திருவாலியமுதனார் - கோயில்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
படரொளி தருதிரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழற்றிருச் சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
டிருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல்மெழு கொக்கின்றதே. 

பொழிப்புரை :

பவளத்தால் ஆகிய பெரிய மலையைப்பனிபரவி மூடினாற்போல வெண்ளொளி வீசும் திருநீற்றினைப்பூசி, பெரிய குவளைமலர்களாலாகிய முடிமாலையும் கொன்றைப் பூவும் பொருந்திய பொன்னிறமுடைய சுருண்ட அழகிய சடையை உடைய வனாய், ஒளிவீசும் மாளிகைகள் சூழ்ந்த தில்லைநகரிலே திருக்கூத்து நிகழ்த்துகின்ற வெண்ணிறம் பொருந்திய சிவபெருமானை நினைக்குந் தோறும் அடியேனுடைய உள்ளம் நெருப்பின் அருகிலிருக்கும் மெழுகுபோல உருகுகின்றது.

குறிப்புரை :

படர்தல் - மூடுதல். `வரையில்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பவளமலை சிவபெருமானுக்கும், அதனைமூடிய பனி அப் பெருமான் பூசியுள்ள திருநீற்றுக்கும் உவமை. கண்ணி - முடியில் அணி யும் மாலை. ``கொன்றை`` என்றதும் அதனாலாகிய கண்ணியையே. துன்று - பொருந்திய. பொன் - பொன்போலும். குழல் - சுருண்ட. திவள - விளங்க. `திருநீறும், சடையும் திவள நடம்புரிகின்ற` என்க. தவள வண்ணன் - வெண்மை நிறத்தை உடையவன்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும்
அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும்
நிறையழிந் திருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை
படுந்தொறும் அலந்தேனே. 

பொழிப்புரை :

செந்நிற ஒளியைஉடைய மாளிகைகள் சூழ்ந்த தில்லை நகரில் எம்பெருமான் திருக்கூத்தைத் தரிசித்த காரணத்தால், ஒருசேர ஓடிவந்த மாலைநேரமும், சந்திரனும் தண்ணீர் அலைகின்ற கடலின் ஒலியோடு சேர்ந்து உருகி ஓடுகின்ற அடியேனுடைய நெஞ் சினைத் தாக்கிய அளவில் அடக்கம் என்ற பண்பு அழிய இருக்கும் அடியேன் பக்கல் ஓடிவந்த மன்மதனுடைய பூக்களாகிய அம்புகள் அடியேன் மேல் படுந்தொறும் அடியேன் வருந்தினேன்.

குறிப்புரை :

ஒக்க ஓட்டந்த - ஒருசேர ஓடிவந்த. அந்தி - மாலைக் காலம். `மாலைக் காலமும், சந்திரனும் ஒருசேர ஓடிவந்தன` என்றாள். பின்பு, `அவை இரண்டும் கடல் ஒலியோடு சேர்ந்து நெஞ்சைப் பிளந் தன` என்றாள். நெக்கு வீழ்தரு நெஞ்சு - முன்பே உடைந்து அழிந்த மனம். ``பாய்தல்`` என்றது, `போழ்தல்` என்னும் பொருட்டாய் நின்றது. நிறை - நெஞ்சினைத் தன்வழி நிறுத்துந்தன்மை. ``இருப் பேனை`` என்றதை, `இருப்பேன்மேல்` எனத் திரித்து, அதனை, ``படுந் தொறும்`` என்பதனோடு முடிக்க. இவ்வாறு திரியாமலே, ``பக்கம் ஓட்டந்த`` என்பதனை, `அணுகிய` என்னும் பொருட்டாக்கி, அத னோடு முடித்தலும் ஆம். மூன்றாம் அடியை முதலடியின் பின்னர்க் கூட்டி உரைக்க. பக்கம் ஓட்டந்த - அருகில் ஓட்டந்த - அருகில் ஓடி வந்த. அலந்தேன் - வருந்தினேன்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த
தேவதே வீசனே
உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை
உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
வந்தருள் செய்யாயே.

பொழிப்புரை :

சபையில் நடனமாடும் பெருமானே! அழகிய தில்லைநகரை ஆள்பவனே! திருத்தொண்டுசெய்த சிலந்தியை அதன்மறுபிறப்பில் அரச குடும்பத்தில் தோன்றி நாட்டை ஆளுமாறு அருள்செய்த, பெருந்தேவர்களையும் அடக்கி ஆள்பவனே! பொலிவு இழந்த மார்க்கண்டேயன் பொருட்டு அவன் உயிரைப்பறிக்க வந்த அந்தக் காலனை உயிர்நீங்குமாறு உதைத்த உன் திருவடிகள், வருந்திக் கிடக்கும் அடியேனுடைய வருத்தம் நீங்குமாறு அடியேனுடைய அழகிய முலைகளின் மீது அழுந்தப் படியுமாறு அருள்செய்வாயாக.

குறிப்புரை :

சிவபெருமான், சிலந்தியை அரசாளச் செய்தமையைக் கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்துக் காண்க. `தேவ தேவாகிய ஈசனே` என்க. தேவ தே - தேவர்க்குத் தேவன். ``தேவ தேவீசனே`` என்ற இருசீர்களும் வேறுபட வந்தன. ``உலந்த`` என்பதற்கு, `வாழ்நாள் உலந்த` என உரைக்க. உலத்தல் - முடிதல். ``மார்க்கண்டி`` என்பது, `மிருகண்டு முனிவர் மகன்` என்னும் பொருளது. ஆகி - துணையாகி. ``அக் காலனை`` என்னும் சுட்டு, `அந்நாளில் வந்த காலனை, எனப் பொருள் தந்தது. செக - அழிக்கக்கருதி. உதை கொண்ட - உதைத்தற் றொழிலை மேற்கொண்ட. `உதைகொண்ட பாதங்கள், மலர்ந்த பாதங்கள்` எனத் தனித்தனி முடியும். `பாதங்களால் வந்து` என மூன்றாவது விரித்து முடிக்க. வனம் - அழகு. ஒற்ற - பொருந்த; தழுவுதற்பொருட்டு. `என் வனமுலைமேல் ஒற்ற` என்று எடுத்துக்கொண்டு. ``ஈசனே`` என்றதன்பின் கூட்டி உரைக்க.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
பிப்பது வழக்காமோ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடை
சேர்த்திஅச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
ஒண்ணுதல் வைத்தோனே.

பொழிப்புரை :

அடியவர்கள் திறத்து அருள் செய்து மேம்பட்ட பொன்னம்பலத்தில் கூத்துநிகழ்த்தும் கூத்தப்பிரானே! அழகிய தில்லை நகரை ஆள்பவனே! அடியேனுக்குக் காமமயக்கத்தை உண்டாக்கி அடியேனுடைய அழகிய முலைகளைப் பசலைநிறம் பாயச் செய்வது நீதியான செயலாகுமா? நீர் திரண்டு ஓடிவரும், நீண்ட மணிகளை அடித்துவரும் கங்கையைத் திருச்சடையில் வைத்துக்கொண்டு அச் செயலைப் பொறுத்துக்கொண்ட பெருங்கற்பினளாகிய பார்வதிக்கு உன்உடம்பில் ஒருபாகத்தை வழங்கி, பெரிய அழகிய தீயினை நெற்றியில் வைத்த பெருமானே! நின் செயலை நினைத்துப் பார்.

குறிப்புரை :

அருள் செய்து - உயிர்கள்மேல் அருள்பண்ணி; இரண்டாமடியை இறுதிக்கண் கூட்டியுரைக்க. மருள் - மயக்கம்; மையல். `என்றனை மருள்செய்து` என மாற்றுக. பொன் பயப்பிப்பது - பொன்போலப் பசக்கச் செய்வது. வழக்காமோ - முறையாகுமோ. நீள் மணி - மிக்க இரத்தினம். செய்யாள் - சிறந்தவள்; உமையம்மை. உருவம் பாகமும் தந்து - உருவத்தைப் பங்காகவும் கொடுத்து. `தீயை` என்பது, `தியை` எனக் குறுகி நின்றது. `தீயை நெற்றிக் கண்ணில் வைத் தோன்`. என்றது, `காமனை எரித்தோன்` என்னும் குறிப்பினது. `கங்கையையும், உமையையும் கலந்தாற்போல என்னைக் கலத் தலாவது செய்தல் வேண்டும்; அல்லது என்னை வருத்துகின்ற காமனையாவது எரித்தல் வேண்டும்; இவற்றுள் ஒன்றேனும் செய்யாது என்னைப் பசப்பிப்பது முறையோ` என்பாள், `கங்கையைச் சடைச் சேர்த்திச் செய்யாளுக்குப் பாகமும் தந்து தீயை நுதல் வைத்தோனே` என்றாள்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார்
எழில்மறை யவற்றாலே
செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய
தில்லையம் பலத்தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம்
பதைபதைப் பொழியாதே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஏழுலகங்களுக்கும் கீழே ஊடுருவு மாறு வைத்த திருவடிகளைத் திருமால் காணஇயலாதவனாயினான். பிரமன் மேல் ஏழுஉலகங்களையும் கடந்து ஊடுருவிய திருமுடியைக் காணஇயலாமல் மனம் இளைக்க, இருவரும் நிலஉலகிற்குவந்து அழகிய வேத வாக்கியங்களால் இப்பொழுதும் உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வயல்களிலே தாமரைகள் களைகளாக வளர்ந்து ஓங்கும் தில்லையிலே அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் உன்னைப் பத்தி செலுத்தி அடைந்து காண்பதற்கு, திருமால் பிரமன் என்பவர்களோடு ஒப்பிடின் மிகத்தாழ்ந்த அடியேனுடைய உள்ளம் விரைதலை நீங்காது உள்ளது. இஃது என்ன வியப்போ!

குறிப்புரை :

வைத்த - ஒளித்து வைத்த. ``துதிக்கின்றார்`` என்ற தன்பின் `அவ்வாறாக` என்பது வருவிக்க. `துதிக்கின்றான்` என்பது பாடம் அன்று. செய்த்தலை - வயலிடத்து. பத்தி - ஆசை. `பத்தியால் ஒழியாது` என இயையும். பதைபதைத்தல் - மிக விரைதல். `பதை பதைத்தலை ஒழியாது` என்க. `இது கூடுவதோ` என்பது குறிப்பெச்சம்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

தேய்ந்து மெய்வெளுத் தகம்வளைந் தரவினை
அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து
கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள்
அம்பலத் தரன் ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர்
மனத்தினை யுடையேற்கே. 

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஆராய்ந்த சிறந்த அந்தணர்கள் வாழும் தில்லைநகரில் உள்ள பொன்மன்றத்தில் எம் பெருமானுடைய கூத்துநிகழ்த்தும் மேம்பட்ட மலர்களைப் போன்ற திருவடிகளைக் காணும் எண்ணமுடைய அடியேன் மீது, உடல் தேய்ந்து அச்சத்தால் வெளுத்து உட்புறம் வளைந்து, பாம்பினை அஞ்சித் தான் உன்சடையிலே இருக்கும் நிலையிலும், அடியேனை வெகுண்டு பலகாலும் என்னை அணுகி என்னைத்துன்புறுத்தி ஒளிக் கதிர்களை உடைய நிலா அடியேன்மீது நெருப்பைத் தூவுகிறது.

குறிப்புரை :

``மெய்`` என்றது தாப்பிசையாய், `தேய்ந்து` என்பத னோடும் இயையும். அகம் வளைந்து - உள்வளைந்து. இது சிலேடை யாய், `மனம் மடிந்து` எனப் பொருள் தந்தது; சிவபெருமானது முடியில் உள்ள நிலவின் இயல்புகளை, அங்குள்ள அரவிற்கு அஞ்சிய அச்சத்தால் விளைந்தனவாகக் கூறியது தற்குறிப்பேற்றம். காய்ந்து - சினந்து. வலிசெய்து - வலிதில் தொடர்ந்து. கதிர் நிலா - ஒளியை யுடைய சந்திரன். ``கதிர்நிலா`` என்றது, `தனது கதிரால் எரிதூவும்` என்றற்கு. `அரன் பாதங்கள்` என இயையும். உடையேற்கு என்றதை, `உடையேன்மேல்` எனத்திரிக்க. `கதிர் நிலாத் தான் அரவினை அஞ்சி மெய் தேய்ந்து வெளுத்து அகம் வளைந்து இருந்தேயும் காய்ந்து வலிசெய்து உடையேன் மேல் எரிதூவும் `என மாறிக் கூட்டுக.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும்
உண்பதும் பலிதேர்ந்து
விடைய தூர்வதும் மேவிடங் கொடுவரை
ஆகிலும் என்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை
யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றிமற் றாரையும்
உள்ளுவ தறியேனே. 

பொழிப்புரை :

நீர் மடைகளிலே வந்துசேர்ந்த வாளை மீன்கள் குதித்து அடையும் வயல்களை உடைய தில்லைநகரின் பொன்னம் பலத்தில் தீயைக் கையில்ஏந்திக் கூத்துநிகழ்த்தும், அடியேனை அடிமையாக உடைய எம்பெருமான் உடையாகக்கொள்ளுவன பாய் கின்ற புலியின் தோலும் பெரிய பாம்புமே ஆகும். உண்பதும் பிச்சை எடுத்துக் கொள்ளும் உணவே. ஏறிச் செலுத்துவதும் காளையே. தங்கும் இடமும் கொடிய கயிலாயமலையே. இவ்வளவு குறைபாடுகள் அப்பெருமானிடத்தில் இருந்தாலும் அவனையன்றி வேறு எந்தத் தெய்வத்தையும் பரம்பொருளாக அடியேன் நினைத்து அறியேன்.

குறிப்புரை :

``உடையும், உண்பதும்`` என்ற உம்மைகள் எச்சப் பொருள. நஞ்சின்றியிருத்தலைக் குறிக்க, ``நல்அரவம்`` என்றார். அரவம் (பாம்பு) கச்சாக நின்று உடையைக் காத்தலின் அதனையும், `உடை` என்று சார்த்திக் கூறினார். பலி - பிச்சை. ``விடையது`` என்றதில் அது, பகுதிப் பொருள் விகுதி. மேவு இடம் - இருக்கும் இடம். ``இடம்`` என்றதிலும், எச்ச உம்மை விரிக்க. வரை - மலை; கயிலை காடு அடர்ந்து. புலியும், அரிமாவும் போல்வன வாழ்தலின், `கொடிது` எனப்பட்டது. மடை கொள்வாளை - மடையை வாழும் இடமாகக் கொண்ட வாளை மீன்கள். ``மடை`` என்றது, அதனால் தடுக்கப்படும் நீரை. `அனலோடு ஆடும்` என மூன்றாவது விரித் துரைக்க. உடைய கோ - எல்லாரையும், எல்லாவற்றையும் ஆளாகவும், உடைமையாகவும் உடைய தலைவன். `யாரையும்` என்பது, `ஆரையும்` என மருவிற்று. `தில்லையம்பலத்தாடும் கோவிற்கு உடையும் தோலும், அரவமுமே. உண்பதும் பலி தேர்ந்தே; ஊர்வதும் விடையே; மேவிடமும் கொடுவரையே. ஆகிலும் என் நெஞ்சம் அவனையன்றி மற்று ஆரையும் உள்ளுவதை நான் காண வில்லை` என்க. விரிக்கப்படும் ஏகாரங்கள் பிரிநிலை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

அறிவும் மிக்கநன் னாணமும் நிறைமையும்
ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும்
உடன்பிறந் தவரோடும்
பிரிய விட்டுனை யடைந்தனன் ஏன்றுகொள்
பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்குங்கொண் டந்தணர் ஏத்தநன்
மாநட மகிழ்வானே.

பொழிப்புரை :

பெரும்பற்றப்புலியூரில் நான்கு வேதங்களின் வாக்கியங்களையும் கொண்டு அந்தணர்கள் புகழ மேம்பட்ட சிறந்த கூத்தினை மகிழ்ந்து ஆடும் பெருமானே! அறிவும், மிக மேம்பட்ட நாணமும் அடக்கமும், உலகப்பொருளிடத்துள்ள ஆசையும், இவ் வுலகில் உள்ள உறவினர்களும் பெற்றதாயும், தந்தையும், உடன் பிறந்தவர்களும் என்னைப்பிரியுமாறு அப்பண்புகளையும் அவர்களை யும் விடுத்து உன்னைப் பற்றுக்கோடாக அடைந்துள்ள அடியேனை ஏற்றுக் கொள்வாயாக.

குறிப்புரை :

அறிவும் - உன்னால் ஏற்கப்படும் தகுதியின்மையை அறியும் அறிவும். நாணமும் - காதல் கரையிறந்தவழியும் கன்னியர் தாமே ஆடவர் இருக்குமிடத்திற் செல்லக் கூசும் வெட்கமும். நிறைமை யும் - மனத்தை அஃது ஓடும்வழி ஓடாது நிறுத்தும் தன்மையும். ஆசையும் - இருமுது குரவர் ஏவல்வழி நிற்பின் இதனைப் பெறலாம், அதனைப் பெறலாம் என்னும் அவாவும், உறவும் - செவிலியும், தோழியும் முதலாய கிளைஞரும். ``உடன் பிறந்தவரோடும்`` என்ற உம்மை சிறப்பு. `அறிவு முதலாகத் தந்தை ஈறாகச் சொல்லப்பட்ட அஃறிணையும். உயர் திணையுமாகிய யாவும், யாவரும் உடன்பிறந்த வரோடும் தம்மிடத்தே பிரிந்து நிற்குமாறு அவர்களை விட்டு உன்னை அடைந்தேன்` என்க. உடன்பிறந்தவர் பின்றொடர்ந்து வந்தும் மீட்டுச் செல்லற்கு உரியராதலின், அவரைத் தனியே பிரித்து ஒடுவும், உம்மை யும் கொடுத்துக் கூறினாள். இது, பெருந்திணையுள், `மிக்க காமத்து மிடல்` என்னும் பகுதியுள் `கணவன் உள்வழி இரவுத் தலைச்சேறல்` என்னும் துறை. உண்மைப் பொருளில் இஃது உலகியலை முற்றத் துறந்து இறைவனையே புகலாக அடைந்தமையைக் குறிக்கும்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

வான நாடுடை மைந்தனே யோஎன்பன்
வந்தருளாய் என்பன்
பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப்
பால்வண்ண னேஎன்பன்
தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூண் அணி மார்பனே
எனக்கருள் புரியாயே. 

பொழிப்புரை :

வண்டுகள் விரும்பித்தங்கியிருக்கின்ற சோலை களால் சூழப்பட்ட தில்லைநகரில் திருநடம் புரிகின்றவனாய்ப் பன்றிக் கொம்பாகிய அழகிய அணிகலனை அணிந்த மார்பை உடைய பெருமானே! மேல்உலகாகிய சிவலோகம் உடையவனே! வந்து அருள் செய்வாயாக என்று முறையிடுகின்றேன். பால், நெய் முதலிய பஞ்சகவ்வியத்தை அபிடேகம் செய்து கொண்ட பரந்த சடையினை உடைய பால் போன்ற வெள்ளிய நிறத்தினனே! ஓ என்று முறையிடு கின்றேன். அடியேனுக்கு அருள்புரிவாயாக.

குறிப்புரை :

வான நாடு - சிவலோகம். மைந்தன் - பேராற்ற லுடையவன். `வானநா டுடையவனாயினும் என் பொருட்டு இங்கு வந்து அருள்` என்றவாறு. `பால், நெய் முதலிய ஐந்தையும் ஒருங்கு ஆடிய` என்க. ஏன மா - பன்றியாகிய விலங்கு; இருபெயரொட்டு. அதனது மருப்பே இறைவன் மார்பில் அணியாய் நிற்றலின், `ஏனமாப் பூண்` என்றார். மணி - அழகு. இது தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள்
பூசுரர் பலர்போற்ற
எரிய தாடும்எம் ஈசனைக் காதலித்
தினைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன்
மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன
தடியிணை பணிவாரே. 

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பப்படும் அழகிய மதில்களால் சூழப்பட்ட தில்லைநகரிலே, நிலத்தேவர் எனப்படும் அந்தணர்கள் பலரும் துதிக்குமாறு, எரியைக் கையில் சுமந்து கூத்து நிகழ்த்தும் எம்பெருமானை ஆசைப்பட்டு அவன் அருள் முழுமை யாகக் கிட்டாமையால் வருந்தும் தலைவிகூறும் மொழிகளாக, மலையைப் போன்ற பெரிய மதில்களைஉடைய திருமயிலாடுதுறை என்ற ஊருக்குத்தலைவனான வேதங்களில் வல்ல திரு ஆலிஅமுதன் முன்நின்று போற்றிய இப்பத்துப்பாடல்களையும் கற்றுவல்லவர் சிவபெருமானுடைய திருவடிகளின் கீழ்ச் சிவலோகத்தில் அவனைப் பணிந்து கொண்டு வாழ்வார்கள்.

குறிப்புரை :

புரியும் - நன்கு செய்யப்பட்ட. இங்கும், `எரியோடு ஆடும் ஈசன்` என்க. இனைபவள் - வருந்துபவள். `இளையவள், இனையவன்` என்பன பாடம் அல்ல. வரைசெய் - மலை போலும். மயிலை - மயிலாடுதுறை; மாயூரம். இஃதே இவரது அவதாரத்தலம் என்பது இதனால் அறியப்படும். `ஆலி` என்பது ஆலிநாட்டின் தலைநகராதலாலும், அந்நகரில் உள்ள `அமுதன்` என்னும் திருமால் பெயரே இவருக்குப் பிள்ளைப் பருவத்தில் இடப்பட்டமையாலும், ஆலிநாடு மாயூரத்திற்கு அணிய இடமேயோதலாலும். `மயிலை` என்பதனைப் பிற ஊர்களாக உரைத்தல் கூடாமை அறிக. ``மறைவல திருவாலி`` என்றதனால், இவர் அந்தணர் குலத்தினராதல் அறியப்படும். பரவல் பத்து இவை - துதித்தலைச் செய்த பத்துப் பாடல்களாகிய இவைகளை. வல்லவர் - அன்புடன் பாட வல்லவர்கள். வாளா ``பணிவார்`` என்றாராயினும், `சிவலோகத்திற் சென்று பணிவார்` என்பதே கருத்து என்க.
சிற்பி