திருவாசகம்-பண்டாய நான்மறை


பண் :

பாடல் எண் : 1

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லைக் கடையேனைத் - தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 

பொழிப்புரை :

நெஞ்சே! பழமையாகிய நான்கு வேதங்களும் பக்கத்தில் அணுகமாட்டா; திருமால் பிரமன் என்போரும் கண்டறி யார்; அப்படிப்பட்ட கோகழி எம்கோமான் கடையேனைத் தொண்டு கொண்டதற்கு நாம் செய்யும் கைம்மாறு உளதோ?

குறிப்புரை :

பண்டையதாய பொருளை, `பண்டு` என்றார், `அவன் பால் அணுகா` எனவும், `அவனைக் கண்டார் இல்லை` எனவும், செய்யுட்கண் முன்வரற்பாலனவாய சுட்டுப் பெயர்கள் வருவிக்க. ``கண்டாரும்`` என்ற உம்மை, இழிவு சிறப்பு. ``இல்லை`` என்றதன் பின், `அங்ஙனமாக` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 2

உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு.

பொழிப்புரை :

தொண்டர்களே! நமது மும்மலங்கள் கெடும்படி இன்பப் பெருந் தேனைச் சொரிகின்ற இறைவன் எழுந்தருளி இருக்கிற திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள்! வாழ்த்தினால் நம் பிறவிக்காடு வேரோடு கெடும்.

குறிப்புரை :

உள்ள மலம் - அறிவின்கண் பற்றிய மலம். மாய - கெட. `பிறவிக் காடு கருவும் கெடும்` என மாற்றுக. கருவுங் கெடுத லாவது, முதலும் இல்லாது அழிதல்.

பண் :

பாடல் எண் : 3

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 

பொழிப்புரை :

நெஞ்சே! காட்டில் வேடனாய் வந்தவனும், கடலில் வலையனாய் வந்தவனும், பாண்டி நாட்டில் குதிரைப் பாகனாய் வந்த வனும், நமது வினைகளைக் கெடுத்து நம்மை ஆண்டருள் செய்கின்ற திருப்பெருந்துறையானும் ஆகிய சிவபெருமான் திருவடியை நமது மருள் கெடும் வண்ணம் வாழ்த்துவாயாக!

குறிப்புரை :

காட்டகத்து வேடனாயது, அருச்சுனன் பொருட்டு, கடலில் வலைவாணனாயது, நந்திபெருமான், உமையம்மை இவர் களது சாபந்தீர்த்து ஏற்றருளுதற்பொருட்டு. பரி பாகன் (குதிரை செலுத்துவோன்) ஆயது அடிகட்கு அருளுதற் பொருட்டு. ``காடு`` என்றதில் குறிஞ்சியும் அடங்குதலின், `நானிலத்தும் தோன்றி அருள் செய்பவன்` என அருளிச்செய்தவாறு. நெஞ்சே அருளும் பெருந்துறை யான், வேடன்; வலைவாணன்; பரிபாகன்; அவன் அம் கமல பாதம் வாழ்த்து` என வினைமுடிக்க. மருள் - மயக்கம்; திரிபுணர்வு. ``மருளும்`` என்ற உம்மை, முன்போந்த. ``வினை`` என்றதைத் தழுவி நின்ற எச்சம்.

பண் :

பாடல் எண் : 4

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் - சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையை வணங்கித் துதிக்கின்ற அன்பர்கள், வாழ்ந்தோராவர்; வலிய வினைகளைக் கெடுப்பவர் களும், உலகம் வணங்கித் துதித்தற்கு உரியோரும் ஆவர்.

குறிப்புரை :

`உலகம் தாழ்ந்து ஏத்த` என்க. தாழ்தல் - வணங்குதல்.

பண் :

பாடல் எண் : 5

நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப் - பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 

பொழிப்புரை :

நெஞ்சே! கோகழிக்கு அரசனும், எம்பிராட்டியோடு திருவுத்தரகோச மங்கையில் நிலை பெற்று நீங்காது இருப்பவனுமாகிய சிவபெருமானைச் சிந்தித்து எழுவாயாக! வழிபடுவாயாக!

குறிப்புரை :

`நம் இடர்கள் போயகல எண்ணிப் பெருந்துறையை நண்ணி எழு கோகழிக்கரை` என்றது. `அப்பெருமானை` என்னும் பொருளதாய் நின்றது. ``கோகழிக்கரசனாயும், உத்தரகோசமங்கை மன்னிக் கழியாதிருந்தவனும் ஆகிய பெருமானைக் காண்` என்பதும் பொருள். `காணின், நலம் பெறலாம்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 6

காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 

பொழிப்புரை :

நெஞ்சே! கருவிகள் யாவும் பேரின்ப உருவமாய்ப் போற்றுகின்ற அடியார்கள் தம் பிறவி ஒழியும்படி வழிபடுகின்ற பெரியோனும் திருப்பெருந்துறையை எப்பொழுதும் பிரியாதவனு மாகிய பெருமானை வாயாரப் புகழ்ந்து பேசுவாயாக!

குறிப்புரை :

காணும் கரணங்கள் எல்லாம் - அறிதற்குரிய கருவிகள் யாவும். பேரின்பமெனப் பேணும் அடியார் - பேரின்பத்தை நுகரும் கருவிகளேயாகும் வண்ணம் குறிக்கொண்டு நிற்கும் அடியார்களது; என்றது, `பிராரத்த வினை நுகர்ச்சி தோன்றும்வழி அதனைத் தம் செயலும் பிறர் செயலுமாகக் கொண்டு நுகராது, முதல்வன் செயலேயாகக்கொண்டு நுகரும் அடியார்கள்` என்றபடி. அங்ஙனம் நுகரும்வழிப் பெற்ற சிற்றின்பந்தானே பேரின்பமாய் விளையு மாகலின் (தி.8 திருவுந்தியார் 33), அவர்க்கு ஆகாமியம் இல்லையாம். அஃது இல்லையாகவே பிறப்பும் இல்லாதொழியும். அங்ஙனம் செய்வது திருவருளேயாகலின், `அவரது பிறப்பு அகலக் காணும் பெரி யான்` என்று அருளிச்செய்தார். காணுதல் - நோக்குதல். பேரின்பம் நுகர்தற்கருவிகளை, பேரின்பம்`` என்றார். இவ்வநுபவ நிலைக்கு இத் திருப்பாட்டினைச் சிவஞானமா பாடியத்துள் (சூ.11, அதி.1.) எடுத்துக்காட்டினமை காண்க.

பண் :

பாடல் எண் : 7

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 

பொழிப்புரை :

நல்ல அமிர்தம் போல்பவனாகிய பெருமானது திருவடியை என்மனத்தில் இருத்திச் சொல்லளவைக் கடந்த, அவனது திருவார்த்தையைப் பேசி, அவன் திருப்பெருந்துறையை வாழ்த்தி என் பிறவித் தளையை ஒழித்தேன்.

குறிப்புரை :

பேசும் பொருளுக்கு - பேசுதற்குக் கொள்ளப்படும் பொருளின் இயல்பிற்கு. ``பொருள்`` என்றது அதன் இயல்பிற் காயிற்று. ``இலக்கியம்`` என்பது `இலக்கிதம்` என வந்தது. `இலக்கித மாம் மணி` என இயையும். எனவே, `மக்கள் தம் வாயாற் பேசுதற்கு உரிய பொருள் இறைவனே` என்றவாறாயிற்று. ``பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன்`` என்றதை இறுதிக்கண் கூட்டுக. பிறவியாகிய தீராப் பெரும் பிணியை நீக்கும் மருந்து ஆதலின், ``நல்ல மருந்து``, என்று அருளிச்செய்தார். ``அடி`` என்றது, மருந்திற்கும் ஏற்புடைய தாமாறு அறிக.
சிற்பி