திருவாலியமுதனார் - கோயில்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

கோல மலர்நெடுங்கட் கொவ்வை
வாய்க்கொடி யேரிடையீர்
பாலினை யின்னமுதைப் பர
மாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தேலுடை எம்மிறையை
என்றுகொல் காண்பதுவே. 

பொழிப்புரை :

அழகிய பூப்போன்ற பெரிய கண்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையும் கொடிபோன்ற மெல்லிய இடையினையும் உடைய தோழிமீர்! பால்போன்று இனிய னாய், இனிய அமுதம் போன்று புத்துயிர் அளிப்பவனாய், எல்லா ரினும் மேம்பட்டவனாகிய மேம்பட்ட ஒளிவடிவினனாய், சேல் மீன்கள் துள்ளுகின்ற வயல்களால் சூழப்பட்ட தில்லையாகிய பெரிய நகரிலே சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்க இசைந்த எம் தலைவ னாகிய சிவபெருமானை அடியேன் எக்காலத்துப் புறக்கண்களால் காணப்போகிறேனோ?

குறிப்புரை :

கோலம் - அழகு. `கோலக் கண்` என இயையும். `கொடி ஏர் இடையீர்` என்றதில், ஏர் உவம உருபு. ``இடையீர்`` என்றது பாங்கியரை.
பரம் ஆய - எப்பொருட்கும் முன்னதாகிய. பரஞ் சுடர் - மேலான ஒளி. சேல் உகளும் - கயல்மீன்கள் துள்ளுகின்ற. ஏல் - ஏற்றல்; முதனிலைத் தொழிற்பெயர். ஏற்றல் - எழுந்தருளியிருக்க இசைதல். `ஏலஉடை` என்பது பாடம் அன்று. ``இறை`` என்றது, சொல்லால் அஃறிணையாதலின், ``பரம், சுடர்`` என்றவற்றோடு இயைந்து நின்றது. கொல், ஐயத்துக்கண் வந்தது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

காண்பதி யானென்றுகொல் கதிர்
மாமணி யைக்கனலை
ஆண்பெண் அருவுருவென் றறி
தற்கரி தாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறை
யோன்மலர்ப் பாதங்களே. 

பொழிப்புரை :

ஒளிவீசும் மேம்பட்ட மணி போல்பவனாய்க் கனல் போன்ற செம்மேனியனாய், ஆண் என்றோ பெண் என்றோ வடிவு அற்றவன் என்றோ அறிவதற்கு இயலாதவனாக உள்ளவனாய், வானத்தை அளாவிய பெரும்பரப்புடைய மாளிகைகளால் சூழப்பட்ட தில்லை என்ற பேரூரின் சிற்றம்பலத்திலே மாட்சிமை பொருந்திய மேம்பட்ட திருக்கூத்தினை நிகழ்த்தும், வேதம் ஓதும் சிவபெரு மானுடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை அடியேன் புறக்கண் களால் காணும் நாள் எந்நாளோ?

குறிப்புரை :

``மணி, கனல்`` என்றவை உவமை ஆகுபெயர்கள். ``ஆண், பெண், அரு, உரு` என்ற நான்கும், ``என்று`` என்பதனோடு தனித்தனி இயைந்தன. அரிது - அரிய பொருள். ``சேண் பணை மாளிகை`` என்றதை, `சேணிற் பணைத்த மாளிகை` எனப் பிரிக்க. `வானத்தை` அளாவிப் பரந்த மாளிகை என்பது பொருள். `சிற்றம்பலத்துக்கண்` என உருபு விரிக்க. `நடம்செய் பாதங்கள்` என இயையும். ``பாதங்கள்`` என்புழியும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபை விரித்து, `யான் காண்பது என்றுகொல்` என்பதனைக் கொண்டுகூட்டி, `இறைவனை யும், அவன் பாதங்களையும் யான் காண்பது என்றோ` என உரைக்க. பாதங்களை வேறாக எடுத்துக் கூறியது, அவற்றது சிறப்புப்பற்றி. ``நின்னிற் சிறந்த நின்தாள் இணை`` (பரிபாடல் - 4) எனச் சான்றோரும் கூறுவர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கள்ளவிழ் தாமரைமேற் கண்
டயனோடு மால்பணிய
ஒள்ளெரி யின்னடுவே உரு
வாய்ப்பரந் தோங்கியசீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒரு
வனையு ணர்வரிதே. 

பொழிப்புரை :

உலகத்தைப் படைத்தவனாகிய, தேன் வெளிப் படும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும், திருமாலும் வணங்குமாறு அவ்விருவருக்கும் நடுவே ஒளிவீசும் தீப்பிழம்பின் உருவத்தனாய்ப் பரவி உயர்ந்த சிறப்பை உடையவனாய், மேலோர் தமக்குப் புகலிடமாகத் தெளிந்த, குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட தில்லை யாகிய பெரிய நகரத்தில் உள்ள சிற்றம்பலத்துள் தீயினைக் கையில் ஏந்தி ஆடுகின்ற ஒப்பற்ற சிவபெருமானை உள்ளவாறு அறிதல் இயலாத செயலாகும்.

குறிப்புரை :

கள் அவிழ் - தேனோடு மலர்கின்ற. `தாமரைமேல் அயன்` என இயையும். `கண்ட` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. கண்ட - உலகத்தைப் படைத்த. ``முழுவதுங் கண்டவனை`` (தி.8 திருச் சதகம் - 7) என்ற திருவாசகத்தைக் காண்க. பணிய - செருக்கொழிந்து வணங்குமாறு. `நடுவே எரியின் உருவாய` என மாற்றுக. நடுவே - அவ்விருவருக்கும் நடுவிலே. `ஓங்கிய ஒருவன்` எனவும், `சீர்த் தில்லை, தெள்ளிய தில்லை` எனவும் இயையும். தெள்ளிய - மேலோர், தமக்குப் புகலிடமாகத் தெளிந்த. `உணர்தல் எனக்கு அரிதாகியே விடுமோ` என்பது பொருள். உணர்தல், இங்குத்தலைப்பட்டுணர்தல். `ஒருவன்னை` என ஒற்று விரித்து ஓதுவதே பாடம் போலும்!

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

அரிவையோர் கூறுகந்தான் அழ
கன்எழில் மால்கரியின்
உரிவைநல் லுத்தரியம் உகந்
தான்உம்ப ரார்தம்பிரான்
புரிபவர்க் கின்னருள்செய் புலி
யூர்த்திருச் சிற்றம்பலத்
தெரிமகிழ்ந் தாடுகின்றஎம்
பிரான்என் இறையவனே.

பொழிப்புரை :

பார்வதியைத் தன் உடம்பின் ஒருபகுதியாகக் கொண்டு மேம்பட்டவனாய், அழகனாய், அழகிய மத மயக்கம் பொருந்திய யானையின் தோலைச் சிறந்த மேலாடையாகக் கொண்டு மேம்பட்டவனாய், தேவர்களுக்குத் தலைவனாய், தன்னை விரும்பு பவர்களுக்கு இனிய கருணைசெய்யும், புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்திலே எரியைக் கையிலேந்தி மகிழ்ச்சியோடு ஆடுகின்ற எங்கள் பெருமானே என் தெய்வம் ஆவான்.

குறிப்புரை :

மால் கரி - பெரிய யானை. உத்தரியம் - மேலாடை. புரிபவர் - விரும்புபவர். `இன்னருள்செய் எம்பிரான்` என இயையும். இறைவன் - தலைவன். ``இறையவனே`` என்னும் ஏகாரத்தைப் பிரித்து, ``எம்பிரான்`` என்றதனோடு கூட்டுக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

இறைவனை என்கதியை என்னு
ளேயுயிர்ப் பாகிநின்ற
மறைவனை மண்ணும்விண்ணும் மலி
வான்சுட ராய்மலிந்த
சிறையணி வண்டறையுந் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம்இறையை நினைத்
தேன்இனிப் போக்குவனே.

பொழிப்புரை :

தலைவனாய், எனக்குப் பற்றுக்கோடாய், எனக் குள்ளே மூச்சுக்காற்றாய் மறைந்து நிற்பவனாய், நிலவுலகமும் வானுல கமும் மகிழ்தற்கு ஏதுவான மேம்பட்ட ஒளியாய், நிறைந்த சிறகு களைக் கொண்டுள்ள அழகிய வண்டுகள் ஒலிக்கும் தில்லைமா நகரிலே சிற்றம்பலத்துக்கு மிக்க அணியாக இருக்கும் தெய்வமாகிய சிவபெருமானை விருப்புற்று நினைத்த யான் அவனை இனி, என் உள்ளத்தினின்றும் போக்கி விடுவேனோ?

குறிப்புரை :

கதி - புகலிடம். ``என்னுள்ளே உயிர்ப்பாய் ..... நிற்கும்`` என்ற அப்பர் திருமொழி இங்கு நோக்கத்தக்கது. (தி.5 ப.21 பா.1) மறை - மறைந்து நிற்கும் பொருள். `துறைவன்` என்பதுபோல, ``இறைவன், மறைவன்`` என்றவற்றில் வகரம் பெயர் இடைநிலை. `இறையனை, மறையனை` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். மலி - மகிழ்தற்கு ஏதுவான. `சுடராய் அணியாம் இறை` எனவும், `மலிந்த வண்டு` எனவும் இயையும். மலிந்த - நிறைந்த. சிறைஅணி - சிறகைக் கொண்டுள்ள. `சிற்றம்பலத்துக்கு` எனத் தொகுக்கப்பட்ட உருபை விரிக்க. நிறை அணி - மிக்க அழகு. போக்குவனே - என் உள்ளத்தினின்றும் போக்கி விடுவேனோ; `மறப்பேனோ` என்றபடி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம
லத்திரளை நினைப்பார்
மனத்தினு ளேயிருந்த மணி
யைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கன
கங்கதிர் ஒண்பவளம்
சினத்தொடு வந்தெறியுந் தில்லை
மாநகர்க் கூத்தனையே. 

பொழிப்புரை :

தூய்மையின் மிகுதியனாய், தன்னை விருப்புற்று நினைப்பவர் உள்ளத்திலே தங்கியிருக்கும் அழகிய மாணிக்கம் போல் வானாய், ஒலித்துக்கொண்டு வயல்களிலே வந்து பாயும் மிக்க நீர், ஒளி வீசுகின்ற பவளத்தைக் கோபம் கொள்பவரைப்போலக் கரையில் ஒதுக்கித்தள்ளும் தில்லை மாநகரில் உள்ள கூத்தப்பிரானை விருப் புற்று நினைத்த அடியேன் இனி என் உள்ளத்தினின்றும் போக விடுவேனோ?

குறிப்புரை :

`நிமலத்திரளை` என்பது முதலாகத் தொடங்கிப் பூட்டு வில்லாக முடிக்க. நிமலத் திரள் - தூய்மையின் மிகுதி. ``மனத்தினுளே இருந்த மணி`` என்றது அற்புத உருவகம். பின்னர் வந்த மணி, அழகு. ``மணியை`` எனவும், ``மாணிக்கத்தை`` எனவும் வேறு வேறாகக் கூறினாராயினும், `மாணிக்க மணியை` என்பதே கருத்தென்க. கனைத்து - ஒலித்து. கன கம் - மிக்கநீர். ``கழனி`` என்பதன்றி, `கனநீர்` என்பதே பாடம் போலும்! கனம் - மேகம். ``சினத்தொடு வந்து`` என்றது, தற்குறிப்பேற்றம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கூத்தனை வானவர்தங் கொழுந்
தைக்கொழுந் தாய்எழுந்த
மூத்தனை மூவுருவின் முத
லைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்
தணர்தில்லை யம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்
பிரான்அடி சேர்வன்கொலோ. 

பொழிப்புரை :

கூத்தாடுபவனாய், தேவர் கூட்டத்துக்குத் தலை வனாய், எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படையாய்த் தோன்றிய மூத்தவனாய், படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று செயல் களுக்கும் மூன்று வடிவங்களை எடுத்த முதல்வனாய், எல்லாச் செயல் களுக்கும் காரணமாய் இருப்பவனாய், பசுவின் பால், தயிர், நெய் முதலியவற்றை ஆகுதி செய்யும் அந்தணர்கள் வாழும் தில்லை அம்பலத்துள் பலரும் துதிக்குமாறு நிலையாகக் கூத்து நிகழ்த்துகின்ற எம் தலைவனுடைய திருவடிகளை அடியேன் சேர்வேன் கொல்லோ!

குறிப்புரை :

வானவர்தம் கொழுந்து - தேவ கூட்டத்திற்குத் தலை யாயவன். பின்னர், ``கொழுந்தாய்`` என்றது, `எல்லாப் பொருட்கும் கொழுந்தாய்`` என்றவாறு. எழுந்த - தோன்றிய; என்றது, படைப்புக் காலத்தில் முதற்கண் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு நின்றமையை, ``முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி`` என்றார் நாவுக்கரசர். (தி.6 ப.19 பா.1) `மூத்தவனை` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. மூத்தவன் - முன்னோன். நிலையை, `உரு` என்றார். முந்நிலையாவன, `படைக்கும் நிலை, காக்கும் நிலை, அழிக்கும் நிலை` என்பன. பின்னர், `முதலாகி நின்ற` என்றது, `எல்லாச் செயல் கட்கும் முதலாகி நின்ற` என்றவாறு. `நின்ற எம்பிரான்` என இயையும். ``ஆத்தனைப் படுக்கும் அந்தணர்`` என்றதற்கு, முன், `ஆவே படுப்பார் அந்தணாளர்` என்றதற்கு (தி.9 பா.196) உரைத்தவாறே உரைக்க. தான், அசைநிலை. ``தில்லை யம்பலத்துள்`` என்றதனை, ``நின்ற`` என்றதன்பின்னர்க்கூட்டுக. கொல், ஐய இடைச்சொல். ஓகாரம், இரக்கப்பொருட்டு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

சேர்வன்கொ லோஅன்னைமீர் திக
ழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங் கொளத்தழுவி அணி
நீறென் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவுந் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தேர்வங்கை மான்மறியன் எம்
பிரான்போல் நேசனையே.

பொழிப்புரை :

என் அன்னையர்களே! சிறந்த மரக்கலங்கள் வந்து அணுகும் தில்லைமாநகரில் உள்ள சிற்றம்பலத்தில் உள்ளவனாய், கையில் எழுச்சியை உடைய மான்குட்டியை ஏந்தியவனாய், எம் தலைவனாய், எம்மால் விரும்பப்படும் பெருமானுடைய விளங்கும் தாமரைமலர் போன்ற திருவடிகளை விருப்பத்தோடு தழுவி, அவன் அணிந்திருக்கும் திருநீறு என் நகில்களில் படியுமாறு அவனைத் தழுவும் வாய்ப்பினைப் பெறுவேனோ?

குறிப்புரை :

`அன்னைமீர், என் நேசனை, அவன் அணி நீற்றை என் முலைக்கு அணியுமாறு, அவன் மலர்ப் பாதங்களைத் தழுவிச் சேர்வன்கொலோ` எனக்கொண்டு கூட்டுக. ``அன்னைமீர்`` என்றது, கைத் தாயரை. அணி - அழகு. பிறராயின் சந்தன களபங்களைப் பூசிச் சேர்வர். இவன் திருநீற்றையே பூசிச் சேர்வான். ஆதலின், ``அணிநீறு அணிய`` என்றாள். வங்கம் - மரக்கலம். ஏர்வு - எழுச்சி. போல், அசை நிலை. `புவனேசன்` என்பது `போனேசன்` என மருவிற்று என்பாரும், பிற உரைப்பாரும் உளர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

நேசமு டையவர்கள் நெஞ்சு
ளேயிடங் கொண்டிருந்த
காய்சின மால்விடையூர் கண்
ணுதலைக் காமருசீர்த்
தேச மிகுபுகழோர் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்
தீசனை எவ்வுயிர்க்கும் எம்
இறைவன்என் றேத்துவனே.

பொழிப்புரை :

தன்னிடம் விருப்பமுடைய அடியவர்களின் உள்ளத்துள்ளே தன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு தங்கு பவனாய், பகைவர்களைத் துன்புறுத்தும் வெகுளியை உடைய பெரிய காளையை வாகனமாக இவர்கின்ற, நெற்றிக் கண்ணுடையவனாய், விரும்பத்தக்க சிறப்பினை உடைய உலகத்தில் மிகுகின்ற புகழை உடையவர்கள் வாழும் தில்லைமாநகரில் சிற்றம்பலத்தில் வீற்றிருக் கும், மற்றவரை அடக்கியாளும் பெருமானை எல்லா உயிர்களுக்கும் தெய்வமாயவன் என்று புகழ்ந்து கூறும்நான் அவன் அருள்பெறுவது என்றோ?

குறிப்புரை :

காய் சினம், இன அடை. மால் விடை - பெரிய இடபம் `திருமாலாகிய இடபம்` எனலும் ஆம். காமரு - விரும்பத்தக்க. சீர் - அழகு. `சீர்த் தில்லை` என இயையும். தேசம் மிகு புகழ் - நில முழுதும் பரவிய புகழ். ``புகழோர்`` என்றது, தில்லைவாழ் அந்தணரை. `எவ் வுயிர்க்கும் இறைவன் என்று ஏத்துவன்` என்றது, `அவனது பெருமை யறிந்து காதலித்தேன்` என்றவாறு. `இனி அவனைத் தலைப்படுதல் என்றோ` என்பது குறிப்பெச்சம். இறைவன் - தலைவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

இறைவனை ஏத்துகின்ற இளை
யாள்மொழி யின்தமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்
தேத்துசிற் றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணி
ஆலைகள் சூழ்மயிலை
மறைவல வாலிசொல்லை மகிழ்ந்
தேத்துக வான்எளிதே. 

பொழிப்புரை :

சிவபெருமானைத் துதிக்கின்ற இளம்பருவத் தலைவியின் கூற்றாக இனிய தமிழால், நான்மறைகளின் பொரு ளுணர்ந்து ஒலி பிறழாது அவற்றை ஓதுதலில் வல்லவர்கள் மகிழ்ந்து துதிக்கின்ற சிற்றம்பலம் தொடர்பாக வரப்பால் வரையறுக்கப்பட்ட வயல்கள் செந்நெற்பயிர்களோடும் மேம்பட்ட கரும்புகளின் வரிசையான ஆலைகளோடும் சூழ்ந்திருக்கும் திருமயிலாடு துறையைச் சேர்ந்த, வேதங்களில் வல்ல திருஆலிஅமுதன் பாடிய பாடல்களை விருப்பத்தோடு பாராயணம் செய்க. சிவலோகம் உங்களுக்கு மறுமையில் எளிதாகக் கிட்டும்.

குறிப்புரை :

``ஏத்துகின்ற`` என்றது, `காதலித்துத் துதிக்கின்ற` என்னும் பொருட்டு. `இளையாள் மொழியாகிய (கூற்றாகிய) இனிய தமிழால்` என உரைக்க. ``மறைவல`` என்றது பொருளுணர்தல் வன்மையையும், ``நாவலர்கள்`` என்றது, ஒலி பிறழாது ஓதுதல் வன்மையையும் குறித்து நின்றன. அறை - வரம்பால் வரையறுக்கப் பட்ட வயல்கள். `வயல்கள் செந்நெற்பயிர்களோடும், கரும்பின் ஆலைகளோடும் சூழும் மயிலை` என்க. அணி - வரிசை. மயிலை - மயிலாடு துறை. (மாயூரம்).
சிற்பி