b


குருபாதம்

 

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

வழங்கியருளிய

02 ஆசியுரை

ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீசீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்.

ஸ்ரீ குருஞானசம்பந்தர்

இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது, கடவுளை வழிபட்டு முத்தி இன்பம் பெறுதற் பொருட்டேயாம்' என்பது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரின் பாலபாடத்தில் காண்பது. பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள் என்பது இதனால் நன்கு தெளிவாகிறது.

நோயும் மருந்தும்:

பிறவி அறவேண்டுமானால் பிறப்பு எதனால் வருகிறது என்று அது வரும்வழியைக் காணவேண்டும். பிறவி என்பது ஒரு நோய். அந்நோய்க்கு மூலம் எது என்று தெரிந்தாலன்றிப் பிறவியை ஒழிக்க முடியாது.

எனவே "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருவள்ளுவர் வாக்கிற்கு இணங்கப் பிறவிநோய் எதனால் வருகிறது என்பதை முதலில் அறிதல் வேண்டும்.

ஆசை பாசம் சினம் அகல:

"அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாப் பிறப்பீனும் வித்து", என்பது வள்ளுவர் வாக்கு. எனவே பிறவி ஆசையால் வருகிறது என்பதை உணர்கிறோம்.

ஆசை எங்கிருந்து வருகிறது என்று அதன் மூலத்தைக் காண வேண்டும். ஆசைக்கு மூலம் ஆணவமாகிய பாசம். எனவே பிறவி அறவேண்டுமானால் அதற்கு மூலமாகிய ஆணவம் நீங்க வேண்டும்.

ஆணவத்தை அகந்தைக் கிழங்கு என்கிறார் குமரகுருபரர், "அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே" என்பது அவர்தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். கிழங்கு இருக்கும்வரை தாமரை தோன்றிக் கொண்டேதான் இருக்கும். ஆணவக்கிழங்கை அகழ்ந்தெடுத்துவிட்டால் அத் தொண்டர் உள்ளத்தே இறைவி பிரகாசிப்பாள், என்பது இத்தொடரின் கருத்தாகும்.

ஆணவமாகிய பாசம் நீங்கவேண்டுமானால் சிவபூசை செய்தல் வேண்டும். சிவபூசை செய்ய வேண்டுமானால் அதற்கு முதற்படியாகச் சற்குருநாதரிடம் சமயதீட்சை பெற்று அஞ்செழுத்தை ஓதி உணர்ந்து உருவேற்ற வேண்டும்.

இந்நிலை எய்தவேண்டும் என்றால், சினம் முதலாகிய அறுவகைக் குற்றங்களும் அகலவேண்டும்.அப்போது தான் குருநாதரை அணுகி ஞானோபதேசம் பெறும் பக்குவம் உண்டாகும்.

சினம் முதலிய குற்றங்கள் தீர வேண்டுமானால் திருமுறைகள் ஓதவேண்டும். திருமுறைகளே நமக்குத் தாயாக இருந்து உதவி புரிய உறு துணையாய் உள்ளன.

அத்திருமுறைகளைப் பலகாலும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுதல் வேண்டும். மனமே மனிதனின் உற்ற நண்பன்; அமைச்சன். அதனால் தான் குருஞானசம்பந்தர் மனத்தை அழைத்து உபதேசித்தார்.

ஒரு மனிதன் பிறவி நீங்க வேண்டுமானால் ஆசாரியரைச் சரணடைய வேண்டும். அவர் கற்பித்த வழிநின்று திருமுறைகளைப் பன்னாளும் பயின்று ஓதுதல் வேண்டும், ஓதினால், சினம் அகலும், சினம் அகன்றால் நல்ல குருநாதர் நமக்கு அஞ்செழுத்தை உபதேசிப்பார், அவ்வஞ்செழுத்தை, நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும், மென்றாலும் துயின்றாலும், விழித்தாலும் இமைத்தாலும், ஓதியும் உணர்ந்தும் உருவேற்றினால், சிவபூசைபுரியும் வாய்ப்பும் ஆசாரியனால் கிடைக்கும்.

அச்சிவபூசையைப் பன்னாளும் பயின்று முறையாகப் பூசித்து வந்தால் பாசம் அகலும். பாசம் அகன்றால் பிறவி அறும். வீடு பேறு கிட்டும். `அற்றது பற்றெனில் உற்றது வீடன்றோ'

இதனையே ஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில் "அற்றவர்க் கற்ற சிவன்' என்று ஓதினார். பற்றற்ற பரம்பொருள் பற்றற்றவர்கட்குப் பற்றுக் கோடாயிருந்து அருள் புரியும் என்பது இதன் கருத்து.

வீடும் ஞானமும்:

குருஞானசம்பந்தர் பாடலில், "திருமுறைகள் ஓதாய்" என்று பிரித்துச் சொன்னால், திருமுறைகளை ஓதுவாயாக என்பது பொருளாகும். "திருமுறைகளோ தாய்" என்று பிரித்துச் சொன்னால் திருமுறைகளே நமக்கெல்லாம் தாயாயிருந்து அருள்புரிந்து வீடுபேறு நல்கும் என்பது பொருளாகும்.

திருமுறைகளை ஓதுவிப்பதற்கும் ஒரு ஆசான் வேண்டும். அதைத்தான் ஞானசம்பந்தர் திருவலஞ்சுழித் தேவாரத்தில் குறிப்பிடுகின்றார்.

வீடும், அதற்கு ஏதுவாகிய ஞானமும் வேண்டுவீரானால் விரதங்களால் மட்டும் ஞானமும் வீடும் கிடைத்து விடாது. வலஞ்சுழியில் நமக்கெல்லாம் ஞானத் தந்தையாக எழுந்தருளியுள்ள ஈசனை நாடுவதும், ஞானசம்பந்தனுடைய செந்தமிழைக் கொண்டு இசை பாடும் ஞானம் வல்ல ஓதுவாரடி சேர்வதுமே உனக்கு வீடும், அதற்கு ஏதுவாகிய ஞானமும் கிடைத்தற்கு வாயில் என்கிறார் ஞானசம்பந்தர். எனவே, முதலில் திருமுறைகளை ஓதுவாரடி சேர்க, என்று உபதேசிக்கிறார்.

வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்,

வாடின் ஞானம்என் னாவதும் எந்தை வலஞ்சுழி

நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டுஇசை

பாடும் ஞானம்வல் லார்அடி சேர்வது ஞானமே. (தி.2 ப.2 பா.11)

இது ஞானசம்பந்தரின் இரண்டாவது திருமுறையில் இரண்டாவது பதிகத்தின் இறுதிப்பாடல் காட்டும் உபதேசம்.

பதிகங்களும் பண்களும்:

இவ்விரண்டாம் திருமுறையில் 122 திருப்பதிகங்கள் உள்ளன. இவை 90 தலங்களில் பாடப்பெற்றவை.

இப்பதிகங்களில் இந்தளப்பண் அமைந்த பதிகங்கள் 39, சீகாமரப்பண் அமைந்த பதிகங்கள் 14, காந்தாரப்பண் அமைந்த பதிகங்கள் 29, பியந்தைக் காந்தாரப்பண் அமைந்த பதிகங்கள் 14, நட்டராகப் பண் அமைந்த பதிகங்கள் 16, செவ்வழிப்பண் அமைந்த பதிகங்கள் 10.

இப்பண்களின் கட்டளை பேதங்களாக 12 காணப்பெறுகின்றன. இந்தளத்தில் நான்கும், சீகாமரத்தில் இரண்டும், பியந்தைக் காந்தாரத்தில் மூன்றும், நட்டராகத்தில் இரண்டும், செவ்வழியில் ஒன்றுமாகக் குறிக்கப்பட்டுள்ளன.

பண்ணிசை:

இசைக்கு எளிதில் வயப்படுபவன் இறைவன். சிவபெருமானது கால்விரலால் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு இடர்ப்பட்ட இராவணன் சாமகானம்பாடி இறைவனது இன்னருளைப் பெற்றான். ஆனாய நாயனார் வேய்ங் குழலில் திருவைந்தெழுத்தை இசைத்து முத்தி பெற்றதைப் பெரியபுராணம் உணர்த்தும்.

அப்பர் சுவாமிகள் `தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' என்றும், `கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறு அளப்பில' என்றும், அருளிச் செய்கின்றார்.

ஞானசம்பந்தர் இறையுணர்வை இசைத்தமிழ் வாயிலாகப் பரப்பிய பெருமைக்குரியவராய் விளங்கினார் என்பதை, `நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்' எனச் சுந்தரரும் போற்றியுள்ளார்.

இசைத்தமிழ் நூலார் கூறும் 103 பண்களில் ஞானசம்பந்தர் 22 பண்களில் திருப்பதிகங்களை அருளியுள்ளார். தாம் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைப் பண்ணொன்றப் பாடிப் போற்ற வேண்டுமென ஞானசம்பந்தர் அறிவுறுத்துவதை அவர் திருமுறைகளில் பல இடங்களிலும் காணலாம். புள்ளிருக்கு வேளுர்த் திருப்பதிகத்தில்,

'பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள்'

'கீதத்தை மிகப்பாடும் அடியார்கள்'

எனவும் கூறியருள்கிறார்.

திருவலஞ்சுழித் திருப்பதிகத்தில்,

"....ஞானசம்பந்தன் ... தமிழ்மாலை

ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் தம்மை வாதியா வினை...."

என்றும்,

திருக்கோழம்பம் திருப்பதிகத்தில்,

`பண்பயன் கொளப்பாட வல்லார்க்கு இல்லை பாவமே'

என்றும்,

திருமணஞ்சேரித் திருப்பதிகத்தில் ,

`பண்ணாரப்பாட வல்லார்க்கு இல்லை பாவமே'

என்றும் கூறியருள்கிறார்.

கடிக்குளம் திருப்பதிகத் திருக்கடைக்காப்பில்,

`இனமலிந்து இசைபாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே'

எனவும் உரைத்தருள்கிறார்.

ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகங்களை அடியவர்கள் இசை கூடும் வகையால் ஓதவேண்டும் என்பதையே பல பதிகங்களிலும் வற்புறுத்திக் கூறியருளுவதைக் காணலாம்.

இசை, நல்லிசை, மெல்லிசை, வல்லிசை என மூவகைப்படும். அவற்றுள், நல்லிசை என்பது பாடலுக்காக இசை என்ற அடிப்படை யில் பாட்டின் பொருளைக் கேட்போர் உளங்கொளத்தக்க வகையில் பாடப் பெறுவதாகும். இந்நல்லிசையிலேயே ஞானசம்பந்தர் தேவாரம் அருளிச் செய்துள்ளார் என்பதைச் சுந்தரர், `நல்லிசை ஞானசம்பந்தன்' எனக்கூறும் தேவாரத் தொடராலும் அறியலாம்.

பண்களின் பயன், இறையருளை மக்கள் உணர்ந்து போற்றத் துணை புரியவேண்டும், என்பதைச் சேக்கிழார், `பண்ணின் பயனாம் நல்லிசையும்' என்ற தொடரால் உணர்த்தி அருள்கிறார்.

`பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்' என்று கூறுவார் திருவள்ளுவர். அவ்வகையில் பாடற்கு இயைந்த பண்ணோடு பாடி இறைவனைப் போற்றுவதை அன்பர்கள் கடைப் பிடிக்க வேண்டும்.

நாவின் பயன்:

திருஅனேகதங்காவதம் திருப்பதிகத்தில் மூன்றாம் பாடலில் இறைவனின் திருநாமத்தை நவிலாத நாக்கு, `நா' என்னும் தகுதியைப் பெறாது என்று உறுதியாகக் கூறுகிறார்.

"நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே?"(தி.2 ப.5 பா.3)

என்று கேட்கிறார்.

இவ்விடத்து இளங்கோவடிகள் "நாராயணா என்னா நா என்ன நாவே" என்று சிலம்பில் கேட்பதை ஒப்பு நோக்கி உணரலாம்.

இதே நோக்கில், அங்கமாலை அமைப்பில் ஞானசம்பந்தர் அருளிய திருஆமாத்தூர்த் திருப்பதிகத்தில், `ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே' என்றும், `அவர் புகழ் கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே' என்றும், `அவர் திருநாமம் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே' என்றும் கூறுவன ஒப்பு நோக்கத்தக்கன.

இல்லான், இல்லாள்:

இல்லறத்தில் இல்லான் என்றால் இல்லாதவன் என்ற பொருளைத் தருகிறது. இல்லாள் என்றால் இல்லத்தை ஆட்சி செய்பவள் என்ற பொருளைத் தருகிறது என்று பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

சேக்கிழார், காரைக்காலம்மையார் வரலாற்றில், இல்லானுக்கு இல்லாளன் என்ற சொல்லைப் படைத்துள்ளார். `இல்லாளன் வைக்க எனத் தம்பக்கல் முன்னிருந்த நல்லநறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை' அடியவர்க்கு அமுதளிக்க இட்டார், என்ற இடத்துக் குறித்துள்ளார்.

இரண்டாவதாக, திருமூலர் வரலாற்றில், திருமூலர் தம் உடலை ஓரிடத்தில் சேமித்து வைத்து மூலன் உடலில் புகுந்து ஆனிரைகளை மேய்த்து அவரவர் வீட்டில் சேர்ப்பித்து ஒரு பொது மடத்தில் தங்கினார். மூலன் மனைவி மூலனை அழைத்தபோது தொடர்பில்லை என்பதை உணர்த்தினார். அப்போது மூலன் மனைவி "இல்லாளன் இயல்பு வேறானமை கண்டு" வீடு திரும்பினாள், என்ற இடத்திலும் இல்லாளன் என்ற சொல்லை ஆண்டுள்ளார்.

இல்லாளன் என்ற சொல்லுக்கு, இல்லத்தையும், இல்லத்தை ஆள்கின்ற இல்லாளையும் ஆள்பவன் என்பது பொருளாகும்.

இது பற்றி ஞானசம்பந்தர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

இல்லான் என்றால் இல்லத்தை உடையவன் என்பது பொருள். இதற்கு இரண்டு மேற்கோள் காட்டுகிறார், நல்லான் என்றால் நன்மையை உடையவன் என்பது தானே பொருள், வல்லான் என்றால் வன்மையை உடையவன் என்பது தானே பொருள். அதுபோல இல்லான் என்றால், இல்லத்தை உடையவன் என்பதுதானே பொருள் என்கிறார்.

உதாரணமாக, நல்லான், வல்லான் என்பன நன்மை யுடையான், வன்மையுடையான் என்ற பொருளே தரும். மாறான பொருள் தராது.

சொல்லான் என்பதற்குச் `சொல்லை உடையவன்' என்றும் பொருள் கொள்ளலாம். `சொல்லாதவன்' என்றும் பொருள் கொள்ளலாம்.

அதுபோலவே இல்லான் என்பதற்கும் இருபொருளும் கொள்ள இடம் தருகிறது. இந்த ஐயத்தை நீக்குதற்குக் "கோயிலாம் இல்லானை ஏத்த நின்றார்க்குளதின்பமே" என்று எளிமையாகவும் இனிமை யாகவும் இயம்பியுள்ளார். இதனால், இல்லான் என்றால் இல்லாதவன் என்ற பொருளும், இல்லத்தை உடையவன் என்ற பொருளும் உண்டு என்பதை உணரலாம்.

அதுபோலவே இல்லாள் என்றால் இல்லதாவள் என்ற பொருளும், இல்லத்தை ஆள்பவள் என்ற பொருளும் உண்டு. இல்லத்தை உடையவன் இல்லான். அவ்வில்லத்தை ஆட்சி செய்பவள் இல்லாள். இதற்கு நாட்டு நடப்பில் உதாரணம் சொல்ல வேண்டுமாயின், நாட்டை யுடையவர் ஜனாதிபதி, நாட்டை ஆள்பவர் பிரதமர் என்று சொல்லலாம். இவ்வளவு கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பாடலைக் காண்போம்.

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்

வல்லானை வல்லவர் பால்மலிந் தோங்கிய

சொல்லானைத் தொன்மதின் காழியே கோயிலாம்

இல்லானை ஏத்தநின் றார்க்குள தின்பமே (தி.2 ப.11 பா.1)

என்தலை மேலாரே:

திருக்கோயில் பழுதுற்ற காலத்து அதனைப் பாதுகாத்துப் புதுக்குவார் திருவடி என்தலை மேலன என்று திருக்கோயிலைக் கட்டியவர்கள் அதன் அருமைப் பாட்டை உணர்ந்து எழுதியுள்ளவை கல்வெட்டில் காணப்படுகின்றன.

அதே போல் கட்டிய கோயிலில் உள்ள இறைவன் திரு மேனிகளை உணர்ந்து வழிபடுவோர் திருவடிகள் என் தலை மேலன என்று நமது சமயசாரியர்கள் குறிப்பிட்டுள்ளமை நாம் எல்லோரும் அறிந்து மேற்கொள்ளத் தக்கனவாயுள்ளன.

கட்டிடத்தைக் கட்டிய அருமைப் பாடுடையார் கட்டிடத்தைப் புதுப்பித்தோர் அடிகள் என் முடி மேல என்றார்கள். கட்டிடத்தில் உயிராக விளங்கும் இறைவனை வழிபடுவோர் திருவடி என் தலை மேலன என்றார்கள், திருவுருவத்தின் அருமை உணர்ந்த ஆசாரிய மூர்த்திகள்.

திருக்கச்சி ஏகம்பத் திறைவனைப் பாடிய ஞானசம்பந்தர் முழுமையான தூயவன் என்றால் அது இறைவனையே குறிக்கும். அவனால் ஓதப்பட்ட மறையும் தூயதே, அதை ஓதிய வாயும் தூய்மையானதே. அத்தூய வேதத்தில் துட்டநிக்ரகம், சிஷ்ட பரிபாலனம் சொல்லப்பட்டுள்ளது.

எனவே தூயவனாகிய இறைவன் தீயவனாகிய இராவணனை வாட்டிய தீயவன் என்கிறார். இறைவனைத் தீயவன் என்று எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே உடனே அடுத்த சொல்லில் தீதில் கச்சித் திருஏகம்பம் மேயானை என்கிறார். அவனை மேவுவார் (மேவுதல் - பொருந்துதல்) என் தலை மேலார் என்று நிறைவு செய்கிறார். அவ்வரிய பாடலைக் காண்போம்
.

தூயானைத் தூயவா யம்மறை ஓதிய

வாயானை வாளரக் கன்வலி வாட்டிய

தீயானைத் தீதில்கச் சித்திரு ஏகம்பம்

மேயானை மேவுவார் என்தலை மேலாரே.(தி.2 ப.12 பா.8)

இதே கருத்தை அப்பர் சுவாமிகளும் குறிப்பது கண்டு நாமும் அவ்வழி நடப்போம். அப்பர் திருவலஞ்சுழித் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். அப்பரும் இலங்கை வேந்தனுக்கு மறக்கருணை செய்த வரலாற்றையே குறிப்பிட்டு இக்கருத்தைப் புலப்படுத்துகிறார்.

இராவணனின் இருபது தோள்களும் இற்றுப்போம் படியாக இறைவன் ஒருவிரல் ஊன்றினான். ஊன்றிய பாதம் நலங்கொள் பாதம் ஆதலால் அவன் அழியவில்லை, அருள் பெற்றான்; நாளொடு வாளும் பெற்றான் அல்லவா?

மலங்கு மீன் என்ற ஒருவகை மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த திருவலஞ் சுழியை எவரொருவர் வலஞ் செய்து வழிபடுகின்றாரோ அவர் அடி என் தலை மேலவே என்றருள்கிறார் அப்பர்.

பெருமானை உணர்ந்து வழிபடும் அடியவர்களின் பெருமையை அத்தகைய பெருமையுணர்ந்த ஆசாரியமூர்த்திகள் தானே அறிவர். அறிந்த வண்ணம் செயலாற்றியும் உள்ளனர். அப்பாடலைக் காண்போம்.

இலங்கை வேந்தன் இருபது தோள்இற

நலங்கொள் பாதத் தொருவிரல் ஊன்றினான்

மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி

வலங்கொள் வார்அடி என்தலை மேலவே.

திருமடம் கோயிலான குறிப்பு:

திருஅழுந்தூர்த் திருப்பதிகத்தில் ஒருமடமே கோயிலாக ஆகிய குறிப்பு விளங்குகிறது. அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ ஆகும். இத்தலம் கம்பர் தோன்றிய சிறப்புடையது.

அகத்தியர் கீழே பூமியில் பூசை செய்த போது ஊர்த்துவரதன் என்ற அரசனின் தேர் அதற்கு மேல் சென்றது. அதனால் அத்தேர் பூமியில் அழுந்தியது. அதுகாரணமாக ஊர், தேர் அழுந்தூர் என ஆயிற்று என்று கூறுவர்.

இப்பதிகத்தின் எல்லாப் பாடல்களிலும், "மாமடம் மன்னினையே" என்று சம்பந்தர் குறிக்கிறார்.

தொழுமாறு வல்லார் துயர்தீர நினைந்து

எழுமாறு வல்லார் இசைபாட விம்மி

அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்

வழிபாடு செய்மா மடம்மன் னினையே (தி.2 ப.20 பா.1)

என்பது முதல் பாடல்.

இதனால் இங்கு மடம் இருந்தது என்று தெரிகிறது. அகத்திய முனிவர் பூசித்தார் என்பதனாலும் இக்கருத்து வலுப்பெறுகிறது. வரலாற்று அறிஞர் குடந்தை திரு. என். சேதுராமன் இங்குத் திருமடம் ஒன்று இருந்து பின் அதுவே கோயிலாக மாறியது எனக் கூறுகிறார். இது மேலும் சிந்தித்தற்குரியது.

மெய்கண்டாரை வழங்கிய பாடல்:

"கண்காட்டும் நுதலானும்" என்ற திருவெண்காட்டுத் திருப்பதிகம் இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதில் இரண்டாம் பாடல்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளம்நினை

வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாஒன்றும்

வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே (தி.2 ப.48 பா.2)

என்பது. இத்திருப்பாடல்தான் மெய்கண்டார் தோற்றத்திற்குக் காரணமாயிருந்தது. இது இத்திருமுறையில் இருப்பது சிறப்பிற் குரியது. பெண்ணாகடத்தைச் சேர்ந்த அச்சுதகளப்பாளர் தமக்கு மகப்பேறின்மையால் தம் குலகுருவாகிய திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியரிடம் வேண்ட, அவர் திருமுறையில் கயிறு சார்த்திப் பார்த்தபோது இப்பாடல் கிடைத்தது. அதன் படியே திருவெண்காடு அடைந்து முக்குள நீராடி மெய்கண்டாரைத் தவப்பேறாகப் பெற்றார்.

வேளாளர்களும் அந்தணர்களும்:

ஆக்கூர்த் திருப்பதிகத்தில் அங்கு வாழ்ந்த வேளாளர்களும் அந்தணர்களும் வள்ளல்களாக விளங்கினர் என்று குறிக்கிறார். ஒவ்வொரு பாடலிலும் தொல்கோயில் என்று குறிப்பதால் அக்கோயில் மிகப்பழமையானது என்பது புலனாகிறது. இப்பதிகத்தின் மூன்றாவது பாடலில்,

"வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்

தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே" (தி.2 ப.42 பா.3)

என்று குறிக்கிறார். ஒன்பதாவது பாடலில்,

"இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லைஎன்னாது ஈந்துவக்கும்

தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே" (தி.2 ப.42 பா.9)

என்று குறிக்கின்றார். ஈந்துவக்கும் `தன்மையார்' என்று சுட்டுவது அந்தணரைத் தான் எனச் சேக்கிழார் விளக்கந் தருகிறார். ஏனெனில் இங்கு அந்தணர் மரபில் வந்த சிறப்புலி நாயனார் பெருவள்ளலாக வாழ்ந்து விளங்கினார் என்று பெரியபுராணம் கூறுகிறது. சுந்தரரும் திருத்தொண்டத் தொகையில்,

"சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்"

என்று குறிக்கிறார். எனவே சம்பந்தர் அந்தணரையே இங்கு இல்லை என்னாது ஈந்துவக்கும் `தன்மையார்' என்னும் சொல்லால் கூறுகிறார். இதனைச் சேக்கிழார் பெருமான் ஆக்கூரில் தோன்றியருளிய சிறப்புலி நாயனார் வரலாற்றுத் தொடக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார் அப்பாடல் காண்க.

"பொன்னிநீர் நாட்டில் நீடும் பொற்பதி புவனத் துள்ளோர்

இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லைஎன் னாதே ஈயும்

தன்மையார் என்று நன்மை சார்ந்தவே தியரைச் சண்பை

மன்னனார் அருளிச் செய்த மறைத்திரு ஆக்கூர் ஆக்கூர்"

மலையாள அந்தணர் வழிபாடு:

. பழுவூர், மேலைப்பழுவூர், கீழைப்பழுவூர் என இருபகுதி யாயுள்ளது. பழு - ஆலமரம். இது இங்குத் தலவிருட்சமாக உள்ளது.

சோழர் சம்பந்திகளாகிய சேரர் கிளையினரைப் பற்றிய கல்வெட்டுக்கள் மேலைப்பழுவூரில் உள்ளன. கீழைப்பழுவூரே பாடல் பெற்றது. சேரர் கிளையினர் இங்கு வந்து வதிந்ததனால் அவர்கள் அங்கிருந்தே மலையாள அந்தணர்களை அழைத்து வந்தனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இதனை, ஞானசம்பந்தர், `அந்தணர்களான மலையாளரவரேத்தும் பந்தமலிகின்ற பழுவூரரனை' (தி.2 ப.34 பா.11) என்று குறித்துள்ளார்.

வினாவுரை:

இப்பதிகங்களில் முதல் நான்கு திருப்பதிகங்கள் வினாவுரை அமைப்பில் உள்ளன. வினாவுரை என்பது, இறைவனின் திருவுருவத்தில் காணப்பெறும் அடையாளங்களைச் சுட்டி அவற்றின் அவசியம் என்ன என்று வினவுகிறது. இவ்வினாக்களுக்குத் தக்கவாறு தத்துவார்த்த விளக்கங்களையும் புராண விளக்கங்களையும் இப்பதிகங்களின் உரைகளில் கண்டு தெளியலாம்.

உதாரணத்திற்கு ஒரு வரலாறு குறிப்போம். பிரமன் சிவபிரானுக்கு உள்ளதுபோல் தமக்கும் தலை ஐந்தாக உள்ளமைபற்றிச் செருக்குற்றார். அஃதுணர்ந்த சிவன் அப்பிரமனது உச்சந்தலையைக் கிள்ளி அதில் பலிகொண்டார். இது ஆலங்குடி என வழங்கும் திரு இரும்பூளைத் திருப்பதிகத்தில் குறிக்கப்பட்டுள்ளமை காண்க.

நச்சித் தொழுவீர் நமக்கிது சொல்லீர்

கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி

இச்சித் திரும்பூளை இடங்கொண்ட ஈசன்

உச்சித் தலையில் பலிகொண்டுழல் ஊணே (தி.2 ப.36 பா.4)

புள்ளிருக்குவேளூர்ப் பதிகம்:

வைத்தீசுவரன் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பவரோக வைத்தியநாதப் பெருமான் என்ற திருப்பெயர் உடையவர். இவர் உடற் பிணியை மட்டுமின்றி உயிர்ப் பிணியாகிய பிறவிப்பிணியையும் நீக்கி அருளுபவர். பவம் - பிறப்பு. ரோகம் - நோய்.

அப்பர் சுவாமிகள் தமது திருத்தாண்டகத்தில், "தீரா நோய் தீர்த்தருள வல்லான் ... ..." என்று இக்கருத்தைக் குறிக்கிறார். ஈண்டுத் தீரா நோய் என்பது பிறவியைக் குறிக்கும். இதனால் இப்பெருமானைப் பவரோக வைத்தியநாதர் எனப் போற்றுவர்.

அருணகிரிநாதர், "பவரோக வைத்தியநாதப் பெருமாளே" என்று முருகனை வைத்தியநாதப் பெருமானாகப் போற்றியுள்ளார்.

இத்தலத்துத் திருப்பதிகம் இவ்விரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது; "கள்ளார்ந்த பூங்கொன்றை..." என்று தொடங்கும் பதிகம் அது.

இத்தலத்திற்குரிய பெயர் புள்ளிருக்கு வேளூர் என்பதாம். புள் + இருக்கு + வேள் + ஊர் என்று பிரித்து இதற்குப் பொருள் காணலாம். `புள்' என்பது சம்பாதி, சடாயு என்னும் பறவை அரசர்களையும், இருக்கு என்பது வேதத்தையும் `வேள்' என்பது முருகனையும், ஊர் என்பது ஊர்ந்து செல்லுகின்ற சூரியனையும் குறிக்கும். இவை நான்கும் இங்குப் பூசித்தன ஆதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது. இக்குறிப்பினுள் முன் இரண்டு செய்திகளைத் திருஞானசம்பந்தர் இத்தலப்பதிகத்தில் குறிக்கின்றார்.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு போரிட்ட சடாயுவோடு, சம்பாதி என்னும் பறவை அரசும் பூசித்த தலம் இது என்பதனை, "கள்ளார்ந்த பூங்கொன்றை ..." என்னும் திருப்பதிகப் பாடல்களில்,

"தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாம் இருவர்

புள்ளானார்க்கு அரையனிடம் புள்ளிருக்கு வேளூரே" (தி.2 ப.43 பா.1)

"யோசனைபோய்ப் பூக்கொணர்ந்துஅங்கு ஒருநாளும் ஒழியாமே

பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே" (தி.2 ப.43 பா.3)

என்று குறிக்கின்றார். இருக்குவேதம் பூஜித்தது என்னும் கருத்தினை,

"வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே" (தி.2 ப.43 பா.5)

என்று இயம்புகிறார். சடாயு என்னும் பறவை இராவணனோடு போரிட்டது என்னும் இராமாயண வரலாற்றுக் குறிப்பினை, இப்பதிகத்தின் இரண்டாவது பாடலில்,

"மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்

பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே" (தி.2 ப.43 பா.2)

என்று குறிக்கிறார். இப்பெருமான் பண்ணிசை பாடுவோர்க்கு மண்ணுலக வாழ்வோடு விண்ணுலக வாழ்வும் வழங்குபவன் என்பதனை, 8-ஆவது பாடலில்,

"பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக

மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்" (தி.2 ப.43 பா.8)

என்றும், 11-ஆவது பாடலில்

"கடியார்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன்சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே" (தி.2 ப.43 பா.11)

என்றும் கூறுகிறார் இப்பாடல்களில் மண்ணின்றி விண் கொடுக்கும் என்பதும், இல்லையாம் மறுபிறப்பே என்பதும் இப்பெருமான் பவரோக வைத்தியநாதர் என்பதைக் குறிப்பன என உணரலாம்.

அதிசூக்கும பஞ்சாக்கரம்:

மயானத் தலங்கள் நான்கு என்பர். காசி மயானம், கச்சி மயானம், கடவூர் மயானம், நாலூர் மயானம் என்பன அவை. அந்நான்கனுள் முன்னிரண்டும் வைப்புத்தலங்கள். பின்னிரண்டும் பாடல்பெற்ற தலங்கள். நாலூர் மயானத் திருப்பதிகத்தில் `அதிசூக்கும பஞ்சாட்சரமாகிய சிவாய' என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. பத்தாவது பாடலில்,

துன்பாய மாசார் துவராய போர்வையார்

புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்

நண்பால் சிவாயஎனா நாலூர் மயானத்தே

இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே (தி.2 ப.46 பா.10)

என்று உள்ளது. அப்பர், சுவாமிகள், ஐந்தாம் திருமுறையில் திருப் பாலைத்துறைத் திருக்குறுந்தொகை ஆறாவது பாடலில்.

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்

மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று

எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்

பண்ணி னாரவர் பாலைத் துறையரே

என்று இவ் அதிசூக்கும பஞ்சாட்சரத்தைக் குறித்துள்ளார். இதற்கு முன்பே சம்பந்தர் குறித்துள்ளார் என்பது இப் பதிகத்தால் புலனா கின்றது.

அற்புதத் திருப்பதிகங்கள்:

இத்திருமுறையில் அற்புதத் திருப்பதிகங்கள் ஐந்து உள்ளன. திருமருகலில் கடமை வழுவா வணிகப்பெண்ணின் பொருட்டு, அரவுதீண்டி இறந்த வணிக இளைஞனை எழுப்பி மணம் முடித்தருளிய "சடையாய் எனுமால் ..." என்று தொடங்கும் பதிகம்; திருமறைக்காட்டில் அப்பரால் திறக்கப் பாடியருளிய திருக்கதவை அடைக்கப்பாடிய "சதுரம் மறை..." என்று தொடங்கும் பதிகம், மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாகும்வண்ணம் பாடியருளிய, "மட்டிட்ட புன்னையங் கானல்..." என்னும் பதிகம். ஆகியன குறிப்பிடத்தக்கன.

"மட்டிட்ட புன்னை..." எனத் தொடங்கும் பூம்பாவைத் திருப்பதிகத்தில் ஒருகுறிப்பை இங்கு நினைவுபடுத்துவது இன்றியமை யாததாகும். இப்பதிகத்தில் 10-ஆவது பாடலில் "பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய் ..." என்று வருகிறது.

பெருஞ்சாந்தி என்பதற்குப் பலர் குடமுழுக்கு விழா என்று சொல்லி வருகின்றனர். இது சரியாகப் படவில்லை. நித்திய வழிபாட்டில் குறைவுதீரச் செய்வது நைமித்திக வழிபாடு ஆகும். நைமித்திக வழிபாட்டில் குறைவுதீரச் செய்வது பெருஞ்சாந்தி ஆகும். இதனைப் "பவித்திரோற்சவம்" என்று ஆகமபத்ததிகளில் குறிப்பர். இன்றும் வைத்தீசுவரன்கோயில், திருமயிலாப்பூர் போன்ற பெருந் தலங்களில் இது நடைபெறுகிறது.

பெருஞ்சாந்தி, பவித்திரோற்சவமே என்பதைப் பின்வரும் செய்திகளால் நன்கு தெளியலாம்.

"மட்டிட்ட புன்னை" (தி.2 ப.47 பா.1) என்ற பதிகத்தின் முதற்பாடலில் உருத்திரபல்கணத்தார்க்கு, "அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்" என்பது புரட்டாசி மாத விழாவாகும்.

அடுத்த பாடலில், "ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ" என்றும்,

அடுத்த பாடலில் "தொல் கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ" என்றும்,

அடுத்து, மார்கழியில், "ஆதிரை நாள் காணாதே போதியோ" என்றும்,

அடுத்து, "தைப்பூசம் காணாதே போதியோ" என்றும்,

அடுத்து, "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம்" அமர்ந்தான் என்றும்,

அடுத்து, "பங்குனி உத்திர நாள் ஒலிவிழாக் காணாதே போதியோ" என்றும்,

அடுத்து, சித்திரையில், "பண்ணார் பதினெண் கணங்கள் தம் அட்டமி நாள், கண்ணாரக் காணாதே போதியோ" என்றும்,

அடுத்து, வைகாசியில் "பொற்றாப்புக் காணாதே போதியோ " என்றும் புகல்வதாலும்,
அடுத்து, பத்தாவது பாடலில், "பெருஞ்சாந்தி காணாதே போதியோ" என்பதாலும்,

புரட்டாசி முதல் வைகாசி வரை நித்தியத்தில் குறைவு தீரச்செய்யும் நைமித்திக விழா (ஏறுபடி) நடைபெற்றதையும், ஆனிமுதல், ஆடி, ஆவணி முடிய மூன்று மாதமும். நைமித்திகத்தில் குறைவு தீரச்செய்யும் பவித்திரோற்சவம் எனப் பெறும் பெருஞ்சாந்தி விழாவும் கொண்டாடிய மரபு ஞானசம்பந்தரால் இப்பதிகத்தில் விளக்கப் பெற்றுள்ளது, இக்கருத்தை அறிஞர் உலகம் அறிந்து பயன் கொள்வதாக.

இத்திருப்பதிகத்தில் குறிக்கப்பெறும் பவித்திரோற்சவம் சோமசம்புபத்ததியிலும் விளக்கப் பட்டுள்ளது. எனவே பெருஞ்சாந்தி குடமுழுக்கன்று, பவித்திரோற்சவமேயாம்.

பாலை நெய்தல் பாடியது:

ஞானசம்பந்தரின் தாயார் பகவதியார் திருஅவதாரம் செய்த தலம் திருநனிபள்ளி ஆகும்.

அங்குத் திருஞானசம்பந்தர் எழுந் தருளியபோது பாலையாய் இருந்த அப்பகுதியினை நெய்தல் நிலமாக்கி அருளினார் என்று கூறுவர். இதற்குச் சான்றாக,

"ஒண் கெழுவு

ஞாலத்தினர் அறிய மன்னுநனிபள்ளியது

பாலைதனை நெய்தலாக்கியும்"

என நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருவுலாமாலை பகர்கிறது.

"காரைகள் கூகை முல்லை..." (தி.2 ப.84 பா.1) என்று தொடங்குவது ஞானசம்பந்தர் அருளிய இத்தலப்பதிகம். காரை, கூகை முதலியன பாலை நிலத்திற் குரியன. இங்குத் திணை மயக்கமாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. இத்தலம் நெய்தல் நிலப்பகுதியில் உள்ளது. மருத நில வளம் உள்ளதாகவே இன்று காண்கிறோம். சேக்கிழார் அதுபற்றிக் குறிப்பிடவில்லை. மேலும் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஆணை நமது என்ற பிரான்:

இப்பதிகத்தின் திருக்கடைக்காப்புச் செய்யுளில், `ஆணை நமதே' என்று ஞானசம்பந்தர் குறித்துள்ளார்.

"நடுஇருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க

வினைகெடுதல் ஆணை நமதே" (தி.2 ப.84 பா.11)

என்கிறார்.

இங்கு ஒப்புமைக்காக மேலும் ஒன்றையும் சிந்திக்கலாம். திருமறைக்காட்டில் தங்கி இருந்த திருஞானசம்பந்தரை மங்கையர்க் கரசியார் மதுரைக்கு அழைத்துவரச்சொன்னபொழுது, ஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்பட எண்ணுகிறார். உடன் இருந்த அப்பர் சுவாமிகள், நாளும் கோளும் நன்றாக இல்லை; எனவே புறப்படுதல் வேண்டா என்று தடுக்கிறார். பிள்ளையார் "வேயுறு தோளிபங்கன் ..." என்று தொடங்கும் கோளறு திருப்பதிகத்தை அங்கு மொழிகிறார். இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பிலும், `ஆணை நமதே' என்று ஞானசம்பந்தர் அருளுகிறார்.

"ஆனசொல் மாலைஓதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே" (தி.2 ப.85 பா.11)

என்பது அப்பகுதி.

பிள்ளையார் ஒருவர்தான் "ஆணை நமது" என்று பாடிய பெருமான். ஏனெனில் இவர் இறைவனுடைய குமாரர் என்ற மகன்மை நெறியில் நின்று உய்ந்தவர் ஆதலின் உரிமையோடு இங்ஙனம் உரைக்கிறார்.

இவர்,`ஆணை நமது' என்று பாடிய பதிகங்கள் இரண்டு, இவ்விரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன என்பது, அறிந்து மகிழத்தக்கதாகும். மூன்றாந் திருமுறையில் இரண்டிடங்களில் ஆணையே என்று ஓரிடத்திலும், ஆணை நமதே என்று ஓரிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று திருவெண்காட்டுப் பதிகம். மற்றொன்று திருவேதிகுடிப் பதிகம்.

இவற்றால், சம்பந்தரை `ஆணை நமதென்ற பிரான்' என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.

ஏழைப் பேய்கள்:

தேவாரத் தலங்கள் பல, தமிழக வரலாற்றுத் தொடர்புடையன வாய் விளங்குவன. தலையாலங்கானம் என்ற தலம் புறநானூற்றுள் இடம் பெறுவது. அங்கு நிகழ்ந்த போரில் வெற்றி கொண்ட மன்னனை அவ்வூர்ப் பெயரோடு இணைத்து தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என அந்நூல் குறிப்பிடுகிறது. இன்று அவ்வூர் தலையாலங்காடு என்ற தேவாரத்தலமாக விளங்குகிறது. அவ்வாறே அன்னி என்ற குறுநில மன்னன் பெயராலமைந்த ஊர் அன்னியூர் என வழங்குகிறது. வென்றியூர் என்பதன் மரூஉவாக வெண்ணியூர் விளங்குகிறது. இத்தலத் தேவாரத்தில் திருஞானசம்பந்தர், 'வெண்ணியூர் இறைவனை ஏத்தாதவர், அறிவற்ற பேய்களோடு ஒப்பர்` என, உரைத்தருள்கிறார்.

மூத்தானை மூவுலகுக் கொரு மூர்த்தியாய்க்

காத்தானை கனிந்தவரைக் கலந்து ஆளாக

ஆர்த்தானை அழகமர் வெண்ணி அம்மான்தன்னை

ஏத்தாதார் என் சொல்வார் ஏழையப் பேய்களே (தி.2 ப.4 பா.4)

என்பது அத்தேவாரம். அழகியவெண்ணியிலுறையும் இறைவன் முன்னைப் பழம் பொருட்கும் முற்பட்டவன். மூவுலகங்கட்கும் தலைவனாய்க் காத்தருள்பவன். தன்னிடம் அன்பு செய்தவரை அடிமையாய்க் கொள்பவன். அத்தகைய பெருமானை ஏத்தாதிருப்பார் இவ்வுலகிடைப்பிறந்து என்ன பயனைக் காண வல்லார். அவர்கள் அறிவற்ற பேய்களோடு ஒப்பவரேயாவர்
.

பேய்கள் துர்மரணங்களால் மரித்துத் தமக்கு விதித்த வாழ்நாள் அளவும் உலகிடை அலமந்து பயனின்றித் திரிவன. சுந்தரரும் `நாயேன் பலநாளும் மனத்து உன் நினைப்பின்றிப் பேயாய்த்திரிந்து இளைத்தேன்' என அருளிச் செய்கிறார். திருவள்ளுவரும் பயனின்றித் திரிவோரை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும் (குறள்)

என உரைக்கின்றார்.

கற்பு:

இச்சொல்லுக்குக் கற்பித்தபடி ஒழுகுதல் என்பது பொருள். இருமுது குரவரும் பெரியோரும் கற்பித்த ஒழுக்கநெறி நிற்றலைக் கற்பு எனக் கூறுவர். பெண்கள் தாம் வளர்க்கும் கிளி, பூவை முதலிய பறவைகட்குக் கற்பித்தலைத் திருஞானசம்பந்தர் கற்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

மூன்றாம் திருமுறையுள், `காட்டுமாவது' என்ற பதிகத்துள், சமணர்களோடு வாது செய்ய ஆலவாய் இறைவனிடம், `தெண்ணர் கற்பு அழிக்கத் திருவுள்ளமே' என அனுமதி கேட்கின்றார். தெண்ணர்- திண்ணர் என்ற சொல்லின் திரிபாகும். இத்தொடரில் வரும் கற்பு என்ற சொல்லுக்கும், அவர்கள் தவறாகக் கற்றிதுப்பதை அழிக்க, என்பதே பொருள்.

உலகியலில் கற்பு என்ற சொல் பெண்களுக்குக் கூறப்படும் குணமாதலைக் கொண்டு அது ஒன்றே இச்சொல் உணர்த்தும் பொருள் எனக் கொள்ளல் பொருந்தாது என்பதை அறிதல் வேண்டும்.

குருஞானசம்பந்தர்,

நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே

பூதியிலார் செய்தவமும் பூரணமாம் - சோதி

கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்த

விழலெனவே நீத்து விடு

என்று கூறும் பாடலில் வரும் கற்பிலர் என்ற சொல் கற்புநெறி நில்லாத பெண்களையும், பெரியோர் கற்பித்தவாறு ஒழுகாத மக்களையும் குறிப்பன. இவ் விருவகையாகப் பொருள் கொள்ளுமாறுபாடல் அமைத்துள்ளது.

திருப்பழுவூர்த் திருப்பதிகத்தில் ஞானசம்பந்தர் பாடலில், கற்பு என்ற சொல், கற்பித்தல் என்ற பொருளில் வந்துள்ளமையைக் காணலாம்.

"பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ்கொல்லிப்

பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே" (தி.2 ப.34 பா.6)

திருநீற்றுப் பதிகம்:

சமய சாதனங்களில் முதலாவதாக விளங்குவது திருநீறு. ஞானசம்பந்தர் இதன் பெருமையை உணர்த்தும் நிலையில் ஒரு திருப்பதிகம் அருளியுள்ளார். பாண்டிநாடு அடைந்த ஞானசம்பந்தர் தென்னன் உற்ற தீப்பிணி தீரச் சாற்றிய பாடல்களைக் கொண்டது இப்பதிகம்.

திருவாலவாயான் திருநீறு மந்திரமாகவும் மருந்தாகவும் பயன் தருவது. முத்திதரும் சிறப்புடையது என்றும், பேணி அணிபவர்க்குப் பெருமை தருவது என்றும், அருந்தவத்தோர்களுக்கு ஆசையை நீக்குவது என்றும், துன்பம் போக்கி இன்பம் அளிக்க வல்லது என்றும், திருநீற்றின் சிறப்பை இத்திருப்பதிகத்துள் ஞானசம்பந்தர் உணர்த்தியருளுகிறார்.

முதல் ஆறு பாடல்களின் இறுதிவரிகளில் - திரு ஆலவாயான் திருநீறே - என்றும், அடுத்த ஐந்து பாடல்களின் இறுதிவரிகளில் - ஆலவாயான் திருநீறே - என்றும் இருபிரிவாக வருவதைக் கொண்டு, முதலில் வலது பக்க வெப்பைப் போக்கியதும், பின்னர் திருநீறு பூசிய அளவில் இடப்பக்க வெப்பபைப் போக்கியதும், குறிப்பிடப்படு கின்றமை கண்டு மகிழலாம்.

சைவ மெய்யன்பர்கள் திருநீறு அணியும் போது இத்திருப்பதிகத்தை முழுவதுமாகவோ, சில பாடல்களை ஓதியோ திருநீறு அணிதல் மிக்க பயனைத்தரும்.

கோளறு திருப்பதிகம்:

உலக வாழ்க்கையில், மக்கட்கு இறைவன் ஆணைப்படி, நன்மை தீமைகளைத் தருவன, ஞாயிறு திங்கள் முதலான கோள்கள். சமண் நெறியினின்று சைவ சமயத்தைக்காக்கத் திருமறைக் காட்டிலிருந்து மதுரை செல்ல முற்பட்ட ஞானசம்பந்தரிடம், அப்பர் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை, சமணர்களோ வஞ்சகர்கள், காலந் தாழ்த்துப் புறப்படலாம், எனக் கனிவோடு தெரிவித்தார். அப்போது ஞானசம்பந்தர், அடியார்களுக்கு இடர்வாரா என உரைத்தருளும் இத்திருப்பதிகம், சிறந்த கவச மந்திரமாக விளங்குகிறது.

நிறைவுரை:

இன்னோரன்ன பொருட் சிறப்புடைய இத்திருமுறை,

"............ஞான சம்பந்தன்சீர்

செய்தபத்தும்இவை செப்பவல்லார் சிவலோகத்தில்

எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே" (தி.2 ப.122 பா.11)

என நிறைவு பெறுகிறது.

சரியையாதி நால்வகை நெறி நின்று முத்திபெறுவார் சாலோகம் சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற நான்கு நிலையில் முத்தி பெறுவர் என்கிறது சாத்திரம் அவற்றுள் சாலோகம் என்பது சிவலோகத்தில் இனிதுறைதல். இத்திருமுறையை ஓதி, இறைவனைப் போற்றுவார், முடிந்த பயனாகிய சிவலோகத்தை அடைந்து, இமையவர் போற்ற இனிதே உறைவர். இப்பயனை அறிவித்து இத்திருமுறை நிறைவுறுகிறது.

இமையவர் போற்ற இனிது வாழ்க.

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி