திருக்கோவையார்-குறைநயப்புக் கூறல்


பண் :

பாடல் எண் : 1

தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
வார்குழ லேந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மாதே மாதே; தாது ஏய் மலர்க் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி தாதுபொருந்திய மலரையுடைய குஞ்சிகளின்கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள் தண்டேனைப் பருகி; தேதே எனும் தில்லையோன் சேய் என தேதேயெனப்பாடுந் தில்லையையுடையானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சின வேல் ஒருவர் புனத்திடை வாளா வருவர் சினவேலையுடையாரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும் வாராநிற்பர்; வந்து யாதும் சொல்லார் வந்து நின்று ஒன்று முரையாடார்; மது வார்குழல் ஏந்திழையே மதுவார்ந்த குழலை யுடைய ஏந்திழாய்; செயத் தக்கது யாதே - அவரிடத்து நாஞ்செய்யத் தக்கது யாதென்றறிகின்றிலேன் எ-று.
குஞ்சி தில்லை வாழ்வார் குஞ்சி; மலரினது குஞ்சியென விரித்து அல்லியென்றுரைப்பி னுமமையும். சேயோடொத்தல் பண்பு வடிவுமுதலாயினவும், சினவேலேந்தி வரையிடத்து வருதலுமாம். வேட்டைமுதலாகிய பயன்கருதாது வருவரென்பாள், வாளா வருவரென்றாள். முகம்புகுகின்றாளாதலின், பின்னும் ஏந்திழையே யென்றாள். சேயென்புழி எண்ணேகாரந் தொக்குநின்றது; என்னை, மேலே ``புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள் கொல்`` (தி.8 கோவை பா.83) என வருதலான். யாதேயென்னு மேகாரம்: வினா. மாதே ஏந்திழையே என்புழி ஏகாரம்: விளியுருபு. அறிகுற்றவென்பது அறியவேண்டிய வென்னும் பொருட்கண் வந்த ஒரு மொழிமுடிபு. 82

குறிப்புரை :

11.1 குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பது தலைமகனது குறைகூறத் துணியா நின்ற தோழி தெற்றெனக் கூறுவேனாயின் இவள் இதனை மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, நம்புனத்தின்கட் சேயினது வடிவையுடையராய்ச் சினவேலேந்தி ஒருவர் பலகாலும் வாரா நின்றார்; வந்து நின்று ஒன்று சொல்லுவதுஞ் செய்கின்றிலர்; அவரிடத்து யாஞ்செய்யத்தக்க தியாதெனத் தான் அறியாதாள் போலத் தலைமகளோடு உசாவி, அவணினைவறியாநிற்றல். என்னை,
ஆங்குணர்ந் தல்லது கிழவோ டேத்துத்
தான்குறை யுறுத றோழிக் கில்லை
-இறையனாரகப்பொருள் - 8
என்பவாகலின். அதற்குச் செய்யுள்
11.1 நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்
குள்ளறி குற்ற வொள்ளிழை யுரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
னொருவனித் தேம்புனமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வரி சேர் தடங் கண்ணி வரிசேர்ந்த பெரிய கண்ணையுடையாய்; ஒருவன் மம்மர் கைம்மிக்கு ஒருவன் மயக்கங் கைம்மிக்கு; எரி சேர் தளிர் அன்ன மேனியன் எரியைச்சேர்ந்த தளிரையொக்கும் மேனியையுடையனுமாய்; ஈர்ந்தழையன் வாடாத தழையையுடையனுமாய்; இத் தேம்புனம் பிரியான் இத் தேம்புனத்தைப் பிரிகின்றிலன்; உரையான் ஒன்றுரைப்பதுஞ் செய்கின்றிலன்; புலியூர்ப் புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங் கணை வேள்கொல் என்னத் தெரியேம் அவன்றன்னைப் புலியூர்க் கணுளனாகிய புரிதலைச்சேர்ந்த சடையை யுடையோனுடைய புதல்வனோ பூவாகிய அம்பையுடைய காம வேளோவென்று யாந்துணிகின்றிலேம்; என்ன மாயம் கொலோ ஈதென்ன மாயமோ! எ - று.
அவ்வாறு இறப்பப் பெரியோன் இவ்வாறு எளிவந்தொழுகுதல் என்ன பொருத்தமுடைத்தென்னுங் கருத்தால், என்ன மாயங் கொலோவென்றாள். புலியூர்ப்புரிசேர் சடையோன் புதல்வன் கொலென்றதனால் நம்மையழிக்க வந்தானோவென்றும், பூங்கணை வேள்கொலென்றதனால் நம்மைக்காக்க வந்தானோ வென்றும் கூறியவாறாயிற்று. புரிசேர்சடையோன் புதல்வனென்றதனை மடற்குறிப்பென்றுணர்க. கொல்: ஐயம். மேனியன் தழைய னென்பன: வினையெச்சங்கள். மென்மொழி மொழிந்தது - மென் மொழியான் மொழிந்தது. 83

குறிப்புரை :

11.2 மென்மொழியாற்கூறல்
மென்மொழியாற் கூறல் என்பது நினைவறிந்து முகங் கொண்டு அதுவழியாகநின்று, ஒருபெரியோன் வாடிய மேனியனும் வாடாத தழையனுமாய் நம்புனத்தை விட்டுப் பேர்வதுஞ் செய்கின் றிலன்; தன்குறை இன்னதென்று வெளிப்படச் சொல்லுவதுஞ் செய்கின் றிலன்; இஃதென்ன மாயங்கொல்லோ அறிகின்றிலேனெனத் தோழி தான் அதற்கு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.2 ஒளிருறு வேலவன் றளர்வுறு கின்றமை
இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 3

நீகண் டனையெனின் வாழலை
நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ
ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின்
றானப் பெருந்தகையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நேர் இழை நேரிழாய்; அம்பலத்தான் சேய் கண்டனையன் அம்பலத்தான் புதல்வனைக்கண்டாற் போன்று இருக்கும் ஒருவன்; ஆங்கு ஒர் அலவன் தன் சீர்ப் பெடையின் வாய் வண்டு அனையது ஒர் நாவல் கனி சென்று நனி நல்கக் கண்டு அவ்விடத்து ஓரலவன் தனதழகையுடைய பெடையின் வாயின்கண் வண்டனையதொரு நாவற்கனியைச்சென்று மிகவுங் கொடுப்ப அதனைக்கண்டு; அப் பெருந்தகை பேய் கண்டனையது ஒன்று ஆகிநின்றான் அப்பெருந்தகை பேயாற் காணப்பட்டாற் போல்வ தோர் வேறுபாட்டை யுடையனாகி நின்றான்; நீ கண்டனை எனின் வாழலை அந்நிலையை நீகண்டாயாயின் உயிர் வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலின், அதனைக் கண்டும் ஆற்றியுளே னாயினேன் எ - று.
பேய்கண்டனைய தென்பதற்குப் பேயைக் கண்டாற்போல் வதோர் வேறுபாடென்றுரைப்பினு மமையும். பேய்கண்டனைய தொன்றையுடையனாயென்னாது ஒற்றுமைநயம் பற்றி ஒன்றாகி யென்றாள். நாவற்கனியை நனிநல்கக்கண்டு தன்னுணர்வொழியப் போயினான் இன்று வந்திலனென்னாது பேய்கண்டனையதொன்றாகி நின்றானென்று கூறினமையான் மென்மொழியும், சேய்கண்டனைய னென்றதனால் வன்மொழியும் விரவியதாயிற்று. மிகுத்தல் - ஆற்றா மைமிகுத்தல். இவை மூன்றற்கும் மெய்ப் பாடு: இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : தலைமகளை மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல். 9; 84

குறிப்புரை :

11.3 விரவிக்கூறல்
விரவிக் கூறல் என்பது வன்மொழியாற் கூறின் மனமெலியு மென்றஞ்சி, ஓரலவன் தன்பெடைக்கு நாவற்கனியை நல்கக் கண்டு ஒருபெருந்தகை பேய்கண்டாற்போல நின்றான்; அந்நிலைமையை நீ கண்டாயாயின் உயிர்வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலான் ஆற்றியுளேனாய்ப் போந்தேனென மென்மொழியோடு சிறிது வன்மொழிபடக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.3 வன்மொழி யின்மனம் மெலிவ தஞ்சி
மென்மொழி விரவி மிகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

சங்கந் தருமுத்தி யாம்பெற
வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
வானவன் நேர்வருமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஏந்திழை - ஏந்திழாய்; பல் மா வங்கம் மலி தொல்லைக் கலி நீர் தில்லை வானவன் நேர் வரும் இத்தன் மைத்தாகலிற் பலவாய்ப் பெரியவாகிய மரக்கலங்கள் மிகப் பெற்ற பழையதாகிய கடல் தில்லைவானவற்கொப்பாம் எ - று.
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி சங்குதரு முத்துக்களை யாம்பெறப் பெரிய கழிகளைத் தான் பொருந்தி; பொங்கும் புனற் கங்கை தாங்கி பொங்கும் புனலையுடைய கங்கையைத் தாங்கி; பொலி கலிப் பாறு உலவு துங்கம் மலிதலை ஏந்தலின் பொலிந்த ஆரவாரத்தையுடைய பாறாகிய மரக்கலங்களி யங்குந் திரைகளின் மிகுதியை யுடைத்தாகலின், எனக் கடலிற்கேற் பவும்.
சங்கம் தரும் முத்தி யாம் பெற வான் கழி தான் கெழுமி திருவடிக்கணுண்டாகிய பற்றுத்தரும் முத்தியை யாம் பெறும் வண்ணம் எல்லாப்பொருளையும் அகப்படுத்து நிற்கும் ஆகாயத்தையுங் கடந்து நின்ற தான் ஒரு வடிவு கொண்டுவந்து பொருந்தி; பொங்கும் புனற் கங்கை தாங்கி பொங்கும் புனலையுடைய கங்கையைச் சூடி; பொலி கலிப்பாறு உலவு துங்கம் மலி தலை ஏந்தலின் மிக்க ஆரவாரத்தை யுடைய பாறாகிய புட்கள் சூழாநின்ற உயர்வுமிக்க தலையோட்டை யேந்துதலின், எனத் தில்லைவானவற் கேற்பவும் உரைக்க.
வான்கழி சிவலோக மெனினுமமையும். குறைநயப் பாற்றலைமகனிலைமை கேட்ட தலைமகள் பெருநாணினளாகலின், மறுமொழிகொடாது பிறிதொன்று கூறியவாறு. ஒருசொற்றொடர் இருபொருட்குச் சிலேடை யாயினவாறுபோலத் தோழிக்கும் ஓர்ந்துணரப்படும். ஓர்ந்துணர்தலாவது இவ்வொழுக்கங் கள வொழுக்கமாகையாலும், தலைமகள் பெருநாணினளாகையாலும், முன்றோழியாற் கூறப்பட்ட கூற்றுகட்கு வெளிப்படையாக மறுமொழி கொடாது, ஓர்ந்துகூட்டினால் மறுமொழியாம்படி கடலின் மேல் வைத்துக் கூறினாள். என்னை, முன்னர் நீ புரிசேர்சடையோன் புதல்வ னென்றும், பூங்கணைவேளென்றும் உயர்த்துக் கூறிய வெல்லாம் அவனுக்குரிய, அங்ஙனம் பெரியவன் தன்மாட்டுண்டான புணர்ச்சி யான பேரின்பத்தை நாம்பெறுகை காரணமாக இங்ஙன மெளிவந்து உன்னைவந்து சேர்ந்தான்; அஃதென்போலவெனின், பெறுதற்கரிய சங்கு தருகிற முத்தை நாம் பெறுவான் எளிதாகக் கடல் பெரிய கழியை வந்து பொருந்தினாற்போல, இனி உனக்கு வேண்டியது செய் வாயாகவென மறுமொழியாயிற்று. மெய்ப்பாடு: மருட்கை. தோழி சொன்ன குறையறியாள் போறலிற் பயன்: அறியாள்போறல். 85

குறிப்புரை :

11.4 அறியாள் போறல் அறியாள் போறல் என்பது பேய்கண்டாற்போல நின்றா னெனத் தலைமகனிலைமைகேட்ட தலைமகள் பெருநாணின ளாதலின் இதனையறியாதாளைப்போல, இஃதொரு கடல்வடி விருந்தவாறு காணாயெனத் தானொன்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.4. அறியாள் போன்று
குறியாள் கூறியது.

பண் :

பாடல் எண் : 5

புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
புரம் கடந்தான் அடி காண்பான் புரங்களைக் கடந்தவனது அடிகளைக் காணவேண்டி; புவி விண்டு புக்கு அறியாது இரங்கிடு எந்தாய் என்று இரப்ப நெறி யல்லா நெறியான் நிலத்தைப் பிளந்துகொண்டு புக்குக் காணாது பின் வழிபட்டு நின்று எந்தாய் அருளவேண்டு மென்றிரப்ப; தன்ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான் ஒன்று காட்ட தன்னுடைய இரண்டு திருவடிகளையுந் தொழுதற்கு என்னுடைய இரண்டு கரங்களையுந் தந்தவனாகிய அவன் சிறிதிரங்கி ஒரு திருவடியைக் காட்ட; மற்று ஆங்கதும் காட்டிடு என்று தில்லை அம்பல முன்றில் அம் மாயவன் வரம் கிடந்தான் மற்றதனையுங் காட்டிடல் வேண்டுமென்று தில்லையம்பல முற்றத்தின்கண் முன்னர் அவ்வாறு யானென்னுஞ் செருக்காற் காணலுற்ற மாயவன் வரங்கிடந்தாற்போலும் எ - று.
விண்டென்பதற்கு (தி.8 கோவை பா.24) முன்னுரைத்ததே யுரைக்க. மாயவன் முதலாயினார்க்கு அவ்வாறரியவாயினும் எம்மனோர்க்கு இவ்வாறெளிவந்தன வென்னுங் கருத்தால், தன்னடிக் கென்னிரண்டு கரங்கடந்தா னென்றார்.
ஆங்கதென்பது ஒருசொல். இன்னும் வரங்கிடக்கிறா னாகலின், முன்கண்டது ஒன்றுபோலுமென்பது கருத்து. புரங்கடந் தானடிகளைக் காணுமாறு வழிபட்டுக் காண்கையாவது அன்னத் திற்குத் தாமரையும், பன்றிக்குக் காடுமாதலால், இவரிங்ஙனந் தத்த நிலைப்பரிசேதேடுதல்.
இவ்வாறு தேடாது தமதகங்காரத்தினான் மாறு பட்டுப் பன்றி தாமரையும் அன்னங்காடுமாகப் படர்ந்து தேடுதலாற் கண்டிலர். இது நெறியல்லா நெறியாயினவாறு. இனி இது தோழிக்குத் தலைவி மறுமொழியாகக் கூறியவாறு: என்னை? ஒன்று காட்ட வென்றது முன்னர்ப் பாங்கற்கூட்டம் பெற்றான் அதன்பின் நின்னினாய கூட்டம் பெறுகை காரணமாக நின்னிடத்து வந்திரந்து குறையுறாநின்றான்; அஃதென்போலவெனின், மற்றாங்கதுங் காட்டிடென்று மால் வரங்கிடந்தாற்போல என்றவாறு.
வஞ்சித்தல் - மறுமொழியை வெளிப்படையாகக் கொடாது பிறிதொன்றாகக் கூறுதல். இவை யிவை - முன்னர்ப்பாட்டும் இப்பாட்டும். இதனைத் தோழி கூற்றாக வுரைப்பாருமுளர்; இவையிவை யென்னு மடுக்கானும் இனி ``உள்ளப்படுவ னவுள்ளி`` எனத் தலைமகளோடு புலந்து கூறுகின்றமையானும், இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தமுடைத்தென்ப தறிக. 86

குறிப்புரை :

11.5 வஞ்சித் துரைத்தல்
வஞ்சித்துரைத்தல் என்பது நாணினாற் குறை நேரமாட்டாது வருந்தாநின்ற தலைமகள் இவளும் பெருநாணினளாதலின் என்னைக் கொண்டே சொல்லுவித்துப்பின் முடிப்பாளாயிரா நின்றாள்; இதற்கியா னொன்றுஞ் சொல்லாதொழிந்தால் எம்பெருமான் இறந்துபடுவனென உட்கொண்டு, தன்னிடத்து நாணினை விட்டு, பாங்கற்கூட்டம் பெற்றுத் தோழியிற் கூட்டத்திற்குத் துவளாநின்றா னென்பது தோன்ற, பின்னும் வெளிப்படக் கூற மாட்டாது மாயவன்மேல் வைத்து வஞ்சித்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.5. நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித் திவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

உள்ளப் படுவன வுள்ளி
யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
தறிவிலென் கூற்றுக்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உள்ளப் படுவன உள்ளி இதன் கண் ஆராயப் படுவனவற்றை ஆராய்ந்து; உரைத் தக்கவர்க்கு உரைத்து இதனை வெளிப் படவுரைத்தற்குத் தக்க நின் காதற்றோழியர்க்குரைத்து; படிறு மெள்ளத்துணி அவரோடுஞ் சூழ்ந்து நீ படிறென்று கருதிய இதனை மெள்ளத் துணிவாய்; துணியேல் அன்றித் துணியா தொழிவாய்; கள்ளப் படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் நெஞ்சிற் கள்ளத்தையுடைய வஞ்சகர்க்கு அருள் செய்யாத அரனது தில்லையை ஒருகாற் காணாதாரைப்போல்; அறிவிலென் கூற்றுக்கள் கொள்ளப் படாது அறிவில்லாதேன் சொல்லிய சொற்களை உள்ளத்துக் கொள்ளத்தகாது; மறப்பது - அவற்றை மறப்பாயாக; யான் வேண்டுவல் இது யான் வேண்டுவதிதுவே எ - று.
தில்லை காணலர் தோழிகூற்றிற்குவமை. கொள்ளப்படா தென்பது வினைமுதன்மேலுஞ் செயப்படு பொருண் மேலுமன்றி வினைமேனின்ற முற்றுச்சொல், ``அகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும்`` (குறள். 824) என்பதுபோல. மறப்பதென்பது: வியங்கோள். வருந்திய சொல்லின் - வருத்தத்தை வெளிப்படுக்குஞ் சொல்லான். சொல்லி யென்பதூஉம் பாடம். வகுத்துரைத்தது - வெளிப்படச் சொல்ல வேண்டுஞ் சொற் கேட்குமளவுஞ் சொல்லுஞ் சொல்.
அஃதாவது நீ சொல்லத்தகுங் காதற் றோழியர்க்கு வெளிப்படச் சொல்லென்று புலந்து கூறியது. 9; 87

குறிப்புரை :

11.6 புலந்துகூறல்
புலந்து கூறல் என்பது வெளிப்படக் கூறாது வஞ்சித்துக் கூறுதலான் என்னோடிதனை வெளிப்படக் கூறாயாயின் நின்காதற் றோழியர்க்கு வெளிப்படச்சொல்லி அவரோடு சூழ்ந்து நினக்குற்றது செய்வாய்; யான்சொன்ன அறியாமையை நின்னுள்ளத்துக் கொள்ளாது மறப்பாயாக; யான் வேண்டுவ திதுவேயெனத் தோழி தலைமகளோடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.6. திருந்திய சொல்லிற் செவ்வி பெறாது
வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

மேவியந் தோலுடுக் குந்தில்லை
யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
லேறக்கொல் பாவித்ததே

பொழிப்புரை :

இதன் பொருள்:
மெய்யில் மேவி அம் தோல் உடுக்கும் தில்லை யான்பொடி மெய்க்கட் பூசியது விரும்பி நல்ல தோலைச் சாத்துந் தில்லையானுடைய நீறு; கையில் ஓவியம் தோன்றும் கிழி கையின்க ணுண்டாகியது சித்திரம் விளங்குங் கிழி; நின் எழில் என்று உரை உளது - அக்கிழிதான் நின் வடிவென்று உரையுமுளதா யிருந்தது; தூவி அம் தோகை அன்னாய் தூவியையுடைய அழகிய தோகையை யொப்பாய்; என்ன பாவம் இதற்குக் காரணமாகிய தீவினை யாதென்றறியேன்! ; சொல் ஆடல் செய்யான் ஒன்று முரையாடான்; பாவி இருந்தவாற்றான் அக்கொடியோன்; அந்தோ பனை மா மடல் ஏறக்கொல் பாவித்தது அந்தோ! பனையினது பெரிய மடலேறுதற்குப் போலு நினைந்தது எ - று.
கிழியென்றது கிழிக்கணெழுதிய வடிவை. தன்குறையுறவு கண்டு உயிர்தாங்கலேனாக அதன்மேலும் மடலேறுதலையுந் துணியாநின்றானென்னுங் கருத்தால், பாவியென்றாள். எனவே, அவனாற்றாமைக்குத் தானாற்றாளாகின்றமை கூறினாளாம். கமழலந் துறைவனென்பதற்கு, கூம்பலங் கைத்தல (தி.8 கோவை.பா.11) மென்பதற் குரைத்தது உரைக்க. இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்: வலிதாகச்சொல்லிக் குறைநயப்பித்தல். 88

குறிப்புரை :

11.7 வன்மொழியாற் கூறல்
வன்மொழியாற் கூறல் என்பது புலந்து கூறாநின்ற தோழி அக்கொடியோன் அருளுறாமையான் மெய்யிற் பொடியுங் கையிற்கிழியுமாய் மடலேறத் துணியாநின்றான்; அக்கிழிதான் நின்னுடைய வடிவென்று உரையுமுளதா யிருந்தது; இனி நீயும் நினக்குற்றது செய்வாயாக; யானறியேனென வன்மொழியாற் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
11.7. கடலுல கறியக் கமழலந் துறைவன்
மடலே றும்மென வன்மொழி மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 8

பொன்னார் சடையோன் புலியூர்
புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என பொன்போலும் நிறைந்த சடையையுடையவனது புலியூரைப் புகழாதாரைப்போல வருந்த; புரி நோய் என்னால் அறிவு இல்லை எனக்குப் புரிந்த நோய் என்னாலறியப்படுவதில்லை; யான் ஒன்று உரைக்கிலன் ஆயினும் இதன்றிறத்து யானொன்றுரைக்க மாட்டேன்; துணை மனனே எனக்குத் துணையாகிய மனனே; வந்து அயலார் சொன்னார் எனும் இத்துரிசு துன்னாமை அயலார் சொன்னாரென்று இவள் வந்து சொல்லுகின்ற இக்குற்றம் என்கண் வாராமல்; என் ஆழ் துயர்வல்லையேல் அவராற்றாமை கூறக் கேட்டலானுண்டாகிய என தாழ்துயரை உள்ளவாறு சொல்ல வல்லையாயின்; நீர்மை இனிய வர்க்குச் சொல்லு நீர்மையையுடைய இனியவர்க்கு நீ சொல்லு வாயாக எ-று.
புரிதல் மிகுதல். அயலார் சொன்னாரென்றது ``ஓவியந் தோன்றுங்கிழி நின்னெழிலென்றுரையுளதால்`` (திரு.8 கோவை பா.88) என்றதனைப் பற்றி. அயலார் சொன்னாரென்பதற்கு யானறியாதிருப்ப அவராற்றாமையை அயலார்வந்து சொன்னா ரென்னும் இக்குற்றமென்றுரைப்பினு மமையும். இப்பொருட்கு அயலாரென்றது தோழியை நோக்கி. ஆழ்துயர் ஆழ்தற்கிடமாந் துயர்.
இவ்வாறு அவராற்றாமைக்கு ஆற்றளாய் நிற்றலின், தோழி குறைநேர்ந்தமை யுணருமென்பது பெற்றாம்; ஆகவே இது தோழிக்கு வெளிப்பட மறுமொழி கூறியவாறாயிற்று. சொல்லுநீர்மையினியவர்க் கென்றவதனால் தன்றுயரமும் வெளிப்படக்கூறி மடலால் வருங் குற்றமுந் தன்னிடத்து வாராமல் விலக்கச் சொன்னாளாயிற்று.
மெய்ப்பாடு: அச்சம். ஆற்றானெனக் கேட்டலிற் பயன்: குறைநேர்தல். 89

குறிப்புரை :

11.8 மனத்தொடுநேர்தல்
மனத்தொடு நேர்தல் என்பது ஆற்றாமையான் மடலேறத் துணியாநின்றானெனத் தோழியால் வன்மொழி கூறக்கேட்ட தலைமகள் அதற்குத் தானாற்றாளாய், தலைமகனைக் காண வேண்டித் தன் மனத்தொடு கூறி நேராநிற்றல். அதற்குச் செய்யுள்
11.8. அடல்வேலவ னாற்றானெனக்
கடலமிழ்தன்னவள் காணலுற்றது.
சிற்பி