந்தினால் எம் பெருமான் பெறுதற்கு அரியவனாவான். ஆதலால் எல்லோரும் காலந்தாழ்த்தாது நீங்கள் நினைந்தபடியே செல்ல மனம் இசையுங்கள்.

குறிப்புரை :

பொருள்கோள்: `நில்லா உலகில் நிற்பார் நிற்க; நாம் இனி நில்லோம்; ஆள்வான் பொன்னடிக்கே செல்வோம்; பிற்பால் நின்று பேழ்கணித்தால், பெருமான் பெறுதற்கரியன்; அதனால், நிற்பீர் எல்லாம் நிற்கும் பரிசே தாழாது ஒருப்படுமின்`
பொற்பு - அழகு. `அழகால் தன்னையே தான் ஒப்பாம் திரு மேனி` என்க. பால் - பகுதி; அது காலப் பகுதியை நோக்கிற்று. பேழ் கணித்தல் - கழிந்ததற்கு இரங்கல். நிற்பீர் - ஆள்வான் பொன்னடியே நோக்கிநிற்பீர். `அங்ஙனம் நிற்கும் பரிசுக்கே தாழாது ஒருப்படுமின்` என்க.
ஒருப்படுதல் - இசைதல். பொன்னடியையே பொதுவாக நோக்கி நிற்பினும், அதன்கீழ்ச் செல்லுதற்குச் சிறப்பாக ஒருப்படச் சிறிது தாழ்க்கினும், அவன் திருக்குறிப்பைப் பெற்ற காலம் கழிந் தொழியுமாதலின், ``தாழாதே ஒருப்படுமின்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 8

பெருமான் பேரா னந்தத்துப்
பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே.

பொழிப்புரை :

இறைவனது பேரின்பத்தில் பிரியாமல் மூழ்கி யிருக்கப் பெற்றவர்களே! நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்திப் பின்பு ஐயோ என்று, வருந்தி அலறாவண்ணம் அழகிய சிறந்த மணிகள் இழைக்கப் பெற்ற திருக்கதவு, திறந்திருக்கும் போதே, சிவபுரத்திலுள்ள, திருமாலறியாத, அழகிய பாம்பணிந்த பெருமானது திருவடியை நாம் சென்றடைவோம்.

குறிப்புரை :

``இருக்கப்பெற்றீர்கள்`` என்றது, `இருக்க விரும்பு தலைப் பெற்றீர்கள்` என்றவாறு. ``திருக்கதவம் திறந்த போதே`` என்றதனால், இறைவன் அடிகளைத் தன்பால் வரப்பணித்தமை பெறப் பட்டது. ``சிவபுரத்துத் திருத்தாள் சென்று சேர்வோம்`` என்றதனால், சிவலோகஞ் சேர்தலையும் திருவடி கூடுதலாக அடிகள் அருளிச் செய்தல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

சேரக் கருதிச் சிந்தனையைத்
திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்
பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே. 

பொழிப்புரை :

போரில் விளங்குகின்ற வேல் போன்ற கண்களை யுடைய உமையம்மையின் பாகனும், பாம்பை அணிந்தவனுமாகிய இறைவனது திருவருள் அமுதத்தை நிரம்பப் பருகித் தணியாத ஆசை மிக மூழ்கியிருப்பவர்களே! பொய்யான வாழ்வில் கிடந்து புரளாமல் சிவபெருமானது திருவடியிலே அடைய விரும்புங்கள். அதனையடைய எண்ணிச் சித்தத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டு இடைவிடாமல் நினையுங்கள்.

குறிப்புரை :

இடையிரண்டடிகளை முதலிற் கொள்க.
போரிற் பொலியும் வேல், சிவந்த நிறத்தொடு நிற்கும். அழுந்துவீர் - பேரின்பத்தில் அழுந்துதற்குரியவர்களே. போர, `போத` என்பதன் மரூஉ. இதனை, `போதும்` என்பதனை, `போரும்` என்னும் வழக்கால் உணர்க. போத - மிகவும், புரிமின் - விரும்புங்கள். ``கழற்கே`` என்பதனை, `கழலையே` எனத் திரிக்க. பொய் - பொய்யான உலக வாழ்க்கை.

பண் :

பாடல் எண் : 10

புரள்வார் தொழுவார் புகழ்வாராய்
இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார்
மதிஉட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீ ராகில் இதுசெய்மின்
சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருள்ஆர் பெறுவார் அகலிடத்தே
அந்தோ அந்தோ அந்தோவே. 

பொழிப்புரை :

புரள்பவராயும் வணங்குபவராயும் இப்பொழுதே வந்து ஆட்படாதவர்களாய், மயங்குகின்றவர்களே! பின்பு, அறிவினும் கலக்கமடைந்து மயங்கியிருப்பீர்கள். உங்களை மதிப்பவர் யாவர்?. தெளிவடைய விரும்புவீரானால் எம்பெருமானிடம் ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள். சிவலோக நாதனாகிய பாம்பணிந்த பெருமானது திருவருளை, அகன்ற உலகின்கண் யார் பெறவல்லார்கள்? ஐயோ! ஐயோ!! ஐயோ!!!.

குறிப்புரை :

புரளுதலும், அன்பினால் என்க. ``பூதலமதனிற் புரண்டு வீழ்ந்து`` (தி.8 கீர்த்தித். 134) என்றார் முன்னரும். விரையாது நிற்றல் நோக்கி, ``இன்றே வந்து ஆள் ஆகாதீர்`` என்றார். ஆகாதீர் - ஆகா திருப்பவர்களே. இதன்பின், `இவ்வாறிருப்பின்`` என்பது வருவித்து, `பின்னை மருள்வீர்; உம்மை மதிப்பார் ஆர்! மதி உட் கலங்கி மயங்கு வீர்!` என்க. `சிவலோகக் கோன், திருப்புயங்கன் அருள், அகலிடத்தே ஆர் பெறுவார்! அந்தோ! இஃது அரும்பெறற் பேறு என்பதனைத் தெருள்வீராகில், இதனையே (அவன் அழைக்கும் பொழுதே அவனை அடைதல் ஒன்றையே) செய்மின்` என்க. `அகலிடத்தே ஆர் பெறுவார்` என்றதனால், அடிகள் உலகத்தார் அறிய இறைவனை அடைந்தமை பெற்றாம்.
சிற்பி