சத்திமுற்றம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரியநாயகி உடனுறை சிவக்கொழுந்துநாதர்


மரம்: வில்வம்
குளம்: சூல தீர்த்தம்

பதிகம்: கோவாய் முடுகி -4 -96 திருநாவுக்கரசர்

முகவரி: பட்டீச்சரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612703
தொபே. 04374 267237

இத் தலம் தஞ்சை மாவட்டம் திருக்குடந்தைக்குத் தென் மேற்கே 3. கி.மீ. தூரத்தில் பட்டீச்சரத்திற்கு அருகில் உள்ளது.

இறைவனை நின் திருவடிச்சுவடு என்மேற் பொறித்துவை என்று அப்பர் வேண்டிக்கொண்டது இத்தலத்தில்தான். சத்தி முற்றம் என்ற பெயர் பிற்காலத்தில் பேச்சு வழக்கில் சத்தி முத்தம் ஆயிற்று. பிறகு அதற்கு ஒரு கதையும் எழுந்தது. சத்தி இறைவனுக்கு முத்தம் கொடுத்ததால் சத்தி முத்தம் ஆயிற்றாம். இது முற்றிலும் படைத்ததொரு கதையாகும். சத்திமுற்றப் புலவர் என்ற இவ்வூரைச் சேர்ந்த புலவர். சத்தி முற்றப்புலவர் என்றே அழைக்கப்படுவதிலிருந்தும் திருமுறைகளில் ஏழாம் பாடலில் இக் குறிப்பு சத்தி முற்றம் என்றே பயின்று வருவதிலிருந்தும் மேற்கூறிய கதை இத்தகையது என்பதை நனி விளக்கும். இத் தலத்திற்குத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருப்பதிகம் ஒன்று உள்ளது.



கல்வெட்டு:

( See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927, No. 262-270.)

இவ்வூரிலுள்ள திருச்சத்திமுற்றமுடையார் திருக்கோயிலில் சோழ மன்னர்களில், திரிபுவனச் சக்கிரவர்த்தியாகிய குலோத்துங்க சோழதேவர் ``கடல் சூழ்ந்த`` என்று தொடக்கமுள்ள மெய்க்கீர்த்தியையுடைய இராஜகேஜரி வர்மராகிய இராஜாதிராஜதேவர், மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின மூன்றாங் குலோத்துங்க சோழதேவர் இவர்கள் காலங்களிலும்; விசயநகர பரம்பரையினரில் பிரந்தராயமகாராயர், மகாமண்டலீஸ்வர கோப்பையதேவ மகாராசர், வீரப்பிரதாபதேவராய மகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

கோபுரத்தின் அடிப் பகுதியிலுள்ள கல்வெட்டு அக்கோபுர வாசல் மகாமண்டலீஸ்வர கோப்பையதேவ மகாராசா அவர்களால் கட்டப்பட்டதையும், வீரப்பிரதாபதேவராய மகாராயர் காலத்துக் கல்வெட்டு மகாமண்டலேஸ்வர திருமலையதேவ மகாராசர் திருநறையூர்ப்பற்று எல்லூரைத் திருச்சத்திவனப் பெருமாளுக்கு நாள் வழிபாட்டுச் செலவிற்கும். திருவமுதுக்குமாகக் கொடுத்துள்ளதையும், சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் நுந்தா விளக்கு எரிப்பதற்குக் காசு, ஆடு இவைகளை அளித்ததோடு, நிலம் அளித்த செய்தியையும் குறிப்பிடுகின்றன. ஆடுகளை அளித்தவன் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் பழையனூர் நாட்டுப் பழையனூர் அமரகோனாகிய வேதவனம் உடையான் கருணாகரதேவன் ஆவன். இக் கல்வெட்டுக்களில் இறைவர் திருச்சத்திமுற்றம் உடையார் திருச்சத்திவனப் பெருமாள் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர். மூன்றாங் குலோத்துங்கசோழதேவருடைய கல்வெட்டு திருச்சத்திமுற்றம் உடையார்க்குச் சொந்தமான நிலங்களின் வரிகளை வசூலிக்கும் விதிகளைப்பற்றிக் குறிப்பிடுகின்றது. மண்டபத்தின் கருங்கல் தூண்களிலுள்ள ஒரு கல்வெட்டு, இலுப்பையூர் உடையபிள்ளை ஆண்டார் என்னும் பெயரைக் குறிப்பிடுகின்றது. மற்றொரு கருங்கல் தூணில் உள்ள கல்வெட்டு உபயநாயகப்பிச்சன் என்பவன் திருநீறு அணிபவர்களின் அடிமை என்பதைத் தெரிவிக்கிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் திருச்சத்திமுற்றம் குலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர் நாட்டுக்கு உட்பட்ட ஊர் என்பதைக் குறிப்பிடுகின்றன. ``கடல் சூழ்ந்த`` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய இராஜகேசரி இராஜாதிராஜதேவரின் ஐந்தாம் ஆண்டு எண்பத்தெட்டாம் நாளில் செதுக்கப்பட்ட கல்வெட்டு, திருச்சத்திமுற்றம் உடையார் கோயில் இராஜராஜசபுரத்தில் இருப்பதை உணர்த்துகின்றது. எனவே அம் மன்னன் காலத்தில் திருச்சத்திமுற்றத்துக்கு இராஜராஜபுரம் என்னும் வேறு பெயர் வழங்கியிருந்தது புலனாகும்.

 
 
சிற்பி சிற்பி