திருக்கோவையார்-காவற்பிரிவு


பண் :

பாடல் எண் : 1

மூப்பான் இளையவன் முன்னவன்
பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
தாழ்குழற் பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கார்க் கயற் கண் பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ்குழல் பூங்கொடி கரியகயல்போலுங் கண்ணினையும் பூவின்கண் நறுநாற்றமுடைமை யாகிய நன்மைவிளங்குஞ் சுருண்ட தாழ்ந்த குழலையுமுடைய பூங்கொடியை யொப்பாய்; மூப்பான் எல்லார் யாக்கைக்கும் முன்னே தனதிச்சையாற் கொள்ளப்பட்ட திருமேனியையுடைய னாதலின் எல்லார்க்குந் தான் மூப்பான்; இளையவன் பின்றோன்றிய யாக்கையை யுடையாரெல்லாரும் மூப்பவும் தான் நிலைபெற்ற விளமையை யுடையனாதலின் எல்லார்க்கும் மிளையான்; முன்னவன் உலகத்திற்கு முன் னுள்ளோன்; பின்னவன் அதற்குப் பின்னுமுள்ளோன்; முப்புரங்கள் வீப்பான் மூன்று புரங்களையுங் கெடுப்பான்; வியன் தில்லையான்- அகன்ற தில்லைக்கண்ணான்; அருளால் நமர் விரி நீர் உலகம் காப்பான் பிரியக் கருதுகின்றார் அவனதேவலால் நமர் விரிந்த நீராற் சூழப்பட்ட வுலகத்தைக் காக்கவேண்டிப் பிரியக்கருதா நின்றார் எ-று.
தில்லையா னேவலாவது எல்லா வுயிர்களையு மரசன் காக்க வென்னுந் தருமநூல் விதி. காத்தலாவது தன் வினைசெய் வாரானுங்கள்வரானும் பகைவரானும் உயிர்கட்கு வருமச்சத்தை நீக்குதல். தில்லையானருளா லென்பதற்கு அவனதருளா னுலகத்தைக் காக்குந் தன்மையை யெய்தினானாதலின் அக்காவற்குப் பிரிகின்றா னென்றுரைப்பினு மமையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: காவற்குப் பிரியும் பிரிவுணர்த்துதல். ; 312

குறிப்புரை :

21.1 பிரிவறிவித்தல்
பிரிவறிவித்தல் என்பது தருமநூல் விதியால் நமர் உலகத்தைப் பாதுகாப்பான் பிரியக் கருதாநின்றாரெனத் தலைமகன் காவலுக்குப் பிரியக் கருதாநின்றமை தோழி தலைமகளுக் கறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்
21.1. இருநிலங் காவற் கேகுவர் நமரெனப்
பொருசுடர் வேலோன் போக்கறி வித்தது.

பண் :

பாடல் எண் : 2

சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்: கள் துறு புரி குழலாய் பூவிற்றேனை யுடைய நெருங்கிய சுருண்ட குழலையுடையாய்; சிறுகண் சிறிய கண்ணினையும்; பெருங்கை பெரிய கையினையும்; திண் கோடு திண்ணியகோட்டினையும்; குழை செவி குழைந்த செவியினையும்; செம்முக மாத் தெறு கட்டு அழிய முன் உய்யச் செய்தோர் சிவந்த முகத்தினையு முடைய யானையினது வருத்தும் வளைப்புக்கெடக் குரவராற் பாதுகாக்கப்படு முற்காலத்து நம்மை யுய்வித்தவர்; கருப்புச் சிலையோன் உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்ன லரின் கருப்பு வில்லையுடையவனைச் சென்றுற்ற கண்ணிற்றீயை யுடையவனுறையும் அம்பலத்தை யுன்னாதாரைப் போல; இன்று சூழ்கின்றது இதுவோ கண்ணோட்ட மின்றித் தம்மல்ல தில்லாத இக்காலத்து நினைக்கின்றதிதுவோ! இது தகுமோ! எ-று.
கருப்புச்சிலையோ னென்பதனை எழுவாயாக்கி யுரைப்பினு மமையும். தெறுகட்டழீஇ முன்னமுய்யச் செய்தோரென்பது பாட மாயின், தெறுகின்றவிடத்துத் தழுவி முன்னம்மையுய்வித்தவரென்று ரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்கு வித்தல். 313

குறிப்புரை :

21.2 பிரிவுகேட்டிரங்கல் பிரிவுகேட்டிரங்கல் என்பது பிரிவறிவித்த தோழிக்கு, முற்காலத்துக் குரவர்களாற் பாதுகாக்கப்படு நம்மை வந்து யானை தெறப்புக, அதனைவிலக்கி நம்முயிர் தந்தவர், இன்று தம்மல்ல தில்லாத இக்காலத்துத் தாம் நினைந்திருக்கின்ற திதுவோ? இது தமக்குத் தகுமோவெனத் தலைமகனது பிரிவுகேட்டுத் தலைமக ளிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
21.2. மன்னவன் பிரிவு நன்னுத லறிந்து
பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது.
சிற்பி