கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்


பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின்
அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

படமெடுக்கும் சிவந்த பாம்பு ஒன்று செம்மணியை உமிழ்தலால் அடியேன் பெரிதும் விரும்பும் எம்பெருமானுருடைய காதில் அழகிய செம்பொன்மயமான தோடுபோல அவர் அணிந்த பாம்பாகிய குழை விளங்க, விளங்கும் சடைமுடியிலிருந்து கசியும் கங்கைநீரினால் அழிந்த அழகிய திருநீற்றினை உடையவராய், ஞாயிற்று மண்டலம் விளங்க அதனிடையே மிக்க இருளை உடைய நள்ளிரவும் உள்ளதுபோலத் தோன்றுகின்ற கரிய நிறத்தைக்கொண்ட சிவந்த கழுத்தினை உடையவராய் உள்ள, அண்டங்களில் உள்ள தேவர்களுக்கு எல்லாம் தலைவராகிய சிவபெருமான் தங்கியிருக்கும் இடம் திருஇடைமருதூர் என்ற திருத்தலமாகும்.

குறிப்புரை :

முதலடியை இறுதியடியின் முன் கூட்டுக. `ஓர் பாந்தள்` என இயையும். பைய - படத்தையுடைய. பாந்தள் - பாம்பு. உமிழ்ந்து - உமிழ்தலால்; இது, ``காதல் செய்`` என்பதனோடு முடியும். `சிவபெருமானது திருச்செவியில் செம்பொன் தோடேயன்றிப் பாம்பும் குழைபோல உள்ளது` என்க. ஐய - அழகிய. மொழுப்பு - முடி. `மொழுப்பினால் அழிகின்ற அழகிய திருநீறு` என்க. திருநீறு அழிதற்குக் காரணம் முன்னே (தி.9 பா.170) கூறப்பட்டது. வெய்ய செஞ்சோதி மண்டலம் - ஞாயிற்று மண்டலம். `ஞாயிற்று மண்டலம் விளங்க அதனிடையே மிக்க இருளையுடைய நள்ளிரவும் உள்ளது போலத் தோன்றுகின்ற கரிய நிறத்தை ஒருபுடை கொண்ட சிவந்த கழுத்து` என்க.
மைய - கருநிறத்தை யுடைய. `செம்பொற் றோட்டையும், அழகிய திருநீற்றையும், செங்கண்டத்தையும் உடைய கோன்` என்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

இந்திர லோக முழுவதும் பணிகேட்
டிணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாக மேகலை யரையா
அகந்தொறும் பலிதிரி யடிகள்
தந்திரி வீணை கீதமுன் பாடச்
சாதிகின் னரங்கலந் தொலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

தேவர் உலகம் முழுவதும் தாம் இட்ட ஏவலைச் செவிமடுத்துத் தம் திருவடிகள் இரண்டனையும் தொழுது செயற்படப் புறப்படவும் தாம் ஐந்தலை நாகத்தைத் தம் புலித்தோல் ஆடைமீது மேகலையாக அணிந்து வீடுதோறும் பிச்சை ஏற்கத் திரியும் பெருமானார், நரம்புகளை உடைய வீணைகள் முதற்கண் பாடல் ஒலியை எழுப்ப, அவற்றோடு கலந்து உயர்ந்த யாழ் ஒலி வெளிப்பட, இனிய வேய்ங்குழலில் வாசிக்கப்படும் மந்திரப்பாடல்கள் எங்கும் பொருந்திய இடமாகிய திருஇடைமருது என்ற திருத்தலத்தில் உறைகிறார்.

குறிப்புரை :

`தம்மை விண்ணுலகம் முழுவதும் வணங்கிநிற்கத் தாம்போய் அகந்தோறும் பிச்சைக்கு உழல்கின்றார்` என்ப தாம்.``அடிகள்`` என்ற உயர்வுச் சொல்லும் இங்கு நகைப் பொருட்டாயே நின்றது.
தந்திரி - வீணை - நரம்புகளையுடைய வீணை. சாதி - உயர்ந்த. கின்னரம் - யாழ்; என்றது அதன் இசையை. வீணை முற் பட்டுப் பாட, யாழிசை அதனோடு ஒன்றி ஒலிக்கின்றது என்பதாம். `கீதமும் பாட` என்பது பாடம் அன்று. ``வீணை பாட`` எனக் கருவி வினைமுதல் போலக் கூறப்பட்டது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன
பல்லவம் வல்லியென் றிங்ஙன்
வினைபடு கனகம் போலயா வையுமாய்
வீங்குல கொழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமக ளுடனாய்த்
தூங்கிருள் நடுநல்யா மத்தென்
மனனிடை யணுகி நுணுகியுள் கலந்தோன்
மருவிடந் திருவிடை மருதே.

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய சந்திரனின் பிறை போன்ற குருத்து, அதனைப்போன்ற தளிர், கொடி ஆகிய இவைபோன்ற பொருள்கள் வடிவாகச் செய்யப்படுகின்ற பொன்போல எல்லாப் பொருள்களுமாய், பரந்த உலகம் முழுதும் நீக்கமற நிறைந்து, புலவி யோடு கூடிய கலவியை நிகழ்த்தும் பார்வதியுடன் கூடியவராய், எல்லோரும் உறங்குகின்ற இருள் செறிந்த நடுஇரவில் வந்து என் மனத்தை அணுகி, யாவரும் அடியேனும் அறியாதவாறு என் உள்ளத்தினுள் கலந்த நுண்மையை உடைய எம்பெருமானார் உறையுமிடம் திருஇடைமருதூராகும்.

குறிப்புரை :

பனி படு மதி - குளிர்ச்சி பொருந்திய சந்திரன்; என்றது பிறையை. கொழுந்து - குருத்து. அன்ன பல்லவம் - அவற்றோடொத்த தளிர். வல்லி - கொடி. என்று இங்ஙன் வினைபடு கனகம்போல யாவை யுமாய் - ஆகிய இன்னோரன்ன பொருள் வடிவமாகச் செய்யப் படுகின்ற பொன்போல எல்லாப் பொருள்களுமாய்; என்றது, `பொன் ஒன்றே பல பொருள்களாய் நிற்றல்போலத் தான் ஒருவனே எல்லாப் பொருளுமாய் நிற்கின்றான்` என்றவாறு. இது பரிணாமம் கூறியதன்று; கலப்புப் பற்றியே கூறியது. தூங்கு இருள் - மிக்க இருள். ``நடுநல் யாமத்து`` எனக் களவிற் கலக்கப்பட்ட தலைவியது கூற்றுப்போலக் கூறினார். `யாவரும் அறியாதவாறும், யானும் அறியாதவாறும் என் மனத்திடை அணுகினான்` என்பது உண்மைப் பொருள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங்
கடியனே னுள்கலந் தடியேன்
பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன்
படர்சடை விடமிடற் றடிகள்
துணியுமி ழாடை அரையில்ஓர் ஆடை
சுடர்உமிழ் தரஅத னருகே
மணியுமிழ் நாக மணியுமிழ்ந் திமைப்ப
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

அழகை வெளிப்படுத்துகின்ற ஒளி இரத்தினத்தின் உள்ளே கலந்து நீக்கமற நிறைந்தாற்போல அடியேனுடைய உள்ளத்தில் கலந்து அடியேனுடைய தொண்டினை விரும்பி நிற்கும் பார்வதி பாகராகிய, பரந்த சடையையும், விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய பெருமானார், குறைதலை வெளிப்படுத்தி நிற்கின்ற மேல் ஆடை, இடுப்பில் ஓர் ஆடை, அதன்மேல் நாகரத்தினத்தை வெளிப்படுத்தும் பாம்பு அழகை வெளிப்படுத்திக் கச்சாக விளங்க, இவற்றை உடுத்து விரும்பித் தங்கியிருக்கும் இடம் திருஇடைமருதூர் ஆகும்.

குறிப்புரை :

அணி உமிழ் சோதி மணியின் உள் கலந்தாங்கு - அழகை வெளிப்படுத்துகின்ற ஒளி இரத்தினத்தின் உள்ளே கலந்தாற் போல. இவ்வுவமை, `இறைவன் அடியாரது உள்ளத்தில் கலந்தான் என்பதெல்லாம், மணியினுள் ஒளி கலந்தது போல்வதுதான்; அஃதாவது இயற்கையாயுள்ள கலப்பேயன்றிச் செயற்கையாய் வரும் கலப்பன்று` என்பதை விளக்கி நின்றது. `அடிகள் மருவிடம்` என இயையும். `படர்ந்த சடையையும், விடத்தையுடைய மிடற்றையும் உடைய அடிகள்` என்க. `அரையில் ஓர் ஆடை துணி உமிழ் ஆடை யோடு சுடர் உமிழ்தர` என்க. துணி உமிழ் - குறைதலை வெளிப்படுத்தி நிற்கின்ற. `ஆடை` என்பது `ஆடுதல் உடையது` என்னும் பொருட் டாய் உத்தரீயத்திற்கே பெயராயினும், பொதுமையில் அரையில் உடுக்கப்படுவதாகிய உடையையும் குறித்தல் பற்றி உத்தரீயத்தை, ``துணியுமிழ் ஆடை`` என்றார். உத்தரீயம் உடையிற் குறைதல் பற்றி, `துண்டு` எனவும் வழங்கப்படுதல் அறிக. நாகம், கச்சாக அமைந்தது. `அணி உமிழ்ந்து` எனப் பிரிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற்
படிவழி சென்றுசென் றேறிச்
சிந்தையுந் தானுங் கலந்ததோர் கலவி
தெரியினுந் தெரிவுறா வண்ணம்
எந்தையுந் தாயும் யானுமென் றிங்ஙன்
எண்ணில்பல் லூழிக ளுடனாய்
வந்தணு காது நுணுகியுள் கலந்தோன்
மருவிடந் திருவிடை மருதே.

பொழிப்புரை :

உலகியல் கட்டுக்களையும், அவற்றிலிருந்து விடுதலை பெறுதலையும் ஆராய்கின்ற பொருள் பற்றிக் கூறுகின்ற தத்துவ சாத்திரங்களாகிய படிவழியில் பலகாலும் ஈடுபட்டுச் சென்றபின் சிவநெறி எய்தி என் சிந்தையும் தானும் கலந்த கலவி யானது ஆராய்ந்தாலும் விளங்காதபடி என் தந்தையேயாகியும், என் தாயேயாகியும், யானே ஆகியும், இவ்வாறு பல ஊழிக்காலங்கள் உடனாகி, வேறாய் நின்று பின்னர் வந்து ஒன்றாய்க் கலவாது பண்டே சித்துப் பொருளாகிய உயிரினும் நுண்ணியனாய் ஒன்றாய் இருந்து பின்னர் விளங்கித்தோன்றும் இடம் திருஇடைமருதூராகும்.

குறிப்புரை :

பந்தம் - கட்டு; பிரிவு - வீடு. தெரி - இவ்விரண்டன் தன்மையையும் ஆராய்கின்ற. `தெரிபனுவல், பொருட்பனுவல்` எனத் தனித்தனி முடிக்க. பொருட் பனுவல் - பொருட் பெற்றிகளைக் கூறு கின்ற நூல்கள்; `தத்துவ சாத்திரங்கள்` என்றபடி. `பனுவலாகிய படி வழியில்` என்க. ``சென்று சென்று`` என்ற அடுக்குப் பன்மை பற்றி வந்தது. அதனால், பொருட் பெற்றிகளை வேறுவேறாய்க் கூறுகின்ற சமய நூல்கள் பலவற்றையும் முறையானே, `இதுவே மெய்ந்நூல்; இதுவே மெய்ந்நூல்` எனத் தெளிந்து அவ்வாற்றானே அறிவு சிறிது சிறிதாக முதிரப்பெற்று என்பது பொருளாயிற்று. `தொன்னூற் பரசமயந் தோறும் அது அதுவே - நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து` என்றார் குமரகுருபர அடிகளும். (கந்தர்கலி அடி 18) சமயங்கள் பலவும் `சிவ நெறியாகிய மேல் நிலத்திற்குப் படிகள்` என்பதைச் சிவஞானசித்தி, ``புறச்சமயநெறிநின்றும்`` (சிவஞான சித்தி அதி.2 பா.11) என்னும் திருவிருத்தத்தால் இனிதுணர்த்துதல் காண்க. சிவஞானபோத மாபாடியத்திலும், `சமயங்கள் பலவும் சைவத்திற்குப் படிகள்` என்பதற்கு இப்பகுதியே (சூ.8 அதி.1) மேற் கோளாகக் காட்டப்பட் டது. சென்று ஏறி - சென்றபின் சிவநெறியை எய்தி. `என் சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி` என்று எடுத்துக் கொண்டு உரைக்க. தெரியினும் தெரிவுறா வண்ணம் - ஆராய்ந்தாலும் விளங்காதபடி. `தெரிவுறா வண்ணம் உடனாய் உள்கலந்தோன்` என்க. எந்தையும் யாயும் யானும் என்று இங்ஙன் - என் தந்தையேயாகியும், என் தாயேயாகியும், யானேயாகியும் இவ்வாறு; இஃது, `உடனாய்க் கலந்தோன்` என்பதனோடு முடியும். `யாய்` என்பதற்குப் பொருள், `என் தாய்` என்பதே யாதலை, `யாயும் ஞாயும் யாரா கியரோ` (குறுந்தொகை - 40) என்பதனான் அறிக. `தாய்` என்பது பாடம் அன்று. இறைவன் உயிர்க்குயிராய்க் கலந்து நிற்றலை இனிது விளக்குவார், ``எந்தையும் யாயும் யானும்என் றிங்ஙன்`` என்றார். ``வந்து அணுகாது கலந்தோன்`` என்றது, `வேறாய் நின்று, பின்னர் வந்து ஒன்றாய்க் கலவாது, பண்டே ஒன்றாயிருந்து, பின்னர் விளங்கித் தோன்றினான்` என்றதாம். ஆகவே, முன்னர், ``கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறாவண்ணம்` என்றதும் இதுபற்றியேயாயிற்று. சித்துப் பொருளாகிய உயிரினும் நுண்ணியனாதல் பற்றி, ``நுணுகி`` என்றார்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண்
டேப்பமிட் டிலங்கெயிற் றழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணமெழுந் தாடுந்
தூங்கிருள் நடுநல்யா மத்தே
அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப
அந்திபோன் றொளிர்திரு மேனி
வரியர வாட ஆடும்எம் பெருமான்
மருவிடந் திருவிடை மருதே.

பொழிப்புரை :

பிணங்கள் எரியும் சுடுகாட்டில், புதைப்பதற்காக இடப்பட்ட பிணங்களின் கொழுப்பினை உண்டு ஏப்பம் விட்டு விளங்குகின்ற பற்களையும், நெருப்பினைக் கக்கும் வாயினையும், பிணத்தைத் தேடி ஓடுகின்ற கால்களையும் உடைய நெடிய பேய்க் கூட்டங்கள் குதித்து ஆடும் இருள் செறிந்த பெரிய நடுஇரவில், அருளை வெளிப்படுத்தும் புன்முறுவல் நிலவினை வெளிப்படுத்த, அந்திவானம் போலச் செவ்வொளி விளங்கும் திருமேனியில் கோடு களை உடைய பாம்புகள் அசையக் கூத்து நிகழ்த்தும் எம்பெருமான் விரும்பி உறைகின்ற இடம் திருஇடைமருதூர் ஆகும்.

குறிப்புரை :

எரி தரு - நெருப்பைத் தருகின்ற; என்றது, `நெருப்பை யுடைய` என்றபடி. கரிகாடு - சுடுகாடு. இடுபிண நிணம் - ஒரு பக்கத் தில் இடப்பட்ட பிணத்தினது நிணத்தை. துரு கழல் - பிணத்தைத் தேடி ஓடுகின்ற கால். `யாமத்தே ஆடும்` என இயையும்.
அருள்புரி முறுவல் - அருள் வழங்குதலைக் குறிக்கின்ற நகைப்பு. புன்னகையாதலின், ``முகிழ்நிலா`` என்றார். முகிழ்த்தல் - அரும்புதல். `புன்முறுவலாகிய இளநிலாவோடு தோன்றுதலின், செம் மேனி அந்திபோன்றொளிரும்` என்க. `திருமேனிக்கண்` என உருபு விரிக்க. வரி - கீற்று.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந் துருகி
அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங்
காதனேன் மாதரார் கலவித்
தொழிலை ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம்
தூங்கிருள் நடுநல்யா மத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்
மருவிடந் திருவிடை மருதே.

பொழிப்புரை :

அழகின்கண் ஆழ்த்துகின்ற செயற்பாட்டை உடைய பசியமட்கலம் வானத்தின் மழைத்துளி தன்மீதுபட்ட அளவில் நனைந்து கரையவும், நெருப்பிலிட்டுச் சுட்டபின்பு அம்மட்கலம் தண்ணீரிலேயே கிடந்தாலும் கேடின்றி இருப்பதுபோல அறிவில்லா தேனாகிய அடியேனுடைய உள்ளம் மகளிருடைய கலவியாகிய செயலில் ஆழ்ந்து இடர்ப்படாதவண்ணம் இருள் செறிந்த பெரிய நடு இரவில் ஒப்பற்ற இனிய யாழ் ஒலி ஒலிக்க வந்து என் உள்ளத்துப் புகுந்த பெருமான் உறைவிடம் இடைமருதே.

குறிப்புரை :

``எழிலை, அழலை, தொழிலை`` என்னும் இரண்ட னுருபுகளை ஏழனுருபாகத் திரிக்க. எழிலை ஆழ் செய்கைப் பசுங்கலன் - அழகின்கண் ஆழ்த்துகின்ற (அழகு மிகுமாறு செய்கின்ற) செயற்பாட்டையுடைய பச்சை மட்கலம். உருகி - கரைவதாய். அழலை ஆழ்பு - நெருப்பில் மூழ்கிய பின்பு. உருவம் - தனது வடிவம். புனலொடும் கிடந்தாங்கு - நீரிலே மூழ்கினாலும் அதனுடன் கேடின்றி இருந்தாற்போல. ஆதனேன் - அறிவிலேனாகிய எனது. `ஆதனேன் நெஞ்சம்` என இயையும். இடர்ப்படா வண்ணம் - மயக்கத்திற் படாதபடி. ``இடர்`` என்றது, ஆகுபெயராய், அதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் குறித்தது. `இடர்ப்படாவண்ணம் புகுந்தோன்` என இயையும். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்பு மாதராரது கலவியில் மிக ஆழ்ந்தபோதும் உள்ளம் அதனால், திரிவுபடாமை யாகிய அஃதொன்றையே கூறினாராயினும், மேற்போந்த உவமை யால் முன்பு அவரை எதிர்ப்பட்ட ஞான்றே உள்ளம் திரிந்து வேறுபட்டமையைக் கூறுதலும் கருத்தென்க. இஃது இறைவன் திருவருளைப் பெறாதவரது நிலைமைக்கும், பெற்றவரது நிலைமைக் கும் உள்ள பெரியதொரு வேற்றுமையை இனிது விளக்கியவாறு. வருகின்ற இருதிருப்பாட்டுக்களில் கூறப்படும் உவமைகளும் இக் கருத்துப்பற்றியனவே என்க. திருவருள் பெற்றார்க்கும் அப்பிறப்பில் நுகர முகந்துகொண்ட பிராரத்தவினை நிற்றலின், அது காரணமாக மாதரார் கலவியில் ஆழ்தல் உண்டாயினும் அவர் அதனால் மயங்கி அதனையே மேலும் மேலும் அவாவி அதற்கு ஆவனவற்றின்கண் விருப்புடையராய் அவற்றை ஆக்கவும், அதற்கு ஆகாதனவற்றின் கண் வெறுப்புடையராய் அவற்றை அழிக்கவும் முயலாது இறைவனது திருப்பணியிலே முனைந்து நிற்பராகலான், அவர்க்கு மயக்கம் இன்மை அறிக. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, நம்பியாரூரரது வரலாறேயாகும். அவர், ``பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்`` (தி. 7 ப.54 பா.1) என்றது இந்நிலையையேயாம். `கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை - மொண்டுண்டயர்கினும் வேல்மறவேன்` என்றார் அருணகிரிநாதரும். (அலங்காரம் - 37) இன்னும் மேற்காட்டிய உவமையானே இறைவன் திருவருள் கை கூடப்பெறாதவர் கடிய நோன்பு முதலியவற்றால் உடலை வருத்தி னாராயினும், அவர்க்கும் மயக்கம் நீங்குதல் இல்லை என்பதும் பெறப்படும். சைவ சமய ஆசிரியன்மார் சமண புத்த மதங்களின் ஒழுக்கங்களை இகழ்ந்தமை இதுபற்றியே என்பது உணர்க.
நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்துந் தாகமுதல் தவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்;
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானம்
கூடும்அவர் கூடரிய வீடும் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பர். (சிவஞான சித்தி. சூ. 10.5)
என்னும் சாத்திர முறையைக் காண்க. திருவருள் வாய்க்கப் பெறாது உலக மயக்கிடை ஆழ்ந்து கிடப்போர், தமது நிலையைத் திருவருள் பெற்றாரது நிலையாகப் பிறர்பாற் கூறின், அது, குற்றத்தின்மேலும் உய்தியில் குற்றமாய் முடியும் என்க. மழலை யாழ் சிலம்ப - இனிய யாழிசை ஒலிக்க. அகம் - உள்ளம்; `இல்லம்` என்பது நயம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

வையவாம் பெற்றம் பெற்றம்ஏ றுடையார்
மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாஞ் செந்தீப் பட்டஇட் டிகைபோல்
விழுமியோன் முன்புபின் பென்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த
நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

வைக்கோலை விரும்புகின்ற காளையை வாகன மாகப் பெற்று அதன்மீது இவர்கின்ற அழகினை உடைய பெருமானார் அடியேனை அழகு மிக்கோராகிய அடியாருடைய அன்பிலே நிற்கச்செய்து, செந்தீயிடை இடப்பட்ட செங்கல் வெந்தபின் உரம் பெற்று நிற்றல்போல, பாசத்தால் கட்டுண்டு எளியனாய் நின்ற யானும், ஞானத்தால் திண்ணியனாகும்படி செய்து, அடியேனுடைய உள்ளத்தில் எளிமையாக வந்து வீற்றிருக்கின்றார். கருநிறம் பொருந்திய கழுத்தினராய், பலகோடிக்கணக்கான அண்டங்களில் வாழும் தேவர்களுக்குத் தலைவரான அப்பெருமானார் தங்கி யிருக்கும் இடம் திருஇடைமருதே. அப்பெருமானார் வந்து என் உள்ளத்து வீற்றிருந்தமை முன்பு என்பேனோ, பின்பு என்பேனோ? அவர் வந்து உள் வீற்றிருந்தது ஒரு காலத்தன்று என்றுமேயாம்.

குறிப்புரை :

``முன்பு பின்பு என்கோ`` என்பதனை முதலில் வைத்து, `முன்பென்பேனா பின்பென்பேனா` எனப் பொருள் கூறி, அதனை, ``வந்து உள்வீற்றிருந்ததனை`` உட்கொண்டு கூறியவாறாக உரைக்க. `வந்து உள்வீற்றிருந்தது ஒருகாலத்தன்று; என்றுமே யாம்` என்றவாறு. இதன்பின், `விழுமியோன் வை அவாம் பெற்றம் பெற்று என்னை, வெய்யவாம் செந்தீப்பட்ட இட்டிகைபோல் அம் ஏறுடையார் மாதவர் காதல் வைத்து` எனக் கொண்டு கூட்டியுரைக்க. விழுமியோன் - யாவரினும் மேலானவன்; இதுவும் இறைவனையே குறித்தது. வை அவாம் பெற்றம் பெற்று - வைக்கோலை விரும்புகின்ற எருதினை ஊர்தியாகக்கொண்டு. இட்டிகை - செங்கல். `மண்ணால் ஆக்கப் படுகின்ற இது, செந்தீயில் வெந்தபின் உரம் பெற்று நிற்றல்போல, பாசத்தால் கட்டுண்டு எளியனாய் நின்ற யானும் ஞானத்தால் திண்ணியனாகும்படி` என்றவாறாம். `போல ஆகும்படி` என்னும் பொருட்டாகிய, `போல` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அம் ஏறுடையார் மாதவர் காதல் வைத்து - அழகு மிக்கோராகிய அடியாரது அன்பிலே நிற்கச் செய்து. அழகு - அருட்பொலிவு; அடியவர்க்கு ஏவல் செய்து நிற்பின், அஞ்ஞானம் நுழைதற்கு வாயில் இல்லாமை அறிக. நொய்ய ஆறென்ன - எளிய பொருள்போல. ``ஆறு`` என்றது, அதனாற் கிடைக்கும் பொருளை யுணர்த்தி நின்றது. `வீற்றிருந்த கோன்` என இயையும். மை - மேகம். இங்கு, `அவாம்` என்பது உவம உருபாய் நின்றது. `விழைய` என்பதோர் உவம உருபும் உளதாதல் அறிக. கருமை மிகுதி உணர்த்தற்கு, `நூறுநூறாயிர கோடி மேகம் போலும்` என்றார்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக்
கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு
நலங்கலந் தடியேன் சிந்தையுட் புகுந்த
நம்பனே வம்பனே னுடைய
புலங்கலந் தவனே என்றுநின் றுருகிப்
புலம்புவார் அவம்புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

கலங்குதலை உடைய பொய்கையின் நீர் தேற்றாங் கொட்டையால் தெளிவிக்கப்பட்ட இடத்து நீரோடு கலந்த மண் அடியில்பட நீர் தெளிவாக இருப்பதுபோல, அடியேன் சிந்தையுள் புகுந்து கலக்கத்தை நீக்கி நன்மையை அருளும், என்னால் விரும்பப் படும் பெருமானே! புதியவனாகிய அடியேனுடைய அறிவில் கலந்தவனே! என்று நிலையாக உருகிப் புலம்புவாரும், வீண் செயல் களில் செல்லாதவர்களும் ஆகிய அடியார்களுடைய, அருவிபோல் கண்ணீர் பெருகுதலை உடைய கண்களின் கண்மணியை ஒத்த அப் பெருமான் உறையும் இடம் திருஇடைமருதூரே.

குறிப்புரை :

`சேற்றால் கலங்கல் பெற்ற நீர் தேற்றாங்கொட்டை சேர்ந்ததனால் தெளிவுபெற்ற பின்னர் அச்சேற்றோடே இருப்பினும் கலங்கல் இன்றித் தெளிந்தே நிற்றல்போல` என்பது முதல் அடியின் பொருள். தெளிவிடத்து - தெளியும்பொழுது. கலங்கல் நீர் தெளிவு பெறுதல் தேற்றாங்கொட்டையால் என்பது நன்கறியப்பட்டதாகலின், அதனைக் கூறாராயினார். நலம் - திருவருள். ``கலந்து`` என்றதனை, `கலக்க` எனத் திரிக்க. `கலந்து, அதனால் உலகியலாற் கலங்கா திருக்குமாறு` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. புலம், ஐம்புலன்; இஃது அவற்றான் வரும் இன்பத்தைக் குறித்து நின்றது. திருவருள் கைவரப் பெற்றோர்க்கு `பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய்` விளை தலின் (தி.8 திருவுந்தியார் - 33) ``புலங் கலந்தவனே`` என்றார். ``வம்ப னேனுடைய புலங்கலந்தவனே`` என்றது, உருகிப் புலம்புவாரது கூற்றை, கொண்டு கூறியது. எனவே, ``வம்பனேன்`` என்றது பன்மை யொருமை மயக்கமாம். புலம்புவார் - அழுகின்றவர். அவம் புகார் - வீண் செயலிற் செல்லாதவர். `புலம்புவாரும், அவம் புகாரும் ஆகிய அவரது கண்ணில்` என்க. அருவி மலங்கல் கண் - அருவி போல நீர் மல்குதலையுடைய கண். அம், சாரியை. கண்மணிபோறலாவது, இன்றியமையாப் பொருளாகி நிற்றல்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்
கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே. 

பொழிப்புரை :

எண்ணற்ற மெய்யுணர்வு இல்லாத மக்கள் இருகண்களும் ஒருசேர மூடி உறங்கும் இருள் செறிந்த பெரிய நடுஇரவிலே, விழித்துக்கொண்டிருக்கும் ஒருவனுடைய கண்களில் மாத்திரம் சிவந்த சுடரின் வெளிச்சம் கலந்தாற்போல, இறைவனுடைய திருவருளில் கலந்து மெய்ம்மையை உணர்ந்த கருவூர்த்தேவர் வழங்கும் கரும்பு போன்ற இனிய தமிழ்மாலையைப் பெரிய சோலை களில் மருத யாழ் ஒலியோடு பாட, அதனைக் கேட்கவரும் நீலகண்ட னாகிய, பல அண்டங்களிலும் உள்ள தேவர்கள் எல்லோருக்கும் தலைவனான சிவபெருமான், உகந்தருளியுள்ள இடம் திருஇடை மருதூரே ஆகும்.

குறிப்புரை :

ஒருங்கு - ஒற்றுமைப்படுத்துகின்ற. இருகண்ணும் ஒற்றுமைப்படுதலாவது, ஒன்றனையே நோக்குதல். இதனை எடுத் தோதியது, உறங்குங்காலும் அவை ஒருங்கே உறங்கும் என்றற்கு. `இருங்கண்ணின்` எனப் பாடம் ஓதுதல் சிறவாது. கண்ணின் - கண்ணினையுடைய. ``புன்மாக்கள்`` என்றது, மெய்யுணர்வில்லாத மக்களையும் உளப்படுத்து. கருமை இன அடையாதலின், `ஓர் கருங்கண்` என்றதனை, `ஒருகண்` என்றே கொள்க. `ஒருகண்` என்பதில் `ஒன்று` என்றது, `முதல்வகையான் ஒன்று` என்றவாறு. அஃதாவது, `எண்ணில் புன்மாக்களுடைய இருகண்களும் உறங்குகின்ற நடுநல் யாமத்தில், தமது ஒருகண் மாத்திரம் செழுஞ்சுடர் விளக்கங் கலந்து பொருள்களைக் கண்டாற்போல` என்றதாம். நின்று இமைக்கும் செழுஞ்சுடர் - நிலைபெற்று ஒளிரும் செழுமையான விளக்கு. விளக்கம் - ஒளி. கலந்து உணர் - இறைவனது திருவருளிற் கலந்து மெய்ம்மையை உணர்ந்த. கருவூர் - கருவூர்த் தேவரது. இறைவன் நடுநல் யாமத்து வந்ததாக இவர் பலவிடத்துக் கூறலின், இவர்க்கு அவன் அருள்புரிந்த நேரம் இடையாமமாதல் கூடும். இனி, அஞ் ஞானத்தின் மிகுதியை இவ்வாறு உருவகமாகக் கூறினார் எனினுமாம். மருதம் - மருதநிலம். அதன்கண் உள்ள யாழில் பாடப்படுவது செவ்வழிப்பண் எனினும், பஞ்சமும் பாடப்படுவ தன்றாகாது என்க. மருதூராகலின் ஆங்கு உள்ளது மருதயாழேயாம். `மருதயாழொடு` என ஒடுவுருபு விரிக்க. ``உதிப்ப வரும்`` என்றது, `உதித்தலால் அதனைக்கேட்டு வருகின்ற` என்பதாம். அஃதாவது, இத்திருப்பதிகத்தை யாவர் மருதயாழோடு பாடினும் இடைமருதுறை இறைவன் அவர்பால் வருவான் என்றவாறு. இதனால், இத்திருப் பாட்டுத் திருக்கடைக்காப்பாயிற்று. முன்னரும் (தி.9 பா.179) ``மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்`` என்றமையால், இறைவன் இவர்பால் இசைவிருப்பினன்போல வந்து அருள்செய்தான் எனக் கொள்ளல் தகும்.
சிற்பி