கருவூர்த் தேவர் - திருச்சாட்டியக்குடி


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

பெரியவா கருணை இளநிலா வெறிக்கும்
பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல்
காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

சாட்டியக்குடியின்கண் ஏழுநிலைகள் அமைந்த விமானத்தை உடைய கருவறையில் உறையும், நம்மை அடக்கியாளும் பெருமானுக்குக் கருணை மேம்பட்டது. இளையநிலா ஒளிவீசும் பிறைச்சந்திரன் தங்கி இயங்கும் சடைமுடி அவிழ்ந்து தொங்குதல் தன்மை, காதுகளில் இருபாலும் வளைந்த அழகிய குண்டலங்கள் ஒளிவீசிக்கொண்டு தொங்குகின்றவாறு, கரியகழுத்து, அவர் வெளிப் படுத்தும் சிவந்த வாயின் வெள்ளிய பற்கள், அடியார்களுடைய குவிந்த இருகைகளையும் கண்டு மலர்கின்ற முகம் ஆகிய இவை அழகியன.

குறிப்புரை :

``பெரியவா`` முதலியன, `பெரியவாறு` முதலியவை கடைக்குறைந்து வந்தன. அவையெல்லாம் செவ்வெண்ணாய் நின்றமையின், இறுதியில், `இவை அழகிய` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. `கருணை பெரியவா` என மாற்றுக. கருணை ஒன்றேயாயினும் அதனால் விளையும் பயன்கள் பலவாதல்பற்றி, ``பெரிய`` எனப் பன்மையாகக் கூறப்பட்டது. இள நிலா - சிற்றொளி. மொழுப்பு - முடி. சுழி அம் குழை - வளைந்த அழகிய குண்டலம். தாழ்ந்தவா - தொங்கினவாறு. `காதுகளில்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. எனவே, அதனை, ``சுழி`` என்றதற்கு முன்னே கூட்டுக. ``தாமும்`` என்ற உம்மை, `தமது உறுப்புக்கள் இயற்கையில் இவ்வாறு விளங்குதலேயன்றி` என, இறந்தது தழுவிய எச்சம். ``முறுவல்`` என்றது, `வெள்ளிய முறுவல்` என்றவாறு. சாட்டியக்குடியார் - திருச் சாட்டியக்குடியில் உள்ள அந்தணர்கள். `முகம் அலர்ந்தவா` என மாற்றிக்கொள்க. `தாமும் முறுவல் காட்டுமா` என்றதை இதன்பின்னர்க் கூட்டுக. அந்தணர்கள் கைகுவித்துத் தொழுதலைக் கண்டு இறைவற்கு உவகையால் முகம் மலர்ந்தது என்க. ஏழ் இருக்கை - ஏழு நிலைகள் அமைந்த விமானத்தையுடைய மாளிகை. இது திருச்சாட்டியக்குடிக் கோயிலின் அமைப்பு. `ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்குப் பெரியவா` என்று முன்னே சென்று இயையும்; இஃது, ஏனைய திருப் பாடல்கட்கும் ஒக்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம்
பட்டவர்த் தனம்எரு தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை
மலைமகள் மகிழ்பெருந் தேவி
சாந்தமும் திருநீ றருமறை கீதம்
சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

சாட்டியக்குடி அடியாருடைய அன்பின் மிக்க எழுச்சியை உடைய இதயமே ஈசன் கோயில். அக்கோயிற்கண் அமைந்த எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் அப்பெருமானுக்குப் பாம்புகளே அணியும் மாலைகள். உண்ணும் பாத்திரம் மண்டையோடு. அவர் செலுத்தும் எருதே பெருமையை உடைய யானை வாகனம். அடியார்களின் இடையறாது ஒழுகும் கண்ணீரை உடைய கண்களே அவர் குளிக்கும் இடம். பார்வதியே அவர் மகிழ்கின்ற பெரிய தேவி. திருநீறே அவர் அணியும் சந்தனம். அவர்பாடும் பாடல் சிறந்த வேதங்களே. சடையே அவர் கிரீடம்.

குறிப்புரை :

பாந்தள் - பாம்பு. பூண் ஆரம் - அணிகின்ற இரத்தின வடம். ``பரிகலம் கபாலம்; பட்டவர்த்தனம் எருது; சாந்தம் திருநீறு`` என்றாற்போல, ஏனையவற்றையும், `பூண் ஆரம் பாந்தள்; மஞ்சன சாலை கண்; பெருந்தேவி மலைமகள்; கீதம் அருமறை; முடி சடை; கோயில் மாளிகை இதயம்` என மாற்றிக் கொள்க. `இவை யெல்லாம் உலகிற் காணப்படாத அதிசயங்கள்` என்றபடி. பரிகலம் - உண்கலம். கபாலம் - பிரமனது தலைஓடு. பட்டவர்த்தனம் - அரச விருது; பெருமையுடைத்தாகிய யானையையே பட்டவர்த்தனமாகக் கொள்ளுதல் உலக இயல்பு. வார்ந்த - இடையறாதொழுகிய. ``வார்ந்த கண்ணருவி`` என்றாராயினும், `வார்ந்த அருவிக் கண்` என்பதே கருத்து, இடத்தைச் சுட்டலே கருத்தாகலின். மஞ்சன சாலை - குளிக்கும் இடம். பெருந்தேவி - அரசமாதேவி. சாந்தம் - உடற்பூச்சு. கீதம் - தான் பாடும் பாட்டு. `சாட்டியக் குடியாரது இதயம்` என்க. ஏந்து எழில் இதயம் - மிக்க எழுச்சியையுடைய நெஞ்சு. ``எழுச்சி`` என்றது அன்பினை. நெஞ்சிற்கு அழகு தருவது அன்பேயாகலின், அதனை மாளிகைக்கு அமைந்த அழகாக விசேடித்தார். கோயில் மாளிகை - கோயிற்கண் உள்ள கருவறை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம்
தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா டுறைவிடம் போர்வை
கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
சபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் சாட்டியக்குடி ஈசனுக்கு அவனைத் தொழுதுகொண்டு பின் செல்வது பிரமன் முதலிய தேவர்களின் கூட்டம். அவனைத் தொடர்ந்து செல்வன நால்வேதங்கள். இத்தகைய சிறப்புக்கள் இருந் தாலும் அவன் உறைவிடம் பேய்கள் பொருந்திய சுடுகாடு. அவனுடைய போர்வை யானைத்தோல். அவன் உணவு, திரிந்து எடுக் கும் பிச்சை. அவன் கோவணம் விடத்தைக் கக்குகின்ற பாம்பு. அவன் ஜபம் செய்யக்கொண்ட மாலை பளிங்கு. உறையும் நெய்யைச் சொரிந்து பாதுகாக்கப்படும் ஒளி பொருந்திய விளக்கு அக்கினியே.

குறிப்புரை :

`நான்கும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. கழுது - பேய். கரி காடு - கரிகின்ற காடு; சுடுகாடு. கவந்திகை - உணவு. `போர்வை கரிஉரி, கவந்திகை திரிந்தூண்` என நிரல் நிறையாகக் கொள்க. திரிந்து ஊண் - அலைந்து ஏற்கும் உண்டி. தழல் உமிழ் - கண் ணால் நெருப்பைச் சிந்துகின்ற; என்றது `சீற்றத்தையுடைய` என்றபடி. பளிங்கு - படிகமணி. `சாட்டியக்குடியார் ஓம்பு அழல்` விளக்கு என்க. இழுது நெய் - வெண்ணெயை அப்பொழுது உருக்கிக்கொண்ட நெய். `பணி கேட்டுச் சூழ்பவர் அயன் முதலிய தேவர்களும், அறிய மாட்டாது ஆய்ந்து தொடரும் நூல்கள் வேதங்களும் ஆகிய பெருமை கள் காணப்படினும், அவன் உறைவிடம் சுடுகாடு முதலியவையாய் உள்ளன; இஃது அறிதற்கரிதாய் இருந்தது` என்றவாறு. இங்கும், `உறைவிடம் கரிகாடு; கோவணம் அரவம்; சபவடம் பளிங்கு; விளக்கு அழல்` என மாற்றுக. ``பளிங்கு`` என்றது, மாணிக்கம் முதலிய பிற இரத்தினங்களல்லாமையை உட்கொண்டது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பதிகம்நான் மறைதும் புருவும்நா ரதரும்
பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல்மூ வுலகில்
கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கலியில் ஒலிசெயும் கையில்
தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

சாட்டியக்குடியில் எழுநிலை விமானத்தின் கீழ்க் கருவறையில் இருக்கும் பெருமானுக்குத் தாம் பாடும் பாடல் தொகுதி வேதங்களே. விருப்போடு பாடும் கந்தருவர்கள் தும்புருவும் நாரத ரும், அவர்கள் சேரும் இடம் ஆவன எல்லாம் அரங்கம். மாலைபோல அமைந்த மூவுலகங்களிலும் அஞ்ஞானமாகிய இருளைப் போக்கத் திருநடம் புரிய அடிபெயர்த்தலின் கையில் உள்ள உடுக்கை கடலைப் போல ஒலிசெய்யும். உள்ளத்தில் உள்ள அன்பையே தாம் விரும்பும் பொருளாகக் கொள்ளுதலின் அடியவர் இதயமே அவருக்குப் பதுமநிதி.

குறிப்புரை :

பதிகம் - (தாம் பாடிய) பாடற் றொகுதி. காந்தர்ப்பர் - கந்தருவர்; இசை பாடுவோர். கதியெலாம் அரங்கம் - அவர் சேரும் இடமாவன எல்லாம் அம்பலம். பிணையல் மூவுலகு - மாலைபோல் அமைந்த மூன்றுலகங்கள். `மூவுலகிலும்` என உம்மை விரித்து, `மூவுலகிலும் ஒலிசெயும்` என முடிக்க. சதியில் - அடிபெயர்த்தலில். ஆர்கலியில் - கடலைப்போல. `ஆர்கதியில்` என்பது பாடம் ஆகாமை யறிக. கமல வர்த்தனை - பதுமநிதி. உள்ளத்தில் உள்ள அன்பையே தாம் விரும்பும் பொருளாகக் கொள்ளுதலின், சாட்டியக்குடியாரது இதயங்களை இவ்வாறு கூறினார். `வர்த்தனை ஆசனம்` எனவும் உரைப்பர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை யரையர்தம் பாவை
தருமனை வளனாம் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்மூன் றேழுகைத் தலம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 

பொழிப்புரை :

எழுநிலை விமானத்தின் கீழ்க் கருவறையில் உறையும் சாட்டியக்குடி ஈசனுக்குத் திருமகன் முருகன். தேவி உமையாள். மருமகன் காமன். மருமகனுடைய தாய் திருமகள். மாமன் இமவான். மலையரசனாகிய இமவானுடைய மகள் இன்பத்தைத் தருகின்ற மனைவி. செல்வம் சிவபுரம். நண்பன் குபேரன். சாட்டியக் குடியாருக்கு முகங்கள் இரண்டு. திருவடிகள் மூன்று. கைத்தலங்கள் ஏழே.

குறிப்புரை :

``மருமகன் தாய்`` என்றது, `தங்கை` என்றபடி. உமாதேவியை, `திருமால் தங்கை` என்பதுபோலத் திருமகளை, `சிவபெருமான் தங்கை` என்றலும் வழக்கு. ``அரையர்`` என்றது உயர்வுப் பன்மை. தரு மனை - இன்பத்தைத் தருகின்ற மனைவி. `தருமலி` என்பது பாடம் அன்று. `வளன், புரன்` என்பன `வளம், புரம்` என்பவற்றது போலி. வளன் சிவபுரன் - செல்வமாவது சிவபுரம். ``சாட்டியக்குடியார்`` என்றதனை, `கைத்தலம்` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``இரு முகம்`` என்றது, `முகம் இரண்டு` என்னும் பொருட்டு. ``முகம் இரண்டு; கழல் (பாதம் ) மூன்று; கைத்தலம் ஏழு`` என்றது, மாதொரு கூறாகிய (அர்த்தநாரீசுர) வடிவத்தை ஒரு நயம்படக் கூறியவாறு. இறைவன் இறைவியர் முகங்கள் இரண்டும் ஒன்றாய் இயைந்தனவாயினும் அவை ஆண்முகமும், பெண் முகமுமாய் வேறுபட்டு விளங்குதலின், ``இருமுகம்`` என்றார். இறைவனது இடத்திருவடியும், இறைவியது வலத்திருவடியும் ஒன்றாய் விடுதலால் கழல்கள் மூன்றாயின. இறைவனுடைய இடக்கை இரண்டில் ஒன்றும், இறைவியுடைய வலக்கை இரண்டில் ஒன்றும் ஒன்றாய்விடுதலால் கைத்தலங்கள் ஏழாயின.
``தோலுந் துகிலும் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலம்`` - (தி.8 திருக்கோத்தும்பி 18)
``உருவிரண்டும் ஒன்றொடொன் றொவ்வா அடி`` (தி.6 ப.6 பா.6) என்றாற்போல முன்னையாசிரியர் வியந்தருளிச் செய்ததனை, இவ்வாசிரியர் இவ்வாறாக வியந்தருளிச் செய்தார் என்க.
சாட்டியக்குடி வாழ்வோரது வேள்வித் தீ வடிவம் ஆனவன்" என்றும் பொருள் கொள்ளலாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அனலமே புனலே அனிலமே புவனி
அம்பரா அம்பரத் தளிக்கும்
கனகமே வெள்ளிக் குன்றமே என்றன்
களைகணே களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
சைவனே சாட்டியக் குடியார்க்
கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே.

பொழிப்புரை :

சாட்டியக்குடியில் உள்ள மக்களுக்கு மிக இனிய பழமாய் நீக்கமற நிறைந்து எழுநிலை விமானத்தின்கீழ்க் கருவறையில் உள்ள பெருமானே! பஞ்சபூத வடிவானவனே! விண்ணில் கொடுக்கப் படுகின்ற பொன்னுலகமே! வெள்ளி மலையே! அடியேன் பற்றுக் கோடே! உன்னைத்தவிர வேறு பற்றுக்கோடில்லாத அடியேனுடைய உள்ளத்தையே இருப்பிடமாகக்கொண்டு அருளும் மங்கலமான வடிவினனே! அத்தகைய நீ சாட்டியக்குடியில் வந்து உறையும் காரணத்தைக் கூறுவாயாக.

குறிப்புரை :

`அனல்` என்பது ஈற்றில் அம்முப் பெற்று நின்றது. அனிலம் - காற்று. ஏனையவற்றோடொப்ப, ``புவனி`` என்பதிலும் விளியுருபாகிய ஏகாரம் விரிக்க. புவனி - பூமி. அம்பரா - ஆகாயமாய் உள்ளவனே; இங்கு இவ்வாறு உயர்திணையாக விளித்தமையால், `அனலம்` முதலியவற்றையும் ஆகுபெயராகக் கொள்க. அம்பரத்து அளிக்கும் கனகமே - (நல்வினை செய்தோர்க்கு) விண்ணில் கொடுக்கப்படுகின்ற பொன்னுலகமே. வெள்ளிக் குன்றமே - சிவனடியார்கட்கு அளிக்கப்படுகின்ற கயிலை மலையே. களைகண் - துணை. சைவன் - சிவம் (மங்கலம்) உடையவன். `சைவன்` என்றது சிவபெருமானைக் குறிக்குமிடத்து. `சிவம்` என்னும் சொல் பண்பினை உணர்த்தி நிற்கும். அவன் அடியார்களைக் குறிக்குமிடத்து அச்சொல் அப்பண்பினையுடைய முதற் பொருளைக் குறித்துநிற்கும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

செம்பொனே பவளக் குன்றமே நின்ற
திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே
அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே
சங்கரா சாட்டியக் குடியார்க்
கின்பனே எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே. 

பொழிப்புரை :

செம்பொன்னே! பவளமலையே! பிரமன், திருமால் முதலியோர் கூட்டத்தில் உள்ள அன்பர்கள் உண்ணும் அரிய அமுதமே! தலைவனே! பித்தனாகிய அடியேனை ஆட்கொண்ட இன்பத்தைத் தோற்றுவிப்பவனே! அணுவே! அசைவு இல்லாதவனே! இன்பத்தைச் செய்பவனே! நன்மையைச் செய்பவனே! சாட்டியக் குடியில் உள்ளவர்களுக்கு இனியனே! அத்தகைய நீ எல்லா இடங் களிலும் நீக்கமற நிறைந்தும் சாட்டியக்குடி எழுநிலை விமானத்தின் கீழ்க் கருவறையில் உறையும் காரணத்தைக் கூறுவாயாக.

குறிப்புரை :

`பித்தனேனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலா யிற்று. சம்பு - இன்பத்தைத் தோற்றுவிப்பவன். தாணு - அசை வில்லாதவன். சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

செங்கணா போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கணா யகனே போற்றிஏ ழிருக்கை
யிறைவனே போற்றியே போற்றி

பொழிப்புரை :

திருமாலே! நான்முகனே! சிவபுரத்தில் வீற்று இருக்கும் அழகிய கண்களையுடைய சிவனே! தேவர்கள் கூட்டத்தி னனே! இந்திரனே! தங்களுக்கே உரியதான வேதம் முதலிய நூல்கள் யாவற்றையும் கற்ற சான்றோர்கள் வாழும் சாட்டியக்குடியில் இருந்து அருள்செய்கின்ற எங்கள் தலைவனே! எழுநிலை விமானத்தின் கீழ் இருக்கும் இறைவனே! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை :

செங்கணா - திருமாலே. போற்றி - வணக்கம். திசை முகா - பிரமதேவனே. சிவபுர நகருள் வீற்றிருந்த அங்கணா - சிவனே. அமரனே - தேவகூட்டத்தினனே. அமரர்கள் தலைவனே - இந்திரனே. சிவபெருமான் ஒருவனே இவர் யாவருமாய் நின்று அருள் செய்தல் பற்றி இவ்வாறு கூறினார். ``தங்கள் நான்மறை நூல்`` என்றதனால், திருச்சாட்டியக்குடியில் உள்ளோர் அந்தணர் என்பது பெறப்படும்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

சித்தனே அருளாய் செங்கணா அருளாய்
சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே அருளாய் அமரனே அருளாய்
அமரர்கள் அதிபனே அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய்
முன்னவா துயர்கெடுத் தெனக்கே.

பொழிப்புரை :

எல்லாம் வல்லவனே! நெருப்புக் கண்களை உடையவனே! சிவபுர நகரில் வீற்றிருந்த தலைவனே! தெய்வ வடிவினனே! தேவர்கள் தலைவனே! நீர் மோதுகின்ற குளங்களையும் சோலையையும் உடைய சூழலை உடைய சாட்டியக்குடியில் எழு நிலை விமானத்தின் கீழ்க் கருவறையில் உறையும் முத்தி அருள வல்லவனே! முதல்வனே! எல்லோருக்கும் முற்பட்டவனே! அடியே னுடைய துயரங்களைப்போக்கி அருளுவாயாக என்று முறை யிட்டவாறு.

குறிப்புரை :

சித்தன் - எல்லாம் வல்லவன். செங்கணன் - நெருப்புக் கண்ணையுடையவன். அமரன் - தெய்வ வடிவினன். அமரர்கள் அதிபன் - தேவர்கள் தலைவன். படுகர் - குளம். தண்டலை - சோலை. `படுகரையும், தண்டலையையும் உடைய சூழலையுடைய சாட்டியக்குடி ` என்க. ``முன்னவா`` என்றதனை முதலிலும், ``துயர் கெடுத்து எனக்கு`` என்றதனை, `சித்தனே` என்றதன் பின்னும் கூட்டுக. இங்ஙனம் கூட்டவே, இஃது ஏனைப் பெயர்களின் பின்னும் வந்து இயைதல் அறிக. `துயர்கெடுத்து எனக்கு அருளாய்` எனப் பலமுறை யும் கூறியது, முறையீடு தோன்ற.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை
இருந்தவன் திருவடி மலர்மேற்
காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன்
கழறுசொன் மாலைஈ ரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே
வளரொளி விளங்குவா னுலகே. 

பொழிப்புரை :

முயற்சியை உளதாக்கும் வயல்களையும், பசிய சோலைகளையும், குளங்களையும், தோட்டங்களையும் உடைய சாட்டியக்குடியிலுள்ளார் ஈட்டிய செல்வமாய் எழுநிலை விமானத்தின் கீழ் இருக்கும் பெருமானுடைய திருவடி மலர்கள் தொடர்பாக மெய்ப்பொருளைக் காட்டும் கலைகளைப் பயின்ற கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களையும் பொருந்திய மனத்தை உடைய சான்றோருக்கு வளர்கின்ற ஒளி விளங்கும் சிவ லோகம் உளதாவதாம்.

குறிப்புரை :

தாள் தரும் பழனம் - முயற்சியை (உழவை) உளதாக்கும் வயல்கள். இதில் டகர ஒற்று விரித்தல். `பழனத்தையும், பொழிலையும், படுகரையும், தண்டலையையும் உடைய சாட்டியக் குடி` என்க. ``காட்டிய பொருளையுடைய கலை`` என்றது, `பொருளைக் காட்டிய கலை` என்றபடி. பொருள் - மெய்ப்பொருள். ``ஈரைந்தும் மாட்டிய`` என்றது, இரண்டாவதன் தொகை. மாட்டிய - பொருத்திய. ``வானுலகு`` என்றதன்பின், `உளதாவது` என்பது சொல் லெச்சமாய் நின்றது.
சிற்பி