சேதிராயர் - கோயில்


பண் : பஞ்சமம்

பாடல் எண் : 1

சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள் அயற் சார்வதி னால்இவள்
வேலை யார்விட முண்டுகந் தீரென்று
மால தாகுமென் வாணுதலே.

பொழிப்புரை :

சேல்மீன்கள் உலாவும் வயல்களை உடைய தில்லையம்பதியில் உள்ள பெருமானே! என்னுடைய ஒளி பொருந்திய நெற்றியை உடைய மகளாகிய இத்தலைவி பல நாள்கள் உம் அருகிலேயே பொருந்தியிருப்பதனால், `கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களைக் காத்த மகிழ்ச்சியை உடையீர் நீர்` என்று உம் திறத்துக் காம மயக்கம் கொண்டுள்ளாள்.

குறிப்புரை :

அயல் சார்வது - பக்கத்தில் அணுகி நிற்றல். இது நாள் தோறுமாம். வேலை ஆர் - கடலில் நிறைந்து தோன்றிய. உகந்தீர் - அதனையே அமுதமாகக் கொண்டீர். என்று - என்று இடையறாது கூறி. மால் ஆகும் - பித்துடையவள் ஆகின்றாள். `அவளுக்கு அருளல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். அது, பகுதிப்பொருள் விகுதி. வாள் நுதல் - ஒளியையுடைய நெற்றி; இஃது ஆகுபெயராய், `ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்மகள்` எனப் பொருள்தந்தது. ``அயற் சார்வதினால் மாலதாகும்`` என்றதனால், இறைவரது வசீகரம் விளங்கும். ``விடம் உண்டு உகந்நீர்`` என்றதனால், `அதனினும் நான் கொடியளோ` என்பது குறித்தாள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 2

வாணுதற் கொடி மாலது வாய்மிக
நாண மற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணுதற் பொலி தில்லையு ளீர்உமைக்
காணில் எய்ப்பிலள் காரிகையே. 

பொழிப்புரை :

என் அழகியமகளாகிய ஒளி பொருந்திய நெற்றியை உடைய இக்கொடி போல்வாள் மிகவும் காம மயக்கம் கொண்டு நாணமற்றவளாய் உள்ளாள். இவளைப்பழைய நிலையில் கொண்டுவரும் வழியை நான் அறியேன். மாளிகைகளின் மேற்பகுதி ஆகாயம் வரையில் உயர்ந்த மாளிகைகளை உடைய தில்லையம் பதியில் உள்ள பெருமானே! உம்மைக் கண்டால் இவள் மெலிவு இல்லாதவள் ஆவாள். ஆதலின் இவளுக்கு நீர் காட்சியையாவது வழங்குதல் வேண்டும்.

குறிப்புரை :

கொடி - கொடிபோன்றவள். மிக அற்றனள் - முழுதும் நீங்கினாள். ``இனி`` என்றதன்பின் `விளைவது` என்பது வருவிக்க. `இனித் தெருவில் வந்து உம்மைத் தூற்றுவாள்` என்பது குறிப்பு. நுதல் - மாளிகைகளின் நெற்றி. `நுதல் சேணிற்பொலி தில்லை` என்க. சேண் - ஆகாயம். எய்ப்பு - மெலிவு. இலள் - இல்லாதவள் ஆவள். `ஆதலின், உமது காட்சியையேனும் அவளுக்கு வழங்குதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 3

காரி கைக்கரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
சீரியல் தில்லை யாய்சிவ னேஎன்று
வேரி நற்குழ லாள்இவள் விம்முமே. 

பொழிப்புரை :

கரிய பெரிய யானையின் தோலைக் கிழித்து உரித்து அதனை மேற்போர்வையாக அணிந்தவரே! `மேம்பட்ட சிறப்பினை உடைய தில்லை நகரில் உள்ளவனே! சிவபெருமானே!` என்று தேன் பொருந்திய நல்ல கூந்தலைஉடைய இவள் நாக்குழறிப்பேசுகிறாள். இப்பெண்ணுக்கு நீர் அருள் செய்வீராக.

குறிப்புரை :

``காரிகைக்கு அருளீர்`` என்றதை இறுதிக்கண் கூட்டி, ``காரிகைக்கு`` என்றது, `இவட்கு` எனச் சுட்டளவாய் நின்றதாகலின், ``இவள்`` என்றதற்கு, `காரிகை` என உரைக்க. `கருங்கரி, மால் கரி` எனத் தனித்தனி இயைக்க. மால் - பெரிய. ``ஈர் உரித்து`` என்றது, ``ஈர்ந்து உரித்து`` எனப் பொருள் தந்தது, ``வரிப்புனை பந்து`` (முருகு - 68) என்றாற் போல. சீர் இயல் - தன் புகழ் எங்கும் பரவிய. வேரி - தேன். `குழலாளாகிய இவள்` என்க. ``சீரியல் தில்லையாய்`` என்றது தலைவி கூற்றாய் வேறு முடிதலின், பால் வழுவாகாமை உணர்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 4

விம்மி விம்மியே வெய்துயிர்த் தாளெனா
உம்மை யேநினைந் தேத்தும் ஒன்றாகிலள்
செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே.

பொழிப்புரை :

பெரிதும் தேம்பிப் பெருமூச்சுவிட்டு அடியேனை ஆண்டுகொள்வாயாக என்று உம்மையே விருப்புற்று நினைத்துப் புகழ்கிறாள். இவள் ஒருதிறத்தும் ஆற்றுவிக்க இயலாதவளாக உள்ளாள். சான்றோர்கள் வாழும் தில்லை நகரில் உள்ள பெருமானே! எங்களுடைய அழகிய கரிய மயிர்முடியை உடைய பெண் பெரிதும் மயங்குகிறாள்.

குறிப்புரை :

வெய்து உயிர்த்து - மூச்சு வெப்பமாக விட்டு. ஆள் - என்னை ஆண்டுகொள். ஏத்தும் - துதிப்பாள். ஒன்று ஆகிலள் - ஒரு திறத்தும் ஆகாள்; `ஆற்றுகின்றிலள்` என்றபடி. இதனை முற்றெச்ச மாக்கி, ``அயர்வுறும்`` என்பதனோடு முடிக்க. செம்மலோர் - தலைமை உடையோர்; அந்தணர். பயில் - வாழ்கின்ற. அம் அல் ஓதி - அழகிய இருள்போலும் கூந்தலை உடைய மகள். இதனை முதற்கண் கூட்டுக. அயர்வுறும் - சோர்வாள்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 5

அயர்வுற் றஞ்சலி கூப்பி அந்தோஎனை
உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே. 

பொழிப்புரை :

என் மகளாகிய இப்பெண் சோர்ந்து கைகளைக் கூப்பி `ஐயோ! என்னை வாழச்செய்ய உன் கொன்றைப் பூமாலையை அருளுவாயாக` என்று உம்மை வேண்டுகிறாள். வேலைப்பாடுகள் அமைத்து நிறைந்த மதில்களைஉடைய தில்லைநகரில் உள்ள பெருமானீரே! நீர் இப்பெண்ணுக்கு அருள் செய்யுங்கள்!

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, ``உற்றாள்`` என்றதை முற்றெச்சமாகக் கொண்டு உரைக்க. உய - உய்ய. இதன்பின், `கொள்ள` என ஒரு சொல் வருவிக்க. செயல் உற்று ஆர் - வேலைப் பாடு அமைந்து நிறைந்த. இவண் - இப்பொழுது. மயல் - பித்து. `இவட்கு அருள்` என்னும் குறிப்பெச்சம் இறுதியில் வருவித்து முடிக்க.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 6

மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென்
றோதில் உய்வன் ஒண் பைங்கிளி யேஎனும்
சேதித் தீர்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்ம டக்கொடியையே. 

பொழிப்புரை :

`ஒளிபொருந்திய பச்சைக்கிளியே! பார்வதிபாகன், வளமான கொன்றைப்பூவினை அணிந்த மார்பினன் என்று நீ கூறினால் நான் பிழைப்பேன்` என்று என் இளைய கொடிபோல்வாள் ஆகிய மகள் கூறுகிறாள். பிரமனுடைய தலையைப் போக்கினவரே! தில்லைக் கண்நின்று இவளை வருந்தப் பண்ணினீர்; இது தகுமோ?

குறிப்புரை :

`ஒண் பைங்கிளியே, மாதொர் கூறன், கொன்றை மார்பன் என்றாற்போலத் தில்லையானைப் பற்றிய பேச்சினை நீ பேசினால் நான் உய்வேன்; (இல்லாவிடில் உய்யமாட்டேன்) என்று கிளியிடம் சென்று வேண்டுவாள்` என்க. வண்டு ஆர் - வண்டுகள் ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற); `நிறைந்த` என்றலுமாம். `நான் முகனைச் சிரம் சேதித்தீர்` என மாற்றுக. சேதித்தீர் - அறுத்தவரே. `சிரம் சேதித்தீர்` என்றது, `ஒறுத்தீர்` என்னும் பொருட்டாய், `நான்முகனை` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. `தில்லைக்கண் நின்றுவாதித்தீர்` என்க. வாதித்தீர் - வருந்தப் பண்ணினீர். `இது தகுமோ` என்பது குறிப்பெச்சம். இத்திருப்பாட்டின் ஈற்றடி இறுதிச்சீர் வேறுபட்டு வந்தது.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 7

கொடியைக் கோமளச் சாதியைச் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே. 

பொழிப்புரை :

`பகைவருடைய மும்மதில்களும் அழியுமாறு செந் நிறமுடைய மேருமலையை இருகால்களும் அணுகவருமாறு வளைத் தவரே!` என்று பூங்கொடி, அழகிய சண்பகப்பூ, பூங்கொம்பு, இளைய பெண்யானை இவற்றைப் போன்ற என்மகள் வருந்தி நிற்கின்றாள். நீர் செய்துள்ள இந்த இறந்து படும்நிலை இவளுக்கு எந்நாள் நீங்கும்? நீர் என்னகாரியம் செய்துவிட்டீர்?

குறிப்புரை :

``பகைத்தார் புரம்......கால்வளைத்தீர்`` என்பதை முதலிற்கொள்க. கொடி - பூங்கொடிபோன்றவள். கோமளச்சாதி - அழகிய செண்பகப் பூப்போன்றவள். கொம்பு - பூங்கொம்பு போன்ற வள். `கொம்பினை` என இங்கும் இரண்டாவது விரிக்க. இளம் பிடி - இளமையான பெண்யானை போன்றவள். இவையெல்லாம் தலைவியையே குறித்து வந்த பல பெயர்கள்.
இடிய - அழியும்படி. செஞ்சிலை - நிமிர்ந்து நின்ற வில்லை. கால் வளைத்தீர் - இரண்டு காலும் அணுக வருமாறு வளைத்தவரே. `பகைத்தார் புரம் இடியச் செய்தது பொருந்தும்; காதலித்தாளை இடியச் செய்தல் பொருந்துமோ` என்பது குறிப்பு. `நீர் செய்த மூச்சறவு என்று முடியும்` என மாற்றுக. மூச்சறவு - இறந்துபாடு; இஃது அதற்கு ஏதுவாய வருத்தத்தைக் குறித்து நின்றது. என்று முடியும் - எந்நாள் நீங்கும். `நீங்குதல் இன்றி. இறந்து பாட்டினைச் செய்தேவிடும் போலும்` என்பது குறிப்பெச்சம்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 8

அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே.

பொழிப்புரை :

``அறவடிவினனே! முன்னொருகால் பன்றியின் பின்னே அதனைவேட்டையாடச் சென்றவேடனே! என்னைத் துன்புறுத்தாதே`` என்கிறாள். பிறைபோன்ற நெற்றியை உடைய வளாய் வளையல்களை அணிந்த என் மகள் `சிறகுகளை உடைய வண்டுகள் பொருந்திய சோலைகளைஉடைய தில்லைநகரில் இருப்பவரே!` என்று உம்மை அழைக்கிறாள்.

குறிப்புரை :

அறவன் - அற வடிவினன். மறவன் - வேடன். ``அறவன், மறவன்`` என்பன, `தன்னை அடைந்தாரை இடுக்கண் நீக்கிக் காப்பவன்` என்னும் குறிப்புணர்த்தி நின்றன. வாதை - துன்பம். பிறை குலாம் நுதல் - பிறை விளங்குவது போலும் நெற்றியையுடைய. பெய் வளை - இடப்பட்ட வளையினை உடையவள். `இவள் எப் பொழுதும் உம்மையே நினைந்து முறையிடுகின்றாள்; இவளது வருத்தத்தைப் போக்கீர்` என்பது கருத்து.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 9

அன்ற ருக்கனைப் பல்லிறுத் தானையைக்
கொன்று காலனைக் கோள் இழைத் தீர்எனும்
தென்ற லார்பொழில் தில்லையு ளீர்இவள்
ஒன்று மாகிலள் உம்பொருட்டே. 

பொழிப்புரை :

தென்றல் காற்று வீசும் சோலைகளைஉடைய தில்லைநகரில் உள்ளவரே! என்மகள் `ஒருகாலத்தில் சூரியனுடைய பற்களைத்தகர்த்து, யானையைக் கொன்று, இயமனைக் கொலை செய்தவர் நீங்கள்` என்று கூறிக்கொண்டே இருக்கிறாள். என்மகள் உம்மை அடைய வேண்டி ஒன்றும் ஆகாமல் நாளும் அழிந்து கொண்டிருக்கிறாள்.

குறிப்புரை :

அருக்கன் - சூரியன். சூரியனைப் பல் இறுத்தது தக்கன் வேள்வியில். ``இறுத்து, கொன்று`` என்ற எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. கோள் - உயிரைக் கொள்ளுதல்; கொலை. இழைத்தீர் - செய் தவரே. எனும் - என்று சொல்லுவாள். `இவள் உம்பொருட்டு ஒன்றும் ஆகிலள்` என்க. உம் பொருட்டு - உம்மை அடையவேண்டி, ஒன்றும் ஆகிலள் - ஒருபொருளும் ஆகாது அழிந்தொழிகின்றாள். `இவளைக் கடைக்கணித்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இதனுள் முன்னைத் திருப்பாட்டில் `அன்று பன்றிப்பின் ஏகிய` என்னும் பொருளைத் தொடர்ந்து, `அன்று அருக்கனைப் பல் இறுத்து, என்று வந்த பொருள் அளவே அந்தாதிபோலும்!

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே. 

பொழிப்புரை :

பொருந்தும் வகையில் தில்லை நாயனாராகிய சிவபெருமானைப் பற்றி அழகிய சேதி நாட்டு மன்னன் விரும்பி உரைத்த இப்பாடல்களை, எழுத்துப்பிழை, சொற்பிழை தோன்றாத வாறு தூய்மையாகப் பாடுபவர்கள் சிவலோகத்தில் உள்ள இன்பத்தை மறுமையில் பொருந்தி என்றும் மகிழ்வாக இருப்பர்.

குறிப்புரை :

ஏயுமாறு - பொருந்தும் வகையில் `சேதிபர்கோன் தில்லை நாயனாரை `ஏயுமாறு உரைசெய்தன` எனக் கூட்டுக. சேதிபர் - சேதிநாட்டவர். சேதியர்` எனப் பாடங்கொள்ளுதல் சிறக்கும். கோன் - அரசன். ``சேதிபர் கோன்`` என்றதனால், `சேதிராயர்` என்னும் பெயர்க் காரணம் விளங்கும். நயந்து - விரும்பி. உரைசெய்தன - பாடிய பாடல்கள். தூயவாறு - எழுத்துப்பிழை முதலியன இல்லாதவாறு. ``துறக்கம்`` என்றது இங்கு, `உடலைத் துரத்து சென்று அடையப்படுவது` எனக் காரணப் பெயராய்ச் சிவலோகத்தைக் குறித்தது. ஆய இன்பம் - அடையத் தக்கதாய இன்பம்; சிவானந்தம். ஏனை இன்பங்கள் அன்னதாகாமை அறிக. இத்திருப்பாடலின் ஈற்றடி ஈற்றயற்சீர் வேறுபட்டு வந்தது.
சிற்பி