திருமாளிகைத் தேவர் - கோயில் - `` இணங்கிலா ஈசன்``


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

இணங்கிலா ஈசன் நேசத்
திருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
மணவடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில்
கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண் வாய்
பேசாதப் பேய்க ளோடே.

பொழிப்புரை :

தனக்கு ஒப்பார் இலாத சிவபெருமானிடத்தில் அன்போடு நிலைத்திருக்கும் மனத்தை உடைய அடியேனைப் பொறுத்த வகையில், பல திருவிழாக்களைக் கொண்ட சிறப்பினை உடைய தில்லையில் உகந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய கூட்டத்தைப் பெற்ற அடியார்களுடைய வள்ளன்மைக் குணங்களைப் புகழ்ந்து கூறாத, பெருமை இல்லாத கொடிய வாயை உடைய, ஒன்பான் ஓட்டைகளை உடைய உடம்பைச் சுமக்கும், செத்தாரில் வைத்து எண்ணப் படுபவர்களை அடியேனுடைய கண்கள் காணமாட்டா. உலகத்தார் உண்டு என்பதனை இல்லை என்னும் அப்பேய்களோடு அடியேனுடைய வாய் உரை யாடாது.

குறிப்புரை :

இணங்கு - ஒப்பு. `சித்தத்தினேற்குக் கண் காணா; வாய் பேசாது` என இயையும். எனவே, இஃது ஏனைத் திருப்பாட்டுக் களினும் சென்று இயைவதாதல் அறிக. மணங்கொள் - பல விழாக் களைக் கொண்ட `தில்லைவாணனது மணத்தை (கூட்டத்தை)ப் பெற்ற அடியார்` என்க. வண்மை - வளப்பம்; சிறப்பு. வீறுஇல் - பெருமை இல்லாத; `கோரம்` என்பதில், மகரம் கெட்டு ரகரம் றகரமாயும், அகரம் ஐகாரமாயும் திரிந்து நின்றன. கோரம் - கொடுமை. பீறல் பிண்ட - ஓட்டை உடம்பையுடைய. உயிர் வாழ்தலால் பயன் இன்மையின், பிணங்கள்`` என இகழ்கின்றவர், அக்காரணத்தானே உடம்பின் இயல்பை விதந்தோதினார். பிதற்றுதலுடைமை பற்றி, `பேய்கள்` என்றார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

எட்டுரு விரவி என்னை
ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங் கலங்கல் தில்லை
வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

அட்ட மூர்த்தியாய் என்னை ஆட்கொண்டவனாய், வளரும் ஒளி பிரகாசிக்கின்ற மாலையை அணிந்த தில்லையம்பதித் தலைவனாகிய எம் பெருமானை, அடியவராக வந்து அடையாத தீயவர்களையும், வஞ்சகச் சொல்பேசும், பிற தெய்வங்களின் அடியவர்களையும், இனிது விளங்காதபடி முணுமுணுத்துப் பேசும் சிறியோர்களையும் என்கண்கள் காண மாட்டா. என்வாய் அப்பேய்களோடு பேசாது.

குறிப்புரை :

ஈண்டு சோதி - மிக்க ஒளி; இஃது ``இலங்கு` என்பத னோடு முடியும். அலங்கல் - மாலை; என்றது பொன்னரி மாலையை; இதனையுடையது தில்லை. தூர்த்த வார்த்தை - வஞ்சகச் சொல். தொழும்பர் - பிறர்க்கு அடிமையாய் நிற்பவர். பிழம்பு - இனிது விளங்காத சொல்; முணுமுணுத்தல். பிட்டர் - நொய்யர்; சிறியோர். இச் சொல் `பிட்டம்` என்பதினின்று பிறந்தது. ``பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா பேணித் தொழுமின்கள்`` (தி.1. ப.69. பா.10) என்று அருளிச் செய்தமை காண்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

அருட்டிரட் செம்பொற் சோதி
யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.

பொழிப்புரை :

அருளின் திரளாய், செம்பொன்னின் ஒளியை உடைய சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் நீலகண்டனாகிய எம்பெருமானுடைய அடியவர்கள்மாட்டு அன்பு செலுத்தாத துடுக்கு உடையவர்களையும், துடுக்கான வார்த்தைகளைப் பேசும் மனமாசு உடையவர்களையும், கழுகுகள் போன்று பிறர் பொருளைப் பறித் துண்ணும் நெறிதவறியவர்களையும் என் கண்கள் காணமாட்டா. என் வாய் அப்பேய்களோடு உரையாடாது.

குறிப்புரை :

`அருளினது திரளாகிய அம்பலம்` எனவும், `இருளினது திரள்போலும் கண்டம்` எனவும் உரைக்க. எம்மான் இன்பம் - சிவானந்தம். அரட்டர் - துடுக்குடையவர். அரட்டு - துடுக்கு. அழுக்கர் - மாசுடையவர். பிரட்டர் (பிரஷ்டர்) - நெறிதவறியவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

துணுக்கென அயனும் மாலும்
தொடர்வருஞ் சுடராய் இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
அம்பலத் தாடிக் கல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச்
சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் திடுக்கிடும்படி தொடர்ந்து வந்து அறிவதற்கு அரிய ஒளிவடிவினனாய், இவ்வுலகில் தன்னை அணுகியிருக்கும் அடியவர்களுக்குத் தானும் அணியனாய்ச் செம் பொன்மயமான அம்பலத்தில் ஆடுகின்ற எம்பெருமானுக்கு அன்பர் அல்லாத அழுகை உடையவரையும், பிறரைத் துன்புறுத்தும் குருட்டுத் தன்மையை உடைய அறிவிலிகளையும், கீழ்மக்களாகிய வாய் அழுக்கை உடைய மாறுபடப் பேசுபவர்களையும் என்கண்கள் காணா. அப்பேயரோடு என் வாய் உரையாடாது.

குறிப்புரை :

``துணுக்கென`` என்பதை `துணுக்கென்று` எனத் திரிக்க. துணுக்கெனல் - அஞ்சுதல். அணுக்கர் - அணுகியிருப்பவர்: அடியவர். அணிய - அண்மைக்கண் உள்ள. ``செம்பொன் அம்பலத்தாடி` என்றது ஒரு பெயர்த் தன்மைத்தாய். ``அணிய`` என்றதற்கு முடிபாயிற்று. சிணுக்கர் - அழுகையுடையவர். சிவபெருமானை இகழ்ந்து முணு முணுத்தலை, `அழுகை` என்றார். செத்தல் - செதுக்குதல்; `பிறரைத் துன்புறுத்துதல்` என்க. கொத்தை - குருட்டுத்தன்மை. சிதம்பர் - வெள்ளைகள்; அறிவிலிகள். சீத்தை - கீழ்மை. ஊத்தை - வாய் அழுக்கு; இஃது, இழிந்த சொல் உடைமை பற்றிக் கூறப்பட்டது. `பிணக்கர்` என்பது எதுகை நோக்கி ``பிணுக்கர்`` என்றாயிற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

திசைக்குமிக் குலவு கீர்த்தித்
தில்லைக்கூத் துகந்து தீய
நசிக்கவெண் ணீற தாடும்
நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

எண்திசைகளையும் கடந்து பரவும் புகழை உடைய தில்லையம்பதியின் ஆனந்தக் கூத்தை விரும்பித் தீமைகள் அழியுமாறு வெண்ணீற்றை அணியும் நம் அடியவர்களை அணுகாத நாய்களாய், கண்டவர் எள்ளி நகையாடுமாறு பொருள் தெரியாமல் வடமொழிச் செய்திகளை ஓதும் அறிவிலிகளையும், உயர்ந்தவரோடு மாறுபட்டுப் பேசும் பேச்சினை உடைய வலிமையற்றவர்களையும் என்கண்கள் காணா. என்வாய் அப்பேய்களோடு உரையாடாது.

குறிப்புரை :

திசைக்கு மிக்கு - திசையினும் பெரிதாகி. உகந்து - விரும்பிக் கண்டு. தீய நசிக்க - தீவினைகள் கெட்டொழியுமாறு. ``வெண்ணீறது`` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. ஆடும் - மூழ்குகின்ற. `ஆடி` எனவும் பாடம் ஓதுவர். நமர்கள் - நம்மவர்: சிவனடியார்கள். `நாய்களாகிய, என்க. அசிக்க - பிறர் நகைக்கும்படி. நகைத்தல், ஆரிய மொழியின் ஒலிகள் பற்றியாம். `அவரது ஆரிய ஓத்துப் பொருளற்றது` என்றபடி. ஆதர் - அறிவிலிகள். பேத வாதம் - உயர்ந்தவரோடு மாறுபட்டுப் பேசும் பேச்சு. பிசுக்கர் - வலிமை யற்றவர்: உயிர்க்கு உறுதியாவதே வலிமை என்க. வலிமை கெட்டு மெலிதலை, `பிசுத்தல், பிசுபிசுத்தல்` என்ப. இதனுட் குறிக்கப்பட்டவர் கள் மீமாஞ்சகர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள் முதலியோர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

ஆடர வாட ஆடும்
அம்பலத் தமுதே என்னும்
சேடர்சே வடிகள் சூடாத்
திருவிலா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச்
சழக்கரைப் பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

`படம் எடுத்து ஆடும் பாம்புகளாகிய உன் அணி கலன்கள் ஆட அம்பலத்திலே கூத்து நிகழ்த்தும் அமுதமே` என்று சிவ பெருமானைப் போற்றும் பெருமையை உடைய அடியவர்களுடைய திருவடிகளைத் தம் தலையில் சூடி வழிபடாத, நல்லூழ் இல்லாத உயி ரற்ற உடம்புபோல இருப்பவர்களையும், பத்தியில் நிலைத்து நில்லாத வரையும், சாணாகப்பிடித்த கை அளவை உடைய முரடர்களாகிய பொய்யரையும், தம் வயிறு வளர்ப்பதற்காகப் பிறிதோர் உயிரைச் சிதைக்கும் ஆண்மையற்றவர்களையும் என் கண்கள் காணா. அத்தகைய பேய் போன்றவரோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

ஆடு அரவு - படம் எடுத்து ஆடுந்தன்மை யுடைய பாம்பு. ஆட - அது, தன் மேனியில் இருந்து அசைய. என்னும் - என்று துதிக்கின்ற. சேடர் - பெருமையுடையவர். திரு - நல்லூழ். உருவினார் - உயிரற்ற உடம்புகளாய் உள்ளவர். சாடர் - சகடர்; நிலையில்லாதவர். சாண் கை - சாணாகப் பிடித்த கையளவை யுடைய. `சாண் மகன்` என்பது, சிறுமை குறிப்பதோர் இகழுரை. மோடு - முருட்டுத் தன்மை; இஃது, அகரம் பெற்று வந்தது. சழக்கர் - பொய்யர். பிழைத்தல் - வயிறு வளர்த்தல். `பிழக்க` என்பது பாடம் அன்று. பிட்டல் - ஒன்றைச் சிதைத்தல். இதன்பின், `வல்ல` என ஒருசொல் வருவிக்க. பேடர் - ஆண்மை இல்லாதவர்: மேலான பயனை எய்துதலே ஆண்மை என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

உருக்கிஎன் உள்ளத் துள்ளே
ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

அடியேனுடைய உள்ளத்தை உருக்கி அதன் உள்ளே ஊறுகின்ற ஆனந்தமாகிய தேனின் பெருக்கு மாறாதபடி, நடனத்தால் தன் உள்ளகக் குறிப்பினை அடியவர்களுக்கு அருளுகின்ற தில்லைப் பெருமான் பக்கல் செல்லும் மனப்பக்குவம் இல்லாத சுருக்கம் உடையவர்களையும், நரகத்தில் அழுந்துதற்குரிய வஞ்சகர் களையும், கெடாத தீவினைகளை நாளும் மிகுதியாகச் செய்து கொள் பவர்களையும், என் கண்கள் காணா. என் வாய் அப்பேயர்களோடு உரையாடாது.

குறிப்புரை :

`என் உள்ளத்தை உருக்கி அதனுள்ளே ஊறுதல் உடைய தேறல் நீங்காமைக்கு ஏதுவாகிய திருக்குறிப்பு, என்க. தேறல் - தேன்; என்றது பேரின்பத்தை. திருக்குறிப்பு, நடனத்தில் உள்ளது. `செல்வம் இல்` என்பது, `செல்வில்` எனக் குறைந்து நின்றது. அருக்கர் - சுருக்கம் உடையவர்; பெருக்கம் இல்லாதவர். அள்ளல்வாய - நரகத்தின் கண் உள்ள. கள்ளர் - வஞ்சகர். அவியா - கெடாத.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

செக்கர்ஒத் திரவி நூறா
யிரத்திரள் ஒப்பாந் தில்லைச்
சொக்கர்அம் பலவர் என்னும்
சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்டாம் மிண்ட
எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

செவ்வானம் போன்று, சூரியர் நூறாயிரவர் ஒரு சேரத் திரண்டதற்கு ஒப்பான நிறத்தையும் ஒளியையும் உடைய தில்லையுள் எழுந்தருளியுள்ள அழகராகிய அம்பலக் கூத்தாடுபவரே பரம் பொருளாவார் என்ற வேதக் கருத்தை நினைத்துப்பார்க்காத செருக்கு மிக்கவரையும், கீழ் இனத்தவராகிய வலிமை மிக்க வஞ்சரை யும், புத்தர் முதலிய பொய்யரையும், என் கண்கள் காணமாட்டா. அந்தப் பேயர்களோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

செக்கர் - செவ்வானம். உவமை இரண்டற்கும் பொருள், அம்பலவர். சொக்கர் - அழகர். `சொக்கராகிய அம்பலவர்` என்க. சுருதி - வேதப்பொருள்; ஆகுபெயர், எக்கர் - செருக்கு மிக்கவர். ``எக்கராம் அமண் கையர்`` (தி.3 ப.39 பா.11) என வந்தமை காண்க.
குண்டு - கீழ் இனம். `குண்டர்` என்பதும் பாடம். மிண்டர் - வன்கண்ணர். எத்தர் - வஞ்சிப்பவர். பொக்கர் - பொய்யர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

எச்சனைத் தலையைக் கொண்டு
செண்டடித் திடபம் ஏறி
அச்சங்கொண் டமரர் ஓட
நின்றஅம் பலவற் கல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே.

பொழிப்புரை :

காளைவாகனத்தில் ஏறிவந்து எச்சனுடைய தலையைப் பூச்செண்டினை உருட்டுவது போல எளிதில் துண்டாக்கி, அஞ்சித் தேவர்கள் ஓடுமாறு வேள்விக் கூடத்தில் நின்ற சிவ பெருமானை வழிபடாத வெறுக்கத் தக்கவரையும், அப்பெருமானைப் பற்றிய நூல்களைக் கல்லாத கீழ்மக்களையும், சிறுதெய்வங்களைப் பரம் பொருளாகக் கூறும் நூல்களைக் கற்கும் மயக்க உணர்வினரையும் என் கண்கள் காணமாட்டா. அப்பேயரோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

செண்டடித்து - பூச்செண்டு அடித்தல் போல அடித்து; இஃது எளிதில் செய்தமையை உணர்த்திற்று. ``இடபம் ஏறி`` என்ற தனை முதற்கண் வைத்து உரைக்க. ``ஏறி`` என்ற எச்சம் எண்ணின்கண் வந்தது. ``அம்பலவன்`` என்றது ஆகு பெயராய் அவனைப் பொரு ளாக உடைய நூலைக் குறித்தது.
கல்லா - கற்காத. `கைத்தவர்` என்பது, `கச்சவர்` என்று ஆகி, `கச்சர்` என இடைக் குறைந்து நின்றது; வெறுக்கப்பட்டவர் என்பது பொருள். ``பசு`` என்றது, சிறு தெய்வங்களை. நூல் - அவற்றைப் பொருளாக உடைய நூல். ``கற்கும்`` என்றது, `விரும்பிக் கற்கும்` என்ற வாறு. பிச்சர் - பித்தர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

விண்ணவர் மகுட கோடி
மிடைந்தொளி மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
வாசலுக் காசை யில்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்
திருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

சிவபெருமானை வழிபடவரும் தேவர்கள் பலராதலின் அவருடைய பல கிரீடங்களும் ஒருசேரக் காணப்பட, அவற்றில் பதிக்கப்பட்ட மணிகள் ஒளிவீசும் தலைமையை உடைய சிற்றம்பலவனாகிய வெற்றியை உடைய மன்னவன் பக்கல் பக்தி இல்லாத முரட்டுத் தன்மை உடைய அறிவிலிகளையும், தெளிவற்ற மனத்தினை உடைய அஞ்ஞானிகளையும், வம்புப் பேச்சுக்களைப் பேசும், ஆண் தன்மையற்ற மகளிர் போல்வாரையும் என் கண்கள் காணா. அப்பேயரோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

`வீசும் வாசல்` என இயையும். வாசல், `வாயில்` என்பதன் மரூஉ. தெண்ணர், `திண்ணர்` என்பதன் மரூஉ` `மூர்க்கர்` எனப் பொருள் தந்தது. ``தெண்ணர் கற்பழிக் கத்திரு உள்ளமே`` (தி.3 ப.47 பா.3) என வந்தமை காண்க. `உள்ளத்து இருளர்` என்க. `திட்டை,முட்டை` என்பன; பகுப்பற்ற பிண்டத்தை உணர்த்தி நின்றன. `பெண்ணர்`, என்பதற்கு, ``பேடர்`` என்றதற்கு உரைத்தது உரைக்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

சிறப்புடை அடியார் தில்லைச்
செம்பொன்அம் பலவற் காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ்
உறைப்பர்சே வடிநீ றாடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே. 

பொழிப்புரை :

மேம்பாட்டை உடைய அடியவர்கள் வாழும் தில்லையிலே உள்ள செம்பொன்மயமான அம்பலத்தில் நடனமாடும் பெருமானுக்கு அடியவராக இருக்கும் உறுதிப்பாட்டை உடைய அடியவர்களுக்கு அடியவராக இருக்கும் உறுதிப் பாட்டினையும், அவர்களுடைய திருவடித்துகள்களை அணியும், சிறப்பினையும் இழந்து, இறத்தல் பிறத்தல் என்ற தொழில்களுக்கே இனிய இலக்காகி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கக் கூடிய கீழ் மக்களை என் கண்கள் காணா. அப்பேயரோடு என்வாய் உரையாடாது.

குறிப்புரை :

சிறப்பு - யாவரினும் உயர்ந்து நிற்கும் மேன்மை. உறைப்பு - உறுதி. `சிறப்புடை அடியாராகிய உறைப்புடை அடியார்` எனவும் உறைப்புடை அடியார்க்குக் கீழ்க்கீழாய் உறைப்பவரது சேவடி` எனவும் உரைக்க. கீழ்க்கீழாய் உறைப்பவராவரது, அடியார்க்கு அடியராயும், அவர்க்கு அடியராயும் நிற்றலில் உறுதியுடையராதல். ``நீறு`` என்றது, புழுதியை, பிறப்பர் - பிறப்பவர்.
சிற்பி