திருமாளிகைத் தேவர் - கோயில் - ``உறவாகிய யோகம்``


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

உறவா கியயோ கமும்போ கமுமாய்
உயிராளீ என்னும்என் பொன்ஒருநாள்
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என் னும் மணி நீரருவி
மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

திருமகள் போன்ற பேரழகுடைய என்மகள், விளங்கும் தில்லையிலே சிற்றம்பலத்தில் அற்புதக் கூத்தாடும் எம்பெருமானைக் குறித்து, ``உயிர்கள் சென்று சேரத்தக்க வீடுபேறாகவும் அவ்வீடுபேற்று இன்பமாகவும் இருந்து உயிர்களை ஆட்கொள்பவனே! பண்டொரு காலத்து உயிர்ப்பண்பினால் சிறப்புப் பெறாதவராகிய அசுரர்களின் மதில்களை அழித்த வெற்றி பொருந்திய வில்லைக் கையில் ஏந்தி, பன்றி ஒன்றன் பின்னே அதனைத் துரத்திச் சென்று நின்ற வீரனே! பளிங்குமணி போன்ற தெளிந்த நீரை உடைய அருவிகள் வீழும் பெரிய மகேந்திர மலைமீது விரும்பித் தங்கியிருக்கும் குறிஞ்சி நிலத் தலைவனே! குணமாகிய பொருள்கள் செறிந்து காணப்படும் மலை போல்பவனே!`` என்று பலவாறு அவனுடைய பண்புச் செயல்களைக் குறிப்பிட்டு அவனை அழைத்து வாய்விட்டுப் புலம்புகிறாள்.

குறிப்புரை :

உறவு - அடையப்படும் பொருள், ``யோகம்`` என்றது, முத்தியைக் குறித்தது. உயிர் ஆளீ - உயிர்களை ஆள்பவனே. என்னும் - என்று பிதற்றுவாள், ``பொன்`` என்றது, காதற்சொல். `ஒருநாள் சென்று` என இயையும். சிறவாதவர் - இழிந்தோர்; சிவநெறியைக் கடைப்பிடியாது கைவிட்டவர். `தேவராலும் அழிக்க இயலாத வலிய திரிபுரத்தை அழிக்க வில்லேந்திய பெருமான், சிறிய பன்றிப்பின் வில் லேந்திச் சென்றான்` என, அவனது எளிவந்த தன்மையை வியந்து உருகியவாறு. சிவபிரான் அருச்சுனன் பொருட்டு வேடனாய்ப் பன்றிப் பின் சென்ற வரலாறு வெளிப்படை. மகேந்திர மாமலை, திரு வாசகத்துட் கூறப்பட்டது. `பேரரசாகிய மலை` எனக் காரணப் பெய ராக்கி, `கயிலாய மலை` என இங்கு உரைத்தலும் ஆம். ``மகேந்திரம்`` என்றதை, `மயேந்திரம்` என்றே ஓதுவாரும் உளர். குறவன் - மலை வாணன். குலாத்தில்லை - விளக்கத்தையுடைய தில்லை. தி.8 திருவாசகத்துட் குலாப்பத்தைக் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா மகேந்திர வெற்பா என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என் னும் செல்வர்மூவாயிரர்
செழுஞ்சோதிஅந்தணர் செங்கைதொழும்
கோடா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

தீவினையேன் பெற்றமகள் அழுகையை அடக்கிக் கொண்டு தேம்பி அஞ்சுதலோடு, ``சுடுகாட்டிலே கூத்தாடும் பல் பூதங் களும் உருமாறிச் சூழ்ந்து வர விரைந்து ஓடும் பன்றியின் பின் நீண்ட பகற் பொழுதில் காட்டில் பின் தொடர்ந்த வேடனே! மகேந்திர மலைத் தலைவனே! எல்லா உலகங்களும் அழிந்த பின்னும் தான் ஒருவனே எஞ்சிநிற்கும் பெருமையனே! உன் திருவடிகளை ஏத்தும் செல்வத்தால் சிறந்த ஞானப்பிரகாசம் உடைய மூவாயிர அந்தணர்கள் சிவந்த கைகளால் தொழும் கூத்தனே! குணக்குன்றே!`` என்று விளங்குகின்ற தில்லை அம்பலக் கூத்தனைப் பலவாறாக விளிக்கின்றாள்.

குறிப்புரை :

காடுஆடு பல்கணம் - காட்டில் உடன் ஆடுகின்ற பல பூதக் கூட்டங்கள். கேழற் கடும் பின் - பன்றியினது கடிதாகிய பின்னிடத்தில். கேழல் கடிதாக ஓடுதலின், அதன் பின்னிடமும் கடிதாயிற்று. `கடுவிருள் நெடும்பகல்` என்பதும் பாடம். கான் - காடு. விம்முதலும், வெருவுதலும் பித்தினால் வருவன. சேடன் - பெருமை யுடையவன். `செல்வராகிய செழுஞ்சோதி அந்தணர்கள்` என்க. சோதி, இங்கு, வேள்வித் தீ. அதனை நன்கு ஓம்புதலின், ``செழுஞ் சோதி`` என்றார் அந்தணர்களை, ``செல்வர்`` என்றவர், `அவர்க்குச் செல்வமாயது இது` என்றற்கு. `செழுஞ்சோதி` என்றார். `செங்கையால்` என உருபு விரிக்க. கோடு. `கோடுதல்` என, முதனிலைத் தொழிற் பெயர்; `குனிப்பு; நடனம்` என்பது பொருள்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கானே வருமுரண் ஏனம் எய்த
களி ஆர் புளினநற் காளாய் என்னும்
வானே தடவு நெடுங் குடுமி
மகேந்திர மாமலைமேல் இருந்த
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார்
திருவாளர் மூவா யிரவர் தெய்வக்
கோனே என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

என்மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு அவனை நோக்கி `காட்டில் உலவிய வலிய பன்றி மீது அம்பைச் செலுத்திய செருக்குமிகுந்த வேடர் குலத்துச் சிறந்த காளைப்பருவத்தனே! வானத்தை அளவிய நீண்ட சிகரத்தை உடைய பெரிய மகேந்திரமலைமீது இருந்த தேன் போன்ற இனியனே! தெய்வத்தன்மை பொருந்திய வேதத்தை ஓதும் செல்வத்தை உடைய தில்லை மூவாயிரவரின் தெய்வத்தலைவனே! குணக்குன்றே!` என்று பலவாறு அழைக்கிறாள்.

குறிப்புரை :

``கானே, வானே`` என்ற பிரிநிலை ஏகாரங்கள் சிறப் புணர்த்திநின்றன. முரண் ஏனம் - வலிய பன்றி. களி ஆர் - களிப்புப் பொருந்திய. அருச்சுனனோடு ஆடல் தொடங்க நின்றமை குறித்துக் காளாய் என்று கூறினார். புளினக்காளை - வேடர்குல இளைஞன். ``வாய்மொழி`` என்றது, வேதத்தை. திரு - திருவருள்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள்
விசயற் கருள்செய்த வேந்தே என்னும்
மறியேறு சாரல் மகேந்திரமா
மலைமேல் இருந்த மருந்தே என்னும்
நெறியே என்னும் நெறிநின்றவர்கள்
நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
குறியே என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு அவனை நோக்கி`செருக்கு மிகுந்த பன்றியின் பின்னே, முன் ஒரு நாள் சென்று அருச்சுனனுக்கு அருள் செய்த வேந்தனே! மான்கள் உலாவும் சரிவுகளை உடைய பெரிய மகேந்திர மலைமேல் வீற்றிருந்த அமுதமே! அடியார்கள் தன்னை அடையத் தானே வழியாகவும் இருக்கின்றவனே! உன்னை அடைவதற்கு உன்னையே ஆறாகக் கருதி வாழ்கின்ற அடியார்கள் பேறாக நினைக்கின்ற நீதியோடு கூடிய உபநிடதங்களில் கூறப்பட்ட நிலை யான இலக்காக இருப்பவனே! நற்குணமலையே!` என்று பலவாறாகக் கூப்பிடுகின்றாள்.

குறிப்புரை :

வெறி - செருக்கு. மறி ஏறு - மான்கன்றுகள் பொருந் திய. நெறி - வீடுபெறும் வகை, சாதனம். பின்னர் வரும் ``குறி`` என்பது, இதனால் எய்தும் பயன். ``நினைக்கின்ற. `நீதி` என்னும் இரண்டும், ஒரு சொல் தன்மைப்பட்ட ``வேதாந்த நிலைக் குறி`` என்ப தனை விசேடித்தன. நீதி - எய்தும் உரிமை. வேதாந்த நிலைக்குறி - வேதத்தின் முடிநிலையாகிய குறிக்கோள்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

செழுந் தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல்
திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்றென் மேற்பகை யாடவாடும்
எனைநீ நலிவதென் என்னே என்னும்
அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்
கரசுக் கரசே அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு அவனை நோக்கி, `செழிப்பான தென்றல் காற்று, அன்றிலின் தழுதழுத்த ஒலி, ஒளிவீசும் இந்த மதியம், இருள், அலைகளை உடைய கடல், இனிய இசையை இசைக்கும் வேய்ங்குழலின் ஓசை, காளையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஒலி இவைகள் தம்முழு ஆற்றலோடும் புறப்பட்டு என்மீது பகை கொண்டு துன்புறுத்தவும் அதனால் வாடிக் கொண்டிருக்கும் அடி யேனை நீயும் வருத்துவது ஏன்? அழிவில்லாத மகேந்திர மலையில் தங்கி வானத்தில் உலவும் பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு அருள் செய்த தலைவனே! தேவர்களின் ஒப்பற்ற கொழுந்து போன்ற இனியவனே! குணக்குன்றே!` என்று பலவாறாக அழைத்து அரற்று கின்றாள்.

குறிப்புரை :

அன்றில், துணை பிரியாப் பறவை. திங்களைக் காட்டி, ``இத்திங்கள்`` என்றாள். திரை வீரை - அலைகளையுடைய கடல். சே - எருது. தென்றல் முதலியவை காம நோய் கொண்டாரை வருத்துவன, பகையாடுதல் - பகைகொண்டு நிற்றல். அழுந்தா மகேந்திரம் - அழியாத மகேந்திர மலை. ``மகேந்திரத்து`` என்றதனை, பின் வரும் தொடர் ஒரு பெயர்த் தன்மைப்பட்டு நின்று முடிக்கும், ``புட்கரசு` என்றது, கலுழனை; அதற்கு அரசன் திருமால். ``கொழுந்து`` என்றது `தலையாயவன்` என்னும் பொருட்டு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

வண்டார் குழல்உமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
கடிநா யுடன்கை வளைந்தாய் என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலை பல்ப சுங்கண்
கொண்டாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக்கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு `வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய உமாதேவியாரின் முன்பு, மகேந்திரமலைச்சரிவில் பன்றியின் பின்னே, பார்க்கிறவர்கள் கவலைப்படும்படி வில்லை ஏந்தி வேடர் களும், விரைந்து செல்லும் வேட்டைநாய்களும் உடன்வரப் பன்றி இருந்த பக்கத்தை வளைத்துக் கொண்டு அம்பு எய்தவனே! முற்பட்ட வனாகிய பிரமன், தக்கன், அவன் இயற்றிய வேள்வித் தலைவன் இவர் களுடைய தலைகளையும், ஆதித்தியர் பன்னிருவரில் பூஷன் என்பவன் பற்களையும், பகன் என்பவன் கண்களையும் நீக்கினவனே! குணக்குன்றே!` என்று விளித்துப்புலம்புகிறாள்.

குறிப்புரை :

தேவியும் வேடிச்சி கோலங்கொண்டு உடன் சென்றமை யின். `அவள் முன்னே` என்றார்.
``மகேந்திரம்`` என்பது இங்கு கயிலாய மலையைக் குறித்துநிற்றல் நோக்கத்தக்கது, மேலவற்றோடு ஒப்ப வருதற்பொருட்டு, இங்கு, கயிலையை மகேந்திரம் எனப் பொது வகையாற் கூறிப் போந்தார் எனினுமாம்.
``கண்டார்`` என்றது அன்பரை; என்னை, இறைவனது எளிவந்த செயலை நோக்கிக் கவலுதற்குரியார் அவரே யாகலின், ``கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார்கவலாரே?`` (தி.7 ப.41 பா.1) என்பது முதலிய திருமொழிகளைக் காண்க. கவல - வருந்த.
வில்லாடுதல் - விற்றொழில் புரிதல், வேடர் நாய் - வேட்டைக்கு உரியது. கடி நாய் - விரைவுடைய நாய். கை வளைந்தாய் - பல பக்கங்களிலும் சுற்றினாய். `வில்லாடிக் கைவளைந் தாய்` என்று இயைத்து. `விற் றொழில் செய்தலால் கைகள் செயற்படப் பெற்றவனே` என்று உரைப்பினும் ஆம். ஆய - தக்கன் வேள்விக்குச் சென்ற. தக்கன் வேள்வியில் பல் உகுக்கப்பட்டவன். `பூடா` என்னும் பகலவனும், கண் பறிக்கப் பட்டவன், `பகன்` என்னும் பகலவனும் ஆதலின், `பகலோன்` என்பதைத் தனித்தனி கூட்டுக. இத்திருப் பாட்டின் மூன்றாம் அடியுள், `பகலோன் அனல் பகற் பற்பசுங்கண்` என்பது பாடம் ஆகாமை அறிந்து கொள்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என்மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றதில் கண்டு `விரைந்து பறைகள் ஒலிக்க, விரைந்து அம்பைச் செலுத்தும் கொடிய வில், அம்பு, கவண் என்னும் கல்லைச் செலுத்தும் கருவி இவற்றைக் கைகளில் ஏந்தி, புலித்தோலை உடுத்துச் செருப்பினை அணிந்து சிறுகத்தியையும் கொண்டு, பன்றி முன்னே ஓடுமாறு சீழ்க்கை ஒலியை எழுப்பி விரைந்து நடப்பவனே! மகேந்திர மலைத் தலைவனே! நாததத்துவத்தின் முடிவாய் இருக்கின்ற தலைவனே! என்று வழிபட்டு வேண்டும் அடியவர்களுக்கு நாததத்துவத்தையும் கடந்த சிவலோகப் பதவியை வழங்குபவனே! குணக்குன்றே!` என்று விளித்துப் புலம்புகிறாள்.

குறிப்புரை :

கடுப்பாய் - மிகுதியாய். `கடுப்பாய்க் கறங்க` என இயையும். பறை, வேட்டைப் பறை. கறங்க - ஒலிக்க. உடுப்பு - உடை. சுரிகை - உடைவாள், `தோல் செருப்புச் சுரிகைகளுடன் நடப்பாய்` என்க.
நாதாந்தத்து அரையா - `நாதம்` என்னும் தத்துவத்திற்கு அப் பால் உள்ள தலைவனே! முன்னைத் திருமுறைகளில், `நாதம்` என்னும் சொல் காணப்படினும், `நாதாந்தம்` என்னும் தொடர் காணப்பட்டிலது. பதம் - பாதம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

சேவேந்து வெல்கொடி யானே என்னும்
சிவனே என்சேமத் துணையே என்னும் மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
வளர்நாய கா இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக்கூத்தனை உரு வெளித்தோற்றத்தில் கண்டு `காளை வடிவம் வரையப் பெற்ற, பகை வரை வெல்லும் கொடியை உயர்த்தியவனே! மங்களமான வடி வினனே! என் உயிர்க்குப் பாதுகாவலைத்தரும் துணைவனே! பல விலங்குகளையும் தன்னிடத்துக் கொண்ட மலைச் சரிவினையுடைய மகேந்திர மலையில் தங்கும் தலைவனே! பூக்களை அர்ப்பணிப் பதற்காக ஏந்திவந்து மூவாயிரவர் அந்தணர் வணங்குமாறு புகழ்மிக்க கனகசபையில் பொலியுமாறு நிற்கும் தலைவனே! குணக்குன்றே! என்னிடம் வருவாயாக` என்று அழைத்து வேண்டுகிறாள்.

குறிப்புரை :

சே ஏந்து - எருதைக் கொண்ட. சேமத் துணை - பாதுகாவலான துணை. மா ஏந்து - விலங்குகளை யுடைய.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

தரவார் புனம்சுனைத் தாழ் அருவி,
தடங்கல் லுறையும் மடங்கலமர்
மரவார் பொழில் எழில் வேங்கை எங்கும்
மழைசூழ் மகேந்திர மாமலைமேற்
சுரவாஎன் னும் சுடர்நீள் முடிமால்
அயன்இந் திரன்முதல் தேவர்க்கெல்லாம்
குரவா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக்கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு `மேம்பட்ட நீண்ட தினைப்புனங்கள், மலைச்சுனைகளிலிருந்து கீழ் நோக்கி இறங்கி ஓடும் அருவிகள். பெரிய கற்பாறைகள், அவற்றின் குகைகளில் உறையும் சிங்கங்கள், குங்கும மரங்கள் வேங்கை மரங்கள் நிறைந்த சோலைகள், எங்கும் சூழ்ந்த மேகங்கள் இவற்றை உடைய பெரிய மகேந்திரமலைமேல் எழுந் தருளியிருக்கும் தேவனே! ஒளிவீசும் நீண்ட கிரீடங்களை அணிந்த திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவனே! குணக்குன்றே!` என்று அழைத்துப் புலம்புகிறாள்.

குறிப்புரை :

தர வார் புனம் - மேலான நீண்ட புனம், சுனைத் தாழ் அருவி - சுனையினின்றும் வீழ்கின்ற அருவி. ``கல்`` என்றது முழையை. மடங்கல் - சிங்கம். மடங்கல் `அமர் பொழில்` என்க. இருள் மிகுந்திருத்தலின், முழையில் தங்கும், சிங்கம் இங்குத் தங்கு வதாயிற்று,
மரவு ஆர் பொழில் - குங்கும மரம் நிறைந்த சோலை. வேங்கை - வேங்கைமரம் இதனை வேறு கூறினார், மலை நிலத்திற்குச் சிறந்த மரமாதல் பற்றி. மழை - மேகம் `ஏங்கும்` என்பதும் பாடம். `புனம், அருவி` பொழில், வேங்கை முதலிய எங்கும் மேகங்கள் தவழ் கின்ற மகேந்திர மாமலை` என்க. `சுரவன்` என விரித்தல் பெற்று விளி யேற்று, `சுரவா` என நின்றது, சுரன் - தேவன் ``குரவன்`` என்றது, `தந்தை, தாய், அரசன், ஆசிரியன்` என்னும் அனைத்துப் பொருளை யும் குறிக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

திருநீ றிடாஉருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீ ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனுடைய நினைப்பிலே, திருநீற்றை நீரில் குழைத்து நெற்றியில் அணிந்து, `திருநீறு அணியாத உருவத்தைத் தீண்டேன்` என்று சொல்லிப் பெருமை பொருந்திய நீலகண்டனாகிய சிவபெருமானுடைய பண்பு செயல் இவை பற்றிய செய்திகளை அடைவு கேடாகச் சொல்லிக் கொண்டு பெரிய தெருவிலே திரிகிறாள். `பருவமழையால் பெருகு கின்ற நீர் இழியும் அருவிகளை உடைய மகேந்திரமாகிய அழகிய மலையில் ஆகமப்பொருளை உமாதேவியாருக்கு உபதேசிக்கும் குருவே! குணக்குன்றே!` என்று சிவபெருமானுடைய உருவெளித் தோற்றத்தைக் கண்டு அழைக்கிறாள்.

குறிப்புரை :

`திருநீறு இடா உருத் தீண்டேன்` என்றல், தில்லைக் கூத்தப் பெருமானுக்கு ஆகாதது, தனக்கும் ஆகாமை பற்றியாம், `மெய் யிலும் திருமுண்டத்திலும் தீட்டி` என்க. முண்டம் - நெற்றி, பூசுதல் வாளா பூசுதலும், தீட்டுதல் குழைத்து இடுதலும் ஆகும். `மெய்த்திரு முண்டத் திட்டு` எனவும் பாடம் ஓதுப. திறம் - புகழ். பிதற்றுதல் - பித்துக் கொண்டு பேசுதல். இங்கும் மகேந்திரமலை, `பொன்மலை` எனப்பட்டது. ``அருளும்` என்றது, ஆகமங்களை அருளிச் செய்தமையை. எனவே, இவளும் அதுநோக்கியே காதல் மிக்காளா யினமை பெறப்பட்டது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

உற்றாய் என் னும் உன்னை யன்றி மற்றொன்
றுணரேன் என் னும் உணர் வுள்கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத் தும்பிதற்றிப்
பிணிதீர் வெண் ணீறிடப் பெற்றேன் என்னும்
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
குற்றாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என்மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித் தோற்றத்தில் கண்டு` என்னோடு பொருந்தியவனே! உன்னைத் தவிர வேறொரு தெய்வத்தையும் நான் நினைக்க மாட்டேன். சுற்றிலும் ஒளிவீசும் மகேந்திர மலையைத் தியானித்து, மனத்திலுள்ள அறியாமையாகிய இருளைப் போக்கி உன்னைத் தியானம் செய்யாதவர் நெஞ்சில் பொருந்தாதவனே! குணக்குன்றே!` என்று அவனை அழைத்து, `என் அறிவினுள் கலக்கப்பெற்ற திருவைந் தெழுத்தையும் பிதற்றிக் கொண்டு, அறியாமையாகிய பிணி நீங்குமாறு வெண்ணீற்றை அணிந்துள்ளேன்` என்று பிதற்றுகிறாள்.

குறிப்புரை :

உற்றாய் - யாவரையும் உறவாகப் பொருந்தியவனே. `உணர்வுள் கலக்கப்பெற்றுப் பொருந்திய ஐந்தெழுத்தும்` என்க. ``உணர்வுள்`` என்பது முதலாக, ``பெற்றேன்`` என்பது ஈறாக உள்ளவை, தலைவியின் கூற்றைச் செவிலி அங்ஙனமே கொண்டு கூறியன. `உணர்வுகள்` என்பது பாடம் அன்று. சுற்று ஆயசோதி - சுற்றி லும் வீசுகின்ற ஒளியையுடைய. ``மகேந்திரம்`` என்றது, இகரம் அலகுபெறாது நிற்க ஆரியம் போல நின்றது. `சூழ` என்னும் செய வெனெச்சம், தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது. `சூழச் சூழாத` என இயையும். இதனுள் முன்னர் நின்ற சூழ்தல், சார்தல். பின்னர் நின்ற சூழ்தல், நினைத்தல். இருள் வாங்கி - அறியாமையைப் போக்கி. ``குத்தாய்`` என்பது, எதுகை நோக்கி, `குற்றாய்` எனத் திரிந்தது. குத்தாய் - ஊன்றாதவனே; பொருந்தாதவனே.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 12

வேறாக உள்ளத் துவகைவிளைத்
தவனிச் சிவலோக வேத வென்றி
மாறாத மூவா யிரவரையும்
எனையும் மகிழ்ந்தாள வல்லாய் என்னும்
ஆறார் சிகர மகேந்திரத்துன்
அடியார் பிழைபொறுப்பாய் அமுதோர்
கூறாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
 

பொழிப்புரை :

என் மகள் குலாத்தில்லைக் கூத்தனை உருவெளித் தோற்றத்தில் கண்டு` மற்றவர்களினும் வேறுபட்ட வகையில் சிறப்பாக என் உள்ளத்திலே மகிழ்ச்சியை உண்டாக்கி, பூலோக சிவலோகமாகிய தில்லையில் வேதம் ஓதுதலால் எய்தும் சிறப்பு மாறாத மூவாயிரவர் அந்தணரோடு அடியேனையும் மகிழ்ச்சியாக ஆட்கொள்ள வல்ல வனே! ஆறுகள் தோன்றும் உச்சியை உடைய மகேந்திர மலையில் இருந்து, உன் அடியவர்களின் பிழைகளைப் பொறுத்து அருளுகின்ற வனே! பெண்ணமுதாகிய பார்வதியை உன் திருமேனியின் ஒரு பாக மாக உடையவனே! குணக்குன்றே!` என்று அழைத்துப் புலம்புகிறாள்.

குறிப்புரை :

``வேறாக உள்ளத்து உவகை விளைத்து`` என்பதை` ``ஆளவல்லாய்`` என்பதன் முன்னர்க் கூட்டுக. வேறாக - தனியாக; என்றது `அந்தரங்க உரிமையாக` என்றபடி. தன்னையும் மூவாயிரவ ரொடு படுத்து இவள் இவ்வாறு கூறியது, தனது காதல் மிகுதியாலாம். எனவே, இதனான் இவ்வாசிரியரது பேரன்பு விளங்குவதாம். அவனிச் சிவலோகம் - தில்லை, `அவனிச் சிவலோக மூவாயிரவர்` என, இயையும். `தில்லை அவனிச் சிவலோகம்` எனவே, அதன் கண் வாழும் மூவாயிரவர் அவனிச் சிவர் என்பது விளங்கும். இதனை ``நீலத் தார்கரி யமிடற்றார்நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார்பற்று - சூலத்தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் - சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம்`` (தி.3. ப.1. பா.3) என அருளிச் செய்தமை யானும், அவ்வருளிச் செயலின் வரலாற்றாலும் (தி.12 ஞானசம் - 168 - 174) நன்குணர்ந்து கொள்க. வேதவென்றி - வேதத்தை ஓதுதலா னும், அதன்வழி வேட்டலானும் பெற்ற வெற்றி. `இவ்வெற்றி என்றும் மாறாது நிற்கும் மூவாயிரவர்` என்க. ஆறு ஆர் சிகரம் - பல யாறுகள் பொருந்திய கொடுமுடி. பொருந்துதல் - தோன்றுதல். இனி, `வான யாற்றை அளாவிய சிகரம்` என்றலுமாம். ``உன் அடியார் பிழை பொறுப்பாய்`` என்றது தம் பாடலைப் பொறுக்கவேண்டுமென்னும் குறிப்பினது. இஃது ஒரு பெயர்த் தன்மைப்பட்டு, ``மகேந்திரத்து`` என்றதனை முடித்தது. அமுது - பெண்ணமுதாய மலைமகள். `மாதோர் கூறாய்` என்பது பாடம் அன்று.
சிற்பி