திருவாலியமுதனார் - கோயில்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய்
காண அருள் என்று
பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதிலின் றில்லைக் கருளித்
தேவன் ஆடுமே.

பொழிப்புரை :

இரவாகவும், பகலாகவும், உருவம் அற்ற பொருளாகவும், உருவம் உடைய பொருளாகவும், மனநிறைவைத் தாராத அமுதமாகவும், கல்லாலமரத்தின் நிழலில் உள்ளவனாகவும், அமையும் கயிலைமலைத் தலைவனே! `உன் திருவுருவைக் காணும் பேற்றை எங்களுக்கு அருளுவாயாக` என்று பதஞ்சலி முனிவர் போன்ற பல்லாயிரவர் சான்றோர்கள் முன் நின்று வேண்ட, அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி வெளிப்பட்டு மேகமண்டலம் வரை உயர்ந்த மதில்களை உடைய தில்லைக்கண் உள்ள அடியார்களுக்கு அருள் செய்து எம்பெருமான் கூத்துநிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

முதலடியில் உள்ள, `ஆய்` என்பன பலவும் வினையெச்சங்கள். `இரவு முதலிய பல பொருள்களாகி` என்பது அவற்றின் பொருள். இவ்வெச்சங்கள் பலவும் அடுக்கிநின்று, ``நிழலாய்`` என்ற விளியேற்ற குறிப்புவினைப் பெயரைக் கொண்டு முடிந்தன. அல் - இரவு. ``அரு, உரு`` என்றவை, அவற்றையுடைய பொருளைக் குறித்தன. ``அமுதம்`` என்றதும், தேவர் அமுதத்தையே குறித்தது. கல்லால் நிழலாய் - கல்லால மரநிழலில் எழுந்தருளி யிருப்பவனே. ``கயிலை மலையாய்`` என்றதும் விளிப்பெயரே. காண-(உனது நடனத்தை) யாங்கள் காணுமாறு. ``பதஞ்சலிகள்`` என்றது, `பதஞ்சலி முனிவர்போன்ற முனிவர்கள்` என்றவாறு. பரவ - துதிக்க. பதஞ்சலியார் முதலிய முனிவர் பலரது துதிகளுக்கு இரங்கியே இறைவன் தில்லையில் வெளிப்பட்டு நின்று தனது நடனத்தைக் காட்டியருளினான்` என்பது தில்லைக் கூத்தப் பெருமானைப் பற்றிய வரலாறு. செல் வாய் - மேகங்கள் பொருந்திய. சாரியையின்றி` மதிற் றில்லை` என ஓதப்படுவது பாடம் அன்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அன்ன நடையார் அமுத மொழியார்
அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த
சிற்றம் பலந்தன்னுட்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண
விகிர்தன் ஆடுமே. 

பொழிப்புரை :

அன்னப்பறவை போன்ற நடையினையும் அமுதம் போன்ற இனிய சொற்களையும் உடைய இளமகளிர் வாழும் தில்லைப் பதியில், பாண்டியன் வளர்த்த தமிழும் இசையும் கலந்து முழங்கும் சிற்றம்பலத்தில், பொன்னும் மணிகளும் பரந்து பொருந்திய இடத்திலே புலித்தோலைத் தோளில் அணிந்து, மின்னலைப் போன்ற இடையை உடைய உமாதேவிகாண மற்றவரினும் வேறுபட்ட வனாகிய சிவபெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் - அன்னம் போலும் நடையை உடையவரும், அமுதம்போலும் மொழியை உடையவரும் ஆகிய அவர்கள்; மகளிர். மகளிர் அழகும், பிற நலங்களும் உடையராய் இருத்தல் இல்லத்திற்கேயன்றி, ஊர்க்கும், நாட்டிற்கும் சிறப்பைத் தருவது என்க. தென்னன் - பாண்டியன். இவ்வொருமைப் பெயர் பாண்டியரது குடியின்மேல் நின்று அவர் அனைவரையும் குறிப்பதாயிற்று. தமிழ் நாட்டு மூவேந்தருள் சங்கம் நிறுவித் தமிழை வளர்த்தவர் பாண்டியராதலின், தமிழை அவர்க் குரியதாகக் கூறினார். ``உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழ்`` (கலவை 20) என்றார். இனி, `நற்றமிழ்` என வருத லல்லது, `நன்றமிழ்` என வருதல் வழக்கின்கண் இன்மையின், `தென் நன் தமிழ்` எனல் ஆகாமை அறிக. ``இசை`` எனப் பின்னர் வருகின்றமையும், ``தமிழ்`` என்றது, இசைத் தமிழையாயிற்று. இயற்றமிழையும் இசைத் தமிழையும் கூறவே இனம் பற்றி நாடகத் தமிழும் கொள்ளப் படுவதாம். ஆகவே, `முத்தமிழும் கலந்த சிற்றம் பலம்` என்றதாயிற்று. கலந்த - பொருந்திய. நிரந்த தலம் - பரந்து பொருந்திய நிலம். பியற்கு- தோளில் `தலத்து, இட்டு, காண விகிர்தன் ஆடும்` என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

இளமென் முலையார் எழில்மைந் தரொடும்
ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல்
வலக்கை கவித்துநின்
றளவில் பெருமை அமரர் போற்ற
அழகன் ஆடுமே. 

பொழிப்புரை :

மென்மையான நகில்களை உடைய இளைய மகளிர் அழகிய ஆடவரோடு அழகுநிறைந்த படுக்கையில் இன்பத்தில் மூழ்கும் மேல்மாடிகளைஉடைய செல்வம் நிறைந்த தில்லைநகரத்துச் சிற்றம்பலத்திலே உயர்ந்த பொன்மலையினுள்ளே அமைந்த வயிர மலை போல வலக்கையை வளைத்துக்கொண்டு நின்று, எல்லையற்ற பெருமையை உடைய தேவர்களும் வழிபடுமாறு எம்பெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

`திளைக்கும்` என்பது, `திளையும்` எனச் சாரியை தொகுக்கப்பட்டு நின்றது. திளைத்தல் - இன்பத்தில் மூழ்கல். பொன்மலை சிற்றம்பலத்தின் வடிவிற்கும், வயிர மலை இறைவனுக் கும் உவமை. திருநீற்றுப் பூச்சினால் இறைவன் திருமேனி வயிரமலை போல் காணப்படுவதாயிற்று. `கவித்தல்` என்றது, அபயமாகக் காட்டு தலை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும்
சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள்
சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம்
நாதன் ஆடுமே.

பொழிப்புரை :

சந்தனமரம், அகில்மரம், சாதிக்காய்மரம், தழை போன்ற மயில்தோகை என்ற பலவற்றையும் அகப்படக்கொண்டு தள்ளி ஓடுகின்ற நிவா என்ற ஆற்றின் கரையில் அமைந்த உயர்ந்த மதில்களைஉடைய தில்லை என்ற பெயருடைய, நினைக்கவும் அரிய தெய்வத் திருத்தலத்துச் சிற்றம்பலத்தில் திருநந்திதேவர் முழவு ஒலிக்கச் சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

தழைப் பீலி - தழைபோன்ற மயில் தோகை. சாதி - ஒருவகை மரம்; இதன் காய் சிறந்ததொன்றாகக் கொள்ளப்படுதல் அறிக. கொண்டு - அகப்படக் கொண்டு. உந்தி இழியும் - தள்ளி ஓடு கின்ற. நிவா, ஓர் ஆறு. `கரைமேல் விளங்கும் தில்லை` என உரைக்க. ` தில்லையாகிய தெய்வப்பதி` என்றவாறு. ``சிந்திப்பரிய`` என்றது, `சிந்தனையுள் அடங்காத பெருமையை உடைய` என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஓமப் புகையும் அகிலின் புகையும்
உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
வாமத் தெழிலார் எடுத்த பாதம்
மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
தேவன் ஆடுமே.

பொழிப்புரை :

வேள்விப்புகையும், அகிலின்புகையும் மேல் நோக்கிச் சென்று மேகத்தோடு பொருந்துமாறு தீஓம்பும் தொழிலை உடைய அந்தணர்கள் மிக்கிருக்கும் சிற்றம்பலத்தில், தூக்கிய அழகிய இடத்திருவடியில் இனிய ஓசையை உடைய சிலம்பு ஒலிக்கத் தீயைப் போன்ற சிவந்த நிறத்தை உடைய சடையின் மேல் பிறையைச்சூடி எம்பெருமான் கூத்துநிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

``தீ மெய்த் தொழில்`` என்றதை. `மெய்த் தீத்தொழில்` என மாற்றி, `மெய்த் தொழில், தீத்தொழில்` எனத் தனித் தனி முடிக்க. மெய்ம்மை - என்றும் ஒழியாமை. தீத் தொழில் - தீயை ஓம்பும் தொழில்; வேள்வி வேட்டல். வாமம் - இடப்பக்கம். `எடுத்த எழில் ஆர் வாமபாதம்` என மாற்றிக்கொள்க. இறைவன், வலத் திருவடியை ஊன்றியும், இடத் திருவடியைத் தூக்கியும் நடனம் செய்தல் அறிக. `பாதத்தின் கண்` என உருபு விரிக்க. மழலை - இனிய ஓசையை உடைய. தீ மெய் - நெருப்புப்போலும் நிறத்தையுடைய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை
குவிந்த கரைகள் மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் டபத்து
மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை யேந்தி
அழகன் ஆடுமே.

பொழிப்புரை :

குரவம், கோங்கம், குளிர்ந்த புன்னை என்ற மரங்களும், தாழைப் புதரும் திரண்டுள்ள கடற்கரைப் பகுதிகளின் மேல் அலைகள்வந்து உலவும் தில்லைநகரில் விளங்கும் சிற்றம்பல மாகிய, மலையைப் போன்ற நிறைந்த இரத்தினங்களால் அமைக்கப் பட்ட மண்டபத்தில் அந்தணர்கள் மகிழ்ந்து துதிக்கவும் பாம்பு ஆடவும், தீயைக் கையிலேந்தி அழகனாகிய கூத்தப்பிரான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

கைதை - தாழை. குவிந்த - திரண்டுள்ள. கரை, கடற்கரை. அதன் இடப்பகுதிகள் பற்றி, `கரைகள்` எனப்பலவாகக் கூறினார். திரை - அலை. `தில்லைச் சிற்றம்பலம்` என இயையும். சிற்றம்பலம், இங்குக் கோயிலைக் குறித்தது. மல்கு - அழகு நிறைந்த. வரை - மலை. மலிந்த மணி - நிறைந்த இரத்தினங்களால் ஆகிய. `மண்டபத்து ஆடும்` என இயையும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
என்றென் றவர் ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழநட்டம்
குழகன் ஆடுமே.

பொழிப்புரை :

`வண்டுகள் நிறைந்த சோலைகளை உடைய தில்லைநகர்த் தலைவனே! அழகிய சிற்றம்பலத்தில் உள்ளவனே! அருளுவாயாக.` என்று சித்தர்களும் தேவர்களும் இயக்கர்களும் முனிவர்களும் போற்றி வேண்ட, முத்தும் மணியும் வரிசையாக அமைந்த அந்த அம்பலத்தில் பிறைச்சந்திரனைச் சூடி, கொத்துக் கொத் தாக அமைந்த சடைகள் தொங்குமாறு அழகனாகிய சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

``அவர்`` என்பதனை, ``முனிவர்`` என்றதன்பின்னும், ``அணி அம்பலவா`` என்பதை, ``அத்தா`` என்றதன் பின்னும் கூட்டுக. ``நிரந்த தலம்`` என்பது முன்னும் வந்தது (தி.9 பா.237). `முளை மதி` என இயைத்து, `புதுவதாய்த் தோன்றும் சந்திரன்` என உரைக்க. கொத்து ஆர் - கொத்தாகப் பொருந்திய. கொத்து, பூங்கொத்துமாம். குழகன் - அழகன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

அதிர்த்த அரக்கன் நெரிய விரலால்
அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்குந் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல்
ஒளிர்மா மணியெங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப்
பரமன் ஆடுமே. 

பொழிப்புரை :

`ஆரவாரம் செய்த அரக்கனாகிய இராவணன் உடல் நொறுங்குமாறு அவனைக் கால்விரலால் துன்புறுத்தியவனே! எங்களுக்கு அருளுவாயாக` என்று போற்றி வேதியர்கள் வழிபடும் தில்லையம்பதியிலுள்ள சிற்றம்பலமாகிய உதயநிலைச் சூரியனின் கிரணங்கள் போல ஒளி வீசுகின்ற மேம்பட்ட மணிகள் எல்லா இடத் தும் பதிக்கப்பட்ட அரங்கத்தில் பவளம் போன்ற சிவந்த திருமேனியை யுடைய மேலோன் ஆகிய சிவபெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

அதிர்த்த - ஆரவாரம் செய்த; (உமையை) `அஞ்சப் பண்ணிய` என்றுமாம். அரக்கன் - இராவணன். அடர்த்தாய் - துன்புறுத்தினவனே. `உதித்த போழ்தில் விளங்கும் இரவி` என ஒரு சொல் வருவிக்க. `மணி, மாணிக்கம்` என்பது வெளிப்படை. தலம் - நிலம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாலோ டயனும் அமரர் பதியும்
வந்து வணங்கிநின்
றால கண்டா அரனே யருளாய்
என்றென் றவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு
சிற்றம் பலந்தன்னுள்
பாலா டும்முடிச் சடைகள் தாழப்
பரமன் ஆடுமே. 

பொழிப்புரை :

திருமாலோடு பிரமனும் தேவர்தலைவனாகிய இந்திரனும் வந்து வணங்கிநின்று `விடக்கறை தங்கிய நீலகண்டனே! தீயோரை அழிப்பவனே! அருளுவாயாக` என்று போற்றிப் புகழுமாறு சேல்மீன்கள் உலாவும் வயல்களை உடைய தில்லைநகரின் மேம்பட்ட சிற்றம்பலத்தில் சுற்றிலும் சுழன்று ஆடுகின்ற முடியிலுள்ள சடைகள் நீண்டு விளங்கப் பரமன் ஆடுகின்றான்.

குறிப்புரை :

அமரர் பதி - தேவர்கள் தலைவன்; இந்திரன். ஆலம் - நஞ்சு. `ஆலா கண்டா` எனப் பாடம் ஓதி, `ஆலால` என்பது குறைந்து நின்றதாக உரைப்பினும் இழுக்கில்லை. ``அவர்`` என மீட்டும் கூறியது, அவரது பெருமை குறித்து. ``மல்கு சிற்றம்பலம்`` என்பது முன்னும் வந்தது (தி.9 பா.231). பால் ஆடும் - சுற்றிலும் சுழன்றாடுகின்ற. `பாலாடும் சடை` என இயையும். `பாலாடும் முடி` என்று இயைத்து, `பாலில் மூழ்குகின்ற சென்னி` எனவும் உரைப்பர். தாழ - நீண்டு விளங்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

நெடிய சமணும் மறைசாக் கியரும்
நிரம்பாப் பல்கோடிச்
செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச்
சிற்றம் பலந்தன்னுள்
அடிக ளவரை ஆரூர் நம்பி
யவர்கள் இசை பாடக்
கொடியும் விடையும் உடையகோலக்
குழகன் ஆடுமே. 

பொழிப்புரை :

உடலை மறைக்காத நீண்ட உடம்பை உடைய சமணரும், உடம்பை ஆடைகளான் மறைத்துக் கொள்ளும் பௌத்தரும், உணர்வு நிரம்பப் பெறாத பலகோடிகளான பாவங் களால் செலுத்தப்படுகின்ற வீண்செயல் உடையவர்களாய் எய்தப் பெறாத தில்லைநகரில் உள்ள சிற்றம்பலத்தில் இருக்கும் பெருமானைத் திருவாரூர் நம்பியாகிய சுந்தரமூர்த்திநாயனார் இசைப்பாடல்களால் போற்றிவழிபட, விடைக்கொடியும் விடைவாகனமும் உடைய அத்தகைய அழகன் சிற்றம்பலத்துள் கூத்துநிகழ்த்துகிறான்.

குறிப்புரை :

உடையின்மையால் மரம்போல் நிற்றலின், ``நெடிய`` என்றார்; இஃது இடக்கரடக்கு. பின்னர், `சாக்கியர்` என்றலின், ``சமண்`` என்றதனையும் `சமணர்` என்பது ஈறு தொகுக்கப்பட்டதாக உரைக்க. மறை - உடலை மூடுகின்ற. `சமணரும், சாக்கியரும் ஆகிய அவத்தோர்` என்க. நிரம்பா - உணர்வு நிரம்பப் பெறாத. செடி உந்து - பாவத்தால் செலுத்தப்படுகின்ற. அவத்தோர் - வீண் செயல் உடைய வர். அடிகள் - தலைவர். ``அவரை`` என்றது, `தம்மை` என்றபடி. `அடிகளாகிய தம்மை` என்க. ஆரூர் நம்பி, சுந்தரர். இக்காலத்தில் பெருவழக்காய் உள்ள `அவர்கள்` என்னும் உயர்வுச் சொல், இங்கு அருகி வந்துள்ளது. ஆரூரர் பாடியதனை இங்கு எடுத்துக்கூறியது. `அவரது பாடலைக் கேட்டிருந்தமையால் தாழ்த்தோம்` என்று இறைவன் சேரமான் பெருமாள் நாயனாருக்கு அருளிச்செய்ததனை உட்கொண்டதாம். இது முன்பு நிகழ்ந்ததைக் குறித்து `அத்தன்மையன்` என்றவாறாம். ``கொடியும் விடையும்`` என்றது, `விடைக் கொடியும், விடை ஊர்தியும்` என்றதாம். ``கோலக் குழகன்`` என்றது ஒரு பொருட் பன்மொழி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வானோர் பணிய மண்ணோர் ஏத்த
மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு
சிற்றம் பலத்தானைத்
தூநான் மறையான் அமுத வாலி
சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும் பாடப்
பாவம் நாசமே. 

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கவும் மனிதர்கள் துதிக்கவும், பொருந்திக் கூத்துநிகழ்த்தும், வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட தில்லையில் விளங்கும் சிற்றம்பலப் பெருமானைப் பற்றித் தூய்மையான நான்கு வேதங்களையும் ஓதுபவனான திரு ஆலி அமுதன் பாடிய தமிழ்மாலையாகிய பால் போன்ற இனிய பாடல்கள் பத்தினையும் பாடுதலால் தீவினைகள் அழிந்து ஒழியும்.

குறிப்புரை :

மன்னி - என்றும் நின்று. பால் நேர் - பால்போலும் இனிமையுடைய. `நாசம் ஆம்` என்னும் ஆக்கச்சொல் தொக்கது. ``தூ நான் மறையான்`` என்றதனால், இவர் மறையவர் குலத்தினராதல் விளங்கும். இது, முன்னைப் பதிகத்திலும் கூறப்பட்டது.
சிற்பி