கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச்
சடைவிரித் தலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித்
திருமுகம் மலர்ந்துசொட் டட்டக்
கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே. 

பொழிப்புரை :

தளிர்போன்ற ஒளியைஉடைய அழகிய மலர் போலும் திருவடியில் சிலம்பு ஒலிக்கவும் விரித்த சடையிலே அலை கள் மோதும் கங்கையின் தெளிவான ஒளியை உடைய அழகிய நீர்த் துளிகள் முத்துப்போலத் தோன்றுமாறு அழகிய முகத்தில் பொருந்திச் சொட்டுச் சொட்டாக விழவும், மேம்பட்ட ஒளியை வீசும் நீலமணி போன்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகளிலும் வயல்களிலும் ஆர வாரம் மிகவும் கீழ்க்கோட்டுரில் ஒளி மிகுகின்ற மணிஅம்பலத்தின் கண் நின்று கூத்து நிகழ்த்தும் வலிமையை உடைய பெருமான் என் மனத்தில் கலந்து ஒன்றுபட்டு விட்டான். இஃது என்ன வியப்போ!

குறிப்புரை :

தளிர் ஒளி - தளிர்போன்ற ஒளியையுடைய. மணிப்பூம் பதம் - அழகிய மலர்போலும் திருவடியில். அலம்ப - ஒலிக்க. தெளிர் ஒளி மணி நீர்த்திவலை - தெளிவான ஒளியையுடைய அழகிய நீர்த் துளிகள். முத்து அரும்பி - முத்துப்போலத் தோன்ற. அரும்ப என்பது, ``அரும்பி`` எனத் திரிந்தது. சொட்டு அட்ட - துளிகளைச் சிந்த. துளி, வியர்வைத் துளி. `சொட்டட்ட ஆடும்` என இயையும். பழனம் - வயல். `பொழிலும் பழனமும் கம்பலை செய்யும் கீழ்க்கோட்டூர்` என்க. கெழுவு - பொருந்திய. கம்பலை - ஆரவாரம். `கம்பலம்` என்பது பாடம் அன்று. பொழிலிலும், பழனத்திலும் உள்ளவை செய்கின்ற ஆர வாரத்தை அவையே செய்வனவாகக் கூறினார். மணி அம்பலம் - மாணிக்கச் சபை. மைந்தன் - வலிமை (தளராமை) உடையவன். ஈற்றில், `இஃதென்ன வியப்பு` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்

மைந்தன்என் மனங்கலந் தானே.

பொழிப்புரை :

ஒரு கலையாகிய வெள்ளைப் பிறையையும், படர்ந்த சடைமுடியையும், உச்சிக்கொண்டையையும், சூலத்தையும், நீலகண்டத்தையும், காதணியையும், பவளம் போன்ற வாயின் உதடுகளையும், நெற்றிக் கண்ணின்மேல் இடப்பட்ட திலகத்தையும் யான் காணச் செய்து,கெண்டையும் கயலும் தாவிக்குதிக்கின்ற நீர் வளம் பொருந்திய வயல்களின் மள்ளர்களால் ஒலிக்கப்படும் ஆரவார முடைய கீழ்க்கோட்டூரில் வண்டுகள் ஒலிக்கும் மணியம்பலத்துள் நின்று ஆடும் வலிமையை உடைய பெருமான் என் உள்ளத்தில் கலந்து ஒன்றுபட்டுவிட்டான்.

குறிப்புரை :

மொழுப்பு - முடி. `சூழியம்` என்பது குறுகி, ``சுழியம்`` என வந்தது. சூழியம் - உச்சிக் கொண்டை. இஃது, இங்குச் சடை முடியைச் சுற்றியுள்ள பாம்பைக் குறித்தது. `பவளஇதழ்` என இயையும். `கண்ணையுடைய நெற்றியிலே உள்ள திலகம்` என்க. `காட்டிக் கலந்தான்` என முடியும். `கெண்டை, கயல்` - மீன் வகைகள். உகளும் - துள்ளுகின்ற.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
திலகமும் உடையவன் சடைமேற்
புரிதரு மலரின் தாதுநின் றூதப்
போய்வருந் தும்பிகாள் இங்கே
கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்டென்
மனத்தையும் கொண்டுபோ துமினே. 

பொழிப்புரை :

அழகிய நெற்றியில் உள்ள கண்ணும் பவளம் போன்ற வாயின் உதடுகளும் திலகமும் உடைய சிவபெருமானுடைய சடைமீது உள்ள விருப்பம் தரும் மலர்களின் மகரந்தத்தை அவற்றில் படிந்து நுகர்தற்குப் பல காலும் சென்றுமீள்கின்ற தும்பி என்றஉயர் குல வண்டுகளே! மலைகளின் மீது தவழ்கின்ற மேகங்களின் கீழ் விளங்கு கின்ற உயர்ந்த பேரில்லங்களில் ஆரவாரம் மிகுகின்ற கீழ்க்கோட்டூரில் காணப்படுகின்ற ஆற்றலை உடைய மணியம்பலத்தில் ஆடுபவ னாகிய சிவபெருமானைத் தரிசித்து அடியேனுடைய மனத்தை அவ னிடமிருந்து மீட்டுவாருங்கள்.

குறிப்புரை :

நுதல் விழி - நெற்றியில் உள்ள கண். `உடையவனது சடை` என்க. புரி - புரிவு; விருப்பம்; முதனிலைத் தொழிற்பெயர். தாது நின்று ஊத - மகரந்தத்தில் பொருந்தி ஊதுதற்பொருட்டு. போய் வரும் - பலகாலும் சென்று மீள்கின்ற. ``இங்கே`` என்றதனை, ``கொண்டு`` என்பதன் பின்னர்க் கூட்டுக. இவ்வாறன்றி, நின்றாங்கு நிறுத்தி, `வருங்கால்` என ஒருசொல் வருவித்துரைப்பினுமாம். ``கீழ்த் தவழ்`` என்றதில் தவழ்தல் - விளங்குதல். ``கிரி தவழ் முகிலின்கீழ்`` என்றது, `மலை களின் சிகரத்தில் தவழும் இயல்புடைய மேகங்களின் கீழ் விளங்கு கின்ற மாடங்கள்` எனக் கூறுமுகத்தான், மாடங்கள் மலை போல உயர்ந்திருத்தலைக் கூறியவாறு. மாடங்களில் எழுகின்ற ஆர வாரங்களை அவைகளே செய்வனவாகக் குறித்தார். `வருகின்ற அம்பலவன்` என இயைத்து, `காணப்படுகின்ற அம்பலவன்` என உரைக்க. ``கொண்டு`` என்றது, `இரந்து பெற்று` என்றபடி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்
செவிஅவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே என்னும்என் மனனே.

பொழிப்புரை :

தெளிவாகிய திருநீற்றை அணிந்த சிவபெருமான் அணியும் நீற்றினையே என் உடல் விரும்புகிறது. என் செவிகள் அவனை அறியும் அறிவைத்தரும் நூல்களையே கேட்கின்றன. என் வாய் அவனுடைய திருநாமத்தை மெதுவாக ஒலிக்கிறது. என்கண்கள் அவனுடைய விமானத்தை நோக்கியதால் என்னை வெப்பமாக மூச்சு விடச்செய்கின்றன. கிளிகள் பூஞ்சோலையிலே இனிமையாகப் பேசி மாம்பொழிலைநோக்கி ஆரவாரம் செய்யும் கீழ்க் கோட்டூரில் உறையும் வள்ளலே! மணியம்பலத்தில் நின்று கூத்துநிகழ்த்தும் வலிமையுடையவனே! என்று என்மனம் அவனை அழைக்கும்.

குறிப்புரை :

தெள்ளு - தெளிவாகிய; வெண்மையான. `நீற்றவன்` என வருதலேயன்றி, `நீறவன்` என வருதலும் இலக்கணமேயாம், இரண்டாவதன் தொகையோடொப்பதாதலின். ``கானக நாடனை நீயோ பெரும`` (புறம் - 5.) ``நாடன் என்கோ ஊரன் என்கோ`` (புறம்-49.) என்றாற்போல்வன பலவற்றுள்ளும் `நாடனை நாடன்` முதலாக வருவன பலவுங் காண்க. `நீறவன்` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. ``என்`` என்பது, ``செவி`` முதலிய பலவற்றோடும் சென்று இயையும். அவன் அறிவு நூல் - அவனை அறியும் அறிவைத் தரும் நூல். மெள்ள விளம்புதல் - செபித்தல். விமானம் - மூலத்தான மாளிகை. வெவ்வுயிர்க்கும் - வெப்பமாக மூச்செறியும். சோர் வுறுதலை இனிது விளக்க, மூக்கின் தொழிலாகிய உயிர்த்தலைக் கண்களுக்கு ஏற்றிக் கூறினார். `பொழிற்கண்` என்பது, ``பொழிற்கு`` என உருபு மயக்கமாய் வந்தது. என்னும் - என்று நினைக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

தோழி யாம்செய்த தொழில்என் எம்பெருமான்
துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
நெக்குநைந் துளங்கரைந் துருக்கும்
கேழலும் புள்ளு மாகிநின் றிருவர்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
மயங்கவும் மாலொழி யோமே. 

பொழிப்புரை :

தோழி! இணையாகிய மலர்களைப் போன்ற, எம் பெருமானுடைய திருவடிகளைக் காண்பதற்காகப் பல ஊழிக் காலங்க ளாக நினைத்து மனம் இளகி நெகிழ்ந்து நைந்து உள்ளம் கரைந்து உரு கும். பன்றியும் அன்னப்பறவையுமாகி நின்று திருமாலும் பிரமனும் எம்பெருமானை ஆரவாரத்தோடு துதித்தலைச்செய்யும் கீழ்க்கோட் டூரில், நாம் மணியம்பலத்திலுள்ள அப்பெருமானைக் காண, மயக்கம் கொண்டு அக்கலக்கம் தெளியாது இருக்கின்றோம். அவன்பால் காதல் மயக்கம் உறுவதனைத் தவிர நாம் செய்த பணிதான் யாது?

குறிப்புரை :

`தோழி. மணியம்பலவனைக் காண்பான் இருவர் கேழலும் புள்ளுமாகி நின்று மயங்கவும், யாம் மால் ஒழியோம்; எம் உள்ளம் ஊழிதோறூழி அவனை உணர்ந்தமையால் அஃது இப் பிறப்பில் கசிந்து நெக்கு நைந்து கரைந்து உருகாநின்றது; ஆயினும். யாம் அவனது துணைமலர்ச் சேவடி காண்பான் செய்த தொழில் என்` எனக் கூட்டி உரைக்க. ``தொழில்`` என்றது, பணியை. ``என்`` என்றது, யாதும் இன்மையைக் குறித்து நின்றது. மனம் உருகினும் பணியின்றி அவனைக் காண்டல் கூடாமையின், `எம் பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் யாம் செய்த தொழில் என்` என்றாள். `உணர்தலால்` என்பது, ``உணர்ந்து`` என திரிந்து நின்றது. சிவபிரானைப் பல பிறப்புக்களில் நினைந்ததன் பயனே ஒரு பிறப்பில் அவன்பால் விளையும் அன்பாகும் ஆதலின், `உளம் ஊழிதோறூழி உணர்ந்து கசிந்து உருகும்` என்றாள். பின்னர் வந்த ``உள்ளம்``, சுட்டுப் பெயரளவாய் நின்றது. இங்குக் கம்பலை செய்வது கீழ்க்கோட்டூரே என்க. ``வாழிய`` என்றது அசைநிலை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

என்செய்கோம் தோழி தோழிநீ துணையா
இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
அலமரு மாறுகண் டயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவவோ என்று
மயங்குவன் மாலையம் பொழுதே. 

பொழிப்புரை :

தோழீ! நாம் யாது செய்வோம்? உன்னையே துணையாகக் கொள்வதால் இரவுப் பொழுது கழிந்து போகிறது. பகற் பொழுது வருமாயின் எம்பெருமான் வந்து அஞ்சாதே என்று கூறுகின் றான் அல்லன். கடலும் அதன் அலைகளும் சுழலுமாற்றைக் கண்டு சோர்வு அடைகின்றேன். முள் முருங்கைப் பூவினைப் போன்ற அழகிய சிவந்த வாயினை உடைய மகளிர், தெருவில் ஆரவாரம் செய்யும் `கீழ்க்கோட்டூரில், மேக மண்டலம் வரை உயர்ந்த மணியம்பலப் பெருமானே` என்று கூவி, யான், மாலைப் பொழுது கண்டால் மயக்கம் உறுவேன்.

குறிப்புரை :

``தோழி`` இரண்டனுள் முன்னது விளி: பின்னது, `தோழியாகிய நீ` என இருபெயரொட்டின்கண் வந்தது. `தோழி, இரவு நீ துணையாய் நிற்கப் போம்; அதனால், மாலையம் பொழுதில் ஆழி யும், திரையும் அலமருமாறு கண்டு அயர்வன்; மணியம்பலவவோ என்று மயங்குவன்; இதற்கு என் செய்கோம்` எனக் கூட்டி யுரைக்க.
முன்னர்த் தனது நிலையைக் கூறிப் பின், இருவரையும் சுட்டி, `என் செய்கோம்` என்றாளாதலின், பால்வழுவின்மை அறிக. `இன்று இரவு தனிமையிற் கழிந்ததாயினும், நாளைக்காலை வந்து `அஞ்சேல்` என்று அளிப்பான்` என்று ஒவ்வோர் இரவிலும் கருதுகின்றவள், ஒரு நாளும் அவன் அங்ஙனம் வரக்காணாமையால், ``பகல் வருமாகில் அஞ்சலோ என்னான்`` என்றாள். அஞ்சலோ என்னான் என்றது, `அஞ்சல் என்று சொல்வதோ செய்யான்` எனப் பொருள்தந்து நின்றது. அன்றி, ஓகாரம் அசையெனினும் ஆம். `அஞ்சலோம்பு` என்பதே பாடம் போலும்! ஆழி - கடல். திரை - அலை. அலமருதல் - அலைதல். அலமருவது திரையன்றி ஆழியன்றாயினும், அஃது அதனைத் தாங்கி உடன் நிற்றல்பற்றி அதனையும் அலமருவதாகக் கூறினாள். தனக்குத் துயர் செய்பவை தாமும் துயர்ப்படுவதைக் கண்டு மகிழ்கின்றா ளாதலின், `அலமருமாறு கண்டு` என்றாள், இதனால், கண் துயிலாமை விளங்கிற்று. அவை துயர்ப்படினும் தன் துயர் நீங்காமை பற்றி, `அயர்வன்` என்றாள். கிஞ்சுகம் - முள்முருக்கம் பூ. மஞ்சு அணி அம்பலம் - மேகங்களை மேலே கொண்ட மேற்கட்டியை யுடைய அம்பலம். ஓகாரம், முறையீடு குறித்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே. 

பொழிப்புரை :

வில்வம் வன்னி முதலிய தழைகள் பொருந்திய முடியும், வெள்ளிய திருநீற்றின் ஒளியும், சங்கு வளைகள், உடுக்கை இவற்றின் ஒலியும், காதணியை அணிந்த செவியும், குளிர்ந்த சடையின் திரட்சியும், எருதும், திரள்திரளாகத் தோன்றுகின்ற ஒளி வீசும் பொற்பொடிகளைத் தோற்றுவிக்கின்ற நீர் வளம் மிக்க வயல் களிலே ஆரவாரம் மிக்கிருக்கும் கீழ்க்கோட்டூரில் உள்ள, மேகங்கள் தன் மீது தவழுமாறு உயர்ந்த உயரத்தை உடைய மணிஅம்பலத்தில் நின்று ஆடும் வலிமைமிக்க சிவபெருமானுடைய செல்வங்களாகக் காணப்படுகின்றன.

குறிப்புரை :

தழை - வில்வம், வன்னி முதலியவற்றின் இலை. மொழுப்பு - முடி. சங்கம் - சங்க வளையல்; இஃது அம்மைபாகத்தில் உள்ளது. ``சகடை`` என்றது, உடுக்கையை. தெண்டு - திரட்சி. குண்டை - எருது. `தழைதவழ் மொழுப்பு முதலாகக் குண்டையீறாக உள்ளனவே அவரது வாழ்வு போன்றன` என்க. `குழாங்கொடு தோன் றும் கனகம்` என்க. `மிக்க பொன்` என்றவாறு.
கிழை - ஒளி. `கனகத்தைச் சொரியும் நீரையுடைய பழனங்கள் கம்பலை செய்கின்ற கீழ்க் கோட்டூர்` என்க. மழை - மேகம். ``போன்றன`` என்றதில் `போறல்` ஆக்கப் பொருட்டாய் நின்றது. `அவரை என்மனம் காதலிக்கின்றது வியப்பாகின்றது` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
தமருகம் திருவடி திருநீ
றின்னகை மழலை கங்கைகொங் கிதழி
இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.

பொழிப்புரை :

தன்னகத்துள்ள இனிய ஒலியை எழுப்பும் சிலம்பு, சதங்கை, உடுக்கை, பாதுகை, திருநீறு, இனிய சிரிப்பினையும் மழலை மொழிகளையும் உடைய கங்கை, தேன்பொருந்திய கொன்றைமலர், இளம்பிறை, தளிர்களைத்தின்று வளரும் இளையமான், கின்னரம் என்ற நரம்புக்கருவி, மத்தளம், மழலை போன்ற இனிய ஒலிஎழுப்பும் யாழ், வீணை இவற்றால் ஆரவாரம் மிகுகின்ற கீழ்க்கோட்டூர் மன்னவ னாய் மணிஅம்பலத்துள் நின்று ஆடுகின்ற பெருமான் என் மனத்துள் புகுந்து விட்டான்.

குறிப்புரை :

`தன்னகத்துள்ள சிலம்பு முதலாக மான் ஈறாயின வற்றை என் மனத்து வைத்தான்` என்க. அகம், ஏழன் உருபு. மழலைச் சிலம்பு- மெல்லிய ஓசையையுடைய சிலம்பு. இன்னகையும் இறைவனுடையதே; இதனைக் கங்கைக்கு ஆக்குவாரும் உளர். மழலைக் கங்கை-இனிய ஓசையையுடைய கங்கை. கொங்கு இதழி - தேனையுடைய கொன்றை மாலை. `கோங்கிதழி` என்பது பாடம் அன்று. வளர் இளமான் - வளர்தற்குரிய இளைய மான்; `மான் கன்று` என்றபடி. கின்னரம், ஓர் நரம்புக் கருவி. முழவம் - மத்தளம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

யாதுநீ நினைவ தெவரையா முடைய
தெவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனம்புகுந் தானே. 

பொழிப்புரை :

தாழைப்பூவின் நிழலை மீன்கொத்திப்பறவை என்று தவறாக மனத்துக் கொண்டு கெண்டைமீன்கள் அஞ்சுகின்ற கீழ்க் கோட்டூரிலே மேம்பட்ட தவத்தை உடையவனாய் மணியம்பலத்துள் நின்று ஆடும் வலியவன், எல்லா உயர்திணைப் பொருள்களும் எல்லா அஃறிணைப் பொருள்களும் தானேயாகிப் பாதுகையுடனும் இனிய ஓசையை எழுப்பும் சிலம்பினொடும் புகுந்து என்னுடைய குளிர்ந்த மலர்போன்ற கண்களில் நின்று நீங்கானாய் என் மனத்துள் புகுந்து விட்டான். அவனையன்றிவேறு எவரை யாம் உறவாக உடையோம்? வேற்று வரைவு பற்றி நீ யாது கருதுகின்றனை?

குறிப்புரை :

`யாது நீ நினைவது எவரை யாம் உடையது` என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க. ``நீ`` என்றது, தோழியை, `நினைவது, உடை யது` என்பன தொழிற்பெயரும் பண்புப் பெயருமாய் நின்றன. உடை யது- தலைவனாகப் பெற்றுடையது. நொதுமலர் வரைவு பற்றித் தோழி கூறக்கேட்ட தலைவி, இவ்வாறு கூறினாள் என்க. உயர்திணையைக் குறிக்க. ``எவர்களை`` என்றும், அஃறிணையைக் குறிக்க, ``யாவையும்`` என்றும் கூறினாள். `அகலான்` என்றது முற்றெச்சமாய், `புகுந்தான்` என்பதனோடு முடியும். கேதகை - தாழை; அதன் பூவைக் குறித்தது ஆகு பெயர். குருகு - கொக்கு; `குருகென` என்பதனை` ``வெருவு`` என்பதன் முன்னர்க் கூட்டுக. மாதவன் - பெரிய தவக்கோலத்தை யுடையவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்
செய்வதென் தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங்
கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனே அறியும்என் மனமே. 

பொழிப்புரை :

மாலைவானம் போன்ற செந்நிற வடிவமும், மாலையில் தோன்றும் பிறை சேர்ந்த அழகிய சடையும், வெண்ணீறும் மனத்தால் நினைப்போம் என்றால் மனமும் என்வசத்தில் இல்லை. யான் யாது செய்வேன்? தெளிந்த நீரில் அசைவின்கண், தாமரை மலரைக் கிழிக்கும் கெண்டை மீன்கள் தாமரையின் தொடர்பால் மணம் வீசிக் கொண்டு தாவித்திரியும் குளிர்ந்த மருதநிலத்து வயல்களை உடைய கீழ்க்கோட்டூரில் அடியேன் அவனைத் தரிசிக்க வந்த நாளில் வேறு பட்ட என் மனநிலையை வலியவனாகிய அப்பெருமானே அறிவான்.

குறிப்புரை :

அந்தியில் பிறை - மாலைக் காலத்தில் தோன்றுகின்ற சந்திரன். சிந்தை என்னை விட்டு அவனிடத்தே அடங்குதலால், சிந்தை காணப்படாதாயிற்று. `ஏனைய கருவிகளையேயன்றி, எனப்பொருள் தருதலின், ``சிந்தையும்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம். அலங்கல் - அசைவின்கண். கெந்தியா (கந்தியா) - மணம் வீசி. புண்டரிகம் - தாமரை மலர். ``கெந்தியா உகளும் கெண்டை புண்டரிகம் கிழிக்கும்`` என்றாராயினும், `புண்டரிகம் கிழிக்கும் கெண்டை கெந்தியா உகளும்` என்பது கருத்தென்க. கெந்தித்தல். புண்டரிகத்தைக் கிழித்த லால் உண்டாயிற்று. வந்தநாள் - சென்று நான் அவனைக் கண்ட நாளில் வேறுபட்ட என் மனநிலையை அவன் ஒருவனே அறிவான் என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே. 

பொழிப்புரை :

கித்தி என்னும் விளையாட்டை நிகழ்த்துகின்ற பெண்கள் தெருவில் ஆரவாரம் செய்யும் கீழ்க்கோட்டூரில் ஊமத்த மலரைச் சூடியவனாய், மணியம்பலத்துள் நின்று ஆடும் வலிய வனாகிய சிவபெருமானைப் பற்றி, வேதங்களை ஓதும் இறைப் பித்துடைய அடியேன் பாடிய மணிகள் போன்ற நெடிய பாமாலை பெரியோர்களுக்கு அகன்ற பெரிய சிவலோகத்தில் முத்தியை வழங்கும் என்று உலகத்தவர் இதனை உயர்த்திக் கூறுவாராயின் திரு மகள் அவர்களை முகம் மலர்ந்து எதிர்கொள்வாள்.

குறிப்புரை :

கித்தி - விளையாட்டு. `அரிவையர் கம்பலை செய்` என இயையும். மத்தன் - உன்மத்தன்; `ஊமத்தை மலரைச் சூடியவன்` எனலுமாம். பெரியவர்க்கு - பக்குவம் மிக்கோர்க்கு. ``அகல் இரு விசும்பு`` என்றது சிவலோகத்தை. `விசும்பின் கண்ணதாகிய முத்தி` என்க. முத்தி தருவதனை, ``முத்தி`` என்றார். `திருவும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. திரு - திருமகள். அவள், துறக்கம் முதலிய செல்வத்தைத் தருபவள் எனவே, `இம்மை மறுமைப் பயன்களையும் பெறுவர்` என்றதாம்.
சிற்பி