திருவாசகம்-அச்சோப் பதிகம்


பண் :

பாடல் எண் : 1

முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச்
சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

முத்தி வழியை அறியாத மூர்க்கரோடு கூடி அவர் வழியில் முயல்கின்ற எனக்குப் பத்தி வழியை அறிவித்து, என் பழவினைகள் ஓடும்படி மனமாசு அகற்றிச் சிவ வடிவமாக்கி என்னை ஆண்டருளினன், எமது தந்தையாகிய சிவபெருமான். அப்பெருமான் அருள் செய்த பேற்றைப் பெற வல்லவர் வேறு யாவர்?

குறிப்புரை :

முயலுதல் - செயல் செய்தல். மூர்க்கரோடு சேர்ந்து செய்யும் செயல் தீதாம் என்பது சொல்லவேண்டா. பாறும் வண்ணம் - அழியும்படி. சித்தம் - உள்ளம்; என்றது, அறிவை. `தானாக்கி` என்பதனை, `சிவமாக்கி` என்றார். ஆளுதல் - தன் இன்பத்தை நுகரச் செய்தல். `அருளிய முறைமையை இவ்வுலகில் யார் பெறுவார்` என்க. அச்சோ - இது வியப்பு.

பண் :

பாடல் எண் : 2

நெறியல்லா நெறிதன்னை
நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

பொழிப்புரை :

கெட்ட வழியை நல்ல வழியாக நினைக்கின்ற எனக்குத் தாழ்ந்த வழிகளில் சேராதபடி தன் திருவருளையே சேரும் வண்ணம் இறைவன் தன் திருவிளையாடலைச் செய்தான். அவ்விறைவன் அருளிய பேற்றைப் பெறவல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

குறி - அறிதற்குரிய அடையாளம்; அவை, உருவும் பெயரும் முதலாயின. `அவற்றுள் ஒன்றும் இல்லாத` என்றபடி. தன் கூத்து - தனது திருவிளையாட்டு; அஃது அனைவரையும் தானாகச் செய்யும் செயல். அறியும் வண்ணம் அருளியது - அஃது அநுபவமாம்படி செய்தது.

பண் :

பாடல் எண் : 3

பொய்யெல்லாம் மெய்யென்று
புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை
மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

பொய்யை மெய்யென்பது கருதி மாதர் இன்பத்தில் மயங்கி நின்ற என்னை, அழியாமல் காத்தருளித் தனது திருவடியையே அடையும் வண்ணம் இறைவன் அருள் பாலித்தான். எனக்கருள் செய்த இப்பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

பொய் - நிலையாதனவாய இவ்வுலகப் பொருள்கள். ``கழலே`` என்னும் ஏகாரம், பிரிநிலை. ``ஐயன்`` என்றதனை, ``பிரான்`` என்றதன்பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 4

மண்ணதனிற் பிறந்தெய்த்து
மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி
எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத்
தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

பொழிப்புரை :

மண்ணுலகில் பிறந்து இளைத்து மடிந்து விழக் கட வேனுக்கு அளவுபடாத அன்பை அருள் செய்து என்னை ஆண்டான். மேலும் எனக்குத் தன் திருவெண்ணீறு அணிவித்து, தூய்மையாகிய முத்தி நெறியை அடையும் வண்ணம் அருள்செய்தான். அவ்விறைவன் எனக்கு அருள் செய்த பேற்றைப் பெறவல்லவர் யாவர்?

குறிப்புரை :

எண்ணம் இலா அன்பு - நான் எதிர்பாராத அன்பு.

பண் :

பாடல் எண் : 5

பஞ்சாய அடிமடவார்
கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர
நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே
அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

பெண்ணுடைய கடைக்கண்ணால் துன்பம் அடைந்து நிற்கின்ற நான் உன்னருளைப் பெற்றேன். அதனால் பிழைத்தேன். அடியேனை வாவென்று அழைத்து அஞ்சேல் என்றருளின அப்பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

பஞ்சு ஆய - பஞ்சு பொருந்திய. நெஞ்சு ஆய - உள்ளத்திற் பொருந்திய. கூர - மிக்கெழ. `நீ எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார்` என்க.

பண் :

பாடல் எண் : 6

வெந்துவிழும் உடற்பிறவி
மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார்
குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு
பரிசறஎன் துரிசுமறுத்
தந்தமெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

இந்தப் பிறவியை மெய்யெனக் கருதித் தீவினைகளைப் பெருக்கிப் பெண்ணின் தனங்களின் மேல் விழுகின்ற என்பற்றினை நீக்கி என்னை ஆண்டருளி, என் குற்றங்களையும் அழித்தான். மற்றும் முடிவான பொருளை எனக்கு அருள் செய்தான். அவன் செய்த பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

`உடலாகிய இப்பிறவி` எனச் சுட்டு வருவிக்க. பரிசு - கைம்மாறு. துரிசு - குற்றம். அந்தம் - அருள வேண்டும் அளவு.

பண் :

பாடல் எண் : 7

தையலார் மையலிலே
தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து
பாசமெனுந் தாழுருவி
உய்யுநெறி காட்டுவித்திட்
டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.

பொழிப்புரை :

பெண்கள் மயக்கத்தில் தாழ்ந்து விழக் கடவேனாகிய என்னை, மெல்லக் கொண்டுவந்து பாசம் என்கிற தாழைக் கழற்றி, உய்யும் வழியைக் காட்டி, ஓங்காரப் பொருளையும் எனக்கு அருள் செய்தான். அப்பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

பையக் கொடுபோந்து - மெல்லத் தன்பால் வருவித்து; இது குதிரை வாங்குதல் முன்னிலையாகத் திருப்பெருந்துறையை அடையச் செய்தமையைக் குறித்தல் கூடும். தாழ் - பூட்டு; விலங்கு. உருவி - நீக்கி. ``தாள், தாழ்`` என வந்தது என்பாரும் உளர்; அதற்குப் `பாசத்தின்` என்னாது, ``பாசம் எனும்`` என்ற பாடம் ஏலாமை அறிக. ஓங்காரத்து உட்பொருள், உயிர்களின் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவிப்பவன்தானே (இறைவனே) என்னும் உண்மை. அருளியது, அநுபவமாக உணரச் செய்தது.

பண் :

பாடல் எண் : 8

சாதல்பிறப் பென்னுந்
தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார்
கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான்
தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

பொழிப்புரை :

இறப்பும் பிறப்பும் என்கிற பெரிய சுழிகளில் சிக்கித் தடுமாறி பெண்கள் இன்பத்தில் வீழ்கின்ற நான், தன் திருவடியை அடையும் வண்ணம் இறைவன் அருள் செய்த பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

தடஞ்சுழி - பெரிய சுழல். ``ஆதி`` என்றதனை, ``பிரான்`` என்றதன் பின் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 9

செம்மைநலம் அறியாத
சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து
முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி
நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே. 

பொழிப்புரை :

செப்பமாகிய நல்வழியை அறியாத அறிவிலி களோடு கூடித் திரிகின்ற என்னை முதல்வனாகிய பெருமான் மும்மலங்களையும் அறும்படி செய்து, எம்மையும் ஓர் பொருளாக்கி, இந்நாயைச் சிவிகையில் ஏற்றினான். எனக்கு அருள் செய்த பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

குறிப்புரை :

செம்மை நலம் - செப்பத்தின் நன்மை. செப்பமாவது, திருவருள் நெறி, இதற்கு மாறாவது, கொடுமை (கோணல்) அது, தற்போத நெறி. சிதடர் - குருடர்; ஞானம் இல்லாதவர் என்றபடி. ``மும்மை`` என்றது `மூன்று` என்னும் துணை நின்றது, ``தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்`` (பரிபாடல்-திரட்டு-4) என்புழிப்போல, முதலாய முதல்வன் - முதல்வர்க்கெல்லாம் முதல்வனாகிய முதல்வன்; ஏற்றுவித்த - ஏற்றுவித்தாற்போன்ற செயலைச் செய்த. அம்மை - தாய் போல்பவன்.
சிற்பி