திருவாசகம்-திருவெண்பா


பண் :

பாடல் எண் : 1

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையை உடையவனாகிய இறை வனை அடையாது இருந்தேன்; என் மனத்தில் கொடிய வினை ஒழிய உடல் உருகிப் பொய்யும் பொடியாகாதுள்ளது. இதற்கு நான் என் செய்வேன்?.

குறிப்புரை :

``செய்ய`` என்றது முதலாகத் தொடங்கியுரைக்க. மெய் - வடிவம். பொய் - பொய்யான உடல். `வினை கெட, உடல் தன்வடிவு கரைந்து பொடியாயிற்றில்லை; யான் என்செய்வேன்` என்க. செய்ய - செப்பமாகிய (திருப்பெருந்துறை). `பெருந்துறை யானாகிய தேன் உந்து செந்தீயை மனத்து மருவாதிருந்தேன்` என்க. `இவ்வாறிருந்தும் இறவாதிருக்கின்றேன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 2

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் -தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து.

பொழிப்புரை :

என்னோடு கூடி நின்று, இன்பப் பித்தேற்றுவான் திருப்பெருந்துறை இறைவனே என்று என்பால் தெளிவிப்பார் ஒருவர் உளராயின் அவரைப் பணிந்து ஆரவாரிப்பேனோ?. அரற்று வேனோ?. ஆடுவேனோ?. பாடுவேனோ?. நான் என் செய்து பாராட்டுவேன்?.

குறிப்புரை :

இங்கும், ``தீர்ப்பரிய`` என்றது முதலாகத் தொடங்கி உரைக்க. ``பரம்பரனே`` என்றது, இயல்பானே முன்னிற்கும்.
``ஆர்க்கோ`` என்றது முதலிய ஐந்தும், ஐயத்தின்கண் வந்த ஓகாரம் ஏற்ற, குவ்வீற்றுத் தன்மை யொருமை வினைமுற்றுக்கள். ஆர்த்தல் - புகழ்தல். அரற்றுதல் - அன்பினால் வாய்விட்டழுதல். பார்த்தல் - உற்றுநோக்குதல். என்செய்கேன்`` என்றது, களிப்பு மீதூர் வால் வந்த செயலறுதி. தீர்ப்பரிய மால் - நீக்குதற்கரிய பித்து. ஆனந்த மால் - பேரின்பப் பித்து. தான், அசைநிலை. ``ஆரொருவர்`` என்றதன் பின், `அவரை` என்பது எஞ்சிநின்றது. தாழ்ந்து - வணங்கி.

பண் :

பாடல் எண் : 3

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் - வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 

பொழிப்புரை :

திருப்பெருந்துறை இறைவன் தன் வேலை என் மனத்துக் கோத்தான்; இதற்குக் காரணமாக நான் செய்த பிழையை அறிந்திலேன்; அவனது திருவடியையே கைதொழுது உய்யும் வகையின் நிலையையும் அறிந்திலேன்.

குறிப்புரை :

பெருந்துறையில் மேயபிரான், வையத்து இருந்து உறையுள் இருந்த வேலை மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான்; யான் செய்த பிழையறியேன். உய்யும் வகையறியேன் உயிர்ப்பும் அறியேன்` என வினைமுடிக்க. இது, ஞானத்தை அருளினமையை, பழிப்பது போலப் புகழ்ந்தது.
உய்யும் வகை - பிழைக்கும் வழி; அதனினின்றும் தப்புமாறு. உயிர்ப்பு - சுவாசித்தல்; தற்போதம் எழுதல். ``உறை`` என்றது, திரோ தான சத்தியையும், ``வேல்`` என்றது. சிவஞானத்தையும் என்க. சிந்தனைக்கு, உருபு மயக்கம். சிந்தனை - மார்பு; மனம். மடுத்துக் கோத்தான் - நுழைத்து உருவச் செய்தான்.

பண் :

பாடல் எண் : 4

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் - தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 

பொழிப்புரை :

மேல்வரக் கடவனவாகிய பிறவிகளை நீக்கும் பெரி யோனும், தென்னனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப் பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினை இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.

குறிப்புரை :

பொருள்கோள்: `பெருங்கருணையாளனாகிய இறைவன், முன்னின்றான்; பேராளன்; துயரந் தீர்க்கும் மருந்து`
பேராளன் - பெருமையுடையவன். வரும் துயரம் - இனி வரு கின்ற துன்பங்கள். ``துயரம் தீர்க்கும் மருந்து`` என்றது, ஏகதேச உருவகம்.

பண் :

பாடல் எண் : 5

அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலும்மால் கொள்ளும் - இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்நெஞ்சத் தின்று.

பொழிப்புரை :

அறியப் புகுவார்க்குச் சொல்லளவேயாமோ?. பிரமனும் திருமாலும் அறியாது மயக்கத்தை அடைகின்ற இறைவனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளினவனும் ஆகிய சிவபிரான், இன்று என் மனத்தில் தங்கி வாழ்கின்றான்.

குறிப்புரை :

`அறிவார்க்கு அறையோ` என மாற்றி, இறுதிக் கண் வைத்துரைக்க. அறையோ - அறைகூவல் விடுகின்றேன். மால் கொள்ளும் - காணாமல் மயங்குகின்ற. இன்று - இந்நாள். இறைவன் தம் நெஞ்சத்து உறைதலை அறிவுடையோர் எளிதில் உடன்படார் என்று கருதி `அவர்க்கு அறையோ` என்றார்.

பண் :

பாடல் எண் : 6

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை - அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறை இறைவன், வந்து என்னைப் பித்தேற்றுவான்; என் பிறவியை அறுப்பான்; துதித்தற்கு அரியனான இறைவன் என் மனத்தைக் களிப்படையச் செய்வான்.

குறிப்புரை :

``அத்தன்`` என்றது முதலாகத் தொடங்கி உரைக்க.
`என்னைப் பித்தேற்றும்` எனவும் `என் மனத்தைப் பேச்சரிதாம் மத்தம ஆக்கும்` எனவும் மாற்றுக. ``பித்து`` என்றது, அன்பை. மத்தம் - களிப்பு. ``அத்தன், பெருந்துறையான், மருந்து பேரின்பம்`` என்றவை, ஒரு பொருள் மேல் வந்த பல பெயர்கள்.

பண் :

பாடல் எண் : 7

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே - சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறை இறைவனும், என் மனத்தில் எழுந்தருளி இருக்கும் ஒருவனுமாகிய இறைவன் பெருக்கிய ஒளி வந்து இனிப் பிறவிக்கு வாராத வழியை அருளி, எனக்கு ஆராவமுதாக அமைந்து இருந்தது அன்றோ?.

குறிப்புரை :

`ஒளி அமைந்தன்று` என வினைமுடிக்க. அருளி - கொடுத்து `எனக்கு` என்றதை, `என்கண்` எனத் திரிக்க. `என்கண் வந்து மாறின்றி` என்க. மாறின்றி - நீங்காது நின்று. அமைந்தன்று - அமைந்தது. ஏகாரம், தேற்றம்.

பண் :

பாடல் எண் : 8

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழாம் அடியேனை - யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 

பொழிப்புரை :

எல்லார்க்கும் மேலாகிய இறைவன், எல்லா வற்றிலும் கீழாகிய என்னைப் பேரின்பத்துள் வைத்தான். அவனுக்குக் கைம்மாறு செய்யும் வகை அறியேன்.

குறிப்புரை :

``சீருடையான்`` என்றதும், விளி. ``எம்பெருமான்`` என்றது, `தலைவன்` என்னுந் துணையாய் நின்று, ``என் எம் பெருமான்`` என வந்தது. மற்று - மாறு; கைம்மாறு. `மற்றுச் செய்யும் வகை அறியேன்` என இயையும்.

பண் :

பாடல் எண் : 9

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவருங் காணாச் சிவபெருமான் - மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.

பொழிப்புரை :

மும்மூர்த்திகளும், முப்பத்து மூன்று தேவர்களும், மற்றைத் தேவர்களும் கண்டறியாத சிவபெருமானுடைய திருவடி களை வணங்கினால், உண்மையாகிய மனத்தின்கண் ஆனந்தம் திகழும்.

குறிப்புரை :

மூவர் - மும்மூர்த்திகள்; முப்பத்து மூவர் - உருத்திரர் பதினொருவர்; ஆதித்தர் பன்னிருவர்; மருத்துவர் இருவர்; வசுக்கள் எண்மர். மற்றொழிந்த தேவர், இவர்தம் பரிவாரங்களும், இந்திரன் முதலிய திசைக்காவலரும், இனி, பதினெண் கணங்களுட் சில கூட்டத் தினரும் தேவர் எனப்படுவர் என்க. மா - குதிரை. மெய்யகத்தே - உடம்பினிடத்திற்றானே, உடம்பின்கண் இன்பம் மிகுதல் கூறவே, உயிரின்கண் இன்பம் மிகுதல் சொல்லவேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 10

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்து
இருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாந் - தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 

பொழிப்புரை :

நெஞ்சே! என்னை ஆண்டருளினவனாகிய இறைவனது திருவடியைச் சிந்தித்துக் கொண்டிருந்து, வேண்டும் பொருள்களை எல்லாம் வேண்டிக் கொள். வேண்டினால் திருப்பெருந் துறையான் நீ வேண்டுவனவற்றை எல்லாம் தந்தருளுவான்.

குறிப்புரை :

``பெருந்துறையின் மேய`` என்றது தொடங்கி உரைக்க.
``ஆண்டான்`` என்றதனை முற்றாக்கி, `அவன் இணை யடியே` என எடுத்துக் கொண்டு உரைக்க ``கொள்`` என்றது, துணை வினை. `கொண்டால், எல்லாம் தரும்` என்க. காண், முன்னிலையசை. மருந்துருவாய் - அமுதமாய்.

பண் :

பாடல் எண் : 11

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றுந்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.

பொழிப்புரை :

திருப்பெருந்துறையான் ஆனந்தம் பெருகச் செய்து அஞ்ஞான இருளை அகற்றித் துன்பத்தை வேரறுத்துத் தன்னிடத்து அன்பையும் எனக்கு அருள் செய்து, என் மனத்தையே தனக்குத் திருக்கோயிலாகக் கொண்டான்.

குறிப்புரை :

பொருள்கோள்: `பெருந்துறையான், சோதியாய் இருளகற்றித் துன்பம் தொடர்வு அறுத்து, அன்பமைத்து இன்பம் பெருக்கி, என்னுடைய சிந்தையே உவந்து எஞ்ஞான்றும் ஊராகக் கொண்டான். தொடர்வு - தொடர்தல்.
சிற்பி