புருடோத்தம நம்பி - கோயில்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

வாரணி நறுமலர் வண்டு கெண்டு
பஞ்சமம் செண்பக மாலை மாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
வந்துவந் திவைநம்மை மயக்கு மாலோ
சீரணி மணிதிகழ் மாட மோங்கு
தில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந் தஞ்சல் என்பார்
ஆவியின் பரமன்றென்றன் ஆதரவே.

பொழிப்புரை :

தேன் ஒழுகுகின்ற நறுமலர்களைக் கிளறுகின்ற வண்டுகள் பாடுகின்ற பஞ்சமப் பண், சண்பகப் பூமாலை, மாலைக் காலம் என்ற இவை கச்சணிந்த அழகிய முலைகள் மெலியுமாறு தொடர்ந்து வந்து நம்மை மயக்குகின்றன. அம்மயக்கத்தைப் போக்க அழகினைக் கொண்ட மணிகள் விளங்குகின்ற மாடங்கள் உயர்ந்த தில்லையம்பலத்திலுள்ள எங்கள் செல்வனாகிய சிவபெருமான் நமக்குக் காட்சி நல்கவில்லை. என்திறத்து அருள் செய்து என்னை அஞ்சாதே என்று சொல்லக்கூடியவர் யாவர் உளர்? என் விருப்பம் என் உயிரால் தாங்கப்படும் அளவினதாக இல்லை.

குறிப்புரை :

வார் - தேன் ஒழுகுகின்ற. அணி - அழகிய. `நறுமலரை வண்டு கெண்டி (கிளறிப்) பாடுகின்ற பஞ்சமப் பண்` என்க. ``மாலை`` இரண்டனுள் பின்னது மாலைக் காலம், `பஞ்சமமும், செண்பக மாலையும், மாலைக் காலமும் ஆகிய இவை நம் வனமுலைகள் மெலியுமாறு வந்து வந்து நம்மை மயக்கும்` என்க. ஆல், ஓ அசை நிலைகள். சீர் அணி - அழகைக்கொண்ட. ``ஆர் எனை அருள்புரிந்து அஞ்சல் என்பார்`` என்றதை இறுதியிற் கூட்டுக. ``எனை`` என்றது, ``அஞ்சல் என்பார்`` என்பதனோடு முடியும். என் ஆதரவு ஆவியின் பரம் அன்று. எனது காதல் என் உயிரின் அளவினதன்று; மிக்கது. ``சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் - உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே`` (குறுந்தொகை-18) என்னும் பகுதியை நோக்குக. ஆதரவு - விருப்பம்; காதல். `அஃது என்னால் தாங்கும் அளவினதாய் இல்லை` என்றபடி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
அருவினை யேனைவிட் டம்ம அம்ம
பாவிவன் மனம்இது பைய வேபோய்ப்
பனிமதிச் சடையரன் பால தாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
நெஞ்சமும் தஞ்சமி லாமை யாலே
ஆவியின் வருத்தமி தார்அறிவார்
அம்பலத் தருநடம்ஆடு வானே.

பொழிப்புரை :

என் விருப்பம் என் உயிரின் தாங்கும் எல்லையைக் கடந்து மிக்குள்ளது. தீ வினையினேன் ஆகிய அடியேனை விடுத்துப் பாவியாகிய வலிய மனம் யான் அறியாதவாறு மெதுவாகச் சென்று குளிர்ந்த பிறையைச் சடைக்கண் அணிந்த சிவபெருமான்பால் சேர்ந்து விட்டது. நெஞ்சம் எனக்குப் பற்றுக்கோடாக இல்லாமையாலே மேகலையின் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் ஏற்பட, அவற்றால் என் உயிர்படும் வருத்தத்தை யாவர் அறிவார்?. அம்பலத்தில் அரிய கூத்தாடும் பெருமானே அறிவான்.

குறிப்புரை :

இரக்கத்தின்கண் வந்த `அம்ம` என்பது அடுக்கி நின்றது. பாவி மனம் - கொடுஞ் செயலை உடையதாகிய மனம். `இதுவும்` என்ற எச்ச உம்மை விரிக்க. ஆல், ஓ அசை நிலைகள். நீவி - நீக்கம்; தனிமை; மேகலை என்று கொண்டு, `நீவியின் நெகிழ்ச்சியும்` என்பது பாடம் என்பாரும் உளர். நெகிழ்ச்சி - தளர்ச்சி; மெலிவு. ``நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே`` என்றதனை ``அரன் பாலதாலோ`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `நீவி முதலியனவாகிய இவ் ஆவியின் வருத்தம்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. `நடமாடுவானே அறியும்` என ஒருசொல் வருவித்து முடிக்க. அல்லாக்கால் ``அரன்`` என்றதனோடு இயையுமாறில்லை. ``போய்`` என்பது முன்னிலைக்கண் செல்லாதாக லின், `சடைய நின்பால தாலோ` எனப் பாடம் ஓதலும் ஆகாது. இத்திருப்பாட்டிலும், வருந்திருப்பாட்டிலும், `அருள்நடம்` எனப் பாடம் ஓதுவாரும் உளர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

அம்பலத் தருநட மாடவேயும்
யாதுகொல் விளைவதென் றஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே
ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைப் பூதஞ் சூழ
வானவர் கணங்களை மாற்றி யாங்கே
என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே.

பொழிப்புரை :

நீ பொன்னம்பலத்திலே அரிய கூத்தினை ஆடிக் கொண்டிருந்தாலும், கொடிய பழிச்செயல்களைச் செய்யும் தேவர்கள் முன்னொரு காலத்தில் உன்னை நஞ்சினை உண்பித்தார்களே. அதனால் உனக்கு என்றாவது என்ன தீங்கு நேரக்கூடுமோ என்று அஞ்சி நெஞ்சில் நிம்மதியில்லாமல் இருக்கின்றேன். தேவர்கள் கூட்டங்களை நீக்கி வலிமையுடையனவாய்ப் பலவாய் உள்ள படை யாம் தன்மையை உடைய பூதங்கள் உன்னைச்சூழ எங்கள் வீதி வழியாக என்னுடைய மிக்க பசலை நோய்தீரும் வண்ணம் எழுந்தருளுவாயாக.

குறிப்புரை :

``ஆடவேயும்`` என்றாரேனும், `ஆடுகின்றாய்` என்றும், ஊட்டினர் என்றும் கேட்டு `யாது விளைவதுகொல் என்று நெஞ்சம் அஞ்சி உய்யேனாயினேன்` என உரைத்தல் கருத்து என்க. ஏகாரங்கள் இசைநிறை. `வன்பழியாளராகிய உம்பர்` என்க. `உனக்கு ஊட்டினர்` எனச் சொல்லெச்சம் வருவிக்க. ``உய்யேன்`` என்றது `இறந்துபடும் நிலையில் உள்ளேன்` என்றபடி. வன்பழியாளராகிய கொடுமை மிகுதிபற்றி `வானவர் கணங் களை மாற்றுதல்` ஒன்றையே எடுத்துக் கூறினாளாயினும், `ஆடுதலை விட்டு எழுந்தருளாய்` என்றலும் கருத்தாம். என்னை? `ஒழியாது ஆடு தலால் இறைவற்குத் திருமேனி நோம் என்பது கருதியும் வருந்தினாளா தலின்`. பயலைமை - பசலைத் தன்மை. `எழுந்தருளின் இதுவும் தீரும்` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே
ஏதமில் முனிவரோ டெழுந்த ஞானக்
கொழுந்தது வாகிய கூத்த னேநின்
குழையணி காதினின் மாத்தி ரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
செங்கனி வாயும்என் சிந்தை வௌவ
அழுந்தும்என் ஆருயிர்க் கென்செய் கேனோ
அரும்புனல் அலமரும் சடையினானே.

பொழிப்புரை :

குற்றமற்ற பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலிய முனிவர்களோடு வெளிப்பட்ட ஞானக்கொழுந்தாகிய கூத்தப் பிரானே! உன் குழையை அணிந்த காதுகளில் உள்ள காதணிகளும் செழித்த பெரிய மலர்களை ஒத்த முக்கண்களும், சிவந்த கனி போன்ற வாயும் என் உள்ளத்தைக் கவருவதனால் துன்பத்தில் ஆழ்ந்த என் உயிர் நிலைத்திருப்பதற்கு யான் யாது செய்வேன்? அரிய கங்கை நீர் சுழலும் சடையினானே! நீ எங்கள் வீதி வழியே அடியேன் காணுமாறு எழுந்தருளுவாயாக. எழுந்தருளினால் அடியேன் உயிர்நிற்கும்.

குறிப்புரை :

``எழுந்தருளாய் எங்கள் வீதியூடே` என்பதனை இறுதியிற் கூட்டுக. ஏதம் - குற்றம். முனிவர், பதஞ்சலி, வியாக்கிர பாதர் முதலியோர். `தில்லைவாழந்தணர்` எனலும் ஆம். `கொழுந்தது` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. கொழுந்து, முடிநிலை. `மாத்திரை` என்பதும் ஓர் காதணியே. வௌவ - வௌவினமையால். அழுந்தும் - துன்பத்தில் ஆழ்கின்ற. உயிர்க்கு - உயிர் நிற்றற்கு. அலமரும் - அலைகின்ற. `நீ எங்கள் வீதியூடே எழுந்தருளினால் என் உயிர் நிற்கும்` என்றவாறு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

அரும்புனல் அலமரும் சடையினானை
அமரர்கள் அடிபணிந் தரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
பேசவும் நையும்என் பேதை நெஞ்சம்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
காரிகை யார்முன்பென் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.

பொழிப்புரை :

கரிய பெரிய மலரை ஒத்த கழுத்தை உடையவனே! தில்லை அம்பலத்தில் எழுந்தருளியிருக்கும், தெய்வங்களுக்குள் மேம்பட்ட எங்கள் தேவனே! கங்கை சுழலும் சடையை உடைய உன்னைத் தேவர்கள் அடிகளில் விழுந்து வணங்கிப் பலவாறு தங்கள் முறையீடுகளை விண்ணப்பிக்க, அக்காலத்துப் பெரிய திரிபுரங்களைத் தீக்கிரையாக்கிய உன் வில்லாண்மையின் புகழை எடுத்துக்கூறும் அள வில், அடியேனுடைய அறியாமையை உடைய உள்ளம் உருகுகிறது. வளப்பமான மாலையை அணிந்த மகளிர் முன்னே என் பெண்மையை, உன் அழகான மலர்போன்ற திருவடிகளை அணைய வேண்டும் என்ற விருப்பத்தினாலே தோற்று நிற்கிறேன்.

குறிப்புரை :

``சடையினானை`` என்றது, `சடையை உடைய வனாகிய நின்னை` என, முன்னிலைக்கண் படர்க்கை வந்த வழு வமைதி. சிலை - வில். வார்த்தை - (வீரச்) செய்தி. ``பேசவும்`` என்ற உம்மை, `பேசுதல் ஒன்றையே பிறர் செய்யவும்` எனப் பொருள் தந்து நின்றது. நையும் - (அதனைக் கேட்ட அளவிலே) நெகிழ்ந்துருகும். கருந் தடமலர் - கரிய நீர்ப் பூ; நீலோற்பலம். கண்ட - கண்டத்தை உடையவனே. வண் தார் - வளப்பமான மாலையை அணிந்த. `தார்` என்பது இங்குப் பொதுமையில் நின்றது. காரிகையார் - பெண்கள். `அவர்கள் முன்பு` என்றது, `அவர்கள் நகைக்கும்படி` என்றதாம். பெண்மை - பெண் தன்மை; நாணம். நசை - விருப்பம். `நசையினாலே தோற்றேன்` என முன்னர்க் கூட்டுக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி
என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பசுந்தலை யோடிடறிப்
பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநட மாடில் எங்கள்
ஆருயிர் காவல்இங் கரிது தானே. 

பொழிப்புரை :

தில்லை அம்பலத்தில் எங்கள் தேவதேவனாய், மனந்தெளிந்த அந்தணர் தியானிக்கும் இடமாகிய சிற்றம்பலத்தில் உள்ள அழகுமிக்க ஒளி வடிவினனாய், அடியேனுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த என் தந்தையே! பல்லோடு கூடிய பிரம கபாலமாகிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி இருட்டில் கால்கள் இடற, உன் திருவடிகளாகிய மெல்லிய மலர்கள் அடியிடுதலால் நோவ, நீ சென்று இருளில் அரிய கூத்தாடினால், உன் செயல்பற்றிக் கவலைப்படும் அடியேங்களுடைய அரிய உயிரை நீங்காமல் பாது காப்பது அரிய செயலாகும். ஆதலின் இருளில் நடம்புரிதலை நீக்கு வாயாக.

குறிப்புரை :

``தேவதேவை`` என்றதும், முன் திருப்பாட்டில், `சடையினானை` என்றதுபோன்ற வழுவமைதி. தேறிய அந்தணர் - தெளிந்த அந்தணர்கள்; என்றது, `ஞானத்திற் சிறந்த அந்தணர்` என்றவாறு. எல்லை - இடம்; என்றது சிற்றம்பலத்தை. ``எல்லையது`` என்றதில் உள்ள அது, பகுதிப்பொருள் விகுதி. `எல்லையதன்கண்` என ஏழனுருபு விரிக்க. ஆகிய - பொருந்திய. காவல் கொண்டு - காத்து. பல்லைப் பொருந்திய பசுந்தலை, இடுகாட்டுள் நரி முதலிய வற்றால் இழுக்கப்பட்டுக் கிடப்பன பல்தோன்றக் கிடத்தலை, ``பல்லை ஆர்`` என்றார். `பாதம் அவற்றோடு இடறுதலால் அம்மலரடி நோவ` என்க. அல்லினில் - இருளில். ஆடில் - ஆடினால். ஆருயிர் காவல் - ஆருயிரை யாங்கள் காத்தல். அரிது - இயலாது. `ஆதலின், இனி அதனை ஒழிக` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

ஆருயிர் காவல்இங் கருமை யாலே
அந்தணர் மதலைநின் னடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரே எங்கள் தில்லை வாணா
சேயிழை யார்க்கினி வாழ்வரிதே. 

பொழிப்புரை :

இவ்வுலகில் தன்னுடைய அரிய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள இயலாமையாலே அந்தணர் மகனாகிய மார்க்கண்டேயன் உன் திருவடிக்கண் வணங்க, கூரிய முனையினை உடைய வேலாகிய படைக்கலனை ஏந்திய கூற்றுவன் அழியுமாறு உன் கழல் ஒலிக்கும் திருவடி ஒன்றினைச் செயற்படுத்த நீ போரிட்டனை என்றால் தேவர்களில், குறைவில்லாதவர்கள் யாவர்? அவரவர் நுகரும் துயரங்களைப் போக்குதற்கு ஒருப்பட்டு நிற்கின்ற சிறந்த உயிர்போல்பவனே! எங்கள் தில்லையம்பதியில் வாழ்கின்றவனே! நீ காவாதொழியின் சேயிழையார் ஆகிய மகளிருக்கு இனி உயிர் வாழ்தல் அரிது.

குறிப்புரை :

இங்கு ஆருயிர் காவல் அருமையால் - இவ்வுலகில் தனது அரிய உயிரைக் காத்துக்கொள்ளுதல் இயலாமையால். அந்தணர் மதலை, மார்க்கண்டேயர். `சாய மலைந்தது` என இயையும். குரை கழல் - ஒலிக்கின்ற கழல் அணிந்த பாதம். பணிகொள - செயல் கொள்ளும்படி. மலைந்தது, தொழிற் பெயர். `மலைந்தது குரைகழல் பணிகொள என்றால்` என மாற்றுக. `கூற்றுவனைச் சாய்த்தது திருவடி ஒன்றினாலே என்றால்` என, இறைவனது பெருமையை வியந்தவாறு. ``குறைவு`` என்றது, `அடங்குதல்` என்னும் பொருட்டாய், `குறைவு இலாதார்` என்றது, `உனக்கு அடங்குதல் இல்லாதவர்` எனப் பொருள் தந்தது. சீர் உயிரே - சிறந்த உயிர்போல்பவனே. `ஏனைத் தேவர் ஒருவருக்கும் இல்லாத உனது இப்பெருமையை உணருந்தோறும் சேயிழையார்க்கு இனி வாழ்வு அரிது` என இயைபு படுத்தி உரைக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

சேயிழை யார்க்கினி வாழ்வரிது
திருச்சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை யென்ற டைந்தேன்
தனிமையை நினைகிலை சங்க ராஉன்
பாயிரும் புலியத ளின்னு டையும்
பையமே லெடுத்தபொற் பாத முங்கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆளுடை ஈசனேயோ. 

பொழிப்புரை :

திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே! எங்களை அடிமைகொள்ளும் ஈசனே! நீ தாயை விட மிக நல்லவனாய் உள்ளாய் என்று உன்னைச் சரண்யனாக அடைந்தேன். எல்லோருக்கும் நன்மையைச் செய்கின்றவனே! நீ இப்பெண்ணுடைய தனிமைத் துயரை நினைத்துக்கூடப் பார்க்காதவனாக உள்ளாய். உன்னுடைய பரவிய புலித்தோல் ஆடையையும் மெதுவாக மேலே தூக்கிய அழகிய திருவடியையும் கண்டே இப்பெண் தன் சங்கு வளையல்களை இழந்தாள். நீ அருளாவிடின் இனி மகளிருக்கு உயிர்வாழ்தல் அரிதாகும்.

குறிப்புரை :

`தாயினும் மிக நல்லையாகிய நீ இவளது தனிமைத் துயரை நினைகின்றாய் இல்லை` என்றபடி. ``பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து` (தி.8 பிடித்த-9) என்னும் திருவாசகத்தை நோக்குக. `சங்கரா` என்றதும், நீ சுகத்தைச் செய்பவன் அல்லையோ என்னும் குறிப்புடையது. `உன் உடை` என இயையும். `பாய் புலி, இரும் புலி` என்க. இரு - பெரிய. அதள் - தோல். ``அதளின்`` என்பதில் இன், அல்வழிக்கண் வந்த சாரியை. ``அதளின்னுடை`` என்றதில் னகர ஒற்று விரித்தல். `இவள் சங்கம் இழந்தது, உனது உடையையும், பாதத்தையும் கண்டே` என்க. ஆவா, இரக்கக் குறிப்பு, ஓகாரமும் அன்னது. இத்திருப்பாட்டு ஒன்றும் செவிலி கூற்று. ஏனைய தலைவி கூற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

எங்களை ஆளுடை ஈசனேயோ
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப்
பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
திருச்சிற்றம் பலமுட னேபு குந்து
அங்குன பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத் திருக்க லாமே. 

பொழிப்புரை :

எங்களை அடிமையாகக் கொண்ட ஈசனே! இள முலையின் முகடு நசுங்குமாறு உன்னைத்தழுவி உன்னுடைய அழகிய பங்கயம் போன்ற முகத்தை நோக்கி நீ அணிந்திருக்கும் குளிர்ந்த பிறையின் நிலவொளி என்மேல் பரவ, சிவந்த கயல் மீன்களை ஒத்த கண்களை உடைய இளைய பெண்கள் காணுமாறு, அவர்கள் கண் எதிரே திருச்சிற்றம்பலத்தில் உன்னோடு புகுந்து, அங்கு உனக்குக் குற்றேவல்கள் பல நாள்தோறும் செய்து உன் அருளைப் பெறும் வாய்ப்பு உண்டாயின் இவ்வுலகில் பலகாலம் இருக்கலாம். உன் அருள் கிட்டாவிடின் அஃது இயலாது.

குறிப்புரை :

நெக - குழைய. முயங்கி - தழுவி. பொற் பங்கயம், இல் பொருள் உவமை. நிலவு - மதியினது ஒளி. அது, பகுதிப்பொருள் விகுதி. ``செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே`` என்றது, `ஏனைய மகளிரினும் முற்பட்டு` என்றவாறு. `முன்னே புகுந்து` என இயையும். உடனே - விரைவாக. `நாளும் செய்து` என முன்னே சென்று இயை யும். அகலிடம், பூமி. இருக்கலாம் - உயிர்வாழ்தல் கூடும். `ஈசனேயோ, முன்னே` உடனே புகுந்து, முயங்கி, நோக்கி நோக்கி நாளும் பணி பல செய்து அருள்பெறின் இருக்கலாம்; அல்லது கூடாது` எனத் தனது ஆற்றாமை மிகுதி கூறினாள். இதனால் இவ்வாசிரியரது பேரன்பு அறியப்படும். ``நிலவு என்மேல் படரப் பணி பல செய்து`` என்றதனால், `அணுக்கத் தொண்டுகள் பல செய்து` என்றதாயிற்று.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

அருள்பெறின் அகலிடத் திருக்க லாமென்
றமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடை யாரின் மிக்கார்
ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழியு மையாள்
கணவனை வல்வினை யாட்டி யேன்நான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
ஆசையை அளவறுத் தார்இங் காரே. 

பொழிப்புரை :

சிவபெருமானுடைய அருள் கிட்டினால் பரந்த தத்தம் உலகில் பலகாலம் இருக்கலாம் என்று இந்திரனும், பிரமனும் திருமாலும் ஆகிய அறிவுடையவரின் மேம்பட்டார் இருவரும், இன்றும் எங்கள் கூத்தப்பிரானைத் துதிக்கிறார்கள். இறைவனுக்கு மையல் ஏற்படுவதற்குக் காரணமான மழலை போன்ற மென்மையான சொற்களை உடைய பார்வதியின் கணவனாகிய சிவபெருமானை அடைவதற்குத் தீவினையை உடைய அடியேனுடைய நெஞ்சம் சுழல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஆசை இவ்வளவுதான் இருத்தல் வேண்டும் என்று ஆசையை அளவுபடுத்தி ஆசைகொள்பவர் இவ் வுலகில் யாவர் உளர்?

குறிப்புரை :

``மிக்கார்`` என்றது, `மிக்காராய்` என முற்றெச்சம். ஏத்துதலால், அறிவுடையாரின் மிக்காராயினர். ``மிக்கார்`` என்ற தனைப் பெயராக்கி, அமரர்தம் தலைவன் முதலியோருக்கு ஆக்கி உரைப்பாரும் உளர். `கூத்து` என்றது, `கூத்தனை` என ஆகுபெயராய் நின்றது. மருள்படு - இறைவற்கு மையல் உண்டாதற்கு ஏதுவான. வினையாட்டியேன் - வினையை உடையளாகியேன். `நான் அருள் பெறுதலைக்கருதி என் நெஞ்சம் அலமரும்` என்க. ``ஆசையை அளவறுத்தார் இங்குஆர்`` என்றது வேற்றுப்பொருள் வைப்பு. `எங்கள் கூத்தனை, உமையாள் கணவனை அமரர்கள் தலைவன் முதலாயினோர் (அவன் அருள் பெறமாட்டாது) ஏத்துகின்றாராக, வல் வினையாட்டியேனாகிய நான் பெற நெஞ்சம் அலமரும்; ஆதலின், ஆசையை அளவறுத்தார் இங்கு ஆர்` எனக் கூட்டி முடிக்க. ஆவா, வியப்புக் குறிப்பு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

ஆசையை அளவறுத் தார்இங் காரே
அம்பலத் தருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார்
வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
வண்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள்கொண் டேத்த வல்லார்
மலைமகள் கணவனை யணைவர் தாமே. 

பொழிப்புரை :

உலகிலே ஆசையை அளவுபடுத்தி ஆசை வைப் பார் யாவர் உளர்? பொன்னம்பலத்தில் அரிய கூத்து நிகழ்த்தும் சிவ பெருமானை நறுமணம் கமழும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய மகளிர் நாள்தோறும் மனத்தால் கூடியதனால் அவனுடைய மாலையைப் பெறுவதற்காக ஏற்பட்ட பூசலைப்பற்றிக் குற்றமற்ற வேத வாக்கியங்கள் பலவற்றை ஓதும் நாவினனாகிய வண்மையை உடைய புருடோத்தமன் படைத்துக்கூறிய பாடல்களாகிய மலர்களைக் கொண்டு, பார்வதி கணவனாகிய சிவபெருமானைத் துதிக்க வல்லவர் கள் அவனை மறுமையில் சென்று அடைவார்கள்.

குறிப்புரை :

``ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே`` என்பதன் பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. `ஆசையை அளவறுத்தல் இயலாதாகலின் மடவார் பலரும் கலந்தெழுவாராயினர்` என்றவாறு. `நடம் ஆடுவானைக் கலந்து எழும்` என இயையும். கலந்து-மனத்தாற் கூடி. இனி, ``கலந்து`` என்றதனை, `கலக்க` எனத் திரித்தலும் ஆம். வைகலும் - நாள்தோறும். மாலைப் பூசல் - மாலையைப் பெற. `நான் நான்` என்று செய்யும் பூசல். `பூசலை உரைத்த வாசகம்` என்க. `கண்டு` என்றது, `படைத்து` என்றவாறு. வாசக மலர்கள் - சொற்களாகிய பூக்கள்.
சிற்பி