சாத்தமங்கை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மலர்க்கண்ணம்மை உடனுறை அயவந்தீசுவரர்


மரம்: கொன்றை
குளம்: அற்புத தீர்த்தம், காவிரி

பதிகம்: திருமலர்க் -3 -58 திருஞானசம்பந்தர்

முகவரி: சீயாத்தமங்கை அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 609702
தொபே. 04366 270073

இது இக்காலம் சீயாத்தமங்கை என்று வழங்கப்பெறுகின்றது. ஊரின் பெயர் சாத்தமங்கை. இது சாந்தை என மரூஉ மொழியாகவும் வரும். இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. பிரமனால் பூசிக்கப் பெற்ற காரணம் பற்றி அயவந்தி என்னும் பெயர் ஏற்பட்டது என்பர்.

திருநள்ளாற்றுக்குத் தென்மேற்கே 7.5 கி.மீ. தூரத்தில் உளது. நாகை காயிலேமில்லத் மாவட்டம் ,நன்னிலம் தொடர்வண்டி நிலையத்தி லிருந்தும் செல்லலாம். காவிரிக்குத் தென்கரையிலுள்ள தலங்களில் பதினெட்டாவது ஆகும்.

இறைவரின் திருப்பெயர் அயவந்தீசுவரர். இறைவியின் பெயர் மலர்க்கண்ணம்மை. இது திருநீலநக்க நாயனார். அவதரித்த திருப்பதி. ``நிறையினார் நீலநக்கன் நெடுமாநகரென்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி`` என்னும் தேவாரப் பகுதியாலும், சேக்கிழார் பெரியபுராணத்தாலும் இதை அறியலாம்.

இந்நாயனார் தம் மனைவியாருடன் இறைவனை வழிபடத் திருக்கோயிலுக்குச் சென்றார். அதுபொழுது ஒரு சிலந்திப்பூச்சி சிவலிங்கத்தின்மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப்பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச் செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோயிலில் இருந்தார். அன்று இரவு நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி, அவர் மனைவியார் ஊதின இடந்தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புள் (கொப்புளம்) இருப்பதைக் காட்டி அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமைவாய்ந்த பதி.

திருஞான சம்பந்தப்பெருந்தகையார் இப்பதிக்கு எழுந்தருளியபோது திருநீல நக்கர் அவரை வரவேற்று, அவருடைய நட்பைப் பெற்றதும் இப் பதியில்தான். சம்பந்தப் பெருந்தகையாரும் ``அடிகள் நக்கன்பரவ அயவந்தி அமர்ந்தவனே`` எனத் திருநீலநக்கரைப் பாராட்டியிருப்பது போற்றற்குரியது. இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.



கல்வெட்டு:

இவ்வூர்த் திருக்கோயிலில் சோழமன்னர்களில் ``பூமேவி வளர்`` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய இராசகேசரி வர்மனாகிய திரிபுவனச்சக்கரவர்த்தி குலோத்துங்கசோழ தேவர், திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜதேவர் இவர்கள் காலங்களில் செதுக்கப்பெற்ற ஆறு கல்வெட்டுக்களும் ஒரு தமிழ்ச் செய்யுளும் ஆக ஏழு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக் கல்வெட்டுக்களில் ஊரின் பெயர் சாத்தமங்கலம், சாத்தமங்கை எனவும்; திருக்கோயிலின் பெயர் அயவந்தி என்றும்; இறைவரின் திருப்பெயர் அயவந்தி உடையார் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. திரிபுவனச்சக்கரவர்த்தி இராசராச சோழ தேவரின் பதின்மூன்றாம் ஆண்டில் கணிச்சைப்பாக்கத்துத் திரு வேகம்ப உடையார் இவ்வூரில் முடிகொண்ட சோழப் பேராற்றங் கரையில் ஒரு தண்ணீர்ப் பந்தரை ஏற்படுத்தி அதற்கு நில நிவந்தம் அளித்திருந்தனர். அத்தண்ணீர்ப்பந்தல் நடைபெறாது இருந்தமையால், சாத்த மங்கலத்துச் சபையார் அந்நிலத்தை அத்திருவேகம்பனால் திருச்செங்காட்டங்குடியில் ஏற்படுத்திய சிறுத்தொண்டன் திரு மடத்திற்குக் கொடுத்துவிட்டனர். செய்யுள் வடிவில் உள்ள கல்வெட்டு இறைவர் இறைவியாரின் புகழைப் பற்றிக் கூறுகின்றது.

ஏனைய கல்வெட்டுக்கள்(See the Annual Reports on South Indian Epigraphy for the year1922, No. 72-78) நுந்தாவிளக்குக்களுக்கு நிபந்தங்கள் அளித்ததைப் பற்றிக் கூறுகின்றன. இக்கோயிலில் சிறுத்தொண்ட நாயனாரின் பிரதிமை இருந்ததைப்பற்றி திரிபுவனச்சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

 
 
சிற்பி சிற்பி