கருவூர்த் தேவர் - திருக்களந்தை ஆதித்தேச்சரம்


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்
தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

பொழிப்புரை :

கலைகளுடைய பொருள்களும், அக்கலைகளை இயல்பாகவே அறிந்த அறிவுமாய், கற்புக்கடம் பூண்ட நெறியானே என்னைப் பெற்று எனக்கே முலைப்பால் தந்து உதவுகின்ற தாயை விடத் தயையுடையவனாகிய முக்கண்களை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் இடம், மலைகளைக் குடைந்து அமைத்தாற் போன்ற பலமாடிகளை உடைய மாட வீடுகளிலெல்லாம் வேதியர்கள் முறையாக ஓதும் வேதத்து ஒலி நீரை அலைக்கும் கடல் ஒலிபோல ஒலிக்கும் அழகிய குளிர்ந்த நீர் வளம் உடைய களத்தூரிலுள்ள அழகு விளங்கும் திருக்கோயிலாகிய ஆதித்தேச்சரமே.

குறிப்புரை :

``அறிவு`` என்றது. அக் கலைகளின் பொருள்களை அறிந்த அறிவை, ``அறிவுமாய்`` என்ற எச்சம், ``நல்ல`` என்னும் பெய ரெச்சக் குறிப்போடு முடியும். `என்னைப் பெற்று, எனக்கே முலைகள் தந்தருளும் தாய்` என்க. கற்பினில் பெற்றி - கற்புக் கடம் பூண்ட நெறி யானே பெற்று. எடுத்து - கையில் ஏந்தி. ``எனக்கே`` என்ற ஏகாரம் தேற்றம். ``நல்ல`` என்றதில் நன்மை. அருள், போலும், அசை நிலை. மருங்கு, ஏழனுருபு, முறை ஓத்து - ஒலி ஒழுங்கினையுடைய வேதம், `கடல்போல முழங்கும்` என உவம உருபு விரிக்க. களத்தூர்`` என்பது, `களந்தை` என மரூஉ வாக்கப்பட்டது. `ஆதித்தேச்சரம்` என்பது அங்குள்ள திருக்கோயிலின் பெயர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

சந்தன களபம் துதைந்தநன் மேனித்
தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய
திருநுத லவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்
டெரிவதொத் தெழுநிலை மாடம்
அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

சந்தனச் சாந்து செறிந்த அழகிய திருவுடம்பிலே மிக வெள்ளியதாகிய திருநீற்றை முழுதுமாகப் பூசிக் கொண்டு கூத்து நிகழ்த்தும் சிவந்த தழல் போன்ற உருவத்தோடு விளங்கும் நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானுக்கு உறைவிடம், விறகுகளுக்குப் பயன் படும் மரங்கள் வளரும் மலையில் வெட்டப் பட்ட காடு தீப்பிடித்து எரி வதனைப் போல, ஏழுநிலைகளை உடைய மாடவீடுகளில் அந்தணர் கள் அக்கினியை வளர்ப்பதும், அலையும் நீர் வளம் உடையதும் ஆகிய களத்தூரிலுள்ள அழகு விளங்கும் திருக்கோயிலாகிய ஆதித் தேச்சரம் ஆகும்.

குறிப்புரை :

களபம் - குழம்பு. துதைந்த - செறிந்த, `மேனி முழு தினும் வெண்பொடி ஆடும் உரு` என்க. தவள வெண் பொடி, ஒரு பொருட் பன்மொழி; `மிகவும் வெள்ளியதாகிய பொடி` என்க. தழல் உரு - நெருப்புப்போலும் வடிவம். நெருப்பு, வண்ணம் பற்றி வந்த உவமை. உருவிற் பொலிந்து - வடிவத்தோடு விளங்கி. இந்தன விலங்கல் - விறகு மலை. `விலங்கலாய்` என ஆக்கம் வருவித்து, அதனை, ``எறி`` என்பதனோடு முடிக்க. எறி புனம் - வெட்டப்பட்ட காடு. `ஒத்து` என்றதனை `ஒப்ப` எனத் திரிக்க. ஒப்ப - ஒத்து விளங்கு மாறு. மாடத்துக்கண் என உருபு விரிக்க.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

கரியரே இடந்தான் செய்யரே யொருபால்
கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே மறைகளுந் தேட
அரியரே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

இடப் பகுதி கருநிறத்தவர். மற்றபகுதி செந்நிறத்தவர். கழுத்தில் ஒப்பற்ற எலும்புமாலையைச்சூடிக் கூத்து நிகழ்த்துபவர். சனகர் முதலிய முனிவர்களோடு கல்லால மரநிழலிலிருந்து நூலை ஆராய்பவர். ஒரே உடம்பில் ஆணும் பெண்ணுமாகிய இருவராய் இருக்கின்றவர். மூன்று கண்களையும் நான்கு தோள்களையும் உடைய இறைவர். வேதங்களும் தேடி அவரை உள்ளவாறு அறிய இயலாதவர். இவை எல்லாம் உண்மையாதல் போல அவர் உறைவிடம் களத்தூரிலுள்ள அணிதிகழ் ஆதித்தேச்சரம் என்பதும் உண்மையாகும்.

குறிப்புரை :

``ஒரு பால்`` என்றதனை. `மற்றொரு பால்``எனக் கொண்டு, `இடம் கரியரே; மற்றொருபால் செய்யரே` என உரைக்க. `வடம்` என்றதனை, எலும்பின் வடமாகக் கொள்க. இதனால் சிவ பிரான் கழுத்திலும் இவ்வடம் உண்மை பெறப்படும். முரிவர் - வளைவார்; ஆடுவார் - `விளங்குவார்` எனவும் உரைப்பர். முறை தெரிந்து - நூலை ஆராய்ந்து; இவ்வெச்சம்` ``ஆம்`` என்பதனோடு முடியும். முன்பு, ``கரியர், செய்யர்`` என்றது, நிறங்கள் மாத்திரையின் வியந்தது. இங்கு, ``ஓருடம்பினராம் இருவர்`` என்றது. ஆண்மையும், பெண்மையுமாய் நிற்றலை வியந்தது. ``ஆகில்`` என்றது, `இவையெல் லாம் உண்மையாயின்` எனப் பொருள் தந்து, `இவையெல்லாம் உண்மையாதல்போல, அவருக்கு இடமாவது ஆதித்தேச்சரமாதலும் உண்மையாம்` என உவமப் பொருள் தோற்றிநின்றது, ``நீரின்றமையா துலகெனின்`` (குறள்-20.) என்பதிற்போல. ஈற்றில் நின்றதொழிய, ஏனைய ஏகாரங்கள், தேற்றம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

பழையராந் தொண்டர்க் கெளியரே மிண்டர்க்
கரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப்
பிச்சரே நச்சரா மிளிருங்
குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்
குழகரே ஒழுகுநீர்க் கங்கை
அழகரே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

பொழிப்புரை :

நெடுங்காலமாகத் தொண்டுசெய்துவரும் அடியவர் களுக்கு எளிமையாக அருள் செய்பவர். வன்கண்மை உடையவர்கள் அறிய அரியர். தீவினையை உடைய அடியேன் செய்யும் பிழைகளை எல்லாம் பொறுத்து அவற்றால் அடியேனுக்குத் தீவினை உண்டாகாத வாறு தடுத்தல் செய்யாத பித்தர், விடமுடைய பாம்பினை ஒளிவீசும் காதணியாக அணிந்து வந்து எம் பரம்பரையை முழுமையாக ஆளும் இளையவர். கங்கைநீர் சடைக்கண் தங்கும் அழகர். இவையெல்லாம் உண்மையாதல் போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் என்பதும் உண்மையாம்.

குறிப்புரை :

பழையராந் தொண்டர் - நெடுங்காலமாகத் தொண்டு செய்துவருபவர். மிண்டர் - வன்கண்மை யுடையவர். ``பிணி`` என்றது வினையை, `எனது குற்றமான செயலைப் பொருட் படுத்தாது நீக்கு தலும், அவ்வாற்றால் எனக்கு வினை உண்டாகாமல் தடுத்தலும் செய் யாதவர்` என்றபடி. இதனால், இவ்வாசிரியர் தமது வினையால் தமக்கு உண்டாகிய துன்பத்தை உணர்ந்திருந்தமை பெறப்பட்டது, குழகர் - இளையவர். கங்கை அழகர் - கங்கையை அணிந்த அழகர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவந்
துவளுமே கலையும் துகிலுமே யொருபால்
துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய சடையும் திருவாயும் திரு வுடம்பும் பவளம் போலச் செய்யன. உடம்பில் பூசிய திருநீறும் அணிந்த புரிநூலும் பற்களும்வெண்ணிறத்தன. பாம்புகள் அவர் உடம் பில் நெளிகின்றன. ஒரு புறம் புலித்தோல் ஆடை; மறுபக்கம் நல்ல ஆடை. இடப்பகுதியாகத் துடிபோன்றஇடையை உடைய ஒப்பற்ற வளாகியபார்வதியும் இருப்பாள். இவையாவும் உண்மையாவது போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் ஆதலும் உண்மையாம் .

குறிப்புரை :

`முடியும். வாயும். மேனியும் செந்நிற முடையன; திரு மேனிமேற் பூச்சும், முப்புரிநூலும், புன்னகையும் வெண்ணிற முடை யன` என்றவாறு. தவளம் - வெண்மை. களபம் - பூசும் சாந்து; சிவ பெருமான் பூசிக்கொள்ளும் சாந்து திருநீறே. துவளும் - நெளியும். ``கலை`` எனப் பொதுப்படக் கூறியது `தோலாடை` என்றற்கு.
துகில் - நல்லாடை. ``ஒருபால்`` என்றாராயினும். `ஓரொரு பால்` என்பது கருத்தென்க. ஒருத்தி - ஒப்பற்றவள். இடமருங்கில் துடி போலும் இடையை உடைய ஒப்பற்றவளாகிய அவளும் இருப்பாள்` என உரைக்க.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

நீலமே கண்டம் பவளமே திருவாய்
நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம்
பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே யென்று
குழைவரே கண்டவர் உண்ட
தாலமே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

`கழுத்து நீலநிறத்ததாய் உள்ளது. திருவாய் பவளம் போலச் செய்யது. பற்கள் முத்துப் போல வரிசையாக விளங்குகின்றன. முகம் மிகுதியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. அத்தகைய ஒப் பற்ற சிவபெருமானுடைய அழகு, `ஐயோ! பேரழகாய் உள்ளதே` என்று கூறித் தரிசித்த அடியார்கள் மனம்உருகுவார்கள். அவர் உட் கொண்டது விடமே. இவையாவும் உண்மையாக இருத்தல் போலவே அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் என்பதும் உண்மையாம்.

குறிப்புரை :

நீலம் - நீலரத்தினம். நித்திலம் - முத்து. நிரைத்து - வரிசைப்பட வைக்கப்பட்டு.
முறுவல் - நகைப்பு, ``திருமுகம்`` என்றதன்பின், ``இவ்வாறாகலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க, ``கோலமே. அழகிதே`` என்ற ஏகாரங்களில் முன்னது அசைநிலை; பின்னது தேற்றம். அச்சோ, வியப்பிடைச் சொல். குழைவர் - மனம் உருகு வார்கள்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகுந்
திறத்தவர் புறத்திருந் தலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணங் காத்தெனக் கருளே
புரியவும் வல்லரே எல்லே
அக்கடா வாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

பல திசைகளையும் அடுத்து இறைவனை எங்கும் தேடி அலைந்து மனம் நொறுங்கி உருகும் அடியவர்கள் உன்னால் ஆட்கொள்ளப் படாமல் இருந்து உடலும் மனமும் மெலிய, கரிய எருமைக் கடாவைப்போல உணர்வற்று இருக்கும் அடியேனை அடிமையாகக் கொள்ள விழைந்து, வேறொரு பிறவியில் பிறந்து பொய்யான உலகியல் பொருள்களில் பொருந்தாதபடி காத்து அடி யேனுக்கு அருள்புரியவும் வல்லவர். இறைவர் கருணைதான் என்னே! அடியேனுக்கு மனஅமைதி உண்டாயிற்று என்றால் அதனை அருளிய வர் உறைவிடம் களத்தூரில் உள்ள அணிதிகழ் ஆதித்தேச்சரமே யாகும்.

குறிப்புரை :

திக்கு அடா நினைந்து - பல திசைகளிலும் அடுத்து நினைந்து; என்றது, (இறைவனை) `எங்கும் தேடி அலைந்து` என்றபடி. இடிந்து - துயருற்று. புறத்து இருந்து - ஆட் கொள்ளப் படாமல் இருந்து, அலச - மெலிய, மைக்கடா - கரிய நிறம் பொருந்திய கடா; எருமைக் கடா; இஃது உணர்வின்மை பற்றி வந்த உவமை. ஆள் - அடிமை. ``ஆளாக`` என ஆக்கம் வருவிக்க. பொய் - நிலையாமை, ``பொய்க்கு` என்ற நான்கனுருபை, இரண்டனுருபாகத் திரிக்க. அடாவண்ணம் - பொருந்தாதபடி. ``புரியவும்`` என்ற உம்மை, சிறப்பு. கல்லில் நார் உரித்தது போன்ற செயலாதல் பற்றி, `வல்லரே` என்றார். ``எல்லே`` என்பது `என்னே` என்பது போன்ற தோர் இடைச்சொல்; இஃது இங்கு இறைவரது கருணையை வியந்த வியப்பின்கண் வந்தது. `அக்கடா` என்பது அமைதிக் குறிப்புத் தருவ தோர் இடைச்சொல்லாய் வழங்கும், கவலையின்றி இருப்பவனை, `அக்கடா என்று இருந்தான்` என்பர். ``அக்கடாவாகில்`` என்றதற்கு, `எனக்கு அமைதி உண்டாயிற்றாயின்` எனவும், ``அவர்`` என்றதற்கு அதற்கு ஏதுவாய அவர்` எனவும் உரைக்க.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

மெய்யரே மெய்யர்க் கிடுதிரு வான
விளக்கரே எழுதுகோல் வளையாள்
மையரே வையம் பலிதிரிந் துறையும்
மயானரே உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க் கடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

உண்மையடியவர்களுக்கு மெய்ப்பொருளாக இருந்து ஏற்றப்பட்ட விளக்குப் போல அறியாமையை நீக்கி அறி வொளியைத் தருபவர். எழுதப்பட்டன போன்ற வரிகளை உடைய திரண்ட அழகான வளையல்களை அணிந்த உமாதேவியாரை ஒரு பாகமாக உடையவர். ஆதலின் அவ் விடப்பாகம் அவளுடைய கரிய நிறத்தை உடையவர். உலகம் முழுவதும் பிச்சைக்காகத் திரிந்து சுடுகாட்டில் உறைபவர். எல்லார் உள்ளத்தும் அந்தர்யாமியாகக் கலந்து இருந்தபோதிலும் பொய்யர்களுக்குத் தோன்றாதவர். வந்து அடைந்த பளிங்கு போன்ற சீவன் முக்தர்களின் சொல்லாலும் செயலாலும் பக்குவமுடையவர்களுக்கு மெய்யுணர்வை உண்டாக்கும் தலைவர். இவையாவும் உண்மையாதல் போல அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சரம் என்பதும் உண்மையாகும்.

குறிப்புரை :

மெய்யர்க்கு - மெய்ந்நெறியில் நிற்பவர்கட்கு, `இடு விளக்கர்`என இயையும்; `ஏற்றப்பட்ட விளக்குப் போல்பவர்` என்பது பொருள்; அஃதாவது, `இருளை (அறியாமையை) நீக்கி, ஒளியை (அறிவை) த் தருபவர்` என்பதாம். திருவான - அழகான. எழுது கோல் வளையாள் - எழுதப்பட்டது போலும் வரிகளையுடைய திரண்ட வளைகளை யணிந்த உமாதேவி. மையர் - அவளது கரிய நிறத்தை ஒரு பால் உடையவர். ``கோல் வளையை ஆண்மையர் (ஆளுந் தன்மையை உடையவர்) என்றும், `மையலர் என்றது இடைக்குறைந்து நின்றது` என்றும் உரைப்ப. `பொய்யர்க்குப் பொய்யரே` எனக் கூட்டுக; `எல்லார் உளத்திலும் இருந்தும், பொய்யருக்குத் தோன்றாதவர்` என்றபடி. `பளிங்கின் பொருள்` என்ற இன் அல்வழிக்கண் வந்த சாரியை ``பளிங்குபோலும் பொருள்`` என்ற வாறு. பளிங்கு போலும் பொருள் - மாசுதீர்ந்த உயிர்கள் (முத்தான்மாக்கள்) அவற்றின் வழி இருள் கிழித்தெழுதலாவது, சீவன் முத்தர்களது சொல்லாலும், செயலாலும் பக்குவர்களுக்கு மெய் யுணர்வை உண்டாக்குதல். ஐயர் - தலைவர்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

குமுதமே திருவாய் குவளையே களமும்
குழையதே யிருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
கனகமே திருவடி நிலை நீர்
அமலமே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 

பொழிப்புரை :

குமுத மலர் போன்ற செய்யவாயினர். கருங் குவளைபோலக் கரிய கழுத்தினர். இருகாதுகளில் வலக்காதில் குழையை அணிந்தவர். இடப்பகுதியில் களங்கமற்ற மேகலையை உடையவர். சடையின் மேல் புள்ளிகளையும் கோடுகளையும் உடைய பாம்பு நெளிகின்றது. அவருடைய முகமும் கண்ணும் தாமரை போன்று உள்ளன. அவருடைய பாதுகை பொன்மயமானது. அவருடைய நீர்மை களங்கமற்றது. அவர் உறைவிடம் களத்தூர் ஆதித்தேச்சர மாகும்.

குறிப்புரை :

குமுதம், இங்குச் செவ்வாம்பல் மலரைக் குறித்தது. குவளை - நீலோற்பல மலர். களம் - கழுத்து, `குழையது` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. வேண்டும் சொற்கள் வருவித்து, `இருசெவிக்கண்ணும்` என ஈற்றில் தொக்கு நின்ற உருபும், உம்மையும் விரித்து, `ஒரு குழையே இருசெவிக் கண்ணும் உள்ளது` எனப் பொருள் உரைத்து, `இரு செவிகளுள் ஒன்றிலே குழையுள்ளது` என்பது அதனாற் போந்த பொருளாக உரைக்க. குழை உள்ளது வலச் செவியில்; இடச் செவியில் தோடு உளது. விமலம் - தூய்மை. பொறி - புள்ளி. வரி - கீற்று. திருவடிநிலை - பாதுகை; பின்னரும் பாதுகை கூறுவர். நீர் - நீர்மை.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர்
இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.

பொழிப்புரை :

நீரினது அழகிய ஊறுதலையுடைய ஆதித்தேச்சரம் என்ற கோயிலே, பற்றிய, திருமால் பரவும் பாதுகைகளை உடைய சிவபெருமான் மீது பல சிறப்புக்களும் பொருந்திய கலைகளில் பயின்ற கருவூர்த்தேவர் வேதங்களை ஓதிய தம் பவளம் போன்ற வாயிலிருந்து வெளிப்படுத்திய அமுதம் போன்ற சுவையை உடைய தமிழ் மாலையாகிய அழகு பொருந்திய இப்பத்துப் பாடல்களையும் வல்லவர் அறியாமையைக் கிழித்து அப்புறப்படுத்திய உள்ளத்தின ராவர்.

குறிப்புரை :

நீர் அணங்கு அசும்பு - நீரினது அழகிய ஊறுதலை யுடைய. ``ஆதித்தேச்சரத்துத் திருவடி நிலை`` என இயையும் `திரு வடிக்கும் ஆகாது திருவடிநிலைக்கே ஆகும்` என்பார், ``திருவடி நிலைமேல் மொழிந்த` என்றார். ஆரணம் மொழிந்தவாய் - வேதம் ஓதியவாய்; இவர் தம்மை வேதம் ஓதியவராகப் பின்னரும் குறிக்கின்றார். அமுதம் ஊறிய - அமுதம் சுரந்தது போல இனிமை வாய்ந்த. `தமிழ் மாலைக்கண் உள்ள இரு நான்கு இரண்டு` என்க . ஏர் அணங்கு - எழுச்சி பொருந்திய அழகினை யுடைய. இருநான்கு இரண்டு - பத்து; பத்துப் பாடல்கள். இருள் - அறியாமை. சிந்தையர் - உள்ளத்தை யுடையவராவர்.
சிற்பி