திருக்கோவையார்-மடற்றிறம்


பண் :

பாடல் எண் : 1

பொருளா வெனைப்புகுந் தாண்டு
புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
தழியுமென் னாருயிரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புகுந்து என்னைப் பொருளா ஆண்டு தானேவந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்தாண்டு; புரந்தரன் மால் அயன்பால் இருளாய் இருக்கும் ஒளி நின்றசிற்றம்பலம் எனல் ஆம் இந்திரன் மால் அயனென்னும் அவர்களிடத்து இருளா யிருக்கின்ற ஒளி தங்கிய சிற்றம்பலமென்று சொல்லத்தகும்; சுருள் ஆர் கருங் குழல் வெள் நகைச் செவ்வாய்த் துடி இடையீர் சுருளார்ந்த கரிய குழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்ய வாயினையு முடைய துடியிடையீர்; அருளாதொழியின் என் ஆருயிர் ஒழியாது அழியும் நீயிர் அருளாதொழியின் எனதாருயிர் தப்பாமலழியும்; அதனான் அருளத்தகும் எ - று.
தொகையின்மையிற் பாலென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. சிற்றம்பலம் துடியிடையார்க்குவமை. மடற்றிறங் கூறுகின்றானாகலின், அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறுதல் கூறினான். சொல்லாற்றாது - சொல்லுதற்கும் ஆற்றாது. மெய்ப் பாடு: அழுகை, பயன்: ஆற்றாமையுணர்த்துதல். 73

குறிப்புரை :

10.1 ஆற்றாதுரைத்தல்
ஆற்றாதுரைத்தல் என்பது தலைமகண்மேன் மடற்றிறங் கூறுகின்றானாகலின் அதற்கியைவுபட அவ்விருவருழைச் சென்று நின்று, நீயிர் அருளாமையின் என்னுயிர் அழியாநின்றது; இதனை அறிமினெனத் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.1. மல்லற்றிரள் வரைத்தோளவன்
சொல்லாற்றாது சொல்லியது.

பண் :

பாடல் எண் : 2

காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
காய் சினவேல் அன்ன மின் இயல் கண்வலை காய்சினத்தையுடைய வேல்போலும் ஒளியியலுங் கண்ணகிய வலையை; கலந்து வீசினபோது உள்ளம் மீன் இழந்தார் மகளிர் கலந்து வீசினபோது அவ்வலைப்படுதலான் உள்ளமாகிய மீனையிழந்த வர்கள்; வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து பெரிய தென்புலியூர்க்கணுளனாகிய ஈசனுடைய நீற்றையும் எருக்கம்பூவையும் அணிந்து; ஓர் கிழி பிடித்து - ஒரு கிழியைக் கையிற்பிடித்து; பாய் சின மா எனப் பனை மடல் சீறூர் ஏறுவர் பாய வல்ல சினத்தையுடைய மாவெனப் பனைமடலைச் சீறூர்க்கணேறுவர், தம்முள்ளம் பெறுதற்கு வேறுபாய மில்லாதவிடத்து எ - று.
மின்னியல்வேலென்று கூட்டினு மமையும். இன்: அல்வழிச் சாரியை, கண்ணென்வலையென்பதூஉம் பாடம். மகளிரென ஒரு சொல் வருவியாது கருவி கருத்தாவாக உரைப்பினுமமையும். உள்ளமிழந்தவர் உள்ளம்பெறுமளவும் தம்வய மின்றி மடலின் வயத்தராய் நிற்றலால் கருவி கருத்தாவாகக் கொள்க. சாந்தும் எருக்கு மென இரண்டாகலின் ஈசனவெனப் பன்மையுருபு கொடுத்தார். பாய்சினமென்புழிச் சினம் உள்ளமிகுதி. உய்த்துரைத்தது குறிப் பாலுரைத்தது. 74

குறிப்புரை :

10.2 உலகின்மேல் வைத்துரைத்தல்
உலகின்மேல் வைத்துரைத்தல் என்பது ஆற்றாமைகூறி அது வழியாக நின்று, ஆடவர் தம்முள்ளமாகிய மீன் மகளிரது கண்வலைப்பட்டால் அதனைப் பெறுதற்கு வேறுபாயமில்லாத விடத்து மடலூர்ந்தும் அதனைப் பெறுவரென உலகின்மேல் வைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.2. புலவேலண்ணல் புனைமடலேற்
றுலகின்மேல்வைத் துய்த்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 3

விண்ணை மடங்க விரிநீர்
பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
பண்ணிற்றொர் பெண்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விண் மடங்க விண் மடங்கவும்; விரி நீர் பரந்து கரப்ப விரிநீர் பரத்தலான் வெற்பொளிப்பவும்; மண் மடங்க வரும் ஒருகாலத்தும் மன்னிநிற்கும் அண்ணல் - மண் மடங்கவும் வரும் ஊழியிறுதியாகிய ஒருகாலத்தின்கண்ணும் நிலைபெற்றுநிற்கும் அண்ணல்; மடங்கல் அதள் அம்பலவன் சிங்கத்தினது தோலை யுடைய அம்பலவன்; அருள் இலர் போல் பெண்ணை மடல்மிசை யான் வரப் பண்ணிற்று ஒர் பெண் கொடி அவனதருளில்லாதாரைப் போலப் பிறரிகழப் பனைமடன்மேல் யான் வரும் வண்ணம் அறிவின்மையைச் செய்தது ஒருபெண்கொடி எ - று.
விண்ணை மண்ணை என்புழி ஐகாரம்: அசைநிலை. மடங் குதல் தத்தங்காரணங்களினொடுங்குதல். மடங்கல் புலியெனினு மமையும். மானம் - கொண்டாட்டம்; வேலை யுடையவனது மானமாகிய குணம் வேன் மேலேற்றப் பட்ட தெனினுமமையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: இளிவரல். பயன்: ஆற்றாமை யுணர்த்துதல். 75

குறிப்புரை :

10.3 தன்துணிபுரைத்தல்
தன்துணிபுரைத்தல் என்பது முன்னுலகின்மேல் வைத் துணர்த்தி அதுவழியாக நின்று, என்னையும் ஒருபெண் கொடி பிறரிகழ மடலேறப்பண்ணாநின்றதென முன்னிலைப்புற மொழி யாகத் தன்றுணிபு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.3. மானவேலவன் மடன்மாமிசை
யானுமேறுவ னென்னவுரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

கழிகின்ற வென்னையும் நின்றநின்
கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
தெருவிடைப் போதுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கழிகின்ற என்னையும் கழியாநின்ற என்னையும்; நின்ற நின் கார் மயில் தன்னையும் யானத்தன்மை யனாகவுந் தன்றன்மையளாய்நின்ற நின்னுடைய கார் மயிறன்னை யும்; கிழி ஒன்ற நாடி எழுதி கிழிக்கட்பொருந்த ஆராய்ந்தெழுதி; யான் கைக்கொண்டு யான் அதனைக் கையிற் கொண்டு; என் பிறவி இன்று கெட்டு அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை என் பிறவியை இன்றுகெட்டழியாநின்றதாகச் செய்த தாளையுடைய. அம்பலவனது கயிலையின்; அம் தேன் பொழிகின்ற சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவன் அழகிய தேன்பொழியாநின்ற சாரற் கணுண்டாகிய நுமது சீரூர்த்தெருவின்கட்டிரிவேன்; பின்வருவது காண் எ - று.
தனக்கு அவளயலென்னுங் கருத்தினனாய், நின்கார் மயிலென் றான். என்னையும் நின் கார்மயிறன்னையும் மடலிடத்தெழுது வேனென்றதென்னை, கார்மயிலை யெழுதுவதன்றித் தன்னையு மெழுதுமோவெனின், மடலெழுதிக் கையிற்கொண்டால் உரையாடுகையின்றி இவனும் ஓவியமாகலின், மடலின்றலையிலே தன்னூரையுந் தன்பேரையும் அவளூரையும் அவள்பேரையும் எழுதுகையால் என்னையுமென்றான். கார்மயில் - கார்காலத்து மயில். அழிகின்றதென நிகழ்காலத்தாற் கூறினார், பிறத்தற்குக் காரணமாகிய மலங்கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய மலத்துடனே வினை நின்றமையின். மெய்ப்பாடும் பயனும் அவை. 76

குறிப்புரை :

10.4 மடலேறும் வகையுரைத்தல்
மடலேறும் வகையுரைத்தல் என்பது துணிபுகூறவும் பெருநாணினளாதலிற் சொல்லாடாத தோழிக்கு வெளிப்படத் தான் நாணிழந்தமைதோன்ற நின்று, யான் நாளை நின்னூர்த்தெருவே மடலுங்கொண்டு வருவேன்; பின்வருவது காணெனத் தலைமகன் தான் மடலேறும்வகை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.4. அடல்வேலவ னழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும்
முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
தோமன்ன இன்னருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நடன் - கூத்தன்; நாம் வணங்கும் தொல்லோன் நாம் வணங்கும் பழையோன்; நான்முகன் மால் எல்லை அறியாக் கடன் ஆம் உருவத்து அரன் நான்முகனும் மாலும் முடியும் அடியுமாகிய எல்லைகளை அறியாத இயல்பாகிய வடிவையுடைய அரன்; தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை அவனது தில்லைக்கணுண்டாகிய வளத்தையுடைய கண்ணிற்கார்ந்த பெண்ணைக்கண்; உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து மடல் நாம் புனைதரின் உடனாகும் பெடை யோடும் ஒள்ளியசேவலையும் முட்டையையுங் காவலையழித்து மடலை நாம் பண்ணின்; மன்ன - மன்னனே; இன் அருள் யார் கண்ணது இனிய அருள் இவ்வுலகத்தில் யார்கண்ணதாம்? எ - று. அறியாவுருவமென வியையும். அறியாதஅக்கடனுளதாமுருவ மெனினுமமையும். மடல் விலக்கித் தழீஇக் கொள்கின்றாளாதலின், நாமென உளப்படுத்துக் கூறினாள். நின்னருளென்பது பாடமாயின், யார் கண்ணருளுவை யென்றுரைக்க. அண்ணல்: முன்னிலைக் கண் வந்தது. 77

குறிப்புரை :

10.5 அருளாலரிதெனவிலக்கல்
அருளாலரிதென விலக்கல் என்பது தலைமகன் வெளிப்பட நின்று மடலேறுவேனென்று கூறக்கேட்ட தோழி இனியிவன் மடலேறவுங்கூடுமென உட்கொண்டு, தன்னிடத்து நாணினை விட்டுவந்து, எதிர்நின்று, நீர்மடலேறினால் உம்முடைய அருள் யாரிடத்ததாமென்று அவனதருளை யெடுத்துக்கூறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
10.5. அடல்வேலண்ண லருளுடைமையின்
மடலேற்றுனக் கரிதென்றது.

பண் :

பாடல் எண் : 6

அடிச்சந்த மால்கண் டிலாதன
காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
வோநும் பரிசகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சந்தம் மால் கண்டிலாதன அடி காட்டி வந்து ஆண்டு கொண்டு மறையும் மாலுங் கண்டறியாதனவாகிய அடிகளை எனக்குக் காட்டித் தானே வந்தாண்டு கொண்டு; என் முடிச்சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் அவ்வடிகளை என்முடிக்கு நிறத்தையுடைய பெரிய மலராகச் செய்யும் முன்னோனது புலியூரையொக்கும்; கடிச்சந்த யாழ் கற்ற மென்மொழி சிறந்த நிறத்தையுடைய யாழோசையின் றன்மையைக் கற்ற மென்மொழியையுடைய; கன்னி அன நடைக்கு கன்னியது அன்னத்தி னடைபோலு நடைக்கு; படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்து படிச்சந்தமாகப் பண்ணப்படும் படங்கள் உளவோ நுமது சித்திரசாலையின்கண் எ - று.
கடிச்சந்தயாழ்கற்ற மென்மொழியென்பதற்குச் சிறந்த வோசையையுடைய யாழ்வந்தினிதாக வொலித்தலைக்கற்ற மென்மொழி யென்றுரைப்பாருமுளர். படிச்சந்தமென்பது ஒன்றன் வடிவை யுடைத்தாய் அதுவென்றே கருதப்படுமியல்பையுடையது. படிச்சந்த மென்பது: பிரதிச்சந்தமென்னும் வடமொழிச் சிதைவு. 78

குறிப்புரை :

10.6 மொழிநடை யெழுதலரிதென விலக்கல் மொழிநடையெழுதலரிதென விலக்கல் என்பது அரு ளெடுத்து விலக்கவும் தன்வழி நில்லாமைகண்டு அவன் வழி யொழுகி விலக்குவாளாக, நுமதருள்கிடக்க மடலேறுவார் மட லேறுதல் மடலேறப்படுவாருருவெழுதிக் கொண்டன்றே; நுமக்கு அவள் மொழி நடையெழுதல் முடியாதாகலின் நீயிர் மடலேறுமா றென்னோவென விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
10.6. அவயவ மரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்ட லியலா தென்றது.

பண் :

பாடல் எண் : 7

யாழு மெழுதி யெழின்முத்
தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
டேற்கொண்டு போதுகவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
யாழும் எழுதி மொழியாக மொழியோ டொக்கும் ஓசையையுடைய யாழையுமெழுதி; எழில் முத்தும் எழுதி முறுவலாக எழிலையுடைய முத்துக்களையுமெழுதி ; இருளில் மென்பூச் சூழும் எழுதி குழலாக இருளின்கண் மெல்லிய பூவானி யன்ற சூழையு மெழுதி; ஒரு தொண்டையும் தீட்டி - வாயாக ஒரு தொண்டைக் கனியையு மெழுதி; இள மாம் போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கண்ணாக இளையதாகிய மாவடுவகிரையும் எழுதப்பட்டதோர் கொம்ப ருண்டாயின்; கொண்டு போதுக அதனைக்கொண்டு எம்மூர்க்கண் மடலேற வாரும் எ - று.
என் தொல் பிறவி ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இளமாம் போழும் என்னுடைய பழையவாகிய பிறவிகளேழையும் கூற்றுவன் தன் கணக்கிலெழுதாத வண்ணஞ் சிதைத்தவனது புலியூரிளமாம் போழுமெனக்கூட்டுக.
முத்துமென்னு மும்மை விகார வகையாற் றொக்குநின்றது. சூழென்றது சூழ்ந்த மாலையை. செய்தெனெச்சங்கள் எழுதிற்றென் னுந்தொழிற்பெயரின் எழுதுதலொடுமுடிந்தன. எழுதிற்றென்பது செயப்படுபொருளைச் செய்தது போலக் கூறிநின்றது. வினை யெச்சங்களும் அவ்வாறு நின்றவெனினு மமையும். மொழியும் இவளதாகலின், அவயவமென்றாள். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: நகை. பயன்: மடல்விலக்குதல். 79

குறிப்புரை :

10.7 அவயவமெழுத லரிதென விலக்கல்
அவயவமெழுதலரிதென விலக்கல் என்பது அவளது மொழி நடை கிடக்க, இவைதாமெழுத முடியுமோ? முடியுமாயின் யான்சொன்ன படியே தப்பாமலெழுதிக்கொண்டு வந்தேறு மென்று அவளதவயவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
10.7. அவயவ மானவை
யிவையிவை யென்றது.

பண் :

பாடல் எண் : 8

ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
செய்க அறிந்தனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உயர் பெண்ணைத் திண் மடல் ஊர்வாய் உயர்ந்த பெண்ணையினது திண்ணிய மடலையூர்வாய்; ஒழிவாய் அன்றியொழிவாய்; சீர் வாய் சிலம்ப அழகுவாய்த்த சிலம்பை யுடையாய்; நின் குறிப்புத் திருத்த இருந்திலம் நின்கருத்தை யாந்திருத்த விருந்தேமல்லேம்; ஈசர் தில்லைக் கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி ஈசரது தில்லைக்கணுளளாகிய கருமைவாய்த்த குழலையுடையாட்கு உனது விருப்பத்தைச்சொல்லி; கற்பித்துக் கண்டால் இதற்கு அவளுடம்படும் வண்ணஞ் சிலவற்றைக் கற்பித்துப் பார்த்தால்; வாய்தரின் ஆர் அறிவார் இடந்தருமாயினும் யாரறிவார்; பின்னை அறிந்தன செய்க இடந்தாராளாயிற் பின் நீயறிந்தவற்றைச் செய்வாயாக எ - று.
கார்போலுங் குழலெனினு மமையும். வாய்தரினென்பதற்கு வாய்ப்பினெனினுமமையும். பின்னைச் செய்கவென்றது நீகுறித்தது செய்வாய் ஆயினும் என் குறிப்பிதுவென்றவாறு.80

குறிப்புரை :

10.8 உடம்படாதுவிலக்கல்
உடம்படாது விலக்கல் என்பது எழுதலாகாமை கூறிக் காட்டி, அதுகிடக்க, நும்மை யாம் விலக்குகின்றே மல்லேம்; யான் சென்று அவணினைவறிந்து வந்தாற் பின்னை நீயிர் வேண்டிற்றைச் செய்யும்; அவ்வளவும் நீயிர் வருந்தாதொழியு மெனத் தானுடம்படாது விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்
10.8. அடுபடை யண்ணல் அழிதுய ரொழிகென
மடநடைத் தோழி மடல்விலக் கியது.

பண் :

பாடல் எண் : 9

பைந்நா ணரவன் படுகடல்
வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பை நாண் அரவன் பையையுடைய அரவாகிய நாணையுடையான்; படு கடல்வாய் படு நஞ்சு அமுது ஆம் மை நாண் மணிகண்டன் ஒலிக்குங் கடலிடத்துப்பட்ட நஞ்சம் அமுதாகும் மை நாணு நீலமணி போலுங் கண்டத்தையுடையான்; மன்னும் புலியூர் மணந்த பொன் அவன் மன்னும் புலியூரைப் பொருந்திய பொன் போல்வாள்; நாள் மொய் இம் முதுதிரை வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் நாட்காலத்தாடும் பெருமையையுடைய இம்முதியகடற்கண் யானழுந்தினேனாயினும் தான் என்னின் முற்பட்டழுந்தும்; மது வார் குழலாட்கு இன் அருள் இந்நாள் இது தேனையுடைய நெடிய குழலாட்கு என் கணுண்டாகிய இனிய அருள் இப்பொழுதித்தன்மைத்தாயிராநின்றது எ - று.
அமுதாமென்னும் பெயரெச்சம் கண்டமென்னு நிலப்பெயர் கொண்டது. மைந்நாணுங் கண்டமெனவியையும். மணிகண்ட னென்பது வடமொழி யிலக்கணத்தாற்றொக்குப் பின்றிரிந்து நின்றது. மொய் வலி; ஈண்டுப் பெருமைமேனின்றது. குற்றேவல் செய்வார்கட் பெரியோர்செய்யும் அருள் எக்காலத்து மொருதன்மைத்தாய் நிகழாதென்னுங் கருத்தான் இந்நாளிது வென்றாள். எனவே, தலை மகளது பெருமையுந் தன்முயற்சியது அருமையுங் கூறியவாறாயிற்று. அரா குரா வென்பன; குறுகி நின்றன. வருமென்பது: உவமைச்சொல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.81

குறிப்புரை :

10.9 உடம்பட்டு விலக்கல் உடம்பட்டு விலக்கல் என்பது உடம்படாது முன்பொதுப் பட விலக்கி முகங்கொண்டு, பின்னர்த் தன்னோடு அவளிடை வேற்றுமையின்மைகூறி, யான் நின்குறைமுடித்துத் தருவேன்; நீவருந்தவேண்டாவெனத் தோழி தானுடம்பட்டு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்
10.9. அரவரு நுண்ணிடைக் குரவரு கூந்தலென்
உள்ளக் கருத்து விள்ளா ளென்றது.

சிற்பி