வேணாட்டடிகள் - கோயில்


பண் : புறநீர்மை

பாடல் எண் : 1

துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே
ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங்
கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும்
எனதுபணி
நச்சாய்காண் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

தில்லையில் திருக்கூத்து நிகழ்த்தும் எம் பெருமானே! அடிமைகளை விரும்புபவர்கள், அவ்வடிமைகள் இழிவான செயல்களைச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வர். கசப்புச் சுவையை உடையவாயிருப்பினும் வாழைக்கச்சல் களையும், வேப்பங்கொழுந்தினையும் கறி சமைத்தற்குப் பயன்படுத்து வார்கள். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு எந்தப்பற்றுக்கோடும் இல்லை என்பதனை நீ அறிந்தும் என்னுடைய தொண்டினை விரும்பா திருப்பதன் காரணம் புலப்படவில்லை.

குறிப்புரை :

துச்சான - இழிவான செயல்களை. ஆள் உகப்பார் - தமக்கு அடிமையாய் உள்ளவரை விரும்புகின்ற தலைவர். `கைத்தா லும்` என்பது, `கைச்சாலும்` எனப் போலியாயிற்று. கைத்தல் - கசத்தல். கதலி - வாழை; இஃது ஆகுபெயராய் அதன் காயைக் குறித்தது. ``இலை வேம்பு`` என்றதனை, `வேம்பு இலை` என மாற்றுக. `வாழை யின் பிஞ்சுக் காயும், வேப்பிலையும் கசப்பனவாயினும் அவற்றையும் கறியாகக் கொள்வர் மக்கள்` என்னும் இவ்வுவமையை முன்னர் வைத்து உரைக்க. எச்சார்வும் - யாதொரு துணையும். `எனக்கு இல்லாமை` என உரைக்க. நச்சாய் - நீ விரும்பவில்லை. `இது பொருந் துவதோ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. காண், முன்னிலை யசை.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 2

தம்பானை சாய்ப்பற்றார் என்னும்
முதுசொல்லும்
எம்போல்வார்க் கில்லாமை என்னளவே
அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன்
தொழில்இறையும்
நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! ஒருவரும் தம்முடைய பானையைச் சாய்த்து நீரைப் பிடிக்க மாட்டார்கள் என்னும் பழமொழியும் அடியேனைப் போன்றவர் களுக்குப் பொருந்தாதிருத்தலை என்னைப்பொறுத்த வரையில் தெரிந்து கொண்டுவிட்டேன். புதியராக வந்த அடியவர்களின் தொண் டினை விரும்பும் நீ வழிவழியாக வந்த அடியேனுடைய தொண் டினைச் சிறிதும் விரும்பாதிருக்கிறாயே.

குறிப்புரை :

`சாய` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. தம் பானை சாயப் பற்றார் - ஒருவரும் தங்கள் பானையைக் கீழே விழுமாறு பிடிக்கமாட்டார்கள்; அஃதாவது `கருத்தின்றிப் புறக்கணிப்பாகக் கையாளார்` என்பதாம்.
முதுசொல் - பழமொழி. `இறைவன் தம்மைப் புறக்கணித்து விட்டான்` என்னும் கருத்தினால் `அம்முதுசொல் எம் போல்வார்க்கு இல்லாமை என்னளவிலே அறிந்தொழிந்தேன்` என்றார். ``சொல்லும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``அறிந்தொழிந் தேன்`` என்பது ஒருசொல் நீர்மைத்து.
வம்பு ஆனார் பணி உகத்தி - புதியராய் வந்து அடியராயி னாரது தொண்டினையும் விரும்புகின்ற நீ `பணியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி அடியேன் தொழில் இறையும் நம்பாய் - வழியடியேனாகிய எனது தொண்டினைச் சிறிதும் விரும்பவில்லை.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 3

பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என்
றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான்
ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எனையுடையாள்
உரையாடாள்
நசையானேன் றிருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பான், நீர் நிறைந்த குளத்தின் அருகிலே பள்ளத்தில் உள்ள சிறுமரத்துக்கு அக்குளத்தின் நீர் கசிந்து பாயாதோ என்று சொல்லப்படும் பழ மொழிக்கு இணங்க அவன் வரும் திசைகளைப் பார்த்து மனம் வருந்திச் `சிவபெருமானே! அடியேனுக்கு அருள் செய்ய வாரா திருத்தல் முறையோ!` என்று முறையிட்டாலும், அந்த எம்பெருமான் என்பக்கம் வர உள்ளம் கொள்வானல்லன். அடியேனை அடிமையாக உடைய உமாதேவியும் எம்பெருமானை அடியேன் கண்முன் வருமாறு பரிந்துரை கூறுகின்றாள் அல்லள். அவனைக்காண ஆசைப்படும் அடியேன் யாது செய்வேன்?

குறிப்புரை :

`நிறைகுளம் கீழ்க்கொம்பு பொசியாதோ` என மாற்றி, `கொம்பிற்கு` என உருபு விரிக்க. `ஏரி நிரம்பினால் அடைகரை பொசியும்` என்பது பழமொழி. பொசிதல் - கசிந்து ஊறுதல். `ஏரி நிறைந்தபொழுது மதகின் பாய்ச்சலால் வளரும் பயிர்களே யன்றி, அடை கரையில் முளைத்துள்ள செடிகளும் ஊற்றுப் பெற்று வளரும்` என்பது இப்பழமொழியின் பொருள். `போல` என்றதன்பின், ``என் திறத்தும், நசையானேன்`` என்பவற்றை முறையே கூட்டுக. ``என் திறத்தும் நசையானேன்`` என்றது, என்னளவிலும் நினைந்து சிவ பெருமான் அருள் வழங்குவான் என்று கருதி, அவனிடத்து விருப்ப முடையவனாயினேன். இதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. திசைநோக்கி - அவன் வரும் திசையைப் பார்த்து. பேழ்கணித்து - மனம் வருந்தி; `ஆகாயத்தை நோக்கி` என்றவாறு. சிவபெருமான் ஓ எனினும் - சிவபெருமானே முறையோ என்று முறையிட்டாலும். இசையான் - (என்னை ஆளாக உடையானாகிய அவன்) வர இணங்கவில்லை. `எனை உடையாளும்` என உம்மை விரித்து, ` என்னை ஆளாக உடையாளாகிய உமையம்மையும் எனக்கு முன்வந் தருளுமாறு அவனுக்குச் சொல்லவில்லை` என உரைக்க. `இனி யான் என்செய்வேன்` என்பது குறிப்பெச்சம். ``நம்பானே`` என்றதில் ஏகாரம் ஈற்றசை.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 4

ஆயாத சமயங்கள் அவரவர்கண்
முன்பென்னை
நோயோடு பிணிநலிய இருக்கின்ற
அதனாலே
பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும்
என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! ஆராய்ச்சியில்லாத புறச்சமயங்களைப் பின்பற்றும் மக்களுக்கு முன்னே அடியேனை மனக்கவலையும் உடற்பிணியும் வருத்துமாறு அடியேன் இருக்கின்ற காரணத்தால், `இந்த அடியவனைப் பேய் என்று கருதி இவனுடைய ஆண்டானும் இகழ்ந்து புறக்கணித்து விட்டான்` என்று நாய் போன்ற அடியேனை அவர்கள் எள்ளி உரைக்குமாறு செய்துவிட்டாய்.

குறிப்புரை :

`என்னை நோயோடு பிணி நலிய, (நான் ஏதும் செயலின்றி) இருக்கின்ற அதனாலே, நாயேனை ஆயாத சமயங்கள் அவரவர் முன்பு என்பித்தாய்` என, கூட்டியுரைக்க. ஆயாத சமயங்கள் - உண்மையை ஓர்ந்துணரமாட்டாது மயங்கி உரைக்கின்ற சமயங்கள். ``ஆயாதன சமயம்பல`` எனத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்தமை காண்க. (தி.1 ப.11 பா.5) `சமயங்களை யுடைய அவரவர்` என்க. நோய் - மனக்கவலை. பிணி - உடற்பிணி. நலிய - வருத்த. `பேயாக` என்பது ஈறு குறைந்தது. `பேய்போல அலையும்படி` என்பது பொருள். தொழும்பன் - அடியவன். தம்பிரான் - தமக்குத் தலைவன். ``தாம்`` என்றது, இவர்போலும் அடியவர் பிறரையும் உளப்படுத்தது. `தம் பிரான் இகழும்` என்றல், `இல்லாதவனை உளனாகக் கருதியும், தன்னைக் காக்கமாட்டாதவனை மாட்டுவான் எனக் கருதியும் அல்லல் உறுகின்றான்` என்னும் இருவகைக் கருத்தையும் தோற்றுவிப்பது. `என்போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவே யாகில்` என்று அருளினார் திருநாவுக்கரசு நாயனாரும் (தி.4 ப.1 பா.9). ``என்பித்தாய்`` என்பது, `என்று பொது மக்களால் இகழ் வித்தாய்` எனப் பொருள்தந்து, `நாயேனை` என்னும் இரண்டாவதற்கும், ``முன்பு`` என்பதற்கும் முடிபாயிற்று. `ஏத மேபல பேச நீஎனை ஏதிலார்முனம் என்செய்தாய்` என்றார் திருவாசகத்தும். (தி.8 திருக்கழுக். 6)

பண் : புறநீர்மை

பாடல் எண் : 5

நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும்
தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும்
இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி
வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! நின்ற இடத்தும் அமர்ந்த இடத்தும் கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த விடத்துத் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கின்றாய் அல்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?

குறிப்புரை :

``நின்று ....... தொழும்பனேன்`` என்றதற்கு, `நின்ற விடத்தும், இருந்தவிடத்தும், கிடந்தவிடத்தும் நினைந்து, எழுந்த விடத்துத் தொழுகின்ற தொழும்பனேன்` என உரைக்க. நிற்றல் முதலிய மூன்றும் செயலற்றிருக்கும் நிலையாதலின், அக்காலங்களில் நினைத லும், எழுதல் கிளர்ந்தெழுந்து செயற்படும் நிலையாகலின், அக்காலத் தில் தொழுதலும் கூடுவவாயின. `இரு நிலையிலும் உன்னை மறவா திருக்கின்ற யான், ஒரோவொருகால் எக்காரணத்தாலேனும் மறந்திருப் பினும் இருக்கவொட்டாய்` என்க.
இதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. ஒன்றி - உன்னைப் பொருந்தி; என்றது, பிறவற்றை மறந்து என்றவாறு. இது, `நினையாது` என்பதில், `நினைதல்` வினையோடு முடிந்தது. ``வரவு`` என்றதில், ஒடு உருபு விரித்து, `வரவொடு நில்லாயாய்; ஆப்போல் கதறுவித்தி` என மாற்றி உரைக்க. கன்று பிரி - கன்றினால் பிரியப்பட்ட. ``கற்றா`` என்றது, வாளா பெயராய் நின்றது.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 6

படுமதமும் இடவயிறும் உடையகளி
றுடையபிரான்
அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக்
கோத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக் கொன்றினுக்கு
வையிடுதல்
நடுவிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே. 

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! ஒழுகு கின்ற மத நீரையும் பானை போன்ற வயிற்றினையும் உடைய யானை முகனாகிய விநாயகனை மகனாக உடைய தலைவனே! உன் திரு வருளை உணர்தற்பொருட்டு அகத்திய முனிவருக்கு ஆகமத்தை உபதேசித்தாய். அகத்தியருக்கு மேம்பட்ட நிலையை அருளி, அடியே னுக்கு உலகியலை அருளிய இச்செயல் இரண்டு எருதுகள் உள்ள இடத்திலே ஓர் எருதுக்குப் புல்லை வழங்கி மற்றொன்றினுக்கு வைக் கோலை வழங்குவதனை ஒக்கும் செயலாகும். இஃது உனக்கு எல்லோ ரிடமும் நடுவு நிலையோடு நடந்துகொள்ளும் பண்பு ஆகுமா?

குறிப்புரை :

படுமதம் - மிக்க மதம். இடவயிறு - இடம் பெரிதாய வயிறு. இவற்றை யுடைய களிறு, மூத்த பிள்ளையார். `அயிராவணம்` என்பாரும் உளர். ``பிரான்`` என்றது, `பிரானாகிய நீ` என, முன்னிலைக்கண் படர்க்கை வந்த வழுவமைதி. அடி அறிய - உனது திருவருளை உணர்தற்பொருட்டு. `அடிஅறிய ஓத்து உணர்த்துவது அகத்தியனுக்கு அன்றே` எனவும், `இது நடுவோ` எனவும் மாற்றுக. ஓத்து - ஆகமப் பொருள். சிவபெருமான் அகத்திய முனிவருக்கு ஆகமத்தை உபதேசித்தார் என்பதும் வரலாறு. `அகத்தியனுக்கு அந் நிலையை அருளி, அடியேனுக்கு உலகியலை அருளினாய்; இது, இரண்டெருதுகளை உடைய ஒருவன். ஒன்றற்குப் புல் இட்டு, மற்றொன்றற்கு வைக்கோல் இடுதல் போல்வது` என்பதாம்.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 7

மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு
வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான்
மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து
விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே. 

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் வரையிலும் மனிதர்களோடு தேவர்கள் வரையிலும் எல்லோருக்கும் நீ பற்றுக்கோடு ஆவாய். அவ்வாறாகவும் அடியேனுக்கு மாத்திரம் பற்றுக்கோடு ஆகாமல் அடியேனைப் புறக்கணித்தலால் அடியேன் மிகவும் கலங்கி, `பெருமை பொருந்திய தலைவனே` என்று மேல்நோக்கி மனம் சுழன்று அழைத் தாலும் நீ அடியேனை நெருங்கி நிற்கின்றாய் அல்லை; இதன் காரணம் தான் யாதோ?

குறிப்புரை :

ஒடுக்கள், எண்ணிடைச்சொல். `மண்ணின்கண் அளவும் (பொருந்திய) மனிதர்க்கும், விண்ணின்கண் அளவும் வான வர்க்கும்` என நிரல்நிரை வந்தது. கண் - களைகண், பற்றுக்கோடு. `எனக்கு அவ்வாறு ஆகாதொழிந்தமையால்` என்க. `அண்ணல்` என்பது ணகர ஈறாய்த் திரிந்து விளியேற்பது பிற்கால வழக்கு. அண்ணல் - பெருமை யுடையவன்; தலைவன். அண்ணாந்து - ஆகாயத்தை நோக்கி நின்று. அலமந்து - வருந்தி.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 8

வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து
நெஞ்சுருகி
வீடாம்செய் குற்றேவல் எற்றேமற்
றிதுபொய்யிற்
கூடாமே கைவந்து குறுகுமா
றியானுன்னை
நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! வாட்ட முற்று, வாயின்கண் உள்ள நாவினால் அடைவுகேடாகப் பல கூறி, உன்னை விருப்புற்று நினைத்து, மனம் உருகும் இதனைத் தவிர, வீடு பேறு அடைதலுக்கு ஏதுவாகிய சிறுபணிவிடை வேறுயாது உளது? இக்குற்றேவல் பொய்யின்கண் பொருந்திப் பழுதாகாவாறு யான் உன்பக்கம் வந்து உன்னைக் கூடுமாறு நீ திருவுள்ளம் பற்றுவாயாக.

குறிப்புரை :

``வாடா`` என்பது, `செய்யா` என்னும் வினையெச்சம். `வாடி, பிதற்றி, நினைந்து, உருகிச் செய் குற்றேவல்` என்க. வாய் நா - வாயின்கண் உள் நாவால் `செய் வீடாம் குற்றேவல்` என மாறுக. வீட்டிற்கு ஏதுவாவதனை, ``வீடாம்`` என்றார். குற்றேவல் - சிறு பணி விடை. எற்று - என்ன பயனை உடையது. `உன்னை அடைவதையே பயனாக உடையது` என்பது குறிப்பு. இதனால், இவர் உலகப் பயன் கருதி இறைவனுக்குத் தொண்டு செய்யாமை பெறப்பட்டது. இது பொய்யிற் கூடாமே - இக் குற்றேவல் பொய்யின்கண் பொருந்தாத வாறு; `பழுதாகாதபடி` என்றவாறு. `கூடாமே நாடாய்` என இயையும். ``கைவந்து`` என்றதில், கை இடைச்சொல். `யான் வந்து உன்னைக் குறுகுமாறு நாடாய்` என மாற்றிக் கூட்டுக. நாடாய் - நினைந்தருள்.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 9

வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய
மாண்பிதனைத்
தோளாரக் கையாரத் துணையாரத்
தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும் அடியேன்உன்
தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே. 

பொழிப்புரை :

திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பானே! வழிபடுதலைச் செய்யாது திருமாலும் பிரமனும் விரும்பிக் காண் பதற்கு அரிய உன் திருமேனியைக் கைகளை உச்சிமேல் குவித்துச் சேர்த்துத் திருவடித்துணைக்கண் நிறைவு பெறும்படி தொழுதாலும் நீ அடியேனை அடிமையாக உடைய செயலும் உடையையோ? அடி யேன் உன் திருவடிகளைச் சேரும் நாள் என்று வருமோ?

குறிப்புரை :

``வாளா`` என்றது, `வழிபடுதலைச் செய்யாது` என்னும் பொருட்டு. ``புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்` என்பது முதலாக இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையுள் (தி.5 ப.95) திருநாவுக்கரசர் அருளிச் செய்தல் அறிக. மாலுக்குரிய, ``வீழ்ந்து`` என்பதன்பின், அயனுக்குரிய, `பறந்து` என்பது வருவிக்க. ``மாண்பு`` என்றது அதனையுடைய திருமேனியை உணர்த்திற்று. கூத்தப் பெருமான் திருமேனியும் மாலயன் பொருட்டுத் தோன்றிய வடிவின் வேறன்றாகலின் `மால் அயன் காண்பரிய மாண்பினதாகிய இதனை` என்றார். தோளாரத் தொழுதல், கைகளை உச்சிமேற் சேர்த்தித் தொழுதலாம். துணை - திருவடித்துணை. `தோளாரவும், கையாரவும் துணையை ஆரத்தொழுதாலும்` என்க. ஆள் - அடிமை. ``நீ`` என்றதன்பின், `என்னை` என்பது வருவித்து, `நீ என்னை உடையதுவும் ஆளோ` என மாற்றி உரைக்க. `உடையதுவும் ஆளோ` என்றது, ஆளாக உடையையோ என்றவாறு. `உடையை அல்லையாயின், அடியேன் உன் தாள்சேரும் நாளும் ஒன்று உண்டாகுமோ` என்க. எனவே, ``ஆளோ`` என்ற ஓகாரம் ஐயப்பொருளிலும், `ஏதோ` என்னும் ஓகாரம் இரக்கப் பொருளிலும் வந்தனவாம். இனிப் பின்னின்ற ஓகாரத்தை அசைநிலை யாகவும் ஆக்கி, `உடையாயின், அடியேன் உன் தாள் சேரும் நாள் ஏது (யாது)` என வினாப்பொருட்டாகவும் உரைக்க.

பண் : புறநீர்மை

பாடல் எண் : 10

பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித்
தொண்டன்எடுத்
தோவாதே அழைக்கின்றான் என்றருளின்
நன்றுமிகத்
தேவே தென் திருத்தில்லைக் கூத்தாடீ
நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத்
தடுப்பரிதே. 

பொழிப்புரை :

என் தேவனே! அழகிய புனிதத் தலமாகிய தில்லையில் திருக்கூத்து நிகழ்த்துபவனே! அடியார்களுடைய திருவடித் தொண்டன் பாட்டு வடிவமாக அமைந்த தமிழ்மாலையை எடுத்துக் கூறி விடாமல் அழைத்துக் கொண்டிருக்கிறான் என்பதனைத் திருவுளம்பற்றி இப்பொழுதே அருள்செய்தால் மிக நல்லது. நாய் போன்ற இழிந்த அடியவனாகிய நான் சாகின்ற நேரத்திலாவது உன்னைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டுவதனை இனி உன்னாலும் தடுத்தல் இயலாது.

குறிப்புரை :

மூன்றாவது அடிமுதலாகத் தொடங்கி, ``தடுப்பரிது`` என்பதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க. பா ஆர்ந்த - பாட்டாய்ப் பொருந்திய. `பா ஆர்ந்த மாலை` எனவும், `மாலை எடுத்து அழைக்கின்றான்` எனவும் இயையும். அருளின் - இப்பொழுதே அருள்செய்தால்; என்றது `காட்சி கொடுத்தருளினால்` என்பதாம். `மிக நன்று` என்க. `நாயடியேன் நினைக் காண்டலைச் சாவாயும் தடுப்பு உனக்கு இனி அரிது` என மாற்றிக் கூட்டுக. ``இனி`` என்றது, `யான் ஓவாதே அழைப்பதான பின்பு` என்றபடி. `இறைவன் தன்னைப் பன்னாள் அழைப்பவர்க்கு என்றாயினும் எதிர்ப்படுதல் கடன்` (தி. 4 ப.112 பா.9) ஆதலாலும், இறக்கும்பொழுதும் எதிர்ப் படாதொழியின் கூற்றுவன் வந்து எதிர்ப்படுவானாகலின், அவன் வாராதவாறு அப்பொழுது ஒருதலையாக எதிர்ப்படுதல் வேண்டு மாகலானும் இவ்வாறு கூறினார். இதனால், இறைவனது காட்சியைக் காண இவருக்கிருந்த வேட்கை மிகுதி புலனாகும்.
சிற்பி