கோடிகா
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வடிவம்மை உடனுறை கோடிகா ஈசுவரர்


மரம்: பிரம்பு
குளம்: சிருங்க தீர்த்தம்

பதிகங்கள்: இன்று நன்று -2 -99 திருஞானசம்பந்தர்
நெற்றிமேற்கண் -4 -51 திருநாவுக்கரசர்
சங்குலா -5 -78 திருநாவுக்கரசர்
கண்தலஞ் -6 -81 திருநாவுக்கரசர்

முகவரி: திருக்கோடிக்காவல் அஞ்சல்
நரசிங்கன்பேட்டை
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 609802
தொபே. 0435 2472767

பெயர்க்காரணம் புலப்படவில்லை. ``இது திரிகோடி அதாவது மூன்றுகோடி ரிஷிகள் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது என்பர்`` அது பொருந்துமாறு இல்லை.

மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில் நரசிங்கன்பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரி வடகரைத் தலங்களுள் முப்பத்தேழாவது ஆகும். காவிரி வடகரை வழியாக மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து வழியில் இத்தலம் உள்ளது.

இறைவரது திருப்பெயர் கோடிகாஈசுவரர். இறைவியாரது திருப்பெயர் வடிவம்மை. தீர்த்தம் சிருங்கதீர்த்தம். இது கோயிலுக்கு வடபால் உள்ளது.

இவ்வூர்க்குச், சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர்பதிகம் மூன்று மாக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.



கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் முற்காலத்துப் பல்லவர்களில் நந்தி போத்தரையன் விஜய நிருபதுங்க விக்கிரமவர்மன் என்பவர் களுடைய கல்வெட்டுக்களும், பிற்காலப் பல்லவரில் கோப்பெருஞ் சிங்க தேவர் காலத்துக் கல்வெட்டும், முத்தரையர்களில் இளங் கோமுத்தரையர் காலத்துக் கல்வெட்டும், பாண்டியர்களில் மாறன் சடையன் காலத்துக் கல்வெட்டும், சோழ மன்னர்களில் மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மன் முதலாம் ராசராசசோழன் முதற் குலோத்துங்கன் விக்கிரம சோழன் மூன்றாங்குலோத்துங்கன் என்பவர்களுடைய கல்வெட்டுக்களும் ஆக ஐம்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இத்திருக்கோயில், கோயில் திருவிசைப்பாப்பதிகம் பாடிய கண்டராதித்த சோழதேவரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கற்றளியாக ஆக்கப்பெற்ற பெருஞ்சிறப்புடையது. இவ்வம்மையார் இக்கோயிலைக் கட்டுவதற்கு முன்பு இங்கிருந்த இருபத்தாறு கல்வெட்டுக்களைப் பெரிதும் பாதுகாத்து அவைகளை யெல்லாம் தாம் கட்டிய கோயிலில் செதுக்கி வைக்கச் செய்தனர். கல்வெட்டில் இவ்வம்மையார் வைத்திருந்த பற்று பாராட்டற்குரியது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருக்கோடி காவல் பெருமான். திருக்கோடிகாவில் மகாதேவர். திருக்கோடிகா வுடையார் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர். இக்கோயில் திருச்சுற்றுமாளிகை விக்கிரம சோழதேவரால் கட்டப்பெற்றதாகும். அதில் விக்கிரமசோழன் திருமாளிகை என எழுதப்பெற்றுள்ளது. சண்டேசுவரநாயனார் கோயில் உத்தரத்தில் தியாக சமுத்திரம் என்று செதுக்கப்பெற்றுள்ளது. அதனால் அக்கோயில் தியாக சமுத்திரம் என்னும் சிறப்புப் பெயருடைய சோழமன்னனால் கட்டப்பெற்றது என்று அறியக்கிடக்கின்றது. இத்திருக்கோயில் திருப்பெருந்துறை ஆளுடையாரைக் கோப்பெருஞ்சிங்க தேவரை எழுந்தருளுவித்தவர் கங்கைகொண்டசோழபுரத்து மணவூருடையார் வரந்தரும் கூத்தப் பெருமாள் ஆவார்.

இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில் (ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டு) வடகரை நல்லாற்றூர் நாட்டுத் திருக்கோடிகாவல் எனவும், கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் விருதராசபயங்கர வளநாட்டு நல்லாற்றூர்நாட்டுத் திருக்கோடிகா எனவும் கூறப்பெற்றுள்ளது.

நந்திபோத்தரையர் என்னும் முற்காலப் பல்லவர் கல்வெட்டினால் இக்கோயிலினுள் சிறுநங்கை ஈச்சரம் என்னும் பெயருள்ள கோயில் ஒன்று கூறப்பெற்றுள்ளது. திருக்கோடிகாவிற்குக் கண்ணமங்கலம் என்னும் வேறுபெயருண்மையை `திருக்கோடிகா வாகிய கண்ணமங்கலத்து`என்னும் கல்வெட்டுப் பகுதி அறிவிக்கின்றது.

சிறுநங்கை ஈஸ்வரகாரத்து மகாதேவர்க்குத் திருவிளக்கினுக்கு ஆழிசிறியன் என்பவன் நூறுகலம் நெல்கொடுத்து அதன் வட்டி கொண்டு நாள்வாய் (நாள்தோறும்) உழக்கு நெய்யால் அவ்விளக்கை எரிப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளான். இது நந்தி போத்தரையன் 19 ஆம் ஆண்டுக் கல்வெட்டால் புலப்படுகின்றது. விசைய நிருபதுங்க விக்கிரமவர்மனின் இருபத்துநான்காம் ஆண்டில், கொண்டநாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வேங்கடவன், பதினைந்துகழஞ்சு பொன்னை அளித்து, அதன் வட்டிகொண்டு நொந்தாவிளக்கு ஒன்றைத் திருக்கோடிகா மகாதேவர் கோயிலில் எரிப்பதற்காக நாணக்கச்சதுர்வேதிமங்கலத்துச் சபையாரிடம் ஏற்பாடு செய்திருந்தான். நிருபதுங்க மகாராஜர் தேவியார், வீரமகாதேவியார் இரணியகர்ப்பமும் துலா பாரமும் புகுந்த பொன்னில் திருக்கோடிகா மகாதேவர்க்கு ஐம்பதின் கழஞ்சுப் பொன்னை அளித்து அவற்றில் இருபத்தைந்து கழஞ்சு பொன்னுக்கு வரும் வட்டி கொண்டு நாடோறும் இருநாழி அரிசியும் ஒருபிடி நெய்யும் திருவமுதுக்கும், நாடோறும் உழக்கு நெய் கொண்டு ஒரு நுந்தா விளக்கு எரிப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார். மெழுக்குப் புறத்துக்கு நிலம் விடப்பட்டிருந்தது.

வடகரை நல்லாற்றூர் நாட்டு, ஆரூர் உடையான் அருளாக்கி சேந்தன் இந்நாட்டுக் கண்ண மங்கலத்துப் புதுவாய்க்காலின் வடக்கே மூன்றுமாவும், வடகரை அரை மாவும் ஆக மும்மாவரை நிலத்தை, பெண்ணடியார்கள் உண்பதற்கும், ஒருகூறு ஆணடியார்கள் உண்பதற்கும் ஆக ஏற்பாடுசெய்திருந்தான். மல்லிநாட்டுக் கிழந்தி பெரும் பிடுகுவிஞ்சவயனான நக்கன் நந்த வனத்துக்கும், நந்தவனம் இறைப்பார்க்கும் ஆக இரண்டுமா நிலத்தை விலைக்கு வாங்கிக் கொடுத்துள்ளான். நந்தவனம் திருக் கோவிலுக்கு வடபாலுள்ள இடமாகும்.

பழையாற்று நந்திபுரத்து வியாபாரி குமரன் கணபதி என்பான் திருக்கோடி மகாதேவர்க்குத் திருவிளக்கினுக்கும், திருவமிர்தினுக்கும் ஆக எழுபதின் கழஞ்சு பொன் கொடுத்துள்ளான். மார்கழித் திருவாதிரைச் சிறப்புக்குக் கூத்தாடும் நாயனார்க்கு உதையஞ்சடையன் உடையான் தில்லையம்பல விழுப்பரையன் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் நிவந்தம் அளித்துள்ளான்.

பரகேசி விக்கிரமசோழன் காலத்தில் தென்கரை உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டுத் திருவாவடுதுறைக் கோயிலில் பத்து தபசிகள் உண்பதற்கு ஒருவேலியும், வைத்திய விருத்திக்காக அரை வேலியும் திருக்கோடிகாவில் கொடுக்கப் பெற்றிருந்தது.

அமாவாசையில் இறைவரை எழுந்தருளச் செய்வதற்கு விக்கிரமசோழதேவரின் நான்காம் ஆண்டில் நிவந்தம் கொடுக்கப் பெற்றுள்ளது. வரகுணமகாராஜபாண்டியன் சரஸ்வதி, கணபதி இவர்கள் கோயில்களில் விளக்கு எரிக்க நிபந்தம் அளித்துள்ளான்.

(See the Annual Report on South Indian Epigraphy for the year 1931. Inscription No. 9-58. Also see the South Indian Inscriptions, Vol. 13, Inscription general numers 55, 74, 78, 136, 222.)

கோபுரத்தின்வாசல் இடதுபக்கத்தில் புதுவைபுரிபிள்ளைப் பெருமாள் மகனார் சடையரைப்பற்றிய பாடல்கள் இருக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி