பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்


பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன்
முரிவதோர் முரிவுமை யளவும்
தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே. 

பொழிப்புரை :

கைகளில் வெள்ளிய முத்துக்களால் ஆகிய தோள் வளைகளை அணிந்து, கழுத்தில் ஒப்பற்ற தனிமாலையைச்சூடி, மூன்று கண்களை உடைய தலைவராய், இவ்வுலகிலே மிக்க சிறப்பையுடைய திருவாரூரில் முதல்வராய், வீதிகளில் திருவுலாப்போகும் அழகராய் அசபாநடனம் என்று போற்றப்படும் கூத்தினைச் சிறப்பாகப் புரிந்து வருகிறார். திருவீதி உலாமேற்கொண்டு, இங்ஙனம் உடம்பை வளைத்து எம்பெருமான் ஆடும் ஆட்டத்தின் விளக்கம் உமாதேவி அளவிலும், கங்காதேவி அளவிலும் அடங்காது மேம்பட்டுள்ளது. எம்பெருமானுடைய கொள்கைதான் யாதோ?

குறிப்புரை :

வால்முத்தின் - வெண்மையான முத்துக்களையுடைய. சரி - தோள்வளை. வளை - கைவளை. முரிவது ஓர் முரிவு - விளங்கு வதாகிய ஒரு விளக்கம். `உமாதேவியின் அளவிலும், கங்காதேவியின் அளவிலும் அடங்குவதன்று; மேற்பட்டது` என்றவாறு. உம்மைகள், எண்ணோடு சிறப்பு. ``என்னோ தம் ஒருப்பாடு`` என்றதை, `தம் ஒருப் பாடு என்னோ` என மாற்றி இறுதியிற் கூட்டி உரைக்க. ஒருப்பாடு - கொள்கை. `வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொள்ளு தல்போலும்` என்பதாம். இவர் முசுகுந்தச் சக்கரவர்த்தியால் இந்திரலோகத்திலிருந்து கொணர்ந்து திருவாரூரில் எழுந்தருளு விக்கப்பட்டவராதல் அறிக.
ஆதி - முதல்வன்; இது பன்மையொருமை மயக்கம். வீதி விடங்கர் - தெருவில் உலா வரும் அழகர். இது தியாகராசருக்குப் பெயர். திருவாரூரில் புற்றிடம் கொண்டார் திருமூலட் டானத்தேயிருக்க, இவர் வீதியில் எழுந்தருளிவந்து காட்சி வழங்கு பவராதலின், இப்பெயர் உடையராயினார். இவர் வீதியில் எழுந் தருளுங்கால் நடனம் புரிந்து வருதலும், அந்த நடனம், ``அசபா நடனம்``` என்று போற்றப்படுதலும், அந்நடனத்தை இவர் முதற்கண் திருமாலின் இதயத்தில் இருந்து புரிந்தவராதலும் அறிந்து கொள்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே. 

பொழிப்புரை :

தேவர்களே! சிவபெருமானிடத்துப் பத்தியோடு தியானிப்பவர்கள் அவனுடைய அருளைப்பருக, அவர்கள் பருகுந் தோறும் அமுதம்போல அவர்களிடத்தில் அவ்வருள் இனிமை வழங்கும். இவருடைய அழகிய உருவம் ஒளிவீசிக் கொண்டிருப் பதைக் காணுங்கள். எம்பெருமானார் அருட்சத்தியாகியும், மங்கல மாகிய சிவமாகியும், உலகுகளை எல்லாம் படைத்த ஒப்பற்ற முழு முதற்பொருளாகியும், உலகங்கள் தோன்றுவதற்கு வித்தாகியும் விளங்கித் திருவாரூர் முதல்வராய் வீதிகளில் உலாவரும் அழகராய் அசபா நடனம் என்னும் கூத்து நிகழ்த்துகிறார்.

குறிப்புரை :

``தேவர்காள்`` என்பதனை முதலிற்கொண்டு, அதன் பின்னர்ப் பின்னிரண்டடிகளைக் கூட்டியுரைக்க. `உணர்வோர் பருகுதோறு` என இயையும். `வாய்மடுத்துப் பருகுதல்` என்பது பான்மை வழக்கு. ``அவர்க்கே`` என்ற பிரிநிலை ஏகாரம், பிறர்க்குத் தித்தியாமை குறித்து நின்றது. தித்தியா - தித்தித்து. இருந்தவா - இருந்தவாற்றை. தேவர்களை நோக்கிக் கூறினார், `யாம் திவ்விய தேகமும் (ஒளியுடம்பு) உடையோம்; அதனால் தேவராய் நிற்கின் றோம் எனச் செருக்குகின்ற உங்கள் உருவத்தின் ஒளி இவரது திருவுரு வத்தின் ஒளிக்கு எட்டுணையேனும் போதாமையைக் கண்டு அடங்கு மின்கள்` என்றற்கு. இனி வருவன அத்திருவுருவத்தின் பெருமைகள். சத்தியாய் - அம்மையாய். சிவமாய் - அப்பனாய். தனிமுழு முதலாய் - அவ்வாறு நிற்றலானே உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய். அதற்கு ஓர் வித்துமாய் - தம்மால் படைக்கப்பட்ட அவ்வுலகத்தின் தோற்றத் திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய்.
சிற்பி