திருவாசகம்-திருப்படையாட்சி


பண் :

பாடல் எண் : 1

கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே.

பொழிப்புரை :

மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன், எழுந்தருளித் தோன்றுவனாயின், இரண்டு கண்களும், அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை மகளிரொடு கூடிவாழ்வதில் முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தை மறத்தல் ஆகாது போகுமோ? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன், ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மைகளைப் பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் தோன்றுதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

இதன்கண் எல்லாத் திருப்பாட்டுக்களிலும், ஈற்றடியை முதலிற்கொள்க.
ஆகாது - உண்டாகாது; நிகழாது. ``ஆகாதே`` என்றது, பன்மை ஒருமை மயக்கம். இவ்வாறு பின்னும் வருவன காண்க. ஏகாரம், எதிர்மறுத்துரைத்தற்கண் வந்த வினாப்பொருட்டு (தொல். சொல். 246.). இது, பின்வருவன பலவற்றிற்கும் ஒக்கும். வாழ்வில் - வாழ்வுபோல. கடைப்படும் - சுதந்திரமின்றி இறைவன் வழிப்படும். இதனைப் பெயரெச்சமாக்கி, `அது` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. இன்னோரன்ன வினைமுற்றுக்கள் பலவும், இங்குத் தொழிற் பெயர்ப் பொருள் தந்தன என்று போவாரும் உளர். பிறந்திடுமாற்றை மறத்தல், இனி அது நிகழாது என்னும் துணிவினாலாம். பாதம் வணங்குதலாக இங்கு அருளிச்செய்வன பலவும், `நேர்படக் கண்டு வணங்குதலாகிய அநுபவ வணக்கத்தையே என்க. அவற்றுள் இது, பாதம் மாலறியா அருமையுடைமையை நினைந்து அருளிச் செய்தது. ``வணங்குதும்`` என்றன்பின், `அஃது` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, ``ஆகாதே`` என்றதனை வேறு தொடராக்கி உரைக்க. இவ் வாறும் வருவன பின்னும் உள. `களிகூர்தரு பண் பாடலொடு` என மாறுக. பயின்றிடும் - பயிலப்பட்டிடும். `பாண்டிநன்னாடுடை யானாகிய சிவபிரான், தன்தொண்டர்களாகிய படையை ஆளும் திறங்கள் பாடுதும்` என்க.
விண் - விண்ணோர். ``களி`` என்றது, வியப்பினை. வேதகம் - வேறுபடுத்தும் பொருள்; அஃது, இங்குத் திருவருள். அது வெளிப்படுதல் - தனது செயலைப் புலப்படுத்தல். விண்ணோர் வியத்தல், மண்ணோர், தம்மினும் மேலோராய் மாறினமை குறித்தாம். வலைவாணரை அடிகள் வேடர் எனவும் குறித்தலை, ``கிராத வேடமொடு`` (தி.8 கீர்த்தித். 15.) என்றவிடத்தும் காண்க.

பண் :

பாடல் எண் : 2

ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பறு மாகாதே
உன்னடி யார்அடி யார்அடி யோமென உய்ந்தன வாகாதே
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
காரண மாகும் அனாதி குணங்கள் கருத்துறு மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
நாமுமெ லாம்அடி யாருட னேசெல நண்ணுது மாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே.

பொழிப்புரை :

இடபவாகனத்தை உடையவனும், என்னை அடிமையாகவுடைய தலைவனுமாகிய சிவபெருமான் என்னுள்ளே புகுவானாயின், உயிரோடு உடம்பும் ஒப்பற்ற ஐம்பொறிகளோடு ஐம்புலன்களும் கலந்து உயிர்க்கும் தன்மை அறுதல் ஆகாது போகுமோ? இறைவனே! உன் அடியார்க்கு அடியோம் என்று சொல்லித் துன்பங்கள் பலவும் நீங்குதல் ஆகாது போகுமோ? கன்றை எண்ணி எழுகின்ற தாய்ப் பசுவைப் போல இறைவன் முன் வந்து உருகுகின்ற தன்மை ஆகாது போகுமோ? எல்லாச் செயல்களுக்கும் காரணமாகிய இறைவனுடைய குணங்கள் என் மனத்தில் பொருந்துதல் ஆகாது போகுமோ? இது நல்லது இது தீயது என்று ஆராய்ந்து அதனால் உண்டாகிய மனக் கலக்கம் நீங்குதல் ஆகாது போகுமோ? முன்னைய அடியார்களுடன் வீட்டுலகிற் சென்று சேர ஒன்று கூடுவதும் ஆகாது போகுமோ? எந்நாளும் எனது அன்பு நிறைந்த மேலான அமுதம் அடைவது ஆகாது போகுமோ?

குறிப்புரை :

ஒன்றினொடு ஒன்றும் - ஒன்றாகிய உயிரோடு பொருந்துகின்ற. ஐந்தினொடு ஐந்து - ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், உயிர்ப்பு அறும் - செயலறும். `அடியாரடி யோம்` என்னாது, ``அடியா ரடியா ரடியோம்`` என்றார், `தமது தகுதி அத்துணையதே` என்றற்கு. என - என்று சொல்லி. உய்ந்தன - உய்ந்த செயல்கள்; இது, துணிவினால் எதிர்காலம் இறந்தகாலம் ஆயவாறு; இவ்வாறு பின்னும் வருவன உள. வந்தவன் இறைவன். கணக்கு - நிலைமை. அது, பகுதிப்பொருள் விகுதி. காரணமாகும் - எப் பொருட்கும் காரணன் ஆகின்ற. அனாதி - ஆதியில்லாதவன்; இறைவன். `அவனது குணங்கள் எட்டு` என்பதனைப் பின்னர் (தி.8 திருப்படையாட்சி பா.7) அருளிச் செய்தல் காண்க. கருத்து உறும் - எம் உள்ளத்தில் பொருந்தும். ``இது`` என்றது, தாப்பிசையாய், முன்னரும் சென்று இயையும். நடுக்கம் - துன்பம்; அது, துன்பத்திற் ஏதுவாகிய விருப்பு வெறுப்புக்களைக் குறித்தது. நடந்தன - விலகுவன. செல - இறையுலகத்திற்குச் செல்ல. நண்ணுதும் - தொடங்குவோம். அன்பு நிறைந்த - அன்பு சென்று நிறைந்ததாகிய. பராவமுது - எங்கும் நிறைந்த இன்பம்.

பண் :

பாடல் எண் : 3

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர் ஏகுவ தாகாதே
என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே.

பொழிப்புரை :

என்னுடைய தலைவனாகிய ஈசன் எதிரே தோன்று வனாயின் பாசத் தொடர்பினால் உண்டாகும் மாறுபட்ட குணங்கள் அழிவதும் ஆகாது போகுமோ? பாவனை செய்கின்ற மனத்தினில் ஊறுகின்ற மேலான அமுதம் ஆகாது போகுமோ? எல்லையில்லாத உலகப் பொருள்களும் நமது உள்ளத்தில் அகப்படுதல் ஆகாது போகுமோ? எல்லாவற்றிக்கும் முதலான பரஞ்சுடர் நெருங்கும்படி ஆகாது போகுமோ? மிகச் சிவந்த வாயினையுடைய பெண்களால் வரும் துன்பங்களானவை ஒழிந்து போதல் ஆகாது போகுமோ? சேல் மீன் போன்ற கண்கள் அவனது திருமேனி அழகில் ஈடுபடுதல் ஆகாது போகுமோ? இந்திர சாலம் போன்ற மயக்குகின்ற பிறவித் துன்பம் ஒழிதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

பந்த விகார குணங்கள் - கட்டுண்டற்கு ஏதுவாகிய வேறுபட்ட குணங்கள்; அவை முக்குணங்கள். பறிந்து - தொடர்பு அற்று. மறிந்திடும் - வந்தவழியே நீங்கும். பாவனையாய கருத்து - பாவிப்பதாகிய உள்ளம். ``வந்த பராவமுது`` என்றதனை, `பராவமுது வந்தது` என மாற்றியுரைக்க.
வந்தது - அநுபவமாயது. அந்தம் - அழிவு. அகண்டம் - பூரணப் பொருள். உம்மை, சிறப்பு; `அது, நம்முள் அகப்பட்டுத் தோன்றும்` என்க. ஆதிமுதற் பரமாய பரஞ்சுடர் அண்ணுவது - எப்பொருட்கும் முதலும், எல்லா முதன்மையும் உடையதும் ஆகிய மேலான ஒளியை நாம் அணுகுவது. தம் கண்களை, ``சேலன கண்கள்`` என்றார், அவன் திருமேனி அழகு எம்மைப் பெண்மைப் படுத்தியது என்றற்கு.
`இந்திர ஞாலம் போலும் பிறவி` என்க, இது, கடிதின் மறைந்தும் தோன்றியும் வருதல் பற்றி வந்த உவமை. ``இடர்`` என்றது, பிறவியது தன்மையையும், ``துயர்`` என்றது அதனால் விளையும் நிலையையும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 4

என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
மாமறை யும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

என்னை ஆளாக உடைய பெருமானும், அருளு கின்ற ஈசனும் ஆகிய இறைவன் எழுந்தருளி வரப் பெற்றால் என்னுடைய அழகு பொருந்திய தனங்கள் இறைவனது திருமார்போடு பொருந்தி உடனாக இன்புறுதல் ஆகாது போகுமோ? பெரிய கருணைக் கடல் இனிது இன்பமாக ஆடுவதும் ஆகாதே போகுமோ? நல்ல மணி ஓசை என் உள்ளத்திலே பொருந்த அதனை நான் அடைதல் ஆகாது போகுமோ? இறைவனது அழகிய திருநீற்றை நாள்தோறும் அணிவது ஆகாது போகுமோ? நிலை பெற்ற அன்பரில் எனது பணி யானது முற்பட நிகழ்வது ஆகாது போகுமோ? பெருமை பொருந்திய வேதங்களும் அறிய முடியாத தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்குதலும் ஆகாது போகுமோ? இனிய தன்மையுடைய செங்கழு நீர்மலர் மாலை, என்மேல் பொருந்துதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

ஆகம் - இறைவனது மார்பு. அளைந்து - கலந்து; இதனை, `அளைய` எனத் திரிக்க. உடன் - ஒருங்கு. `யான் பெண்மை யுடையேனாய் அவனொடு கலந்தாற்போலும் இன்பத்தை அடையும் அத்தன்மை ஆகாதே` என்பது முதலடியின் பொருள். இதுவும், மேல் `சேலன கண்கள் அவன் திருமேனி திளைப்பன`` என்றாற்போல, இறைவன் திருமேனியது அழகைச் சிறப்பித்ததாம். ``நன்மணி ......நண்ணுவது`` என்றது, `யோகநிலை தானே கைவரும்` என்றதாம். நித்தலும் ``நண்ணுவது`` என்றது, நண்ணுதலாகிய அதன் பயன்மேல் நின்றது; அப்பயனாவது மும்மலங்களும் நீங்கப் பெறுதல். வைகுவது - பொருந்துவது. அடிகள் சிவபிரானுக்குச் செங்கழுநீர் மாலை கூறுவராகலின் (தி.8 கீர்த்தித். 113-114) அது நேரே தமக்குக் கிடைக்கப்பெறும் என்றார். பெறில் - அப்பேற்றினை யாம் பெற்றால்.

பண் :

பாடல் எண் : 5

மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
காதல்செ யும்அடி யார்மனம் இன்று களித்திடு மாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே
பேரறி யாத அநேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

என்னை ஆளாக உடைய பெருமானும் அருளு கின்ற ஈசனுமாகிய இறைவன் எழுந்தருளப் பெற்றால் உலகினில் மாயா காரியங்களை விரும்பிச் செய்ததனால் உண்டாகிய மயக்க உணர்ச்சியறுதலும் ஆகாது போகுமோ? தேவரும் அறிய முடியாத தாமரை மலர் போன்ற திருவடியை வழிபடுதல் ஆகாது போகுமோ? ஆணவ இருளில் அழுந்தி அழிவில்லாது கிடந்த காலம் முழுவதினும் வந்த கலக்கமானது அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? அன்பு செய்கின்ற அடியவரது மனமானது இப்பொழுது களிப்புற்றிருத்தல் ஆகாது போகுமோ? பெண் அலி ஆண் என்றும் நிலம், நீர் என்றும், உண்டாகிய மாறுபாடு அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? பெயர் களை அறியாத பல பிறவிகளினின்றும் தப்புதல் முடியாது போகுமோ? எண்ணிலாத அற்புதச் செயல்கள் வந்து என்னை அடைதல், ஆகாது போகுமோ?

குறிப்புரை :

இறைவன் மதித்து வகுத்த மாயா காரியங்களை, மாயையே மதித்து வகுத்ததுபோல அருளிச்செய்தார். இங்கு, பாதம், வானவரும் அறியாத அருமையுடைமையை நினைந்து அருளிச் செய்தார். கண் இலி - கண்ணோட்டம் இல்லாத கூற்றுவன். ``ஆட்பார்த் துழலும் அருளில் கூற்று`` (நாலடி - 20) என்றார் பிறரும். காலம் - இறுதிக்காலம். வந்த கலக்கு - வந்ததனால் உண்டாகிய கலக்கம். அடியார் மனம் களித்தல், தாம் பெற்ற பேறு தம் தமர்க்கும் கிடைத்தமை பற்றி. `பிறர்` என்பதனை ``பெண் அலி ஆண்`` என வகுத்தோதினார். உணர்வு அங்ஙனம் வேறுபடுதல் பற்றி. பிணக்கு - ஞானத்திற்கு மாறாய உணர்வு. பேர் அறியாத - இன்ன என அறிந்து சொல்ல இயலாத. இனி, பேர்தல், (நீங்குதல்) அறியாத என்றுமாம். பவங்கள் - பிறப்புக்கள். பிழைத்தன - தப்பிய செயல்கள். பிறவியினின்றும் நீங்கு தல் ஒன்றேயாயினும், பல பிறவிகட்கும் காரணமாய வினைகளை நோக்கப் பலவாம் என்பது பற்றி, `பிழைத்தன` என்றார். சித்திகள் தாமே வருவன என்க.

பண் :

பாடல் எண் : 6

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யார்அடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம்உட னேஉய வந்து தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

என்னை முன்னே ஆளாகவுடைய ஈசனும், தந்தையுமாகிய இறைவன் எழுந்தருளப் பெற்றால் பொன்னிறம் பொருந்திய திருமேனியில் திருவெண்ணீறு விளங்கித் தோன்றுதல் ஆகாது போகுமோ? பெரிய முனிவர்களுடைய கைகள் குவிக்கப் பெற்று மலர் மாரியைப் பெய்தல் ஆகாது போகுமோ? மின்னலைப் போன்று நுட்பமான இடையை உடைய பெண்ணினது வஞ்சனை யான எண்ணம் வெளிப்படுதல் ஆகாது போகுமோ? வீணையானது முழங்குதலால் உண்டாகின்ற ஒலியைப் போன்ற இன்பமானது மிகுந்திடுதல் ஆகாது போகுமோ? அவன் அடியாருடைய திருவடிகள் என் தலை மீது விளங்குதல் ஆகாது போகுமோ? அடியோங்கள் உய்தி பெறும்படி, தான் எழுந்தருளி வந்து எங்களுடன் கலத்தல் ஆகாது போகுமோ? எவ்விடத்தும் இனிய ஓசைகள் நிறைந்து இனிமையாக ஒலித்தல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

திருமேனி, இறைவனுடையது. பொலிந்திடும் - கண்முன் விளங்கும். `பூமழையைப் பொழிந்திடும்` என்க. நல்லன நிகழுங்கால், தேவரும், முனிவரும் பூமழை பொழிந்து வாழ்த்துவர் என்க. ``கருத்து`` என்றது, வஞ்சனையை. தான் - இறைவன். உடனே - ஒருசேர. தலைப்படுதல் - அளவளாவுதல். இயம் - வாச்சியம்.

பண் :

பாடல் எண் : 7

சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த பராபர மாகாதே
பண்டறி யாதப ராநுப வங்கள் பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான், எங்களை ஆளும்பொருட்டு எழுந்தருளப் பெற்றால் சொல்லுவதற்கு முடியாதபடி உண்டாகின்ற, தூய்மையான மணி ஓசை இன்பத்தைத் தருதல் ஆகாது போகுமோ? மிக விரைவாக, என் உள்ளத்தில் பொருந் திய சோதி இடைவிடாது வளர்தல் ஆகாது போகுமோ? பல வகையான மன அலைவு கெடும்படி வந்தருளின, பரம்பொருளினது பயன் உண்டாகாது, போகுமோ? முற்காலத்திலும் அறிந்திராத மேலான அனுபவங்கள் விரிந்து தோன்றுதலும் உண்டாகாது போகுமோ? வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடைய பெண் களது ஆசை போன்றதோர் ஆசை, இப்பொழுது முடிவு உண்டாகாது போகுமோ? தேவரும் அறியாத மேன்மையான பொருள் இந்தப் பொருள்தான் என்ற உணர்வு தோன்றாது போகுமோ? வரம்பு இல்லாதனவாகிய எண் குணங்களானவை என்னிடத்துப் பொருந்துதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

சொல் இயலாது - சொல் நிகழ்ச்சி அற்றவிடத்து. `இயலாதவழி` என்பது, `இயலாது` எனத் திரிந்தது. தூமணி ஓசை - திருச்சிலம்பின் நாதம். இது நிராதார யோகத்திற் கேட்கப்படும் என்பதனை,
``ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசைவழி யேசென் றொத்தொடுங்கின்``
என்னும் திருக்களிற்றுப்படி(33)யான் உணர்க. துண்ணென - விரை வாக. பல்லியல்பு - மாயாகாரியங்களான் விளைவன. பராபரம் - மேலும் கீழுமாய் (எங்குமாய்) நிற்கும் பொருள். இங்கும், `பாரபரம் வந்தது` என மாற்றி உரைக்க. பர அநுபவங்கள் - மேலான அநுபவங்கள். `நன்னுதலார் மயல் போலும் மயல் எனக்கு விளைந்திடும்` என்றபடி. இஃது இறைவனிடத்தே தமக்கு உளதாகும் காதலைப் புலப்படுத்தியது. இப்பொருள் - இங்கு வந்து நிற்கும் பொருள். எல்லை இலாதன - அழிவில்லாத. எண் குணங்கள், `தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்ககையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், முடிவிலாற்ற லுடைமை, பேரருளுடைமை, வரம்பிலின்பமுடைமை` என்னும் இவை. இவை இறைவனுடைய அருட் குணங்களாகும்.
``எட்டு வான்குணத் தீசன்எம் மான்றனை`` -தி.5 ப.89 பா.8
எனவும்,
``இறையவனை மறையவனை எண்குணத்தி னானை``
-தி.7 ப.40 பா.3
எனவும் போந்த திருமொழிகளையும் காண்க.
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.-குறள்.9
எனத் திருவள்ளுவரும் கூறினார். இந்து சிகாமணி - சந்திரனைத் தலைமணியாகச் சூடியவன்.

பண் :

பாடல் எண் : 8

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎ லாம்அடி யாரடி யோம்எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடி யார்கள் சிவாநு பவங்கள் தெரிந்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈறறி யாமறை யோன்எனை ஆள எழுந்தரு ளப்பெறிலே. 

பொழிப்புரை :

முடிவு அறியப்படாத, மறையோனாகிய இறைவன், என்னை ஆளும் பொருட்டு எழுந்தருளப் பெற்றால் பல சங்குகள் ஒன்று சேர்ந்து முழங்கினால் எழுகின்ற ஓசையில் விளையும் இன்பம் போன்றதோர் இன்பம், மிகுதிப்படுதல் ஆகாது போகுமோ? பிறந்த இனம் பற்றி விடாது வருகிற தன்மைகள் நம்மிடம் இருந்து நீங்குதலும் ஆகாது போகுமோ? அப்பொழுது, இது நன்று, இது நன்று எனும் மயக்கம் தணிதல் ஆகாது போகுமோ? ஆசை முழுவதும் யாம் இறைவன் அடியார்க்கு அடியோம் என்னும் அவ்வளவே ஆகாது போகுமோ? சிவந்த கயல் மீன் போன்ற ஒளிமிக்க கண்களை உடைய, பெண்களது மனமானது நன்கு விளங்குதல் ஆகாது போகுமோ? சிறப்பினையுடைய அடியார்களது சிவாநுபவங்களை உணர்தல் ஆகாது போகுமோ? எவ்விடத்தும் நிறைந்து பேரின்பத்தைப் பொழிகின்ற மேலான சோதியை அடைதல் ஆகாது போகுமோ?

குறிப்புரை :

``சங்கு திரண்டு....தழைப்பன`` என்றதும், மேல், ``நன்மணி நாதம் முழங்கி`` (தி.8 திருப்படையாட்சி பா.4) என்றாற் போல, யோகப் பயனைக் கூறியதாம். சாதி விடாத குணங்கள் - சாதிபற்றி நீங்காதிருக்கின்ற குணங்கள். நம்மோடு - நம்பால். சலித்திடும் - தளர்ச்சி யெய்தும். அங்கு - அவை சலித்த விடத்து. ``இது, இது`` என வந்த சுட்டுக்கள் வேறு வேறு பொருளைச் சுட்டின. `அங்கது` எனப்பாடம் ஓதுதலே சிறக்கும். மாயை - மயக்கம். ``அத்தனை`` என்றது, `அதற்குமேற் செல்லாது` என்றவாறு. சிந்தை திளைத்தல் - எண்ணத்தை நன்குணர்தல். தெரிந்திடும் - நம் அறிவிலும் நன்கு விளங்கும்.
சிற்பி