பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில்


பண் :சாளரபாணி

பாடல் எண் : 1

முத்து வயிரமணி மாணிக்க
மாலைகண்மேற்
றொத்து மிளிர்வனபோற் றூண்டு
விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும்
எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க
மாயிற்றே.

பொழிப்புரை :

முத்து, வயிரம், மாணிக்கம் என்ற மணிகளால் செய்யப்பட்ட மாலையின்மேல் பூங்கொத்துக்கள் ஒளிவீசுவது போன்றும், தூண்டப்பட்ட விளக்கின் ஒளி போன்றும், எல்லாத் திசைகளிலும் உள்ள தேவர்கள் போற்றிப்புகழும் தில்லைத் திருத்தலத் திலுள்ள, ஒளிவீசும் பொன்னம்பலம் எம்பெருமானுக்கும் திருக்கூத்து நிகழ்த்தும் அரங்கமாக ஆயிற்று.

குறிப்புரை :

``எத்திசையும்`` என்பதை முதலிற் கொள்க. வயிரமணி, இருபெயரொட்டு.
தொத்து - பூங்கொத்து. இது தூண்டு விளக்குக்களுக்கு உவமை. ஏய்ப்ப - பொருந்த வைக்க; ஏற்றி வைக்க. `ஏய்ப்ப ஏத்தும்` என இயையும். ``அத்தனுக்கும்`` என்ற உம்மை சிறப்பு.
`அவ்வம்பலமே` சுட்டு வருவிக்க. ``அம்பலமே`` என்ற ஏகாரம், `பிறிதிடம் இல்லை` என்னும் பொருட்டாய், அம்பலத்தது சிறப்புணர்த்தி நின்றது.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 2

கடியார் கணம்புல்லர் கண்ணப்பர்
என்றுன்
அடியார் அமர்உலகம் ஆளநீ
ஆளாதே
முடியாமுத் தீவேள்வி மூவா
யிரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத்
தாடினையே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க கணம்புல்ல நாயனார், கண்ணப்ப நாயனார் என்ற பெயருடைய உன் அடியவர்கள் சிவலோகமாகிய வீடுபேற்றுலகத்தை ஆளவும், நீ அதன்கண்ஆட்சி செய்வதனை விடுத்து, என்றும் அழிதல் இல்லாத முத்தீக்களால் வேள்விகளை நிகழ்த்தும் தில்லை மூவாயிரவர் அந்தணரோடு உடன் உறையும் வாழ்க்கையை மேற்கொண்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்து ஆடுகின்றாய்.

குறிப்புரை :

கடி ஆர் - விளக்கம் (புகழ்) பொருந்திய. `உன்றன்` என்னாது, `உன்` என்றே ஓதுதல் பாடம் ஆகாது என்க. `அமரர் உலகம்` என்பது குறைந்து நின்றது. `அமருலகம்` என்பதனை முதலிற் கூட்டுக. ``அடியார் ஆள நீ ஆளாது`` என்றது, `அதன்கண் விருப்பம் இன்மையால் விடுத்தாய்` என்னும் குறிப்பினது. இன்னும், அடியார் பலரையும் அமருலகம் ஏற்றுதல் தில்லையிலிருந்தேயாம் என்பதும் கருத்து. பின்னர் நாவுக்கரசர் முதலிய மூவர் முதலிகளுக்கு அருள்புரிந்தமையை எடுத்தோதுவதும் இக்கருத்துப் பற்றியே என்க. முடியா - என்றும் வளர்கின்ற. ``குடிவாழ்க்கை கொண்டு`` என்றது, ``அவருள் ஒருவனாய்` என்றபடி. குலாவி - மகிழ்ந்து.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 3

அல்லியம் பூம்பழனத் தாமூர்நா
வுக்கரசைச்
செல்லநெறி வகுத்த சேவகனே
தென்றில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா
டரங்காகச்
செல்வ நிறைந்தசிற் றம்பலமே
சேர்ந்தனையே.

பொழிப்புரை :

அக இதழ்களோடு கூடிய அழகிய பூக்கள் பொருந்திய வயல்களை உடைய திருவாமூரில் அவதரித்த திருநாவுக்கரசு சுவாமிகள் வீடுபேற்றை அடையும் வழியைக் காட்டிய வீரனே! அழகிய தில்லைநகரில் முல்லை நிலத்தில் மேயும் காளையை ஒத்த காளையை இவர்ந்தவனே! நீ கூத்தாடுதலை நிகழ்த்தும் அரங்கமாகச் செல்வம் மிகுந்த சிற்றம்பலத்தை அடைந்துள்ளாயே.

குறிப்புரை :

அல்லி - அகஇதழ். பழனம் - வயல். ஆமூர் - திருவாமூர். இது திருநாவுக்கரசர் திருவவதாரம் செய்த தலம். ``நாவுக்கரை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்றதனை, `நாவுக்கரசுக்கு` எனத் திரிக்க. ``கொல் விடை`` என்பது ஐகாரம் பெற்று நின்றது. கொல்விடை போலும் விடை என்றபடி. கொல்விடை, விடலையர் தழுவுதற் பொருட்டு ஆயர் இனத்தில் வளர்க்கப்படுவன. விடை ஏறீ - இட பத்தை ஊர்பவனே.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 4

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்
டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட்
கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி
தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை
யாயிற்றே. 

பொழிப்புரை :

எம்மைப் பிணித்திருக்கும் கொடிய வினையாகிய நோயினை அறவே அழித்து, எம்மை அடியவராகக் கொண்ட சீகாழி மன்னனாகிய திருஞானசம்பந்த நாயனாரையும் அடிமையாகக் கொண்டருளிய பெருமானுக்கு, அம்பு போன்ற கண்களை உடைய உமாதேவியும் தாமுமாக அழகிய தில்லைத் திருத்தலத்திலுள்ள பொன்னம்பலமே எழுந்தருளியிருப்பதற்குரிய இடமாக ஆகிவிட்டது.

குறிப்புரை :

`எம் வினைநோய்` என இயையும். `பந்த வினை, வல்வினை` எனத் தனித்தனி இயைக்க. பந்தம் - கட்டு. திருப்பதிகங் களை வினைதீர்தற்கு வழியாகத் திருக்கடைக்காப்பு அருளிச்செய்து சென்றமையின், `எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டு எமை ஆளும் சம்பந்தன்` என்றார். அம்பு உந்து - அம்புபோலப் பாய்கின்ற. ``தானும்`` எனப் படர்க்கையாகக் கூறினார். ``தான்`` என்றது, கூத்தப் பெருமானை. `கண்ணாளும் தானும் சேர்ந்து இருக்கை தில்லை அம்பலமே ஆயிற்று` என மாறிக் கூட்டுக. `செம்பொன்னால்` என உருபு விரிக்க. இருக்கை - இருக்கும் இடம்.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 5

களையா உடலோடு சேரமான்
ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை
மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா
யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின்
ஆடரங்கே. 

பொழிப்புரை :

தம் உயிர் இவ்வுடம்பைவிடுத்து நீங்காமல் இந்த உடலோடும் சேரமான் பெருமாள் நாயனாரோடும் ஆரூரன் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார் மதத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தல் நீங்காத வெள்ளை யானையைக் கயிலை மலையை அடைவதற்கு இவர்ந்து செல்லவும், இளம்பிறையைச் சூடிய பெருமானே! நீ தில்லை மூவாயிரவரோடும் கலந்து விளையாடுகின்ற திருச்சிற்றம்பலமே உனக்குக் கூத்தாட்டு நிகழ்த்தும் அரங்கமாக உள்ளது. சேரமான் குதிரையில் கயிலை சென்றார் என்க. மதிமுடி - எனவும் பாடம் ஓதுப.

குறிப்புரை :

`சேரமானொடு` என உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் ஒடுவுருபு விரிக்க. `மதம் விளையா` என மாற்றுக. விளையா - விளைந்து; பெருகி. மாறா - நீங்காத. மேற்கொள்ள - ஏறிச்செல்லும் படி. முளையாம் - இளைதாகிய. அளையா - கலந்து. `மேற்கொள்ள விளையாடும்` என இயையும். `மேல் கொள்ள விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே` என்றாராயினும், `மேல்கொள்ள விளையாடி ஆடு அரங்கு அம்பலமே` என்பது கருத்தென்க.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 6

அகலோக மெல்லாம் அடியவர்கள்
தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ
தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள்
நண்ணியசீர்ச்
சிவலோக மாவதுவும் தில்லைச்சிற்
றம்பலமே.

பொழிப்புரை :

நீ புகுவதற்கு வேறு உலகம் உண்டு என்று நீ கருதாதபடி, மேல் உலகங்களை அடைவதற்கு உரிய நெறியானே எய்திய புண்ணியங்களால், இந்நிலவுலகம் முழுதிலுமுள்ள அடியவர் கள் உன்னைச் சூழ்ந்து நிற்க, அதனால் பொருந்திய சிறப்பினையுடைய சிவலோகமாகவே தில்லைத் திருப்பதியின் சிற்றம்பலம் அமைந்துவிட்டது.

குறிப்புரை :

``நீ`` என்பதொழிய, `புகலோகம்` என்பது முதல், `புண்ணியங்கள்` என்பது காறும் உள்ள அனைத்தையும் முதலிற் கூட்டுக. புக - புகுவதற்கு. லோகம் உண்டு என்று - வேறு உலகம் உண்டு என்று நினைத்து. `புவலோகம்` என்றது, `மேலுலகம்` என்னும் அளவாய் நின்றது. புவலோக நெறி படைத்த - மேலுலகத்தை அடைவிக்கும் நெறியானே எய்திய. `புண்ணியங்களால்` என உருபு விரித்து, அதனை, ``சூழ`` என்பதனோடு முடிக்க. புண்ணியங்களை எய்தினோர் அடியவர்கள். அகலோகம் - இவ்வுலகம். இத்திருப் பாட்டில் உயிரெதுகை வந்தது.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 7

களகமணி மாடம் சூளிகைசூழ்
மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார்
போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை
ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே
சேர்ந்தனையே.

பொழிப்புரை :

வெண்சாந்து பூசப்பட்ட அழகிய மேல்மாடமும், மேல்மாடத்தின் முகப்பும் சூழ்ந்துள்ள பேரில்லங்களின் மேல் நிலத் தில், கூந்தல் வந்து படிந்திருக்கும் பிறை போன்ற நெற்றியை உடைய வராகிய, ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த மகளிர் உன்னைப் போற்றிப் பாட, நல்ல பிரகாசமுடைய இரத்தினங்கள் அவ்விடத்தில் கவியும் இருளைப்போக்கும் தெளிந்த ஒளியை உடைய, தில்லைப் பதிக்கண் உள்ள திருச்சிற்றம்பலத்தையே நீ வந்து சேர்ந்துள்ளாய்.

குறிப்புரை :

களக மணி - நீல மணி. மாடம் - மேல்நிலம். சூளிகை - மேல்மாடத்தின் முகப்பு `மாடத்தைச் சூளிகை சூழ்ந்த மாளிகை` என்க. அளக நுதல் - கூந்தலை உடைய நெற்றி. ``மதி`` என்றது, பிறையை. `மதிநுதலாராகிய ஆயிழையார்` என்க. போற்றிசைப்ப (உன்னைத்) துதிக்க. தெளி - விளக்கம்.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 8

பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும்
பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத்
தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர்
நாடோறும்
ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின்
ஆடரங்கே.

பொழிப்புரை :

பாடகம், பாத கிண்கிணி, சிலம்பு என்று தம் கால் களில் அணிந்த அணிகலன்கள் அசைந்து ஒலிக்க நாள்தோறும் கதை தழுவிவரும் கூத்தினை நிகழ்த்துபவராய் வளையல்களை அணிந்த கைகளை உடைய அம்மகளிர் உன்னை வழிபட்டுப் புகழ, இப்பழைய உலகில் பொன்னால் மேற்கூரை வேயப்பட்டு அமைந்துள்ள பொன்னம்பலம் உனக்கு நடன சபையாக அமைந்துள்ளது.

குறிப்புரை :

`பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்தொலிப்ப, நாள்தோறும் நாடகத்தின் கூத்தை நவிற்றும் அவராகிய சூடகக்கை நல்லார் தொழுது ஏத்தத் தொல்லுலகில் ஆடு நின் அரங்கு ஆடகத்தால் அமைந்த அம்பலம்` எனக்கொண்டு கூட்டி உரைக்க.`பாடகம், நூபுரம், சிலம்பு` என்பன, மகளிரது காலில் அணியும் அணிவகைகள். பேர்ந்து - அசைந்து. சூடகம் - கைவளை. நாடகம் - கதை தழுவிய கூத்து. `அது போலும் கூத்து` என்க. அஃதாவது, கதைப் பொருளைக் கைகாட்டி ஆடும் கூத்து. இன் கூத்து - இனிய கூத்து. நவிற்றுதல் - செய்தல். மேய்ந்து - வேயப்பட்டு.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 9

உருவத் தெரியுருவாய் ஊழிதோ
றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும்
பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு
மாளிகைசூழ்ந்
தரவிக்கும் அம்பலமே ஆடரங்க
மாயிற்றே.

பொழிப்புரை :

பல ஊழிக்காலங்கள் உன் புகழைப்போற்றி வழிபட்டுப் பிரமனும், திருமாலும் உன்னை வணங்கிப் புகழ, சூரியனை ஒப்ப ஒளிமிக்கு விளங்குகின்ற மாளிகைகளால் சூழப்பட்டு, ஒலியை உண்டாக்குகின்ற சிற்றம்பலமே அழகிய தீப்பிழம்பு போன்ற வடிவுடன் நீ கூத்து நிகழ்த்தும் அரங்கமாக அமைந்துவிட்டது.

குறிப்புரை :

உருவத்து - அழகையுடைய. `எரியுருவாய் ஆடு அரங்கம்` எனவும், `ஏத்த ஆடு அரங்கம்` எனவும் இயையும். `அரங்கம் மாளிகை சூழ்ந்து அரவிக்கும் அம்பலமே ஆயிற்று` என்க. இரவி - சூரியன். அரவிக்கும் - ஒலியை உண்டாக்குகின்ற.

பண் :சாளரபாணி

பாடல் எண் : 10

சேடர் உறைதில்லைச் சிற்றம்
பலத்தான்றன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து
பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்துங்
கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை
பற்றுவரே. 

பொழிப்புரை :

சான்றோர்கள் வசிக்கின்ற தில்லைத் திருத்தலத் திலுள்ள சிற்றம்பலத்தை உடையவனாகிய கூத்தப்பிரானுடைய ஆனந்தக்கூத்தின் சிறப்பினை அறிந்து பூந்துருத்திக்காட நம்பி இயற் றிய தமிழ்மாலையில் உள்ள பாடல் இவை பத்தினையும் அவற்றின் கருத்தை அறிந்து பாடும் தொழிலில் வல்லவர்கள் அடையத்தக்க இடமாகிய வீடுபேற்றினை அடைவர்.

குறிப்புரை :

சேடர் - தொண்டர். `பூந்துருத்திக் காடன் சிற்றம்பலத் தான்றன் ஆடல் அதிசயத்தை அறிந்து கருத்து அறிந்து பாடும் தமிழ் மாலையாகி இவை பத்தும் வல்லார், பற்றும் நிலை பற்றுவர்` எனக் கொண்டு கூட்டுக. கருத்து - பாடக் கொள்ளும் பொருள். பற்றும் நிலை - அடையத்தக்க நிலை; வீடு. பற்றுவர் - அடைவர்.
சிற்பி