திருக்கோவை-மணஞ்சிறப்புரைத்தல்


பண் :

பாடல் எண் : 1

பிரசந் திகழும் வரைபுரை
யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும்
பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
தீரப் புகுந்துநின்றே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சந்த புரை மேகலையாய் நிறத்தையுடைய வுயர்ந்த மேகலையையுடையாய்; எவர்க்கும் முன்னாம் அரசு அரியயன் முதலாகிய யாவர்க்கும் முன்னாயிருக்குமரசு; அம்பலத்து நின்று ஆடும் பிரான் இவ்வாறு பெரியனாயினும் எளியனாய் அம்பலத்தின்கண் எல்லாருங்காண நின்றாடுமுதல்வன்; அருள் பெற்றவரின் துயர் தீர அவனதருளுடையவரைப்போல நாந்துயர்தீர; புகுந்து நின்று நம்மில்லின்கட் புகுந்துநின்று; பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார் முரசம் திகழும் பெருந்தேன் றிகழு மலை போலும் யானையினது வலியை நங்காரணமாக வழித்தவரது முரசு முழங்கி விளங்காநின்றது; முருகியம் நீங்கும் அதுவேயுமன்றி, வெறி காரணமாக ஒலிக்கும் முருகியமும் நீங்காநின்றது; இனியென்ன குறையுடையோம் ? எ-று.
புகுந்துநின்று திகழுமெனக் கூட்டுக. வரையுயர்யானை யென்பதூஉம் பாடம். முருகுங் கமழுமென்று பாடமோதி, கலியாணத்திற் குறுப்பாம் நறுவிரை நாறாநின்றனவென் றுரைப்பாரு முளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை மகிழ்வித்தல். 299

குறிப்புரை :

19.1 மணமுரசு கூறல் மணமுரசு கூறல் என்பது வரைபொருட் பிரிந்துவந்த பின்னர் அருங்கலம் விடுத்தற்கு முன்றிற்கணின்று தலைமகனது முரசு முழங்காநிற்பக் கண்டு மகிழ்வுறாநின்ற தோழி, நாந்துயர் தீர நம்மில்லின்கட் புகுந்து நின்று யானைகடிந்தார் முரசு முழங்காநின்றது; இனி யென்ன குறையுடையோ மென வரைவு தோன்ற நின்று, தலைமகளுக்கு மணமுரசு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.1. வரைவுதோன்ற மகிழ்வுறுதோழி
நிரைவளைக்கு நின்றுரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

இருந்துதி யென்வயிற் கொண்டவன்
யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
சிலம்பன் அருந்தழையே

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலம்பன் அரும் தழை சிலம்பன்றந்த பெறுதற்கரிய தழைகள்; முன் எரி வலம் செய்து இப்பொழுது முன்றீயை வலங்கொண்டு; இடப்பால் அருந்துதி காணும் அளவும் பின் வசிட்டனிடப்பக்கத்துத் தோன்றும் அருந்ததியைக் காணும் அளவும்; தில்லை வாழ்த்தினர் போல் இருந்து திவண்டன தில்லையை வாழ்த்தினரைப்போல வாடாதிருந்து விளங்கின எ - று.
இருந்துதி என் வயின் கொண்டவன் அன்பர் துதிப்ப அவர் வயிற் றான்கொள்ளும் பெருந்துதியை என்வயினுண்டாக்கிக் கொண்டவன்; யான் எப்பொழுதும் உன்னும் மருந்து யானெப் பொழுது முன்னும் வண்ணஞ் சுவையுடைத்தாயதோர் மருந்து; திசைமுகன் மாற்கு அரியோன் இவ்வாறெனக்கெளியனாயினுந் திசை முகற்கும் மாற்கு மரியான்; தில்லை அவனது தில்லையெனக் கூட்டுக.
என்றது தழைகளை வாடாமல் வைத்து, அத்தழையே பற்றுக்கோடாக ஆற்றியிருந்தாளெனத் தலைமகளை மகிழ்ந்து கூறியவாறு. திவண்டன வென்பதற்கு வாடாதிருந்து இவளைத் தீண்டியின்புறுத்தினவென்றுரைப்பினுமமையும். தழை வாடா திருந்தனவென்றது முன்னர்த் தான் அவன்றந்த தழையையேற்ற முகூர்த்தத்தைக் கொண்டாடியவாறு. மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். வேயினமென்றோள் (பா.282) என்னுமதுதொட்டு இதுகாறும் வர இப்பாட்டுப் பத்தொன்பதும் அறத்தொடு நிலையினையும், அதன் பின்னர் வரைதலையும் நுதலினவென்பது. அகத்தினையின் மிகத் திகழும் இன்பக் கலவி இன்பக் களவு முற்றிற்று. எண்பத்தொராம் பாட்டு முதல் இப்பாட்டீறாகத் தோழி யாலாய கூட்டம்.300

குறிப்புரை :

19.2 மகிழ்ந்துரைத்தல் மகிழ்ந்துரைத்தல் என்பது மணமுரசொலி கேட்ட தோழி, சிலம்பன்றந்த பெறுதற்கரிய தழைகளை வாடாமல்வைத்து, அத்தழையே பற்றுக்கோடாக ஆற்றியிருந்தாளெனத் தலை மகளைத் தன்னுள்ளே மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.2 மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
நன்னுதற் றோழி தன்னின் மகிழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 3

சீரியல் ஆவியும் யாக்கையும்
என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
வணங்குமெங் காவலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அன்னே அன்னாய்; கார் இயல் கண்டர் வண்தில்லை வணங்கும் எம் காவலர் கார்போலுங் கண்டத்தை யுடையவரது வளவிய தில்லையைவணங்கு மெம்முடைய காவலர்; சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையால் சீர்மையியலு முயிருமுடம்பும்போல ஒருவரையொருவர் இன்றியமையாமையால்; கார் இயல் வாள் கண்ணி எண் அகலார் கரியவியல்பை யுடைய வாள் போலுங் கண்ணையுடையாளது கருத்தைக்கடவார்; கமலம் கலந்த வேரியும் சந்தும் வியல் தந்தென தாமரைப் பூவைச் சேர்ந்த தேனுஞ் சந்தனமரமும் இடத்துநிகழ் பொருளுமிடமுமாய் இயைந்து தம்பெருமையைப் புலப்படுத்தினாற் போல இயைந்து; கற்பின் நிற்பர் இவளது வழிபாட்டின் கண்ணே நிற்பர் எ - று.
எண்ணகலா ரென்றதனாற் காதலியாதலும், கற்பினிற்ப ரென்றதனால் வாழ்க்கைத்துணையாதலுங் கூறப்பட்டன. ஆவியும் வேரியும் தலைமகட் குவமையாகவும், யாக்கையுஞ் சந்தும் தலைமகற்குவமையாகவுமுரைக்க. பிரித்துவமையாக்காது, இவரது கூட்டத்திற்கு அவற்றது கூட்டமுவமையாக வுரைப்பினுமமையும், காரியல் கண்டர்வண்டில்லை வணங்கு மென்றதனான், இவரதில்வாழ்க்கை இன்றுபோல என்றும் நிகழு மென்பது கூறினாளாம். இன்னேயென்பது பாடமாயின், இப்பொழுதே யென்றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்வித்தல். 301

குறிப்புரை :

19.3 வழிபாடு கூறல் வழிபாடுகூறல் என்பது மணஞ்செய்த பின்னர் மணமனை காணவந்த செவிலிக்கு, காவலர் உடம்புமுயிரும்போல ஒருவரை யொருவர் இன்றியமையாமையால் இவள் கருத்தைக் கடவார்; கமலங் கலந்த தேனுஞ் சந்தனமரமும் போல வியைந்து இவள் கற்புவழி நிற்றலையுடையராய் இவள் வழியே நின்றொழுகா நின்றாரெனத் தோழி தலைமகன் றலைமகள் வழி யொழுகா நின்றமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.3. மணமனை காண வந்தசெவி லிக்குத்
துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 4

தொண்டின மேவுஞ் சுடர்க்கழ
லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா
ளயல்மன்னும் இவ்வயலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தொண்டினம் மேவும் சுடர்க் கழலோன் தில்லைத் தொல் நகரில் - தொண்டர தினத்தைப் பொருந்துஞ் சுடர்க்கழலை யுடையவனது தில்லையாகிய பழையநகரிடத்தில்; கண்ட இல் மேவு நம் இல் யான்கண்ட அவளதில்லம் மேவப்படு நமதில்லத் தோடொக்கும்; அவள் நீ அவள் நின்னோடொக்கும்; தண்டு இனம் மேவும் செழு மெல் திண் தோளவன் நின் கொழுநன் தண்டாகிய வினத்தையொக்கும் வளவியவாய் மெல்லியவாகிய திண்ணிய தோள்களையுடையான் நின்கொழுநனோ டொக்கும்; அவள் தற் பணிவோள் யான் அவடன்னைப்பணிந்து குற்றேவல் செய்வாள் என்னோடொக்கும்; வண்டினம் மேவும் குழலாள் அயல் இவ்வயல் - வண்டினம் பொருந்துங் குழலையுடையாளதயல் இவ்வயலோ டொக்கும்; வேறுசொல்லலாவதில்லை எ-று.
கண்டவென்பது கடைக்குறைந்து நின்றது. பெண்டீர்க்கு ஊறினி தாதனோக்கித் தோளிற்கு மென்மைகூறினாள். தண்டின மென்புழி இனமென்றது சாதியை. மன்னும்: அசைநிலை; பெரும் பான்மையுமென்பதுபட நின்றதெனினுமமையும். கண்டென்பதனைத் தன்மைவினை யென்று, அவளில்வாழ்க்கையேர் கண்டேனென முன் பொதுவகையாற் கூறிப் பின் சிறப்புவகையாற் கூறிற்றாக வுரைப்பாருமுளர். மெய்ப்பாடும், பயனும் அவை. 302

குறிப்புரை :

19.4 வாழ்க்கைநலங் கூறல் வாழ்க்கை நலங்கூறல் என்பது மணமனைகண்ட செவிலி, மகிழ்வோடு சென்று, நின்மகளுடைய இல்வாழ்க்கை நலத்திற்கு உவமைகூறில், நின்னுடைய இல்வாழ்க்கை நலமல்லது வேறுவமை யில்லையென நற்றாய்க்குத் தலைமகளது வாழ்க்கைநலங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.4. மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி
அணிமனைக் கிழத்திக் கதன்சிறப் புரைத்தது.

பண் :

பாடல் எண் : 5

பொட்டணி யான்நுதல் போயிறும்
பொய்போ லிடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல
ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான்
மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடையோன்தில்லை
போலிதன் காதலனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலன் மகுடமாகக் கட்டப்பட்ட அழகிய நீண்ட சடையை யுடையவனது தில்லையையொப்பாடன்னுடைய காதலன்; பொய் போல் இடை போய் இறும் எனப் பூண் இட்டு அணியான் பொய்போலுமிடை போயிறுமென்று கருதிப் பூணைப் பூட்டி யணியான்; தவிசின் மலர் அன்றி மிதிப்பக் கொடான் மெல்லடி நோதலஞ்சித் தவிசின் மிதிப்புழியும் மலரினன்றி மிதிப்பவிடான்; வண்டு உறுதல் அஞ்சி மட்டு அணிவார் குழல் மலர் வையான் வண்டுற்று மொய்த்தலஞ்சித் தேனையுடைய வழகிய வார்குழலிடத்து மலர்களை வையான்; இவை சொல்லுகின்றதென்; நுதல் பொட்டு அணியான் பொறையாமென்று நுதலின்கட் பொட்டையுமிடான் எ-று.
கட்டணி வார்சடையென்பதற்கு மிக்க அழகையுடைய சடையெ னினுமமையும். தவிசின் மிசையென்று பாடமோது வாருமுளர். 303

குறிப்புரை :

19.5 காதல் கட்டுரைத்தல் காதல் கட்டுரைத்தல் என்பது அவளில்வாழ்க்கை நலங் கிடக்க, அவன் அவண்மேல்வைத்த காதலான் இவையேயன்றிப் பொறையாமென்று கருதி நுதலின்கண் இன்றியமையாத காப்பாகிய பொட்டையு மணியான்; இஃதவன் காதலெனத் தலைமகனது காதன்மிகுதி கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.5. சோதி வேலவன்
காதல்கட் டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 6

தெய்வம் பணிகழ லோன்தில்லைச்
சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன்
வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
பரிசின்ன பான்மைகளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெய்வம் பணி கழலோன் தில்லைச் சிற்றம்பலம் அனையாள் பிறரான் வழிபடப்படுந் தெய்வங்கள் வணங்குந் திருவடிகளையுடையவனது தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாள்; என்றும் தெய்வம் பணிந்து அறியாள் எஞ்ஞான்றும் வேறொரு தெய்வத்தைப் பணிந்தறியாள்; நின்று திறை வழங்காத் தெவ்வம் பணியச் சென்றாலும் முன்னின்று திறைகொடாத பகைவர் வந்து பணியும்வண்ணம் வினைவயிற் சென்றாலும்; மன் வந்து அன்றிச் சேர்ந்து அறியான் அம்மன்னவன் அவளதில்லத்து வந்தல்லது ஆண்டுத்தங்கியறியான்; பௌவம் பணிமணி அன்னார் பரிசு இன்ன பான்மைகள் பௌவந்தந்த மணிபோலப் பெருங் குலத்துப்பிறந்த தூயோரதியல்பு இன்ன முறைமைகளை யுடைய எ-று.
தெவ்வு: தெவ்வமென விரிக்கும்வழி விரித்து நின்றது. தெவ்வம்பணியச் சென்றாலு மென்பதற்குத் தெவ்வர் அம்பையணிய வென்றும், பௌவம் பணி மணி யென்பதற்குக் கடலிடத்தும் பாம்பிடத்து முளவாகிய முத்தும் மாணிக்கமுமென்று முரைப்பாரு முளர். விற்பொலி நுதலி விற்போலு நுதலி. 304

குறிப்புரை :

19.6 கற்பறிவித்தல் கற்பறிவித்தல் என்பது தலைமகனது காதன்மிகுதி கூறின செவிலி, அதுகிடக்க, அவளவனையொழிய வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாளாதலான், அவன் றன்னைவணங்காத பகைவரைச் சென்று கிட்டித் திறைகொள்ளச் சென்றாலுந் திறை கொண்டுவந்து அவளதில்லத்தல்லது ஆண்டுத் தங்கியறியான்; இஃதவரதியல்பெனக் கூறி நற்றாய்க்குத் தலைமகளது கற்பறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்
19.6. விற்பொலி நுதலி
கற்பறி வித்தது.

பண் :

பாடல் எண் : 7

சிற்பந் திகழ்தரு திண்மதில்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங்
கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
லாதவ னீர்ங்களிறே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிற்பம் திகழ்தரு திண் மதில் தில்லை நுண்டொழில் விளங்குந் திண்ணிய மதிலையுடைய தில்லையின்; சிற்றம்பலத்துப் பொற் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் கற்பு சிற்றம்பலத்தின்கணுளனாகிய பொற்றகட்டு நிரைபோலுஞ் சடையையுடையவனது பூவணத்தையொக்கும் பொன்னினது கற்பு; அந்தி வாய் வடமீனும் கடக்கும் அந்திக் காலத்துளதாகிய வடமீனையும் வெல்லும்; அதனான், அவன் ஈர்ங்களிறு எடுத்துக்கொண்டவினையை யிடையூறின்றி யினிதின் முடித்து அவனூரும் மதத்தானீரியகளிறு; படி கடந்தும் இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது நிலத்தைக்கடந்தும் இல்லின்கட்டன் பந்தியிடத்தல்லது தங்காது எ -று.
பொற்பந்தியன்ன சடையென்பதற்கு அழகிய அந்திவானம் போலுஞ் சடையென்பாருமுளர். அந்திக்காலத் துக் கற்புடைமகளிராற் றொழப்படுதலின், அந்திவாய் வடமீனென் றாள். கற்புப்பயந்த வற்புதமாவது படிகடந்துங் கடிது வரும்வண்ணம் எடுத்துக் கொண்ட வினையை யிடையூறின்றி யினிது முடித்தல். 305

குறிப்புரை :

19.7 கற்புப் பயப்புரைத்தல் கற்புப் பயப்புரைத்தல் என்பது கற்பறிவித்த செவிலி, அவள் அவனையொழிய வணங்காமையின் அவனூருங்களிறும் வினைவயிற்சென்றால் அவ்வினை முடித்துக் கொடுத்து வந்து தன் பந்தியிடத்தல்லது ஆண்டுத்தங்காதாதலான், அவளது கற்பு, அந்திக் காலத்து வடமீனையும் வெல்லுமென அவளது கற்புப் பயந்தமை நற்றாய்க்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.7. கற்புப் பயந்த
அற்புத முரைத்தது.

பண் :

பாடல் எண் : 8

மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
றோர்தெய்வ முன்னலளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மன்னவன் தெம் முனை மேல் செல்லும் ஆயினும்மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்; மால் அரி ஏறு அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணன் ஆம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான்; மற்றைத் தேவர்க்கு எல்லாம் முன்னவன் தானல்லாத வரியயன்முதலாகிய தேவர்க்கெல்லாம் முன்னே யுள்ளான்; மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலள் அவளது மூவலை யொப்பாளும் வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாள் எ - று.
மற்றெத் தேவர்கட்கு மென்பதூஉம் பாடம். 306

குறிப்புரை :

19.8 மருவுதலுரைத்தல் மருவுதலுரைத்தல் என்பது கற்புப் பயப்புரைத்த செவிலி, வேந்தற்குற்றுழிப் பிரியினும் அவனூருந்தேரும் வினைமுடித்துத் தன்னிலையி னல்லது புறத்துத் தங்காது; அவளும் அவனை யொழிய மற்றோர் தெய்வமும் மனத்தானு நினைந்தறியாள்; இஃதிவர் காதலென அவ்விருவர்காதலு மருவுதல் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.8. இருவர் காதலும்
மருவுத லுரைத்தது,

பண் :

பாடல் எண் : 9

ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
றாதிவ் வணிநலமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆர் உயிர் இருவரது காதலுங்களிப்பும் இன்பவெள்ளத்திடையழுந்தப் புகுகின்ற தோருயிர்; ஈர் உருக்கொண்டு ஆனந்த வெள்ளத்திடைத் திளைத்தால் ஒக்கும் ஓருடம்பாற்றுய்த்தலாராமையின் இரண் டுடம்பைக் கொண்டு அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து திளைத்ததனோ டொக்கும்; அதுவேயு மன்றி, அம்பலம் சேர் ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் அம்பலத்தைச் சேர்ந்த வின்பவெள்ளத்தைச் செய்யு மொலிக்குங் கழலையுடைத்தாகிய திருவடியையுடைய வனதருளைப் பெற்றவரின்பம் போல; ஆனந்த வெள்ளம் வற்றாது இவ்வின்ப வெள்ளமும் ஒருகாலத்துங் குறைவு படாது; இவ்வணிநலம் முற்றாது இவ்வணிநலமு முதிராது எ-று.
இவை யைந்திற்கும் மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். 307

குறிப்புரை :

19.9 கலவியின்பங் கூறல் கலவியின்பங் கூறல் என்பது இருவர்காதலு மருவுதல் கூறின செவிலி, இவ்விருவருடைய காதலுங் களிப்பும், இன்பவெள்ளத்திடை யழுந்தப் புகுகின்றதோ ருயிர் ஓருடம்பாற் றுய்த்தலாராமையான் இரண்டுடம்பைக் கொண்டு, அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து, திளைத்ததனோடொக்கும், அதுவன்றி அவ்வின்ப வெள்ளம் ஒருகாலத்தும் வற்றுவதும் முற்றுவதுஞ் செய்யாதென நற்றாய்க்கு அவரது கலவி யின்பங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
19.9. நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
மகிழ்தூங் குளத்தோ டிகுளை கூறியது.
சிற்பி