அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை வீரட்டேசுவரர்
மரம்: கடுக்காய் மரம்
குளம்: சூலதீர்த்தம், ஞானதீர்த்தம்
பதிகம்: ஆதியிற் பிரமனார் -4 -49 திருநாவுக்கரசர்
நெடியமால் பிரம -4 -50 திருநாவுக்கரசர்
முகவரி: குறுக்கை நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203
தொபே. 04364 254824
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறைக்கு வடக்கேயுள்ள நீடூர் புகைவண்டி நிலயத்திலுருந்து வட மேற்கே சுமார் 8. கி.மீ. தொலைவில் விளங்குகிறது.
தலச் சிறப்பு: கடுக்காய்மரம் தல விருட்சமாதலின் கடுவனம் எனவும், இறைவர் அம்மையாரைப் பிரிந்து யோகஞ் செய்த இடமாதலின் யோகீசபுரம் எனவும், காமனைத் தகித்த இடமாதலின் காமதகனபுரம் எனவும், இலக்குமியினது கம்பத் (நடுக்கத்) தைப் போக்கியதாகலின் கம்பகரபுரம் எனவும், தீர்க்கவாகு முனிவர் இத்தலத்து வந்து இறைவனை அபிடேகித்தற்குக் கங்கா நீரினை விரும்பித் தமது கரங்களை நீட்டக் கரங்கள் நீளாது குறுகினமையால் குறுக்கை எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. குறுக்கை என்னும் ஒருவகைத் தாவரம் பற்றிய காரணப்பெயர் என்று திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்கள் தெரிவித்தார்கள்.
அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. இத் தலத்துச் சபை காமனங்கநாசனி சபை எனப் பெயர்பெறும். சம்புவிநோத சபை எனவும் வழங்கும். இறைவன் உமையம்மையாரைப் பிரிந்து யோகத் தமர்ந்த பெருமை மிக்கது. குறுங்கை விநாயகர் எழுந்தருளி அன்பர் கட்கு வேண்டும் பேறுகளைக் கொடுத்து அருள் பாலிப்பது.
கரும்பு வில்லினையுடைய காமனை எரித்து, இரதி போற்ற நெடுமால் இரப்ப மீட்டும் உயிர் கொடுத்தருளியது. இலக்குமிக் குளதான நடுக்கத்தை நீக்கியது. அசுரர்களை வெற்றிகொள்வதற்காக முருகக் கடவுள் வந்து பூசித்துச் சூலாயுதம் பெற்றது. இராகவன் வழிபட்டுப் பிதிர்க் கடன் ஆற்றியது. தீர்க்கவாகு முனிவருக்குக் கரம் குறுகச் செய்தது. வாணாசுரனுக்கு அஞ்சிய மகாவிஷ்ணுவுக்கு அபயமளித்தது. திருமுடி கண்டேன் எனப் பொய் கூறிய பிரமனுக்கு இறைவன் படைப்புத் தொழிலை நீக்கப் பிரமன் அஞ்சி வழிபட்டுப் பூசித்து இழந்த படைப்புத்தொழிலை மீட்டும் பெற்றது. சோழநாடு முழுவதும் நெல் விளையவேண்டுமென்று விரும்பிய சயத்துவசனுக்கு அவன் விருப்பின்படியே அருள் பாலித்தது. அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றது. காளியும் துர்க்கையும் காவல் புரிவது. இரதியும் காமனும் வழிபட்டது ஆகிய பல பெருமைகளையுடையது.
காமதகனம்: உலக காரணர்களாகிய அம்மை அப்பர் இருவரும் யோகத் தமர்வார்களானால் உலகில் எச்செயல்கள்தாம் நடக்கும்? யாவரும் காமநுகர்ச்சியை மறந்தனர். துறவியையொத்திருந்தனர். இந்நிலையில் சிங்கமுகன் தாரகன் முதலிய அசுரர்கள் வானநாடுபுக்கு வானவர்களைத் துன்புறுத்தத் தலைப்பட்டனர். பொருள்களைக் கவர்ந்தனர். உலகங்களைத் தம்மடிப்படுத்தினர். இவ்வாறாய இடர்களைப் பொறுக்க முடியாத தேவராதியோர் தம் குருவிடஞ் சென்று ``யாங்கள் இவ்வாறு வருந்தக் காரணம் யாது? மாரன் எங்கொளிந்தான்; அல்லது இறந்துவிட்டானா? ஒன்றும் உணரோம்`` என்றார்கள். அது கேட்ட குரு ``முன்பு இறைவனை இகழ்ந்தொதுக்கி இயற்றப்பட்ட யாகத்தில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். அப்பாவங் காரணமாக இத்துன்பத்தை அனுபவிக்கின்றீர்கள். கடுவனத்தில் யோகத்திலிருக்கும் கண்ணுதல் எழுந்து இமவான் மகளை மணம் புணர்வானாயின் அறுமுகக் கடவுள் தோன்றுவர். அப்போது அக்கடவுளால் உங்கள் துன்பம் ஒழியும்`` என்றார். உடனே தேவர்கள் ``அவ்வாறாயின் கண்ணுதல் யோகத்தைக் கலைத்து இமவான் மகளை அவாவுறச் செய்வதற்குரிய வழி யாது? உரைமின்` என்ன, வியாழபகவான் ``இரதி யோடு காமன் வருக`` என எண்ணினன். இருவரும் தோன்றினர்.
இந்திராதியோர் காமனை நோக்கி உபசார மொழிகள் கூறி இறுதியில் ``நீ கடுவனஞ் சென்று யோகிருக்கும் இறைவன் உமையைச் சேரும்படிச் செய்வாய்`` என்ரார்கள். அதனைக் கேட்ட காமன் ``நன்று! நன்று!! உமது யோசனை; என்னை அழிக்க எண்ணினீர்போலும். இறைவனோடு மாறுபாடுகொண்டு அவன்முன் சென்றோர் யாவராயினும் தப்புதல் முடியுமோ? விழித்து நோக்கின் உலகமே அழியும். ஆதலின் நீவிர் அவ் இறைவனை வணங்கித் துதித்து வேண்டியது பெறுவீர்`` என்றான். தேவர்கள் மறுபடியும் ``மாரனே! விஷ்ணு பிருந்தையைச் சார்வதற்கும், பிரமன் திலோத்தமையைச் சார்வதற்கும் காரணம் நீயல்லையோ? உன் பெருமையும் வலியும் சொல்வதற்கடங்கா`` எனப் பலவாறாகப் புகழ்ந்து கூறிப் போகும்படி செய்தனர். காமனும் உடன்பட்டு எழுந்தான். மனைவியாகிய இரதி`தலைவ! இமையவர்கள் சொற் கேட்டு நீ புறப்படுதல் தகாது; தீங்கு விளைதல் உறுதி ``என்று தடுத்தாள். ``வானவர் வருந்துகின்றனர்; தடுத்தல் தகாது`` எனக் கூறி எழுந்தான் காமன். பிரிவாற்றாத இரதியும் உடனெழுந்தாள். காமன் இத் தலத்து இறைவன் திருமுன் நின்று கரும்பு வில்லை வளைத்து மலர்ப் பாணத்தை எய்தான். இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அஞ்சி நடுங்கிய காமன் தென்புறம் ஓடினான். நெற்றிவிழி நெருப்புக் காமனை எரித்துச் சாம்பலாக்கியது. இரதி இதனைக் கண்டு புலம்பி மயங்கி விழுந்தாள். எல்லாம்வல்ல இறைவனை நோக்கி வேண்டினாள். இறைவன் எதிர்தோன்றி ``யாது வேண்டும்`` என்று கேட்டார். இரதி தன் கணவன் உயிர்பெற்று எழவேண்டுமென இரந்தாள். இறைவன் இரதிக்கு மட்டும் உருவ மாகவும் ஏனையோர்க்கு அருவமாகவும் தோன்றுவான் எனக் கூறி உயிர் பெற்று எழச் செய்தார். காமன் இரதியுடன் இத் தலத்தில் நீராடி இறைவனையும் இறைவியையும் வழிபட்டான். அதுமுதல் `உருவில்` `அநங்கன்` என்பர்.
தீர்க்கவாகு முனிவர் என்பவர் இறைவனைக் காண இத் தலத்திற்கு வந்து தம்முடைய நீண்ட கரங்களால் ஆகாய கங்கையை அள்ளி அபிஷேகிக்கத் தமது கரங்களை மேலே நீட்ட கரங்கள் குறைந்தன. தன் அன்பில் ஏதேனும் சிறு குறை இருக்குமென எண்ணித் தன் தலையைக் கல்லில் மோதிக்கொள்ள இறைவன் காட்சிதந்தார். இம் முனிவர்கை இத் தலத்தில் குறுகியமையால் குறுங்கை எனப்பட்டுக் குறுக்கையாகியது எனப்புராண வரலாறு கூறுகிறது.
மற்றும் சயத்துவசன் என்ற சோழ அரசனும், இலக்குமி, அகத்தியர் முதலியோரும் இத்தலத்தில் வழிபட்டு முத்தி பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது.
சுவாமி கோயில் மகாமண்டபத்திலுள்ள பல கல்வெட்டுக்களில் கல்வெட்டு அதிகாரிகள் 1917 ஆம் ஆண்டில் 215 - 244 எண்ணுள்ள கல்வெட்டுக்களாகப் படி எடுத்துள்ளார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த திருப்பதிகங்கள் இரண்டு உள்ளன. இதற்குத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தல புராணம் உளது. அது 736 திருவிருத்தங்கள் கொண்டது. 1920 இல் இதன் தல புராணம் தருமை ஆதீனத்தின் உதவியினால் வெளியிடப்பெற்றது. இத்தலம் தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. சிறந்த முறையில் பரிபாலிக்கப்படுகிறது.