கண்டராதித்தர் - கோயில்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்றுகொல் எய்துவதே. 

பொழிப்புரை :

மின்னலைப் போல ஒளிவீசும் மகளிருடைய வடிவங்கள் மாடங்களின் மேல்நிலையில் விளங்கவும், வெண்கொடி கள் அம்மாளிகைகளைச் சுற்றிலும் பறக்கவும் அமைந்த அழகான தில்லை என்ற திருத்தலத்தில், பொன்னாலாகிய மலை ஒன்று வந்து அவ்வூரில் தங்கிவிட்டது போலும் என்று கருதுமாறு, தென்னா என்று இசைஒலியை எழுப்பி வண்டுகள் பாடும் அவ்வூரின் பொன்னம்பலத் தில் எழுந்தருளியிருக்கும், என் கிட்டுதற்கரிய அமுதமாகிய எங்கள் தலைவனை அடியேன் என்று கிட்டப்பெறுவேன்?

குறிப்புரை :

மின்னார் - பெண்கள். மேல் - மாடங்களின் மேல் நிலையில். `விளங்க` என்பது, ``சூழ`` என்பதனோடு முடிய, ``சூழ`` என்பது, ``நின்றது`` என்பதனோடு முடியும். பொன்னார் குன்றம், பொன்னம்பலத்திற்கு உவமை. ``என்னா`` என்பதற்கு, `மருளும்` என்று ஒருசொல் வருவித்து முடித்து, அதனை,`மருளும் அம்பலம்` என இயைத்து முடிக்க. ``தென்னா`` என்பது ஒலிக்குறிப்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
கூடுவ தென்றுகொலோ.

பொழிப்புரை :

என்றும் அணையாத முத்தீக்களையும், ஐவகை வேள்விகளையும், ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் முறையே வளர்த்து, நிகழ்த்தி, கற்று, ஓதும் அந்தணாளராய், பசுக் களின் நெய், பால், தயிர் இவற்றை ஆகுதிகளாகச் சொரிந்து வேள்வி களை நிகழ்த்தி மேம்பட்ட மூவாயிரவர் வேதியரோடு, முன் ஒரு காலத்துப் பதஞ்சலி முனிவர் உன் கூத்தினைக்காண நாட்டிய அரங் காகிய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமானே! உன் திருக் கூத்தினைக் காணும் வாய்ப்பு அடியேனுக்கு என்று கிட்டுமோ?

குறிப்புரை :

ஓவா - ஒழியாத. முத் தீ, `ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி` என்பன. அஞ்சு வேள்வி `பிரமயாகம், தேவயாகம், பிதிர்யாகம், மானுடயாகம், பூதயாகம்` என்பன. ஆறங்கம் `சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்` என்பன. இவை வேதத்தின் பொருளையும், ஒழுக்கத்தையும் அறிதற்குக் கருவியாகும். ஆவேபடுப்பார் - பசுக்களின் நெய், பால், தயிர்களை மிகுதியாகச் சொரிவர். அரங்கு - அம்பலம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

முத்தீ யாளர் நான்ம றையர்
மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
அணைவதும் என்றுகொலோ

பொழிப்புரை :

முத்தீ ஓம்பி நான்மறை ஓதும் மூவாயிரவராய் உன் திருவுள்ளக் குறிப்பிற்கு ஏற்ப வாழும் தன்மை உடையவர்கள் ஓதிய நான்கு வேதங்களையும் தெத்தே என்று இசை எழுப்பி வண்டுகள் பாடும் அழகிய தில்லையின் சிற்றம்பலத்தில் உள்ள தலைவனே! உன்னுடைய ஞான ஆனந்தத் திருக்கூத்தினைத் தரிசிக்க அடியேன் உன்னிடம் வந்து சேருவது எந்த நாளோ!

குறிப்புரை :

`இரணிய வன்மன்` என்னும் அரசன், வியாக்கிரபாத முனிவருடைய கட்டளையின்படியே, `கங்கை, யமுனை` என்னும் இருநதிகளின் இடையேயிருந்த முனிவர் மூவாயிரவரைத் தில்லைக்கு அழைத்து வந்து எண்ணிக்காட்டிய பொழுது, ஒருவர் குறைய அவன் திகைத்து வருந்துதலும், தில்லைக் கூத்தப் பெருமான், `இவர்கள் எம்மையொப்பார்கள்; நாமும் அவர்களை யொப்போம்; நாம் அவர் களில் ஒருவரானோம்; வருந்தற்க` என்று அருளிச்செய்தார் என்பது தில்லை மூவாயிரவரைப் பற்றிய வரலாறு ஆதலின், அவரை, `நின் னோடு ஒத்தே வாழும் தன்மையாளர்` என்றார். இவ்வரலாற்றைக் கோயிற் புராணத்தால் அறிக. `தில்லைவாழந்தணர் ஓதுகின்ற நான்கு வேதங்களை வண்டுகள் பாடும்` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

மானைப் புரையும் மடமென் னோக்கி
மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
அம்புலி சூடும்அரன்
றேனைப் பாலைத் தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
கூடுவ தென்றுகொலோ.

பொழிப்புரை :

மானின் பார்வையை ஒத்த பார்வையை உடைய ளாய் மடம் என்ற பண்பினை உடைய பார்வதியோடு, பஞ்சகவ்விய அபிடேகம் செய்யப்படும் தலையின் மீது ஒரு பிறையைச் சூடும் சிவபெருமானாய்த் தேன் போலவும், பால் போலவும் இனியனாய்த் தில்லைத் திருத்தலத்தில் விளங்குகின்ற செம்பொன்மயமான அம்பலத் தில் உள்ள தலைவனாய், ஞானக்கொழுந்தாய் உள்ள எம்பெருமானை அடியேன் கூடும் நாள் எந்நாளோ?

குறிப்புரை :

ஆன் அஞ்சு - பஞ்ச கௌவியம். ``ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்` என்ற அப்பர் திருமொழியைக் காண்க. `ஆனைஞ்சு` எனவும் பாடம் ஓதுவர். அம்புலி - சந்திரன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

களிவான் உலகிற் கங்கை நங்கை
காதலனே அருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க
உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு
செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
உறுவதும் என்றுகொலோ.

பொழிப்புரை :

`களித்து வாழ்தற்குரிய வானுலகிற்கு உரிய கங்கை என்ற பெண்ணின் கணவனே! எனக்கு அருள் செய்வாயாக!` என்று அழகை உடைய திருமால் உன் முன்னே வரம் வேண்டிப் படுத்துக் கிடக்கவும் அவனுக்கு அருளாது உன் அடியவர்களுக்கே அருள் செய்யும் தெளிவு பொருந்திய அமுதமே! தில்லைத் திருப்பதியில் விளங்குகின்ற செம்பொன்மயமான அம்பலத்துள் ஒளிவீசும் மேம் பட்ட ஒளியே! உன்னை நாய்போன்ற கடையேனாகிய நான் என்று வந்து அடைவேன்?

குறிப்புரை :

களி வான் உலகு - களித்து வாழ்தற்குரிய வானுலகம். `அங்குள்ள கங்கை` என்க. `பகீரதன் பொருட்டு வானுலகத்திலிருந்து வந்த கங்கையைச் சிவபெருமான் சடையில் தாங்கினார்` என்பது வரலாறு. ஒளிமால் - அழகை யுடைய திருமால். முன்னே - உனது திருமுன்பில். வரம் கிடக்க - வரம்வேண்டிப் பாடு கிடக்க. `அவனுக்கு அருளாமல் அடியார்க்கு அருளுகின்றாய்` என்றபடி. தில்லைக் கூத்தப்பெருமான் திருமுன்பில் திருமால் கிடந்த கோலத்தில் இருத்தல் காண்க. ``வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே`` என்றார் திருக்கோவையாரினும் (தி.8 கோவை பா.86). தெளிவுஆர் - தெளிவு பொருந்திய. உறுவது - அடைவது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப்
பதஞ்சலிக் காட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன்
மாமறை யோர்வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடுகின்ற
காரார் மிடற்றெம் கண்ட னாரைக்
காண்பதும் என்றுகொலோ.

பொழிப்புரை :

உலகிலுள்ள மக்களெல்லாம் தன்னை வந்து வணங்கவும், பதஞ்சலி முனிவருக்காகத் திருக்கூத்து ஆடுதலை விரும்பி மேற்கொண்டவனாய், கச்சணிந்த முலையை உடைய பார்வதி பாகனாய், மேம்பட்ட வேதியர் வணங்கச் சிறப்பால் மேம் பட்ட தில்லையம்பதியின் செம்பொன் அரங்கில் திருக்கூத்து நிகழ்த்து கின்ற நீலகண்டனாகிய எம் தலைவனை எந்நாள் காண்பேனோ?

குறிப்புரை :

``முழுதும்`` என்பது, `எல்லாரும்` எனப்பொருள் தந்துநின்றது. பதஞ்சலிக்கு - பதஞ்சலி முனிவர் பொருட்டாக. ஆட்டு உகந்தான் - ஆடுதலை விரும்பினான். `இறைவனது திருநடனத்தைத் தில்லைக்கண்ணே காண முதற்கண் தவம் செய்திருந்தவர் வியாக்கிர பாத முனிவர்` என்பதும், பின்பு பதஞ்சலி முனிவர் அவருடன் வந்து சேர்ந்தபின்பே இருவருக்குமாக இறைவன் தில்லையில் திருநடனம் காட்டினான் என்பதும் கோயிற்புராண வரலாறு. ``பதஞ்சலிக் கருளிய பரமநாடக` என்று அருளிச்செய்தார் திருவாசகத்தும் (தி.8 கீர்த்தி-138) கண்டன் - தலைவன். `கண்டு அன்னாரை` எனப் பிரித்து உரைத்தலுமாம்; இஃது ஒருமைப் பன்மை மயக்கம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன்
இருபது தோளும்இற
மலைதான்எடுத்த மற்றவற்கு
வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன் றெய்த வில்லி
செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையி னானைக்
காண்பதும் என்றுகொலோ. 

பொழிப்புரை :

இலைவடிவமாக அமைந்த ஒளி பொருந்திய வேலை ஏந்திய இலங்கை மன்னனுடைய இருபது தோள்களும் நொறுங்குமாறு செய்து, கயிலைமலையை எடுத்த அவனுக்குச் சந்திரகாசம் என்னும் வாளோடு முக்கோடி வாழ்நாளும் கொடுத் தவனாய், வில்லினால் முப்புரங்களையும் எய்த வில்லாளனாய், செம்பொன்மயமான சிற்றம்பலத்தில் மான்கன்றை ஏந்திய கையனாய் உள்ள பெருமானை அடியேன் எந்நாள் காண்பேன்?

குறிப்புரை :

``மலைதான் எடுத்த`` என்பதை முதலிற் கூட்டுக. இற - முரிய. `இறச் செய்து` என ஒருசொல் வருவிக்க. மறக்கருணையின்பின் அறக்கருணை செய்தமையைக்குறித்தலின், மற்று, வினைமாற்றின் கண் வந்தது. நாள் - நீண்ட வாழ்நாள். சிவபெருமான் இராவணனுக்கு வாளொடு நாள்கொடுத்தமையை,
``எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே``
என்னும் சுந்தரர் திருமொழியானும் (தி.7 ப.55 பா.9) அறிக. கலையார் மறிபொற் கையினான் என்பது, ஒருபெயர்த் தன்மைத்தாய் நின்று `அம்பலத்து` என்பதற்கு முடிபாயிற்று. கலை - ஆண்மான்; மறி - கன்று (குட்டி) `கலை மறி ஆர் கையினான்` என மாற்றிப் பொருள் கொள்க. பொன் - அழகு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும்
ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழி வேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும்
அணிதில்லை யம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி றையை
என்றுகொல் எய்துவதே.

பொழிப்புரை :

கொடுங்கோலினை உடைய அரசனான பாண்டிய னுடைய நாட்டினையும், இலங்கையையும் கைப்பற்றிய ஆற்றலை உடைய செங்கோலை உடைய சோழ மரபினனாய், உறையூரைக் கோநகராகக்கொண்டு சிபி மரபினனாய் ஆண்ட பராந்தகச்சோழன் பொன்வேய்ந்த, அழகிய திரண்ட வளையல்களை உடைய மகளிர் பாடியும், ஆடியும் நற்பணி செய்யும் அழகிய தில்லை அம்பலத்துள் எம்தலைவனாய், எம்மை அடக்கி ஆள்பவனாய் உள்ள எம் இறைவனை என்று அடையப்போகிறேனோ?

குறிப்புரை :

தென்னன் - பாண்டியன். `இவரால் குறிக்கப்படும் சோழன் காலத்தில் இருந்த பாண்டியன் கொடுங்கோலனாய் இருந்தான்` என்பதை, `வெங்கோல் வேந்தன்` என்றதனால் அறிகின்றோம். ஈழம் - ஈழநாடு; இலங்கை. கோழி - உறையூர். செம்பியன் - சோழன். அணிந்த - வேய்ந்த. `அணிந்த அம்பலம்` என இயையும். `தூயசெம் பொன்னினால் - எழுதி மேய்ந்த சிற்றம்பலம்` என அப்பர் அருளிச்செய்தமையால் (தி.5 ப.2 பா.8) அவர் காலத்திற்கு முன்பே தில்லைச் சிற்றம்பலம் பொன் வேயப்பட்டுப் பொன்னம்பலமாய் விளங்கினமை நன்கறியப்படும். இவ்வாறு இதனைப் பொன்வேய்ந்தவன் `இரணியவன்மச் சக்கரவர்த்தி` எனவும், `இவன் சூரியன் மகனாகிய மனுவின் மகன்` எனவும் கோயிற் புராணம் கூறும். `சோழ மன்னர் மனுவின் வழியினரே` என்பது மரபு. இம்மரபு பற்றியே பிற்காலங்களிலும் சோழர் குலத்தில் தோன்றிய மன்னர் சிலர் சிற்றம்பலத்தையும், பேரம்பலத்தையும் பொன்வேயும் திருப்பணியை மேற்கொண்டனர். இங்கு இவ்வாசிரியரால் குறிக்கப்பட்ட சோழமன்னன் `முதற் பராந்தகன்` எனக் கருதுவர் ஆராய்ச்சியாளர்.
இரணியவன்மன் கௌட தேசத்து அரசன் மகனாயினும் உடற் குற்றத்தால் அரசனாகத் தகுதியற்றவனாய் யாத்திரை செய்து வந்த பொழுது தில்லைப் பெருமானது திருவருளால் அவ்விடத்திலே உடற் குற்றம் நீங்கப் பெற்ற காரணத்தால் வியாக்கிரபாத முனிவர், `இவனே இந்நாட்டிற்கு அரசனாவான்; கௌட தேசத்தை அவன் தம்பியர் ஆள்க` என்று சொல்லித் தில்லைப் பதியிலே தில்லை மூவாயிரவரும் பிறரும் சூழ அவனுக்கு முடிசூட்டி, புலியூர் அரசனாகிய இவனுக்குப் புலிக்கொடியே உரியது என்று கொடுத்தார் என்பதும் அப்புராண வரலாறு. இதனால் பிற்காலச்சோழர்கள் தில்லையில் தில்லை வாழந்தணர் முடிசூட்டப்பெறும் வழக்கத்தையும் உடையராய் இருந்தனர். இவ்வாசிரியரும் அம்மன்னருள் ஒருவராதல் இங்கு நினைக்கத்தக்கது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

நெடியா னோடு நான்மு கன்னும்
வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க
முழுமணி யின்திரளை
அடியார் அலகி னால் திரட்டும்
அணிதில்லை யம்பலத்துக்
கடியார் கொன்றை மாலை யானைக்
காண்பதும் என்றுகொலோ. 

பொழிப்புரை :

ஓங்கி உலகளந்த திருமாலோடு பிரமனும், தேவர்களும் சந்நிதியில் நெருங்கி நிற்றலான், அவர்கள் முடிகள் ஒன்றோடொன்று மோதுதலான், சிதறிய பெரிய மணிகளின் குவியலை அடியவர்கள் திருவலகைக்கொண்டு திரட்டி வைக்கும் அழகிய தில்லை அம்பலத்துள்ள நறுமணம் கமழும் கொன்றைப் பூமாலையானாகிய சிவபெருமானை அடியேன் எந்நாள் காண்பேனோ?

குறிப்புரை :

நெடியான் - திருமால். முடியால் - ஒருவர் மகுடத்தோடு. முடிகள் மோதி - மற்றவர் மகுடங்கள் தாக்குதலால். உக்க - சிந்திய. முழுமணி - குற்றமற்ற இரத்தினம். கடி - நறுமணம். இத்திருப்பாடற் பொருளோடு,
வந்திறை யடியில் தாழும் வானவர் மகுட கோடிப்
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பை யாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்.
என்னும் திருவிளையாடற் புராணச் செய்யுளை (18) ஒப்புநோக்கிக் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே. 

பொழிப்புரை :

சிறப்பான் மேம்பட்ட தில்லைநகரில் உள்ள செம் பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் சிவபெருமானைப்பற்றி மேகங்கள் பொருந்திய சோலைகளை உடைய உறையூர் மன்னனும், தஞ்சைமாநகரில் உள்ள அரசனும் ஆகிய கண்டராதித்தன் திருவரு ளோடு கலந்து தெவிட்டாத இனிய சொற்களால் பாடிய அரிய தமிழ்ப் பாமாலையைப் பொருளுணர்ந்து கற்றுப் பாட வல்லவர்கள், ஒருமுறை சென்றால் மீண்டும் அவ்விடத்தினின்றும் திரும்பி நில உலகிற்குப் பிறப்பெடுக்க வாராத வீட்டுலகில் பெருமையோடு பேரானந்தத்தை அடைவார்கள்.

குறிப்புரை :

சீரால் மல்கு - புகழால் உலகெங்கும் நிறைந்த, ``தஞ்சையர் கோன்`` என்றதனால், இவர் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டிருந்தமை பெறப்படும். ``கோழிவேந்தன்`` என்றது மரபு குறித்ததாய், `சோழ மன்னன்` என்னும் அளவாய் நின்றது. `கோழி வேந்தன், தஞ்சையர் கோன் கண்டராதித்தன் அம்பலத்தாடி தன்னைக் கலந்த அருந்தமிழ் மாலை` என்க. ஆரா இன்சொல் - தெவிட்டாத இனிமையை யுடைய சொல்லையுடைய. பேரா உலகு - சென்றடைந் தோர் நீங்காது நிலைபெறும் உலகம்; வீட்டுலகம்.
சிற்பி