திருக்கோவையார்-பொருள் வயிற்பிரிவு


பண் :

பாடல் எண் : 1

முனிவரும் மன்னரும் முன்னுவ
பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச்
சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று
தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று
வந்திக்கும் நன்னுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என துறந்தாரு மரசரும் கருதுவனவாகிய மறுமையு மிம்மையும் பொருளான் முற்றுப்பெறுமென்று பொது வகையாற் கூற; கண் பனி வரும் அக்குறிப்பறிந்து கண்கள் பனிவாரா நின்றன, இவ்வாறு, பனிவருங்கண்ணோடு அறிவழிந்து வருந்திய விடத்து; பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய் பரமனது திருச் சிற்றம்பலத்தை யொப்பாய்; துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப நீ துன்பம் வருந்தன்மை இஃதென்ன காரணத்தான் வந்தது யான்பிரியேனென்று தூய நீரைத் தெளித்துத் தலையளிசெய்ய அறிவு பெற்று அறிவழிந்த காலத்தைப் பிரிந்த காலமாகவே கருதி; நனி வரும் நாள் இதுவோ என்று நன்னுதல் வந்திக்கும் நீர் நனிதாழ்த்து வருநாளிதுவோவென்று நன்னுதலாள் வணங்கி நின்றாள்; இனி நீயுணர்த்துமாற்றானுணர்த்து எ-று.
பரமன் றிருச்சிற்றம்பலமனையா ளென்று பாடமோதுவாரு முளர். நீயெனவுந் தாழ்த்தெனவு மொருசொல் வருவித்துரைக்கப் பட்டது. நனிவந்திக்குமெனினுமமையும். துறந்தார் கருதுவதாகிய மறுமையின்பமும், அரசர் கருதுவதாகிய விம்மையின்பமு மென்று, நிரனிறையாகக் கொண்டு, அவரிருவருங் கருதுவனவாகிய இப் பொருளிரண்டையும் பொருண்முடிக்குமென்று பொது வகையாற் கூறினானெனக் கொள்க மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுணர்த்துதல். 332

குறிப்புரை :

24.1 வாட்டங்கூறல் வாட்டங்கூறல் என்பது பொருள்வயிற் பிரியலுறாநின்ற தலைமகன், இருமையும் பொருளானே முற்றுப்பெறுமென்று யான் பொதுவகையாற்கூற, அக்குறிப்பறிந்து கண்பனிவர, இத்தன்மையளாய் வாடினாள்; இனி யென்னாற் பிரிவுரைத்த லரிது; நீ யுணர்த்து மாற்றானுணர்த்தெனத் தோழிக்குத் தலை மகளது வாட்டங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
24.1. பிரிவு கேட்ட வரிவை வாட்டம்
நீங்க லுற்றவன் பாங்கிக் குரைத்தது.

பண் :

பாடல் எண் : 2

வறியா ரிருமை யறியா
ரெனமன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற்
றார்நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன் தில்லைச்
சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் திருநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இருவர் அறியா அளவு நீண்டு நின்றோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய மாலும் பிரமனுமாகிய விருவர் அடியும் முடியும் அறியாத எல்லையின்கண் நீண்டு நின்றவனது திருச்சிற்றம்பலத்தையொக்கும்; செறி வார் கருங் குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதல் செறிந்த நீண்டகரியகுழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்யவாயினையுமுடைய திரு நுதால்; வறியார் பொருளில்லாதார்; இருமை அறியார் என இம்மையு மறுமையு மாகிய இருமையின்கண்வரும் இன்பமு மறியா ரென்று கருதி; மன்னும் மா நிதிக்கு தொலையாது நிலைபெறும் பெரிய வரும் பொருடேடுதற்கு; நெறிஆர் அரும் சுரம் நமர் செல்லல் உற்றார் வழியறிதற்கரிய அருஞ்சுரத்தை நமர் போகலுற்றார் எ-று.
செறியா ரென்பதூஉம் பாடம். சிறுகானெறி பலவாகிய வருஞ்சுர மெனினுமமையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுடம்படுத்தல். 333

குறிப்புரை :

24.2 பிரிவுநினைவுரைத்தல் பிரிவுநினைவுரைத்தல் என்பது வாட்டங் கேட்ட தோழி, பொருளில்லாதார் இருமையின் கண்வரு மின்பமும் அறியாரெனவுட் கொண்டு, அருஞ்சுரம்போய், நமர் பொருடேட நினையாநின்றா ரெனத் தலைமகளுக்குத் தலைமகனது பிரிவுநினை வுரையா நிற்றல். அதற்குச் செய்யுள்
24.2. பொருள்வயிற் பிரியும் பொருவே லவனெனச்
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 3

சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி
எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
றம்ம கொடியவளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தோழி கொடியவள் தோழியாகிய கொடியவள்; அஞ்சனம் எழுதிற் கரப்பதற்கே ஒழிகுவது அறிவாள் அஞ்சன மெழுதின் எழுதுகின்ற கால மத்துணையுங் காதலர் தோன்றாமையான் அவ்வஞ்சனத்தை யொழிவதறிவாள்; அம்பலவர்ப் பணியார் குறி வாழ் நெறி அன்பர் செல்வர் என்று அம்பலவரை வணங்காதார் அவ்வணங்காமைக்குக் குறியாக வாழுந் தீயநெறியை அன்பர் செல்வரென்று; வாள்சிறு உகிர் உற்று உறாமுன்னம் சின்னப்படும் குவளைக்கு ஒளியையுடைய சிறியவுகிர் சிறிதுறாமுன்னம் பொடிபடுங் குவளைப் பூவிற்கு; எறிவாள் கழித்தனள் எறிதற்குக் கருவியாகிய வாளையுறைகழித்தாள்; யான்கூறுவதுண்டோ! எ-று.
கொடியவரே யென்பது பாடமாயிற் கொடியராகிய வன்பரெனக் கூட்டுக. அம்ம: அசைநிலை. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செல வழுங்குவித்தல். 334

குறிப்புரை :

24.3 ஆற்றாது புலம்பல் ஆற்றாது புலம்பல் என்பது பிரிவுநினைவுரைப்பக்கேட்ட தலைமகள், இத்தோழியாகிய கொடியவள், இத்தன்மையை யறிந்திருந்தும், அன்பர் பிரிவரெனக் குவளைப்பூ வெறிதற்கு வாளுறைகழித்தாற்போலக் கூறினாள்; இதற்கியான் கூறுவதுண்டோ வென ஆற்றாது புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.3. பொருள்தரப் பிரியும் அருள்தரு பவனெனப்
பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.

பண் :

பாடல் எண் : 4

வானக்கடிமதில் தில்லையெங்
கூத்தனை ஏத்தலர் போற்
கானக் கடஞ்செல்வர் காதல
ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
இனிச்சென்று தேர்பொருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
வானக் கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் முகில்களையுடைத்தாகிய காவலையுடைய மதிலாற் சூழப்பட்ட தில்லையில் எங்கூத்தனை வாழ்த்தாதார் போல; காதலர் கானக் கடம் செல்வர் என்ன காதலர் கானகத்தையுடைய சுரத்தைச் செல்வரென்று சொல்ல; கதிர் முலைகள் மானக் கனகம் தரும் ஒளியையுடைய முலைகள் கொண்டாடப்படும் பொன்னைத்தாரா நின்றன; மலர்க் கண்கள் முத்தம் வளர்க்கும் மலர் போன்ற கண்கள் முத்தத்தைப் பெருக உண்டாக்கா நின்றன; அதனான், தேன் நக்க தார் மன்னன் தேனோடு மலர்ந்த தாரையுடைய மன்னன்; இனிச் சென்று தேர் பொருள் என் இனிச் சேட்சென்று தேடும் பொருள் யாது! எ-று.
மானமென்றது அளவை. அளவையென்றது பிரமாணம். மாற்றாணிப்பொன்னென்றுரைப்பினு மமையும், மன்னனென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்தது; இயல்புவிளி யென்பாருமுளர். மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம், பயன்: அது. 335

குறிப்புரை :

24.4 ஆற்றாமைகூறல் ஆற்றாமைகூறல் என்பது தலைமகளது வருத்தங்கண்ட தோழி, காதலர் கானகத்தையுடைய சுரத்தைப் போய்ப் பொரு டேட நினையாநின்றாரென்றுயான் சொல்லுமளவில், அவளது முலையுங் கண்ணும் பொன்னும் முத்துந் தாராநின்றன: இனி நீ சேட்சென்று தேடும் பொருள் யாதோவெனத் தோழி தலைமக னுக்கு அவளது பிரிவாற்றாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.4. ஏழை யழுங்கத்
தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 5

சுருடரு செஞ்சடை வெண்சுட
ரம்பல வன்மலயத்
திருடரு பூம்பொழில் இன்னுயிர்
போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை
யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை
யேற்குப் புரவலரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுருள் தரு செஞ்சடைவெண் சுடர் அம்பலவன் மலயத்து சுருண்ட செஞ்சடைக்கணணிந்த வெண்சுடரை யுடைத் தாகிய மதியையுடைய வம்பலவனது பொதியின் மலைக்கண்; இருள் தரு பூம் பொழில் இருண்ட பூவையுடைய பொழிலிடத்து; இன் உயிர் போலக் கலந்து இன்னுயிர்போல இனியராய் ஒன்றுபட்டு வந்து கூடி; இசைத்த அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து நமக்குச் சொன்ன அருளைப் புலப்படுத்தும் இனிய சொற்கள் எல்லா வற்றையும் மறந்து; அத்தம் சென்றோ தாம் அருஞ்சுரஞ் சென்றோ; புரவலர் காவலர்; வினையேற்குப் பொருள் தரக்கிற் கின்றது தீவினை யேற்குப் பொருளைத்தரத் தொடங்குகின்றது! இது தகுமோ! எ-று.
இருளைத்தருமென் றுரைப்பினு மமையும். உடம் போடுயிர் கலக்குமாறு போலக் கலந்தெனினு மமையும். திணை பெயர்த்திடுதல் பிரிவுள்ளிப் பாலைநிலத்தனாகியானை மருதநிலத்த னாக்குதல். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்குவித்தல். 336

குறிப்புரை :

24.5 திணைபெயர்த்துரைத்தல் திணை பெயர்த்துரைத்தல் என்பது யான் அவர்க்கு நின தாற்றாமை கூறினேன், இனியவர் நினைவறியேனென்ற தோழிக்கு, தாம் எனக்கருளைப் புலப்படுத்திய சொற்களத் தனையு மறந்தோ காவலர் தீவினையேற்குப் பொருளைத்தரத் தொடங்குகின்ற தெனப் பிரிவுள்ளிப் பாலைநிலத்தனாகிய தலை மகனை மருதநிலத்தனாக்கித் தலைமகள் புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் .
24.5. துணைவன் பிரியத் துயருறு மனத்தொடு
திணைபெயர்த் திட்டுத் தேமொழி மொழிந்தது.


பண் :

பாடல் எண் : 6

மூவர்நின் றேத்த முதலவன்
ஆடமுப்பத்து மும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன் தில்லை
யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக
மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம்
உரைப்பது பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மூவர் நின்று ஏத்த நான்முகனும் மாலும் இந்திரனுமாகிய மூவர்நின்றுபரவ; முதலவன் ஆட எல்லாப் பொருட்குங் காரணமாகியவ னாடாநிற்ப; முப்பத்து மும்மைத் தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லையம்பலம் சீர் வழுத்தா முப்பத்து மும்மையாகிய எண்ணையுடைய தேவர்கள் சென்று வழுத்துஞ் சிவனது தில்லை யம்பலத்தை நன்மைபுகழாத; பாவர் சென்று அல்கும் நரகம் அனைய தீவினையார் சென்று தங்கு நரகத்தையொக்கும்; புனை அழல் கான் போவார் நம் காதலர் செய்தாற்போலு மழலையுடைய காட்டைப் போவர் போன்றிருந்தார் நங்காதலர்; பூங்கொடி பூங்கொடி போல்வாய்; நாம் உரைப்பது என் இனி நாஞ் சொல்லுவதுண்டோ! எ-று.
முப்பத்துமும்மை முப்பத்து மூவரது தொகுதியெனினு மமையும். சீர்வழுத்தா வென்பன ஒருசொன் னீர்மைப்பட்டு அம்பலத்தையென்னு மிரண்டாவதற்கு முடிபாயின. பொருத்தம் உள்ளத்து நிகழ்ச்சி. சொல்லாது பொருள்வயிற் பிரிவோன் கருத் தறிந்து தோழி சொல்லியது. மெய்ப்பாடும், பயனும் அவை. 337

குறிப்புரை :

24.6 பொருத்த மறிந்துரைத்தல் பொருத்தமறிந்துரைத்தல் என்பது திணைபெயர்த்துக் கூறின தலைமகளுக்கு, யாமெல்லாஞ் சொன்னேமாயினுங் காதலர்க்கு நினைவு பொருண்மேலேயாயிருந்தது: இனி யாஞ் சொல்லுவ தென்னோவெனத் தோழி தலைமகனது பொருத்த மறிந்து, தானதற்கு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.6. பொருள்வயிற் பிரிவோன் பொருத்த நினைந்து
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

பண் :

பாடல் எண் : 7

தென்மாத் திசைவசை தீர்தரத்
தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி
யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப்

பூவணம் அன்னபொன்னே வன்மாக் களிற்றொடு சென்றனர்
இன்றுநம் மன்னவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தென் மாத் திசை வசை தீர்தர தெற்காகிய பெரிய திசை குற்றநீங்க; என்மாத் தலைக் கழல் வைத்து எனது கருந்தலைக்கட் கழல்களை வைத்து; தில்லைச் சிற்றம்பலத்து தில்லைச் சிற்றம்பலத்தின்கண்; எரி ஆடும் இறை திகழும் பொன் மாப் புரிசைப் பொழில் திருப் பூவணம் அன்ன பொன்னே எரியோடாடு மிறைவனது விளங்கும் பொன்னானியன்ற பெரியமதிலாற் சூழப்பட்ட பொழிலையுடைய திருப் பூவணத்தை யொக்கும் பொன்னே; நம் மன்னவர் வன் மாக்களிற்றொடு இன்று சென்றனர் நம்மன்னர் வலிய பெரிய களிறுகளோடும் வினைகுறித்து இன்று சென்றார் எ-று.
நால்வகைத்தானையோடுஞ் சென்றா ரெனினு மமையும். மதிற்கால்சாய்த்தற்குக் களிறு சிறந்தமையின் அதனையே கூறினார். வினைவயிற்பிரிவுழிக் களிற்றுத்தானை சிறந்தமையின், ஒடு: உயர் பின்வழி வந்ததாம்; வேறுவினை யொடுவாய்க் களிற்றையுடை யராய்ச் சென்றாரென்பதுபட நின்றதெனினு மமையும். ஊர்ந்தகளி றென்று ஒடு கருவிப் பொருட்கண் வந்ததெனினு மமையும். செல்வ ரென்னாது சென்றாரென்றமையான், சொல்லாது பிரிந்தானாம். மா வென்பது விலங்கென்று நாய்த்தலை யென்றுரைப்பாரு முளர். வாடுதற்கு - வாடுதலான். மெய்ப்பாடு: அழுகை. பயன்: பிரிவுணர்த் துதல்.338

குறிப்புரை :

24.7 பிரிந்தமைகூறல் பிரிந்தமை கூறல் என்பது பொதுவகையானுணர்த்தினே மாயின், இனித்தீயது பிற காண்கின்றோமெனத் தலைமகனுணர்த்தாது பிரியாநிற்ப, நின்முன்னின்று பிரிவுணர்த்தினால் நீ மேனியொளி வாடுவையென வுட்கொண்டு, பொருண்முடித்துக் கடிதின் மீள்வாராக நால்வகைத்தானையோடு நம்மன்னர் வினைவயிற்சென்றாரெனத் தோழி, தலைமகளுக்குத் தலைமகன் பிரிந்தமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.7. எதிர்நின்று பிரியிற் கதிர்நீ வாடுதற்
குணர்த்தா தகன்றான் மணித்தேரோ னென்றது.

பண் :

பாடல் எண் : 8

ஆழியொன் றீரடி யும்மிலன்
பாகன்முக் கட்டில்லையோன்
ஊழியொன் றாதன நான்குமைம்
பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்மெண்
டிசையுந் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந்
தேர்வந்து வைகுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:

ஆழி ஒன்று காலுள்ள தொன்று; பாகன் ஈரடியும் இலன் பாகன் இரண்டடியுமுடையனல்லன், இவ்வுறுப்புக் குறையோடு; ஐம் பூதமும் ஆறு ஒடுங்கும் முக்கண் தில்லையோன் ஊழி ஒன்றாதன நான்கும் ஐந்துபூதமுந் தோன்றியவாறொடுங்கும் மூன்றுகண்ணையுடைய தில்லையானுடைய ஊழியுமொவ்வாத பெருமையையுடைய நான்கியாமத்தின்கண்ணும்; ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து அன்றோ ஏழாயியன்ற ஆழ்ந்த கடல்களையும் எட்டுத்திசைகளையுந் திரிந்திளைத்தன்றோ; அருக்கன் பெருந்தேர் வந்து வைகுவது அருக்கனது பெருந்தேர் ஈண்டுவந்து தங்குவது; அதனான் அதன் வரவு யாண்டையது! இவளாற்றுதல் யாண்டையது! எ-று.
ஈரடியுமென்பதனை எழுவாயாக்கினு மமையும். நான்குந் திரிந்தெனவியையும். இயன்றவென்பது கடைக்குறைந்து நின்றது. வாழி அசைநிலை. ஒன்றாதன வென்பதனை நான்கு மென்னு மெழுவாய்க்குப் பயனிலையாக்கி யுரைப்பினுமமையும். ஐம்பூதமும் ஆறுகளொடுங்கும் ஏழ்கடலுமென்றெண்ணிக் கடலோ டருக்கற்கியை புண்மையான், ஐம்பூதத்திற் பிரித்துக் கூறினாரென்பாருமுளர். இரவும்பகலு மொப்பவருமாயினும் இரவுறுதுயரத்திற் காற்றாமை யான், இராப்பொழுது பலகால் வருவதுபோலப் பயிறருமிரவென் றாள். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்குவித்தல். 339

குறிப்புரை :

24.8 இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல் இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல் என்பது பிரிவு கேட்ட தலைமகள தாற்றாமுகங் கண்ட தோழி, இவ்வுறுப்புக்குறையோ டெங்குந் திரிந்திளைத்து, அருக்கனது தேர் வருதல் யாண்டை யது? இவளாற்றுதல் யாண்டையதென, அவளிரவுறு துயரத்திற் குத் தானிரக்கமுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.8. அயில்தரு கண்ணியைப் பயில்தரு மிரவினுள்
தாங்குவ தரிதெனப் பாங்கி பகர்ந்தது.

பண் :

பாடல் எண் : 9

பிரியாரென இகழ்ந்தேன் முன்னம்
யான்பின்னை எற்பிரியின்
தரியா ளென இகழ்ந் தார்மன்னர்
தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்மெழி
லம்பலத் தோனெவர்க்கும்
அரியா னருளிலர் போலன்ன
என்னை யழிவித்தவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முன்னம் பிரியார் என யான் இகழ்ந்தேன் முற்காலத்து அவருலகின் மேல்வைத்துக் கூறியவழி நீட்டித்துப் பிரிவராயினும் இப்பொழுது பிரியாரென யானிகழ்ந்திருந்தேன்; எற்பிரியின் தரியாள் என மன்னர் தாம் பின்னை இகழ்ந்தார் என்னைத் தாம் பிரிகின்றாராக வுணரின் இவளுயிர் தாங்காளென மன்னர் தாம் பின்னுணர்த்துதலை யிகழ்ந்தார்; அன்ன அத்தமைய வாகிய இரண்டிகழ்ச்சியும்; தக்கன் வேள்வி எரி ஆர் மிக்க எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் தக்கனது வேள்வியின் முத்தீ நிறைந்த மிக்கவழகையழித்த எழிலையுடைய அம்பலத்தான்; எவர்க்கும் அரியான் யாவர்க்குமரியவன்; அருள் இலர் போல் என்னை அழிவித்த அவனதருளில்லாதாரைப் போல வருந்த என்னை யழிவித்தன எ-று.
உண்மையாற் காரணமாவனவும், உணரப்பட்டாற் காரண மாவனவும் எனக் காரணமிருதிறத்தன. அவற்றுட் பிரிவு தரியாமைக்கு உணரப்பட்டாற் காரணமாமாகலின் பிரியினென்புழிப் பிரிகின்றாராக வுணரினென்பது ஆற்றலாற் பெற்றாம், புலிவரினஞ்சு மென்புழிப் போல. எரியாரெழிலழிக்குமென்பதற்கு எரியின தெழிலழிக்கு மென்பார், ஆரைக்கிளவிகொடுத் திழித்துக் கூறினாரெனினு மமையும். அழிக்குமென்பது காலமயக்கம். கற்பந்தோறும் அவ்வாறு செய்தலின் நிகழ்காலத்தாற் கூறினாரெனினுமமையும். உணர்த்தாது பிரியினும் ஒருவாற்றானுணர்ந்து பின்னுமாற்றா ளாவளாலெனின், தீயதுபிற காணப்படுமென்பதாகலானும், முன்னின் றுணர்த்தல் வல்லனல்லாமையானும் அவ்வாறு பிரியுமென்க. மெய்ப்பாடு: அது. பயன்: ஆற்றாமை நீங்குதல். 340

குறிப்புரை :

24.9 இகழ்ச்சிநினைந்தழிதல் இகழ்ச்சி நினைந்தழிதல் என்பது தோழி இரக்கமுற்றுக் கூறாநிற்ப, முற்காலத்து அவருலகின் மேல்வைத் துணர்த்தியவழி நீட்டித்துப் பிரிவாராயினும், இப்பொழுதைக்கிவர் பிரியாரென யான் அவர் பிரிவிகழ்ந்திருந்தேன்; முன்னின்று பிரிவுணர்த்தின் இவளுயிர் தரியாளென்று அவருணர்த்துதலை யிகழ்ந்து போனார்; அத்தன்மைய வாகிய இரண்டிகழ்ச்சியும், என்னை யித்தன்மைத்தாக வழிவியா நின்றனவெனத் தலைமகள் இகழ்ச்சிநினைந் தழியா நிற்றல். அதற்குச் செய்யுள்
24.9. உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ்குழலி வாடியது.

பண் :

பாடல் எண் : 10

சேணுந் திகழ்மதிற் சிற்றம்
பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
சூணுந் திருத்து மொருவன்
திருத்தும் உலகினெல்லாங்
காணுந் திசைதொறுங் கார்க்கய
லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு
தோன்றுமொர் பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் சேய்மைக் கண்ணும் விளங்கும் மதிலையுடைய சிற்றம்பலத்தை யுடையான்; தெள் நீர்க் கடல் நஞ்சு ஊணும் திருத்தும் ஒருவன் தெளிந்த நீரையுடைய கடலினஞ்சை உணவாகவுஞ் செய்யு மொப்பிலாதான்; திருத்தும் உலகின் எல்லாம் அவனாற் செய்யப்படு முலகினெங்கும்; காணும் திசை தொறும் பார்க்குந் திசைதோறும்; கார்க் கயலும் கண்ணாகிய கரியகயல்களையும்; செங்கனியொடு வாயாகிய செய்யகனி யோடும்; பைம் பூணும் பசும்பொன்னா னியன்ற பூணையும்; புணர் முலையும் கொண்டு தம்முட் புணர்ந்த முலைகளையுமுடைத்தாய்; ஓர் பூங்கொடி தோன்றும் ஒருபூங்கொடி தோன்றா நின்றது எ-று.
நஞ்சுண்டலையுங் குற்றநீக்குமெனவுரைப்பினுமமையும். ஊணுந் திருத்துமென்பது அதுசெய்யுந் தன்மையனென்னும் பொருட் டாகலின், நிகழ்காலத்தாற் கூறினார். 341

குறிப்புரை :

24.10 உருவுவெளிப்பட்டுநிற்றல் உருவுவெளிப்பட்டு நிற்றல் என்பது தலைமகள் இகழ்ச்சி நினைந்தழியாநிற்ப, தானுணர்த்தாது பிரிந்தமையுட் கொண்ட பொருள் வலித்த நெஞ்சொடு செல்லாநின்ற தலைமகன், காணுந்திசைதோறுங் கயலையும் வில்லையுஞ் சிவந்த கனியையு முலையையுங் கொண்டு ஒரு பூங்கொடி தோன்றாநின்றதெனத் தலைமகளதுருவை நினைந்து மேற்போகமாட்டாது மீளலுற்றுச் சுரத்திடை நில்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.10. பொருள்வயிற் பிரிந்த ஒளியுறு வேலவன்
ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.

பண் :

பாடல் எண் : 11

பொன்னணி யீட்டிய ஓட்டரும்
நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக
ரன்ன அன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
கோநீ விரைகின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் பொற்றிரளை யீட்டுவா னோட்டந்தருநெஞ்சமே; நீ விரைகின்றது இப்பொழுது நீ விரைகின்றது; இமையோர் இறைஞ்சும் மன் அணி தில்லை வளநகர் அன்ன இமையோர் சென்று வணங்கும் மன்னனது அழகிய தில்லையாகிய வளநகரையொக்கும்; அன்ன நடையாள் மின் அணி நுண் இடைக்கோ அன்னத்தினடை போலு நடையை யுடையாளது மின் போலும் நுண்ணிய விடைக்கோ; பொருட்கோ எடுத்துக்கொண்ட பொருட்கோ, இரண்டற்குமல்லவோ; இப் பொங்கு வெங்கானின் நணி நிற்குமிது என் என்பது இவ்வழல் பொங்கு வெங்கானத்தைச் சேர்ந்து போவதும் மீள்வதுஞ் செய்யாது நிற்கின்ற விஃதியாதென்று சொல்லப்படுவது? எ - று.
நண்ணியென்பது நணியென விடைக்குறைந்து நின்றது. அணியென்று பிரித்து வெங்கானின்கணணித்தாக நிற்பதென்றுரைப் பினுமமையும். இமையோரிறைஞ்சுந் தில்லைவளநகரெனவியை யும். 342

குறிப்புரை :

24.11 நெஞ்சொடு நோதல் நெஞ்சொடு நோதல் என்பது மீள நினைந்த தலைமகன், பின்னும் பொருண்மேற் செல்லாநின்ற வுள்ளத்தனாய் நின்று மீளமாட்டாது, இவ்விரண்டனுள் இப்பொழுது நீ யேதுக்குப்போக முயல்கின்றாயெனத் தன்னெஞ்சொடு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.11. வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.

பண் :

பாடல் எண் : 12

நாய்வயி னுள்ள குணமுமில்
லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம்
பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும்
பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
தக்க துன் சிக்கனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நாய் வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட நாயினிடத்துள்ள நன்மையுமில்லாத வென்னை நல்ல தொண்டாகக்கொண்ட; தீவயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில் மொழியை தீயிடத்து நிறம்போலு நிறத்தை யுடையவனது சிற்றம்பலத்தையொக்குஞ் சிலவாகிய மொழியை யுடையாளிடத்து; பேய் வயினும் அரிதாகும் பிரிவு எளிதாக்குவித்து; பேயினிடத்துஞ் செய்தலரிதாம்பிரிவை எளிதாக்குவித்து சேய் வயின் போந்த நெஞ்சே - சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நெஞ்சமே; உன் சிக்கனவு அஞ்சத்தக்கது உனது திண்ணனவு அஞ்சத்தக்கது எ -று.
நற்றொண்டென்புழி நன்மை: சாதியடை. சின்மொழியை யென்னு மிரண்டாவது ஏழாவதன்பொருட்கண் வந்தது. 343

குறிப்புரை :

24.12 நெஞ்சொடு புலத்தல் நெஞ்சொடு புலத்தல் என்பது நெஞ்சொடு நொந்து கூறாநின்றவன், பேயிடத்துஞ்செய்தலரிதாம்பிரிவை இவளிடத் தே யெளிதாக்குவித்துச் சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நினது சிக்கனவு அஞ்சத்தக்கதெனப் பின்னும் அந்நெஞ்சொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.12. அழற்கடத் தழுக்கமிக்கு
நிழற்கதிர்வேலோன் நீடுவாடியது.

பண் :

பாடல் எண் : 13

தீமே வியநிருத் தன்திருச்
சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம்
யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நெஞ்சம் நெஞ்சமே; தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய தீயைப்பொருந்திய நிருத்தத்தை யுடையவனது திருச் சிற்றம்பலத்தை யொக்கும்; பூ மேவிய பொன்னை விட்டுப் பொன் தேடி பூவின்கண்மேவிய பொன்னை விட்டு வேறு பொன்னைத் தேடாநின்று; இப் பொங்கு வெங்கான் நாமே நடக்க இவ்வழல்பொங்கும் வெங்கானின் நாமே நடப்பீராமின்; யாம் ஒழிந்தனம் யாமொழிந்தேம்; பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பது பொருடேடி யெம்மை வாழச் செய்வது; வஞ்சி அன்ன வாம் மேகலையை விட்டோ வஞ்சியையொக்கு மழகிய மேகலையையுடையாளை விட்டோ? யாமிதற்குடம்படேம் எ -று.
இதுவும் பெருந்திணைப்பாற்படும். மீளநினைந்த துணை யல்லது மீண்டிலனென்பார் மீணெறியை யுள்ளத்தாற் சென்ற தென்றுரைப்ப. இப்பாட்டு நான்கிற்கும் மெய்ப்பாடு: அச்சம். பயன்: செலவழுங்குவித்தல். 344

குறிப்புரை :

24.13 நெஞ்சொடுமறுத்தல் நெஞ்சொடு மறுத்தல் என்பது நெஞ்சொடு புலந்து கூறிப் பின்னும் பொருண்மேற் செல்லாநின்ற வுள்ளத்தோடு தலைமகளை நினைந்து, இத்தன்மைத்தாகிய பொன்னைவிட்டு வேறு பொன்றேடியோ எம்மை வாழச்செய்வது? இதற்கியா முடம்படேம்; நாமே நடக்கவெனச் செலவுடம்படாது பொருள் வலித்த நெஞ்சொடு மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.13. நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.

பண் :

பாடல் எண் : 14

தெண்ணீ ரணிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தி யாதவரிற்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
எய்தப் பனித்தடங்க
ணுண்ணீர் உகவொளி வாடிட
நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி
யும்விர லிட்டறவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின் தெண்ணீரைச் சூடிய சிவனது சிற்றம்பலத்தைச் சிந்தியாதவரைப்போல வருந்த; பண் நீர் மொழி இவளைப் பையுள் எய்த பண்ணீர்மையையுடைய மொழியையுடையவிவளை நோய் பொருந்த; பனித் தடங் கண்ணுள் நீர் உக குளிர்ச்சியையுடைய பெரியகண்ணகத்து நீர்வார; ஒளி வாடிட மேனியொளிவாட; நீடு சென்றார் சென்ற நாள் காலநீடப் பிரிந்தவர் பிரிந்தநாளை; எண் நீர்மையின் இட்டு விரல் அற நிலனும் குழியும் எண்ணுந்தன்மையாற் பலகாலிடுதலின் விரல்தேய நிலனுங்குழியும்! இனியெங்ஙன மாற்றும்! எ - று.
ஒளிவாடினளென்பது பாடமாயின், விரலிட்டென்பதனைத் தோழிமேலேற்றுக. மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளை யாற்றுவித்தல். 345

குறிப்புரை :

24.14 நாளெண்ணிவருந்தல் நாளெண்ணி வருந்தல் என்பது தலைமகனது வரவுநீட்ட நினைந்து வருந்தாநின்ற தலைமகளது வருத்தங்கண்ட தோழி, இவளை நோய்பொருந்தச் சென்றவர் சென்றநாளை எண்ணுந் தன்மையாற் பலகாலிடுதலின் நிலனுங்குழிந்து விரலுந்தேய்ந்த தென, அவன் சென்றநாளெண்ணி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.14. சென்றவர் திறத்து நின்றுநனி வாடுஞ்
சூழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது.

பண் :

பாடல் எண் : 15

சுற்றம் பலமின்மை காட்டித்தன்
தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர
மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் லேறுசெல்
லாநின்ற கூர்ஞ்செக்கரே.

பொழிப்புரை :

இதன் பொருள்
திண் கோட்டின் வண்ணப் புற்று உதர்ந்து திண்ணிய கோட்டான் நிறத்தையுடைய புற்றையிடந்து; பொன் ஆர் மணி புலம்ப இரும்பார்ந்த மணியொலிப்ப; கொற்றம் மருவு கொல் ஏறு வெற்றியைப் பொருந்தின கொலல்வல்ல ஆனேறு; நல் நாகொடும் செல்லாநின்ற நல்ல நாகோடும் ஊர்வயிற் செல்லா நின்ற; கூர்ஞ் செக்கர் சிறக்குஞ் செக்கர்வானையுடைய மாலை; சுற்றம் பலம் இன்மை காட்டி சுற்றத்தாற் பயனின்மையையறிவித்து; தன் தொல் கழல் தந்த தொல்லோன் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று பிறவிமருந்தாதற்குப் பழையவாய் வருகின்ற தன்கழல்களை யெனக்குத் தந்த பழையோனது சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று; இனியென்னாகுவள்! எ -று.
சுற்றம் பயனையுடைத்தன்மையெனினு மமையும். மண்ணப் புற்றென்பதூஉம் பாடம். நேடியபொன்னி னென்பது பாடமாயின், நேடுதல் - தேடுதல். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன் மீள்வதற்கொருப் படுதல். 346

குறிப்புரை :

24.15 ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல் ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல் என்பது பொருண்முற்றி மீளலுறாநின்ற தலைமகன், மாலைக்காலத்து நாகொடுவாரா நின்ற ஏறுவரவுகண்டு, இச்சிறந்த செக்கர்மாலை அவள் பொறுக்குமளவன் றென இரங்கிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் -
24.15. நீடியபொன்னின் நெஞ்சம்நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது.

பண் :

பாடல் எண் : 16

கண்ணுழை யாதுவிண் மேகங்
கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
ளாங்கொல்மன் பாவியற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விண் மேகம் கலந்து கண் நுழையாது விண்ணிடத்து முகில்கள் ஒன்றோடொன்று விரவுதலாற் கண் சென்று நுழையமாட்டாது; இன மலர் வாய் இனமலரையுடைய விட மெங்கும்; கண மயில் தொக்கு எண் நுழையாத்தழை கோலி நின்று ஆலும் மயிலினங்கள் திரண்டு எண் சென்றுபுகாத பீலியை விரித்து நின்றாடாநிற்கும்; மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் மண்ணிடத்தெல்லாவுயிர்களுமறியுந் தில்லையின் மன்னனது இனியவருள் போலும்; பண் நுழையா மொழியாள் பாவி யற்கு என்னள் ஆம் கொல் பண்ணணையாத தேமொழியையுடை யாள் தீவினையேற்கு எத்தன்மையளாமோ! அறிகின்றிலேன்! எ-று.
எண்ணென்பது உணவாகிய வெண்ணென்பாருமுளர். பண்ணுழையாமொழி யென்பதற்குப் பண்ணப்பட்ட வுழையாகிய நரம்புபோலும் மொழியாளெனினுமமையும். மன்: அசைநிலை. மன்னிய பருவ முன்னிய செலவின் இன்னலெய்தி - நிலைபெற்ற பருவத்து முற்பட்ட செலவினான் வருத்தமெய்தி. மெய்ப்பாடும், பயனும் அவை.347

குறிப்புரை :

24.16 பருவங்கண்டிரங்கல் பருவங்கண்டிரங்கல் என்பது ஏறுவரவுகண் டிரக்கமுற்று வாராநின்ற தலைமகன், இம்முகில்கள் ஒன்றோடொன்று தம்மில் விரவுதலாற் பொழில்கடோறும் மயில்கள் திரண்டாடாநின்ற இக் கார்காலத்து, அவளென்னை நினைந்தாற்றாளாங் கொல்லோ வென அப்பருவங்கண் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்
24.16. மன்னிய பருவ முன்னிய செலவின்
இன்ன லெய்தி மன்னனே கியது.

பண் :

பாடல் எண் : 17

அற்படு காட்டில்நின் றாடிசிற்
றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகி லென்னின்முன்
னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல்
தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
ராநிற்கும் நீள்நகர்க்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அல் படு காட்டில் நின்று ஆடி மாலைக் காலத்து இருளுண்டாகா நின்ற புறங்காட்டின்கண் நின்றாடுவான்; சிற்றம் பலத்தான் சிற்றம்பலத்தின்கண்ணான்; மிடற்றின் முற்படு நீள் முகில் அவனது மிடறுபோல விருண்டு முற்படாநின்ற நீண்ட முகிலே; முதுவோர் குழுமி இவ்விடத்தெல்லாம் முற்பட்டாயாயினும், முது பெண்டீர் திரண்டு; வில்படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விற்றாழுமொளிநுதலாளது இன்னாமையை நீக்கவேண்டி; விரை மலர் தூய் நறுநாற்றத்தையுடை மலர்களைத்தூவி; நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கு நெல் விரவிய தூய பலியைக் கொடுத்து இல்லுறைகடவுட்குப் பூசனைசெய்யாநிற்கும் பெரிய வில்லத்திற்கு; என்னின் முன்னேல் என்னின் முற்படாதொழி எ-று.
வான்பலிசெய் தயராநிற்கு மென்பதற்குப் பலிகொடுத்து விரிச்சி யயராநிற்குமெனினுமமையும். ஆடுசிற்றம்பலவனென்ப தூஉம் பாடம். துனைக்கார் விரைவையுடைய கார். துணைக்கா ரென்பது பாடமாயின், இனத்தையுடைய முகிலென்றுரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: பாகன் றேரை விரையக் கடாவுதல். 348

குறிப்புரை :

24.17 முகிலொடு கூறல் முகிலொடு கூறல் என்பது பருவங்கண்டிரங்கி விரைவோடு வாராநின்ற தலைமகன், இவ்விடத்தெல்லாம் முற்பட்டா யாயினும் முதுபெண்டீர் திரண்டு அவளின்னாமையை நீக்கற்கு இல்லுறை கடவுட்குப் பூசனைசெய்யாநிற்கும் நீணகரத்திற்கு என்னின் முற்படாதொழிவாயாகவென, முந்துற்றுச் செல்லாநின்ற முகிலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.17. எனைப்பல துயரமோ டேகா நின்றவன்
துனைக்கா ரதற்குத் துணிந்துசொல் லியது.

பண் :

பாடல் எண் : 18

பாவியை வெல்லும் பரிசில்லை
யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோ
னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர்
தேர்வந்து மேவினதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முகில் பாவை அம் சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின் முகில் பாவையதழகிய சீர்மையையுடைய வுயிரைச் செகுப்பான் கறாநின்ற பொழுதின்கண்; அம்பலத்துக் காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் அம்பலத்தின்கணுள னாகிய நீலப்பூவைவெல்லு மிடற்றையுடையவனதருள் போல; போய் மேவிய மாநிதி யோடு போய்த்தேடிய பெரு நிதியோடு; அன்பர் தேர் கதுமென வந்து மேவினது அன்பர் தேர் கதுமென வந்து பொருந்திற்று, அதனால்,பாவியை வெல்லும் பரிசு இல்லையே வரக்கடவதனை வெல்லுமாறில்லையே போலும் எ - று.
இனி ஒருவாற்றானும் இவளுயிர்வாழ்த லரிதென்றிருந்தனம் இதுபாவியாதலின் இற்றைப்பொழுதிகவாது தேர்வந்ததென்னுங் கருத்தாற் பாவியைவெல்லும் பரிசில்லையே யென்றாள். தமியரை அற்றம் பார்த்து வெல்லக்கருதிச் சிலர் வெகுள்கின்ற காலத்து அத்தமியார்க்குத் துணையாயதொருதேர்வந்து காத்ததென வேறுமொரு பொருள் விளங்கினவாறறிக. அருளின் மேவினதென வியையும். அருளான்வந்து மேவிற்றெனினுமமையும். மெய்ப் பாடு: பெருமிதம். பயன்: ஆற்றுவித்தல். 349

குறிப்புரை :

24.18 தேர்வரவு கூறல் தேர்வரவு கூறல் என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகன் முகிலொடுவந்து புகாநிற்ப, இம்முகில் இவளதாவியை வெகுளா நின்ற காலத்து ஒரு தேர்வந்து காத்தமையான் இனிவரக் கடவதனை வெல்லுமாறில்லையெனத் தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் 24.18. வேந்தன் பொருளொடு விரும்பி வருமென
ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.

பண் :

பாடல் எண் : 19

யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை
ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர்
தேர்வந்து தோன்றியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஒளி மேகலை உகளும் ஒளியையுடைய மேகலை தன்னிலையினின்றும் போகாநின்றது; வரி வளை வீழும் வரியை யுடைய வளைகள் கழன்று வீழாநின்றன; மெல்லியல் ஆவி செல்லாத முன்னே இந்நிலைமைக்கண் மெல்லிய லுயிர் செல்வதற்கு முன்னே; சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியது சூழ்ந்துவருந் திரண்டநிதியோடு அன்பரது தேர் வந்து தோன்றிற்று, அதனான், யாழின் மொழி மங்கை பங்கன் யாழோசைபோலு மினிய மொழியையுடய மங்கையது கூற்றை யுடையான்; சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின்கண்ணான்; அமைத்த ஊழின் வலியது ஒன்று என்னை அவனாலமைக்கப்பட்ட ஊழின் வலியதொன்றியாது! எ-று.
மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல். 350

குறிப்புரை :

24.19 இளையரெதிர் கோடல் இளையரெதிர்கோடல் என்பது தோழி தலைமகட்குத் தேர் வரவு கூறாநிற்ப, இந்நிலைமைக்கண், இவளாவிசெல்வதற்கு முன்னே, சூழுந்தொகுநிதியோடு அன்பர் தேர்வந்து தோன்றிற்று; இனி யூழின்வலியது வேறொன்றுமில்லையெனப் பொருண் முடித்து வாராநின்ற தலைமகனைச் சென்று இளையர் எதிர் கொள்ளாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.19. செறிக ழலவன் திருநகர் புகுதர
எறிவேல் இளைஞர் எதிர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 20

மயின்மன்னு சாயலிம் மானைப்
பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
லாம்விடை யோன்புலியூர்க்
குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
அங்கத் திடைக்குளிப்பத்
துயின்மன்னு பூவணை மேலணை
யாமுன் துவளுற்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மயில் மன்னு சாயல் இம்மானைப் பிரிந்து மயில்போலு மென்மையையுடைய இம்மானைப் பிரிந்து; பொருள் வளர்ப்பான் வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றது எல்லாம் பொருளை யீட்டுவான் வெயினிலைபெற்ற வெய்யசுரத்தைச் சென்ற துன்ப மெல்லாம்; விடையோன் புலியூர் குயில் மன்னு சொல்லி மென் கொங்கை விடையையுடையவனது புலியூரிடத்துளவாகிய குயிலோசைபோலுஞ் சொல்லையுடையாளுடைய மெல்லிய கொங்கைகள்; என் அங்கத் திடைக் குளிப்ப என்னுறுப்புக்களிடை மூழ்கும் வகை; துயில் மன்னு பூ அணைமேல் அணையாமுன் துவளுற்றது துயினிலைபெறும் பூவணையிடத் தணைவதன்முன்னம் மாய்ந்தது எ-று.
இம்மானென்றது, பிரிதற்கரிய வித்தன்மைய ளென்றவாறு. எல்லாமென்பது முழுதுமென்னும் பொருள்பட நிற்பதோருரிச் சொல். பன்மையொருமை மயக்கமென்பாருமுளர். மெய்ப்பாடும், பயனும் அவை. பயன்: மகிழ்வித்தலுமாம்.

குறிப்புரை :

24.20 உண்மகிழ்ந்துரைத்தல் உண்மகிழ்ந்துரைத்தல் என்பது பொருண்முடித்து இளைஞ ரெதிர்கொள்ளவந்து புகுந்து தலைமகன், தலைலமகளுடன் பள்ளி யிடத்தனாயிருந்து, இம்மானைப்பிரிந்து பொருள்தேட யான் வெய்ய சுரஞ்சென்ற துன்பமெல்லாம் இவள் கொங்கைகள் என்னுறுப்புக் களிடை மூழ்க இப்பூவணைமே லணையாமுன்னம் துவள்வுற்றதெனத்தன்னுள்ளே மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
24.20. பெருநிதி யோடு திருமனை புகுந்தவன்
வளமனைக் கிழத்தியோ டுளமகிழ்ந் துரைத்தது.
சிற்பி