கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

முன்னொரு காலத்தில் திருமால் கூட அறிய முடியாத ஒருவனாய் சத்தி, சிவம் ஆகிய இருபொருள்களாய் இருக்கின் றவனே! முக்கண்ணனே! நான்கு பெரிய நீண்ட தோள்களை உடைய கரும்பே! தேனே! அமுதமே! கங்கைகொண்ட சோளேச்சரம் என்ற திருக்கோயிலில் உகந்தருளியிருப்பவனே! அன்ன வடிவு எடுத்துப் பிரமன் வானத்தில் பறந்து உன் உச்சியைத் தேடுமாறு அவ்வளவு பெரியவனாகிய நீ சிறியனாகிய அடியேனை அடிமை கொள்ள விரும்பி அடியேனுடைய உள்ளத்தில் புகுந்த எளிவந்த தன்மையை அடியேன் ஒருநாளும் மறக்கமாட்டேன்.

குறிப்புரை :

தேட - தேடுமாறு. அங்ஙனே - அவ்விடத்தே; என்றது, `மாலும் அயனும் பொருதவிடத்தே` என்றதாம். ``பெரிய`` என்றது, `பெரியோனாய் நின்ற` என ஆக்கவினைக் குறிப்புப் பெயர். ஆள்விரும்பி - ஆளாக விரும்பி. ``மறக்கேன்`` என்றதில் எதிர்காலங் காட்டும் ககர வொற்று வந்ததன்று; குகரச் சாரியை வந்தது. எனவே, `மறவேன்` என்பது பொருளாயிற்று. இவ்வாறு வருதல் பிற்கால வழக்கு. இருவன் - இரு பொருளாய் இருப்பவன். இரு பொருள் - சத்தி, சிவம்; பெண்மை, ஆண்மை. கன்னல் - கரும்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

உண்ணெகிழ்ந் துடலம் நெக்குமுக் கண்ணா
ஓலம்என் றோலமிட் டொருநாள்
மண்ணின்நின் றலறேன் வழிமொழி மாலை
மழலையஞ் சிலம்படி முடிமேற்
பண்ணிநின் றுருகேன் பணிசெயேன் எனினும்
பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணின்நின் றகலான் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

பொழிப்புரை :

மனம் நெகிழ்ந்து உடல் உருகி `முக்கண்ணனே! அடி யேன் உன் அபயம்` என்று உரத்துக் கூறிக்கொண்டு ஒருநாள் கூடத் தரையில் நின்றவாறு உன்னை அழைக்கமாட்டேன். வணக்கத்தைக் குறிப்பிடுகின்ற தமிழ்ப்பாடற்கோவையை, இனிய ஓசையை உண்டாக்குகின்ற சிலம்பினை அணிந்த உன் திருவடிகளை அடியேன் முடிமீது சூடிக்கொண்டு நின்று பாடி உருகமாட்டேன். உனக்கு ஒரு திறத்தாலும் திருத்தொண்டு செய்யாதேன் எனினும், நல்வினை செய்யாத பாவியாகிய அடியேன் உயிரினுள் புகுந்து, கங்கைகொண்ட சோளேச்சரத்தானே! நீ அடியேன் கண்களின் நின்று நீங்கா திருத்தலுக்குக் காரணம் உன் கருணையே அன்றிப் பிறிதில்லை.

குறிப்புரை :

நெக்கு - குழைந்து. `ஒருநாளும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி மொழி மாலை - வணக்கம் கூறுகின்ற தமிழ்ப் பாடற்கோவை. `மாலை பண்ணி நின்று` என இயையும். மழலையஞ் சிலம்பு - இனிய ஓசையை உண்டாக்குகின்ற சிலம்பு. `முடிமேலாக` என ஆக்கம் வருவிக்க. `ஆவி, உயிருணர்வு` என்பது மேலும் விளக்கப்பட்டது. என்னோ - காரணம் யாதோ; `கருணையே காரணம்; பிறிதில்லை` என்பது கருத்து. கொல், அசைநிலை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத் துள்ளம்அள் ளூறும்
தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

அன்போடு இறைவனாகிய தன்னை திருவைந் தெழுத்தின் சொற்களாகிய நிலையில் வைத்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் போன்ற பொன் குவியலும், அழகிய பொன்மயமான பேரில்லங்களும், பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரின் பருத்த தனங்களும், கற்பகச் சோலையும் ஆகிய எல்லா நுகர் பொருள் இன்பங்களும் தானே வழங்கும் கங்கைகொண்ட சோளேச்சரத் தானைத் தவிர மேம்பட்ட தெய்வம் வேறு உளதோ?

குறிப்புரை :

``அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே`` என்பதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. ``அஞ்செழுத்தின்`` என்ற இன், தவிர் வழி வந்த சாரியை. சொல்பதம் - சொல்லாகிய நிலை. அள் ஊறும் - மிக உருகுகின்ற; என்றதனை, `உருகி நினைக்கின்ற` என்க. `எண் திசைக் கண்ணும் ஆம்` என இயைக்க. ``கனகம்`` என்பது, ``பற்பதக் குவை`` என்பதில் தொக்கு நின்ற `போலும்` என்பதனோடு முடியும். `பர்வதம்` என்னும் ஆரியச் சொல் ``பற்பதம்`` என வந்தது. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். ``பொழிலும்`` என்பதன்பின் `ஆகிய` என்பது எஞ்சி நின்றது. `ஆம்` என்றது, `ஆவான்` என்ற முற்று. `ஆவான்` என்றது, `அவை அனைத்தினாலும் வரும் இன்பத்தைத் தான் ஒருவனே தருவான்` என்றதாம். `அதனால், அற்புதத் தெய்வம் இதனின் மற்று உண்டோ` என்க. இதனின் - இதுபோல். ``உண்டே`` என்ற வினா, இல்லாமையை விளக்கி நின்றது. கங்கைகொண்ட சோளேச்சரத் தானைத் தெய்வங்களோடு பொருவிக் கூறலின், ``இத னின்`` என்றார். இதற்குப் பிறவாறு உரைத்தல் பொருந்தாமை அறிக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

ஐயபொட் டிட்ட அழகுவா ணுதலும்,
அழகிய விழியும் வெண் ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

கங்கைகொண்ட சோளேச்சரத்தானே! அழகிய பொட்டு இடப்பட்ட வனப்புடைய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும், திருநீறும், சிவவேடத்திற்குச் சிறப்பான அடை யாளமாகிய சடைகளும், சடையின்மேல் கங்கை அலைகளும், சதங்கையும், சிலம்பும் ஆகிய இவற்றைச் சூழ்தலைக்கொண்ட எட்டுத் திக்குகளிலும் உருவெளியாகக் கண்ட உன் அடியார்கள் முகம்மலர இரு கண்களிலும் கண்ணீர் அரும்பக் கைகள் குவிய இருப்பதன் காரணம் யாதோ? முன்னைத் தவத்தின் பயனாகக்கிட்டிய அன்பே காரணம்.

குறிப்புரை :

ஐய பொட்டு - அழகிய திலகம். `அளக வாள்நுதல்` என்பது பாடம் அன்று. சைவம் - சிவ வேடம். சிவபெருமானுக்கு உரிய சிறப்பு அடையாளங்களுள் சடை சிறந்ததொன்றாதலின், ``சைவம் விட்டிட்ட சடைகள்` என்றார். நடனம் செய்பவர் காலில் சதங்கை அணிதல் இயல்பு என்க. மொய் கொள் - சூழ்தலைக் கொண்ட. ``எண் திக்கின் கண்ணும்`` என உருபு விரிக்க. `மலர்ந்து` `மொட்டிக்கும்` எனச் சினை வினை முதல்மேல் நின்றன. இவ்வா றன்றி, ``தொண்டர்`` என்றதில் ஆறாவது விரித்து, ``மலர்ந்து`` என்பது, `மலர` என்பதன் திரிபு என்றலும் ஆம். என்னோ - காரணம் யாதோ. `முன்னைத் தவத்தின் பயனாகக் கிடைத்த அன்பே காரணம்` என்ப தாம். கொல், அசைநிலை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க் கமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

கங்கைகொண்ட சோளேச்சரத்தானே வேதங்களை ஓதும் பிரமனாகவும் மேம்பட்ட நீண்டவடிவு எடுத்த திருமாலாகவும், அழகிய தேவர்கள் தலைவனாகிய இந்திரனாகவும், சூரிய தேவனாக வும், பரவிய சடைமுடியையும் மூன்று கண்களையும் உடைய சிவ பெருமானாகவும், உயிரகத்து அதனைத் தளிர்ப்பிக்கும் அமுதமாக வும், காளை வாகனனாகவும், மும்மதில்களையும் அழித்த, மேம்பட்ட வீரனாகவும், இவற்றைத் தவிர வேண்டுவார் வேண்டும் உருவத்தில் தோற்றம் வழங்குபவனாகவும் உள்ளான்.

குறிப்புரை :

``கங்கைகொண்ட சோளேச்சரத்தானே`` என்பதை முதலிற்கொள்க. ஏகாரம், தேற்றம். அவன் ஒருவனே பல உருவுமாவன் என்க. சுருதி வானவன் - வேதத்தை ஓதுகின்ற தேவன்; பிரமன். `விசும்பு` என்றது சுவர்க்கலோகத்தை; ``அகல்விசும்பு ளார்கோமான் - இந்திரனே`` (குறள் - 25) என்றது காண்க. பரிதி வானவன் - சூரிய தேவன். படர் சடை முக்கண் பகவன், உருத்திரன் என்றது சீகண்டரை. அக உயிர் - தன்னை அடைந்த உயிர்; அவைகட்கு அமுதம்போல அழியா இன்பந்தருவன் என்க. இதனை இறுதியிற் கூட்டி உரைக்க. எருது வாகனன் - இடபாரூட மூர்த்தி. எயில்கள் மூன்று எரித்த சேவகன், திரிபுராந்தக மூர்த்தி. இவையும் சீகண்டர் கொண்ட வடிவங்கள். `அவரவரும் அன்பினாற்கொண்ட மூர்த்திகள் பலரும் தானாய் இருந்து அவரவர் கருதிய பயனைத் தருபவன் பரமசிவன் ஒருவனே` என்றவாறு. தனது உண்மை நிலையை உணரும் ஞானியரை, ``அகவுயிர்`` என்றும், அவர்க்குப் பரமுத்தி யளித்தலை, ``அமுதாம்`` என்றும் குறித்தனர் என்க. ``ஆருருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்`` (தி.6 ப.18 பா.11) என்று திருநாவுக்கரசர் அருளிச் செய்தமை காண்க. ஏறுசேவகன் - மிக்க வீரத்தையுடையவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர்
அண்டமாம் சிறுமைகொண் டடியேன்
உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள்மூன் றெரித்த
கண்டனே நீல கண்டனே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

அண்டங்கள் எல்லாம் தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணு அளவின என்று கூறுமாறு மிகப்பெரிய வடிவினனாகவும், தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணுவே ஓர் அண்டத்தை ஒத்த பேருருவினது என்று சொல்லுமாறு சிறுமையிற் சிறிய வடிவினனாக வும் உள்ள தன்மையைக் கொண்டு, அடியேன் நுகரும் பிராரத்தவினை உன்னைச் சேர்ந்ததாக ஆகுமாறு அடியேனுடைய உள்ளத்தினுள் கலந்து விளங்கும் மேம்பட்ட ஒளி வடிவினனே! வாசுகி என்ற பாம் பினையே நாணாகக் கொண்டு பெரிய மேருமலை ஆகிய வில்லாலே பகைவர்களின் மும்மதில்களையும் எரித்த வீரனே! நீல கண்டனே! கங்கைகொண்ட சோளேச்சரத்தானே!

குறிப்புரை :

``கொண்டு`` என வந்தவை இரண்டும் வினைச் செவ்வெண். இம் முதலடியின் பொருளை, ``அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் - அண்டங்க ளாகப் பெரிதாய்ச் சிறிதா யினானும்`` எனப் பின் வந்தோர் கூறியவாறு அறிக. (பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம் - கடவுள் வாழ்த்து) உண்ட ஊண்நுகர்ந்த - பிராரத்த வினை. `அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறை பணி நிற்` (சிவஞான போதம் - சூ. 10) பார்க்கு வரும் பிராரத்த வினை அவருக்கு ஆகாதவாறு, `இவனுக்குச் செய்தது எனக்குச் செய்தது என்று உடனாய் நின்று ஏற்றுக் கொள்ளுதல்` (சிவஞான சித்தி- சூ. 10-1) பற்றி, ``அடியேன் உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள்கலந்து`` என்றார். இறைபணியில் நிற்பவர் தமக்கு வருவன பலவற்றையும் `சிவார்ப்பணம்` எனக்கொள்ளுதல், பிராரத்தம் தாக்காமைப் பொருட்டேயாம்.
உண்ணும் உணவையும் சிவனுக்குச் செய்யும் ஆகுதியாக நினைத்துச் செய்தலும் மரபாதலின், இத் தொடர், அதனையும் குறித்தல் பொருந்துவதாகும். ``பரஞ்சோதி`` என்றதன் பின்னர், `நீயே` என்னும் பயனிலை வருவிக்க. இதனால், சிவ பெருமானது முழுமுதற்றன்மை கூறியவாறாம். `பாம்பாம்` எனப் பாடம் ஓதுதலால் ஒரு சிறப்பின்மை அறிக. கண்டன் - வீரன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

மோதலைப் பட்ட கடல்வயி றுதித்த
முழுமணித் திரளமு தாங்கே
தாய்தலைப் பட்டங் குருகிஒன் றாய
தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும்அவ் வகையே
நிசிசரர் இருவரோ டொருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

பொழிப்புரை :

திரிபுரத்தை அழித்த காலத்திலே அசுரருள் மூவரை அன்பினால் சேர்ந்த கருணையை உடையவனே! கங்கைகொண்ட சோளேச்சரத்தானே! ஒன்றொடொன்று மோதுகிற அலைகளோடு கூடிய கடல் வயிற்றிலிருந்து தோன்றிய குற்றமற்ற முத்துத் திரள்களைப் போன்ற அமுதம் அங்கேயே கடலிலே சேர்ந்த அப்பொழுதே உருகிக் கடலோடு ஒன்றாகும் தன்மைபோல என்னை முன் படைத்த நீ அடியேனுக்குக் காணக்கிட்டினால் அடியேனும் உருகி உன்னோடு ஒன் றாகிவிடுவேன்.

குறிப்புரை :

அலைப்பட்ட - அலையோடு கூடிய. `உதித்த அமுது` என இயையும். முழுமணி - குற்றமற்ற முத்து. `மணித்திரள் போலும் அமுது` என்க. இது, நிறம்பற்றி வந்த உவமை. ஆங்கே - அவ்விடத்தே. ``தாய்`` என்றது, அக்கடலை. `தலைப்பட்ட வழி` என் பது, `தலைப்பட்டு` எனத் திரிந்து நின்றது. தலைப்படுதல் - சேர்தல். அங்கு - அப்பொழுது. தன்மையில் - தன்மைபோல. இறைவனே உயிர்கட்கு அம்மையும் அப்பனும் ஆதலின், `என்னை முன் ஈன்ற நீ` என்றார். ``முன் ஈன்ற`` என்றது, பான்மைச் சொல். `வகையினேன்` என்பதனை, ``வகை`` என்றார். `ஆவேன்` என்னும் ஆக்கம் தொக்கு நின்றது. `உருகி ஒன்றாய் விடுவேன்` என்றார். இஃது இறைவனை மீளவும் எதிர்வர வேண்டிய வாறு. வாதவூரடிகளும் இவ்வாறு வேண் டினமை வெளிப்படை. நிசிசரர் - அசுரர். இருவரோடு ஒருவர் - மூவர். இவர் திரிபுரம் அழித்த காலத்துத் தமது சிவபத்தியால் அழியாது நின்று சிவபிரானை அடைந்தவர். அவர்களது பத்தி காரணமாகச் சிவபிரான் அவர்களைத் தப்புவித்தமை பற்றி, ``அவர்தம் காதலிற்பட்ட கருணை யாய்`` என்றார். பட்ட - அகப் பட்ட. ``பத்தி வலையிற் படுவோன் காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண் - 42) என்று அருளியது காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ றாயிரங் கூறிட்
டத்திலங் கொருகூ றுன்கண்வைத் தவருக்
கமருல களிக்கும்நின் பெருமை
பித்தனென் றொருகாற் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யுங்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

கிளிபோன்ற மகளிர் மீது வைத்த அன்பினை நூறாயிரம் கூறுகளாகச் செய்து அவற்றுள் ஒரு கூறு அளவினதாகிய அன்பை உன்பால் வைத்த அடியார்களுக்கு உன் பெருந்தன்மையால் சிவலோகத்தையே வழங்கும். உன்னை ஒரு சமயம் பித்தன் என்று கூறுவாராயினும் அடியார்கள் செய்த தவறுகளைப் பொறுத்து அவர்களுக்கு அருள் செய்யும் அபயகரத்தை அடியேனுடைய தலை மீது வைத்த கங்கை கொண்ட சோளேச்சரத்தானே! என்று சிவ பெருமான் இவ்வாசிரியருக்கு ஆசிரியனாய் வந்து அருளிய வாற்றைக் குறிப்பிட்டவாறு.

குறிப்புரை :

தத்தை - கிளி. அங்கனையார் - மாதர். `தத்தை போலும் அங்கனையார்` என்க. தயா - இரக்கம்; என்றது அன்பை. `அதில்` என்பது, ``அத்தில்`` என விரித்தல் பெற்றது. `அங்ஙனம் கூறிடப்பட்ட அன்பில்` என்பது பொருள். அங்கு, அசைநிலை. ஒருகூறு - ஒருகூறாய அன்பினை. `பெருமையை` என, இரண்டாவது விரிக்க. பிழைத்தவை - அவர்கள் பிழைபடச் செய்த செயல்களை; இது `பித்தன்` எனக் கூறி யதைக் குறியாது பிறவற்றையே குறித்தல், ``பிழைத்தவை`` என்ற பன்மை யானும் பெறப்படும். ``செய்யும்`` என்ற பெயரெச்சம் ``கைத்தலம்`` என்ற கருவிப்பெயர் கொண்டது. இக்கைத்தலம், அபயகரம். ``கைத் தலம் அடியேன் சென்னிமேல் வைத்த`` என்ற இதனானும் இறைவன் இவ்வாசிரியர்க்கு ஆசிரியனாய் வந்து அருளினமை அறியப்படும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்
புகுந்ததோர் யோகினிற் பொலிந்து
நுண்ணியை யெனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை யொடுங்கநீ வந்தென்
கண்ணினுண் மணியிற் கலந்தனை கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

கங்கைகொண்ட சோளேச்சரத்தானே! மூட்டிய நெருப்பினால் வெப்பமுறுத்தப்படும் காய்ந்த பாலோடு கலந்த நீர் ஆவியாகிப் போய்விடுவதுபோலப் பாவங்கள் விரைவில் நீங்கப் புண்ணியம் பின்சென்று அறிவினால் அறியும் வகையாக அடி யேனுன்னோடிருத்தலாகிய ஒரு யோக மார்க்கத்தில் விளங்கி நீ நுண்ணியையாய் உள்ளாய் எனினும் உன் பெருமை உன்னிடத்தில் மறைந்து நிற்க அடியேனால் விரும்பப்படும் நீ வந்து கண்ணினுள் மணி கலந்து நிற்பதுபோல அடியேனோடு ஒன்று கலந்து நின்றனை. இதற்கு அடியேன் செயற்பால கைம்மாறு யாது?

குறிப்புரை :

பண்ணிய - மூட்டிய. தழல் காய் - நெருப்புச் சுடுகின்ற (நெருப்பாற் சுடப்படுகின்ற). ``காய் பால்`` என்பது செயப்படு பொருட் கண் வந்த வினைத்தொகை. அளாம் - முன்பு கலக்கப்பட்ட. ``பறைந்து`` எனப் பின்னர் வருகின்றமையின் வாளா, ``நீர்போல்`` என் றார். `நீர் பறைவது போலப் பறைந்து` என்பது பொருளாயிற்று. `நெருப்பு மூட்டிக் காய்ச்சப்பட்ட பாலில், முன்பு கலந்திருந்த நீர் ஆவி யாய் விரைவில் நீங்கிவிடப் பின்பு நிலைத்து நின்று பயன் செய்யும் பால்போலும் புண்ணியம்` என்பது, இங்குக் கூறப்பட்ட பொருள். பொருட்கண், பாவம் பறைதல் ஒன்றே கூறினாராயினும், `நீ எனக்குச் செய்த திருவருளால் தூய்மையாக்கப்பட்ட எனது உயிரின்கண் முன்பு கலந்து நின்ற பாவம் பறைய` என்பது உவமையாற் கொள்ளுதல் கருத் தென்க. முன் - விரைவில். பறைந்து - நீங்கி. இதனை, `பறைய` எனத் திரிக்க. ``சென்று`` என்றது, `நிகழ்ந்து` என்னும் பொருளது. `சென்று புகுந்தது` என இயையும். `அறிவினுக்கு அறிய` என்றதில் நான்காவது, கருவிப் பொருட்கண் வந்தது. `கண்ணிற்குக் காணலாம்` என்பது போல. அறிதற்குச் செயப்படு பொருளாகிய `உன்னை` என்பது வருவித்துக்கொள்க. ``புகுந்தது`` என்னும் வினையாலணையும் பெயர் வினைமுதல் உணர்த்தாது. `புகுந்ததனால் விளைந்தது` எனச் செயப்படு பொருளை உணர்த்திற்று. `புகுந்ததாகிய ஓர் யோகு` என்க. யோகு - யோகம்; சிவயோகம். ``நுண்ணியை`` என்பதில் நுண் ணியையாய் என்னும் ஆக்கம் விரிக்க. `அப் பெருமை` எனச் சுட்டி உரைக்க. ஒடுங்க - மறைந்து நிற்க; என்றது, `என் திறத்தில் அதனைக் கொள்ளாது விடுத்து` என்றவாறு. `இதற்கு யான் செய்யும் கைம்மாறு என்` என்னும் குறிப்பெச்சம், இறுதியில் வருவித்து முடிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

அங்கைகொண் டமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம் பலம்பவந் தொருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
உய்யக்கொண் டருளினை மருங்கிற்
கொங்கைகொண் டனுங்குங் கொடியிடை காணிற்
கொடியள்என் றவிர்சடைமுடிமேற்
கங்கைகொண் டிருந்த கடவுளே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 

பொழிப்புரை :

இடப்பாகமாக உள்ள, கொங்கைகளின் பாரத்தைத் தாங்கி மெலிகின்ற கொடி போன்ற இடையினை உடைய பார்வதி கண்டால் வெகுளுவாள் என்று விளங்குகின்ற சடை முடியின் கண் கங்கையை வைத்துக் கொண்டிருக்கும் இறைவனே! கங்கை கொண்ட சோளேச்சரத்தானே! தம் கைகளில் வைத்துக் கொண்டு தேவர்கள் பூமாரி பொழிய, உன் திருவடிகளில் சூடிய சிலம்பு ஒலிக்க வந்து ஒருநாள் உன் திருக்கரத்தை அடியேன் தலையில் வைத்து ஆட்கொண்டு அருளினாய். நின் கருணைதான் என்னே!

குறிப்புரை :

``அங்கை கொண்டு`` என்றதில், ``கொண்டு`` மூன்றா வதன் சொல்லுருபு. அலம்ப - ஒலிக்க. ``உம் கை`` என்றதில் ``உம்`` ஒருமைப் பன்மை மயக்கம். `உன் கை` எனப்பாடம் ஓதினும் இழுக் காது. ``உம் கை கொண்டு`` என்றதில், `கொண்டு` என்றது, `எடுத்து` என்றவாறு. `மருங்கிற் கொடியிடை` என இயையும். `பக்கத்தில் இருக்கும் உமாதேவி` என்பது பொருளாம். ``கொங்கை கொண்டு`` , ``கங்கை கொண்டு`` என்றவற்றில் ``கொண்டு`` என்றவை, `தாங்கி` என்னும் பொருளன. அனுங்கும் - மெலிகின்ற (இடை என்க). ``கொடி யள்`` என்றதில், `ஆவள்` என்னும் ஆக்கம் விரிக்க. `கொடியளாவள்` என்றது, `வெகுள்வாள்` என்றவாறு. உமாதேவி காணின் வெகுள்வாள் என்று கருதியே சிவபிரான் கங்கையைச் சடையில் மறைத்து வைத்துள்ளான் என்றது, தற்குறிப் பேற்ற அணி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேற்
கங்கையோ டணியுங் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ டுலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே. 

பொழிப்புரை :

பார்வதியோடு கூடி இருந்தே யோகம் செய்ப வனாய், ஒற்றைப் பிறைச்சந்திரனை முடியின் மீது கங்கையோடு அணிந்து கொண்டுள்ள தெய்வமாய் உள்ள கங்கைகொண்ட சோளேச் சரத்தானைப்பற்றி அழகிய கையில் பிச்சை எடுக்கும் ஓட்டினை ஏந்தி உணவுக்காகத் திரியும் கருவூர்த்தேவர் பாடியுள்ள சொல்மாலை யாகிய இப்பதிகத்தைப் பாடி வழிபடுபவர்கள் ஆணைச் சக்கரம் ஏந்திய கையோடு இவ்வுலகில் அரசர்களைப் போலச் சிறப்பாக வாழ்ந்து மறுமையில் சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் மூழ்கித் திளைப்பார்கள்.

குறிப்புரை :

யோகு - யோகம். ``மங்கையோடு இருந்தே யோகம் செய்வான்`` என்றது, ``ஒன்றிலும் தோய்விலனாய், ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நிற்பான்`` (சிவஞான சித்தி- சூ. 1.51) என்றதாம். ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை`` என்ற அப்பர் திருமொழியைக் காண்க. (தி.6 ப.50 பா.3) இவ்வாசிரியர், தம்மை, அங்கை ஓடு ஏந்திப் பலி திரிபவராகக் கூறினமையின், நிறைந்த துறவர் என்பது விளங்கும். ஆழி - ஆணைச் சக்கரம். `திளைப்பதும் சிவன் அருட்கடல்` என்றாராயினும், `சிவனது அருட்கடலிலும் திளைப்பர்` என்றல் கருத் தென்க. `அரசு வீற்றிருத்தல் இப்பிறப்பிலும், சிவனது அருட்கடலில் திளைத்தல் இப்பிறப்பு நீங்கிய பின்னரும்` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது.
சிற்பி