கருவூர்த் தேவர் - கோயில்


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின்
மழைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும் பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

கூட்டமாக விரிந்த தலைகளையும் அத்தலைகளின் கண் சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.

குறிப்புரை :

கணம் - கூட்டம். `கூட்டமாக` என ஆக்கம் வருவிக்க. `குடுமியில் உள்ள செம்மணிகளையுடைய` என்க. பல தலைகளை யுடைமை பற்றி, ``கணம்விரி குடுமி``என்றார், கவை நா - பிளவு பட்ட நாக்கு. கறை - நஞ்சு. தாடியைக் குறிப்பதாகிய, `அணல்` என்பது இங்கு, ஆகுபெயராய், வாயைக் குறித்தது. `அனல்` எனவும் பாடம் ஓதுவர், கண் செவி - கண்ணொடு பொருந்தி நிற்கும் காது. பகுவாய் - பிளந்த வாய். பணம் விரி துத்திப் பொறி - படத்தின்கண் பரந்த, `துத்தி` என்னும் பெயரை உடைய புள்ளிகள். மொழுப்பு - உச்சி. மழை - மேகம். `துணர்` என்பது, ``திணர்`` எனத் திரிந்து நின்றது. அரும்பு - தோன்றுகின்ற. `தவழ் பெரும்பற்றப் புலியூர், அரும்பு பெரும்பற்றப் புலியூர்` எனத் தனித் தனி முடிக்க. `புலியூர்த் திருச்சிற்றம்பலம்` என இயையும். திருவளர் - அழகுமிகுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
அஞ்சலென் றருள் செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

இந்தக் கடத்தற்கு அரிய பிறவியாகிய கடலில் கரை காண்பதற்காக நீந்தும் அடியவனாகிய எனக்கு என்னுடன் தோன்றிய ஐம்பொறிகளும் பகையாக உள்ளன. அந்நிலையில் எனக்குத் துணை யாவர் என்று வருந்தினனால், `யானே துணையாவேன். ஆதலின் அஞ்சாதே` என்று அருள் செய்கின்ற சிவபெருமானுடைய கோயில், பக்கங்களில் பொருந்தியுள்ள வயல்களில் தளிர்த்த செந்நெற் பயிர்களிடையே களையாக வளர்ந்ததனால், உழத்தியர்கள் களை யாகப் பிடுங்கிய நீலமலர்க்கொடிகளே வயலின் வரப்புக்களில் காணப் படும் பெரும்பற்றப் புலியூரில் உள்ள இறைவனுடைய அருட்செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமே யாகும்.

குறிப்புரை :

`இப் பௌவநீர்` என இயைத்து, `நீந்துதற்கரிய பிறவி யாகிய கடல்நீரை நீந்துகின்ற ஏழையேனுக்கு` என உரைக்க. ஐவர் ஐம்பொறிகள். `உடன்பிறந்தோர் அனைவருமே பகையாய் விட்டமை யின் எனக்கு யார் துணை` என்றவாறு. கைவரும் பழனம் - பக்கங் களில் பொருந்தியுள்ள வயல்களில். குழைத்த - தளிர்த்த. செஞ்சாலி - செந்நெற் பயிர். `நீலப் பூக்களின் கொடிகளே களைகளாய் உள்ளன` என்றபடி - செய் வரம்பு அரும்பு - வயல்களின் வரப்புக்களில் காணப்படுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும்
தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தங் கோயில்
வாயினே ரரும்பு மணிமுருக் கலர
வளரிளஞ் சோலைமாந் தளிர்செந்
தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

பொழிப்புரை :

தாயைப்போல உயிர்களிடம் இரக்கம் கொள்ளும் தலைவனே எனவும், தன்னுணர்வு இல்லாத அடியேனுடைய தலை வனே எனவும், நாய் போன்ற இழிந்தவனாகிய அடியேன் இருந்து அழைத்து வருந்தினால் இரக்கங்கொண்டு அடியேற்கு நன்மையைச் செய்யும் சிவபெருமானுடைய கோயில், பெண்களுடைய வாய்க்கு ஒப்பாகச் செந்நிறத்தோடு அரும்பும் அழகிய முருக்கமலர் மலர, இள மரங்கள் வளர்கின்ற சோலையில் மாந்தளிர்கள் சிவந்த தீயைப் போலத் தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூரில் உள்ள அருட்செல்வம் வளர்கின்ற சிற்றம்பலமேயாகும்.

குறிப்புரை :

``தாயின்`` என்றதில் இன், சாரியை. இனி இதனை உருபாக்கி, `நேர் நின்று இரங்கும்` என உரைத்தலும் ஆம். ``தலைவ, துணைவ`` என்ற விளிகட்குப் பின்னர் நின்ற ஓகாரங்கள் முறையீடு குறித்து நின்றன. வாயின்ஏர் அரும்பு - மகளிரது வாய்போல எழுச்சி விளங்குகின்ற. மணி முருக்கு - அழகிய முருக்க மலர். நேர் தீயின் அரும்பு - அதன் எதிராக நெருப்புப் போலத் தோன்றுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

பொழிப்புரை :

துந்துபி, வேய்ங்குழல், யாழ், மொந்தை என்ற தோற்கருவி இவற்றின் ஒலி வானளவும் சென்று ஒலிக்க, முனிவர் குழாம் தொடர்ந்து துதிக்க, நந்திதேவர் தம் கைகளால் முழக்கும் முழவம் மேகத்தைப் போல முழங்கக் கூத்து நிகழ்த்தும் சிவ பெருமானுடைய கோயில், அந்திக் காலத்தில் சொல்லப்படுகின்ற மந்திரங்களை உடைய நான்கு வேதங்களினும் உள் அமைந்த இரகசியப் பொருள்கள் வேதியருடைய உள்ளத்தில் புலனாகின்ற பெரும்பற்றப்புலியூரிலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே ஆகும்.

குறிப்புரை :

துந்துபி முதலியன வாத்தியங்கள். அவை அவற்றது ஒலியைக் குறித்தன. வான் இயம்ப - வானளவும் சென்று ஒலிக்க. முழவம் - மத்தளம். அந்தியின் மறை - அந்திக் காலத்திற் சொல்லப் படுகின்ற மந்திரங்களையுடைய (நான்கு வேதங்கள் என்க). மறைப் பொருள் - இரகசியப் பொருள்கள். `மறைப் பொருள் அரும்பும்` என இயையும்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

கண்கள் கண்ணீர் துளிக்க, கைகள் குவித்து, `எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்` என்று கதறி எலும்புக ளெல்லாம் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடி யேனையும் இணைத்துக் கொள்ளும் சிவபெருமானுடைய கோயில், தேன் உண்டு என்பதனைத் தெளிந்த வண்டுகள் பலபல பண்களைப் பாடிக் கொண்டு ஆடக் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடைய பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே யாகும்.

குறிப்புரை :

மொட்டித்து - குவித்து. களைகணே - பற்றுக் கோடான வனே. தெளிதேன் - தேன் உண்மையைத் தெளிந்த வண்டுகள். ஆட - பறந்து திரிய. `சோலையது சூழ் மொழுப்பில்` என்க. சூழ் மொழுப்பு - பரவிய மேலிடம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு
நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும்
விரிசடை யடிகள்தங் கோயில்
அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத்
தகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

அடியேங்களுடைய உள்ளங்களில் உள்ள துயரங் கள் தீர, எங்கள் உள்ளங்களில் புகுந்து தங்கியிருக்கும் நிலையோடு இருளைக் கிழித்துக்கொண்டு வெளிப்பட்ட சூரியன் ஒளி வீசுவது போன்று ஒளியை வெளிப்படுத்தும் விரிந்த சடையை உடைய சிவ பெருமானுடைய கோயில், அழகிய ஒளியை உடைய மதிலும் அகழி யும் சூழ்ந்த உள்ளிடத்தில் மணிகளின் வரிசைகளிலிருந்து பரவிய சிவந்த ஒளி விரியும் பெரும் பற்றப்புலியூரிலுள்ள திருவளர் திருச் சிற்றம்பலமே ஆகும்.

குறிப்புரை :

அகம், அந்நெஞ்சின் அகம். `நிலைமையோடு கூடி` என ஒருசொல் வருவிக்க. முதற்றொட்டு, ``எழுந்த` என்பதுகாறும் உள்ளவை, வெஞ்சுடருக்கு அடையாய், இல்பொருள் உவமையாக் கின. வெஞ்சுடர் - பகலவனது வெப்பமான கதிர்கள். சுடர்வ போன்று - வீசுவன போன்று. துளும்பும் - விரிகின்ற. புரிசை -மதில். ``புரிசையும், அகழியும் சூழ்ந்த வட்டத்து அகம்படி` என்க. அகம்படி - உள்ளிடத் தில். மணி நிரை பரந்த செஞ்சுடர் - மாணிக்கங்கள் பரந்து கிடத்தலால் உண்டாகின்ற செம்மையான ஒளி. அரும்பும் - தோன்றுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந்
தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து
நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

செம்பூக் குவியல்களின் உருவம்போலச் சிவந்த ஒளியை வெளிப்படுத்திக் கொண்டு, அடியேனுடைய மனத்தில் வந்து எழுந்தருளிய, திருமாலாகிய காளையை உடையவனாய், தூய பளிங்கின் குவியலினின்றும் தோன்றிய காட்சி காணப்படுமாறு போல வெண்ணீற்றொளியோடு நிலை பெற்றிருப்பவன் கோயில், நாவினால் கூட்டமாக ஓதப்படுகின்ற வேதமந்திரங்களை உணர்ந்து ஓமகுண்டங் களிலே நறிய நெய்யை ஆகுதியாக அளித்து வேதியர்கள் வளர்த்த தீயின் குவியல் ஒளிவீசுகின்ற பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருவளர் சிற்றம்பலமே ஆகும்.

குறிப்புரை :

`தீத்திரளின் உருவம்போல` என, உவம உருபு விரிக்க. புந்தியில் - எமது மனத்தில். ``மால்விடையோன்`` என்றது ஒரு பெயராய், ``வந்த`` என்றதற்கு முடிபாயிற்று. தூத்திரட் பளிங்கில் தோன்றிய தோற்றம் - தூய பளிங்கின் திரளினின்றும் தோன்றிய காட்சி. தோன்ற - காணப்படுமாறு. நா - நாவினால். `சிவபெருமானது திருமேனி பளிங்குபோல்வது, திருநீற்றினால்` என்பது முன்னும் கூறப் பட்டது. `நா ஓர்ந்து` என, ஓர்தல், இங்கு, `ஓதி` என்னும் பொருட்டாய் நின்றது.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
திசைகளோ டண்டங்க ளனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும்
புணர்ப்புடை அடிகள்தங் கோயில்
ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும்
அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

பொழிப்புரை :

சிறப்புப் பெற்ற வலிய நில உலகம் முழுவதும் ஏனைய திசைகளும் மற்ற அண்டங்கள் அனைத்தும் பெற்றுள்ள அவற்றின் பெருமைகள் யாவும் தனது ஆற்றலுள்ளே மிகச் சிறியன வாய் ஒடுங்கத்தக்க ஆற்றலை உடைய சிவபெருமானுடைய கோயில், இறைவன் பெருமைகளை ஒலித்துக் கொண்டே ஒருவருக்குமுன் ஒருவராய் முற்பட்டு வந்து தேவர்களும் மற்றவர்களும் நீர் அலைக் கின்ற கடலைப் போல அலைவீசுகின்ற, அபிடேகம் செய்யும் தூய்மை யான நீர் நிறைந்து காணப்படும் பெரும்பற்றப் புலியூரிலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.

குறிப்புரை :

சீர்த்த - சிறப்புப் பெற்ற. திண்புவனம், மண்ணுலகம். ``திசை`` என்றது. பூமியைச் சூழ்ந்து நிற்கின்ற இந்திரன் முதலியோரது உலகங்களை. போர்த்த - பெற்றுள்ள. தம் பெருமை - அவற்றது பெருமைகள் பலவும். `சிறுமையாய்ப் புக்கு ஒடுங்கும் புணர்ப்பு`என்க. `புணர்ப்பு` என்றது, ஆற்றலை. `எல்லா உலகங்களின் பெருமைகளும் தனது ஆற்றலுள்ளே மிகச் சிறியனவாய் ஒடுங்கத் தக்க பெரியோன்` என்றவாறு. அமரித்து - போரிட்டு; `நான் முன்னே, நான் முன்னே என்று ஒருவருக்கு முன்னே ஒருவராய் முற்பட்டு வந்து` என்பதாம். `கடல்போல இடுகின்ற தீர்த்த நீர்` என்க. திரை - அலைவீசுகின்ற, `அமரரும், பிறரும் தூய நீரால் திருச்சிற்றம்பலத்தில் இறைவனை வழிபடுகின்றனர்` என்றபடி. ``பிறர் என்றதும், வானுலகத்தவரை.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையுங் காட்டி
அன்னைதேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங்
கருள்புரி பரமர்தங் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.

பொழிப்புரை :

ஒன்றோடொன்று கூடிய சிவந்த சடையும், பிறைச் சந்திரன் தவழ்கின்ற முடியும், பெரிய தம்முடைய கருணையும் ஆகிய இவற்றைக் காட்டி, தாய் தன் குழந்தைக்குத் தேனைக் கலந்து இனிய உணவை விரும்பி அளித்தாற் போல அருள் புரியும் சிவபெரு மானுடைய கோயில், புன்னை மலர்கள் தேனைச் சொரிகின்ற சோலை களினுள்ளே பூக்களைக் கிளறிப் புள்ளிகளையும் கோடுகளையும் உடைய வண்டுகளின் கூட்டங்கள் பாடும் `தென்ன` என்ற இசையாகிய தேன் பரவிய பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம் பலமாகும்.

குறிப்புரை :

மொழுப்பு - முடி, `அன்னை அளித்தாங்கு` என இயையும், பொழில் அகம் குடைந்து - சோலைகளின் உள்ளே மலர்களில் மகரந்தத்தைக் கிண்டி.
தென்ன தேன் - `தென்ன` என்கின்ற இசையாகிய தேன். `தென்ன புலியூர்` என்று இயைத்து, `அழகினை யுடைய புலியூர்` என்றும் உரைப்ப.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும்
ஒளிவளர் திருமணிச் சுடர்கான்
றெம்பிரான் நடஞ்செய் சூழலங் கெல்லாம்
இருட்பிழம் பறஎறி கோயில்
வம்புலாங் கோயில் கோபுரம் கூடம்
வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

தேவர் உலகமே இவ்வுலகில் காணப்பட்டமை போன்று ஒளியை வெளிப்படுத்துகையினாலே எம்பெருமான் திருக்கூத்து நிகழ்த்தும் இடங்களிலெல்லாம் இருட்டின் வடிவம் நீங்குமாறு அதனை விரட்டும் கோயில், புதுமை வாய்ந்த தலைமை பொருந்திய இல்லங்கள், கோபுரங்கள், கூடங்கள், உயர்ந்த பல நிலைகளை உடைய மாடமாளிகைகள் யாவும் சிவந்த பொன்னால் இயன்று தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூரிலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.

குறிப்புரை :

உம்பர் நாடு - தேவர் உலகம். இம்பர் விளங்கியாங்கு - இவ்வுலகத்தில் வந்து விளங்கினாற்போல. எங்கும் ஒளி வளர் - எவ்விடத்திலும் ஒளி பரத்தற்கு ஏதுவான. திருமணிச் சுடர் - அழகிய இரத்தினங்களின் ஒளி. கான்று - உமிழ்ந்து. சூழல் - இடம். `சூழல் எறி` என இயையும். `சூழலாய்` என ஆக்கம் வருவிக்க.
அங்கெல்லாம் - தன் இடமெல்லாம். வம்பு உலாம் கோயில் - புதுமை பொருந்திய தலைமை வாய்ந்த இல்லங்களும், வளர் நிலை - உயர்ந்த பல நிலைகளையுடைய. செம்பொனால் அரும்பு - சிவந்த பொன்னால் இயன்று தோன்றுகின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

இருந்திரைத் தரளப் பரவைசூ ழகலத்
தெண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில்
பொழிலகங் குடைந்துவண் டுறங்கச்
செருந்திநின் றரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 

பொழிப்புரை :

பெரிய அலைகளால் மோதப்படும் முத்துக்களை உடைய கடல் சூழ்ந்த அகன்ற பூமியில் உள்ள எண்ணற்ற, அழகிய கண்ணாகிய அறிவு இல்லாத இழிநிலையிலுள்ள மக்கள், திருந்துகின்ற உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான கருவூர்த் தேவருடைய புறப்பொருள் துறையாகிய கடவுள் வாழ்த்தாகிய இனிய தமிழ் மாலையை உளங்கொண்டு ஏற்றருளும் மேம்பட்ட கருணையை உடைய சிவபெருமானுடைய கோயில், சோலைகளிலே மலர்களைக் குடைந்து வண்டுகள் உறங்கவும் செருந்தி நிலையாக அரும்புகளைத் தோற்றுவிக்கின்ற பெரும்பற்றப்புலியூர் என்ற தலத்திலுள்ள திருவளர் திருச்சிற்றம்பலமேயாகும்.

குறிப்புரை :

பரவை சூழ் அகலம் - கடல் சூழ்ந்த அகன்ற பூமி. அம் கண் - `அழகிய கண்` எனப்படும் அறிவு. `எண்ணில், புன்மாக்கள்` எனவும், `புன்மாக்கள் அறிவுறு தமிழ்மாலை` எனவும் இயைக்க. திருந்து உயிர்ப் பருவத்து அறிவு உறு - திருந்துகின்ற உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான (தமிழ் மாலை என்க). கருவூர்த் தேவரை. ``கருவூர்`` என்றது உபசாரம். துறை - புறப்பொருள் துறை; கடவுள் வாழ்த்துப் பகுதி. `தமிழ் மாலையைப் பொருந்துகின்ற அரிய கருணையை யுடைய பரமர்` என்க. பொருந்துதல் - உளங் கொண்டு ஏற்றல். செருந்தி, ஒருவகை மரம்.
சிற்பி