திருக்கோவையார்-பாங்கற்கூட்டம்


பண் :

பாடல் எண் : 1

பூங்கனை யார்புனற் றென்புலி
யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண் டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை யெய்துதற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்: பூ கனை ஆர் புனல் தென் புலியூர் அம்பலத்து புரிந்து பூக்களையுடைத்தாய் முழங்குதனிறைந்த புனலையுடைத் தாகிய தென்புலியூரம்பலத்தின்கண் விரும்பி; ஆங்கு எனை ஆண்டு கொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே பாங்கனை அவ் வாறென்னை யாண்டுகொண்டு ஆடும் பிரானுடைய அடியாகிய தாமரைகட்கே பாங்காயுள்ளானை; யான் அன்ன பண்பனை என்னையொக்கு மியல்பையுடையானை; கண்டு இப்பரிசு உரைத்தால் கண்டு நிகழ்ந்த விப்பரிசையுரைத்தால்; மடம் பாவையை எய்துதற்கு ஈங்கு எனை தடுப்பார் யார் மடப் பாவையை எய்துதற்கு இவ்வுலகத்தின்கண் என்னைத்தடுப்பார் யாவர்? ஒருவருமில்லை எ -று.
அம்பலத்துளாடும் பிரானெனவியையும். தென்புலியூர் புரிந்தம்பலத்துளாங்கெனை யாண்டு கொண்டென்பதற்குப் பிறவு முரைப்ப. ஆங்கென்றார் ஆண்டவாறு சொல்லுதற் கருமையான். ஏழையினென்புழி. இன்: ஏழனுருபு; அது புறனடையாற் கொள்ளப் பட்டது. பையுள் - நோய்; மயக்கமெனினு மமையும். மெய்ப்பாடு: அசைவுபற்றி வந்த அழுகை. என்னை,
இளிவே யிழவே யசைவே வறுமையென
விளிவில் கொள்கை யழுகை நான்கே
-தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல்.5
என்றாராகலின். பயன்: ஆற்றாமை நீங்குதல். மேற்றோழியால் என்குறை முடிக்கலாமன்று கருதிப் பெயர்ந்த தலைமகன் பாங்கனால் முடிப்பலெனக்கருதினானென்பது. என்னை, தமரான் முடியாக் கரும முளவாயினன்றே பிறரைக் குறையுற வேண்டுவதென்பது.

குறிப்புரை :

2.1 பாங்கனை நினைதல்
பாங்கனை நினைதல் என்பது தெய்வப்புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்துதற் கருமைநினைந்து வருந்தாநின்ற தலைமகன் அவள் கண்ணாலறியப்பட்ட காதற்றோழியை நயந்து, இவள் அவட்குச்சிறந்த துணையன்றே; அத்துணை எனக்குச் சிறந்தாளல்லள்; எனக்குச் சிறந்தானைக்கண்டு இப்பரிசுரைத்தாற் பின்னிவளைச் சென்றெய்தக் குறையில்லையெனத் தன்காதற் பாங்கனை நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்
எய்துதற் கருமை யேழையிற் றோன்றப்
பையு ளுற்றவன் பாங்கனை நினைந்தது.

பண் :

பாடல் எண் : 2

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்: சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என்சிந்தையுள்ளும் உறைவான் காவலாயுள்ள மிக்க நீரையுடைய தில்லைச்சிற்றம்பலமாகிய நல்லவிடத்தும் என்னெஞ்சமாகிய தீயவிடத்தும் ஒப்பத்தங்குமவனது; உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒள் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ உயர்ந்த மதிலையுடைய கூடலின்கணாராய்ந்த ஒள்ளிய வினிய தமிழின்றுறைகளிடத்து நுழைந்தாயோ?; அன்றி ஏழிசை சூழல் புக்கோ அன்றி ஏழிசை யினது சூழலின்கட் புகுதலானோ; இறைவா இறைவனே; தடவரை தோட்கு புகுந்து எய்தியது என் கொலாம் பெரிய வரைபோலு நின்றோள்கட்கு மெலியப்புகுந்தெய்தியதென்னோ? எ-று.
தமிழின் றுறைகளாவன ஈண்டு அகமும் புறமுமாகிய பொருட்கூறு. ஏழிசை யாவன குரல் முதலாயின. சூழலென்றது அவற்றானியன்ற பண்ணும் பாடலு முதலாயினவற்றை. கொல்; கொலாமென வீறுதிரிந்தது; ஆம்: அசைநிலை யெனினுமமையும். கலி புகழான் வருமாரவாரம்; தழை த்த வெனினுமமையும். மெய்ப்பாடு: அணங்குபற்றிவந்த அச்சம். என்னை,
அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் #9;
பிணங்கல் சாலா வச்ச நான்கே #9;
-தொல். பொருள். மெய்ப்பாட்டியல் -8.
என்றாராகலின். பயன்: தலைமகற்கு உற்றதுணர்தல்.

குறிப்புரை :

2.2 பாங்கன் வினாதல்
பாங்கன் வினாதல் என்பது தன்னை நினைந்து வாராநின்ற தலைமகனைத் தான் எதிர்ப்பட்டு அடியிற்கொண்டு முடிகாறு நோக்கி, நின்னுடைய தோள்கள் மெலிந்து நீ யிவ்வாறாதற்குக் காரண மென்னோவென்று பாங்கன் முந்துற்று வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.

பண் :

பாடல் எண் : 3

கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென்
னாற்ற லகற்றியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை ஓந்திக் கொதுங்கிப் புறப்பட்டிரைகவராத மயில்; குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பைப் பிடித்து படம் கிழித்தாங்கு குஞ்சரத்தைக் கோளிழைக்க வல்ல பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற்போல; மான் மடம் நோக்கிஅ பணை முலைக்கு தேம்பல் துடி இடை மானின் மடநோக்குப்போலும் நோக்கையுடையாளுடைய அப்பணை முலையானே தேய்தலையுடைய துடிபோலுமிடை; தில்லை சிவன் தாள் ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியது தில்லைக் கணுளனாகிய சிவனுடைய தாளாகிய பொன் போற் சிறப்புடைய பெரிய தாமரைப்பூவைச் சூடுகின்ற எனது வலியை நீக்கிற்று எ - று.
குஞ்சரம் தான் உவமையன்றி உவமைக்கடையாய் அதனாற் றல் விளக்கி நின்றது. தடமலர் தான் உவமிக்கப்படும் பொருளன்றி உவமிக்கப்படும் பொருட்கடையாய் அதனாற்றல் விளக்கி நின்றது. அப்பணைமுலைக்கே யென்றிழித்தது இவள் முலையை நோக்கி யன்று, முலையென்னுஞ் சாதியைநோக்கி. துடியிடையை யுடைய மான்மடநோக்கி என்னாற்ற லகற்றியது மஞ்ஞை பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற்போலுமெனக் கூட்டியுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: பாங்கற் குணர்த்துதல்.

குறிப்புரை :

2.3 உற்றதுரைத்தல்
உற்றதுரைத்தல் என்பது எதிர்ப்பட்டு வினாவாநின்ற பாங்கனுக்கு, நெருநலைநாட் கயிலைப்பொழிற்கட் சென்றேன்; அவ்விடத்து ஒரு சிற்றிடைச்சிறுமான்விழிக் குறத்தியால் இவ்வாறாயினேனெனத் தனக்குற்றது கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
மற்றவன் வினவ
உற்ற துரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

உளமாம் வகைநம்மை யுய்யவந்
தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய
தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
நின்றொர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
மண்ண லிரங்கியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:உளம் ஆம் வகை உய்ய வந்து நம்மை ஆண்டு உளமாயும் இலமாயும் மாறிவாராது நாமொருபடியே உளமாம் வண்ணம் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தான்வந்து நம்மையாண்டு; உம்பர் சென்று உய்ய உம்பரெல்லாந் தன்கட்சென்று பிழைக்க; களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை மிடற்றின்கணுளதாகு நஞ்சை யமிர்தமாக்கிய தில்லைக் கணுளனாகிய பழையோனது கயிலையில்; வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற வளவிய மாஞ்சோலைக்கண் வருத்துவதென்றறியாமல் நின்று; வஞ்சி மருங்குல் ஒர் இளமான் விழித்தது என்றோ எம் அண்ணல் இன்று இரங்கியது வஞ்சிபோலு மருங்குலையுடைய தோரிளமான் விழித்ததென்றோ எம்மண்ணல் இன்றிரங்கியது! இது நின்பெருமைக்குத் தகாது எ-று. நம்மையென்றது தம்மைப் போல் வாரை. களமார்விட மென் பதூஉம் பாடம். மெய்ப்பாடு: எள்ளல்பற்றி வந்த நகை. என்னை,
எள்ள லிளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப
-தொல். பொருள். மெய்ப்பட்டியல்-4
என்றாராகலின். பயன்: கழறுதல்.

குறிப்புரை :

2.4 கழறியுரைத்தல்
கழறியுரைத்தல் என்பது உற்றதுரைப்பக்கேட்ட பாங்கன், இஃது இவன்றலைமைப் பாட்டிற்குப் போதாதென உட்கொண்டு, நீ ஒரு சிறுமான் விழிக்கு யான் இவ்வாறாயினேனென்றல் நின் கற்பனைக்குப் போதாதெனக் கழறிக்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
வெற்பனைத்தன் மெய்ப்பாங்கன்
கற்பனையிற் கழறியது.

பண் :

பாடல் எண் : 5

சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
மென்றோட் கரும்பினையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லைச் சிற்றம்பலத்து சேய்மைக்கண் விளங்கித் தோன்றாநின்ற செம்பொனா னியன்ற மாளிகையையுடைய தில்லைச் சிற்றம்பலத்தின்கணுள னாகிய; மாணிக்கம் கூத்தன் வட வான் கயிலை மயிலை மாணிக்கம் போலுங் கூத்தனது வடக்கின்கணுண்டாகிய பெரிய கயிலைக்கண் வாழுமயிலை; மன்னும் பூணின் பொலி கொங்கை ஆவியை பொருந்திய பூண்களாற் பொலிகின்ற கொங்கையையுடைய என்னுயிரை; ஓவியம் பொன் கொழுந்தை காணின் கழறலை ஓவியமாகிய பொற்கொழுந்தைக் கண்டனையாயிற் கழறாய்; மென்தோள் கரும்பினை கண்டிலை மென்றோளையுடைய கரும்பைக் கண்டிலை எ - று.
மாணிக்கக்கூத்தன் என்புழி மாணிக்கத்தைக் கூத்திற் குவமையாக வுரைப்பினுமமையும். பொற்கொழுந்து பொன்னை வண்ணமாகக் கொண்டெழுதிய கொழுந்து. மென்றோட் கரும்பினை யென்பதற்கு மெல்லிய தோளிலெழுதிய கரும்பையுடையாளை யெனினுமமையும்.
மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்து வருத்தம் பற்றிவந்த விளிவரல். என்னை,
மூப்பே பிணியே வருத்த மென்மையோ
டியாப்புற வந்த விளிவர னான்கே
-தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல்-6
என்றாராகலின். பயன்: பாங்கனை யுடம்படுவித்தல். பாங்கன் கழறவும் இவ்வகை மறுத்துரைத்தானென்பது.

குறிப்புரை :

2.5 கழற்றெதிர்மறுத்தல்
கழற்றெதிர்மறுத்தல் என்பது காதற்பாங்கன் கழறவும் கேளானாய்ப் பின்னும் வேட்கைவயத்தனாய்நின்று, என்னாற் காணப்பட்ட வடிவை நீ கண்டிலை; கண்டனையாயிற் கழறா யென்று அவனொடு மறுத்துரைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்ப னுளந்தளர்ந் துரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

விலங்கலைக் கால்விண்டு மேன்மே
லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
லுள்ளந் துயர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட மலைகளைக் காற்றுப்பிளந்து மேலுமேலுமிட; விண்ணும் மண்ணும் முந்நீர் கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் வானுலகும் மண்ணுலகும் முந்நீராற் கலங்குதலையடைந்த விடத்துங் கலங்குந் தன்மையை யல்லை; கமழ் கொன்றை துன்றும் அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் துலங்கலை சென்று கமழாநின்ற கொன்றைப்பூ நெருங்கிய மாலையை முடிமாலையாகச் சுற்றிய சிற்றம்பலத்தானது அருளையுடையரல்லதாரைப் போலத் துளங்குதலையடைந்து; வள்ளல் உள்ளம் துயர்கின்றது இது என் னோ - வள்ளலே, நினதுள்ளந் துயர்கின்றது இஃதென்னோ! எ - று.
விண்டென்பது பிளந்தென்பது போலச் செய்வதன் றொழிற்குஞ் செய்விப்பதன்றொழிற்கும் பொது. இவனது கலக்கத்திற்குக் காரணமாய் அதற்கு முன்னிகழ்தனோக்கிச் சென்ற வன்றுமென இறந்தகாலத்தாற் கூறினான். வள்ளலென்பது: ஈண்டு முன்னிலைக் கண்வந்தது. இதென்னோவென்பது வினாவுதல் கருதாது அவனது கவற்சியை விளக்கிநின்றது. கலக்கஞ் செய்பாங்கன் கலங்கிய பாங்கன்; தலைமகனைக்கலக்கிய பாங்கனெனினுமமையும். மெய்ப் பாடு: இளிவரல். பயன்: கழறுதல். மேற்பொது வகையாற் கழறினான், ஈண்டு விசேடவகையாற் கழறினானென்பது.

குறிப்புரை :

2.6 கவன்றுரைத்தல்
கவன்றுரைத்தல் என்பது மறுத்துரைத்து வருந்தாநிற்பக் கண்ட பாங்கன் ஒருகாலத்துங் கலங்காதவுள்ளம் இவ்வாறு கலங்குதற்குக் காரணமென்னோவெனத் தலைவனுடன் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
கொலைக்களிற் றண்ணல் குறைநயந் துரைப்பக்
கலக்கஞ்செய் பாங்கன் கவன்று ரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

தலைப்படு சால்பினுக் குந்தள
ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
வுற்று மயங்கினனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:தலைப்படு சால்பினுக்கும் தளரேன் முன் தலைமையாய அமைதியானு முள்ளந் தளரேன்; சித்தம் பித்தன் என்று மலைத்து அறிவார் இல்லை பிறழவுணர்ந்தாயென்று மாறுபட்டறி வாருமில்லை; யாரையும் எத்துணையும் தேற்றுவன் பிறழவுணர்ந் தார் யாவரையும் மிகவுந் தெளிவியாநிற்பேன்; கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினன் இப்பொழுது ஒரு கலையாகிய சிறிய பிறையைச் சூடிய சிற்றம்பலவனது கயிலைமலைக்கணுண்டாகிய சிறுமானினது விழியால் அழிந்து மயங்கினேன் எ - று.
சால்பழிந்துள்ளந்தளரேனென்பான் சால்பினுக்குந் தளரே னென்றான். தலைப்படு சால்பென்பதற்கு எல்லாப் பொருளுஞ் சிவனைத்தலைப்பட்டுச் சென்றொடுங்கும் ஊழியிறுதி யென்றுரைப் பினுமமையும். நிறையும் பொறையுஞ் சால்பும் தலைப்படும் சால்பென்றதனாற்பெற்றாம். பித்தனென்று மலைத்தறி வாரில்லை யென்றதனால் தேற்றம் பெற்றாம். யாரையுந் தேற்றுவனென்றதனால் நீதிபெற்றாம், கலங்கினாரைத் தெளிவித்தல் நீதியாகலான். ஈண்டுத்தன்னை யுயர்த்தலென்னுங் குற்றந்தங்காது, சால்பு முதலாயின வற்றை இப்பொழுதுடையே னென்னாமையின். சால்பு ``அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ டைந்துசால் பூன்றிய தூண்`` (குறள் - 983) என்பத னானறிக. நோக்கிற்கு நோக்கினால். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்தல். இதுவும் மேலதேபோல மறுத்துரைத்தானென்பது.

குறிப்புரை :

2.7 வலியழிவுரைத்தல்
வலியழிவுரைத்தல் என்பது பாங்கன் கவன்றுரையா நிற்ப, முன்பு இத்தன்மையேனாகிய யான் இன்று ஒருசிறுமான் விழிக்கு இவ்வாறாயினேனெனத் தலைமகன் தன் வலியழிந்தமை கூறி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
நிறைபொறை தேற்றம் நீதியொடு சால்பு
மறியுறு நோக்கிற்கு வாடினே னென்றது.

பண் :

பாடல் எண் : 8

நல்வினை யும்நயந் தந்தின்று
வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும்
பாமென்று பாங்கன்சொல்ல வில்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
தாருயிர் துப்புறவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:கொல் வினை வல்லன நடுங்கு மின் மேல் கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல கொல்லுந் தொழிலை வல்லன நடுங்கு மின் மேலுண்டாகிய கோங்கரும்புகளாமென்று யான் பற்றுக்கோடாக நினைந்திருந்த பாங்கன்றானே இகழ்ந்து சொல்லு தலால்; வெள்கி தொல் வினையால் துயரும் எனது ஆர் உயிர் துப்புற நாணிப் பழையதாகிய தீவினையாற்றுயருறாநின்ற எனது அரிய வுயிர் வலியுறும்வண்ணம்; நல்வினையும் வந்து நயம் தந்தின்று யான் உம்மைச்செய்த நல்வினையும் வந்து பயன்றந்ததில்லை எ - று. வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி வில்லின்றொழிலினை மேருவின்கண் வைத்தவனது தில்லை தொழாதாரைப்போல வெள்கி யெனக்கூட்டுக.
உம்மை: எச்சவும்மை, கல்வியேயுமன்றி யென்றவாறு. நல்வினை தீவினையைக் கெடுக்குமாயினும் யான்செய்த நல்வினை அது செய்ததில்லையென்பது கருத்து. நாணினார் மேனி வெள்கு தலான் வெள்கியென்றான். துப்புறவென்னுமெச்சம் தந்தின்றென்பதில் தருதலென்பதனோடு முடிந்தது. துப்புறத் துயருமென்றியைத்து மிகவுந் துயருமென முற்றாகவுரைப்பினுமமையும். நல்வினையுந் நயந்தந்ததென்பது பாடமாயின், குறிப்பு நிலையாகக் கொள்க. மெய்ப்பாடும்பயனும்: அவை.

குறிப்புரை :

2.8 விதியொடுவெறுத்தல்
விதியொடுவெறுத்தல் என்பது வலியழிந்தமைகூறி வருந்தா நின்ற தலைமகன் பாங்கனொடுபுலந்து வெள்கி, யான் செய்த நல்வினையும் வந்து பயன்றந்ததில்லையெனத் தன் விதியொடு வெறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.

பண் :

பாடல் எண் : 9

ஆலத்தி னாலமிர் தாக்கிய
கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட் டாக
வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
தொழிவதென் தீவினையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம்போற் கோலத்தினாள் பொருட்டு ஆக நஞ்சால் அமிர்தத்தையுண்டாக்கிய இறைவனது தில்லையம்பலம்போலும் அழகையுடையாளொருத்தி காரணமாக; அமிர்தம் குணம் கெடினும் காலத்தினான் மழை மாறினும் அமிர்தம் தன்குணங்கெடினும் பெய்யுங் காலத்து மழை பெய்யாது மாறினும்; மாறாக் கவி கை நின் பொன் சீலத்தை மாறாதவண்மையை உடைய நினது பொன் போலப் பெறுதற்கரிய ஒழுக்கத்தை; நீயும் அறிவதறிந்த நீயும்; நினையாது ஒழிவது என் தீவினை அறியா தொழிகின்றது எனது தீவினைப் பயன் எ - று.
நஞ்சின்றன்மையொழித்து அமிர்தஞ்செய்யுங் காரியத்தைச் செய்தலின், அமிர்தாக்கியவென்றார். ஆலத்தினாலென்னு மூன்றா வது பாலாற்றயிராக்கிய வென்பது போல நின்றது. நஞ்சினாலோர் போனகத்தையுண்டாக்கிய வெனினுமமையும். அம்பலம் போலு மென்னு முவமை பட்டாங்கு சொல்லுதற்கண் வந்தது; புகழ்தற்கண் வந்ததென்பார் அம்பலம்போற் கோலத்தினாள் பொருட்டே யாயினுமாகவென முற்றாகவுரைப்ப. மாறாக்கவிகையென வண்மை மிகுத்துக்கூறினான், தானு மொன்றிரக்கின்றானாகலின். மாறாக் கவிகைநீயுமெனக் கூட்டினுமமையும். மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகனைத் தெருட்டல்.

குறிப்புரை :

2.9 பாங்கனொந்துரைத்தல் பாங்கனொந்துரைத்தல் என்பது விதியொடுவெறுத்து வருந்தாநிற்பக் கண்டபாங்கன், அமிர்தமும் மழையும் தங்குணங் கெடினும் நின்குணங்கெடாதநீ ஒருத்தி காரணமாக நின்சீலத்தை நினையாதவாறு இவ்வாறாகியது எனது தீவினையின் பயனாம் இத்தனையன்றோவெனத் தானும் அவனோடுகூட வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்
இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
நின்னது தன்மை நினைந்திலை யென்றது.

பண் :

பாடல் எண் : 10

நின்னுடை நீர்மையும் நீயு
மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:நின்னுடை நீர்மையும் இவ்வாறு நின் னுடைய வியல்பாகிய குணமும் இவ்வாறாயிற்று; நீயும் இவ்வாறு ஒருகாலத்துங் கலங்காத நீயும் இத்தன்மையையாயினாய் நினைத் தெருட்டும் என்னுடைய நீர்மையிது என் என்பதே; இனி நின்னைத் தெளிவிக்கும் என்னுடையவியல்பு யாதென்று சொல்வதோ! அது கிட க்க; சிலம்பா சிலம்பா; நின்னை இன்னே செய்த ஈர்ங் கொடிக்கு நின்னை யித்தன்மையையாகச் செய்த இனியகொடிக்கு; தில்லை ஏர் கொள் முக்கண் மன்னுடை மால்வரையோ மலரோ விசும்போ இடம் என் இயல் யாது தில்லைக்கணுளனாகிய அழகு பொருந்திய மூன்று கண்ணையுடைய மன்னனது பெரிய கயிலை மலையோ தாமரைப் பூவோ வானோ இடம் யாது? இயல் யாது? கூறுவாயாக எ-று.
என்னென்பதேயென்னும் ஏகாரம்: வினா; அசைநிலை யெனினுமமையும். பிறர்கண்போலாது மூன்றாயிருந்தனவாயினும் அவைதாம் ஓரழகுடையவென்னுங் கருத்தால், ஏர்கொண் முக்கணென்றார். கழுமல் மயக்கம். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.

குறிப்புரை :

2.10 இயலிடங்கேட்டல் இயலிடங்கேட்டல் என்பது தலைமகனுடன்கூட வருந்தா நின்ற பாங்கன் யானும் இவனுடன்கூட வருந்தினால் இவனை ஆற்றுவிப்பாரில்லையென அது பற்றுக்கோடாகத் தானாற்றி நின்று, அது கிடக்க, நின்னாற்காணப்பட்ட வடிவுக்கு இயல் யாது? இடம் யாது? கூறுவாயாகவென அவளுடைய இயலும் இடமுங் கேளாநிற்றல். அதற்குச் செய்யுள் கழும லெய்திய காதற் றோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.

பண் :

பாடல் எண் : 11

விழியாற் பிணையாம் விளங்கிய
லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா
னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி
லாமெங் குலதெய்வமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:முது வானவர் தம் முடித் தொகைகள் கழியாக் கழல் தலைவராகிய இந்திரன் முதலாகிய தேவர்களுடைய முடித் திரள்கள் நீங்காத கழலையுடைய; தில்லைக் கூத்தன் கயிலை தில்லைக் கூத்தனது கயிலைமலையிடத்து; முத்தம் மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வம் முத்துக்களைப் பெருந்தேன் கொழித்து விளங்கும் பொழிற்கு அழகாம் எம்முடைய நல்லதெய்வம்; விழியான்பிணை ஆம் விழிகளாற் பிணையாம்; விளங்கு இயலான் மயில் ஆம் விளங்கா நின்ற இயலான் மயிலாம் மிழற்று மொழியான் கிளியாம் கொஞ்சு மொழியாற் கிளியாம் எ - று.
இயல் இன்னவென்றும் இடம் கயிலைப் பொழிலென்றுங் கூறப்பட்டனவாம். முத்தம் யானைக்கோட்டினும், வேயினும் பிறந்த முத்து. அழுங்கல் இரக்கம். செழுமை வளமை. மெய்ப்பாடு: உவகை. பயன் : பாங்கற் குணர்த்தல்.

குறிப்புரை :

2.11 இயலிடங்கூறல் இயலிடங்கூறல் என்பது இயலிடங்கேட்ட பாங்கனுக்குத் தான் அவளை யெய்தினாற் போலப் பெரியதோராற்று தலையுடையனாய் நின்று, என்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல் இவை; இடம் இது; என்று இயலும் இடமுங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
அழுங்க லெய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.

பண் :

பாடல் எண் : 12

குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்
தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
நண்ணும் பளிக்கறையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:சிலம்ப சிலம்பனே; குயிலை குயிலை; சிலம்பு அடிக் கொம்பினை சிலம்படியையுடையதோர் கொம்பை; தில்லை எம் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பில் பைம் பூம்புனம் காக்கும் கரும் கண் செவ்வாய் மயிலை தில்லைக்கணுளனாகிய எம்முடைய கூத்தப்பிரானது கயிலையாகிய சிலம்பின்கட் பைம்பூம் புனத்தைக் காக்குங் கரிய கண்ணையுஞ் சிவந்த வாயையுமுடையதோர் மயிலை; வண் பூங் கொடிகள் பயிலச் சிலம்பு எதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கு அறை யான் போய் வனவிய பூவை உடைய கொடிகள் போலும் ஆயத்தார் நெருங்க அவரோடு சிலம்பிற் கெதிர் கூவித்தான் விளையாட்டைப் பொருந்தும் பளிக்கறைக்கண் யான் சென்று; கண்டு வருவன் கண்டு வருவேன்; நீ யாற்றுவாயாக எ-று.
கூத்தப்பிரான் என்பது கூத்தனாயினும் பிரானாயுள்ளான் என்றவாறு. பெயர்ந்துரைத்தல் - கழறமறுத்துரைத்தல்; ஆற்றாத் தன்மையனாய்ப் பெயர்ந்து இயலும் இடனுங் கூறியவெனினு மமையும். வயவென்னுமுரிச்சொல் விகார வகையால் வயமென நின்றது. சிறுபான்மை மெல்லெழுத்துப் பெற்றதெனினுமமையும். கெழு: சாரியை. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: வற்புறுத்தல்.

குறிப்புரை :

2.12 வற்புறுத்தல் வற்புறுத்தல் என்பது இயலிடங்கூறக் கேட்ட பாங்கன் நீ சொன்ன கயிலையிடத்தே சென்று இப்பெற்றியாளைக்கண்டு இப்பொழுதே வருவன்; அவ்வளவும் நீ யாற்றுவாயாதல் வேண்டுமெனத் தலைமகனை வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
பெயர்ந்து ரைத்த பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன் வற்புறுத் தியது.

பண் :

பாடல் எண் : 13

கொடுங்கால் குலவரை யேழேழ்
பொழிலெழில் குன்றுமன்று
நடுங்கா தவனை நடுங்க
நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
நீழலந் தண்புனத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:கொடுங் கால் குலவரை ஏழு ஏழ்பொழில் எழில் குன்றும் அன்றும் நடுங்காதவனைகொடியகாற்றாற் குலமலை களேழும் பொழிலேழும் அழகுகெடும் ஊழியிறுதியாகிய அன்றும் நடுங்காதவனை; நடுங்க நுடங்கும் நடு உடைய விடம் கால் அயிற்கண்ணி நடுங்குவிக்கும் இடையையுடைய நஞ்சைக் காலும் வேல் போலுங் கண்ணையுடையாள்; தில்லை ஈசன் வெற்பில் தடம் கார் தரு பெருவான் பொழில் நீழல் தண் புனத்து மேவும் கொலாம் தில்லைக்கணுளனாகிய ஈசனது வெற்பிடத்துப் பெரிய முகில்போலும் மிகவும் பெரிய பொழிலி னீழலையுடைய குளிர்ந்த புனத்தின்கண் மேவுமோ மேவாளோ? எ - று.
கொடுங்காலெனச் சந்தநோக்கித் திரியாது நின்றது. கொடுங் காலுமென வெண்ணினுமமையும். நடுங்க நுடங்குமென்னுஞ் சொற்கள் ஒருசொன்னீரவாய் நடுக்குமென்னும் பொருள் பட்டு இரண் டாவதற்கு முடிபாயின. ஐகாரம்: அசைநிலையெனினுமமையும். தருவென்பது ஓருவமைவாய்பாடு. தடங்கார் தருபெருவான் பொழிலென்பதற்குக் கார்தங்கும் பொழி லெனினுமையும். நிறை ஐம்பொறிகளையுமடக்குதல். மெய்ப்பாடு: பெருமிதஞ் சார்ந்த மருட்கை. பயன்: உசாவியுணர்தல்.

குறிப்புரை :

2.13 குறிவழிச்சேறல்
குறிவழிச்சேறல் என்பது தலைமகனை வற்புறுத்தி அவன் குறிவழிச் செல்லாநின்ற பாங்கன் இத்தன்மையாளை யான் அவ்விடத்துக்காணலாங் கொல்லோவென அந்நினைவோடு செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்
அறைகழ லண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.

பண் :

பாடல் எண் : 14

வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ
ளேஅப் பணிமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வடிக்கண் இவை அவன்கூறிய வடுவகிர் போலுங்கண்களும் இவையே; வஞ்சி அஞ்சும் இடை இது வஞ்சிக் கொம்பஞ்சு மிடையும் இதுவே; வெற்பன் சொற்பரிசே வெற்பன் சொற்பரிசே; வாய் பவளம் துடிக்கின்ற வா வாய் பவளந் துடித்தாற் போலத் துடிக்கின்றவாறென்! அதனால் யான் தொடர்ந்து விடா அடிச் சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல் படிச்சந்தமும் இதுவே ஓருணவுர்விமில்லாதயானும் பற்றிவிட மாட்டாத அடியாகிய சந்த மாமலரையுடைய தலைவனது விண்ணோர் வந்து வணங்கும் அம்பலம்போலும் ஒப்பும் இதுவே; அப்பணி மொழி இவளே அப்பணிமொழியும் இவளே! எ-று.
வெற்பன் சொற்பரிசே யென்றது இதனையவன் தப்பாமற் கூறியவாறென்னை என்றவாறு. வடியென்பது வடுவகிருக்கோர் பெயர். அதரத்திற்குத் துடித்தல் இயல்பாகக் கூறுப. பவளந் துடிக்கின்றவா என்பதற்குப் பவளம்போலப் பாடம் செய்கின்றவாறு என்னென்றுரைப்பாருமுளர். படிச்சந்தமென்பது வடமொழித்திரிபு. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தெளிதல்.

குறிப்புரை :

2.14 குறிவழிக்காண்டல்
குறிவழிக்காண்டல் என்பது குறிவழிச்சென்ற பாங்கன் தன்னை அவள் காணாமல் தானவளைக் காண்பதோரணிமைக் கணின்று, அவன் சொன்ன இடமும் இதுவே; இயலும் இவையே; இவளும் அவளே யென்று ஐயமறத் தெளியக்காணாநிற்றல். அதற்குச் செய்யுள்
குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
தளிர்புரை மெல்லடித் தையலைக் கண்டது.

பண் :

பாடல் எண் : 15

குவளைக் களத்தம் பலவன்
குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்
றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
யானிக் கடலிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:குவளைக் களத்து அம்பலவன் குரை கழல் போற் கமலத்தவளை குவளைப்பூப்போலுந் திருமிடற்றையுடைய அம்பலவனுடைய ஒலிக்குங் கழலையுடைய திருவடிபோலுந் தாமரைப் பூவிலிருக்குந் திருமகளை; பயங்கரம் ஆக நின்று ஆண்ட அவயவத்தின் இவளைக் கண்டு இங்குநின்று அங்கு வந்து தாமவட்குப் பயத்தைச் செய்வனவாக நின்று அடிமை கொண்ட உறுப்புக்களையுடைய இவளைக்கண்டு பிரிந்து இங்குநின்றும் அவ்விடத்து வந்து; அத்துணையும் பகர்ந்த கவளக் களிற்று அண்ணலே இக்கடலிடத்துத் திண்ணியான் யான் கழறவும் ஆற்றி அவ்வளவெல்லாங்கூறிய கவளக்களிற்றையுடைய அண்ணலே இவ்வுலகத்துத் திண்ணியான் எ - று.
இவளைக் கண்டென்றது இவளுடைய நலத்தைக் கொண்டடிய வாறன்று, முன்னங்கே தலைவனுடைய பொலிவழிவு கண்டு இங்கே வந்தவன் இங்கு மிவளுடைய பொலிவழிவுகண்டு கிலேசித்து இவளித்தன்மையளாக இங்கே இவளைப்பிரிந்து அங்கே வந்து அத்துணையும் பகர்ந்தவனே திண்ணியானென்று இருவருடைய அனுராகமுங் கூறியவாறு. கவளக்களிறு தான் விரும்புங் கவளம் பெற்று வளர்ந்த களிறு. நயந்த தலைமகனயந்த. மெய்ப்பாடு: மருட்கையைச்சார்ந்த அச்சம். பயன்: தலைமகனை வியத்தல்.

குறிப்புரை :

2.15 தலைவனை வியந்துரைத்தல்
தலைவனை வியந்துரைத்தல் என்பது குறிவழிக்கண்ட பாங்கன் இவ்வுறுப்புக்களையுடைய இவளைக்கண்டு பிரிந்து இங்கு நின்று அங்குவந்து யான்கழறவும் ஆற்றி அத்தனையுந் தப்பாமற் சொன்ன அண்ணலே திண்ணியானெனத் தலைமகனை வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் நயந்த வுருவும் நலனுங் கண்டு
வியந்த வனையே மிகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 16

பணந்தா ழரவரைச் சிற்றம்
பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
டேனொன்று நின்றதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வாய் நிணம் தாழ் சுடர் இலை வேல வாய்க் கணிணந்தங்கிய சுடரிலைவேலை யுடையாய்; பணம் தாழ் அரவு அரைச் சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை பணந்தாழ்ந்த அரவை யணிந்த அரையையுடைய சிற்றம்பலவரது பசும்பொன்னையுடைய கயிலைக்கண்; புணர்ந்து ஆங்கு அகன்ற பொருகரி உன்னி கூடி அவ்விடத்து நின்று மகன்ற பொருகரியை நினைந்து; புனத்து அயலே மணம் தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடி ஒன்று நின்றது கண்டேன் புனத்திற்கயலே மணந்தங்கிய பொழிற்கண் வடுவகிர் போலுங் கண்களைப்பரப்பி மடப்பிடியொன்று நின்றதனைக் கண்டேன் எ - று.
பணந்தாழ்தல் முடிந்துவிடுதலாற்றொங்கல் போலத் தாழ்தல்; தங்குதலெனினுமமையும். ஆங்ககன்றவென்புழி நின்றென ஐந்தாம் வேற்றுமைப் பொருளுணர நிற்பதோரிடைச் சொல் வருவித்துரைக்கப் பட்டது. புனத்தயலே யென்றான், புனத்து விளையாடும் ஆயத்தை நீங்கி நிற்றலின். வடிக்கண்பரப்பி யென்றான், இன்ன திசையால் வருமென்றறியாது சுற்றெங்கு நோக்குதலின். கயிலைக்கணென்பதூஉம், புனத்தயலென்பதூஉம், பொழிற்கணென்பதூஉம், நின்றதென்னுந் தொழிற்பெயரோடு முடியும். நின்றதுவேயென்புழி வகாரஞ்சந்த நோக்கி வந்தது; விரிக்கும்வழி விரித்தற்பாற்படும். மெய்ப்பாடு: உவகை பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.

குறிப்புரை :

2.16 கண்டமைகூறல்
கண்டமை கூறல் என்பது தலைமகனை வியந்துரைத்த பாங்கன் விரைந்து சென்று, தான் அவளைக் கண்டமை தலை மகனுக்குப் பிடிமிசைவைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிற லண்ணற் கறிய வுரைத்தது.

பண் :

பாடல் எண் : 17

கயலுள வேகம லத்தலர்
மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற்
பாநின தீர்ங்கொடிமேற்
புயலுள வேமலர் சூழ்ந்திருள்
தூங்கிப் புரள்வனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வெற்பா வெற்பா; நினது ஈர்ங் கொடி மேல் கமலத்து அலர் மீது கயல் உளவே நினது ஈர்ங்கொடிக்கண் தாமரைப் பூவின்மேற் கிடப்பன சிலகயல்களுளவே; கனி பவளத்து அயல் ஒத்த நிரை முத்தம் உளவே கனிந்த பவளத்திற்கயல் இனமொத்த நிரையாகிய முத்துக்களுளவே; இணைச்செப்பு அரன் அம்பலத்தின் இயல் உளவே இணையாகிய செப்பு அரனது அம்பலத்தி னியல்பை யுடையனவுளவே; மலர் சூழ்ந்து இருள் தூங்கிப் புரள்வன புயல் உளவே மாலைசூழ்ந்து இருள் செறிந்து கிடந்து புரள்வன புயலுள வே? உளவாயின் யான்கண்ட வுருவம் நீ கூறியவுருவமாம் எ - று. அரனம்பலத்தினியல்: ஆறாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. சூழ்ந்தென்பதூஉம், தூங்கியென்பதூஉம் சினைவினைப்பாற்பட்டு முதல்வினைகொண்டன. மலர்சினை போலக் குழற்கின்றியமையாமையிற் சினைப்பாற்பட்டது. புயல் திரண்டாற்போலுமென்பது போதரப் புரள்வனவெனப் பன்மையாற் கூறினான். மெய்ப்பாடும் பயனும் : அவை.

குறிப்புரை :

2.17 செவ்வி செப்பல்
செவ்வி செப்பல் என்பது பிடிமிசை வைத்துக் கூறக்கேட்ட தலைமகன் அது தனக்குச் செவ்விபோதாமையிற் பின்னும் ஆற்றாமை நீங்கானாயினான். அது கண்டு அவனை ஆற்று விப்பது காரணமாக அவனுக்கு அவளவயவங்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்
கவ்வுருக் கண்டவன் செவ்வி செப்பியது.

பண் :

பாடல் எண் : 18

எயிற்குல மூன்றிருந் தீயெய்த
வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற்
கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது
வென்னுடை மன்னுயிரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:எயில் குலம் மூன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து எயிற்சாதி மூன்றும் பெரிய தீயை யெய்த அவற்றை யெய்தவனது தில்லையை யொத்து; குயில் குலம் கொண்டு குயிலாகிய சாதியைக்கொண்டு; தொண்டைக் கனிவாய்க் குளிர் முத்தம் நிரைத்து தொண்டைக் கனியிடத்துக் குளிர்ந்த முத்தங்களை நிரைத்து; அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி கூர்மையையுடைய நல்ல வேலைக் கமலத்தின்கட்கிடத்தி; அனம் நடக்கும் மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிர் அன்னம்போல நடப்பதோர் மயிற்சாதி காணப்பட்டதுண்டாயின். அது எனது நிலை பெறுமுயிர் எ - று. எயிற்குலமூன்றென்றார், அவை இரும்பும், வெள்ளியும், பொன்னுமாகிய சாதி வேறுபாடுடைமையின். குயிற் குலங்கொண்டென்றான், மொழியாற் குயிற்றன்மையையுடைத்தாகலின். தொண்டைக் கனிவாயென்பதற்குத் தொண்டைக்கனி போலும் வாயென்பாருமுளர். மெய்ப்பாடு: உவகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
இவை நிற்க இடந்தலை தனக்குமாமாறு சொல்லுமாறு.

குறிப்புரை :

2.18 அவ்விடத்தேகல்
அவ்விடத் தேகல் என்பது செவ்விசெப்பக் கேட்ட தலை மகன் இவ்வாறு காணப்பட்டதுண்டாயின் அது வென்னுயிரெனத் தானவ்விடநோக்கிச் செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள் அரிவையதுநிலைமை யறிந்தவனுரைப்ப
எரிகதிர்வேலோ னேகியது.

பண் :

பாடல் எண் : 19

ஆவியன் னாய்கவ லேல்அக
லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
லாயத் தருவரையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:அளித்து ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று ஒளித்த ஆவி அன்னார் தலையளிசெய்து ஆவியை யொப்பாய் கவலாதொழி நின்னை நீங்கேமென்று சொல்லி மறைந்த என்னாவியை யொப்பார்; மிக்க அவாவினர் ஆய்க் கெழுமற்கு அழிவுற்று மிக்க விருப்பத்தையுடையராய்க் கெழுமுதல் காரணமாக நெஞ்சழிதலான், இடமறியாது; அம்பலத்து எம் ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அருவரை அம்பலத்தின்கணுளனாகிய எம் மாவியையொப்பான் அடுத்து வாழுங் கயிலாயத்தின்கட் பிறரா னெய்துதற்கரிய தாழ்வரையிடத்து; ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர் கொல் ஆவியை யொக்கும் ஆயத்தார் நிலை பெற்று விளையாடும் அவ்விடத்து அவர்காண வந்து பொருந்துவரோ! எ-று.
அளித்தல்:பிரிகின்ற காலத்துச்செய்த தலையளியெனினு மமையும். மிக்கவென்பது: கடைக்குறைந்து நின்றது. ஆயத்திடை வருவர்கொல்லென ஐயத்துள் ஒருதலையே, கூறினாள், பெருநாணி னளாகலின். மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன்: உசாவி ஆற்றாமை நீங்குதல். ஆயவெள்ளத்துள்ளே வருவர்கொல் லோவென்னும் பெருநாணினானும், ஆற்றாமையான்இறந்து பட்டனர்கொல்லோவென்னும் பேரச்சத்தினானும் மீதூரப்பட்டுத் தன்றன்மையளன்றி நின்று இவ்வகை உசாவினா ளென்பது. #9;

குறிப்புரை :

2.19 மின்னிடை மெலிதல்
மின்னிடை மெலிதல் என்பது நெருநலைநாளில் தலையளி செய்து நின்னிற்பிரியேன், பிரியினும் ஆற்றேனென்று கூறிப்பிரிந் தவர் வேட்கைமிகுதியால் இடமறியாது ஆயத்திடைவருவார் கொல்லோவென்னும் பெருநாணினானும், ஆற்றாமையான் இறந்துபட்டார் கொல்லோ வென்னும் பேரச்சத்தினானும், யாருமில்லொருசிறைத் தனியேநின்று, தலைமகனை நினைந்து தலைமகள் மெலியாநிற்றல். அதற்குச் செய்யுள்
மன்னனை நினைந்து
மின்னிடை மெலிந்தது.

பண் :

பாடல் எண் : 20

காம்பிணை யாற்களி மாமயி
லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றுமென் சிந்தனைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:காம்பு இணையால் வேயிணையானும்; களிமா மயிலால் களிப்பையுடைய கரிய மயிலானும் கதிர் மா மணி யால் ஒளியையுடைய பெரிய நீலமணியானும்; வாம் பிணையால் வாவும் பிணையானும்; வல்லி ஒல்குதலால் வல்லி நுடங்குதலானும்; கயிலைப் பயில் புனமும் என் சிந்தனைக்குத் தேம்பிணை வார் குழலாள் எனத் தோன்றும் கயிலைக்கணுண்டாகிய அவள் பயிலும் புனமும் இன்புறுத்துதலால் என்மனத்திற்குத் தேம்பிணையை யுடைய நெடிய குழலையுடையாளென்றே தோன்றா நின்றது எ-று.
மன்னும் அம்பலவன் பாம்பு இணையாக் குழை கொண்டோன் கயிலை நிலைபெறு மம்பலத்தையுடையவன் பாம்பை ஒன்று மொவ் வாத குழையாகக்கொண்டவன் அவனது கயிலை யெனக்கூட்டுக.
பாம்பையிணைத்துக் குழையாகக்கொண்டவ னெனினுமமை யும். தேம்பிணை தேனையுடையதொடை. தேம்பிணை வார்குழலா ளெனத் தோன்றுமென்பதற்கு அவளைப் போலப் புனமும் யானின் புறத் தோன்றாநின்ற தென்பாருமுளர். மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். நெருநலைநாளில் தலைமகளைக் கூடின பொழிலிடம் புகுந்து இவ்வகை சொன்னானென்பது.

குறிப்புரை :

2.20 பொழில்கண்டு மகிழ்தல்
பொழில்கண்டு மகிழ்தல் என்பது தலைமகளை நோக்கிச் செல்லாநின்ற தலைமகன் முன்னைஞான்று அவளைக்கண்ணுற்ற பொழிலைச் சென்றணைந்து, அப்பொழிலிடை அவளுறுப்புக்க ளைக் கண்டு, இப்பொழில் என்சிந்தனைக்கு அவள்தானேயெ னத் தோன்றாநின்றதென்று இன்புறாநிற்றல். அதற்கு செய்யுள் மணங்கமழ்பொழிலின் வடிவுகண்
டணங்கெனநினைந் தயர்வுநீங்கியது.

பண் :

பாடல் எண் : 21

நேயத்த தாய்நென்ன லென்னைப்
புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங்
காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய
தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து
நின்றதென் மன்னுயிரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:நென்னல்நேயத்தது ஆய் என்னைப் புணர்ந்து நெருநல் உள்ளநெகிழ்ச்சியையுடைத்தாய் என்னைக்கூடி; நெஞ்சம் நெகப் போய் பின் நேயமில்லதுபோல என்னெஞ் சுடையும் வண்ண நீங்கிப்போய்; ஆயத்தது ஆய் ஆயத்தின் கண்ணதாய்; அமிழ்து ஆய் இன்பத்தைச் செய்தலின் அமிர்தமாய்; அணங்கு ஆய் துன்பத்தைச் செய்தலின் அணங்காய்; அரன் அம்பலம் போல் தேயத்தது ஆய் புலப்பாட்டான் அரனதம்பலம் போலும் ஒளியை யுடைத்தாய்; என்றன் சிந்தையது ஆய் புலப்படாது வந்து என் சிந்தைக்கண்ணதாய்; தெரியின் பெரிதும் மாயத்தது ஆகி வந்து நின்றது இதோ என் மன் உயிர் ஆராயிற் பெரிதும் மாயத்தை யுடைத்தாய் வந்து நின்றது இதுவோ எனது மன்னுயிர் எ - று.
நேயமுடைமையும் நேயமின்மையும் இன்பஞ்செய்தலும் துன்பஞ் செய்தலும் புலப்படுதலும் புலப்படாமையும் ஒரு பொருட் கியையாமையின், பெரிதுமாயத்ததாகியென்றான். தேயம்: வட மொழிச்சிதைவு. அம்பலம்போலுந் தேசத்தின் கண்ணதா யென்றுரைப் பினுமமையும். ஓகாரம்: அசைநிலையெனினுமமையும். என்மாட் டருளுடைத்தாய் முற்காலத்து என்னைவந்துகூடி அருளில்லதுபோல என்னெஞ்சுடையும் வண்ணம்போய்த் தன் மெய்யடியார் குழாத்த தாய் நினைதோறும் அமிர்தம்போல இன்பஞ்செய்து கட்புலனாகாமை யிற் றுன்பஞ்செய்து அம்பலம் போலும் நல்ல தேசங்களின் கண்ணதாய் வந்து என்மனத்தகத்ததாய் இத்தன்மைத்தாகலிற் பெரிதும் மாயத்தை யுடைத்தாய் எனது நிலைபெறுமுயிர் வந்து தோன்றாநின்றதென வேறு மொருபொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. பொழிலின் வியன்பொதும்பர் பொழிலில் மரஞ்செறிந்தவிடம். மெய்ப்பாடும் பயனும்: அவை.

குறிப்புரை :

2.21 உயிரென வியத்தல்
உயிரென வியத்தல் என்பது பொழில்கண்டு மகிழ்ந்து அப்பொழிலிடைச்சென்று புக்கு, அவளைக்கண்டதுணையான் என்னுயிர் இவ்வாறு செய்தோநிற்பதென வியந்துகூறாநிற்றல். அதற்குச் செய்யுள் வெறியுறு பொழிலின் வியன்பொ தும்பரின்
நெறியுறு குழலி நிலைமை கண்டது.

பண் :

பாடல் எண் : 22

தாதிவர் போதுகொய் யார்தைய
லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார்
சுனைப்புன லாடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
தான்மலை யெய்துதற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:தாது இவர் போது கொய்யார் தாதுபரந்த பூக்களைக் கொய்கின்றிலர்; தையலார் அங்கை கூப்ப நின்று சோதி வரிப்பந்து அடியார் ஆயத்தாராகிய தையலார் அங்கைகளைக் கூப்பநின்று ஒளியையும் வரியையுமுடைய பந்தை அடிக்கின்றிலர்; சுனைப் புனல் ஆடல் செய்யார் சுனைப்புனலாடுதலைச் செய்கின்றிலர்; போது இவர் கற்பக நாடு புல்லென்னத்தம் பொன் அடிப்பாய் அம்பலத்தான்மலை எய்துதற்கு இவர் மாதவம் யாது அதனாற் போதுபரந்த கற்பகங்களையுடைய தேவருலகம் பொலி வழிய நிலந்தோயாத தமது பொன்போலுமடியை நிலத்தின்கட்பாவி அம்பலத்தானது கயிலையை யெய்துதற்கு இவர் செய்யக் கருதுகின்ற பெரியதவம் யாது! எ - று.
தவஞ்செய்வார் புறத்தொழில்களை விட்டு அகத்தா னொன்றையுன்னி மலைக்கட்டங்குவரன்றே, இவளும் பூக்கொய்தல் முதலாகிய தொழில்களைவிட்டு மனத்தாற்றன் னை நினைந்து வரையிடத்து நிற்றலான் யாதிவர் மாதவமென்றான். மெய்ப்பாடும் பயனும்: அவை.

குறிப்புரை :

2.22 தளர்வகன்றுரைத்தல்
தளர்வகன்றுரைத்தல் என்பது உயிரென வியந்துசென்று, பூக்கொய்தன் முதலிய விளையாட்டையொழிந்து யாருமில் லொரு சிறைத் தனியேநின்று இவர்செய்யாநின்ற பெரியதவம் யாதோவென அவளைப் பெரும்பான்மைகூறித் தளர்வு நீங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத்
தனிநிலை கண்டு தளர்வகன் றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

காவிநின் றேர்தரு கண்டர்வண்
தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
கேயின் றழிகின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:மா இயன்றன்ன மெல் நோக்கி மானோக்கத் தான் இயன்றாற்போலும் மெல்லிய நோக்கையுடையாய்; காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமலத் தேவி என்றே ஐயம் சென்றது அன்றே நஞ்சாகிய நீலப்பூ நின்று அழகைக் கொடுக்கும் மிடற்றையுடையவரது வளவிய தில்லைக்கணுண்டாகிய கண்ணி ற்கு ஆருந் தாமரைப்பூவின் வாழுந் தேவியோவென்று ஐயநிகழ்ந்தது; அறியச் சிறிது நின் வாய் திறவா விடின் தெளிந்தறியச் சிறிதாயினும் நின்வாய் திறவாதொழியின்; அமிழ்தே அமிழ்தமே; அணங்கே அணங்கே; இன்று அழிகின்றது என் ஆவி அன்றே இப்பொழுதழி கின்றது என்னுயிரன்றே, இதனை நீ கருதாதொழிகின்ற தென்னை! எ-று.
தேவியென்பது பெரும்பான்மையாகலின், தேவியென்றே யையஞ்சென்றதென ஐயத்துள் ஒருதலையே பற்றிக் கூறினான். அறியவென்னும் வினையெச்சமும் சிறிதென்னும் வினையெச்சமும் திறவாவிடி னென்னுமெதிர்மறையிற் றிறத்தலோடு முடிந்தன. அமி ழ்தே யணங்கேயென்றான், இன்பமுந் துன்பமும் ஒருங்கு நிகழ்தலின். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல்.

குறிப்புரை :

2.23 மொழிபெறவருந்தல்
மொழிபெற வருந்தல் என்பது தளர்வுநீங்கிய பின்னர்ச் சார்தலுறாநின்றவன் ஒருசொற் பெறுமுறையாற் சென்றுசார வேண்டிப் பின்னும் அவளைப்பெரும்பான்மைகூறி ஒரு சொல் வேண்டி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
கூடற் கரிதென
வாடி உரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

அகலிடந் தாவிய வானோ
னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
வாய்தரு பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் உலகத்தைத் தாவி யளந்த வானவன் வணங்கப்படுவதென்றறிந்து வணங்கும் அம்பலத்தின்கணுளனாகிய இகலையுடைய விடங்களிலே தாவும் விடையையுடைய ஈசனைத் தொழாதாரைப்போல; இன்னற்கு இடம் ஆய் உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை துன்பத்திற்கிடமாய் அழியுமளவைத் தானடைந்து எனதுயிர் நையாதவண்ணம்; பொழில் வாய் எழில் வாய்தரு பூங் கொடியே பொழிலிடத்துளவாகிய அழகுவாய்ந்த பூவை யுடையகொடியே; ஒதுங்கப் புகலிடம் தா யானொதுங்குதற்குப் புகலிடந் தருவாயாக எ-று.
உகலிடம் உகுதற்கிடம்; உகுதலையுடைய விடமெனினு மமையும். ஆயிடை தலைமகன் அவ்வாறு கூறியவிடத்து. தனி நின்று ஆற்றுவிப்பாரையின்றி நின்று. ஆற்றாது நாணினானாற்றாது. வேய் வேய்த்தன்மை. மெய்ப்பாடு: அச்சம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.

குறிப்புரை :

2.24 நாணிக்கண்புதைத்தல்
நாணிக்கண்புதைத்தல் என்பது தலைமகன் தன்முன்னின்று பெரும்பான்மை கூறக்கேட்ட தலைமகள் பெருநாணினளாதலின் அவன் முன்னிற்கலாகாது நாணி, ஒருகொடியினொதுங்கி, தன் கண்புதைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஆயிடைத் தனிநின் றாற்றா தழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.

பண் :

பாடல் எண் : 25

தாழச்செய் தார்முடி தன்னடிக்
கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
புதைநின்னை வாணுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:தாழச்செய்தார் முடி தன் அடிக்கீழ் வைத்து தன் கட்டாழ்ந்தவர்களுடைய முடிகளைத் தன் திருவடிக்கீழ் வைத்து; அவரை விண்ணோர் சூழச் செய்தான் அம்பலம் கைதொழாரின் அவர்களை விண்ணோர் பரிவாரமாய்ச் சூழும் வண்ணஞ் செய்த வனது அம்பலத்தைக் கைதொழாதாரைப் போல; உள்ளம் துளங்க போழச்செய்யாமல் வை வேல் கண்புதைத்து நெஞ்சந் துளங்கப் போழாமற் கூரிய வேல்போலுங் கண்களைப் புதைத்து; பொன்னே பொன்னே; நீ என்னை வாழச் செய்தாய் நீ என்னை வாழும் வண்ணஞ் செய்தாய்; வாள் நுதலே வாணுதலையுடையாய்; நின்னைச் சுற்று முற்றும் புதை என்னுள்ளந் துளங்காமை வேண்டின் நின்னைச் சுற்று முழுதும் புதைப்பாயாக எ - று.
தாழச்செய்தாரென்ப தனை ஒருசொல்லாக்காது தாழும் வண்ணம் முற்றவஞ் செய்தாரென் றானும், தம்மைச்செய்தாரென் றானும் ஒருசொல் வருவித்தும், போழச்செய்யாமலென்புழியும் போழும் வண்ணமொரு தொழிலைச் செய்யாமலென ஒரு சொல் வருவித்தும், விரித்துரைப்பினுமமையும். வாழச்செய்தாயென்பது: குறிப்புநிலை. புதைத்த வென்பதூஉம் பாடம். வேற்றருங்கண் வேல்போலுங்கண். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை யுணர்த்தல்.

குறிப்புரை :

2.25 கண்புதைக்கவருந்தல்
கண்புதைக்க வருந்தல் என்பது தலைமகள் நாணிக்கண் புதையாநிற்ப, இவள் கண் புதையாநின்றது தன்னுடைய கண்கள் என்னை வருத்தத்தைச் செய்யுமென் றாகாதேயென உட் கொண்டு, யான் வருந்தாதொழிய வேண்டுவையாயின் நின் மேனி முழுதும் புதைப்பாயாகவெனத் தலைமகன் தன்வருத்த மிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்

வேற்றருங் கண்ணிணை மிளிர்வன வன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக் கென்றது.

பண் :

பாடல் எண் : 26

குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்
மெழுகொத் தழிகின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:என் கண்மணி போன்று - இன்றியமையாமை யால் என் கண்மணியை யொத்து; உயிரின் பழகி உயிர் போலச் சிறப்புடைத்தாய்ப் பழகி; ஒருநாள் பிரியாது ஒருபொழுதும் பிரியாது; உடன் வளர்ந்த என்னுடனே வளர்ந்த; அரு அளிய நாண் பெறுதற்கரிய அளித்தாகிய நாண்; அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றது அழலைச்சேர்ந்த மெழுகையொத்து என்கணில்லாது அழியாநின்றது, அதனான் குரு நாள் மலர்ப் பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர் போல் வருநாள் பிறவற்க நிறத்தையுடையவாகிய நாண்மலர்களையுடைய பொழில்களாற் சூழப்பட்ட தில்லைக் கணுளனாகிய கூத்தனையேத்தாதார் துன்புறும் பிறவியிற் பிறப் பாரன்றே அவர்களைப் போல மேல் வரக்கடவநாளில் யான் இவ்வாறு பிறவாதொழிக எ-று.
வருநாள் பிறவற்க வென்பதற்கு ஏத்தாதாரைப்போல வருந்த இவ்வாறு பயின்றாரைப் பிரியவரு நாள்கள் உளவாகா தொழிகவெனி னுமமையும். வாழியென்பது இத்தன்மைத்தாகிய இடுக்கணின்றி இந் நாண் வாழ்வதாக வென்றவாறு. அரோவும் மற்றும்: அசைநிலை. ஆங்ஙனங் கண்டு - அவ்வாற்றானாகக் கண்டு. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

குறிப்புரை :

2.26 நாண்விடவருந்தல்
நாண்விட வருந்தல் என்பது தலைமகன் தனது ஆற்றாமை மிகுதிகூறக்கேட்டு, ஒருஞான்றுந் தன்னைவிட்டு நீங்காதநாண் அழலைச் சேர்ந்த மெழுகுபோலத் தன்னைவிட்டு நீங்காநிற்ப, தலைமகள் அதற்குப் பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
ஆங்ங னம்கண் டாற்றா ளாகி
நீங்கின நாணொடு நேரிழை நின்றது.

பண் :

பாடல் எண் : 27

கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
காள்கொண்டை சார்வதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:கோலத் தனிக் கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர் தம் சீலத்தன கொங்கை அழகையுடைய தனியாகிய கொம்பின்மேலேறி அதனையே அடிக்கட் குறைப்பார் தமது தன்மையையுடையவாயிருந்தன கொங்கைகள்; தேற்றகிலேம் இவை இத்தன்மையவாயிருத்தலான் இது வாழுமென்றியாந் தெளிகின்றிலம், அதனால் வண்டுகாள் வண்டுகாள்; சிவன் தில்லை அன்னாள் நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது சிவனது தில்லையை யொப்பாளுடைய நுலை யொத்த நேரிய விடையினது நொய்ம்மையைக் கருதாது; நுண் தேன் நசையால் கொண்டை சார்வது சாலத்தகாது நுண்ணிய தேன்மேலுண்டாகிய நசையால் நீயிர்கொண்டையைச்சார்தல் மிகவுந் தகாது எ-று.
தேற்றகிலேமென்பது ``தேற்றாப் புன்சொ னோற்றிசின்`` (புறம் - 202) என்பதுபோலத் தெளிதற்கண் வந்தது. முலைகளைத் தெளிவிக்க மாட்டேமென்பாருமுளர். பின்வருமேதத்தை நோக்கின் நீயிர் பயனாக நினைக்கின்ற இஃது இறப்பச்சிறிதென்னுங் கருத்தால், நுண்டேனென்றான். கண்டீரென்பது: முன்னிலையசைச்சொல். அளிகுலம்: வடமொழிமுடிபு. விலக்கியணைந்தது விலக்கா நின்ற ணைந்தது. மெய்ப்பாடு: உவகை. பயன்: சார்தல். அவ்வகை நின்றமை குறிப்பினானுணர்ந்த தலைமகன் இவ்வகை சொல்லிச் சார்ந்தா னென்பது.

குறிப்புரை :

2.27 மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது தலைமகள் நாணிழந்து வருந்தா நிற்பச் சென்று சார்தலாகாமையின், தலைமகன் தன்னாதரவினால் அவ்வருத்தந்தணிப்பான் போன்று முலையொடுமுனிந்து, ஒரு கையால் இறுமருங்குறாங்கியும், ஒருகையால் அளிகுலம் விலக்கி அளகந்தொட்டும், சென்று அணையாநிற்றல். அதற்குச் செய்யுள் ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக்
கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.

பண் :

பாடல் எண் : 28

நீங்கரும் பொற்கழற் சிற்றம்
பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு
மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
மாட்கொண்ட கொங்கைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:நீங்கரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும் வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் விடுதற் கரிய பொன்னானியன்ற கழலையுடைத்தாகிய திருவடியையுடைய சிற்றம்பலவரது நெடிதாகிய தேவருலகையும் வளைந்த பெரிய தெண்கடலாற் சூழப்பட்ட நிலத்தையும் ஒருங்கு பெற வரினும்; தீம் கரும்பும் அமிழ்தும் செழு தேனும் பொதிந்து இனிய கரும்பின் சாற்றையும் அமிர்தத்தையும் கொழுவிய தேனையும் உள்ளடக்கி; செப்பும் கோங்கு அரும்பும் தொலைத்து செம்பையுங் கோங் கரும்பையும் வென்று; என்னையும் ஆட்கொண்ட கொங்கைகள் என்னையும் அடிமைகொண்ட கொங்கைகளை; யான் மறவேன் யான் மறவேன் எ - று.
விசும்பும் நிலனும் ஒருங்குபெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன்கண் முயலுமாறில்லையெனத் தன்னின்றியமையாமை கூறியவாறாயிற்று; என்னையுமென்ற வும்மை எச்சவும்மை. தொழிற்படுத்தலொற்றுமையால் தன்வினை யாயிற்று. மெய்ப்பாடு: அது. பயன்: நயப் புணர்த்துதல்.

குறிப்புரை :

2.28 இன்றியமையாமைகூறல்
இன்றியமையாமை கூறல் என்பது புணர்ச்சி யிறுதிக்கண் விசும்பும் நிலனும் ஒருங்குபெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன்கண் முயலேனெனப் பிரிவுதோன்றத் தலைமகன் தனது இன்றியமையாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
வென்றி வேலவன் மெல்லி யல்தனக்
கின்றி யமையாமை யெடுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 29

சூளா மணியும்பர்க் காயவன்
சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயிர்
ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
பலசொல்லி யென்னை துன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
லாயம் நணுகுகவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:உம்பர்க்குச் சூளாமணி ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு என் ஆர் உயிர் ஆளாயொழிந்தது வானவர்க்கு முடிமணியாயவனது சூழ்ந்த பொழிலையுடைய தில்லையையொக்கும் நினக்கு எனதாருயிர் அடியைாயிற்று; பல சொல்லி என்னை ஆதலாற் பலசொல்லிப் பெறுவதென்! ஆர் அமிழ்தே நிறைந்த வமிர்தே; அணங்கே அணங்கே; தோளா மணியே துளைக்கப்படாத மாணிக்கமே; பிணையே மான் பிணையே துன்னும் ஆர் நாள் மலர்ப் பொழில்வாய் எழில் ஆயம் நணுகுக; நீ பலகாலுஞ் சேர்ந்து விளையாடும் நிறைந்த நாண்மலரை யுடைய பொழிற்கண் விளையாடும் அழகிய ஆயத்தை இனிச் சேர்வாயாக எ - று.
அடுக்கிய விளிகளாற் காதற்சிறப்பு விளங்கும். பலசொல்லி யென்னையென்றது உயிர் நினக்கு ஆளாகியபின் வேறுபல சொல்லுதல் பயனில கூறலன்றே யென்றவாறு. சொல்லியென்னும் வினையெச்சத்திற்குப் பெறுவதென ஒருசொல் வருவித்துரைக்கப் பட்டது. பொழில்வாய் நணுகுகவென இயைப்பினு மமையும். மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: பிரியலுறுந் தலைமகன் வற்புறுத்தல்.

குறிப்புரை :

2.29 ஆயத்துய்த்தல்
ஆயத் துய்த்தல் என்பது இன்றியமையாமை கூறிப் பிரியலுறாநின்றவன், இனிப் பலசொல்லி யென்னை? என்னுயிர் நினக்கடிமையாயிற்று; இனிச்சென்று நின்னாயத்திடைச் சேர்வாயாக வெனத் தன் பிரிவின்மை கூறித் தலைமகளை ஆயத்துச் செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
தேங்கமழ் சிலம்பன்
பாங்கிற் கூட்டியது.

பண் :

பாடல் எண் : 30

பொய்யுடை யார்க்கரன் போலக
லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
காக்கும்பைம் பூம்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:மை உடை வாள்கண் மணி உடைப் பூண்முலை வாள் நுதல் மையையுடைய வாள்போலுங் கண்ணையும் மணியையுடைய பூணணிந்த முலையையுமுடைய வாணுதல் ; வான் பைஉடை வாள் அரவத்து அல்குல் பெரிய படத்தை யுடைத்தாகிய ஒளியையுடைய அரவுபோலும் அல்குலையுடையாள்; காக்கும் பூம் பைம்புனம் அவள் காக்கும் பூக்களையுடைய பசிய புனம் அகன்றால்; தன்னை யானகன்றால் பொய் உடையார்க்கு அரன் போல் அகலும் பொய்யையுடையவர்க்கு அரன்றுன்பத்தைச் செய்து சேயனாமாறுபோல மிக்க துயரத்தைச்செய்து எனக்குச்சேய்த்தாம்; புணரின் அணைந்தால்; மெய் உடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் மெய்யையுடையவர்க்கு அவனது அம்பலம் பேரின்பத்தைச் செய்து அணித்தாமாறுபோலக் கழியுவகைசெய்து எனக்கு மிகவும் அணித்தாம். ஆதலான் நீங்குதல் பெரிதும் அரிது எ-று.
வாணுதலையு மென்றெண்ணினும் அமையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

குறிப்புரை :

2.30 நின்றுவருந்தல் நின்றுவருந்தல் என்பது தலைமகளை ஆயத்துய்த்துத் தான் அவ்விடத்தே நின்று அப்புனத்தியல்பு கூறித் தலைமகன் பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள் பாங்கிற் கூட்டிப் பதிவயிற் பெயர்வோன்
நீங்கற் கருமை நின்று நினைந்தது.
சிற்பி