திருமாளிகைத் தேவர் - கோயில் - `உயர்கொடி யாடை`


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூ மப்பட லத்தின்
பியர்நெடு மாடத் தகிற்புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்தசிற் றம்பலக் கூத்தா
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள் என் மனத்துவைத் தருளே.
 

பொழிப்புரை :

உயர்ந்த துணிகளாலாகிய கொடிகளின் தொகுதி களின்மேல், வேள்வியில் எழுந்த புகைப் படலமும், அதன் மீது பெரிய மாடவீடுகளிலிருந்து வெளிவரும் அகிற்புகைப்படலமும் மிகுதியாகக் காணப்படும் பெரும்பற்றப் புலியூரில், மேம்பட்ட ஒளியை உடைய மணிகள் வரிசையாகப் பதிக்கப்பெற்ற தங்கம் நிறைந்திருக்கும் சிற்றம் பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமானே! அஞ்ஞானமாகிய மயக்கம் நீங்கிய தேவர்களின் முடிகள் தங்கப் பெறும் தாமரைப் பூப்போன்ற உன் சிவந்த திருவடிகளை அடியேனுடைய உள்ளத்தில் நீ வைத்தருளு வாயாக.

குறிப்புரை :

`நெடுமாடத்து` என்பதனை முதலிற் கூட்டுக, மிடை - நெருங்கிய. படலம் - கூட்டம். தூமம் - புகை. பியர், `பியல்` என்பதன் போலி, `பிடர்` என்பது பொருள், இதனைக் கொடிப்படலத்திற்கும் கூட்டுக, ``பியர்`` என்பதை, `பெயர்` எனவும் பாடம் ஓதுவர், ஓங்கி யுள்ள மேல்மாடங்களில் உயர்த்தப்பட்டுள்ள கொடிச் சீலைகளின் கூட்டத்தின்மேல் ஓமத்தின் புகையும், அவ்வோமப் புகைப்படலத்தின் மேல் அகிற்புகைப் படலமும் நிறைந்திருக்கின்ற பெரும்பற்றப் புலியூர்` என்றவாறு. சியர் ஒளி - விளக்கத்தை யுடைய ஒளி, மயர் - மயக்கம், `மயர்வு` என்பதும் பாடம். சேவடிகளையே கூறினாராயினும், திரு வுருவம் முழுவதையும் கூறுதல் கருத்தென்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந்
திரண்டசிற் றம்பலக் கூத்தா
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
உன்அடிக் கீழதென் உயிரே.

பொழிப்புரை :

நீரை மிகுதியாக முகந்த மேகத்தின் வயிற் றிடத்தைத் தொடும் சிகரத்தை உடைய பொன் மயமான பேரில்லங் களில் எங்கும் பரவி மிக்கவளத்தை நல்கும் நான்மறை விதிப்படி நிகழ்த்தப் பெறும் முத்தீக்களை ஓம்பும் தொழிலால் பொலிவு மிகுந் துள்ள பெரும்பற்றப் புலியூர் ஆகிய செல்வம் மிகுந்த தெய்வம் உகந் தருளியிருக்கும் திருத்தலத்தில் முறைப்படி செய்யும் தெய்வ வழி பாடாகிய செல்வம் நிறைந்து காணப்படும் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! அழகு மிகுந்த சிலம்பின் இனிய ஒலியை வெளிப் படுத்தும் உன் திருவடிகளின் கீழ் அடியேனுடைய ஆன்மா உள்ளது.

குறிப்புரை :

கருவளர் - சூல் மிகுந்த. அகடு - வயிற்றின்கண், `மகுடம்` என்றது, சிகரத்தை, கலந்து - கலக்கப்பட்டு. பெரும் பற்றப் புலியூராகிய `தெய்வப்பதி` எனவும், `தெய்வப் பதிச் சிற்றம்பலம்` எனவும் இயையும். திரு - அழகு, விதி நிதியம் - முறைப்படி செய்யும் வழி பாடாகிய செல்வம்.
உரு - அழகு, `உருவளர் சிலம்பு` என்க. அன்றி, `உருவளர் அடி` எனலுமாம், நான்மறைத் தொழில்சால்` எனவும், தெய்வப்பதி வதி` எனவும் பாடம் ஓதுப.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப்
பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே.
 

பொழிப்புரை :

கரைக்குமேலே அஞ்சிப்பாய்கின்ற வாளைகள் கீழ் மேலாகப் பிறழ்கின்ற மடுக்களில் வளர்ந்த தாமரைகளை வயல்களில் விளையும் கரும்போடு வயிறார உண்ட எருமைகளை உடைய, பிரம்பிரி என்ற செந்நெற் பயிர்கள் வளரும் வயல்களில் செங்கழுநீர் களையாகக் காணப்படும் மருத நிலத்தால் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரிலே தலையின் கண் உயர்ந்த முடியினை அணிந்த தேவர்கள் தங்களுக்கு உரிய முறைப்படி வந்து திருவடிகளை வணங்குகின்ற, சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! எப்பொழுதும் முனிவர்கள் விருப்புற்றுத் தியானம் செய்யும் உன் அழகிய கணைக்கால்களை விருப்புற்று நினைத்து என் உள்ளம் அவற்றிலேயே தங்கிவிட்டது.

குறிப்புரை :

வரம்பு இரி - கரைக்குமேல் பாய்கின்ற, மிளிர் - பிறழ் கின்ற. கரும்பு, பின்னர்க் கூறப்படுகின்ற செந்நெல் வயலில் உள்ளது. மாந்திடும் - உண்கின்ற. மேதி - எருமை, பிரம்பு இரி - பிரப்பம்புதரில் செல்கின்ற. `செந்நெற் கழனியையுடைய பழனம்` என்க. பழனம் - மருத நிலம். `சிரம் புரைமுடி - தலையின்கண் உயர்ந்த முடியை அணிந்த, முறையால் - தமக்கேற்ற வரிசையில். `மாந்து மேதிகள் சேர்` `பரம்பிரி` `கழனிசெங்கழுநீர்`, `சிரம்புணர்முடி` என்பனவும் பாடங்கள். பிரம்பிரி-செந்நெல் விசேடம் என்பதும் ஆம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங் கடைந்ததென் மதியே.

பொழிப்புரை :

தேர்கள் மிகுதியாக உலவும் விழாக்காலங்களில் வேய்ங்குழல் ஒலியும், தெருவில் கூத்துக்கள் நிகழ்த்துதலால் ஏற்பட்ட ஒலியும், அடியார்கள் இறைவனைப் புகழ்கின்ற ஒலியும், வேதங்களை ஓதுதலால் வெளிப்படும் பெரிய ஒலியும் பரவிக்கடல் ஒலியைப் போலப் பொலிவு பெறுகின்ற பெரும்பற்றப் புலியூரில், சிறப்புடைய தாளத்திற்கு ஏற்ப மேம்பட்ட கூத்தின் இயற்கையிலே சிறந்து விளங்கிய, சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! கச்சணிந்த முலை யினை உடைய உமாதேவி மெதுவாக அழுத்திப் பிடிக்கும் திரட்சியை உடைய மேம்பட்ட அழகினை உடைய துடைகளில் அடியேனுடைய உள்ளம் பொருந்தியுள்ளது.

குறிப்புரை :

`தெருவில்` என்பதனை முதலிற் கொள்க. ஓத்து - வேதம். `கடல் ஒலி போல` என உவம உருபு விரிக்க, `பெரும்பற்றப் புலியூரின்கண் திகழும்` என்க. `சீர்` என்பது தாள அறுதி. இலயம் - தாளம். `இயல்பின்`` என்றதில் இன், சாரியை. `இயல்பினோடு` என மூன்றாவது விரிக்க. மா - சிறந்த. மணிக் குறங்கு - அழகிய துடை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்
கிளங்கமு குளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதண
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
செம்பொற்சிற் றம்பலக் கூத்தா
பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே.
 

பொழிப்புரை :

தழைத்து நிறைந்த வாழைகள், நிழல் ஒழுங்கினை வழங்குகின்ற உயரிய தென்னைகள், இளைய பாக்கு மரங்கள், மனத்தைக் கவரவல்ல இனிய, பழங்களை உடைய நீண்ட பலா மரங்கள், மாமரங்கள் ஆகியவற்றை உடைய வானளாவிய சோலை களால் சூழப்பட்ட கிடங்கினைத் தன்னைச் சூழுப்பெற்ற கொண்டுள்ள மேடைகளை உடைய பழைய மதில்களால் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரிலே அணையால் தடுக்கப்பட்ட நீர்த்தொகுதியிலே, தரளம், நித்திலம் என்ற முத்துவகைகள் தோன்ற, செம்பொன் மயமான சிற்றம் பலத்திலே கூத்து நிகழ்த்துபவனே! இருப்பு உறுப்பிலே புலித்தோல் ஆடை நெகிழாதபடி அதற்குக் காப்பாக அணிந்துள்ள கச்சு நூலிலே அடியேனுடைய விருப்பம் பொருந்திவிட்டது.

குறிப்புரை :

`நிறைந்த, தழைத்த வாழை` என்க. `வாழை தெங்கு, கமுகு, பலா, மா என்பவற்றின் மேல் பிறை தவழ் பொழில்` என்றவாறு, இவற்றோடு இயைபில்லாத துகிற்கொடியை இடை வைத்தார்; பிறை தவழப் பெறுதலாகிய ஒப்புமை பற்றி. எனவே, அதனை முதலிற் கூட்டி, `நிழற்கொடியோடு` என வேறுவைத்துரைக்க, `பலா என்பது ஈறு குறுகி நின்றது; செய்யுளாதலின் உகரம் பெறாது வந்தது. கிடங் கினை (ச்சூழ) உடைய இடை மதில்` என்க. பதணம்- மதில் உறுப்பு, `தரளம், நித்திலம்` என்பன முத்தின் வகைகள். `அவற்றை உடைய செம்பொன்னால் இயன்ற சிற்றம்பலம்` என்றவாறு, இத்திருப் பாட்டினின்றும் சிலர், `கூத்த` என்றே பாடம் ஓதுவர். நிதம்பம் - அரை. பொறை அணி - உடைக்குக் காப்பாக அணியப்பட்ட கச்சு நூல்` என்க. `பொறையாக` என ஆக்கம் வருவிக்க. புகல் - விருப்பம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அதுமதி இதுஎன் றலந்தலை நூல்கற்
றழைப்பொழிந் தருமறை யறிந்து
பிதுமதி வழிநின் றொழிவிலா வேள்விப்
பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
செல்வச்சிற் றம்பலக் கூத்தா
மதுமதி வெள்ளத் திருவயிற் றுந்தி
வளைப்புண்டென் உளம்மகிழ்ந் ததுவே.

பொழிப்புரை :

`அதுதான் ஞானம், இதுதான் ஞானம்` என ஒரு வழிப்படாது வருந்தி மனத்தை அலையச்செய்கின்ற பலநூல்களையும் கற்றுப் பலவாறு பிறரைக் கூப்பிட்டுத் தம் கொள்கைகளைப் பேசும் செயலை விடுத்து, அரிய வேதங்களைப் பொருள் தெரிந்து ஓதி எல்லா உயிர்களுக்கும் தந்தையாகிய நீ வகுத்த சிவஞானத்தின் வழியே ஒழுகி வேள்வி செய்தலை நீக்காத சான்றோர் வாழும் பெரும் பற்றப் புலியூரிலே, தீயபுத்தியை உடைய சமணரும் பௌத்தரும் வந்து சேராத செல்வத்தை உடைய சிற்றம்பலக் கூத்தனே! எல்லோரும் மதிக்கும் தேன்வெள்ளத்தைப் போன்று இனிய உன் அழகிய வயிற் றின் கொப்பூழின் அழகினால் வளைக்கப்பட்டு என் மனம் மகிழ்ச்சி யுறுகின்றது.

குறிப்புரை :

மதி - ஞானம். இது, தாப்பிசையாய் நின்றது. `அது ஞானம்; இது ஞானம் என்று பரந்து திரிதற்கு ஏதுவாகிய சமய நூல்கள்` என்க. ``கற்று`` என்றது, `அழைப்பு` என்பதனோடே முடியும். அழைப்பு - கூப்பீடு; பிதற்றொலி. பிது - `பித்ரு` என்பதன் சிதைவு, `எவ்வுயிர்க்கும் அப்பனாகிய உனது ஞானத்தின் (சிவஞானத்தின்) வழி நின்று என்றபடி` செது - தீமை. ``செதுமொழி சீத்த செவி`` (கலி-68) என வந்தமை காண்க. `சேராச் சிற்றம்பலம்` என இயையும், `மது வெள்ளம் போலும் திருவயிறு` என்க. வயிற்றை இவ்வாறு உவமித்தார், கொப்பூழ், `அவ்வெள்ளத்தில் தோன்றும் சுழிபோல்வது` என்பது விளங்குதற்கு. `நீர் வெள்ளம்` என்னாது, `தேன் வெள்ளம்` என்றது, இனிமை புலப்படுத்தற்கு. `மதி வெள்ளம்`. வினைத் தொகை. வளைப்புண்டு - கவரப்பட்டு. உள் - உள்ளம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு வுதரத் தார்திசை யடைப்ப
நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா!
உருமரு வுதரத் தனிவடந் தொடர்ந்து
கிடந்ததென் உணர்வுணர்ந் துணர்ந்தே.
 

பொழிப்புரை :

மலையைப் போன்ற புயங்களின் மீது புலித் தோலினையும், திருநீற்றை அணிந்த பூணூல் தவழும் மார்பினையும், பெரிய மலைகள் போன்ற உறுதியான தோள்களுடன் காணும் பேறு பெற்றவராகிய பெரும்பற்றப் புலியூரில் வாழும் செல்வம் பொருந்திய தகுதியை உடைய தில்லை மூவாயிரவர் நாற்றிசையும் சுற்றிலும் நெருங்கிநின்று காணக் கூத்து நிகழ்த்துகின்ற சிற்றம்பலக் கூத்தனே! அழகு பொருந்திய உன் வயிறுவரை தொங்கும் உருத்திராக்க மாலையில் என் அறிவு அதன் அழகை உணர்ந்து தொடர்ந்து தங்கிவிட்டது.

குறிப்புரை :

`பொரு புயம், வரைப் புயம்` எனத் தனித்தனி இயைக்க. புயமாவது வீரவளை யணியும் இடமாகலின், புயத்தின் மீமிசையாவது சுவல் அல்லது பிடர். புலித்தோல், உடையாதலேயன்றி உத்தரியமும் ஆம் என்க. அகலம் - மார்பு. ``உடன்`` என்றது, எண்ணொடுவின் பொருட்டு. `புலித்தோலும், அகலமும், தோளும் காணப்பெற்றவர் வாழும் பெரும்பற்றப் புலியூர்` என்க. இவற்றைக் காணும் தமது அவாவை, ``காணப்பெற்றார்`` எனப் பிறர்மேல் வைத்து விளக்கினார்.
எனவே, இதனுள் இறுதிக்கண் தாழ்வடத்தையே கூறினா ரெனினும், இவை, அனைத்தையும் தொகுத்துக் கூறுதல் கருத்தாகக் கொள்க. இவை, வருகின்ற திருப்பாட்டிற்கும் ஒக்கும். பிறர் என்றது, சிறப்பாகத் தில்லைவாழ் அந்தணர்களை, `திருமருவு தரத்தார்` என்பது, திருமருவுதரத்தார்` என வகையுளியாயிற்று. திரு - அருள். தரத்தார் - மேன்மையுடையவர். ``திசை அடைப்ப`` என்றது, `சுற்றிலும் நெருங்கி நின்று காண` என்றவாறு, ``திசைமிடைப்ப`` என்றதும் பாடம், உரு - அழகு. உதரம் - வயிறு. தனிவடம் - ஒப்பற்ற தாழ்வடம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

கணிஎரி விசிறுகரம் துடி விடவாய்க்
கங்கணம் செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண் டுன்பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்தென் னமுதே
சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா
அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்றென் அறிவே.

பொழிப்புரை :

சிறப்பாக எண்ணத்தக்க நெருப்பு, சுழலுகின்ற கை, உடுக்கை, விடத்தை வாயிலே உடைய பாம்பாகிய கங்கணம், அபயம் அளிக்கின்ற சிவந்த கை என்ற இவற்றைப் பிறவிப்பிணி கெடத் தரிசித்து, உன்னுடைய பெரிய கூத்தினைக் காண்டலை நீக்காதவர் வாழும் பெரும்பற்றப் புலியூரில் நீலமணியின் செறிந்த நிறம் பொருந்திய கழுத்தினை உடைய, என் தெளிந்த அமுதம் போல் பவனே! சிறப்புப் பொருந்திய சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! அழகிய முத்துப் போன்ற பற்களை உடைய, உன் பவளம் போன்ற சிவந்த வாயின் ஒளியினுள் அடியேனுடைய அறிவு அடங்கி விட்டது.

குறிப்புரை :

`பிணிகெட`` என்பதை முதலிற் கொள்க. அன்றி, இதனை நின்றாங்கு நிறுத்தி, ``இவை`` என்பதனை, ``அபயம் என்பதன்பின் கூட்டினும் ஆம். கணி - எண்ணத்தக்க. விசிறு கரம் - வீசிய கை. துடி - உடுக்கை. விடவாய், `விடத்தை யுடைய வாயை உடையது` எனப் பாம்பிற்குக் காரணப்பெயர். திணி - செறிந்த. ``மணி`` என்றது, இங்கு அதன் நிறத்தை; எனவே, இங்கு, `மணி நீலம்` என்றே இயைக்க, `திணி நீலம், மணி நீலம்` எனத் தனித்தனி சென்று இயையும். `தெள்ளமுதே` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றிற்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்தா
கருவடி குழைக்கா தமலச்செங் கமல
மலர்முகம் கலந்ததென் கருத்தே.
 

பொழிப்புரை :

திருமகளோடுகூடிய நீண்டவனாகிய திருமால், இந்திரன்,பிரமன் ஏனைய தேவர்கள் யாவரும் உன்னைத் தரிசிக்க வரும் போது உள் வாயில் காவலில் உள்ள தடையால் நெருக்கப் படவே, அவர்களுடைய பெரிய கிரீடங்கள் ஒன்றோடொன்று மோது வதால் பெயர்ந்து கீழே விழும் இரத்தினங்கள் வாயிலின் முன்னிடத் தில் ஒளிவீசும் பெரும்பற்றப் புலியூரின் சிற்றம்பலத்தில், போரிலே பெரிய மேருமலையாகிய வில்லாலே திரிபுரத்தையும் தீக்கு இரை யாக்கிய கூத்தனே! பெரிய நீண்ட குழைகளை அணிந்த காதுகளை உடைய களங்க மற்ற செந்தாமரை மலர் போன்ற உன் திருமுகம் அடி யேனுடைய எண்ணத்தில் கலந்துவிட்டது.

குறிப்புரை :

கடை - வாயில். காவல் - தடை; தடுக்கப்படும் இடம். மோதி - மோதுதலால். `முன்றிலின்கண் பிறங்கிய` என்க, பெரும் பற்றப் புலியூர்க் கூத்தா` என இயைக்க.
இது, வருகின்ற திருப்பாட்டிற்கும் ஒக்கும், `செருவில், மேரு வில்` எனத் தனித்தனி இயையும். `மேருவாகிய வில்லினால் முப்புரத் தின்கண் தீயை விரித்த` என்க.
விரித்த - பரவச்செய்த. கருவடி குழை - பெரிய நீண்ட குழை. `குழைக் காதினையுடைய, அமலமாகிய முகம்` என்க. அமலம் - தூய்மை; ஒளி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

ஏர்கொள்கற் பகமொத் திருசிலைப் புருவம்,
பெருந்தடங் கண்கள் மூன் றுடையுன்
பேர்கள்ஆ யிரம்நூ றாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள்கொக் கிறகும் கொன்றையும் துன்று
சென்னிச்சிற் றம்பலக் கூத்தா
நீர்கொள் செஞ் சடைவாழ் புதுமதி மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.
 

பொழிப்புரை :

அழகு பொருந்திய கற்பகத்தை ஒத்தவனாய் அழகிய, வில் போன்ற புருவங்களும் பெரிய நீண்ட கண்கள் மூன்றும் உடைய உன்னுடைய ஆயிரம் நூறாயிரமாகிய பெயர்களை அடைவு கேடாகச் சொல்லும் இயல்பினை உடைய சான்றோர்கள் வாழும் பெரும்பற்றப் புலியூரில் சிறப்புப் பொருந்திய கொக்கிறகம் பூவும் கொன்றை மலரும் பொருந்திய தலையினை உடையையாய்ச் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! கங்கை பொருந்திய உன் சிவந்த சடையில் தங்கி யிருக்கும் பிறைச் சந்திரனும் ஊமத்தம் பூவும் என் உள்ளத்தில் நிறைந்து உலவுகின்றன.

குறிப்புரை :

ஏர் - அழகு, ``கற்பகம் ஒத்து`` என்றது எண்ணின் கண் வந்த எச்சமாகலின், `கற்பகம் ஒத்தவனும், இருபுருவமும், மூன்று கண்களும் உடையவனும் ஆகிய உனது` என உரைக்க.
சிலைப் புருவம் - வில்போலும் புருவம், `ஆயிரம்` நூறாயிரம் என்றது, அளவின்மை குறித்தவாறு. ``பிதற்றும்`` என்றது, `அன்பு மீதூர்ந்து சொல்லும்` என்றபடி, ``பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி`` (தி. 6. ப.6. பா. 4) ``பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப் பாய் எம் பெருமானே`` (தி.8 திருவாசகம் - எண்ணப்பதிகம்-4) என்றாற் போல வருவன பலவுங் காண்க.
``நீர்கொள் சடை`` என்றது, உடம் பொடு புணர்த்தலாகலின், நீரும் தனித்தெண்ணப்படும். ``சடை`` என்ற தனையும் செவ்வெண்ணாக்கி, `அதன்கண்வாழ் புதுமதி` என உரைக்க. மத்தம் - ஊமத்த மலர். நிகழ்ந்த - உலவலாயின.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

காமனக் காலன் தக்கன்மிக் கெச்சன்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண் டாண்ட
செல்வச்சிற் றம்பலக் கூத்தா
பூமல ரடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.
 

பொழிப்புரை :

மன்மதன், இயமன், தக்கன், வேள்வித்தலைவன் இவர்கள் அழியுமாறு கடைக்கண் பார்வையாலே செயற் படுத்திய நின்னை அல்லாத பிற தெய்வங்களைத் தொழும் பேய் போன்ற மனம் பெற்றிலாத மேம்பட்ட தொண்டர்களின் தொண்டன் அடியேன். பெரும்பற்றப் புலியூராகிய பாதுகாவலைச் செய்யும் மேம்பட்ட தில்லைப் பகுதியை உனக்கு உகந்தருளியிருக்கும் எல்லையாகக் கொண்டு ஆளுகின்ற செல்வம் மிக்க சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்து பவனே! உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியின் கீழ் உள்ள பழைய சிவகணத்தார்கள் அடியேனுடைய அற்பமான சொற்களின் பொருளைப் பொறுமையோடு ஏற்பார்கள்.

குறிப்புரை :

`மிகை செய்த` என்னும் பொருட்டாகிய `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. ``கடைக்கணித்தவன்`` என்றது, இடவழுவமைதி, `கடைக்கணித்தவன் தொண்டர்`` என இயையும். அல்லா - நன்றல்லாத, பிறிந்த - நீங்கிய; என்றது, `நன்மனம் பெற்ற` என்றவாறு. இதற்குப் பிறவாறும் உரைப்ப. `சிவப்பெருந் தொண்டர்` எனவும் பாடம் ஓதுப, ``தொண்டனேன்`` என்பதன்பின், ``ஆகலின்`` என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை` `பொறுப்பர்` என்பதனோடு முடிக்க. புலியூராகிய தில்லை` என்க. சேமம் - காவல். வட்டம் - எல்லை, கொண்டு - நினதாகக் கொண்டு. ஆண்ட - அதனை ஆளுதல் செய்த, `பூவடி, மலரடி` எனத் தனித்தனி இயைக்க. பூ - பொலிவு. புராணம் - பழமை. பூதங்கள் என்பது சிவகணங்கள் என்னும் பொருட்டாய் உயர்திணையாய் நின்றது.
சிற்பி